MAIL OF ISLAM

Knowledge & Wisdom



அத்தஹிய்யாத்தில் விரல் அசைப்பது கூடுமா?

​எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


தொழுகையில் (அத்தஹிய்யாத்) அமர்வில் விரலை ஆட்டிக் கொண்டிருப்பது (அசைப்பது)  கூடுமா?

♣  இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு :-


​தொழுகையில் அத்தஹிய்யாத் அமர்வில் விரலை கட்டாயம் அசைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று ஹதீஸ் கலை பற்றிய அடிப்படை ஞானமில்லாமல் இது குறித்து பலவீனமான ஹதீஸினை சில பிரசுரங்கள், வீடியோ பயான் மூலமாக வெளியிட்டு அசத்தியத்தை நிறுவ முயன்றுள்ளனர்.


​​வழிகெட்ட வஹ்ஹாபிகளால் சமுதாயத்தில் இது ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக ஆக்கப்பட்டு விட்டது. இருப்பில் விரலை அசைப்பதை தொழுகையில் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தராத (விரலை அசைப்பது) நபிவழி என்று வாய் கூசாமல் மக்கள் மத்தியில் இந்த வழிகெட்ட வஹ்ஹாபிகள் பித்அத்தை செய்யும் படி கூறிவருகின்றனர்.  ஆகவே மனோ இச்சைகளை ஒதுக்கி வைத்து

விட்டு அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.


​​

♣ தொழுகையில் விரலாட்டுவது அவசியம் என்ற போலியான ஆதாரங்களுக்கு தக்க பதில்கள்

நாம் தொழுகையில் விரலை உயர்த்துவது, சுட்டிக்காட்டுவது சுன்னத்தாகும். ஆனால் அத்தஹியாத்தில் விரலாட்டிகள் தம் விரலாட்டும் கொள்கையை நிலைப்படுத்துவதற்காக காட்டக்கூடிய போலியான ஆதாரங்களுக்கு தக்க பதில்கள் பின்வருமாறு:

♦ ஹழ்ரத் வாயில் இப்னு ஹுஜ்ர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். நான் இறைத்தூதர் (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தனது இடது உள்ளங்கையை இடது முழங்கால் மற்றும் தொடையின் மீதும் தனது வலது முழங்கையை வலது தொடையின் மீதும் வைத்து பின்பு தனது இரு விரல்களை மடக்கி வளையமிட்டு, ஒருவிரலை உயர்த்தினார்கள். அப்போது பிராத்தித்தவர்களாக அதை அசைக்கக்கண்டேன்.


​​நூல்கள்: நசாயி1251, அஹ்மத் 18115, பைஹகீ, தாரமீ 1408, ஸஹீஹ் இப்னு குஸைமா 691, ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 1892

மேலே உள்ள ஹதீஸ் விளக்கம்: இந்த ஹதீஸ் பலவீனமானதாகும். ஏனெனில் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் ஆஸிம் பின் குலைப் என்பவர் இடம்பெறுகிறார். இவரைப்பற்றி சிலர் சரி என்று கண்டிருந்தாலும், ஹதீஸ் கலைவல்லுநரும் அறிவிப்பாளர்களை எடைபோடும் அல்லாமா இப்னுல் மதீனீ (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் ஆஸிம் பின் குலைபைப் பற்றி குறை கூறியிருக்கிறார்கள். மேலும் அல்லாமா இப்னுல் மதீனீ (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் ஆஸிம் பின் குலைப் தனித்தநிலையில் ஒரு ஹதீஸை அறிவித்தால் அதை ஆதாரமாகக் கொள்ளுதல் கூடாது என்று கூறினார்கள். நூல் : தஹ்தீப் அத்தஹ்தீப்

விரலை அசைக்கலாம் என்று வரக்கூடிய அனைத்து ஹதீஸ்களிலும் ஆஸிம் பின் குலைப் தான் இடம் பெறுகிறார், அவர் இடம் பெறாத விரல் அசைத்தல் தொடர்பான எந்த ஹதீஸும் இல்லை. ஆகவே, ஆஸிம் அவர்களினால் அறிவிக்கப்படும் இந்த அறிவிப்பு பலம் இல்லாததாகி விடுகிறது. ஆகையால் இந்த ஹதீஸைக் கொண்டு “விரலை அசைக்கலாம்” என்ற சட்டத்தை தீர்மானிக்க இயலாது.


