MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ழஈபான (பலவீனமான) ஹதீஸ்களை வைத்து அமல் செய்யலாமா?

​எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


ழஈபான (பலவீனமான) ஹதீஸ்களை வைத்து அமல் செய்யலாமா? மேலும் ழஈபான ஹதீஸ்களை வைத்து இஸ்லாமிய சட்டங்களை வகுக்கலாமா?


​​

♣ இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு

புதுமை விரும்பிகள் நல்லமல்களை நாசப்படுத்துவதில் முன்னிலை வகிக்கின்றார்கள். இவர்களது நாச கருத்துகளை அப்பாவி பாமர மக்களிடம் கூறி அவர்களை நம்பவைத்து வழிகேட்டுக்கு அடித்தளம் இட்டுக் கொள்கின்றார்கள்.


​​அந்த வரிசையில் அவர்களின் வழிகெட்ட கொள்கைகளுக்கு சார்பாக ஹதீஸ்கள் அமையவில்லையென்றால் அந்த ஸஹீஹான ஹதீகள் குர்ஆனுக்கு முரண்படுகின்றது. ஆகவே குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்ட வகையுடன் சேர்ந்தவை என்றெல்லாம் அந்த ஹதீஸ்களை அறிவித்த அறிவிப்பாளர்களில் நிச்சயம் ஒரு பொய்யர் இருப்பார், அவர் யார் என்று கண்டுபிடிக்க முடியாது என்று ஸஹீஹான சில ஹதீஸ்களை இருட்டடிப்பு செய்து இலகுவாக ஒதுக்கி விடுவதும், ழஈபான - பலவீனமான ஹதீஸ்கள் குப்பையில் என்றும் கிருக்கு பிடித்தவர்களாக வழிகேட்டில் சென்று கொண்டு இருக்கிறார்கள்.


​​இதற்கு அடிப்படை காரணம் 'சரியான முறையில் ஹதீஸ்களை ஆய்வு செய்யாமலும் சில நபிமொழிகளை மறைத்து இருட்டடிப்பு செய்து, ஹதீஸ் கலை வல்லுனர்களுடையவும் சட்ட அறிஞர்களுடையவும், இமாம்களையும் பின்பற்றாததாகும்'. வஹ்ஹாபிகளே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.

♦சமுதாயத்தில் நல்லமல்கள் உருவாக வேண்டும் என்கிற நோக்கத்தில்தானே ழஈபான ஹதீஸ்கள் கூறப்படுகின்றன. சமுதாயம் கெட்டுப் போவதற்காக அல்லவே என்ற அடிப்படையில் (அம்ரு - ஏவல் , நஹீ - விலக்கல்) போன்ற ஆணைகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில்தான் பலவீனமான ஹதீஸ்களை ஆதாரமாக எடுக்கக் கூடாது.


​​ஆனால் 'பழாயில்' சிறப்பு குறித்தான விசயங்களில் அமல் செய்வதற்கு பலவீனமான நபிமொழிகளை எடுக்கலாம் என்பது நபிமொழிக் கலை வல்லுனர்களுடையவும் சட்ட அறிஞர்களுடையவும் ஏகோபித்த அபிப்பிராயம் ஆகும். ஆனால் நவீனவாதிகள் அமல்கள் செய்வதற்கு தடை விதிக்கின்றனர். இறைபொருத்தத்தை நாடி செய்கின்ற அமல்களை விட்டும் மக்களை சோம்பேறிகளாக ஆக்குகின்றனர். அவர்களின் இக்கெடுதிகளை விட்டும் அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக!


​​

♣  ழஈபான (பலவீனமான) ஹதீஸ்கள் என்றால் என்ன?

