MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஊடகங்களை பயன்படுத்துவது பற்றி இஸ்லாம் கூறும் தீர்ப்பு என்ன? 


எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


தொலைக்காட்சி (Tv, Radio, மற்றும் சமுக இணையதளங்களாக Face Book, Whatsapp, Twitter) இதுபோன்றவற்றைப் பற்றி இஸ்லாம் மார்க்கம் கூறும் தீர்வு என்ன?

இஸ்லாம் மார்க்கம் மனிதர்களை நெறிப்படுத்துவதற்காக பல்வேறு சட்டதிட்டங்களையும், வரையறைகளையும் கொண்டு பரிபூரணப்படுத்தப்பட்டுள்ளது. எக்காலத்திற்க்கும் எவ்வகையான நவீன யுகங்களுக்கும் பொருந்தும் விதமாகவே அமைய பெற்றிருக்கின்றது.

அதனடிப்படையில் நாம் தற்காலத்தில் பலவகையன தொழில் நுட்ப சாதனங்களாக (Tv, Radio, Mobile Phone மற்றும் சமுக இணையதளங்களாக Face Book, Whatsapp, Twitter, Skype) இது போன்றவற்றினை எமது வாழ்நாளில் மிகவும் அத்தியாவசியமான விடயங்களாக உபயோகப்படுத்தி வருகின்றோம்.

எந்தளவு என்றால் அனைத்து மக்களையும் எளிதில் சென்றடையக் கூடிய ஒரு தகவல் தொடர்பு "தொழில் நுட்ப சாதனங்கள்" என்று பட்டிமன்றம் வைக்காமல் முடிவு செய்து விடலாம். இவைகள் இன்றி எம்மால் வாழ முடியாது எனும் அளவுக்கும் மக்களோடு மக்களாக இக்கருவிகள் இரண்டறக் கலந்து விட்டது.


​ஆனாலும் முஸ்லிம்களால் உணரப்படாத தீமைகள் என்று பட்டியல் போட்டால் அதில் சினிமா, இதுபோன்ற ஏனைய தொழில் நுட்ப சாதனங்களை தவரான வழியில் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படக்கூடிய காம உணர்வை தூண்டும் காட்சிகள் என்று தொடரலாம்.


​ஆகவே இவ்வாறான தொழில் நுட்ப சாதனங்களைப் பற்றி இஸ்லாம் மார்க்கம் நேரடியாக எவ்வித விலக்கள்களையும், ஏவல்களையும் கூறவில்லை. எனவே இதனடிப்படையில் அத் தொழில்நுட்ப சாதனங்களை பார்ப்பது, பயன்படுத்துவது ஹராமோ - மக்ரூஹோ கிடையாது.

என்றாலும் எவ்வித சந்தேகமுமின்றி சினிமாவும் அதனைப்போன்ற ஊடகங்களும் ஏனைய பொருட்களைப் போன்றே அதன் பயன்பாட்டைப் பொருத்து ஹராமா - மக்ரூஹா அல்லது (முபாஹா) கூடுமா? என தீர்மானிக்கப்படுகின்றது.

அதனை நன்மையான வழியில் பயன்படுத்தினால் எவ்விதப் பிரச்சினையுமில்லை. அதற்கான தீர்ப்பு ஏனைய விடயங்களைப் போன்றே அமையும். ஆனால், அதனை தீய வழியில் பயன்படுத்தினால் அது ஹராமானதாக அமைந்து விடும். எல்லாமே நாம் பயன்படுத்தும் விதத்தினை பொருத்தே அவைகளை பார்ப்பது - பயன்படுத்துவது ஹராம், மக்ரூஹ் என்ற சட்ட விதிக்குள் நுழைகிறது.

அந்த அடிப்படையில் தொலைக்காட்சி பெட்டி (TV) யில் நல்ல விடயங்களும் ஒளிபரப்பப்படும் தீய விடயங்களும் ஒளிபரப்பப்படும். அதேபோல் பேஸ்புக் ஏனைய தொழில் நுட்ப சாதனங்களிலும் பலருக்கும் பகிரப்படும். இவைகளில் நல்ல விடயங்களான அன்றாட செய்திகள் கலந்துரையாடல்கள், பட்டிமன்றங்கள், மருத்துவ குறிப்புக்கள், சமையல் குறிப்புக்கள், இஸ்லாமிய நிகழ்ச்சிகள் குறிப்பாக ரமழான் சிந்தனைகள் போன்ற இன்னும் பல விடயங்களும் ஒளிபரப்பப்படுகின்றது, பகிரப்படுகின்றது.

