MAIL OF ISLAM

Knowledge & Wisdom



​மரணத்திற்கு பிறகு நபிமார்கள், வலிமார்கள் உயிருடன் இருக்கிறார்களா? 

​ 

எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


இஸ்லாத்தின் பார்வையில் மரணித்த பின்பும் நபிமார்கள், ஷூஹதாக்கள் வலிமார்கள் கப்ருகளில் ஹயாத்தாக உயிருடன் இருக்கிறார்களா? என்பது பற்றி ஓர் ஆய்வு.

மரணித்த பின்பும் நபிமார்கள் கப்ருகளில் ஹயாத்தாக உயிருடன் இருக்கிறார்கள்

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: நபிமார்கள் கப்ரில் ஹயாத்துடன் இருந்து வருகிறார்கள். அவர்களுடைய உடம்பை மண் தின்னாது. அவர்களுக்கு கப்ரில் சுவர்க்க உணவுகளும் வழங்கப்படுகிறது.


நூல்கள்: அபூதாவுத், நஸாயி, இப்னுமாஜா, தாரமி, பைஹகி, மிஷ்காத்

♦ ஒரு முறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாப் பெருமக்களிடம், "வெள்ளிக்கிழமை மிகச் சிறந்த நாளாகும். ஆகவே அந்த நாளில் என் மீது அதிகம் ஸலவாத் ஓதுங்கள். நீங்கள் ஓதும் ஸலவாத்துக்கள் அனைத்தும் மலக்குகள் மூலம் என்னிடம் சமர்பிக்கப்படுகின்றன." என்றார்கள். அப்போது, "நாங்கள் ஓதும் ஸலவாத்துக்கள் தாங்களுடைய ஜீவியத்தில் எடுத்துக்காட்டப்படுவது போன்றே தாங்கள் மறைவுக்குப் பிறகும் (கப்ரிலும்) காட்டப்படுமா?" என்று சில ஸஹாபாக்கள் கேட்டார்கள்.

அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "ஒருவர் என் மீது ஸலவாத் ஓதினால் அவர் ஓதி முடிக்கின்றவரை அவருடைய ஸலவாத்துக்கள் ஒன்றுவிடாமல் என்னிடம் எடுத்துக்காட்டப்படுகின்றன" என்று கூறியதுடன், நபிமார்கள் கப்ரில் ஹயாத்துடன் இருந்து வருகிறார்கள். அவர்களுடைய உடம்பை மண் தின்பதை விட்டு அல்லாஹ் ஹராம் ஆகிவிட்டான். அவர்களுக்கு கப்ரில் சுவர்க்க உணவுகளும் வழங்கப்படுகிறது என்று நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


​​நூல்கள்: அபூதாவூத் 1047, நஸயீ 1666, இப்னு மாஜா, தாரமி, இப்னு ஹிப்பான் 910, ஹாகிம் 1029, பைஹகீ, மிஷ்காத்

♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் எனது ஹயாத்தும் உங்களுக்கு நன்மையானது எனது மரணமும் உங்களுக்கு நன்மையானது ஏனெனில் உங்களுக்குடைய அமல்களை என்மீது எடுத்துக் காட்டப்படுகிறது அது நன்மையானதாக இருந்தால் அல்லாஹ்வைப் புகழ்வேன் தீமையானதாக இருந்தால் உங்களுக்கு பிழை பொறுக்கத் தேடுவேன்.


​​நூல்: மஜ்மவுஸ்ஸவாயித் பாகம் 9 பக்கம் 24,அல்மிர்ஆத் பாகம் 4 பக்கம் 581

♦ உயிரோடு இருப்பவர்களின் செயல்களை இறந்தவர்களிடம் எடுத்துக் காட்டப்படுகிறது.


​​நூல்: இப்னு கஸீர் பாகம் 2 பக்கம் 387

♦ அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 

யார் என் மீது ஸலாம் சொன்னாலும் அல்லாஹ்வுதாலா அந்த ஸலாத்தை அறியக்கூடிய அறிவாற்றலை எனக்கு தந்துள்ளான் அவருடைய ஸலாத்திற்கு நான் பதில் சொல்கிறேன் என நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.


