MAIL OF ISLAM

Knowledge & Wisdom



நபிகள் நாயகத்தின் அழகிய முன்மாதிரிகள்


​ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்​  


எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


உயிருக்கு உயிரான உயிரிலும் மேலான ஏந்தல் நபிகள் நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழகிய முன்மாதிரிகள்.

அன்றைய (ஜாஹிலியா) அறியாமை இருள் நிறைந்த காலகட்டத்தில் அந்த இருளை நீக்கி இறுதி இறைதூதராக நம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வருகை தந்தார்கள்.


​​நபி (ஸல்லல்லாஹு அலைஹி  வஸல்லம்) அவர்களின் அழகிய போதனைகள் நிறைந்த வாழ்க்கையானது அறியாமை இருளை அழகிய வாழ்க்கை முறையை மக்களுக்கு தந்ததோடு, இன்றும் அந்த வாழ்க்கை முறையை பின்பற்றி நடக்கும் அறிய வாய்ப்பை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மூலம் அல்லாஹ் நமக்கு தந்ததோடு அல்லாமல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அழகிய முன்மாதிரிகளை, நற்குணங்களைத் தன் திருமறையிலும் நமக்கு அறிவித்து கொடுத்துள்ளான்.

♦ இறைவன் தன் இறைத்தூதர் மூலம் ஒழுக்கத்தின் இலக்கணங்களை வகுத்துத் தந்தான். அதன்படி அவர்களை வாழச் செய்தான். ஒழுக்கத்தின் சிகரமாய் வாழ்ந்த அண்ணல் நபிகளார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை நமக்கு அழகிய முன்மாதிரியாய் ஆக்கித் தந்தான். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கையில் அழகான முன்மாதிரி எல்லாத் துறைகளிலும் எல்லா மனிதர்களுக்கும் இருக்கின்றது என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்கின்றோம். 'அல்லாஹ்வின் தூதரில் திட்டமாக உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21)

சற்று சிந்தித்து பாருங்கள் நம்பிக்கை கொண்டவர்களே!  அழகிய முன்மாதிரி என்று இறைவனே சொல்லக்கூடிய அளவிற்கு நம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இருக்க நம்மில் சிலர் தனக்கு முன்மாதிரி என்று சில நடிகர், நடிகைகளையும் வேறு சிலரையும் கூறிக்கொண்டு நரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். நவூது பில்லாஹி மின்ஹா(அல்லாஹ் அதிலிருந்து நம்மை காப்பானாக)

நீர் மகத்தான நற்குணத்தில் இருக்கின்றீர். (அல்குர்ஆன்: 68:4) அல்லாஹ்வே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை திருமறையில் புகழ்ந்து கூறுகின்ற அளவிற்கு பல அழகிய நற்குணங்கள் நிறைந்த நம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களே உலகத்திற்கெல்லாம் சிறந்த முன்மாதிரி என்று உணர்ந்து அவர்களின் நற்குணங்களை தம் வாழ்வில் செயல்படுத்திட வேண்டும்.

♦ நபித்துவத்தினை பிரகடனம் (பகிரங்கப்படுத்தும்) முன்பும் சரி, பின்பும் சரி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அழகிய நற்குணங்கள் நிறைந்தவர்களாக  இருந்ததோடு, நமக்கு இறைவன் கூறுவது போல் முன்மாதிரியாகவும் விளங்குகிறார்கள். நபிகள் பெருமானார் (ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “நல்ல ஒழுக்கங்களைப் பரிபூரணமாக்குவதற்காகவே நான் அனுப்பப்பட்டேன்.” (நூல் : முஅத்தா)


♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஜாஹிலிய்யா மக்கள் வாழ்ந்த காலத்தில் (அறியாமை காலத்தில்) முரண் பிடித்துப் பேசியதுமில்லை, சண்டையிட்டதும் இல்லை என்று அவர்களின் அறியாமைக் கால நண்பர் ஸாயிப் இப்னு அபீ ஸாயிப் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்.