நபிமொழியினை அறிவித்தவர்கள் பட்டியலில் ஒருவரோ, அல்லது பலரோ நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்களா? இல்லையா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய ஹதீஸ்கள் "ழஈபான ஹதீஸ்கள்" எனப்படும். அந்தச் சந்தேகம் பல காரணங்களால் ஏற்படலாம்.அறிவிப்பாளர்களில் எவரேனும் நன்னடத்தை அற்றவராகவோ,நினைவாற்றல் குறைந்தவராகவோ

அல்லது அறிவிப்பாளர்களின் தகுதியின்மையைக் கருத்தில் கொண்டு, அவர் அறிவித்த அந்த நபிமொழியை ழஈபா -பலவீனமானது என்ரோ, அல்லது இரண்டு அறிவிப்பாளர்களுக்கிடையில் சந்திப்பு இல்லாமலிருந்தாலோ அத்தகைய ஹதீஸ்களை "ழஈபான ஹதீஸ்கள்" என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் நிர்ணயித்துள்ளனர்.


​​

♣  ழஈபான (பலவீனமான) ஹதீஸ்களை பின்பற்றலாமா?

ஒரு ஹதீஸ் ஆதார பூர்வமானதாக (அதாவது ஸஹீஹானதாக அல்லது ஹசனானதாக) இருக்கும் பொழுது அவசியம் அதற்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் மவ்ளூஃவான (இட்டுக்கட்டப்பட்ட) ஹதீஸ்களை எந்தக் காரணத்திற்காகவும் பின்பற்றக் கூடாது என்றும் ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளனர். ஆனால் இவ்இரு பிரிவுகளுக்கும் இடைப்பட்ட ழஈபான (பலவீனமான) ஹதீஸ்களைப் பின்பற்றலாமா? அல்லது கூடாதா? என்பதைப் பொறுத்தவரையில் அறிஞர்கள் மத்தியில் இரு விதமான கருத்துகள் உள்ளன.

1) அகீதா (கொள்கை), அஹ்காம் (சட்டதிட்டங்கள்), தர்கீப் வத் தர்ஹீப் (ஆர்வமூட்டல் மற்றும் எச்சரித்தல் அதாவது பழாயில்) ஆகிய எதுவாக இருந்தாலும் ழஈபான ஹதீஸ்களைப் பின்பற்றக் கூடாது தர்கீப் வத் தர்ஹீப் (ஆர்வமூட்டல் மற்றும் எச்சரித்தல் அதாவது பழாயில் விடயத்தில்) ழஈபான ஹதீஸ்களைப் பின்பற்றக் கூடாது எனக் கூறுவோரின் வாதம் இமாம் முஸ்லிம் (ரஹ்மதுல்லஹி அலைஹி), இமாம் அபு பக்ர் இப்னுல் அரபி அல்-மாலிகி (ரஹ்மதுல்லஹி அலைஹி), இமாம் இப்னு ஹஸ்ம் அழ்-ழாஹிரி (ரஹ்மதுல்லஹி அலைஹி), இமாம் இப்னு ரஜப் அல்-ஹன்பலி (ரஹ்மதுல்லஹி அலைஹி) போன்ற அறிஞர்கள் இக் கருத்தையே கொண்டிருந்தனர். இமாம் முஸ்லிம் (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் தமது ஸஹீஹ் முஸ்லிமுடைய முன்னுரையில் ழஈபான ஹதீஸ்கள் பின்பற்றத் தகுதியானதல்ல என பல ஆதாரங்களின் மூலம் தெளிவுபடுத்துகிறார்கள்.

இக் கருத்துடையவர்கள் தமது கருத்துக்கு சார்பாக பின்வரும் ஆதாரங்களை எடுத்து வைக்கின்றனர்.

♦ எதைப் பற்றி உமக்குத் திட்டவட்டமான அறிவு இல்லையோ அதை நீர் பின்பற்றாதீர்கள். (அல்குர்ஆன் 17:36)

♦ நிச்சயமாக யூகமானது சத்தியத்திலிருந்து (விளங்கிக் கொள்ள) எந்தப் பயனையும் தராது.(அல்குர்ஆன் 53:28)

♦ நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:"உனக்கு சந்தேகமானதை விட்டுவிட்டு சந்தேகமற்றதின்பால் சென்றுவிடு"  அறிவிப்பவர்: ஹஸன் (ரலியல்லாஹு அன்ஹு)  நூல்: திர்மிதீ, அஹ்மத்