​​நூல்: அபூதாவூத் 1745


​​

♣ மரணித்த பின்பும் ஷுஹதாக்கள் கப்ருகளில் ஹயாத்தாக உயிருடன் இருக்கிறார்கள்

அன்பியாக்கள் கப்ரில் ஹயாத்துடன் இருப்பது போன்றே இஸ்லாத்தின் எதிரிகளான காபிர்களுடன் போராடி அவர்களின் வாளால் வெட்டுண்டு ஷஹீதாகிய வீர தியாகிகளான ஷுஹதாக்களும் தங்களுடைய கப்ருகளில் ஹயாத்துடன் இருக்கிறார்கள் என்று திரு மறையாம் குர்ஆன் ஷரீபில் தெள்ளத் தெளிவாக வருகிறது.

♦ இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை "(அவர்கள்) இறந்துவிட்டார்கள்" என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:154)

♦ அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் றப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள். (அல்குர்ஆன் 3:169)

♦ ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். உஹதுப்போர் நடக்கவிருந்தபோது என்னுடைய தந்தை அன்றிரவு என்னை அழைத்து, “நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் சகாக்களில் (நாளை போரில்) முதலில் நானே கொல்லப்படுவேன் எனக் கருதுகிறேன். மேலும் எனக்குப் பின் நான்விட்டுச் செல்பவர்களில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைத் தவிர மற்றவர்களில் உன்னைத் தவிர வேறு யாரையும் நான் மதிப்பிற்குரியவராகக் கருதவில்லை. என் மீது கடன் உள்ளது. அதை நீ அடைப்பதுடன் உன்னுடைய சகோதரிகளிடம் நல்ல முறையில் நடந்து கொள்” என்றார்.

மறுநாள் (போரில்) அவர்தான் முதலில் கொல்லப்பட்டார். அவருடன் இன்னொருவரும் அடக்கம் செய்யப்பட்டார். இன்னொருவருடன் அவரை கப்ரில் விட்டுவைப்பதை என்னுடைய மனம் விரும்பவில்லை. எனவே, (அடக்கப்பட்ட) ஆறு மாதங்களுக்குப் பின்பு அவரின் உடலை நான் கப்ரிலிருந்து வெளியிலெடுத்தேன். அப்போது அன்றுதான் சற்று முன்னர் அடக்கம் செய்யப்பட்டவர் போன்று அவரின் காதைத் தவிர உடம்பு அப்படியே இருந்தது.


​​நூல்: புகாரி 1351

♦ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: "உங்களில் இறந்தவர்களுக்கு அழகான முறையில் கபன் அணிவியுங்கள். ஏனெனில் அவர்கள் அந்த கபன்களை வைத்து (தங்களுக்கிடையில்) பெருமை பாராட்டி கொள்கிறார்கள். மேலும் அவர்களில் ஒருவருக்கொருவர் தங்களின் கபுருகளில் சந்தித்துக் கொள்கிறார்கள்"


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு)

நூல்: அல்மிர்காத் பாகம் 4 பக்கம் 120 மிஷ்காத் பாபு ஙஸ்லில் மையித்தி வ தக்பீனிஹீ ஹ.எ 1636 ன் விளக்கவுரை, ஸுபுலுஸ் ஸலாம் பாகம் 2 பக்கம் 197 புலூஙுல் மராம் ஹ.எ 513க்குரிய விளக்கவுரை

