MAIL OF ISLAM

Knowledge & Wisdom



​மதீனாவின் சிறப்புக்கள்

​ 

எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


சொர்க்கத்துப் பூங்காக்களில் ஒரு பூங்காவனமாகிய புனிதம் பூக்கும் மாமதீனாவின் சிறப்புக்கள்.

♦ மதீனா என்பதற்கு பட்டணம், நகரம் என்பது பொருளாகும். இது ஸவூதி அரேபியாவின் மேற்கு மாநிலத்தில் (பழை ஹிஜாஸ்) மாநிலத்தில் யான்பு துறைமுகத்திலிருந்து கிழக்கே 215 கிலோ மீட்டர் தொலைவிலும், மக்காவிற்கு வடக்கே 400 கிலோ மீட்டர் தொலைவிலும், ஜித்தாவிற்கு வடக்கே 400 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.


​​துவக்கத்தில் ‘யஸ்ரிப்’ என்று அழைக்கப்பட்டு வந்த இந்நகரம் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டு குடியேறிய பின்னர் நபியின் பட்டணம் என்ற பொருளில் ‘மதீனத்துந் நபி’ (நபியின் நகரம்) என்றும் ஒளிபொருந்திய நகரம் என்ற பொருளில் ‘மதீனா முனவ்வரா’ என்றும் அழைக்கப்பட்டு பின்னர் சுருக்கமாக மக்களால் ‘மதீனா’ என்று அழைக்கப்படுகிறது.


​​

♣  மதீனாவின் சிறப்புகள்

நிச்சயமாக இப்ராஹீம் நபி (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் மக்கமா நகரத்தை சங்கைப்படுத்தி புனிதம் மிகுந்ததாக ஆக்கினார்கள். நான் மதீனமா நகரத்தை சங்கைபடுத்தி புனிதமாக்கியிருக்கிறேன். என நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம், இப்னு மாஜா

அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள் ”மதீனாவின் இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதி என் நாவினால் (என் வாயிலாக) புனிதமானதாக ஆக்கப்பட்டுவிட்டது!” என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். பனூ ஹாரிஸா குலத்தினரிடம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சென்று, ”பனூ ஹாரிஸா குலத்தினரிடம்! நீங்கள் ஹரம் எல்லைக்கு வெளியே இருக்கிறீர்கள்!” என்றார்கள். பின்னர் திரும்பிப் பார்த்துவிட்டு. ”இல்லை! நீங்கள் ஹரம் எல்லைக்குள்தான் இருக்கிறீர்கள்!” என்றார்கள்.

ஷஹீஹ் புகாரி 1869


​​

♣  நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நேசித்த புனித பூமியாகும்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த பயணத்திலிருந்து திரும்பும்போது மதீனாவின் சுவர்களை கண்டுவிட்டால் விரைந்து வாகனத்தை ஓட்டுவார்கள். ஏனெனில் மதீனாவின் மீது அவர்கள் கொண்டிருந்த அன்பே காரணமாகும்.

அபூ ஹுமைத் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். நாங்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் தபூக்கிலிருந்து (யுத்தம் முடிந்து) திரும்பினோம். மதீனாவை நெருங்கியதும். “இது “தாபா!“ (நலம் மிக்கது! தூமையானது)“ என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.


​​ஷஹீஹ் புகாரி 1872

அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பயணத்திலிருந்து ஊர் திரும்பும் போது மதீனாவி(ல் உள்ள வீடுகளி)ன் சுவர்களைக் கண்டதும் தம் வாகனத்தை விரைந்து செலுத்துவார்கள். வாகனத்தில் மேல் அவர்கள் அமர்ந்திருந்தால் அன்புடன் அதைத் தட்டிக் கொடுப்பார்கள்.


​​ஷஹீஹ் புகாரி - 1886


​​

♣  ஈமான் எனும் இறை நம்பிக்கை மதீனாவில் அபயம் பெறும் புனித பூமியாகும்

இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ”பாம்பு தன் புற்றில் (சென்று) அபயம் பெறுவது போல் ஈமான் எனும் இறை நம்பிக்கை மதீனாவில் அபயம் பெறும்!” என அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். (ஷஹீஹ் புகாரி 1876)

கொல்லனின் துருத்தியாகிறது இரும்பின் துருவை நீக்கி சுத்தம் செய்வது போல மதீனாவாகிறது மனிதர்களை (அகத்துருவை நீக்கி) பரிசுத்தப்படுத்தி விடும் என நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

நூல் : மிஷ்காத் 240


​​

♣  பரக்கத் செய்யப்பட்ட புனித பூமியாகும்

இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:”இறைவா! மக்காவில் நீ ஏற்படுத்திய பரக்கத்தைப் போல் இரண்டு மடங்கை மதீனாவில் ஏற்படுத்துவாயாக!” என ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள்.