2) அகீதா (கொள்கை), அஹ்காம் (சட்டதிட்டங்கள்) விடயங்களில் ழஈபான (பலவீனமான) ஹதீஸ்களை பின்பற்றக்கூடாது, ஆனால் தர்கீப் வத் தஹ்ரீம் (ஆர்வமூட்டல் மற்றும் எச்சரித்தல் அதாவது பழாயில்) ஆகிய எதுவாக இருந்தாலும் ழஈபான ஹதீஸ்களை சில நிபந்தனைகளுடன் பின்பற்ற முடியும். 


​​தர்கீப் வத் தர்ஹீப் (ஆர்வமூட்டல் மற்றும் எச்சரித்தல் அதாவது பழாயில் விடயத்தில்) ழஈபான ஹதீஸ்களை சில நிபந்தனைகளுடன் பின்பற்றலாம் எனக் கூறுவோரின் கருத்துகள் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்மதுல்லஹி அலைஹி), இமாம் அந்-நவவி (ரஹ்மதுல்லஹி அலைஹி), இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி (ரஹ்மதுல்லஹி அலைஹி) போன்ற பல அறிஞர்கள் தர்கீப் வத் தர்ஹீப் (ஆர்வமூட்டல் மற்றும் எச்சரித்தல்) அதாவது (பழாயில்) விடயத்தில் ழஈபான ஹதீஸ்களைப் பின்பற்றலாம் என்கின்ற இக் கருத்தையே கொண்டிருந்தனர்.


​​மேலும் இதுவே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தும் ஆகும். ஆனால் இக் கருத்துள்ள அறிஞர்கள் சில நிபந்தனைகளை முன் வைக்கின்றனர். அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) மற்றும் பல அறிஞர்கள் அமல்களின் சிறப்புகள் பற்றிய ஆதாரபூர்வமற்ற அறிவிப்புகளை, அவை பொய்யாக இல்லாமல் இருட்கும் பட்சத்தில், அவற்றை அறிவிப்பதை அனுமதிக்கத் தக்கதாகக் கருதினர்.

♦ மேலும் மார்க்கத்தில் ஆதாரபூர்வமாக நிறுவப்பட்ட ஒரு அமலின் பக்கம் ஆர்வமூட்டுகின்ற ஒரு ஹதீஸ் பொய்யாக இல்லாமல் ழஈபான இருட்கும் பட்சத்தில் அந்த ஹதீஸில் அறிவிக்கப்பட்டுள்ள கூலியானது உண்மையாக இருக்கக் கூடிய சாத்தியக் கூறு இருக்கிறது. ஒரு ழஈபான ஹதீஸின் அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு விடயத்தை (வாஜிப்) கடமையாகவோ அல்லது (முஸ்தஹப்) விரும்பத் தக்கதாகவோ கருதலாம் என எந்த ஒரு இமாமும் கூறவில்லை. அப்படி எவராவது கூறுவாரானால் அவர் அறிஞர்களின் ஏகோபித்த முடிவுக்கு மாற்றம் செய்கிறார்.


​​பொய் என அறியப்படாத ழஈபான அறிவிப்புகளை, ஆர்வமூட்டுதல் மற்றும் எச்சரிக்கை செய்யும் நோக்கத்தில் அறிவிப்பது அனுமதிக்கத் தக்கதாகும். ஆனால் அந்த விடயம் அல்லாஹ்வால் ஆர்வமூட்டப்பட்டு அல்லது எச்சரிக்கை செய்யப் பட்டிருக்கிறது என அறிவிப்பாளர்கள் அனைவரும் அறியப்பட்ட வேறு ஆதாரங்களின் மூலம் நிறுவப்பட்ட விடயமாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே (அது அனுமதிக்கத் தக்கதாகும்). (ஆதாரம் : மஜ்மூஃ அல்-பதாவா 1/250)