ஆகவே நபிமார்களும், ஸூஹதாக்களும், அவ்லியாக்களும் மரணிப்பதில்லை, திருமறை விளக்கம் 'பீ ஸபீலில்லாஹ்’ அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்பட்டு உயிர் இழந்தவர்கள் மரணித்து விட்டார்கள் என்று கருதிவிடாதீர்கள் என்று கூறப்பட்ட திருமறை வசனத்தின் மூலம் புனிதப்போரில் உயிர் துறந்த உத்தமர்கள் ஷுஹதாக்கல் ஆவார்கள் அவர்களுக்கு இவ்வுலகில் மவ்த் மரணம் பேரளவில் மட்டும்தான் ஏற்படுகிறது ஆயினும் அவர்கள் ஹகீகத் எனும் எதார்த்தத்தில் உண்மையில் மரணிப்பதில்லை. அவர்கள் எங்கு இருந்தாலும் உயிரோடுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது மேலும் பல்வேறு அருட்களும் அவர்களுக்கு கிடைக்கின்றன. அதனால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தவர்களாய் இருக்கிறார்கள் என்ற உண்மையான தத்துவங்கள் கிடைக்கின்றன.


​​

♣ மரணித்த பின்பும் இறை நேசர்கள் கப்ருகளில் ஹயாத்தாக உயிருடன் இருக்கிறார்கள்

இஸ்லாத்தின் எதிரிகளான காபிர்களுடன் போராடி அவர்களின் வாட்களால் வெட்டப்பட்ட ஷஹீதுகள் கப்ரில் ஹயாத்துடன் இருப்பது போலவே தன் மனதுடன் போரிட்டு அதைவெட்டி வீழ்த்தி, "மரணத்திற்கு முன்பே மரணமாகிக் கொள்ளுங்கள்." (நூல் ஹத்யா ஷரீப் பக்கம் 38) மற்றும், "மரணத்திற்கு முன்பே தவ்பாச் செய்து கொள்ளுங்கள்." (நூல் இப்னு மாஜா 1081) என்ற நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வாக்குகளை மெய்ப்பித்து தம்மை இறைவனில் அழித்துக் கொண்ட அவ்லியாக்களும் கப்ருகளில் ஹயாத்தாக இருக்கிறார்கள்.

காரணம் என்னவென்றால், "ஒருவனுக்கு அவன் நப்ஸுதான் பெரிய விரோதி" (நூல் நபஸுர் ரஹ்மான் பக்கம் 208) என்றும், "(அந்த) நப்ஸுடன் போராடுபவன்தான் உண்மையான வீரன்" (நூல் ஜாமிஉஸ் 9178, மிஷ்காத்) என்றும் கூறியதுடன் இதையே "ஜிஹாதுல் அக்பர் (பெரிய யுத்தம்)" என்றும் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிலாகித்து சொல்லியிருக்கிறார்கள்.


​​நூல்: இஹ்யாஃ பாகம் 3 பக்கம் 7,66

பத்ர் யுத்தம் இஸ்லாமிய வரலாற்றிலே மிக பிரபலமானதும் பெரிய யுத்தமும் ஆகும். இப்படியான பெரியதோர் யுத்தத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பும் போதுநபிகள் நபிகள் நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நாம் சிறிய யுத்தத்தில் இருந்து பெரிய யுத்தம் அளவில் மீண்டிருக்கிறோம் என்று சொன்னார்கள். சஹாபாக்கள் அதிர்ச்சியுடன் நாயகமே எத்தனை உயிர் தியாகம். எவ்வளவு பெரிய யுத்தம் இதை முடித்து நாம் திரும்பிக் கொண்டிருக்கிறோம் அப்படி இருக்க யாரஸூலல்லாஹ்! சிறிய யுத்தம் என்று சொல்கின்றீர்கள் என கேட்க, பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள். வாளேந்தி போராடுவது பெரிய யுத்தமல்ல தனது நப்ஸ் என்ற மனோ இச்சையுடன் போராடுவதே பெரிய யுத்தம் என்று சொன்னார்கள்.