நிச்சயமாக இது போன்ற விடயங்களுக்கு மார்க்கத்தில் எவ்வித தடையுமில்லை, இவைகளை பார்க்கும் நோக்கில் தொலைக்காட்சியினை, பேஸ்புக் மற்றும் ஏனைய தொழில் நுட்ப சாதனங்களைப் பார்ப்பது - பயன்படுத்துவது (முபாஹ்) ஆகுமாகும்.

ஆனால் தொலைக்காட்சி பெட்டியில், பேஸ்புக் மற்றும் ஏனைய தொழில் நுட்ப சாதனங்களில் ஒளிபரப்பப்படும் தீய விடயங்களான குறிப்பாக நடிப்புத் துறையில் நடைபெறும் அவலங்கள், சினிமா படங்கள், ஆடல்கள், நாடகங்கள், அன்னிய மதத்தினரின் சம்பிரதாய நிகழ்வுகள், ஒழுக்கச் சிதைவுகள், தற்கொலைகள், அதிகமான விவாகரத்துகள், ஆபாசங்கள், காம உணர்வை முக்கால் நிர்வாணத்துடன் நடித்து விரசத்தை தூண்டி பணத்துக்காக எதையும் செய்யும் நடிகைகள், மனிதனை மிருகமாக்கும் குரூர சிந்தனை கொண்ட வசனங்கள், இரட்டை அர்த்தம் கொண்ட ஆபாச வசனங்கள், ஏகத்துவத்துக்கே வேட்டு வைக்கும் பாடல் வரிகள், தீவிரவாத செயல்களுக்கு வழிவகுக்கும் சண்டைக் காட்சிகள், இன்னும் இதுபோன்ற பல விடயங்களும் ஒளிபரப்பப்படுகின்றன.

இதுதான் இன்றைய சினிமாவின் எதார்த்த நிலை என்பதை யாராலும் மறுக்கவும் முடியாது. ஆபாசத்தின் இருப்பிடம் சினிமா. ஆபாசத்தை உற்று நோக்கும் ஒருவனின் கடைசி நிலை கண்டிப்பாக விபச்சாரமாகத்தான் இருக்கும். தொடர்ந்து சினிமா பார்க்கும் ஒருவன் கடைசி வடிகால் விபச்சாரம்.‘விபச்சாரனோ, விபச்சாரியோ முஃமினான நிலையில் இருக்கும்போது விபச்சாரம் செய்வதில்லை’ எனற ஹதிஸை இந்த இடத்தில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

சினிமாவில் நடிப்பவர்கள், மனித சமுதாயம் முழுவதையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இவை போன்ற தீய விடயங்களை பார்க்கும் நோக்கில் தொலைக்காட்சியினை, பேஸ்புக் மற்றும் ஏனைய தொழில் நுட்ப சாதனங்ளைப் பார்ப்பதனையே, பயன்படுத்துவதையோ இஸ்லாம் வன்மையாக கண்டிக்கின்றத. மார்க்கத்தின் விளக்கள்களை மீறியதற்கான தண்டனைக்கும் உள்வாங்கப்படுவார்கள்.

தற்காலத்தில் எமது சமுதாயத்தில் அதிகமானோர்! நல்ல விடயங்களை தவிர்ந்து தீய விடயங்களையே அதிகமாக தொலைக்காட்சி பெட்டி (Tv) யில், பேஸ்புக் மற்றும் ஏனைய தொழில் நுட்ப சாதனங்களில் பார்க்கக்கூடிய, பயன்படுத்தக்கூடிய ஒரு கேவலமான நிலையினை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.

தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லக் கூடியவர் வீட்டில் என்ன நடக்கிறது? மஃரிபுடைய நேரம் வந்ததும் தாய், தந்தை, மகன், மகள், மாமா, மாமி, மச்சான், தம்பி, தங்கை என்று ஒட்டுமொத்த குடும்பமே தொலைக்காட்சி பெட்டி (Tv)க்கு முன் தங்களை அடிமைப்படுத்தியவர்களாக கூத்தாடிகளின் கூத்துக்களையும், பல சந்தர்ப்பங்களில் ஆண், பெண்களின் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் வெளிப்படுத்தப்படும் காட்சிகளையும் குடும்பத்துடன் சேர்த்து பார்க்கின்றனர். தொழுகை நேரம் என்றில்லாமல், சினிமாவை ரசித்துக் கொண்டிருக்கிற காட்சியை பரவலாக காண முடிகிறது (விதிவிலக்காக இருப்பவர்களைத் தவிர்த்து).

