MAIL OF ISLAM

Knowledge & Wisdom



மௌலானா ஷெய்க் நாஸிம் ஆதில் கிப்ரீஸி அல்-ஹக்கானி

ரஹ்மதுல்லாஹி அலைஹி


எழுதியவர் - இfபாம் நவாஸ் 


ஷெய்க் நாஸிம் அவர்கள் 1922 ஏப்ரல் 21 இல் தென்கிழக்கு சைப்ரஸ் நகரான ஸ்கேலே(லர்னகா) நகரில் பிறந்தார்கள். இவர்கள் தனது தாய் மற்றும் தந்தையின் வழியே ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழித்தோண்றலில் வந்நதவர்கள்.

தந்தை வழியே 11ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் இறைநேசரான அப்துல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களது வழித்தோன்றலிலும் தாய் வழியே 13ஆம் நூற்றாண்டின் இறைநேசரான மௌலானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களின் வழித்தோன்றலில் வந்தவர்கள்.

அவர்களின் பெற்றோர் வழியாக மரபு ரீதியில் அவர்கள் காதிரி மற்றும் மெவ்லவி ஆகிய இரு தரீக்காவை சேர்ந்தவராக விளங்கினார்கள். அவர்களின் பாட்டனார் முஹம்மத் நாஸிம் எபிந்தி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் சைப்ரஸ் துருக்கியின் புகழ்பெற்ற கவிஞராகவும் ஆன்மீகத் தலைவருமாக காணப்பட்டார்கள்.

சிறுவயதிலிருந்தே அவர்களின் பாட்டனாருடன் லர்னகா நகரில் அடங்கப்பெற்றுள்ள மூத்த ஸஹாபியாவான உம்மு ஹரம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் அடக்கஸ்தலத்துக்கு அடிக்கடி செல்லக்கூடிய வாய்ப்பு கிட்டியதுடன் தனது பாட்டனாருடன் அதிக காலம் செலவிடவும் சந்தர்ப்பம் கிடைத்தது.

தனது 18ஆம் வயதில் இரண்டாம் நிலைக் கல்வியை முடித்த ஷெய்க் நாஸிம் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் இஸ்தான்பூல் பல்கலைக்கழகத்தில் இரசாயனப் பொறியியல் துறையில் இணைந்து கொண்டார்கள்.

அத்துடன் இஸ்லாமிய இறையியல் மற்றும் அரபு மொழி என்பவற்றை கமால்தீன் எலஸ்தோனி என்ற ஆசிரியரிடம் பயின்றார்கள். இஸ்தான்பூலில் இருக்கும் போது அவர்கள் ஷெய்க் சுலைமான் எர்துருமி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களைச் சந்தித்ததுடன் அவர்கள் ஷெய்க் நாஸிம் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களுக்கு நக்ஷபந்தி தரீக்காவை அறிமுகம் செய்தார்கள்.

தனது பட்டப்படிப்பை முடித்த ஷெய்க் நாஸிம் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் 1945இல் நக்ஷபந்தி தரீக்காவின் ஆன்மீகத் தலைவர் ஷெய்க் அப்துல்லாஹ் பைஸி அத்தகெஸ்தானி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களை சந்திப்பதற்கு சிரியா சென்றார்கள். சிரியாவில் அவர்கள் டமஸ்கஸ் அலிப்போ மற்றும் ஹோம்ஸ் போன்ற நகரங்களில் தங்கி நின்று ஷெய்குல் இஸ்லாம் அப்துல் அஸீஸ் உயுன் அஸ்ஸுத் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) போன்ற அறிஞர்களிடம் இஸ்லாமிய விஞ்ஞானம் போன்ற கல்விகளை கற்றார்கள். மேலும் தனது ஆன்மிகக் குருவான ஷெய்க் அப்துல்லாஹ் பைஸி அத்தகெஸ்தானி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களிடம் 1973ஆம் ஆண்டு வரை கல்வி கற்றார்கள். பின்னர் ஷெய்க் அப்துல்லாஹ் பைஸி அத்தகெஸ்தானி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களின் உத்தரவின் படி சைப்ரஸ் திரும்பினார்கள்.