​​

♣ உலகம் போற்றும் மிகப் பெரும் ஹதீஸ் கலை அறிஞராகிய இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள், தர்கீப் வத் தர்ஹீப் (ஆர்வமூட்டுதல் மற்றும் எச்சரித்தல்) சம்பந்தப் பட்ட ழஈபான ஹதீஸ்களைப் பின்பற்றுவதற்கான நிபந்தனைகளப் பின்வருமாறு வகுத்துக் கூறுகிறார்கள். அவையாவன:

♦ அந்த ஹதீஸ் மிகவும் பலவீனமானதாக இருக்கக் கூடாது.அறிவிப்பாளர் தொடரில் பொய்யர்களில் ஒருவர் அல்லது பொய்யர் எனக் குற்றம் சாட்டப் பட்ட ஒருவர் அல்லது மிகவும் கடுமையான தவறிழைக்கின்ற ஒருவர் சம்பந்தப்பட்டு மட்டும் வரும் ஹதீஸ்களைப் பின் பற்றக் கூடாது.

♦ மார்க்கத்தில் ஏற்கனவே நிறுவப்பட்ட ஒரு விடயம் சம்பந்தமானதாக அந்த ஹதீஸ் இருக்க வேண்டும். (மார்க்கத்தில் இல்லாத புதிய வகையான ஒரு விடயத்தை அது அறிமுகப் படுத்தக் கூடாது)

​​

♦ அந்த ஹதீஸின் படி செயல்படுபவர் அந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள விடயம் (நபியவர்களால் கூறப்பட்ட) நிரூபணமான ஒரு விடயம்தான் (சந்தேகமே இல்லை) என நினைத்து விடக் கூடாது. மாறாக (நபியவர்கள் கூறாத ஒன்றை கூறியதாக நினைத்து அல்லது நபியவர்கள் செய்யாத ஒன்றை செய்ததாக நினைத்து தவறு செய்து விடுவேனோ என்ற) முன்னெச்சரிக்கையுடன் அவர் அந்த விடயத்தைப் பின்பற்ற வேண்டும்.(ஆதாரம் : தைஸீரி முஸ்தலஹுல் ஹதீஸ்)


​​

♣ ழஈபான (பலவீனமான) ஹதீஸ்களை வைத்து அமல் செய்யலாமா?

ழஈபான நபிமொழிகளின் படி நற்செயல்களை (அமல்) செய்யலாம் என்பதற்கான ஆதாரம்.

உலமாக்களும், ஹதீஸ் கலை மேதைகளும், ழஈபான ஹதீஸ்களைக் கொண்டு சிறப்பு அமல்களில் ஆசையூட்டுவதற்கும், எச்சரிக்கை செய்வதற்கும் அமல் செய்வது சுன்னத் என சிறந்த ஹதீஸ்கலை மேதையும், சட்டத்துறை அறிஞருமான இமாம் நவவீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது அத்காறுன் நவவீ எனும் நூலில் கூறுகின்றனர்.

♦ பலவீனமான நபிமொழிகளை ஆதாரமாகக் கொண்டு 'பழாயிலுல் அஃமால் (அமல்) செய்யலாமா? என இமாம் றமலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வினா விடுக்கப்பட்ட போது, இமாம் நவவி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அமல் செய்யலாம் என ஹதீஸ் கலை மேதைகள் கூறியுள்ளதாகச் சொல்கின்றனர்' என பதில் கூறினார்கள். (பதாவா ரமலீ பாகம் 4, பக்கம் 383)

♦ பலவீனமான நபிமொழிகளை ஆதாரமாகக் கொண்டு 'பழாலயிலுல் அஃமால்'-நற்செயல்களில் அமல் செய்யலாம் என உலமாக்கள் ஏகோபித்துக் கூறியுள்ளனர். (நூல்: ஷரஹ் ஷிபா பாகம் 2 பக்கம் 123)

