MAIL OF ISLAM

Knowledge & Wisdom



கப்றுகள் உள்ள பள்ளிவாசல்களில் தொழலாமா?

​எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.

இஸ்லாத்தின் பார்வையில் கப்றுகள் உள்ள பள்ளிகளில், தர்ஹாக்களில் தொழலாமா?

♣ இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு 

கப்றுகள் உள்ள பள்ளிகளில், தர்ஹாக்களில் தொழுவது கூடாது - ஹராமாகும். அவ்விடயங்களில் தொழுவதற்க்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. ஆனால் (ஜனாஸாவை - மய்யித்தை) அடக்கம் செய்யப்படும் பொது மையவாடியில் தொழுவதற்க்கு இஸ்லாத்தில் அனுமதியுண்டு. ஆகவே கப்றுகள் உள்ள பள்ளிகளில், தர்ஹாக்களில் மட்டும் தொழக்கூடாது. அவ்வாறு அவ்விடங்களில் தொழுவது (பித்அத் - ஷிர்க்) என்பதற்கு ஆதாரமாக "கப்றுகளை மஸ்ஜிதாக்குதல்.." எனும் ஹதீதை கூறுவது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடும் செயலாகும்.


​​எனவே வழிகெட்ட வஹ்ஹாபிகள் குர்ஆன், ஹதீஸ்களை ஆய்வு செய்யாமல் சில நபிமொழிகளை மறைத்து இருட்டடிப்பு செய்து கிருக்கு பிடித்தவர்களாக வழிகேட்டில் சென்று கொண்டு இருக்கிறார்கள் வஹ்ஹாபிகளே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.

♦ தற்காலத்தில் அனேக ஊர்களில் பழமைவாய்ந்த சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல்களைப் பார்த்தால் உங்களுக்கு புரியும். தொழுவதெற்கென்றே ஒரு பிரத்தியோகமான தனி பள்ளியும் அதன் அருகாமையில் உள்ள இடத்தில்தான் (தர்ஹா ஷரீப்) வலிமார்களின் கப்றும் அமைந்திருக்கும்.


​​ஆகவே அதிகமாக மக்கள் வலிமார்களின் கப்று ஷரீபை ஸியாரத் செய்வதற்காக வருகை தருவதால் தர்ஹாவிற்க்கு அருகாமையில் உள்ள அப்பள்ளியில் தொழுவதற்க்கு இடவசதி இல்லாமல் அப்பள்ளியினை விரிவாக்கம் செய்து பெரிய பள்ளிவாசல்களாக கட்டப்பட்டு வருகின்றன. இது பெரும்பாலும் அரிதாகவே காணப்பட்டாலும் அப்பள்ளிவாசலை விரிவுப்படுத்தும் பொழுது அதன் அருகாமையிலுள்ள வலிமார்களின் கப்று ஷரீப் அப்பள்ளிவாசலோடு ஒரு தடுப்புச் சுவரோடு இணைக்கப்படுகிறது. இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும்.


​​

கப்றுகள் உள்ள பள்ளிகளில், தர்ஹாக்களில் தொழுவது கூடாது (ஹராம்) என்று வழிகெட்ட வஹ்ஹாபிகள் காட்டும் போலி ஆதாரங்களுக்கு தக்க பதில்கள் பின்வருமாறு:

♦ ‘யஹூதிகளையும், நஸாராக்களையும் அல்லாஹ் சபிப்பானாக. ஏனெனில் அவர்கள் தங்களின் நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் கப்ருகளை மஸ்ஜிதாக ஆக்கிக் கொண்டனர்.’ நூல்: புகாரி 1330, முஸ்லிம் 921, 924

♦ இறைவா எனது கப்றை வணக்க சிலைகளை போல் ஆக்கி விடாதே! யார் நபிமார்களின் கப்றுகளை மஸ்ஜித் ஆக்கினார்களோ அவர்களின் மீது அல்லாஹ்வின் கடுங்கோபம் உண்டாகட்டும். நூல்: மிஷ்காத்