​​இந்த ஹதீஸில் போர்களத்தில் வால் ஏந்தி காபீர்களுடன் யுத்தம் செய்வது சிறிய யுத்தம் என்றும் ஒருவர் தனது நப்சுடன் போரிடுவது பெரிய யுத்தம் என்றும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

சிறிய யுத்தத்தில் உயிர் துறந்தவர் ஷஹீத் ஆகிவிடுகிறார் என்றால் பெரிய யுத்தம் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களால் வருணிக்கப்பட்ட நப்சுடனான போரில் உயிர் துறந்த ஒருவர் ஷஹீதாகி விடுவார் என்பதில் வியப்பொன்றும் இல்லை. ‘நுபுவ்வத்’ நபித்துவம் என்ற பதவி நபிமாருக்கும், ‘விலாயத்’ வலித்தனம் என்ற பதவி அவ்லியாக்களுக்கும் கிடைப்பதனால் அப்பதவியைப் பெறுபவர் நப்ஸுடன் போராடி வெற்றி பெற்றவராக இருத்தல் வேண்டும். உயர் பதவிக்கு தகுதியற்றவருக்கு அப்பதவியை வழங்குவது நியாயமற்றது ஹக்தாஆலா நியாயமில்லாத வேலை செய்ய மாட்டான் உலகில் தோன்றிய எல்லா நபிமார்களும் வலிமார்களும் ஜிஹாத் அக்பர் என்னும் பெரிய யுத்தம் செய்தவர்களேதான். அவ்யுத்தத்தில் போராடி வெற்றி பெறாதவர் நபியாகவோ வலியாகவோ இருக்க முடியாது.

எனவே மேலே கூறப்பட்ட ஹதீஸின் மூலம் நப்சுடன் போராடிய அனைவரும் பெரிய யுத்தம் செய்த ஷஹீதுகளேயாவார்கள். சிறியபோரில் உயிர் துறந்தவர் மரணித்த பின்னும் உயிரோடு இருக்கிறார் என்றால் நப்ஸுடன் போராடிப் பெரிய யுத்தம் செய்தவர் உயிருடன் இருப்பது நிச்சயமானதாகும். வாளேந்தி காபீர்களுடன் சமர் செய்வது சிறிய ஜிஹாத் யுத்தம் என்றும் நப்சுடன் போராடுவது பெயரிய யுத்தம் என்றும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதன் இரகசியம் என்னவெனில் திருக்கலிமாவை ஏற்றுக் கொள்ளாத காபிரீன்களுடன் வாலேந்திப் போரிடுவது மிகச் சுலபம்.

ஏனெனில் காபீர் தன்னை விட்டும் வேறானவனேயல்லாமல் தன்னிலிருப்பவன் அல்லன். நப்ஸு என்பது தன்னிலேயே அமைந்த ஒன்றாகும். மேலும் காபிர் சடமுள்ளவனாகும் நப்ஸ் என்பது சடமுள்ளதல்ல ஆகையால் தன்னை விட்டும் வேறான ஒருவனையும், சடமுள்ளவனையும் வெட்டிக் கொன்றுவிடுதல் தன்னிலுள்ளதையும், சடமில்லாததையும் வெட்டிக் கொல்வதைவிடச் சுலபமானதேயாகும்.

ஆகவே காபிர்களுடன் வாளேந்திப் போரிடுதல் என்ற சிறிய போரில் மரணித்து ஷஹீதானவர்கள் ஹயாத்துடன் இருக்கிறார்கள் என்று கூறும்போது மனதுடன் போராடுதல் என்ற பெரியபோரில் ஷஹீதானவர்களான இறை நேசச் செம்மல்கள் ஹயாத்துடன் இருந்து வருகிறார்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.


​​

♣ நபிமார்கள், ஸூஹதாக்கள், வலிமார்களின் உடலை மண் அரிக்காது

♦ ஹழ்ரத் உஜைர் நபி (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் மரணித்து நூறு வருடங்கள் வரை அப்படியே இருந்தார்கள். (அல்குர்ஆன் 2:259)

♦ ஹழ்ரத் யூனுஸ் நபி (அலைஹிஸ் ஸலாம்) அவர்களை மீன்விழுங்கிய பின்பும் சில காலம் வரை மீன் வயிற்றில் அப்படியே இருந்தார்கள். (அல்குர்ஆன் 37:142,143,144)

♦கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: நபிமார்கள் கப்ரில் ஹயாத்துடன் இருந்து வருகிறார்கள். அவர்களுடைய உடம்பை மண் தின்னாது. அவர்களுக்கு கப்ரில் சுவர்க்க உணவுகளும் வழங்கப்படுகிறது.


