MAIL OF ISLAM

Knowledge & Wisdom



மக்கா - மதீனா இவை இரண்டில் மிகச் சிறந்தது எது?


எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான்  (கௌஸி)  கல்முனை.


இஸ்லாத்தின் பார்வையில்  மக்கா - மதீனா இவை இரண்டில் மிகச் சிறந்தது எது?

♣ இந்த தலைப்பினை பார்த்து விட்டு மக்கா, மதீனா இரண்டுமே சிறந்ததுதானே எனவே இரண்டுக்கும் மத்தியில் பிரிவினைகளை ஏன் ஏற்படுத்துகின்றீங்கள் என சிலர் கேட்களாம். எனவே இது பிரிவினை ஏற்படுத்துவது நோக்கம் அல்ல.


​​ஆகவே இறைவன் படைத்த எல்லா படைப்பினங்களையும் (வஸ்துக்களையும்) ஒன்றை விட ஒன்றை சிறப்பாக்கி வைத்துள்ளான்.அதனால் மற்றது சிறப்பில்லை என்பது பொருள் அல்ல. இறைவன் படைத்த அனைத்து படைப்பினங்களிலும் ஒன்றை விட ஒன்றை சிறப்பாக்கியுள்ளான்.


​​அந்த அடிப்படையில் சில மாதங்களை சிலதை விட்டும், சில நாட்களை சிலதை விட்டும், மேலும் சில நேரங்களை சிலதை விட்டும் சில இடங்களை சிலதை விட்டும் வணக்க வழிபாடுகள் மூலம் சிறப்பாக்கியுள்ளான். இதன் மூலம் மனிதன் அதிகம் நற்செயல்கள் செய்யவேண்டும் என்பதும் அவனது அந்தஸ்து நற்செயல்களால் உயர்த்தப்பட வேண்டும் என்பதே நோக்கமாகும்.

♦அந்த அடிப்படையில் மக்கா மதீனா இரண்டுமே அமல்கள் செய்வதற்கும், இறைவனுக்கு மிகவும் விருப்பமான இடங்களாகும். எனவே மக்கா, மதீனா இரண்டிலும் மிகச் சிறந்தது எது என்று வரும்போது மதீனாதான் சிறந்தது என்ற கேள்விக்கு மார்க்க அறிஞர்கள் பல வேறுபட்ட கருத்துக்களை கூறியுள்ளார்கள். சிலர் மக்கா சிறந்தது என்றும், இன்னும் சிலர் மதீனா சிறந்தது என்றும் கூறியுள்ளனர். ஆனால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புனித உடல் மற்றும் கஃபாவையும் சேர்த்து இவற்றில் எது மிகச் சிறந்தது என்ற கேள்விக்கு அனைத்து ஸஹாபாக்கள், இமாம்களின் ஏகோபித்த முடிவு மதீனா தான் சிறந்தது என்பதாகும்.

♦ ஏனெனில், மதீனாவில்தான் அண்ட சராசரங்களுக்கும் ரஹ்மத்தாக வந்துதித்த எம் உயிரிலும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புனித உடல் உள்ளதால் ஆகும். என மாபெரும் ஹதீஸ் கலை வல்லுநர்களும், ஷரிஆ சட்ட நிபுணர்களுமான இமாம் முல்லா அலி காரி, இமாம் காதி இயாத், இமாம் ஹஸ்கபி, இமாம் இப்ன் ஆபிதீன் (ரலியல்லாஹு அன்ஹும்) போன்றோர் தமது பத்வாக்களில் குறிப்பிட்டுள்ளனர்.

♦ இன்று சிலர் கூறுவார்கள் : மதீனாவை விட மக்காதான் சிறந்தது ஏனெனில் மக்காவில் தொழுதால் ஒரு லட்சம் நன்மைகள் கிடைக்கும் மதீனாவில் தொழுதால் ஆயிரம் நன்மைகள்தான் கிடைக்கும், இன்னும் மக்காவில்தான் இறைவனின் இல்லம் கஃபதுல்லாஹ், ஹஜருல் அஸ்வத் கல், ருக்னுல் ஜமானீ, மகாமு இப்ராஹீம் நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் கால் பதிந்த இடம், ஸபா - மர்வா மலைகள், ஸம் ஸம் நீர் உள்ளன. எனவே மக்காதான் சிறந்தது என கூறி மதீனாவில் உள்ள எம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்ழா ஷரீப் சென்று ஸியாரத் செய்ய தேவையில்லை என்று கூறுவார்கள்.

♦ இவையெல்லாம் வழிகெட்ட வஹ்ஹாபிகள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை ஸியாரத் செய்ய செல்லும் பயணத்தை தடுக்கும் தந்திர வார்த்தைகள் என்பதை தெளிவாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே மேலே கூறப்பட்ட அனைத்தும் கிடைப்பதற்க்கு காரணமாக இருந்தவர்கள் யார்? கண்மணி நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்தான்.