♦அன்னை உம்மு சல்மா, அன்னை உம்மு ஹபீபா ரழியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவரும் ஹபஷா நாட்டுக் கோயிலில் உருவப்படங்கள் இருப்பதைக் கண்டு வந்து றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்ல அவர்களிடம் கூறினார்கள். அதற்கு அவர்கள்,அந்த மக்கள் அவர்களில் ஒரு நல்லடியார் மரணித்தால்,அவர்களின் கப்றின் மீது பள்ளிவாசல் (மஸ்ஜித்) எழுப்புவர். பின் அவர் படத்தை அதில் தீட்டுவார்கள்.கியாமத் நாளில் இவர்கள் அல்லாஹ்வின் படைப்புக்களில் மிகக் கெட்டவர்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர் :அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா (நூல்கள் :புகாரி, முஸ்லிம், நஸஈ, அஹ்மது)


​​

♣   மேலே எடுத்துக்காட்டப்பட்ட ஹதீஸ்களின் விளக்கங்கள் பின்வருமாறு

மேற்கண்ட ஆதாரங்களையே கப்றுள்ள பள்ளிவாசலில் தொழுவதை எதிர்க்கும் வழிகெட்ட வஹ்ஹாபிகள் முன்வைக்கின்றனர். மேற்கண்ட நபி மொழிக்கு மிகப் பிரபலமான முபஸ்ஸிர் இமாம் நாஸூறுத்தீன் பைழவி றஹ்மத்துல்லாஹி அலைஹி பின்வருமாறு கூறியுள்ளார்கள். யஹுதிகளும்,நஸாறாக்களும் நபிமார்களைக் கண்ணியப்படுத்துவதற்காக அவர்களின் கப்றுகளில் சுஜூது செய்வார்கள். தொழுகையில் அவர்களின் கப்றுகளை கிப்லாவாக ஆக்கிக் கொள்வதோடு அவர்களை (நபிமார்களை) விக்ரகங்கள் போல் கருதினர். அதனால்தான் அவர்கள் அல்லாஹ்வினதும் சகல மனிதர்களினதும் சாபத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

♦ ஹதீஸ், பிக்ஹ்துறை பேரறிஞர் அல்லாமா முல்லா அலிகாரி றஹ்மத்துல்லாஹி அலைஹி மேற்கண்ட ஹதீதுக்கு பின்வருமாறு விளக்கம் எழுதுகின்றார்கள். யஹுதிகளும், நஸறானிகளும் சபிக்கப்படுவதற்கு பின்வரும் காரணங்கள் பிரதானமானவையாகும்.

1) நபிமார்களின் கப்றுகளைக் கண்ணியப்படுத்துவதற்காக அவர்களின் கப்றுகளுக்கு ஸுஜூது செய்தனர். இது மறைமுகமான ஷிர்க் ஆகும்.

2) அல்லாஹ்வைத் தொழுவதற்கு நபிமார்களின் அடக்கஸ்தலங்களின் கப்றுகளை தேர்வு செய்து கொண்டனர்.அவர்களின் கப்றுகளை (கிப்லாவாக) முன்நோக்கியே தொழுதனர்.

3) அல்லாஹ்வின் அனுமதியின்றி நபிமார்களின் கப்றுகளை எல்லைமீறி கண்ணியப்படுத்தினார்கள்.

♦ இமாம் காழி இயால் றஹ்மத்துல்லாஹி அலைஹியின் ஒரு அறிவிப்பும் இதனை உறுதி செய்கின்றது. யஹுதிகளும், நஸாறாக்களும் அவர்களின் நபிமார்களுடைய கப்றுகளுக்குச் ஸுஜூது செய்தனர். அக்கப்றுகளையே தொழுகையின் (கிப்லாவாக) ஆக்கிக் கொண்டனர் மேலும் அதனை விக்கிரகங்களாகவும் எடுத்துக் கொண்டனர். இதுதான் இவர்களை அல்லாஹுத்தஆலா சபிப்பதற்குக் காரணமாகியது.