​​நூல்: அஹ்மத் 14956 

♦ எத்தனை சொத்துக்கள், செல்வங்கள் பல இருந்தாலும் இன்னும் வேண்டும் என்று பேராசைப்படும் மக்கள் வாழும் இவ்வுலகத்தில் இருப்பதையெல்லாம் நற்காரியங்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நமக்கெல்லாம் முன்மாதிரியா திகழ்ந்தார்கள். இதனால் வறுமை ஏற்பட்டு விடுமோ என்று அவர்கள் அஞ்சியதில்லை அதற்கு சான்றாக ஒரு ஹதிஸின் சுருக்கம் பின் வருமாறு: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தொடர்ந்து வீசும் மழைக் காற்றை விட அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: புகாரி 6

♦ உணர்வுக்கு மதிப்பளித்து சிறியவராக இருந்தாலும் பெரியவராக  இருந்தாலும் அவர்களுக்கும் சில ஆசைகள் இருக்கும். அது மார்க்கத்திற்கு முரணாக இல்லாத போது அதை நிறைவேற்றி வைப்பது சிறந்த பண்பாகும். இதை நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்து சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள். ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, "நீ பார்க்க ஆசைப்படுகிறாயா?'' எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி) "அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்'' என்று கூறினார்கள். நான் பார்த்துச் சிரித்த போது, "உனக்கு போதுமா?'' என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். "அப்படியானால் (உள்ளே) போ!'' என்று கூறினார்கள்.


​​அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)

நூல்: புகாரி 950

♦ அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் விளையாட்டைப் பார்க்க ஆசைப்பட்ட போது அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தடையாக இருக்கவில்லை. மாறாக ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களுக்காகத் தாமும் பார்த்ததுடன், அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள், போதும்! போதும்! என்று சொல்லும் அளவுக்குத் தோள் கொடுத்து நின்று, பார்க்கச் செய்துள்ளார்கள். இறைத் தூதராக இருந்த நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு எத்தனையோ பணிகள் இருந்த போதும் மனைவியின் ஆசையையும் நிறைவேற்ற வேண்டும் என்று அறிந்து அதற்கும் நேரத்தை ஒதுக்கி முன்மாதிரியாக திகழ்ந்தார்கள்.

நான் (சிறுமியாக இருந்த போது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்த்து) விளையாடுவார்கள்.


​​அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)

​நூல்: புகாரி 6130

♦ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஆடு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்பொழுது உணவுகள் குறைவாக இருந்த காலம். தமது குடும்பத்தாரிடம்  'இந்த ஆட்டை சமையுங்கள்' என்று கூறினார்கள். பெரிய பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அந்த உணவு வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. உணவு கிடைக்காத தோழர்கள் எல்லாம் அழைக்கப்பட்டனர். நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களுடன் அமர்ந்து கொண்டனர். உணவுத் தட்டைச் சுற்றி அனைவரும் அமர்ந்து சாப்பிடலானார்கள். கூட்டம் அதிகமாக இருந்தால் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து மற்றவர்களுக்கு இடம் கொடுத்தார்கள். அப்போது ஒரு கிராமவாசி 'என்ன இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு நபி அவர்கள் 'இறைவன் என்னை அடக்கு முறை செய்பவனாகவும் மமதை பிடித்தவனாகவும் ஆக்கவில்லை. பெருந்தன்மை மிக்க அடியானாகவே ஆக்கியுள்ளான்.என்று விடையளித்தார்.

நூல்: அபுதாவுத் 3773, பைஹகீ 14430

♦ உஹத் போரில் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் முகத்தில் காயம் ஏற்பட்டது. பல் உடைக்கப்பட்டது. அந்நேரத்தில் நபியவர்களே! இந்த எதிரிகள் நாசமாகட்டுமென நீங்கள் பிரார்த்தனை செய்யக் கூடாதா? என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பதிலளித்தார்கள்: சாபமிடுபவனாக நான் அனுப்பப்படவில்லை! நானோ ஓர் அழைப்பாளனாக,அருட்கொடையாகவே அனுப்பப்பட்டிருக்கிறேன். யா அல்லாஹ்! என் கூட்டத்தாருக்கு நேர்வழிகாட்டு! நிச்சயமாக அவர்கள் அறியாத மக்கள் ஆவர்!என பதில் அழித்தார்கள்.