​​ஆகவே அவர்கள் இல்லையென்றால் இறைவனின் இல்லம் கஃபதுல்லாஹ், ஹஜருல் அஸ்வத்,ருக்னுல் ஜமானீ, மகாமு இப்ராஹீம், ஸபா - மர்வா மலைகள், ஸம் ஸம் நீர் ஏன் மக்காவே கிடையாது. உங்களை படைக்காவிட்டால் இவ் வையகமே இல்லை என எங்கள் ரப்பே சொல்லும் போது அந்த மதீனா (தர்பாருக்கள்ளவா) போக வேண்டும். கண்மணி காருண்யத்தின் சபாஆத்தை பெறா விட்டால் ஏது ஈடேற்றம் மன்னர் சர்தாரை கண்டால் அல்லவா ஈமான் பலம் பெரும். அண்ட கோடிகளும் அடிமை எங்கள் நாயகத்தின் சொல் கேட்டால் ...கண்மணியினை நேசிக்காவிட்டால் ரப் எங்களை நேசிக்க மாட்டான்.


​​

♣ மாமதீனா தான் மிகச் சிறந்தது என்பதுக்கு நபி மொழிகளில் இருந்து சில சான்றுதல்கள்

ஒரு நாள் மர்வான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் மிம்பரிலே மக்காவின் (சிறப்புகள்) பற்றி நீண்ட நேரம் கூறிக்கொண்டிருந்தார்கள், ஆனால் மதீனாவைப் பற்றி கூறவில்லை. அந்த சமயம் ராபிfஃ இப்னு கதீஜ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் : எழுந்து 'உங்களுக்கு என்ன நடந்து விட்டது? (என்ற மாதிரி) நீங்கள் மக்காவைப் பற்றி நீண்ட நேரம் கூறினீர்கள், மதீனாவைப் பற்றி கூறவில்லை' என கேட்டு விட்டு, நான் சாட்சி கூறுகின்றேன். நிச்சயமாக நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் : 'மக்காவை விட மதீனா சிறந்தது' என கூறியதை நான் கேட்டுள்ளேன்.


​​அறிவிப்பவர் : ஹழ்ரத் அம்ரத் பின்தி அப்துர் ரஹ்மான் ரலியல்லாஹு அன்ஹுமா)

​நூல் : முஅத்தா, பாகம் 1,ஹதீஸ் எண் 18

♦ இமாம் காளி இயாள் (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் மற்றுமுள்ள மார்க்க அறிஞர்கள் பெரும்பான்மையோர் '' நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் புனிதமிகு உடலை தாங்கி நிற்கும் புண்ணியமிகு கப்ரு உலகில் உள்ள எல்லா இடங்களைக் காட்டிலும் சிறந்தது என தீர்ப்பளித்துள்ளனர்.


​​நூல் :இத்திஹாப் பாகம் 4: பக்கம் 416,417

♦ சில நல்லோர்கள், உலமாக்கள்,இமாம்கள் மற்றும் 'நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்ரு ஷரீப், கஃபா, பைத்துல் முகத்தஸைக்காட்டிலும் சிறந்தது எனத் தீர்ப்பளித்து விசுவாசத்தின் விளைநிலமான நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை கண்ணியம் செய்வதே ஈமானைத் தக்கவைத்து கொள்ளும் உபாயம் என உபதேசம் செய்துள்ளார்ள். இவர்களில் முக்கியமானவர்கள் ஜர்கஸீ, அபதீ (ரஹ்மதுல்லஹி அலைஹிமா) போன்ற பேரரிஞர்களாவர்.


​நூல் : வஃபாவுல் வஃபா 1: 83

♦ இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ”பாம்பு தன் புற்றில் (சென்று) அபயம் பெறுவது போல் ஈமான் எனும் இறை நம்பிக்கை மதீனாவில் அபயம் பெறும்!


ஹழ்ரத் அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

​ஷஹீஹ் புகாரி 1876

♦ நிச்சயமாக இப்ராஹீம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மக்கமா நகரத்தை சங்கைப்படுத்தி புனிதம் மிகுந்ததாக ஆக்கினார்கள். நான் மதீனமா நகரத்தை சங்கைபடுத்தி புனிதமாக்கியிருக்கிறேன்.

நூல்: முஸ்லிம், இப்னு மாஜா

♦ இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:”இறைவா! மக்காவில் நீ ஏற்படுத்திய பரக்கத்தைப் போல் இரண்டு மடங்கை மதீனாவில் ஏற்படுத்துவாயாக!”


ஹழ்ரத்​​ அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

​ஷஹீஹ் புகாரி 1885, முஸ்லிம், மிஷ்காத்

♦ இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ”தஜ்ஜாலைப் பற்றிய அச்சம் மதீனாவுக்குள் நுழையாது! அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு வாசல்கள் இருக்கும்! ஒவ்வொரு வாசலிலும் இரண்டு வானவர்கள் இருப்பார்கள்!”


