MAIL OF ISLAM

Knowledge & Wisdom



தமிழ் பகுதி - இமாம்கள் வரலாறு  - அபூ ஹனிபா ரலியல்லாஹு அன்ஹு

இமாம் அபூ ஹனிபா ரலியல்லாஹு அன்ஹு


இவர்களது இயற்பெயர் நுஃமான் என்பதாகும். அபூஹனீபா என்பது இவர்களது புனைப் பெயர். இவர்களின் தந்தையின் பெயர் தாபித். ‘இமாமுல் அஃலம்’ (கௌரவமிக்க தலைவர்) என்னும் சிறப்புப் பெயர் இவர்களுக்கு உண்டு.


இவர்கள் ஈராக் தேசத்திலுள்ள கூபாவில் ஹிஜ்ரி 80 இல் (கி. பி 699) அப்துல் மலிக் பின் மர்வானின் ஆட்சியின்போது பிறந்தார்கள். இவர்களே ஹனபி மத்ஹபின் ஸ்தாபகர். இவர்கள் நடுத்தர உயரமும், சிவப்புக் கலந்த வெண்மை நிறமும், அழகிய தோற்றமுடையவர்கள். இவர்களின் தவத்தையும், பூரண இறைபக்தியையும் பாராட்டாதவர்களே இல்லை. இவர்கள் இரவிலே முற்றிலும் தூங்காது அல்லாஹ்வை வணங்குவார்கள். தர்மம் செய்வதில் தலைசிறந்து விளங்கினார்கள். குடும்பச் செலவு போகத் தங்கள் பொருளில் எஞ்சியதைச் சேகரித்து ஏழைகள் முதலானோருக்குத் தினமும் அளித்து வந்தார்கள். இவர்கள் ஓரிடத்தில் மாத்திரம் 7000 விடுத்தம் குர்ஆன் ஓதிப் பூர்த்தி செய்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு கியாஸ் என்னும் ஒப்புமை ஆதார விதியால் சட்டங்கள் இயற்றுவதில் விசேஷ ஆற்றல்

​இருந்தது.


இமாம் ஹம்மாத் பின் அபூஸுலைமான், இமாம் முஹம்மத் பின் முன்கதிர், இமாம் அதாஃபின் அபூரபாஹ் முதலிய சட்ட நிபுணர்களிடமிருந்து கல்வி பெற்றார்கள். ஆயிரக் கணக்கான மாணவர்கள் இவர்களிடம் கல்வி கற்றார்கள். அவர்களின் சீடர்களுள் அக்கால அப்பாஸிய்யா அரசாங்கத்தில் நீதிபதிகளாயிருந்த (காஸி) அபூயூஸுப் (ரலியல்லாஹு அன்ஹு), முஹம்மத் ஷைபானி (ரலியல்லாஹு அன்ஹு) ஆகிய இருவரும் இவர்களின் கல்வியை உலகினருக்கு அளித்துதவினர். இவர்களின் ஹனபி மத்ஹபுக்குப் பின்னரே ஏனைய பிரதான மூன்று மத்ஹபுகளும் தோன்றின. உலகில் பெரும் பகுதியான முஸ்லிம்கள் இவர்களின் மத்ஹபைப் பின்பற்றுகின்றனர். நாஸ்திகருடன் இவர்கள் விவாதித்து அன்னவர்களைத் தோல்வியுறச் செய்தார்கள். பன்முறை பரிசுத்த மக்கா, மதீனா சென்றுள்ளார்கள். இமாம் மாலிகையும் (ரலியல்லாஹு அன்ஹு) சந்தித்துள்ளார்கள்.


“எம் சமூகத்தினரின் மத்தியில் ஓர் அறிஞர் தோன்றி அவர்களைக் காப்பாற்றி ஞானம் போதிக்கும் அறிவின் சுடராய் அவர் முன்வருவார்” என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியிருப்பதாகச் சொல்லப்படுவது இவர்களைப் பற்றியென அறிஞர்கள் அபிப்பிராயப்படுகின்றனர். “நான் அலி (ரலியல்லாஹு அன்ஹு) யின் ஆசீர்வாதம் பெற்றுள்ளேன்” என இவர்கள் கூறுபவர்களாயிருந்தார்கள். ஏனெனில் இவர்களின் தந்தை தாபித் (ரலியல்லாஹு அன்ஹு), அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் ஒருமுறை சென்றபோது அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அன்னாருக்காகவும் அன்னாரின் சந்ததிகளுக்காகவும் அல்லாஹ்வை இறைஞ்சி ஆசீர்வதித்தார்கள்.


