கலாநிதி ஷெய்க் அலி ஜுமா

எகிப்தின் தலைமை முப்தி 


ஷெய்க் அலி ஜூமா அவர்கள் 1952ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் திகதி எகிப்து நாட்டில் பனி சுவைப் என்ற ஊரில் பிறந்தார்கள். இவர்களின் தகப்பனார் ஷரிஆ சட்டத்தின் சட்டத்தரணி ஆவார்கள். நூல்களை கற்பதில் அதிகள் கொண்ட இவர்களின் தந்தை மூலம் அந்த பழக்கம் இவர்களுக்கும் ஏற்பட்டு இன்று இவர்களின் தனியான சொந்த நூலகத்தில் சுமார் 30,000 ற்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்கள் உள்ளது என்பதும் உலகில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தமக்கு ஏதேனும் முக்கியமான கிடைக்க அரிதான நூல்கள் தேவைப்படும்போது ஷெய்க் அலி ஜூமா அவர்களை நாடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இவர்கள் மதரஸாவிற்கு செல்லாமலேயே பத்து வயதில் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்தார்கள். உயர் பாடசாலை கல்வியை முடிக்கும்போதே இவர்கள் ஆதாரப்பூர்வமான ஹதீது கிரந்தங்கள் என்று சொல்லப்படும் ஆறு ஹதீது கிரந்தங்களையும் மாலிகி மத்ஹபின் சட்டங்களையும் கற்றறிந்திருந்தார்கள். ஆனாலும் அவர்கள் ஷாபீயீ மத்ஹபின் சட்டங்களை பின்பற்றுவராவார்கள்.


வர்த்தகத்துறை பட்டப்படிப்பை முடித்த பின் இமாம் அவர்கள் உலக புகழ் பெற்ற அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் பிரவேசித்தார்கள்.  தமது முதல் வருட அல் அஸ்ஹர் வாழ்க்கையிலேயே இவர்கள் பல இஸ்லாமிய சட்டம், அரபி இலக்கணம், அல் குர்ஆன் ஒப்புவித்தல், ஹதீத் கலை போன்ற துறைகளில் உள்ள பல ஆக்கங்களை மனனமிட்டு இருந்தனர்.


1979 இல் தமது இரண்டாவது பட்டப்படிப்பை அல் அஸ்ஹரில் முடித்த பிறகு, ஷேக் அலி ஜூமா அவர்கள், அதே பல்கலைக்கழகத்தில் ஷரீஆ சட்டத் துறையில் 1985ம் ஆண்டு இளங்கலை (M.A) பட்டத்தையும், அதே துறையில் 1988 ம் ஆண்டு முதுமாணி (Phd) பட்டத்தையும் பெற்றார்கள்.


தமது அல் அஸ்ஹர் பல்கலைகழக கல்வி மட்டுமின்றி ஷேக் அலி ஜூமா அவர்கள் தனிப்பட்ட முறையில் பல அறிஞர்களிடம் கல்வி கற்றுள்ளனர். அவர்களில் மிக முக்கியமாக குறிப்பிடப்பட கூடியவர்கள், ஹதீது கலை வல்லுனரும் சூபியுமான மொரோக்கோவை சேர்ந்த ஷேக் அப்துல்லாஹ் பின் சித்தீக் அல் குமாரி அவர்களாவர். ஷேக் அப்துல்லாஹ் பின் சித்தீக் அல் குமாரி அவர்கள் தம்மிடம் கற்ற மிக திறமை வாய்ந்த மாணவர்களில் ஷேக் அலி ஜூமா அவர்களும் ஒருவர் என்கின்றனர்.


அல் அஸ்ஹர் பல்கலைகழகத்தில் சட்ட துறையின் பேராசிரியராக கடமையாற்றி வந்த ஷேக் அவர்கள் 2003ம் ஆண்டு அப்போதைய எகிப்தின் தலைமை முப்தி ஷேக் அஹ்மத் அல் தையிப் அவர்கள் அல் அஸ்ஹர் பல்கலைகழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு சென்றதால், அடுத்த எகிப்து நாட்டின் தலைமை முப்தியாக நியமிக்கப்பட்டார்கள்.  தமது நியமனத்துக்கு பின் ஷேக் அவர்கள் மேற்கொண்ட முக்கிய ஒரு விடயம், அதுவரை தலைமை முப்தி என்னும் தனி நபரால் வெளியிடப்பட்ட பத்வாக்களை வெளியிட தாருல் இப்தார் என்னும் அமைப்பை உருவாக்கி அதன் ஊடாக பலர் சரி கண்டு பத்வாக்கள் வெளியிடப்பட்டு வருகிறமையாகும்.


1998 தொடக்கம் ஷைக் அவர்கள் கெய்ரோ நகரில் சுல்தான் ஹசன் பள்ளிவாசலில் குத்பா பிரசங்கம் நிகழ்த்தி வருகின்றார்கள். குத்பாவிற்கு பிறகு ஏராளமான மக்களுக்கு பிரத்தியேகமான உபன்னியாசமும் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடத்தி வருகின்றார்கள். கடந்த 5 வருடங்களாக தாருல் இப்தா எனும் பத்வா மையத்தில் இருந்து தொலைபேசி வாயிலாகவும், இணையம் மூலமாகவும் மக்களுக்கு பத்வா வழங்கி கொண்டு இருக்கிறார்கள்.


இவர்களின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான  www.ali-gomaa.comஇல் பல இஸ்லாம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கான  இவர்களின் பத்வாக்கள் வெளியிடப்பட்டுள்ளது. பல முஸ்லிம்கள் தம் கேள்விகளுக்கான பத்வாக்களை அந்த தளத்தில் பார்த்து படித்து பயன் பெற்று வருகின்றனர்.


இவர்கள் பல இஸ்லாமிய நூல்களை எழுதி இருக்கிறார்கள். அத்தோடு இவர்கள் அல் அஹ்ரம் என்ற பத்திரிகைக்கு வாராந்தம் இஸ்லாமிய விவகாரங்கள் பற்றிய கட்டுரைகளை எழுதி வருகிறார்கள்.


2012 ஆம் ஆண்டு உலகிலுள்ள 500 செல்வாக்கு மிக்க முஸ்லிம்களில் 14 ஆம் நபராக இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


இஸ்லாமிய கடும்போக்கு கொள்கைகளுக்கும் தீவிரவாதத்திற்கும் மாட்டிப்பட்டு வழி தடுமாறி செல்லும் பல இளைஞர்களை திருத்தி அவர்களை பாரம்பரிய இஸ்லாமிய கோட்பாடான அமைதி, சமாதனம், ஒற்றுமை ஆகிய குணங்களோடு அந்த இளைஞர்கள் வாழ   இவர்கள் துணை புரிந்துள்ளனர்.


அல்லாஹ் அன்னாருக்கு நீண்ட ஆயுளை வழங்குவானாக.


ஜஸாகல்லாஹு கைர்:  பஸ்ஹான் நவாஸ்



< Back

English  -  தமிழ்

WWW.ISLAMICSCHOLARS.TK

உலக இஸ்லாமிய அறிஞர்களின் சுயவிபரக்கோவை