ஹழ்ரத் அபூ பக்ர் (ரலியல்லாஹு அன்ஹு) 

ஷஹீஹ் புகாரி - 1878

♦ இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ”என்னுடைய இல்லத்திற்கும் என்னுடைய மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதி சொர்க்கத்துப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும்! என்னுடைய மிம்பர் என்னுடைய ஹவ்ள் (அல்கவ்ஸர் தடாகத்தின்) மீது அமைந்துள்ளது!”


ஹழ்ரத் அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)  

ஷஹீஹ் புகாரி-1888

♦ மதீனாவில் மரணிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அங்கு மரணித்து விடுங்கள் ஏனெனில் அங்கு மரணிப்பவருக்கு நான் ஷபாஅத் செய்வேன். 'உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார். ”இறைவா! உன் பாதையில் வீரமரணம் அடையும் பாக்கியத்தை எனக்கு வழங்கு! என்னுடைய மரணத்தை உன் தூதருடைய ஊரில் ஏற்படுத்து'.


​​ஷஹீஹ் புகாரி 1890

♦ ஹழ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். ”இறைவா! உன் பாதையில் வீரமரணம் அடையும் பாக்கியத்தை எனக்கு வழங்கு! என்னுடைய மரணத்தை உன் தூதருடைய ஊரில் ஏற்படுத்து.


​ஷஹீஹ் புகாரி - 1890

ஆகவே மக்கா செல்ல வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை. அருள் வேண்டிச் செல்வதாக இருந்தால் மாமதீனா செல்வோம் வாருங்கள்

"றஹ்மதுலில் ஆலமீன்" மதீனாவில்தான் இருக்கிறார்கள், சொர்க்கத்தின் பூங்காவனம் அவர்கள் அருகேதான் உண்டு, கியாமத் நாள் நெருங்கும் போது ஈமான் ஒதுங்கும் இடமும் மதீனாதான் , உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது வீரமரணம் அடையும் பாக்கியத்தை கேட்டு பிரார்தித்ததும் மதீனாவைதான் எனவே மக்காவை விட மதீனா மிகச் சிறந்தது என்பது தெளிவாகின்றது.


​​

♣  மதீனா பள்ளி (மஸ்ஜித் நபவி)யால் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கௌர்வம் கிடைத்ததா? அல்லது நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களால் மதீனா பள்ளிக்கு கௌர்வம் கிடைத்ததா?

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா சென்ற போது மதீனாவில் பள்ளிவாசலே இருக்க வில்லை மாறாக நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தனது சொந்த பணத்தாலும், முயற்சியினாலும் மஸ்ஜித் நபவியை கட்டினார்கள் எனவே கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால்தான் மதீனா பள்ளிக்கு கௌர்வம் கிடைத்தது.


​​உலகத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசலுக்கும் பல பெயர்கள் இருந்தாலும் இறைவனின் பள்ளிவாசல் என்றுதான் சொல்வார்கள். அப்படிதான் சொல்ல வேண்டும் ஆனால் மதீனா பள்ளியினை மாத்திரம் இறைவனின் பள்ளி என்று யாரும் சொல்வதில்லை. மாறாக கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பள்ளி என்றுதான் சொல்ல வேண்டும் அப்படிதான் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

♦ இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்“.


ஹழ்ரத் அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

​ஷஹீஹ் புகாரி 1190, முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் பார்கலாம்.

♦ நமது இதயத்தில் கலிமாவை விதைத்தவர்கள் யார்? வளர்த்தவர்கள் யார்? வளர்பவர்கள் யார்? கனி பறித்தவர்கள் யார்? புசித்தவர்கள் யார்? ருசிப்பவர்கள் யார்? ரசிப்பவர்கள் யார்? எங்கு பார்த்தாலும் எதில் பார்த்தாலும் சிந்தனைக்கு எட்டா சிகரமாக இரைவனே முஹம்மதில் ஜொளிக்கின்றார்கள் எனவே மக்கா, மதீனா இரண்டுமே தன்னில் சிறந்ததுதான் இவ்விரண்டிலும் மிகச் சிறந்தது எது என்று வரும்போது மதீனா தான் சிறந்தது என இமாம்கள் கூறுகிறார்கள்.

ஆகவே மேற்படி ஹதீஸ்கள் மூலம் அமல்கள் செய்வதற்கு மக்கா மதீனா இரண்டுமே தன்னில் சிறந்ததுதான் இவ்விரண்டிலும் மிகச் சிறந்தது எது? அதாவது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புனித உடல் மற்றும் கஃபாவையும் சேர்த்து இவற்றில் எது மிகச் சிறந்தது எது? இறைவனுக்கு மிகவும் விருப்பமானது எது? என்று வரும்போது மதீனாதான் என்பது தெளிவாக விளங்குகின்றது.


​​எல்லாம் வல்ல கிருபையாளன் எமது உயிர் பிரியும் முன்பே கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மதீனா (ரவ்ழா ஷரீபுக்கு) சென்று ஜியாரத் செய்து அவ்விடத்திலே எம் உயிரை கைப்பற்றுவானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்