♦'நற்செயல்களில் பலவீனமான நபிமொழிகளின் படி அமல் செய்யலாம். ஆனால் சட்டங்கள் வகுப்பதற்குத்தான் ஸஹீஹான அல்லது ஹஸனான நபிமொழிகள் தேவை' (ஷரஹ் ஷிபா பாகம் 2, பக்கம் 133)

♦ 'பலவீனமான நபிமொழிகளின் படி, ஆசையூட்டுவதற்காக அமல் செய்யலாம் என நபி மொழிக் கலைவல்லுனர் கருத்து வேறுபாடின்றி கூறியுள்ளனர்.' (தப்ஸீர் ரூஹுல் பயான் பாகம் 6 பக்கம் 410)

♦ ஹாபிழ் இப்னு ஹஜர் மக்கீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லுகின்றார்கள், 'ழஈபான ஹதீஸ்கள் மூலம் சிறப்பானவைகளில் கருத்து வேறுபாடின்றி அமல் செய்யலாம்' (அல் மன்ஹுல் மக்கிய்யா ஃபீ ஷரஹில் ஹம்ஸிய்யா பக்கம் 82)


​​

♣ இமாம்கள் பலவீனமான நபிமொழிகளை வைத்து அமல் செய்திருக்கிறார்களா?

ஆம்! செய்திருக்கின்றனர். ஆதாரங்கள் இதோ.

♦ ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள் 'அலியே! எனக்கு எதை நான் விரும்புகின்றேனோ அதைத்தான் உமக்கும் விரும்புகின்றேன். எனக்காக வெறுப்பவற்றை உமக்காகவும் வெறுக்கின்றேன். நீர் இரு ஸஜ்தாக்களுக்கிடையில் குதிகாலில் அமர வேண்டாம்'

அறிவிப்பவர்: ஹழ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு) இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் அபூ ஈஸா திர்மிதீ ரலியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் 'அலி அவர்களிடமிருந்து ஹாரிதும் ஹாரிதிடமிருந்து அபூ இஸ்ஹாக்கும் அறிவிக்கும் இந்த நபிமொழியை வேறு எவரும் அறிவிப்பதாக நாம் காணவில்லை. இந்த அறிவிப்பாளர்களில் வரக்கூடிய ஹாரிதுல் அஃவர் என்பாரை சில அறிஞர்கள் பலவீனுமானவராக ஆக்கியுள்ளனர் (எனினும்) அனேகமான அறிஞர்கள் இந்த நபிமொழிப்படியே அமல் செய்கின்றனர். அதாவது இரு ஸுஜூதுகளுக்கிடையில் குதிகாலில் இருப்பது (நாயிருப்பு) மக்ரூஹ் என்று கூறுகின்றனர். (நூல்: ஜாமிஉத் திர்மிதி பாகம் 1 பக்கம் 57,58)

♦ அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் தமது இரு பாதங்களின் முற்பகுதியிலேயே (நிலைக்கு) எழும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்.(அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு நூல்: ஜாமிஉத் திர்மிதி பாகம் 1 பக்கம் 58)

இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் காலிது இப்னு இயாஸ் என்பவர் இடம் பெறுகிறார். இவரை ஹதீஸ் கலை மேதைகள் பலவீனமானவர் என்கின்றனர்.அபூஈஸா திர்மிதி ரலியல்லாஹு அன்ஹு கூறுகின்றனர், 'அறிஞர்களிடத்து அமலில் இருப்பது அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்ற ஹதீதின் அடிப்படையில்தான்! தொழுகையில் இரு பாதங்களின் முற்பகுதி (யின் துணை)யால்(நிலைக்கு) எழுவதையே அறிஞர்கள் தேர்வு செய்திருக்கின்றனர்.

ஆகவே சற்று சிந்தித்து பாருங்கள்! பலவீனுமானவர்கள் என்று நபி மொழி வல்லுனர்களால் கணிக்கப்படுகின்ற அறிவிப்பாளர்கள் அறிவிக்கின்ற ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆறு ஹதீஸ் கிரந்தங்களில் ஒன்றான திர்மிதியைத் தந்துள்ள மேதை அபூஈஸா திர்மிதி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது நூலில் பதிவு செய்துள்ளதோடு அந்த நபிமொழிகளை பலவீனுமானவை, அமல் செய்லதக்கதல்ல என்று கூறூது, அறிஞர்கள் அந்த நபிமொழிகளின் படி அமல் செய்கின்றனர் என்று கூறுகிறார்கள்.