​(ஷஹீஹ் புகாரி 1885, முஸ்லிம், மிஷ்காத் 240


​​

♣  குழப்பமான காலத்திலும் கியாமத் நெருக்கத்திலும் அடைக்கலமாகுவதற்கு மதீனாவே சிறந்த பூமியாகும்

இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்” “யமன் வெற்றி கொள்ளப்படும். உடனே, ஒரு கூட்டத்தினர் ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு, தம் குடும்பத்தினரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு (யமன் நாட்டிற்குச்) செல்வார்கள்! ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது! இதை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா? பின்னர் ‘ஷாம்’ வெற்றி கொள்ளப்படும்.


​​உடனே, ஒரு கூட்டத்தினர் ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு, ‘தம் குடும்பத்தினரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு அங்கே செல்வார்கள்; ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது! இதை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா? பின்னர் இராக் வெற்றி கொள்ளப்படும்; உடனே, ஒரு கூட்டத்தினர் ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு, தம் குடும்பத்தினரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு அங்கே செல்வார்கள்! ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது! இதை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா?’ என சுப்யான்(ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள்


ஷஹீஹ் புகாரி 1875


​​

♣  தஜ்ஜாலை விட்டும் பாதுகாக்கப்பட்ட புனித பூமியாகும்

♦இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ”மதீனாவின் வாசல்களில் வானவர்கள் இருப்பர்! மதீனாவிற்குள் (பிளேக் போன்ற) கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாது!”


ஹழ்ரத் ​​ அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) 

ஷஹீஹ் புகாரி 1880

♦ இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ”தஜ்ஜாலைப் பற்றிய அச்சம் மதீனாவுக்குள் நுழையாது! அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு வாசல்கள் இருக்கும்! ஒவ்வொரு வாசலிலும் இரண்டு வானவர்கள் இருப்பார்கள்!”


ஹழ்ரத் ​​அபூ பக்ர் (ரலியல்லாஹு அன்ஹு) 

ஷஹீஹ் புகாரி - 1878

​​

♦ மதீனாவின் தெருக்களில் மலக்குகள் நடமாடுவார்கள். அங்கு காலராவும் தஜ்ஜாலும் நுழைய முடியாது. இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். ”தஜ்ஜால் (மதீனாவை நோக்கி) வருவான்; மதீனாவின் வாசல்களில் நுழைவது அவனுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது; எனவே, (மதீனாவுக்கு வெளியே), மதீனாவின் உவர் நிலத்தில் அவன் தங்குவான்; அவனை நோக்கி மக்களில் சிறந்த ஒருவர் அன்று புறப்படுவார்; அவர் அவனிடம், ‘இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் (அடையாளம்) சொல்லிய தஜ்ஜால் நீதான் என்று உறுதியாகக் கூறுகிறேன்!” என்பார். அப்போது தஜ்ஜால் (மக்களை நோக்கி), ‘நான் இவனைக் கொன்று, பிறகு உயிர்ப்பித்தால் (என்) விஷயத்தில் நீங்கள் சந்தேகம் கொள்வீர்களா?’ என்று கேட்பான். மக்கள் ‘கொள்ள மாட்டோம்!” என்பார்கள். உடனே, அவன் அவரைக் கொன்று, பின்னர் உயிர்ப்பிப்பான். அப்போது, அந்த நல்ல மனிதர் உயிர்ப்பிக்கப்பட்டதும், ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! இன்றைய தினத்தை விடத் தெளிவாக உன்னைப் பற்றி நான் (இதற்கு முன்) ஒருபோதும் அறிந்திருக்கவில்லை!” என்று கூறுவார். தஜ்ஜால் ‘நான் இவரைக் கொல்வேன்!” என்பான். ஆனால், அவனால் அவரைக் கொல்ல முடியாது!”என அபூ ஸயீத் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள்.