​​அதனால், இது போன்றவைகளில் ஈடுபடக் கூடாது என்று முஸ்லிம்கள் தடுக்கப்பட்டுள்ளனர். ஆனால்,ஒருவர் ஒரு சாலிஹான ஒருவரின் கப்றுக்குப் பக்கத்தில் ஒரு பள்ளிவாசலை அமைத்து அதன் மூலம் அவர் பறக்கத்தைப் பெறுதல் நோக்கமாயின், அவர் அக்கப்றை கண்ணியப்படுத்தி ஸுஜூது செய்வதோ அல்லது அதை (கிப்லா)வாக முன்னோக்கித் தொழுவதோ இல்லையாயின் எந்த குற்றமும் கிடையாது.

♦ மேலும் கப்று உள்ள பள்ளியில் தொழக்கூடாது என்று வஹ்ஹாபிகள் காட்டும் இன்னும் ஒரு ஹதீஸ் " எனது கப்றை ஈதாக (திருவிழாவாக) எடுக்க வேண்டாம்‘ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு,(ஆதாரம்: அபூதாவுத்)

ஹதீஸ் விளக்கம் :- பொதுவாக கந்தூரி விழாக்கள் திருவிழாக்கள் போன்று இருப்பதால் கந்தூரி விழா எடுப்பது கூடாது என்றே மேற்படி ஹதீஸ் கூறுகின்றது என்று சிலர் இதை ஆதாரமாகக் கூறுகின்றனர்.

இக்குற்றச் சாட்டிற்கு அறிஞர்களின் விளக்கம் வருமாறு,

1) ஈத் பெருநாட்கள் வருடத்தில் இரு முறைதான் வருகின்றன. பெருநாள் போன்று வருடத்தில் இருதினம் என்று மட்டுப்படுத்தாமல் அடிக்கடி செய்து வாருங்கள்.

2) பெருநாளில் ஆரவாரம், களியாட்டம், விழாக்கோலம் போன்றவைகள் இடம்பெறும். இப்படியான செயற்பாடுகளில் எவையும் எனது கப்றுரடியில் இருக்கக் கூடாது. ஒழுக்கத்துடன் வர வேண்டும். அடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

3) தனியாகவும் கூட்டாகவும் அடிக்கடி வந்து எனது ஷபாஅத்திற்குரிய தகுதியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

இவைதாம் அறிஞர்கள் கூறிய விளக்கமாகும்.


​​

♣   உண்மையில் "கப்றுகளை மஸ்ஜிதாக்குதல்" என்பதால் கருதப்படுவது என்ன?

இவ்வாறான ஹதீத்களை பற்றி விளக்குகையில் ஃபிக்ஹ் கலை மேதை இமாம் இப்‌னு ஹஜர் ஹைதமி (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் கூறுகிறார்கள்: "கப்றுகளை மஸ்ஜிதாக்குதல் என்பதன் பொருள் கப்ரின் மேல் தொழுதல் அல்லது கப்ரை நோக்கி (கிப்லாவாக்கி) தொழுதல் ஆகும். மேலும் இந்த தடுப்புச் சட்டம் ஆனது நபிமார்கள் வலிமார்கள் போன்ற சங்கைக்குரியவர்களின் கப்ருகளுக்கே செல்லுபடியாகும்" 


​​நூல் : ஸவாஜிர்

♦ யாராவது ஒருவர் ஒரு நல்லடியாரின் கப்றுக்குப் பக்கத்தில் பள்ளிவாசலை நிர்மாணித்து அதிலிருந்து பறக்கத்தையும் எதிர்பார்த்து, கப்றை கண்ணியப்படுத்தி ஸுஜூது செய்யாமலும். அக்கப்றுகளை (கிப்லாவாக்காமலும்) இருந்தால் போதும், அது இந்த அதாவது ("கப்றுகளை மஸ்ஜிதாக்குதல்) எச்சரிக்கைகுல் வராது என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியுள்ளார்கள்.