​​

♣  பலவீனமான ஹதீஸ்களின் விடயத்தில் பேணுதலைக் கடைபிடிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

சமுதாயத்தில் நல்லமல்கள் உருவாக வேண்டும் என்கிற நோக்கத்தில்தானே ழஈபான ஹதீஸ்கள் கூறப்படுகின்றன. சமுதாயம் கெட்டுப் போவதற்காக அல்லவே என்ற அடிப்படையில் (அம்ரு - ஏவல் , நஹீ - விலக்கல்) போன்ற ஆணைகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில்தான் பலவீனமான ஹதீஸ்களை ஆதாரமாக எடுக்கக் கூடாது. ஆனால் 'பழாயில்' சிறப்பு குறித்தான விசயங்களில் அமல் செயல்வதற்கு பலவீனமான நபிமொழிகளை எடுக்கலாம் என்பது நபிமொழிக் கலை வல்லுனர்களுடையவும் சட்ட அறிஞர்களுடையவும் ஏகோபித்த அபிப்பிராயம் ஆகும்.

♦பலவீனமான ஹதீஸ்களின் விடயத்தில் பேணுதல் மிக மிக அவசியம். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:"என் மீது யார் இட்டுக்கட்டி பொய் சொல்வானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்."


​​அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: புகாரி-110, முஸ்லிம்

♦ ஒரு முஸ்லிமின் மிக முக்கிய பண்பு மார்க்கத்தைப் பற்றிய தெளிவான ஞானத்தை பெற்றுக்கொள்வதாகும். "ஞானத்தைக் கொண்டும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் (மக்களை) உம்முடைய இரட்சகனின் பக்கம் (நபியே!) நீர் அழைப்பீராக." (அல்-குர்ஆன் 16:125)

♦ பிரச்சாரம் தெளிவான ஆதாரத்தின் அடிப்படையில் அமைய வேண்டும்.(நபியே!) நீர் கூறுவீராக! "நீங்கள் (உங்கள் சொல்லில்) உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்." (அல்-குர்ஆன் 2:111)

♦ (நபியே!) நீர் கூறுவீராக! "இதுதான் எனது வழியாகும். நான் அல்லாஹ்வின் பக்கம் (உங்களை) தெளிவான (ஆதாரம் மற்றும்) அறிவின் அடிப்படையில் அழைக்கிறேன். நானும் என்னைப் பின்பற்றியவர்களும் (இவ்வாறு அழைக்கின்றோம்)." (அல்-குர்ஆன் 12:108)

ஆகவே ஆதாரம் என்பது தஃவா பணியின் ஆணி வேறாகும். மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைக்கின்ற அடிப்படை ஆதாரங்களைத் தெளிவாக எடுத்து முன் வைக்க வேண்டும் என மேற் கூறிய அல்-குர்ஆன் வசனங்கள் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன. எனவே ழஈபான-பலவீனமான ஹதீஸ்களை அடிப்படையாக வைத்து அறிஞர் பெருமக்கள் 'பழாயில்' சிறப்பு குறித்தான விசயங்களில் அமல் செய்தனர் என்பதற்கு இதுபோன்ற ஏராளமான ஆதாரங்களை நாம் எடுத்துக் காட்ட முடியும்.


​​ஆனால் நவீன புதுமை விரும்பிகளாகிய வஹ்ஹாபிகள் அமல்கள் செய்வதற்கு தடை விதிக்கின்றனர். இறைபொருத்தத்தை நாடி செய்கின்ற அமல்களை விட்டும் மக்களை சோம்பேறிகளாக ஆக்குகின்றனர். அவர்களின் இக்கெடுதிகளை விட்டும் அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக! ஆமீன்