​​விரலாட்டும் கொள்கையைக் கொண்டவர்கள் இந்த பலவீனமான ஹதீஸ ஆதாரமாக எடுக்கக்கூடாது. ஓர் அறிவிப்பாளரைப் பற்றி சிலர் சரி கண்டிருந்தாலும், ஒருவர் மட்டும் குறைகூவதைக் கொண்டு அந்த ஹதீஸை தள்ளுபடி செய்வது சுன்னத் ஜமாஅத் செயல்முறை கிடையாது. மாறாக இது விரலாட்டிகளின் கொள்கையாகும்.


​​ஏனெனில் இவர்கள் தான் ஓர் அறிவிப்பாளரைப் பற்றி ஒருவர் குறை கூறியிருந்தாலும் அந்த ஹதீஸை தள்ளுபடி செய்து விடுவார்கள். அதனை ஆதாரமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதில் பெரிய வேடிக்கை என்ன தெரியுமா? பாருங்கள் ! தக்பீர் தஹ்ரீமா நேரத்தில் மட்டும் தான் கைகளை உயர்த்த வேண்டும், மற்ற நிலைகளில் கைகளை உயர்த்துவது கிடையாது என்று வந்துள்ளது ஹதீஸை ஆதாரமாக ஏற்க மறுத்து விட்டார்கள். அந்த ஹதீஸை நிராகரிப்பதற்கு என்ன காரணம் கூனார்கள் தெரியுமா ? அந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் ஆஸிம் பின் குலைப் இடம் பெற்றுள்ளார். எனவே, இந்த ஹதீஸை ஆதாரமாக ஏற்க மாட்டோம் என்று கூறியுள்ளார்கள். (அந்நஜாத்-நவம்பர் 1989) அன்று அறிவிப்பாளரை காரணமாகக்காட்டி ஹதீஸை நிராகரித்தார்களோ அதே அறிவிப்பாளர் (ஆஸிம் பின் குலைப்) தான் இந்த ஹதீஸிலும் இடம் பெறுகிறார்கள். 1989-ல் பலவீனமானவராக இருந்த ஆஸிம் பின் குலைப் இப்பொழுது எப்படி பலமானவராக மாறிவிட்டார்கள் ?

♦ ஒருவேலை ஹஜ்ரத் ஆஸிம் பின் குலைப் அவர்கள் இடம் பெற்றுள்ள இந்த ஹதீஸ் பலமுள்ளதாக ஏற்றுக்கொண்டாலும், விரலை அசைத்தார்கள் என்று வந்துள்ள ஹதீஸை விட விரலை அசைக்கக்கூடாது என்று வந்துள்ள ஹதீஸ் மிகவும் பலமுள்ளதாகும். இதனை இமாம் பைஹகீ (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் கூறுகிறார்கள் !


​​

♣ தொழுகையில் விரல் அசைக்க கூடாது என்பதற்குறிய ஆதாரங்கள்:

ஹதீஸ் அடிப்படையிலும், அறிவின் சிந்தனையின் அடிப்படையிலும் கூட அத்தஹியாத்தில் விரலாட்டுவது கூடாது. காரணம் பொதுவாக அத்தஹியாத்தில் விரலை உயர்த்துவது, சுட்டிக்காட்டுவது அல்லாஹ் ஒருவர் என்பதை காட்டுவதெற்காகதான். ஏனெனில் ஒரு சமயம் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ஸஹாபியை பார்க்கின்றார்கள். அந்த ஸஹாபி தோழர் அத்தஹியாத்தில் இரண்டு விரலை (சமிக்கை) சுட்டிக்காட்டிக் கொண்டிருந்த போது நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் 'அஹ்ஹித், அஹ்ஹித்' ஒரு விரலை சுட்டிக்காட்டுகள், ஒரு விரலை சுட்டிக்காட்டுகள் என கூறினார்கள்.  நூல்: திர்மிதீ 


​​ஆகவே இறைவன் ஒருவர் என்பதை உடல் உறுப்பினாலும் காட்டுவதெற்காக வேண்டிதான் அத்தஹியாத்தில் ஒரு விரலை மாத்திரம் சுட்டிக்காட்டுகின்றோம். ஆனால் வழிகெட்ட வஹாபிகள் உறுதி இல்லாமல் விரலை அசைத்துக் கொண்டு இருந்தால் இந்நோக்கமே தகர்க்கப்படுகின்றது. விரலை அசைத்துக் கொண்டிருந்தால் (அல்லாஹ் ஒருவர்) என்பதில் எனக்கு சந்தேகமாக உள்ளது என்ற அர்த்தம் வந்துவிடும். எனவே அறிவுப்பூர்வமாக சிந்தித்து பார்த்தாலும் விரலாட்டுவது கூடாது என்பது தெளிவாக விளங்குகின்றது. மேலும் சில ஹதீஸ்கள் ரீதியாகவும் அத்தஹியாத்தில் விரலை ஆட்டிக் கொண்டிருப்பது கூடாது என்று பார்க்கலாம்.

♦ அத்தைஹிய்யாத் இருப்பில் நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் துஆ ஓதும் போது விரலால் சமிக்கை செய்தார்கள். விரலை அசைக்க மாட்டார்கள்.


​​அறிவிப்பாளர்: ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு சுபைர் ரலியல்லாஹு அன்ஹு

​நூல் :அபூதாவுத்

♦ அத்தைஹிய்யாத் இருப்பில் விரலால் சமிக்கை செய்தார்கள். ஆட்டவில்லை. நூமய்ருல் குஜாயி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தொழுகையில் தங்களது வலது கரத்தை வலது தொடையின் மீது வைத்து சுட்டு விரலால் சமிக்கை செய்ததை நான் பார்த்தேன்.


​நூல் இப்னு மாஜா

♦ நான் இறைத்தூதர் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் தொழுகையை பார்த்தேன். (விரல்களால்) வளையமிட்டார்கள். பின்பு அவர்களின் (கலிமா) விரலை உயர்த்தினார்கள். அவ்விரலை அசைத்து துஆ ஓதியதை நான் பார்த்தேன்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் வாயில் இப்னு ஹுஜ்ர் ரலியல்லாஹு அன்ஹு

​நூல் பைஹகி


​​மேற்காணும் ஹதீஸுக்கு இமாம் பைஹகி ரஹ்மதுல்லாஹி அலைஹி அதே கிதாபில் விளக்கம் கொடுக்கும்போது :'அசைத்தார்கள்' என்பதைக் கொண்டு நோக்கம் சுட்டி காட்டுவது மட்டுமே. தொடர்ந்து ஆட்டிக் கொண்டிருப்பது என்பதல்ல. இவ்வாறு பொருள் கொண்டால்தான் அப்துல்லாஹ் இப்னு சுபைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸிற்கு முரண்படாமல், உடன்பாடாக இருக்க வழியேற்படும். 


​​நூல் பைஹகி 2 - 132

யா அல்லாஹ்! விரலாட்டும் கொள்கையைக் கொண்டவர்கள் தம் கொள்கையை நிலைநாட்ட எதையும் செய்வார்கள் இந்த (விரலாட்டும் கொள்கை)யை விட்டும் நம் அனைவரையும் பாதுகாப்பானாக !