MAIL OF ISLAM

Knowledge & Wisdom



மரணித்து கப்றில் அடங்கப்பட்டுள்ள  நல்லடியார்களை

​அவ்லியாக்கள் என அறிந்து கொள்வது எப்படி?


​ஆக்கம் - எம்.ஆர்.லுதுபுள்ளாஹ், ஆசிரியர் ALMAS (இலங்கை)


​உலகில் தமது மார்க்க அழைப்பு பணியை பூர்த்தி செய்த பின்னர் அல்லாஹ் இந்த இறை நேசச்செல்வர்களை தாருல் பனாவில் இருந்து தாருல் பகா எனக்கூடிய மறுமை வாழ்விற்காக அல்லாஹ் இவர்களை வரவழைத்துக் கொண்டான். அதாவது அவர்கள் இவ்வுலகை விட்டும் பிரிந்து இறையடி எய்தினார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


​​இப்படியாக வபாத்தாகிய அவ்லியாக்களை அவர்கள் வாங்கிய பூமியிலே அல்லது அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட காணியிலே எல்லோரும் ஏகோபித்த இணக்கத்துடன் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

இவ்வாறு நல்லடக்கம் செய்துவிட்டு அந்த நல்லடியாரின் சிறப்புக்களையும், அவர் வாழும்போது தீனுக்காக செய்த சேவைகளையும், மக்களை நல்வழிப்படுத்திய முறைகளையும், அவரால் நிகழ்த்தப்பட்ட அற்புதங்களையும் பின் வரக்கூடிய சமூகம், பரம்பரையினர் அறிந்து வைக்க வேண்டும்.


​இப்படி தீன் பணிசெய்து தாம் வாழும் ஊரை முஸ்லிம் கிராமமாக மாற்றியமைக்கும் அவ்வப்பிரதேசங்களில் பள்ளிவாசல் அமைக்கப்படுவதற்கும் காரணமாக இருந்த இந்த அவ்லியாக்களுக்கு என்றும் நன்றியுபகாரம் செய்ய வேண்டும். அனைத்து மக்களும் இவர்களின் சேவைகளையும், நல்ல விடயங்களையும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இவையணைத்து அம்சங்களையும் நூலுருப்படுத்தினார்கள்.

இவ்வாறு நூலுருப்படுத்திய சரிதைகள் சம்பவங்கள், போன்றன அரபுமொழியில் எழுதப்பட்டு அன்னாரை ஞாபகப்படுத்தும் அதேவேளையில் அவர்களின் புகழ்களை கவிகளாகவும் எழுதி அழகான மெட்டுக்களில் அவை பாடல்களாக படிக்கப்பட்டும் வந்தது. இது போன்ற ஞாபகார்த்த நிகழ்வுகளை எந்நாளும் வைப்பது சாத்தியமில்லை என்று கருதியே இந்த ஞாபகார்த்த நிகழ்வை வருடத்தில் அவர்கள் வபாத்தான நாளில் அல்லது பெரும்பாலும் ரபிய்யுல் ஆகிர் மாதம், அல்லது அவ்வல் ஊரின் விசேட தினம் ஒன்றை தீர்மானித்து அந்த தினத்தில் குறித்த அவ்லியாக்களின் ஞாபகார்த்த நிகழ்வுகள் இடம்பெற்று வருவதை பரவலாக காணமுடியும்.

இப்படியாக அங்கே அடக்கம் செய்யப்பட்டவர்கள் நல்லவர்கள் அல்லாஹ்வின் இறைநேசர்கள் என அவ்வூரில் உள்ள அனைவருக்கும் தெரியும், அதே போல் அன்னாரைப்பற்றி தெரியாதவர்கள் வருடா வருடம் அன்னாரின் ஞாபகார்த்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதன் மூலம் அங்கே அடக்கம் செய்யப்பட்டவர்களின் சிறப்புக்களையும், அவர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக செய்த சேவைகளையும் அறிந்து கொள்ள முடிகிறது.

வெளியூர்களில் இருப்பவர்கள் இவர்களின் சிறப்புக்கள் அடங்கியுள்ள சரிதை நூற்களையும், (மெளலித், மனாகிப்) நூற்களை வாங்கி படிப்பதன் மூலம் அன்னாருடைய சிறப்புக்களை அறிந்து கொள்கின்றனர்.

இலங்கையில் அவ்வவ் அவ்லியாக்கள் ஞாபகார்த்தபடும் போது அன்றைய தின நாளேடுகளில் குறித்த அவ்லியாவின் சிறப்புக்களையும், அவர் வாழும்போது செய்த சேவைகளையும் தொகுத்து சிறப்புக்கட்டுரைகளாகவும் வெளியிடப்படுகின்றது. இதன் மூலம் முழு நாட்டு மக்களுமே அந்த ஊரில் அடங்கியுள்ள அவ்லியா நல்லவர் அவர் அல்லாஹ்வின் இறைநேசர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

வெளியூர்களில் இருந்து ஒன்றுமே அறியாத ஒருவர் அந்த தர்காவுக்கு வந்தால் அந்த தர்காவின் அருகே அந்த அவ்லியாவின் பெயர் விபரம், அவர் வபாத்தான ஆண்டு அந்த கட்டிடம் கட்டப்பட்ட ஆண்டு அவர்கள் பிறந்த இடம் போன்ற வரலாற்றுத் தகவல்களை கல்வெட்டுக்களில் பொறித்து வைத்துள்ளதால் இந்த தகவல்களைப் பார்த்து அறிந்து கொள்ள முடிகிறது.

அப்படியும் இல்லை என்றால் தர்காவின் பராமரிப்பு செய்பவரிடம் அல்லது தர்காவுக்கு அன்மையில் இருப்பவர்களிடம் கேட்டறிவது கொண்டும். அந்த கப்றில் இருக்கும் மனிதர் ஓர் அவ்லியா இறைநேசர் என்பதை தெட்டத்தெளிவாகவே அறிந்து அவர்கள் மூலம் வஸீலா தேடமுடியும் என்பதை வாலிப நெஞ்சங்கள் நன்கு விளங்கியிருப்பீர்கள் என்பது திண்ணமே.

ஆகவே வஹ்ஹாபிகள் ஸியார வழிமுறைகளை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள அவ்லியாக்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என தெரியுமா? எனக்கேள்வி கேட்பது இந்த விடயத்தை மக்கள் மத்தியில் நியாயம் போல் காட்டி மக்களின் நம்பிக்கையை அப்படியே குழிதோண்டிப் புதைத்து வஹ்ஹாபிகளின் வாதத்தை உண்மைப்படுத்த வைக்கும் நொண்டிச்சாட்டுக்களேயன்றி அவர்களின் வாதத்தில் எவ்வித உண்மையும் இல்லை என்பதை தெரிவித்துகொள்ள விரும்புகிறேன்.

எனவே வலிமார்களை உயிருடன் இருக்கும் போதும் மரணித்த பின் கப்ரில் அடக்கப்பட்டுள்ள போதும் அவர்கள் நல்லவர்களே என்று அறிந்து அவர்களின் மூலம் வஸீலா தேடி அல்லாஹ்வின் நற்பாக்கியங்களையும் அருள்களையும் பெற்றுக்கொள்ள வல்லவன் அல்லாஹ் நம்மனைவருக்கும் தெளபீக் செய்வானாகவும் ஆமீன்.​​