MAIL OF ISLAM

Knowledge & Wisdom



மௌலானா ஷெய்க் அப்துல் காதர் ​ ரஹ்மதுல்லாஹி அலைஹி


எழுதியவர் - அப்துர் ரஹீம் முஹம்மத் ஜௌபர் (ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர்)  


மகான் ஷைகனா அலீ ஸலாஹுத்தீன் இப்னு ஸதக்கதுல்லாஹ் அப்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மறைவுக்குப் பிறகு தரீகத்துல் ஐதரூஸியத்துல் காதிரியா தரீக்கா ஞான பீடத்தின் ஆட்சி பொறுப்பில் அப்பாவின் மூத்த மகனாராகிய ஷைகு முஹம்மத் அப்துல் காதிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அமர்ந்தார்கள்.

மிகக் குறுகிய காலமே வாழ்ந்த அவர்கள் தரீக்காவின் வளர்ச்சிக்கு அளப்பரிய சேவையாற்றினார்கள்.

அரபு மொழியிலும் தமிழ் மொழியிலும் ஒப்புவமை இல்லா சிறப்புடன் திகழ்ந்தார்கள். ஏராளமான கஸீதாக்களை, பாடல்களை இரு மொழிகளிலும் பாடினார்கள்.

தனித்தன்மை வாய்ந்த ஒரு ராத்தீபினை உருவாக்கி உலகுக்கு வழங்கினார்கள்.

சிறு வயதிலிருந்தே கௌதுல் அஃலம் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மீது அளவு கடந்த நேசம் கொண்டவர்களாக வாழ்ந்தார்கள்.

அவர்கள் மதரஸாவில் கற்றுக் கொண்டிருக்கும் போது அவர்களின் கண் பாதிக்கப்பட்டு கண் பார்வையை இழந்தார்கள். வைத்தியங்கள் பலனளிக்காத நிலையில், இனி இந்த வெளி மருந்துகளால் யாதொரு பலனுமில்லை என்று உணர்ந்தார்கள்.

தன்னை கௌதுல் அஃலத்திடம் ஒப்டைத்தவர்களாக அவர்களின் 'அஸ்மாஉல் கௌதுஸ் ஸமதானி'யை காலை மாலை தொடர்ந்து ஓதிவரத் தொடங்கினார்கள். இவ்வாறு 21 நாள் ஸுபஹுக்குப் பின் தன் நாட்டங்களை கல்பில் தரிபடுத்தி தொடர்ந்து ஓதியப் பிறகு திடீரென அவர்களின் நாவிலிருந்து ஸையிதுனா கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் புகழ்ந்துரைத்து ஒரு கபூல் செய்யப்பட்ட முனாஜாத்து வெளியாகியது.

அதை எழுதுவதற்கு கண் பார்வையும் பிரகாசமாகியது. இதைப் பார்த்த அலீ ஸலாஹுத்தீன் அப்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்து, "மகனே! இது நீங்கள் பாடியதுமல்ல... பாடுவதற்குரிய வயதுமல்ல... அறிவுமல்ல. அல்லாஹுத'ஆலா கௌது நாயகத்தின் பொருட்டால் 'ஹிபத்' தென்ற நன் கொடையாக உங்களுடைய நாவில் இதை வெளியாக்கி உள்ளான். ஆகவே நேமமாக ஓதி வாருங்கள்." என் உத்தரவிட்டதோடு அவர்களும் வெள்ளி திங்கள் இரவுகளில் தவறாமல் ஓதி வந்தார்கள்.

ஏராளமானவர்கள் இதனை நேமமாக ஓதிப் பலனடைந்தார்கள். 'ஸையிதுனா கௌதுல் அஃலம் அவர்கள் முன் அதபுடனே நிற்பது போல் விடாது ஓதி வந்தால் எம்மைப் பீடித்துள்ள சகல வகையான நோய் நொடி நொம்பலங்கள், பலாய், முசீபத்துகள் யாவும் நிச்சயம் தீரும்' என அப்பா கூறி உள்ளார்கள்.


​​இந்த நீண்ட முனாஜாத்தின் ஆரம்ப வரிகள் இவ்வாறு அமைந்துள்ளன.

'ஆதாரமாக எந்தன் அங்கமதிலே சிறந்த

வேதாம்பரான கௌதை நாடி யான் கெஞ்சலுடன்

இந்த முனாஜாத்ததனை இன்பமடனே உரைத்தேன்

எந்தன் இறையே இதற்குக் காப்பு

நேத்திரமதன் நோவதனை நேத்திர மணி மாலையதால்

காத்தருள வேணும் கௌது முஹ்யித்தீன் தன் பொருட்டால்

துன்பம் வெருள் துயரம் தூராகவே

உனது இன்பமதை தந்துதவி செய்'

அல்லாஹ்வின் நாட்டம், தனது 48வது வயதில் அவர்கள் இறையடி சேர்ந்து, தன் மறுமை பயணத்தை மேற் கொண்டார்கள்.


​​இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.