​​நூல் புகாரி 1882

♦ இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்” “மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இராது! மதீனாவின் எந்தவொரு வாசலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து அதைக் காப்பார்கள். பின்னர் மதீனா, தன் குடிமக்களுடன் மூன்று முறை நிலநடுக்கத்திற்குள்ளாகும்; அப்போது ஒவ்வொரு காஃபிரையும் முனாஃபிக்கையும் (இறைமறுப்பாளனையும் நயவஞ்சகனையும்) அல்லாஹ் (மதீனாவிலிருந்து) வெளியேற்றி விடுவான்!” என அனஸ் இப்னு மாலிக்(ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள்.


​​நூல் புகாரி 1881


​​

♣  கடும் நோயை விட்டும் பாதுகாக்கப்பட்ட புனித பூமியாகும்

ஆஷியா (ரலியல்லாஹு அன்ஹா) அறிவித்தார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது அபூ பக்ர் (ரலியல்லாஹு அன்ஹு), பிலால் (ரலியல்லாஹு அன்ஹு) ஆகியோருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. அபூ பக்ர் (ரலியல்லாஹு அன்ஹு) தமக்குக் காய்ச்சல் ஏற்படும்போது, ‘மரணம் தன்னுடைய செருப்பு வாரை விடச் சமீபத்தில் இருக்கும் நிலையில் ஒவ்வொரு மனிதனும் தன் குடும்பத்தாருடன் காலைப் பொழுதை அடைகிறான்!” என்ற கவிதையைக் கூறுவார்கள். பிலால் (ரலியல்லாஹு அன்ஹு) காய்ச்சல் நீங்கியதும் வேதனைக் குரலை உயர்த்தி, ‘இத்கிர், ஜலீல் எனும் புற்கள் என்னைச் சூழ்ந்திருக்க, ஒரு பள்ளத்தாக்கில் ஓர் இராப் பொழுதையேனும் நான் கழிப்பேனா? ‘மஜின்னா’ எனும் (சுனையின்) நீரை நான் அருந்துவேனா? ஷாமா, தஃபீல் எனும் இரண்டு மலைகள் (அல்லது இரண்டு ஊற்றுகள்) எனக்குத் தென்படுமா?’ என்ற கவிதையைக் கூறுவார்கள்.

மேலும், பிலால்(ரலியல்லாஹு அன்ஹு) ‘இறைவா! ஷைபா இப்னு ரபிஆ, உத்பா இப்னு ரபீஆ, உமய்யா இப்னு கலஃப் ஆகியோர் எங்கள் நாட்டிலிருந்து எங்களை (அப்புறப்படுத்தி) இந்த நோய்ப் பிரதேசத்திற்கு விரட்டியது போல், அவர்களை நீ உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தி (சபித்து) விடுவாயாக!” என்று கூறுவார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ‘இறைவா! நாங்கள் மக்காவை நேசித்தது போல் அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்கு! இறைவா! எங்களுடைய (அளவைகளான) ஸாவு, முத்து ஆகியவற்றில் (எங்கள் உணவில்) எங்களுக்கு நீ பரக்கத் செய்! இவ்வூரை எங்களுக்கு ஆரோக்கியமானதாக ஆக்கு! இங்குள்ள காய்ச்சலை ‘ஜுஹ்ஃபா’ எனும் பகுதிக்கு இடம் பெயரச் செய்!” என்று பிரார்த்தித்தார்கள். நாங்கள் மதீனாவிற்கு வந்தபோது, அது அல்லாஹ்வின் பூமியிலேயே நோய் நொடிகள் அதிகமான (பிரதேசமாக இருந்தது; (ஏனெனில்) ‘புத்ஹான்’ எனும் ஓடையில் மோசமான (கெட்டுப்போன) தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது!


​​நூல் புகாரி 1889

​​

புனித மதீனாவின் கணவாய்கள் (மலைப் பாதைகள்) மீது மலக்குகள் இருக்கிறார்கள். எனவே தஜ்ஜாலைப் போன்ற துஷ்டர்களும் பேதியைப் போன்ற பீதி தரும் காலரா நோய்களும் மதீனாவில் நுழையமுடியாது.


