MAIL OF ISLAM

Knowledge & Wisdom



இஸ்ஸதீன் முஹம்மத் அல் கஸ்ஸாம் ரஹ்மதுல்லாஹி அலைஹி


எழுதியது - மெயில் ஒப் இஸ்லாம்


இஸ்ஸதீன் முஹம்மத் அல் கஸ்ஸாம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் 1882-1935 காலப்பகுதியில் வாழ்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞரும் இஸ்லாமிய போராளியும் ஆவார்கள். சிரியாவில் பிறந்த இவர்கள் பின்னர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தில் இருந்த பாலஸ்தீனத்திற்கு குடிப்பெயர்ந்தார்கள். இவர்கள் 1920-1935 காலப்பகுதியில் பிரிட்டிஷ், பிரான்ஸ், இஸ்ரேலிய சியோனிஸ அமைப்புகளுக்கு எதிராக போராடிய மாபெரும் இஸ்லாமிய போராளி (முஜாஹித்) ஆவார்கள்.


இவர்கள் காதிரியா தரீக்காவை சேர்ந்தவர்கள். இவர்களின் தந்தையும் பாட்டனாரும் காதிரியா தரீக்காவின் ஷெய்க்காக இருந்தவர்கள். இவர்கள் ஹனபி மத்ஹபை பின்பற்றினார்கள். இவர்கள் உலக புகழ் பெற்ற அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார்கள். அல் அஸ்ஹரில் கற்கும் காலத்திலேயே மேற்கத்திய மற்றும் சியோனிஸ சக்திகளிடம் இருந்து இஸ்லாத்தை பாதுக்காக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு தலை தூக்கியது. 1909 ஆண்டு மீண்டும் சிரியா திரும்பிய அவர்கள் காதிரியா தரீக்காவின் மத்ரஸாவில் ஆசிரியராக இருந்து ஆன்மீக கல்வியையும் இஸ்லாமிய ஷரீஅத்துடைய கல்வியையும் போதித்து வந்தார்கள். குறிப்பாக குர்ஆன் தப்ஸீர் கல்வியை மக்களுக்கு போதித்து வந்தார்கள். மேலும் ஹஸ்ரத் இப்ராஹீம் இப்னு அத்ஹம் பள்ளிவாசலில் இமாமாக பணியாற்றினார்கள்.


அத்தோடு, இஸ்லாமிய மறுமலர்ச்சி திட்டம் ஒன்றை ஆரம்பித்து ஐங்கால தொழுகைகளை தவறாமல் தொழுது வரல், ரமழானில் நோன்பு நோற்றல், சூதாட்டம், மதுபானம் போன்றவற்றை இல்லாதொழித்தல் என பல்வேறு இஸ்லாமிய நல்லொழுக்கங்களை மக்களிடம் போதித்து வந்தார்கள். அவர்களின் போதனைகள் மக்களிடையே மிக சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. பெருமளவான முஸ்லிம்கள் அவர்களோடு இணைந்தனர். இவர்களின் இச்செயற்பாடுகள் உதுமானிய ஆட்சியில் இருந்த பொலீசாருடன் சுமுகமான உறவுகளை ஏற்படுத்தியது. பல்வேறு குற்றங்கள் இல்லாதொழியவும் ஷரிஆ அடிப்படையில் நீதி செலுத்தவும் இவர்கள் பொலீசாருக்கு பெரிதும் உதவினார்கள். மேலும் அவர்களின் பணிவு, நன்னடத்தை, நற்குணம் காரணமாக இவர்கள் முஸ்லிம் மக்களால் மிகவும் மதிக்கப்பட்டார்கள்.


