MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஹழ்ரத் உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரலியல்லாஹு அன்ஹு


எழுதியது - அப்துல் ரஹீம் முஹம்மத் ஜௌபர் (ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர்)


ஸையுதுனா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அடிக்கடி கூறுவார்கள், "என்னைப் போலவே ஆட்சி செய்யக் கூடியவர் முகத்திலே ஒரு தழும்போடு தோன்றுவார். அவர் இந்தப் பூமியில் நீதிதியையும் நேர்மையையும் நிலை நிறுத்துவார்."

ஸையுதுனா உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரலியல்லாஹு அன்ஹு சிறு பிள்ளையாய் இருக்கும்போது ஒருநாள் ஒரு குதிரை அவர்களின் முகத்தில் உதைத்துவிட்டது. முகத்தில் இரத்தப் பெருக்கு ஏற்பட்டது. அந்த இரத்த்தத்தை துடைத்து துடைத்து தந்தையார் கூறுவார்கள், "மகனே, முகத்தழும்பை பற்றி பேசப்பட்டது நீயாக இருந்தால் உண்மையிலேயே நீ பாக்கியம் பெற்றுவிட்டாய்."

சில பேரறிஞர்கள் கூறுவார்கள், "உமரைப் போல் ஆட்சி செய்யக்கூடியவர் இவ்வுலகில் தோன்றும்வரை இவ்வுலகம் அழியாது."



​​​

‪‎பிறப்பு‬

ஸையுதுனா ஹஸ்ரத் உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரலியல்லாஹு அன்ஹு 'அல் கலீபா உஸ் ஸாலிஹ்' பரிசுத்தவானாய்த் திகழ்ந்த கலீபா, 'அல் கலீபா அல் காமிஸ்' நேர்வழி சென்ற ஐந்தாவது கலீபா என பரவலாக அழைக்கப்படுகிறார்கள்.

இவர்கள் எகிப்தின் ஆளுனர் அப்துல் அஸீஸின் மகனார். ஸையுதுனா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பெயர்த்தி உம்மி ஆஸிமின் மகனார்.

ஹிஜ்ரி 63 (கி.பி 682)ல் எகிப்து ஹல்வான் கிராமத்தில் பிறந்தார்கள். மதீனாவில் தன் தாய்மாமனார் அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்களின் மேலான வழிகாட்டலின் கீழ் கல்வி கேள்விகளை கற்றுத் தேர்ந்தார்கள். ஓர் இமாமாக திகழ்ந்தார்கள். அறிஞர்கள் அவர்களிடம் வந்து ஞான விளக்கம் பெற்றார்கள்.

ஸையுதுனா உமர்இப்னு அப்துல் அஸீஸ் தன்னுடைய மாமனார் கலீபா அப்துல் மாலிகின் மகளார் பாத்திமாவை திருமணம் செய்துக் கொண்டார்கள்.

மதீனாவின் ஆளுனராக கி. பி 706ல் நியமிக்கப்பட்டு, பின் இஸ்லாமிய உலகின் கலீபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.



​​‪சிறப்பு‬

*கலீபாக்களுக்குரிய அத்தனை ஆடம்பர வாழ்க்கையையும் விட்டொழித்தார்கள்.

*தனக்கு பாதுகாப்பு தேவையில்லை என்று தடுத்துவிட்டார்கள்.

*பைத்துல்மால் ஊடாகவே தனக்குரிய செலவுகள் செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.

*எளிமையான ஆடைகளையே அணிவார்கள்.

*பாமரர்களின் வாழ்வு தனக்கு போதும் என்று சிறு குடிசையிலேயே வாழ்ந்தார்கள்.

*அப்போதுதான் பாதிக்கப்பட்ட மக்களை தன்னால் விரைவில் அடைய முடியும் என்று கூறினார்கள்.

*பின் பிம்பர் மேடை மேல் ஏறி, பின்வருமாறு கூறினார்கள், "சகோதரர்களே, என்னுடைய விருப்பத்துக்கு மாறாகவே நான் கலீபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளேன். இப்போதுகூட நீங்கள் என்னை புறம் தள்ளிவிட்டு உங்களுக்கு விருப்பமானவரை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்." அத்தனை பேரும் சத்தமிட்டு அழுது, "நீங்களே எங்கள் கலீபா... நீங்களே எங்கள் கலீபா" என்று கூறினர்.