கடைசியில் தன் குழந்தை, படத்தில் வருவது போல யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடிய பிறகுதான் பெற்றோர்கள் விழித்துக் கொள்வார்கள். வேதனையான விஷயம் என்னவென்றால், நான் ஏகத்துவத்தில் இருக்கிறேன் என்று சொல்லக்கூடிய எத்தனையோ பேர் சினிமா பார்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.

முக்கியமாக வெளிநாட்டில் வசிப்பவர்கள், வார விடுமுறை நாட்களில் அன்றைய ரிலீஸ் படத்தை பார்த்துவிட்டு, தாமதமாக உறங்கி, ஷைத்தான் காதில் சிறுநீர் கழிப்பதையும் சட்டை செய்யாமல், கொரட்டை விட்டு தூங்கி, பஜ்ர் தொழுகையை கோட்டை விட்டு, நேராக ஜும்ஆ தோழுகைக்கு எழுந்திருப்பவர்கள் நம்மில் எத்தனை பேர்? சிலர் பஜ்ர் தொழுகைக்கு பாங்கு சொல்லும் போது தயாராவதை பார்த்தால் நமக்கே ஆச்சரியமாக இருக்கும்! எதற்காக தொழுகக்காக அல்ல! தூங்குவதற்காக! ‘நிச்சயமாக கண், காது, இதயம் இவைகள், ஒவ்வொன்றும் மறுமையில் விசாரிக்கப்படும்’


(அல்குர்ஆன் 17:36) சினிமவைப் பார்த்து பொழுதை கழிப்பவர்கள் மேற்கண்ட இறைவசனத்தின்படி, மறுமையில் இறைவனிடம் எப்படித்தான் பதில் சொல்லப் போகிறார்களோ!

மேலும் இன்று குழந்தைகள் முதல் கிழவர்கள் வரை, குட்டிகள் முதல் கிழவிகள் வரை அடிமைப்பட்டு கிடக்கும் விஷயம் சினிமா, இந்த சினிமா எனும் மாயையில் நம் முஸ்லிம் சமூகம் அடிமைப்பட்டு சீரழிவதை மிகவும் அதிகமாக காணலாம், அதிலும் நம் பெண்கள் 24 மணித்தியாலமும் T.V, சினிமா, நாடகம் என்பதிலேயே காலத்தையும், நேரத்தையும் கழிப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.

தாயின் மடியே குழந்தையின் முதல் பள்ளிகூடம் என்பார்கள். ஆனால் இன்றோ அது பள்ளிக்கூடம் என்பதை விட சினிமா கூத்து கூடம் என்று சொல்லும் அளவுக்கு நம் இஸ்லாமிய அதிகமான தாய்மார்கள் எப்போதும் தவம் கிடக்கும் இடமாக T.V யும் சினிமாவும் ஆகிவிட்டது.

அல்லாஹ்வை பற்றியும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை பற்றியும் பேச வேண்டிய பள்ளிக்கூடங்கள் இன்று பணத்துக்காக கூத்து போடும் சினிமா நடிக, நடிகைகளை பற்றிய பேச்சில் குடும்பத்தை ஓட்டி கொண்டுள்ளது. இந்த நிலையில் வளரும் இஸ்லாமிய குழந்தைகளிடம் எங்கே மார்க்கம், ஒழுக்கம், பண்புகளை எதிர்பார்ப்பது? தாய்மார்களின் நிலை அப்படி என்றால் இளம் பெண்களின் நிலை? அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும்.

மேலும் 24 மணித்தியாலமும் சினிமா, பாட்டு, கூத்து, நாடகம். இதை தவிர நண்பர்களோடு வட்சப், பேஸ்புக்கில் அரட்டை. எதை பற்றி? அங்கும் சினிமாதான். யாரவது ஒருவர் போடும் சினிமா நடிகனின் போட்டோக்கு கமெண்ட் (COMMENT) பண்ணுவதும், அதை மற்றவருடன் (SHARE) பகிர்ந்து கொள்வதும் என ஒரே கலாட்டா. இன்னொரு படி கீழே இறங்கி, நான் ஒரு முஸ்லிம் என்ற வெட்கம் கூட இல்லாமல் அந்த சினிமா நடிகனின் போட்டோவிலே, “அவள் ரொம்ப அழகா இருக்காள் என்றும் அவளை ரொம்ப பிடிக்கும் என்று” கமெண்ட் வேறு.

இன்னும் சில குமரிகளின் நிலையோ மிக வேதனைக்குரியது. சினிமா மோகத்தில் ஏதாவது ஒரு நடிகையின் விசிறியாக ஆகி அந்த காபிரான நடிகை போல் ஆடை அணிவதும், அலங்காரம் பண்ணுவதுமாக தன் காலத்தை கழிக்கும் அவல நிலை.