ஆதாரம்: பத்ஹுல் பாரி, பாகம் - 1, பக்கம் - 754

♦மேலும் ஹதீத் வல்லுநர் ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்‌னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் ஹதீதை பற்றி விளக்குகையில் இமாம் பைதவி (ரஹ்மதுல்லஹி அலைஹி) யை மேற்கோள் காட்டி கூறுகிறார்கள்: "யஹூதி நசாராக்கள் நபிமார்களின் கப்றுகளுக்கு சுஜுது செய்து வந்தனர். அன்னவர்களுடைய கப்றுகளை (கிப்லாவாக்கி) தொழுதும் வந்தனர். மேலும் அக்கப்றுகளை சிலைகளை போல் வணக்கஸ்தலங்களாகவும் மாற்றி வைத்து இருந்தனர். இத்தகைய காரியங்கலாலேயே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இவ்வாறு செய்ய வேண்டாம் என முஸ்லிம்களை தடுத்து இவ்வாறு செய்வோர் மீது லஹ்னத்தும் செய்தார்கள். ஆனால், எவரொருவர் ஒரு நல்லடியாரின் கப்றுக்கு அருகில் அதனை முன்னோக்காமலும், அந்த நல்லடியாரை மரியாதை நிமித்தம் ஸுஜூது செய்யாமலும் அந்த நல்லடியாருக்கு அண்மையில் தொழுவதால் பரக்கத்தை பெற்றுக்கொள்ளலாம். என எண்ணி தொழுகிறாரோ அவர் இந்த ஹதீஸில் கீழ் (கப்றுகளை மஸ்ஜிதாக்குதல்) அடங்க மாட்டார்"


நூல் - ஃபத்ஹுல் பாரி

எனவே "கப்றுகளை மஸ்ஜிதாக்குதல்" என்பது கப்ரை கிப்லாவாக்கல், கப்ரை வணங்குதல், கப்ரின் மீது தொழுதல், கப்ரை முன்னோக்கி தொழுதல், கப்றுக்கு ஸுஜூது செய்வது என்பவற்றையே குறிக்கிறது. இதனைத்தான் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கப்ருகளை நோக்கி தொழ வேண்டாம் மேலும் அவற்றின் மீது உட்கார வேண்டாம் (நூல் : முஸ்லிம்) எனக் கூறி எமக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்கள்.

ஆகவே கப்ர் உள்ள பள்ளியில் தொழ முடியாது என்பதற்கு ஆதாரமாக "கப்றுகளை மஸ்ஜிதாக்குதல்.." எனும் ஹதீதை கூறுவது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடும் செயலாகும். மேலும் பெரும்பாலும் எந்தவொரு பள்ளியிலும் தொழும் இடமானது கப்ரை உள்ளடக்கியதாக இருக்காது. எல்லா பள்ளியிலும் கப்றும் தொழும் இடமும் குறைந்த பட்சம் ஒரு சுவராலாவது வேறுபடுத்தப்பட்டிருப்பதை கவனத்தில் கொள்ளவும்.


​​

♣ கப்றுகள் உள்ள பள்ளிகளில், இடங்களில் மேலும் கப்றுகள் அருகே தொழுவது ஆகுமானது என்பதற்கு சில எடுத்துக்காட்டுகள்.

(மஸ்ஜிதுன் நபவியை துப்புரவு செய்யும் வாலிபர் அல்லது பெண்மணி) ஒருவரை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வழக்கமாக விசாரிப்பவர்களாக இருந்தார்கள். ஒரு நாள் இரவு அவர் இறந்துவிட்டார். அவரை மக்கள் இரவிலேயே அடக்கம் செய்துவிட்டனர். மறுநாள் காலையில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு இச்செய்தியை மக்கள் தெரிவித்தபோது 'இதை அப்போதே எனக்கு நீங்கள் அறிவிக்காததன் காரணமென்ன?' எனக் கேட்டார்கள்.


​​அதற்கு மக்கள், 'கடுமையான இருள் சூழ்ந்த இரவு நேரமாக இருந்ததால் உங்களுக்குச் சிரமம் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை" என்றனர். உடனே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், அவருடைய கப்ரை காட்டுமாறு கூறி அங்கு (கப்ர் அருகே) தொழுகையை நிறைவேற்றினார்கள்.