♦ நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (பள்ளிவாசலில் தூணாக இருந்த) ஒரு பேரீச்ச மரத்தின் அடிப்பகுதியின் மீது சாய்ந்தபடி உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் (மிம்பர்) உரைமேடையை அமைத்த பின்னால் அதற்கு மாறிவிட்டார்கள். எனவே, (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தன்னைப் பயன்படுத்தாததால் வருத்தப்பட்டு) அந்த மரம் ஏக்கத்துடன் முனகியது. உடனே,நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அதனிடம் சென்று (அதை அமைதிப்படுத்துவதற்காக) அதன் மீது தன் கையை வைத்து (பரிவுடன்) வருடிக் கொடுத்தார்கள்.


ஹழ்ரத் ​​இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: புகாரி 3583

♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களிடம் எது கேட்கப்பட்டாலும் ஒருபோதும் அவர்கள் இல்லை என்று சொன்னதில்லை என ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறக் கேட்டேன்.


​​ஹழ்ரத் முஹம்மத் பின் முன் கதிர் (ரலியல்லாஹு அன்ஹு

​ஸஹிஹுல் புகாரி 6034

♦ அகழ் யுத்தத்தின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மக்களுடன் சேர்ந்து அகழ் வெட்டினார்கள். மண் சுமந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வயிற்றை மண் மறைத்தது.

நூல்: புகாரி 2837, 3034, 4101

♦ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதினா வந்தவுடன் பள்ளிவாசலைக் கட்டிய போது அவர்களும் மக்களோடு சேர்ந்து கல் சுமந்தார்கள்.


​​நூல்: புகாரி 3906

♦ அனஸ் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்: 'நான் நாயகத்தின் கரத்தை விட பட்டாடையோ, பட்டையோ தொட்டதில்லை. அவர்களின் வாடையை விட உயர்ந்த நறுமணத்தை ஒருபொழுதும் முகர்ந்ததில்லை. அவர்களுக்கு பத்து ஆண்டுகள் நான் பணிவிடை செய்துள்ளேன். அப்போது அவர்கள் என்னை ஒரு போதும் 'சீ' என்று கூறியதில்லை. மேலும் நான் ஏதாவதை செய்துவிட்டால் அதற்கு 'நீ ஏன் செய்தாய்' என்றோ அல்லது நான் ஒன்றை செய்யாது விட்டுவிட்டால் அதற்காக 'நீ இப்படி செய்திருக்கலாமே' என்றோ அவர்கள் ஒரு போதும் என்னிடம் கேட்டதில்லை.

நூல்: புகாரி 6038 , முஸ்லிம்

♦ நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் வாழ்ந்தவர்கள் பெரும்பாலும் நாகரீகம் இல்லாதவர்களாக இருந்தார்கள். அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள் ஒரு கிராமவாசி பள்ளிவாசலினுள் சிறுநீர் கழித்தார். அவரை நோக்கி நபித் தோழர்கள் (வேகத்துடன்) எழுந்தனர். அப்போது இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் ”(அவர் சிறுநீர் கழிப்பதை) இடை மறிக்காதீர்” என்று கூறிவிட்டுப் பிறகு ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வரக் கூறினார்கள். பிறகு (தண்ணீர் கொண்டு வரப்பட்டு) அது சிறுநீர் மீது ஊற்றப்பட்டது.


​​நூல்: புகாரி 6025, முஸ்லிம் 480

ஆகவே இதன் அடிப்படையிலேயே சுருக்கமாக சொல்லப்போனால் அண்ணலார் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பண்புகளும், அழகிய முன்மாதிரிகளும் அமைந்திருந்தன. அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு போதும் இங்கிதம் தவறி நடந்ததில்லை. யாரிடமும் கடினமாக நடந்ததில்லை. தனக்குப் பணிவிடை செய்யும் தோழர்களிடம் அவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் சொற்களை உதிர்த்ததில்லை.


​​பெருமானாரை கண்ட எவரும் அவர்களின் கரம் பற்றி ஸலாம் கொடுத்தால் அவர் தன் கரத்தை எடுக்கும் வரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் கைகளை விலக்கிக் கொண்டதில்லை. மற்றவர் தனது முகத்தைத் திருப்பிக் கொள்ளும் வரை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டதில்லை.


