MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஜும்ஆவுக்கு முன் ஸுன்னத் உண்டா?

எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.

இஸ்லாத்தின் பார்வையில் ஜும்ஆவுக்கு முன் இரண்டு ரகஅத் சுன்னத் தொழுகை உண்டா? என்பது பற்றி ஓர் ஆய்வு.

​​

♣  இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு :-

1994 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலங்களில் ஜும்ஆவுக்கு முன் இரண்டு ரகஅத் சுன்னத் தொழுகை கிடையாது, இஸ்லாம் மார்க்கத்தில் ஜும்ஆவின் முன் சுன்னத் புதிதாக கொண்டு வரப்பட்ட பித்அத் ஆகும் என்று சில வழிகெட்ட வஹ்ஹாபிகள் இப்படி கூறிவந்தார்கள்.


​​ஹதீஸ்கள் அடிப்படையில் மக்கள் கடைபிடித்து வந்த சுன்னத்தான செயலொன்றை ஆய்வெதுவுமின்றி அவசரப்பட்டு 'பித்அத்' என்று கூறித் தடுப்பார்கள். சிறிது காலம் சென்றபின் தடுத்தது தவறு, ஹதீஸிலிருந்து இதற்கு தெளிவான ஆதாரம் உள்ளது என்றும் கூறுவார்கள்.

அன்புக்குரியவர்களே! வழிகெட்ட வஹ்ஹாபிகள் இப்பொழுது தடுத்துக் கொண்டிருப்பவற்றில் அடுத்தடுத்து எதை வாபஸ் வாங்குவார்களோ? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் அந்த அடிப்படையில் ஒரு காலத்தில் ஜும்ஆவுக்கு முன்னால் ஸுன்னத் இல்லை என்றார்கள். அதனை சரியென நம்பி சில நல்ல மனிதர்கள் தொழுவதை விட்டு விட்டார்கள். இப்பொழுது பழைய நிலைக்கு மீண்டும் உண்டு என்று சொல்கிறார்கள்.


​​இந்த நல்ல மனிதர்களின் கடந்த கால அமல்களை வீணாக்கியவர்கள் இவர்களுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறார்கள்? இவர்கள் இப்படித்தான் ஆய்வின்றி அவசரப்பட்டு நடப்பதைக் கூடாதெனத் தடுப்பார்கள். பின்னர் முட்டிக் கொண்டு தலை கவிழ்ந்தவர்களாக தங்களது முடிவை மாற்றிக் கொள்வார்கள். இத்தகையோர் விஷயத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆகவே வழிகெட்ட வஹ்ஹாபிகளின் தவரான வாதங்களை பின்பற்றாமல் குர்ஆன், ஹதீஸ், கியாஸ், இஜ்மாஃ ஆகிய அடிப்படையில் நேர்வழி பெற்ற ஸஹாபாக்கள், இமாம்களை பின்பற்றி வாழ்வதற்கு எல்லாம் வல்ல கிருபையாளன் நல்லுதவி புரிவானாக!


​​

♣  ஜும்மாவுக்கு முன் ஸுன்னத் உண்டு என்பதற்காக ஆதாரங்கள்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குத்பா பிரசங்கம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஸுலைக்குல் அத்பானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளியினுள் நுழைந்தார்கள். அன்னாரை விளித்து இங்கு (பள்ளிக்கு) வர முன் (வீட்டில்) தொழுதீரா? என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கேட்டார்கள். அவர் இல்லை என்றார். இரண்டு ரகஅத்துகள் தொழுவீராக என ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பணித்தார்கள்.


​​அறிவிப்பாளர்: ஹழ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு

நூல்: இப்னு மாஜா

இதற்கு சிலர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லமவர்கள் தொழக் கூறியது தஹ்யதுல் மஸ்ஜித் என சிலர் விளக்கம் பகர்கின்றனர்.பள்ளியினுள் நுழைய முன் தொழுதீரா? என்ற சொற்தொடர் இதனை மறுக்கின்றது. தஹ்யதுல் மஸ்ஜித் பள்ளியினுள் நுழைந்த பின்பு தொழுவது என்பது சகலரும் அறிந்ததே. எனவே,ஸுலைக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லமவர்கள் கூறியது ஜும்ஆவின் முன்னைய சுன்னத் என்பது தெளிவாகின்றது. ஸுலைக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மஸ்ஜீதுன் நபவிக்கு மிக அண்மையில் குடியிருப்பவர்.வீட்டில் தொழுதுவிட்டே பள்ளிவாசலுக்கு வருகை தருவதாக அண்ணலார் கருதியே இங்கு வரமுன் வீட்டில் தொழுதீரா எனக் கேட்டார்கள்,இல்லை என்றதும் தொழும்படி கட்டளையிட்டார்கள்.

♦ஜும்ஆவுக்கு முன் நான்கு ரகஅத்துகளும் பின் நான்கு ரகஅத்துகளும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தொழுவார்கள்.


​​அறிவிப்பவர் : ஹழ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு

நூல் : பைழுள் கதீர் 5 - 216

♦ இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஜும்ஆவுக்கு முன் வீட்டில் இரு ரக்அத்துக்கள் தொழுவார்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லமவர்களும் இப்படியேதான் தொழுவார்கள் என இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் விளக்கம் பகர்ந்தார்கள்.


​​அறிவிப்பவர் : ஹழ்ரத் நாபிஈ ரழியல்லாஹு அன்ஹு

நூல் : அபூ தாவூத்

♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ளுஹருக்குப் பின்பும் இரு ரகஅத்து (ஸுன்னத்) தொழுவார்கள்.(நூல் ஸஹிஹுல் புகாரி) ஜும்ஆத் தொழுகை ளுஹருக்குப் பதிலாக அமைவதனால், ஜும்ஆவுக்கு முன்பும், பின்பும் தொழும் தொழுகை என இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தலைப்பிட்டு லுஹரிலிருந்து ஜும்ஆவை கியாஸ் பிடித்து ஜும்ஆவுக்கு முன் இரு ரக்அத்துகள் தொழுவது ஸுன்னத் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

இதனைப் பின்பற்றி ஏனைய ஹதீஸ்கலை தொகுப்பாளர்களும் ஜும்ஆவுக்கு முன் இரு ரக்அத் தொழுவது ஸுன்னத் எனத் தலைப்பிட்டுள்ளார்கள். இமாம் நவவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஷஹீஹுல் முஸ்லிமின் விரிவுரையில் ஸுலைக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீதை ஆதாரமாகக் கொண்டு ஜும்ஆவுக்கு முன் இரு ரக்அத் தொழுவது ஸுன்னத் என விளக்கம் எழுதியுள்ளனர்.ஸஹாபாக்கள், தாபிஈன்கள், தபஅத்தாபிஈன்கள் அனைவரும் இதன்படி அமல் செய்துள்ளனர். இதனை மறுப்பவர் ஸுன்னத்தை மறுப்பவராவார்.