MAIL OF ISLAM

Knowledge & Wisdom



தமிழ் பகுதி - இமாம்கள் வரலாறு  - ​இமாம் ஷாபியீ ரலியல்லாஹு அன்ஹு

​இமாம் ஷாபியீ ரலியல்லாஹு அன்ஹு


முஹம்மத் என்பது இவர்களின் இயற்பெயர். அபூ அப்துல்லாஹ் என்பது புனைப் பெயர். இத்ரீஸ் என்பது அவர்களின் தந்தையின் பெயர். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் பாட்டனாராகிய ஹாஷிமின் சகோதரர் முத்தலிபின் வம்சத்தில் தோன்றியவர்கள். இதனால் இவர்கள் ‘ஆலிமுல் குறைஷ்’ எனும் சிறப்புப் பெயர்கொண்டு அழைக்கப்பட்டனர்.


பாலஸ்தீனைச் சேர்ந்த ‘குஸ்ஸா’ எனும் ஊரில் ஹிஜ்ரி 150 இல் பிறந்தார்கள். ஆனால் இரண்டு வயதுக் குழந்தையாயிருக்கும்போது மக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கேயே வளர்ந்தார்கள். அக்காலத்தில் மக்காவில் பிரபல்யம் வாய்ந்த முப்தியாகிய இமாம் முஸ்லிம் இப்னு காலித் என்பவரிடம் கல்வி கற்றார்கள். ஏழு வயதில் மாலிக் இமாம் அவர்களின் முவத்தஃ எனும் ஹதீஸ் கிரந்தத்தை மனனம் செய்து முடித்தது மாத்திரமின்றி வேறு ஹதீஸ்களையும் கற்றுத் தேர்ந்தார்கள்.


மார்க்கத் தீர்ப்பளிப்பதில் இவர்களின் சாமர்த்தியத்தை அறிந்த அவர்களின் குருவானவர்கள்

​இமாமின் 15ஆம் பிராயத்திலேயே எந்த வகையான மார்க்கத் தீர்ப்பும் அளிப்பதற்கு முழுமனதுடன்

​இமாமுக்கு உத்தரவு கொடுத்தார்கள். அது முதல் இவர்கள் முப்தியாகவிருந்தனர். பின்னர் மதீனா நகர் சென்று மாலிக் இமாம் அவர்களிடத்திலும் சில காலம் பல அறிவுகளைப் பெற்றார்கள். அத்துடன் பின்னர் முஜ்தஹிதாகி ஷாபியீ மத்ஹபின் ஸ்தாபகருமானார்கள். ஒருபோது அவர்கள் பள்ளியில் சேர்ந்திருக்கும்போது பணக் கஷ்டம் ஏற்பட்டது. அக்காலத்தில் கல்வி பயில்வோர் தங்கள் குருவுக்கு ஒரு சொற்பக் காசு கொடுப்பவர்களாயிருந்தனர். இமாம் அவர்களுக்கேற்பட்ட பணக் கஷ்டத்தால் பள்ளியில் சேர முடியாமல், மற்ற மாணவர்களுக்குக் குரு பாடம் சொல்லி கொடுப்பதை கேட்டு கொண்டு இருந்து நன்றாய் மனதில் பதிய வைத்துக்கொண்டு பின்னர் இவர்கள் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதை அறிந்த குரு, இமாமின் அறிவையும் ஞாபசக்தி, விளக்கம் ஆகியவற்றையும் கண்டு உதவி ஆசிரியராய் நியமித்துக்கொண்டார்.


ஹிஜ்ரி 195 இல் ஹாரூன் ரஷீத் எனும் அரசர் காலத்தில் பஃதாத் நகரம் சென்றார்கள். அங்கு இவர்கள் மேன்மையை அறிந்த பல மேதாவிகள் இவர்களின் சீஷர்களாகி ஞானம் பெற்றார்கள். அங்கு இரண்டு வருடம் தங்கினார்கள். அப்பொழுது அங்கிருந்த அறிஞர் குழுவினர் எல்லாரும் தாங்கள் அதற்கு முன்னர் பின்பற்றியிருந்த மத்ஹபைவிட்டு இமாம் அவர்களின் மத்ஹபைப் பின்பற்றிக்கொண்டார்கள். பஃதாதிலிருக்கும் போதே அவர்களின் பழைய கிரந்தங்களென்று அழைக்கப்படும் நூல்களை இயற்றினார்கள். பின்னர் மக்காவுக்குத் திரும்பி வந்து சிறிது காலம் கழித்து அறிவைப் பரப்பினார்கள்.