​​நூல்கள் : புகாரி, முஸ்லிம், மிஷ்காத்


​​

♣  ஷஃபாஅத் பூமி

♦ மதீனாவில் மரணிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அங்கு மரணித்து விடுங்கள் ஏனெனில் அங்கு மரணிப்பவருக்கு நான் ஷபாஅத் செய்வேன். 'உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார். ”இறைவா! உன் பாதையில் வீரமரணம் அடையும் பாக்கியத்தை எனக்கு வழங்கு! என்னுடைய மரணத்தை உன் தூதருடைய ஊரில் ஏற்படுத்து'.

ஷஹீஹ் புகாரி 1890

♦எவர் புனித மதீனாவில் குடியேறி அதனுடைய சோதனைகளைப் பொறுத்துக் கொள்வாரோ அவருக்கு நான் கியாமத்து நாளில் சாட்சியாளராக இருப்பேன்.


​​நூல் பைஹகீ, மிஷ்காத்

♦ எவராவது புனித மதீனாவில் மரணிப்பதற்கான பாக்கியத்தைப் பெற்றிருப்பாராகில் அவர் அங்கேயே மரணிக்கட்டும். ஏனென்றால் அங்கு மரணிப்பவர்களுக்கு நிச்சயமாக நான் பரிந்துரைப்பேன்.


​​நூல்கள்: திர்மிதி, அஹ்மத், மிஷ்காத், இப்னு மாஜா 3112

♦ யா அல்லாஹ்! உன் ரஸூலின் பூமியில் ஷஹாதத் மரணத்தை எனக்கு தருவாயாக என உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் துஆ செய்தார்கள்.

وقد علق عليه الإمام النووي رحمه الله بقوله : يستحب طلب الموت في بلد شريف " انتهى." المجموع " (5/106)

♦  சிறப்பான ஊரில் மரணிப்பது முஸ்தஹப்பு என இமாம் நவ்வி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியுள்ளார்கள்.


​​நூல்:அல் மஜ்மூஉ பாகம் 5,பக்கம் 106


​​

♣  மதீனாவாசிகளுக்கு தீங்கு செய்பவர்களைப் பற்றி எச்சரிக்கை

♦ இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ”மதீனாவாசிகளுக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் எவரும் தண்ணீரில் உப்பு கரைவது போல் கரைந்து போவார்கள்!” என ஸஅத்(ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள்.


​​ஷஹீஹ் புகாரி 1877, முஸ்லிம், இப்னு மாஜா

♦யஸ்ரிப் என்று மக்கள் கூறக்கூடிய, எல்லா ஊர்களையும் மிகைக்கக் கூடிய ஓர் ஊருக்கு (ஹிஜ்ரத் செய்து செல்லுமாறு) நான் கட்டளையிடப்பட்டேன்! அதுதான் மதீனா! இரும்பின் துருவை உலை நீக்கிவிடுவதைப் போல் மதீனா நகர் தீயவர்களை வெளியேற்றிவிடும்!”


​ஹழ்ரத் அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)  

ஷஹீஹ் புகாரி 1871


​​

♣  மஸ்ஜிதுன் நபவி (நபியுடைய மஸ்ஜித்) என்று அழைக்கப்படக் கூடிய சுவர்கத்தின் பூங்காவனம்

♦ இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ”என்னுடைய இல்லத்திற்கும் என்னுடைய மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதி சொர்க்கத்துப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும்! என்னுடைய மிம்பர் என்னுடைய ஹவ்ள் (அல்கவ்ஸர் தடாகத்தின்) மீது அமைந்துள்ளது!”


ஹழ்ரத் ​​அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

​ஷஹீஹ் புகாரி-1888

♦ இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் அறிவித்தார்கள்: ”மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதன் நபவி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர (அதிக நன்மையை எதிர்பார்த்து)ப் பயணம் மேற்கொள்ளக் கூடாது.


ஹழ்ரத் ​​அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு

ஷஹீஹ் புகாரி 1189

♦ இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்”.


ஹழ்ரத் ​​அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

​ஷஹீஹ் புகாரி 1190

ஆகவே மேற்படி ஹதீஸ்கள் மாமதீனாவின் புண்ணியங்கள் குறித்தும் சிறப்புக்கள் பற்றியும் தெளிவாக விளங்குகின்றது. எல்லாம் வல்ல கிருபையாளன் எமது உயிர் பிரியும் முன்பே கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மதீனா (ரவ்ழா ஷரீபுக்கு) சென்று ஜியாரத் செய்து அவ்விடத்திலே எம் உயிரை கைப்பற்றுவானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்