​​நூல்கள்: அபூதாவுத், நஸாயி, இப்னுமாஜா, தாரமி, பைஹகி, மிஷ்காத்

♦ நிச்சயமாக நபிமார்கள் மேனிகளை மண் தின்னாது. சிங்கம் புலி போன்றவைகளும் சாப்பிடாது.

​நூல்: அல்கஸாஇஸூல் குப்ரா பாகம் 2 பக்கம் 280

♦ வலீத் பின் அப்தில் மலிக்கின் ஆட்சி காலத்தில் போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட அறையின் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. அதை புனர் நிர்மாணம் செய்வதில் மக்கள் ஈடுபட்ட போது ஒரு பாதம் வெளியில் தெரிந்தது. உடனே மக்கள் பதறி போய் அது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் பாதமாக இருக்குமோ என நினைத்தனர். இது பற்றி தெரிந்தவர்கள் யாருமில்லாதிருந்த சமயத்தில் நான், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் பாதமே இல்லை. மாறாக இது உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பாதமாகும்" என்றேன்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் உர்வா ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: புகாரி 1390

♦ அமீருல் முஃமினீன் ஸெய்யிதுனா உமர் பாரூக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களது ஆட்சி காலத்தில் துஸ்தர் கோட்டை பிடிபட்டது. அங்கு ஹுர்முஜானுடைய இல்லத்தில் ஹழ்ரத் தானியால் அலைஹிஸ் ஸலாம் அவர்களது திரேகம் அழியாமல் வைக்கப்பெற்றிருந்த பெட்டகம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தத்திரேகத்தில் உள்ள நரம்புகள் அனைத்தும் இரத்த ஓட்டம் உள்ளதாயிருந்ததுடன் அந்தச் சங்கையான சடலம் பல நூற்றாண்டுகளாக எவ்வித பேதமுமின்றி அப்படியே இருந்தது.


​​நூல்: அல்பிதாயா வன்னிஹாயா பாகாம் 2 பக்கம் 41

♦ ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். உஹதுப்போர் நடக்கவிருந்தபோது என்னுடைய தந்தை அன்றிரவு என்னை அழைத்து, “நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் சகாக்களில் (நாளை போரில்) முதலில் நானே கொல்லப்படுவேன் எனக் கருதுகிறேன். மேலும் எனக்குப் பின் நான்விட்டுச் செல்பவர்களில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைத் தவிர மற்றவர்களில் உன்னைத் தவிர வேறு யாரையும் நான் மதிப்பிற்குரியவராகக் கருதவில்லை. என் மீது கடன் உள்ளது. அதை நீ அடைப்பதுடன் உன்னுடைய சகோதரிகளிடம் நல்ல முறையில் நடந்து கொள்” என்றார்.

மறுநாள் (போரில்) அவர்தான் முதலில் கொல்லப்பட்டார். அவருடன் இன்னொருவரும் அடக்கம் செய்யப்பட்டார். இன்னொருவருடன் அவரை கப்ரில் விட்டுவைப்பதை என்னுடைய மனம் விரும்பவில்லை. எனவே, (அடக்கப்பட்ட) ஆறு மாதங்களுக்குப் பின்பு அவரின் உடலை நான் கப்ரிலிருந்து வெளியிலெடுத்தேன். அப்போது அன்றுதான் சற்று முன்னர் அடக்கம் செய்யப்பட்டவர் போன்று அவரின் காதைத் தவிர உடம்பு அப்படியே இருந்தது.


​​நூல்: புகாரி 1351


​​

♣  ரஸூல்மார்களும் நபிமார்களும் கப்ருகளில் ஹயாத்தாக உயிருடன் இருந்து கொண்டு தொழுகிறார்கள்

♦ "ரஸூல்மார்களும் நபிமார்களும் தாங்களின் கப்ரறைகளில் தொழுது கொண்டிருக்கிறார்கள்." என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.


