ஷெய்க்  முஹம்மத்  ஸஈத்  ஸக்ஹார்ஜி


ஷெய்க் முஹம்மத் ஸஈத் ஸக்ஹார்ஜி அவர்கள் சிரியா நாட்டை சேர்ந்த தலைசிறந்த அறிஞர் ஆவார்கள். இவர்கள் சிரியா நாட்டின் தலைசிறந்த ஹனபி மத்ஹபின் சட்ட அறிஞர்களில் (பிக்ஹ்) ஒருவராவார்கள். இவர்கள் ஷாதுலி தரீகா சூபி வழியில் வருபவர்கள்.


இவர்கள் தலைசிறந்த பல மார்க்க அறிஞர்களிடம் கல்வி கற்றுள்ளனர். அவர்களில் முக்கியமானவர்கள், சிரியா நாட்டின் தலைசிறந்த புகழ் பெற்ற மார்க்க அறிஞர் ஷெய்க் அல் ஸெய்யித் இப்ராஹீம் அல் யாகூபி ஆவார்கள்.


தற்போது ஷெய்க் முஹம்மத் ஸஈத் ஸக்ஹார்ஜி அவர்கள் சிரியா நாட்டின் தலைநகரமான டமஸ்கஸ்ஸில் அமைந்திருக்கும் ஜாமியா அல் உமாவி என்ற பள்ளிவாசலில் தலைமை இமாமாக பணியாற்றுகிறார்கள். இன்னும் பர்ஙானா கல்வி நிறுவனத்தில் ஆசிரியராக கடமையாற்றுகிறார்கள். இவர்கள் மதீனா பள்ளிவாசலான மஸ்ஜிதுன் நபவியிலும் கற்பித்து கொடுத்துள்ளனர்.


இவர்கள் ஏராளமான கிதாபுகளை எழுதியுள்ளார்கள். விசேஷமாக ஹனபி மத்ஹபுக்கான பிக்ஹு கிதாபுகளை எழுதியுள்ளார்கள்.

இவர்கள் எழுதிய கிதாபுகளில் மிக முக்கியமானது அல் குர்ஆன், அல் ஹதீஸ் ஆதாரங்களை கொண்டு ஹனபி மத்ஹபின் சட்டங்களை நிரூபிக்கும் நூலான "அல் பிக்ஹ் அல் ஹனபியாஹ் வ அதில்லதஹு" என்ற நூல் புகழ் பெற்றது. மூன்று பாகங்களில் வெளிவந்துள்ள இந்நூல், உலக புகழ் பெற்ற அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் கூட கற்பித்து கொடுக்கப்படுகிறது. இதை தவிர, ஷுஹப் அல் ஈமான்,  ஸைய்யிதுனா முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ﷺ, ஸவ்ஜதுன் நபி ﷺ, ஹஜ்ஜும் உம்ராவும் போன்ற நூல்கள் அல் அஸ்ஹர் உட்பட உலக பிரசித்தி பெற்ற பல பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படுகின்றன. 


இவர்கள் ஹனபி மத்ஹபின் சட்டங்களை கற்பிப்பதற்கான பல அனுமதிகளை (இஜாஸத்) பல்வேறு வழிதொடரில் பெற்றுள்ளனர். அவை நேரடியாக ஹனபி மத்ஹபின் ஸ்தாபகர் இமாமுல் அஃலம் இமாம் அபூஹனிபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வரை சென்றடையக்கூடிய வழித்தொடராகும்.


இஸ்லாத்திற்காக அயராது உழைத்து வரும் ஷெய்க் அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை வழங்கி அருள் புரிவானாக.



< Back

English  -  தமிழ்

WWW.ISLAMICSCHOLARS.TK

உலக இஸ்லாமிய அறிஞர்களின் சுயவிபரக்கோவை