அவர்கள் சைப்ரஸ் திரும்பிய காலப்பகுதியில் சைப்ரஸ் பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்ததுடன் துருக்கிய சைப்ரஸ் பகுதிக்கு துருக்கிய கமாலிய சீர்த்தீருத்தவாதியின் பொம்மை ஆட்சியாளரான கலாநிதி பாதில் நொக் என்பவர் தலைவராக காணப்பட்டார். அவ் அரசாங்கத்தின் குறிப்பிடத்தக்க வெளிப்படையான நடவடிக்கையாக அரபுமொழியில் அதான் சொல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

இஸ்லாத்திற்கு எதிரான இந்த தெளிவான உரிமை மீறலை ஷெய்க் நாஸிம் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் கடுமையாக எதிர்த்ததுடன் அரசாங்கத்தின் இக்கொள்கையை கடுமையாக நிராகரித்தார்கள். இதற்காக பல நகரங்களுக்குச் சென்று பள்ளிவாசல்களின் மினாராக்களின் உச்சிக்கு ஏறி அரபு மொழியில் அதான் சொன்னார்கள்.

இதன் விளைவாக அவர்களுக்கு எதிராக 114 முறைப்பாடுகள் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்கள். அதன் பின்னர் அத்னான் மென்டேர்ஸ் துருக்கியின் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின்னர் அரபுமொழி அதான் தடை நீக்கப்பட்டு ஷெய்க் நாஸிம் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

1973இல் ஷெய்க் அப்துல்லாஹ் பைஸி அத்தகெஸ்தானி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களின் மரணத்தைத் தொடரந்து ஷெய்க் நாஸிம் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் நக்ஷபந்தி தரீக்காவின் தலைவரானார்கள்.

அன்று முதல் உலகின் பல நாடுகளுக்கான பயணத்தை ஆரம்பித்தார்கள். மேற்கு ஐரோப்பா, ஐக்கிய அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, மத்திய ஆசியா மற்றும் காகஸ் போன்ற இடங்களுக்கு பயணம் செய்தார்கள். அவர்கள் தனது பயணத்தின் போது எண்ணற்ற மகாம்களை அமைத்ததுடன் ஆன்மிகப் போதனைகள் மற்றும் சடங்குகளுக்கு வழிகாட்டுவதற்கு கலீபாக்களையும் நியமித்தார்கள்.

சைப்ரஸின் லெப்காவிற்கு இடம்பெயர்ந்த அவர்கள் அங்கு நக்ஷபந்தி தரீக்காவின் பிரதான மக்காமை அமைத்தார்கள். அங்கே உலகின் பல நாடுகளைச் சேந்த மக்கள் வந்து பயன்பெற்று வந்தார்கள். ஷெய்க் நாஸிம் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களின் பிரதான விருந்தினராக பாப்பரசர் பெனடிக் அவர்கள் வந்துசென்றார்கள்.

பாப்பரசர் ஷெய்க் நாஸிம் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களை சைப்ரஸின் ஐ.நா. சபையின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லைப்பகுதியில் சந்தித்தார்கள்.

2010இல் சிலியின் சுரங்க விபத்தில் சிக்கியிருந்து பல நாட்கள் இருளிலில் இருந்து பின்னர் உயிர்தப்பிய நான்கு சிலி சுரங்கத் தொழிலாளர்கள் ஷெய்க் நாஸிம் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களை சந்தித்து புனித இஸ்லாத்தை ஏற்று நக்ஷபந்தி தரீக்காவில் இணைந்துகொண்டார்கள்.

ஷெய்க் நாஸிம் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களுக்கு காலஞ்சென்ற தனது மனைவி மூலமாக நான்கு பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் 1941இல் திருமணம் செய்தார்கள். அவர்களின் மகன் முஹம்மத் எபிந்தி இஸ்தான்பூலை தளமாகக் கொண்டு செயற்பட்டு வருகிறார்கள். தனது தந்தைக்கு பின்னர் நக்ஷபந்தி தரீக்காவின் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்கவுள்ளார்கள்.

ஷெய்க் நாஸிம் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களின் ஜனாஸாவில் சைப்ரஸின் தலைமை முப்தி ஷெய்க் தாலிப் அதாலே அவர்கள் கலந்துகொண்டார்கள். ஷெய்க் நாஸிம் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களை அல்லாஹூத்தஆலா அங்கீகரித்து அன்னாருக்கு மேன்மையான ஜன்னத்துல் பிர்தவ்ஸ் சுவனத்தை வழங்குவானாக. ஆமீன்.