​​நூல்: ஜாமிஉஸ் ஸகீர் 3089

♦"நான் நபிமார்களின் கூட்டத்தில் இருக்கக் கண்டேன். அந்நேரம் இப்ராஹீம் நபி (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் நின்று தொழுது கொண்டிருந்தார்கள்." என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.


​​நூல்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 96 கிதாபுல் ஈமான்

♦ "நான் மிஃராஜ் சென்ற இரவில் கதீபுல் அஹ்மர் என்ற இடத்தில் நல்லடக்கமாகி இருக்கின்ற மூஸா (அலைஹிஸ் ஸலாம்) அவர்களின் கப்ருக்கருகே சென்றேன். அப்போது அவர்கள் தமது கப்ருக்குள்ளே தொழுது கொண்டிருப்பதைப் பார்த்தேன்." என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.


​​நூல்: முஸ்லிம் பாகம் 2 பக்கம் 268

♦ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: நான் நபிமார்களின் கூட்டத்தில் இருக்கக் கண்டேன். அந்நேரம் இப்ராஹீம் நபியவர்கள் நின்று தொழுது கொண்டிருந்தார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: முஸ்லிம் 1 – 96

♦ இமாம் நவவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் மேலே உள்ள இந்த ஹதீஸுக்கு விளக்கம் கூறுகையில், "ஷுஹதாக்களே ஹயாத்துடன் இருந்து வருகிறார்கள் என்றும் அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது என்று குர்ஆன் ஷரீப் கூறும் போது அவர்களைவிட பன் மடங்கு ஏற்புடையவர்களான நபிமார்கள் தாங்களுடைய கப்ருகளில் ஹயாத்துடன் இருக்கிறார்கள் என்றும் தொழுகை ஹஜ் போன்ற கிரியைகளை நடத்தி வருகிறார்கள் என்றும் கூறுவது தூரமான ஒன்றல்ல." என்று கூறுகிறார்கள்.


​​நூல்: ஷரஹ் முஸ்லிம் பாகம் 1 பக்கம் 94, அத்தஅம்முல் 251

ஆகவே நபிமார்கள் இவ்வுலக வாழ்வை விட்டு மறைந்த பின்பும் ஜீவியத்துடன் இருந்து வருகிறார்கள் என்பதற்கு மிஃராஜ் இரவில் நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்து நபிமார்களையும் சந்தித்தும் அவர்கள் அனைவருக்கும் இமாமாக நின்று தொழவைத்ததும் போதுமான ஆதாரமாகும்.


​​

♣ நல்லடியார்கள் கப்ருகளில் ஹயாத்தாக உயிருடன் இருந்து கொண்டு குர்ஆன் ஓதுகிறார்கள்

ஸஹாபாப்பெருமக்களில் ஒருவர் ஒரு கப்ரின் மீது அது கப்ரு என்று அறியாமல் கூடாரம் அமைத்துவிட்டார். கப்ருக்குள் ஒரு மனிதர் ஸூரத்து முல்க் (தபாரக்கல்லதீ) ஒதிகொண்டிருக்கும் விஷயத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அறிவித்த போது ஸூரத்துல் முல்க் அல்லாஹ்வின் வேதனையை விட்டும் மனிதனைக் காப்பாற்றக்கூடியது என்று கூறினார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: திர்மிதீ 2815, மிஷ்காத்


​​

♣ நல்லடியார்கள் கப்ருகளில் ஹயாத்தாக உயிருடன் இருந்து கொண்டு நம் செயல்களைப் பார்க்கிறார்கள்

முஃமீன்களே அமல் செய்யுங்கள். ஏனெனில் உங்களுடைய செயல்களை அல்லாஹ்வும் அவனுடைய ரஸூலும் முஃமீன்களும் பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள்.மேலும், இரகசியங்களையும், பரகசிங்களையும் அறியும் இறைவனிடத்தில் நீங்கள் மீட்டப்படுவீர்கள் - அப்பொழுது, அவன் நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு அறிவிப்பான்” என்று நபியே நீங்கள் அவர்களிடம் கூறுங்கள். (அல்குர்ஆன் : 9:105)