*பின் அனைவருக்கும் தூய்மையான வழியில் உறுதியாக இருக்குமாறு கூறினார்கள்.

*பின் தன் மக்களைபார்த்து 'தான் அல்லாஹ் ரஸூலின் வழிக்கு மாற்றமாக நடப்பதைக்கண்டால் அவர்கள் தனக்கு பைஅத் எனும் உறுதி பிரமாணம் செய்துக் கொண்டதை வாபஸ் வாங்கிக் கொள்ளும்படி கூறினார்கள்.



​​‪நிர்வாகம்‬

*ஈருலகுக்கும் மக்களுக்கு ஆற்றக்கூடிய பணிகளை ஆற்றினார்கள்.

*கடுமையாக உழைத்தார்கள். அரிதாகவே ஓய்வு கொண்டார்கள்.

*ஸையுதுனா உமர் ரலியல்லாஹு அன்ஹுவை முன் உதாரணமாகக் கொண்டார்கள்.

*இதனாலேயே ஸையுதுனா ஸுப்பியானுத் தவ்ரி ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள், "நேர்வழி நடந்த கலீபாக்கள் ஐவர்:- ஸையுதுனா அபூபக்ர், ஸையுதுனா உமர், ஸையுதுனா உத்மான், ஸையுதுனா அலி, ஸையுதுனா உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரலியல்லாஹு அன்ஹும்."

*மிகக் குறுகிய காலமே ஆண்டாலும், தனக்கு முன் ஆண்டவர்களினால் இல்லாமல் செய்யப்பட்ட ஜனனாயகத்தை மீண்டும் நிலைநிறுத்தினார்கள்.

*உமையாக்கள் காலத்திலிருந்த ஊழல் மிகுந்த ஆட்சியை இல்லாதொழித்தார்கள்.

*உமையாக்களால் அநீதியாய் அபகரிக்கப்பட்ட சொத்துக்களை மீட்டுக் கொடுத்தார்கள்.

*தன் அசையும் அசையா சொத்துக்கள் அத்தனையையும் பைத்துல்மாலுக்கு ஒப்படைத்தார்கள். கலீபா வலீதால் தனக்கு பரிசாக தரப்பட்ட மோதிரத்தை கூட ஒப்படைத்தார்கள். இதைக் கண்ட அவர்களின் விசுவாசமான அடிமை மஸாஹிம்கூட மனமுருகி கண்ணீர்விட்டு கேட்டார் "நாயகரே, நீங்கள் எதைதான் உங்கள் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்கிறீர்கள்?" அதற்கு அவர்களின் பதில், "அல்லாஹ்!"... ஸுப்ஹானல்லாஹ்! என்னவென்போம் இவர்கள் நேர்மையை.


​​

‪‎சேவை‬

* தனது விரிந்து பரந்த சாம்ராஜ்யமெங்கனும் ஆயிரக்கணக்கான கிணறுகள் வெட்டப்பட்டன, தங்குமிட வசதிகள் செய்யப்பட்டன.

*இலவச மருத்துவ மனைகள் நிறுவப்பட்டன.

*வழியேதுமற்ற பயணிகளுக்கு அரசாங்க உதவிகள் வழங்கப்பட்டன.


​​

‪தீர்வு‬

உமையாக்கள் பொதுமக்களின் செல்வத்தை சுரண்டி ஆடம்பரமாக வாழ்ந்தவர்கள். கலீபாவின் கட்டுபாடுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அத்தனைபேரையும் விருந்துக்கழைத்தார்கள் கலீபா. சாப்பாட்டை தாமதமாகப் பரிமாறு சேவகர்களுக்கு கூறினார்கள். உமையா விருந்தாளிகள் பசியால் துடித்து கத்தினார்கள். உடனே அவர்களுக்கு காய்ந்த விதைகள் பரிமாறப்பட்டன. அத்தனையையும் வயிறு நிறைய தின்று தீர்த்தார்கள். இப்போது அவர்களுக்கு சுவையான உணவு பரிமாறப்பட்டது. அவர்களால் உண்ண முடியவில்லை. கலீபா கூறினார்கள்,


​​"சகோதரர்களே! உங்களாலும் சாதாரண உணவை உண்டு வாழமுடியும் என்றிருக்கும்போது ஏன் மற்றவர்களுடைய உரிமைகளோடு விளையாடுகிறீர்கள்? நெருப்பை நெருங்குகிறீர்கள்." அத்தனை பேரும் கண்ணீர்விட்டு அழுதார்கள்.