​​அறிவிப்பாளர்கள்: ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹுமா), ஹழ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

​​நூல் - புகாரி 1247, 1326, 1337, 1340 , முஸ்லிம் 

♦ றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்,“மிஃறாஜ் இரவில் என்னை அழைத்துச் சென்ற ஜிப்ரயீல் (அலை ஹிஸ்ஸலாம்) பைத்துல் முகத்தஸில் இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் (புனித)கப்றை நெருங்கியதும், அங்கு இறங்கி இரு றக்அத்துக்கள் தொழுமாறு வேண்டினார்கள். இங்குதான் உங்கள் தந்தை நபி இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் கப்று உள்ளது என்றார். பின் பைத்துல் லஹ்ம் பக்கமாகச் சென்றார்கள். அங்கும் இறங்கி இரு றக்அத்துக்கள் தொழுமாறு வேண்டினார்கள். இங்குதான் உங்கள் சகோதரர் நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) பிறந்த இடம் உள்ளது என்று விளக்கினார்கள்“.


​​அறிவிப்பாளர் : முஹம்மத் இப்னு ஜஹ்மத் இப்னு இப்றாஹீம் ரலியல்லாஹு அன்ஹும்

நூல் : இப்னு ஹிப்பான்

மேற்கண்ட ஹதீதின் அறிவிப்பாளர் தொடர் சஹீஹானது என்று இமாம் இப்னு ஹிப்பான் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறியுள்ளார்கள். நபிகள் நாயகத்தின் மேற்கண்ட கூற்று நபிமார்கள், ஹாலிஹீன்கள் அடங்கப்பட்டிருக்கும் இடங்களில் தொழ முடியும் என்பதை தெளிவாகப் புலப்படுத்துகின்றது.

♦ றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் அன்னை ஆயிஷா ஸித்தீக்கா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் இல்லத்தில் அடக்கம் செய்யப்பட்ட பின்பும் அன்னையவர்கள் அங்குதான் தங்கியிருந்தார்கள். அங்குதான் தொழுதார்கள். பின் கலீபாக்களான ஹளரத் அபூபக்கர், ஹளரத் உமர் பாறுக் ரழியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவரும் அடக்கம் செய்யப்பட்ட பின்பும்,அன்னையவர்கள் அங்குதான் தொழுதார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

♦  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: மஸ்ஜிதுல் கைஃபில் (مسجد الخيف) நபிமார்களின் கப்றுகள் 70 உள்ளன. (நூல் - முஸ்னத் அல் பஸ்ஸார், தபராணியின் மு'ஜம் அல்-கபீர் இது ஸஹீஹான ஹதீதாகும் என இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் முக்தஸர் ஸவாயித் அல்-பஸ்ஸாரிலும் இமாம் ஹைதமி (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் தம்முடைய "மஜ்மவுஸ் ஸவாயிதில்" அல்-பஸ்ஸாரின் அறிவிப்பாளர்கள் யாவரும் நம்பிக்கையானவர்கள் என்றும் கூறுகின்றனர்.

♦ மினாவில் உள்ள மஸ்ஜிதுல் ஹைபில் பள்ளிவாசலின் நடுவில் ஹிஜ்ரி 874இல் கட்டப்பட்ட குப்பாவுக்குப் பக்கத்தில்தான் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அடங்கப்பட்டுள்ளார்கள். அதனால் அந்த இடங்களில் அதிகம் தொழுவது சுன்னத்தாகும்.