மறுமுறை 198 இல் மீண்டும் பஃதாதுக்கு வந்து அறிவைப் பிரகாசிக்கச் செய்தார்கள். அங்கு தாங்கள் இறுதி காலம்வரை தங்கி மார்க்க ஞானம் பரப்பினார்கள். உம்மு ஆமாலி முதலான கிரந்தங்களும் அங்கிருக்கும்போதே அவர்களால் இயற்றப்பெற்றன. நூற்றுக்கதிகமான கிரந்தங்கள் அவர்களால் இயற்றப்பட்டுள்ளன. சன்மார்க்க சட்ட மூலாதாரங்களாகிய ‘இல்முல் உஸூலை’ இவர்களே வகுத்துக் காட்டினார்கள். பிக்ஹு எனும் சட்டக் கல்வியில் நூதனமான பல பாடங்களை உண்டாக்கி உதவினார்கள். கவிகள் இயற்றுவதிலும் இவர்களுக்கிருந்த அறிவு நிகரற்றது. இவர்களின் செய்யுட்கள் பல ஆசிரியர்களால் ஒன்று திரட்டப்பட்டிருக்கின்றன. ரபீஉ, முஸ்னீ, அஹ்மத் இப்னு ஹன்பல் ஆகியோரும் இவர்களின் சீடர்களே. முன்னைய இருவரும் இமாமின் கல்வியை உள்ளத்தில் பரவச் செய்தனர். நாற்பதுக்கதிகமான நூல்கள் இமாம் அவர்களின் சீவிய சரிதைப் பற்றிப் பல மேதாவிகளால் எழுதப்பட்டுள்ளன. ஷாபியீக்கள் என்று அழைக்கப்படுபவர்களான இவர்களின் மத்ஹபைப் பின்பற்றுவோர் உலகின் நானாபக்கங்களிலுமிருக்கின்றனர்.


எகிப்திலிருக்கும் போதே ஹிஜ்ரி 204 இல் இறையடி சேர்ந்தார்கள். அவர்கள் அங்குள்ள ‘கராபா’ எனும் ஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். ‘குறைஷிக் குலத்தில் உதிக்கும் ஓர் அறிஞனானவர் உலகின் நானாபக்கங்களையும் தம் அறிவால் நிரப்புவார்’ எனும் பிரபல நாயக வாக்கியம் இவர்களையே சுட்டிக் காட்டுகிறது என்பது இமாம் அஹ்மத் (ரலியல்லாஹு அன்ஹு) உட்பட எல்லா மேதாவிகளினதும் முடிவு. ஏனெனில் குறைஷியரில் உதித்த அறிஞருள் இவர்களே கல்வி ஞானங்களை அதிகப்படுத்தியவர்களும் ஏனையோரைவிட அதிகமாய் பரவச் செய்தவருமாவர்.


இவர்கள் தெய்வபக்தியிலும், வணக்கத்திலும், நற்குணங்களிலும், நிகரற்று விளங்கினார்கள். இரவு காலத்தை மூன்று சமபங்குகளாக வகுத்துக் கல்விக்கொரு பாகமும், தொழுகைக்கொரு பாகமும், தூக்கத்துக்கொரு பாகமுமாய்க் கழித்துவந்தனர். ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஒரு முறையாவது குர்ஆன் முழுதையும் ஓதுவார்கள். ரமழான் மாதத்தில் 60 முறை குர்ஆன் முழுதையும் ஓதிப் பூர்த்தி செய்வார்கள். இத்தகைய ஓதல் தொழுகையிலேயே நிகழும். “பத்து வருடங்களாக நான் வயிறார உண்ணவில்லை” என ஒரு முறை இவர்கள் கூறினார்கள். ஏனென்று கேட்கப்பட்டபொழுது, “வயிறார உண்பதினால் உடம்பில் பாரம் ஏற்படும். மனதைக் கல்நெஞ்சாக்கும். புத்திக் கூர்மையை நீக்கும். தேவையற்ற தூக்கத்தை உண்டுபண்ணும். தெய்வ வணக்கம் அதிகமாயும் நல்ல பற்றுடனும் செய்வதைக் குறைக்கும்” என்றார்கள். அல்லாஹ்வைக் கொண்டு ஒருபோதும் ஆணையிடமாட்டார்கள். ஒரு கேள்விக்கு மறுமொழி கூறுவது நன்றோ அன்றி மௌனம் சாதிப்பது நன்றோவென ஆராய்ந்து, கேள்வி கேட்கப்படும்பொழுது நல்ல முறையைக் கையாளுவார்கள். அல்லாஹ்விடம் இவர்கள் கேட்கும் பிரார்த்தனைகள் அத்தனையும் நிறைவேறுவனவாயிருந்தன. ஒரு பெரும் பாவமோ சிறு பாவமோ செய்யாமல் வாழ்ந்தார்கள்.


அல்லாஹ் அவர்களை பொருந்தி கொள்வானாக.