பின்னர் இத்தாலி லிபியாவை ஆக்கிரமித்தபோது உமர் முக்தார் தலைமை தாங்கிய லிபிய எதிர்ப்பு இயக்கத்திற்காக நிதி வசூலித்தார்கள். மேலும் பல இளைஞர்களை ஒன்று சேர்த்து லிபியாவிற்கு ஜிஹாத் படையை கொண்டு சென்றார்கள். ஆனால் அப்போது நடந்த ஆட்சி மாற்றத்தினால் அவர்களுக்கு அங்கு செல்ல உதுமானிய அரசு அனுமதி மறுத்துவிட்டது.


பின்னர் 1ம் உலக மகா யுத்தத்தின்போது இவர்கள் உதுமானிய படையில் இணைக்கப்பட்டார்கள். சிரியாவை ஆக்கிரமித்த பிரான்ஸிற்கு எதிராக பல்வேறு முறைகளில் ஜிஹாத் செய்தார்கள்.


பின்னர் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தில் இருந்த லெபனான் வந்து அங்குள்ள தாழ்ந்த வகுப்பு மக்களின் நன்மைக்காக பல்வேறு திட்டங்களை செய்தார்கள். அத்தொழிலாளர் வகுப்பு மக்களுக்காக இரவு பாடசாலையை அமைத்து இவர்களே இமாமாக இருந்து கற்று கொடுத்தார்கள். அக்கால கட்டத்திலே யூத தேசிய நிதி மற்றும் ஹிப்ரு தொழிலாளர் கொள்கைகள் போன்றவற்றால் வஞ்சகமாக நிலங்கள் வாங்கப்பட்டு தம் இருப்பிடங்களை பறிகொடுத்த மக்களுக்காக பல்வேறு உதவிகளை செய்தார்கள். மேலும் பல்வேறு இடங்களுக்கு சென்று அங்குள்ள மக்களிடம் பிரித்தானிய மற்றும் யூத ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக ஜிஹாத் செய்ய தயாராகுமாறு பிரச்சாரம் செய்தார்கள். இவர்களுக்கு ஆதரவாக டமஸ்கஸ் முப்தியின் பத்வாவும் இவர்களுக்கு கிடைத்தது.


1930 ஆண்டு பிரித்தானிய மற்றும் யூத ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட “கருப்பு கை” (Black Hand) அமைப்பு அமைக்கப்பட்டதற்கு இவர்களின் பிரசாரங்கள் மிக முக்கியமானவையாகும். பிரித்தானிய மற்றும் யூத ஏகாதிபத்தியவாதிகளுக்கும் அவர்களின் ஆக்கிரமிப்புக்கும் எதிராக தாக்குதல்களை மேற்கொள்ளுமாறும் அவர்கள் பிரகடனம் செய்தார்கள். பின்னர் பல நூறு மக்களை ஒன்றிணைத்து ஆயுத படையை அமைத்தார்கள். மேலும் விவசாயிகளுக்கும் ஆயுத பயிற்சி வழங்கினார்கள். அந்த ஆயுத படைகள் யூத ஆக்கிரமிப்பு குடியிருப்புகளில் தாக்குதல்களை மேற்கொண்டு வந்தது.


1935 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இராணுவத்தோடு நேருக்கு நேர் மோதி அவர்களின் துப்பாக்கி சூட்டில் வீர மரணம் அடைந்தார்கள். கடைசி நேரத்தில் அவர்கள் பிரிட்டிஷ் இராணுவத்திற்கு எதிராக நிமிர்ந்து நின்று சண்டையிட்டது பாலஸ்தீன வரலாற்றில் ஒரு மாபெரும் வீர செயலாக கருதப்பட்டது.


இவர்களின் வீரதீர செயற்பாடுகளும், பிரச்சாரங்களும் இன்றளவும் பாலஸ்தீன மக்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட வலிமை சேர்க்கிறது.


இவர்களின் நினைவாகவே பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் தனது இராணுவ படை பிரிவுக்கு “இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் படையணி” என்று பெயரிட்டுள்ளது.


அல்லாஹ் இவர்களை பொருந்திகொள்வானாக.