​​

‪கண்ணீர்‬

ஒருமுறை தொழுகையில் அழத் தொடங்கிவிட்டார்கள். அவரது மனைவி பதறி, "அன்பரே, ஏன் அழுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். "பாத்திமா என்னை மக்கள் ஆட்சியாளனாக நியமித்துள்ளார்கள். இந்த பரந்து விரிந்த சாம்ராஜ்ஜியத்தில் எத்தனை பேர் பசியால் வாடிக்கொண்டிருப்பார்கள்? எத்தனை வயோதிபர் தவித்துக் கொண்டிருப்பார்கள்? எத்தனை பேர் அதிகாரம் பெற்றவர்களால் அடக்கப்பட்டுக் கொண்டிருப்பார்கள்? எத்தனைபேர் அநீதியாய் சிறையிலிடப்பட்டிருப்பார்கள்? எத்தனைபேர் ஆடையின்றி இருப்பார்கள்? எத்தனை பேர் பெருங் குடும்பச் சுமையால் தவித்துக் கொண்டிருப்பார்கள்? நோய்களினால் தவித்துக் கொண்டிருப்பார்கள்?" அத்தனை பேருக்காகவும் நான் நாளை மறுமையில் விசாரிக்கப்படுவேன் பாத்திமா. தப்ப முடியாது பாத்திமா" என்று அழுதார்கள்.


​​

கண்டிப்பு‬

ஸையுதுனா உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்கள் அன்பான தந்தையார். ஆனால் அதற்காக ஒருபோதும் தன் பிள்ளைகளை ஆடம்பரமாக வாழ அனுமதிக்கவில்லை. ஒருமுறை அவரது மகளாருக்கு மக்கள் முன் வரவேண்டிய தேவை ஏற்பட்டது. அறைகுறை ஆடையோடு அவரால் வரமுடியவில்லை. இறுதியில் அவரது மாமி அவருக்கு ஆடை வாங்கிக் கொடுத்தார்.

அவர்கள் ஒருபோதும் யாரிடமிருந்தும் பரிசுகளை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். சொல்லுவார்கள்,"சந்தேகமில்லாமல் மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. அவை பரிசுகள். ஆனால் எனக்குத் தரப்படுவது லஞ்சம்!"



​​‪‎முடிவு‬

ஒருநாள் அவர்களின் அடிமை கடுமையான ஒரு நஞ்சை அவர்களுக்கு கொடுத்துவிட்டான். தான் நஞ்சூட்டப்பட்டு விட்டேன் என்பதை அறிந்ததும் கலீபா அவர்கள் அவனை அழைத்து காரணத்தை கேட்டார்கள். அவன் இந்தப் பணியை முடிக்க தனக்கு 1000 தீனார் லஞ்சமாக தரப்பட உள்ளதைக் கூறினான். உடனே பொது நிதியத்திலிருந்து அவனுக்கு 1000 தீனாரை கொடுக்கச் செய்து, அவனை உடனே தப்பிப் ஓடும்படி பணித்தார்கள். இவ்வாறு தன் இளம் பருவத்தில் , தனது 36வது வயதில், கி.பி 719ல், இவ்வுலகை நீத்து அகால மரணமடைந்தார்கள். ஹோம்ஸில் நல்லடக்கமானார்கள்.

ஸையுதுனா உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரலியல்லாஹு அன்ஹு இப்பூவலகில் வாழ்ந்த நல்லாத்மாக்களில் ஒருவர். அவர்களின் உயிர் தியாகம் முழு இஸ்லாமிய உலகையே துக்கத்தில் ஆழ்த்தியது. இன்றும் ஆழ்த்துகிறது. அவரிடம் மீதமாய் இருந்தது வெறும் 17 தீனார்கள் மாத்திரமே!