♦ இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களையும், என் தந்தையார் அவர்களையும், ஸியாரத் செய்வதற்காக செல்வேன். சாதாரணமாக உடை அணிந்த நிலையில். (மற்றவர்களிடம்) அங்கிருப்பது என் கணவரும் என் தந்தையும்தான் என்பேன். ஆனால், அங்கே உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட பிறகு, அல்லாஹ்வின் மீதாணையாக! என் ஆடைகளை நன்றாக அணிந்த வண்ணமே செல்வேன். உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வெட்கப்பட்டதின் காரணமாக.


​​அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா

​நூல்: அஹ்மத் 24480


​​

♣ நல்லடியார்கள் கப்ருகளில் ஹயாத்தாக உயிருடன் இருந்து கொண்டு செவியேற்கின்றார்கள்

ஹழ்ரத் கஃபு (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் மரணத்தறுவாயில் இருந்தபோது உம்மு பிஷ்ரு (ரலியல்லாஹு அன்ஹு) என்ற பெண்மணி (கஃபு ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அருகே இருந்து கொண்டு) அப்துர் ரஹ்மானின் தந்தை அவர்களே! (தாங்கள் மரணித்து கபுரில் அடக்கம் செய்யப்பட பின்) இன்ன ஆளை சந்தித்தால் குறிப்பாக அவருக்கு எனது ஸலாமைச் சொல்லுங்கள் என்று கூறினார்கள்.


​​நூல்: இப்னுமாஜா 1449, மிஷ்காத் 1631

♦ நான் ஸைய்யதுனா ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் சமூகத்திற்கு சென்றேன். அப்போது அவர்கள் மரணத் தறுவாயில் இருந்தார்கள். நான் அவர்களிடம், கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களுக்கு எனது ஸலாமைச் சொல்லி விடுங்கள் என்று கூறினேன்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் முஹம்மது இப்னுல் முன்கதிர் ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: மிஷ்காத் 1633, இப்னுமாஜா 1450


​​

♣ மரணித்தவர்களுக்கு கேட்கும் சக்தி உண்டு

பயங்கரமான இடிசப்தத்தால் இறந்து போன நபர்களிடம் ஸாலிஹ் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்கள் பேசிய செய்தி அல்குர்ஆனில் பின்வருமாறு எனவே, (முன்னர் எச்சரிக்கப்பட்டவாறு) அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது; அதனால் அவர்கள் (காலையில்) தம் வீடுகளிலேயே இறந்தழிந்து கிடந்தனர். அப்பொழுது, (ஸாலிஹ்) அவர்களை விட்டு விலகிக்கொண்டார்; மேலும் “என்னுடைய சமூகத்தாரே! மெய்யாகவே நான் உங்களுக்கு என் இறைவனுடைய தூதை எடுத்துக் கூறி, “உங்களுக்கு நற்போதனையும் செய்தேன்; ஆனால் நீங்கள் நற்போதனையாளர்களை நேசிப்பவர்களாக இல்லை” என்று கூறினார். (அல்குர்ஆன் : 7: 78,79)

♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள் : ஒரு மனிதனின் உடலை கப்ரில் அடக்கம் செய்து விட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும் போது அவர்களின் செருப்பின் ஓசையை கூட மய்யித் கேட்கும்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: புகாரி 1338, முஸ்லிம் 5115

♦ “பத்று“ப் போரில் சுமார் 70 “காபிர்”கள் கொல்லப்பட்டனர். அவர்களில் 24 பேர்கள் குறைஷித் தலைவர்களாக இருந்தனர். நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், அவர்களின் உடல்களை மட்டும் ஒரு பாழுங் கிணற்றில் அசுத்தமானதும், அசுத்தப்படுத்தக் கூடியதுமான (கற்களால் உட்சுவர் எடுக்கப்பட்ட) கிணறு ஒன்றில் தூக்கிப் போடுமாறு உத்தரவிட்டார்கள்.