இமாம் ஷாபியீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் இவர்களைப் பற்றிப் புகழும்பொழுது “இவ்வகில மக்களின் புத்தியும் விவேகமும் இமாமின் புத்தி விவேகத்திற்குச் சமமாகா” என்று வாழ்த்தினார்கள். இமாம் மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களும் இவர்களின் விவேகம், ஒன்றை நிரூபிக்கும் ஆற்றல் ஆகியவற்றை மிகவும் பாராட்டினார்கள். பட்டம், உத்தியோகப் பதவிகளினால் பெருமையடைதல் ஆகியவற்றை இவர்கள் விரும்பவில்லை. ஒருமுறை ஸிரியா நாட்டதிபதி அத்தேச பொக்கிஷப் பாதுகாவலராக இவர்களை நியமித்தார். அவர்கள் அதை மறுக்க அவ்வதிபதியின் உத்தரவுப் பிரகாரம் அவர்கள் தலைகுனிய வைக்கப்பட்டு முதுகில் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள்.


பனூ உமையாக்களின் கடைசி அரசரான மர்வானின் காலத்தில் இப்னு ஹுஸரா என்னும் அதிகாரி இமாமைக் கூபாவின் நீதிபதியாகவும் ‘பைதுல் மாலின்’ (அரசாங்க பொக்கிஷம்) பொறுப்பாளியாகவுமிருக்குமாறு கட்டளையிட அவர்கள் அதையேற்காதிருந்தபோது அவர்களுக்கு 100 கசையடிகள் கொடுக்குமாறு அவ்வதிகாரி கட்டளையிட்டான். அங்ஙனமே நாளொன்றுக்குப் பத்துக் கசையடியாகப் பத்து நாட்களுள் அது நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் இவர்கள் சிறிதுகாலம் மக்காவில் தங்கிப் பின்னர் அப்பாஸிய்யா அரசர் மன்சூர் அரசு புரியும்போது பஃதாத் திரும்பினார்கள்.


இவ்வரசனும் அவர்களைச் சும்மாவிடவில்லை. ஈராக் தேச நீதிபதியாயிருக்க உத்தரவிடப்பட்டார்கள். அரசனுக்கும் அவர்களுக்குமிடையே நீண்ட வாக்குவாதம் நடைபெற்றது. முடிவில் கசையடியும் சிறையும் பெற்றார்கள். சிறையிலும் 12 தினங்களாய்த் தாக்கப்பட்டார்கள். அவர்களின் கால்கள் வழியாக இரத்தம் வழிந்தோடியது. கடைசியாக விஷம் கலந்த ஒரு பானத்தை அருந்தக் கொடுத்து அவர்களைக் கொல்ல முடிவு செய்யப்பட்டது. மிகவும் பொறுமையுடன் அவர்கள் அல்லாஹ்வுக்காகச் சிரங்குனிந்து ஸுஜூதில் வீழ்ந்திருக்கும்போது அவர்கள் ஆவி பிரிந்தது.


அவர்கள் ஹிஜ்ரி 150 ஆம் வருஷம் ரஜபு மாதம் (கி. பி. 772) தங்களின் 70 ஆம் வயதில் பஃதாதில் காலமானார்கள். இவர்களின் காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தோழர்களில் பஸராவில் அனஸ் பின் மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு), கூபாவில் அப்துல்லாஹ் பின் ஒளபா (ரலியல்லாஹு அன்ஹு), மதீனாவில் ஸஹ்ல் பின் ஸஃது (ரலியல்லாஹு அன்ஹு), மதீனாவில் அபுத்துபைல் ஆமிர் பின் வாஸிலா (ரலியல்லாஹு அன்ஹு) வும் இருந்தார்கள்.


​அல்லாஹ் அவர்களை பொருந்தி கொள்வானாக!