​​ஆதாரம் : வபாஉல் வபா பாகம் - 02, பக்கம் - 544

♦ அல்லாஹ் குர்ஆனில் "அஸ்ஹாபுல் கஹ்ஃப் பற்றி கூறுகையில்: "இ(வ்விவாதத்)தில் எவர்களுடைய கருத்து மிகைத்ததோ அவர்கள் ”நிச்சயமாக அவர்கள் மீது ஒரு மஸ்ஜிதை அமைப்போம்” என்று கூறினார்கள்" (அல்குர்ஆன் 18:21) இங்கு அஸ்ஹாபுல் கஹ்ஃபின் கப்ர் அருகே மஸ்ஜித் அமைப்போம் என கூடியவர்களாக 'முஹ்மீன்கள்' என பல இமாம்கள் தமது தப்சீர்களில், நூல்களில் தெரிவித்துள்ளனர். அவற்றில் சில தப்சீர் கபீர் - இமாம் ராஸி (ரஹ்மதுல்லஹி அலைஹி), தப்சீர் ஜலாலைன், தப்சீர் நஸபி , தப்சீர் ரூஹுல் பயான், தப்சீர் பஹ்ருல் முஹீத் - இமாம் அபூ ஹய்யான் (ரஹ்மதுல்லஹி அலைஹி), தப்சீர் தபரி, தப்சீர் இப்னு அல்-ஜவ்ஸீ, தப்சீர் பத்ஹுல் கதீர்

♦ இஸ்மாயீல் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புனித கப்று மஸ்ஜிதுல் ஹறாமில் “ஹதீம்“ என்ற பகுதியில்தான் இருக்கின்றது. அந்த இடம் தொழும் பள்ளிவாசல்களில் மிகச் சிறந்த இடமாகும்.மையவாடியில் தொழுவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கான பிரதான காரணம் அங்கு காணப்படும் (நஜீஸ்) அசுத்தமேயாகும். இவ்வாறு இமாம் தீபி றஹ்மத்துல்லாஹி அலைஹி குறிப்பிட்டுள்ளார்கள்.


​​ஆதாரம் :மிர்காத் ஷரஹு மிஷ்காத், பாகம் - 1, பக்கம் - 456

♦ ஹிஜ்ரி 88 இல் வலீத் அவர்களின் ஆட்சி காலத்தில் உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் ஆளுநராக இருந்த போது மஸ்ஜிதுன் நபவி விஸ்தரிக்கப்பட்டு நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புனித கப்று பள்ளியுடன் இணைக்கப்பட்டது. அப்போது வாழ்ந்த தலை சிறந்த தாபியீன்கலான ஸைத் பின் முஸய்யப் ரஹ்மதுல்லஹி அலைஹி போன்ற எவரும் இதனை ஷிர்க் என்றோ ஹறாம் என்றோ தடுக்கவில்லை. அவ்வாறே நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்ளாவின் அருகே 1400 வருடங்களாக முஸ்லிம்கள் தொழுது வருகின்றனர். எனவே மேற்கூறிய ஆதாரங்களின் அடிப்படையில் கப்று உள்ள பள்ளியில் தொழுவது மார்க்கத்தில் ஆகுமான விடயமாகும் என்பதை அறிந்து கொள்ளலாம்.


​​

♣ மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில், சில விளக்கங்கள் சுருக்கமாக பின்வருமாறு:

1) நபிமார்கள், வலிமார்களின் கப்றுகளை கிப்லாவாக்கியோ அல்லது கண்ணியப்படுத்தும் நோக்கிலோ கப்றை நோக்கித் தொழக் கூடாது. இவ்வாறு தொழுவது யஹுதி, நஸாறாக்களின் நடை முறையாகும். மேலும் இவ்வாறு தொழுவோர் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கும்.(முஸ்லிம்களில் எங்கும்,எவரும் கப்றுகளை கண்ணியப்படுத்த தொழுமிடமாக்கவோ அல்லது கப்றுகளை கிப்லாவாக்கி தொழவோ, கப்ருகளுக்கு சுஜூதோ செய்யஇல்லை)

2) கப்றுக்குப் பக்கத்தில் தொழுவதிலோ, பள்ளிவாசல் கட்டுவதிலோ எக்குறையும் கிடையாது.

3) நபிமார்கள், ஸாலிஹீன்களின் கப்றுக்குப் பக்கத்தில் அவர்களின் புனித றூஹின் பறக்கத் கிட்ட வேண்டும் என்ற நோக்கில் தொழுவதும், அவ்விடங்களில் பள்ளி நிர்மாணிப்பதும் கூடும். வரவேற்கத்தக்கது.

4) கப்றுக்குப் பக்கத்தில் ஸஹாபாக்கள் தொழுதுள்ளனர். எவரும் அத்தொழுகையை மீட்ட வேண்டுமென்றோ, அவ்வாறு தொழுவது கூடாது என்றோ கூறவில்லை.

