MAIL OF ISLAM

Knowledge & Wisdom



மரணித்த பெரியார்களின் மய்யித்தை (ஜனாஸா)வை முத்தமிடலாமா?

எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.

இஸ்லாத்தின் பார்வையில் மரணித்த பெரியார்களின் மய்யித்தை (ஜனாஸா)வை முத்தமிடலாமா?


♦ (முஹப்பத்திற்காக) அன்பின் வெளிப்பாட்டின் காரணத்தினால் ஆன்மீக தந்தைகளான ஷெய்குமார்கள், பெரியார்களின் மய்யித்தை முத்தமிடுவதை இன்று ஒரு சில முஸ்லிம் என்ற பெயரில் நடமாடும் ஒரு சில போலிகள் ஷெய்குமார்களைப் பற்றி தவறாக விமர்சித்துக் கொண்டு அவர்கள் மரணித்தால் அவர்களின் மய்யித்தை முத்தமிடுவது கூடாது என்று கூரிகிறார்கள். ஆகவே முஹப்பத்தோடு மய்யித்தை முத்தமிடுவது கூடும்.



♦ உஸ்மான் இப்னு மல்ஊன் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் வபாத்தான நேரத்தில் அவர்களின் மய்யித்தை (முகத்தை) நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் முத்தமிட்டார்கள்.


​​அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா

​நூல்கள் : திர்மிதி, இப்னு மாஜா 1446, அபூதாவுத் 2750, அஹ்மத் 23036


♦ ஹழ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகைவிட்டும் மறைந்த போது நபியவர்களின் புனிதமான உடலை முத்தமிட்டார்கள்.


​​அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா

​நூல்கள் : புகாரி, பாகம் 02, பக்கம் 641, திர்மிதீ 910, நஸாயீ 1818, இப்னு மாஜா 1447, அஹ்மத் 23718


♦ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள். கஃபாவின் தூண்களை முத்தமிடுவதை ஷரீஅத் அனுமதித்துள்ளது. இதிலிருந்து கப்றுகளையும் முத்தமிடலாம் என்று அறிஞர்கள் சட்டம் எடுத்துள்ளனர். கண்ணியத்திற்குரியவர்களையும் கண்ணியத்திற்குரிய பொருட்களையும் முத்தமிடுவது ஆகும். இந்த வகையில் பெரியவர்களின் கைகளை முத்தமிடுவதும் ஆகும் என “கிதாபுல் அதப்” என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.


​​நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மின்பரையும், அன்னாரின் புனித ரெளலாவையும் முத்தமிடுவது கூடுமா? என்று இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி இடத்தில் கேட்ட போது அதில் எதுவித குறையும் இல்லை என்று விடை பகர்ந்தார்கள். ஷாபி மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்களுள் ஒருவரான அபுஸ்ஸைப் அல்யமானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி மூலம் இவ்வாறு கூறப்படுகின்றது. திருக்குர்ஆன் முஸ்ஹபுக்களையும், ஹதீஸ் கிரந்தங்களையும் முத்தமிடுவது ஆகுமானதாகும்.


​​ஆதாரம்: பத்ஹுல்பாரி, பாகம் 03, பக்கம் 475


♣ ஜனாஸாவை வைத்துக்கொண்டு வீட்டு முற்றத்தில் பாத்திஹா,பைத்துக்கள் ஓதலாமா?

தாராளமாக ஓதலாம். மைய்யித்திற்காக எந்த நேரத்திலும் துஆ கேட்பதற்கும், திக்று, கத்முல் குர்ஆன் ஓதி அதன் தவாபை மைய்யித்திற்குச் சேர்த்து வைப்பதற்கு ஷரீஅத்தில் அனுமதி உண்டு அமீறுல் முஃமினீன் உமர் பாறுக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஜனாஸாவைக். (குளிப்பாட்டியபின்) கட்டிலில் வைத்து ஜனாஸாவைத் தூக்கமுன் ஸஹாபாக்கள் சூழநின்று அன்னாரைப் புகழ்ந்தனர். அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சூழநின்றவர்களைத் தாண்டி ஜனாஸாவின் அருகில் வந்து நின்று அமிறுல் முஃமினீன் அவர்களைப் புகழ்ந்து பாராட்டியபின் அவர்களுக்காக துஆவும் செய்தார்கள்.


​​அறிவிப்பவர் : ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு

நூல் : முஸ்லிம், பாகம் - 7, பக்கம் - 11


♦ ஆகவே கீழே வைக்கப்பட்டுள்ள மய்யித்தை முத்தமிடுவதென்றால் கீழே குணிந்தால்தான் சாத்தியமாகும், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் முத்தமிட்டதிலிருந்து மய்யித்தை முத்தமிடலாம் குறிப்பாக குணிந்த நிலையில் முத்தமிடலாம் என்பதை மேலே உள்ள ஹதீஸ் பறைச் சாற்றுகிறது. எனவே அன்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஸஹாபாக்கள் செய்ததையே நாமும் அதைப் பின்பற்றி இன்று செய்கின்றோம். இதில் எவ்வித தவறும் கிடையாது.