​​சம்மணமிட்டு அமர்ந்தால் அவர்களது கால்கள் மற்றவர்களின் கால்களை விட அதிகமாக நீண்டதில்லை. நபிகளார் தங்களது கரங்களால் யாரையும் அறைந்ததில்லை. தனிப்பட்ட முறையில் அவர்கள் யாரையும் வஞ்சம் தீர்த்ததில்லை. ஆனால் அல்லாஹ்வின் எதிரிகளை அவர்கள் ஒரு போதும் சும்மா விட்டதில்லை. எப்பொழுதும் இன்முகத்துடன் இருப்பார்கள். வீட்டில் இருந்தால் வீட்டு வேலைகளில் உதவி செய்வார்கள். கஞ்சத்தனம் கிஞ்சிற்றும் அவர்களிடம் இருந்ததில்லை. எப்பொழுதும் தாராளத் தன்மையுடன் நடந்து கொண்டார்கள்.

மேலும் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நேர்மையானவர்கள். தைரியமானவர்கள். யாராவது எதையும் கேட்டால் இல்லை என்று அவர்கள் சொன்னதில்லை. இருந்தால் கொடுப்பார்கள். இல்லையெனில் மனநிறைவோடு கேட்டவர் திரும்பிடுமாறு செய்வார்கள்.


​​எப்பொழுதும் யாரைப் பார்த்தாலும் எம்பெருமானார் சிரிப்பார்கள். தோழர்களோடு மிருதுவாகப் பேசுவார்கள். தாரளாமாக கலந்து பழகுவார்கள். குழந்தைகளோடு கனிவுடன் பேசுவார்கள். அவர்களை மடியில் வைத்துக் கொஞ்சுவார்கள். காதுகளில் ரகசியமாக யாரும் பேசினால், அவர் வாயை எடுக்கும் வரை தனது காதை எடுக்க மாட்டார்கள். யாரிடமும் முதன் முதலில் ஸலாம் எனும் முகமன் கூறுவது நபி பெருமானார் (ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம்) அவர்களாகத்தான் இருக்கும்.

அண்ணலார் அவர்களை யார் காண வந்தாலும் தங்களது மேலாடையை விரித்து அதில் அவரை அமரச் செய்வார்கள். தோழர்களை கண்ணியப்படுத்தும் விதத்தில் அழகிய பெயர் சொல்லி அழைப்பார்கள். யாராவது அவர்களிடம் பேசினால் பேசி முடிக்கும் வரை பொறுமையாகக் கேட்பார்கள். இடைமறிக்க மாட்டார்கள். விருந்தினர்களுக்கு பெருமானார் (ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம்) அவர்களே எழுந்து உணவு பரிமாறுவார்கள்.


​யாரிடமும் அவசியமின்றி பேசமாட்டார்கள். குறுநகையே அவர்களது சிரிப்பு. நடக்கும்போது அவர்களது காலடிகள் நிதானமாக இருக்கும். வேகமோ, நடுக்கமா இருக்காது. பேச்சுகள் நிதானமாக இருக்கும் இவ்வாறு நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பண்புகள் அழகிய முன்மாதிரிகளை பட்டியல் போட்டுக்கிட்டே செல்லலாம்.

♦ ஆனால் இன்றைய சமூகத்தில் இவ் அழகிய முன்மாதிரிகளுக்கு எதிர் மாறாகத் தான் நம்மில் அதிகமானோர் நடந்து கொள்கிறார்கள். என்றாலும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையிலுள்ள அந்த முன்மாதிரிகளை பின்பற்ற தவறிவிடுகின்றோம்.


​​அந்த அடிப்படையில் அழகிய முன்மாதிரி என்று இறைவனே சொல்லக்கூடிய அளவிற்கு நம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இருக்க நம்மில் சிலர் தனக்கு முன்மாதிரி என்று சில நடிகர், நடிகைகளையும் வேறு சிலரையும் கூறிக்கொண்டு நரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். நவூது பில்லாஹி மின்ஹா  (அல்லாஹ் அதிலிருந்து நம்மை காப்பானாக)


​​மேலும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கையிலுள்ள முன்மாதிரிகளை எடுத்து நடப்பதற்க்கு எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிவானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்.