5) அசுத்தமான இடங்களிலும் (பொது மய்யவாடி), மலம்ஜலம் கழிக்கும் இடம், ஷைத்தானின் நடமாட்டம் உள்ள இடங்களிலும் தொழுவது மக்றூஹ் வெறுக்கத்தக்கது.

6) கப்றுள்ள பள்ளியில் தொழுவது கூடாது என்று கூறுவது ஷரீஅத்தை விளங்காதவர்களின் வாதமாகும்.

கப்று உள்ள பள்ளியில் (கப்ரை) கிப்லாவாக முன்னோக்கி அந்த கப்ரை வணங்கிய யாரும் தொழுவதில்லை. ஒன்றைத் தொழுவது வேறு, ஒன்றை நோக்கித் தொழுவதென்பது வேறு. உலக முஸ்லிம்கள் தொழுகையில் கிப்லாவாக கஃபாவை முன்னோக்குகின்றனர். யாரும் கஃபாவைத் தொழுவதில்லை. கஃபாவை முன்னோக்கிக் கஃபாவின் இறைவனைத் தொழுகின்றனர்.


​​ஆகவே கப்றுகள் உள்ள சில பள்ளிவாசலை தமிழகத்திலும்,இலங்கையிலும் பார்க்க முடியும். சில பள்ளிவாசலில் வலது, அல்லது இடது பக்கத்தில் அல்லாஹ்வின் இறைநேசராகிய வலியுல்லாஹ் ஒருவர் அடக்கம் செய்யப்பட்டிருப்பார்கள். அக்கப்ரை ஒட்டியே சுவர் எழுப்பி பள்ளிவாசல் கட்டப்பட்டிருக்கும். இதனால் இறையில்லம் என்றத் தன்மையை அந்தப் பள்ளி இழந்து விடுவதில்லை.

♦ எனவே, மக்களைக் குழப்ப வேண்டும் என்ற தீய நோக்கை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் வழிதவறிய வஹாபிகளின் தீய நச்சுப் பிரச்சாரத்திற்குப் பலியாகாமல் இஸ்லாத்தை சரியான வழியில் விளங்கி செயல்பட முயல வேண்டும். அதனால் ஈமானைப் பாதுகாத்து முஃமினாக வாழ்ந்து மரணிக்க வேண்டும்.


​​மேலும் முஸ்லிம் என்ற பெயரில் நடமாடும் வழிகெட்ட வஹ்ஹாபிகளே! மார்க்க ஷரீஅத் சட்டத்திற்கு மாற்றமாக விளக்கம் சொல்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். 1300 ஆண்டுகள் பாரம்பரியம்மிக்க மத்ஹப் சட்டங்களைப் பின்பற்றி ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம்கள் மத்தியில் குழப்பத்தை உண்டுபண்ண வேண்டாம். 

குர்ஆனுக்கும் ஹதீதுக்கும் ஸஹாபாக்கள் கொடுத்த முழு விளக்கங்களை வைத்து மார்க்க சட்டங்களை விளக்கமாக வகுத்தும் தொகுத்தும் கொடுத்தவர்கள் நாற்பெரும் இமாம் பெருமக்கள். இம்மேதைகள் தொகுத்து வழங்கிய மத்ஹப் சட்டங்களை ஒவ்வொருவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதை ஒருவன் புறக்கணித்தால் தானும் வழிகெட்டு பிறரையும் வழிகெடுத்து முடிவில் இறைமறுப்பில் வீழும் அபாயம் உண்டு என அல்லாமா ஸாவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.


​​பெரும்பெரும் முஹத்திதீன்களும் சூபிகளும் மத்ஹப்களைப் பின்பற்றியே நடந்துள்ளார்கள் ஆகவே நாமும் நமது பிச்சலங்களையும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் சரியான விளக்கங்களை கூறிச்சென்ற இமாம்களை பின்பற்றி வாழ்வதற்கு எல்லாம் வல்ல கிருபையாளன் நல்லுதவி புரிவானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.