பின்னர் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் (24 பிரேதங்களையும்) நோக்கி (அந்தக் கிணற்றில் கிடந்தவர்களைப் பார்த்து) இன்னான் மகன் இன்னானே! இன்னான் மகன் இன்னானே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் (இப்போது அது) உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தானே! ஏனெனில், எங்களுடைய இரட்சகன் எங்களுக்கு வாக்களித்த (நன்மை)தனை உண்மையானதே என்று நாங்கள் கண்டு கொண்டோம். உங்களுக்கு உங்களுடைய இரட்சகன் வாக்களித்த (தண்டனை)தனை உண்மையானது தான் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?” என்று கூறினார்கள்.

உடனே (அருகிலிருந்த) உமர் (ரலியல்லாஹு அன்ஹு), ”இறைத்தூதர் அவர்களே! உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ”என்னுடைய உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! அவர்களை விட நீங்கள் அதிகம் செவியேற்பவர்களல்லர், ஆயினும் அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள்’ எனக் கூறினார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: புகாரி 1370, 3976

மேற்கண்ட நபி மொழி வேறு பல ஹதீதுக் கிரந்தங்களிலும் வந்துள்ளது. அவற்றில் சில அறிவிப்புகளில் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், அவர்கள் மரணித்து மூன்று நாட்களின் பின் அவர்களை அழைக்கின்றீர்களே! அவர்களுக்கு கேட்குமா? (மரணித்தவர்களுக்குக் கேட்கச் செய்ய முடியாதென்று அல்லாஹ் சொல்லியிருக்கின்றானே? என்று சொன்னார்கள்.)

அதற்கு நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் முஹம்மதுடைய உயிர் எவன் கையில் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக நான் சொல்வதை நீங்கள் கேட்பதை விட அவர்களே நன்றாகக் கேட்கின்றனர். ஆயினும் அவர்கள் பதில் கூற மாட்டார்கள்.


​​நூல் – பத்ஹுல்பாரீ,பக்கம் – 346 மேற்கண்ட பலம் வாய்ந்த நபி மொழி மூலம் உயிரோடிருப்பவர்களின் அழைப்பை மரணித்தவர்கள் கேட்கின்றார்கள். விளங்கியும் கொள்கிறார்கள் என்ற உண்மை தெளிவாகின்றது.


​​

♣ மைய்யித்திற்கு பேசும் சக்தி உண்டு

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள் : ஒரு ஜனாஸா (சந்தூக்கில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும் போது அது நல் அமல்கள் செய்த மைய்யித்தாக இருந்தால் “என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள் என்று கூறும்”. அது நற்செயல்கள் செய்யாத (மைய்யித்) தாக இருந்தால் “கை சேதமே என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்” என்று கூறும். இந்த சப்தத்தை மனிதனைத் தவிரவுள்ள அனைத்தும் செவிமடுக்கும். மனிதன் செவிமெடுத்தால் மயங்கி விழுந்து விடுவான்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூசயீதுல்குத்ரீ ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: புகாரி 1316

ஆகவே நபிமார்கள், ஷூஹதாக்கள், வலிமார்கள் இவ்வுலக வாழ்வை விட்டு மறைந்த பின்பும் ஜீவியத்துடன் இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு இவ்வுலகில் மவ்த் மரணம் பேரளவில் மட்டும்தான் ஏற்படுகிறது ஆயினும் அவர்கள் ஹகீகத் எனும் எதார்த்தத்தில் உண்மையில் மரணிப்பதில்லை. அவர்கள் எங்கு இருந்தாலும் உயிரோடுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது, கப்ரில் தொழுகிறார்கள், இபாதத் செய்கிறார்கள். மேலும் பல்வேறு அருட்களும் அவர்களுக்கு கிடைக்கின்றன. அதனால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தவர்களாக இறை நேசச் செம்மல்கள் கப்ரில் ஹயாத்துடன் இருந்து வருகிறார்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.