மார்க்கத்தை கற்று கொள்ளும் ஆசை துளி அளவும் இல்லை. சொல்லிக் கொடுத்தாலும் ஏற்க மறுக்கும் அலட்சிய போக்கு. பேஸ்புக்கில் சினிமா பற்றி போடும் படத்துக்கு லைக் (LIKE) செய்ய, கமெண்ட் (COMMENT) செய்ய மனசு வரும். அல்லாஹ்வை பற்றியும் ரசூலுல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பற்றியும் போட்டால் ஏறிட்டும் பார்ப்பதில்லை. இவர்கள் எங்கே சென்று கொண்டு இருக்கிறார்கள்?

பெற்றோர்களே! உங்களின் குழந்தை வளர்ப்பு பற்றி நீங்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும் என்பதை மறந்து விட்டீர்களா? இன்னும் தாமதிக்க வேண்டாம். சினிமா பைத்தியங்களாக இருக்கும் அவர்கள் அதன் வெறியர்களாக ஆக முன் உங்கள் குழந்தையின் உள்ளங்களை அல்லாஹ்வினதும் ரசூலினதும் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பைத்தியங்களாக அதாவது வலியுல்லாஹ்களாகவும் ஆஸிகே ரசூல்களாகவும் மாற்றி விடுங்கள்.

அதற்கு ஏற்றாற் போல முதலில் தாய்மார்களான நீங்கள் மாறுங்கள். பின்னர் உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்கள். அற்பமான இந்த உலக மாயையில் நீங்களும் சிக்கி உங்கள் ஆண் பெண் பிள்ளைகளும் சிக்கி ஈருலகிலும் கேவலப்பட வேண்டாம்.


ஆகவே இவ்வாறான அதாவது மேலே கூறப்பட்ட சந்தர்ப்பங்களிலயே தொலைக்காட்சி பெட்டி (Tv) யினை, பேஸ்புக் மற்றும் ஏனைய தொழில் நுட்ப சாதனங்களைப் பயன்படுத்துவது, பார்ப்பது ஹராம் ஆகும்.

இதுதவிர பொதுவாக "தொலைக்காட்சி பெட்டி, பேஸ்புக் பார்ப்பதே ஹராம் அவைகளில் அனாச்சாரங்களும், அட்டூழியங்கள் மட்டுமே நிறைந்து காணப்படுகின்றது" என்று கூறுவது தவறாகும், ஹலால் தீர்மானிக்கப்படுவது ஒவ்வொரு தனி நபர்களின் அடிப்படை பாவனை முறையினை கருத்தில் கொண்டே ஆகும். நாம் தான் அவைகளின் பாவனை முறையில் நல்ல விடயத்தின் பக்கம் மாற்றத்தை ஏற்ப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

♣ சுய இன்பம் ஒரு வகையான விபச்சாரமே!

“(நம்பிக்கை கொண்டோர்) தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிற தமது கற்பை காத்துக் கொள்வார்கள் அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீரியவர்கள்.” (அல்குர்ஆன் 23: 5,6,7)

♣ அடுத்த பாலினரை இச்சையுடன் பார்த்தல்

ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் சுதந்திரமாகப் பார்ப்பதையும் ரசிப்பதையும் இஸ்லாம் ஒரு பாவமாக கருதுகின்றது. இதனால்தான் பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறும், கட்டுப்படுத்துமாறும் அது பணிக்கின்றது. (ஸூரத்துன் நூர்: 24: 30,31)

♦ 'அலியே! (ரலியல்லாஹு அன்ஹு) ஒரு பார்வையைத் தொடர்ந்து அடுத்த பார்வையைச் செலுத்தாதீர். முதலாம் பார்வை உமக்குரியது. அடுத்தது உமக்குரியதல்ல.' (நூல் அஹ்மத், அபூதாவூத்)

♦  இரு கண்களும் விபசாரம் செய்கின்றன. அவை செய்யும் விபசாரம் பார்வையாகும். (நூல் புகாரி)

♦நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். “இரண்டு கண்களும் விபச்சாரம் செய்கின்றன, இரண்டு கைகளும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றன, இரண்டு கால்களும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றன, மர்ம உருப்போ அதனை உண்மைப்படுத்துகிறது அல்லது பொய்ப்படுத்துகிறது.” (நூல் : அஹ்மத் 10490)

மேற்கண்ட நபி மொழியில் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் விபச்சாரம் எந்தெந்த உருப்புகளின் மூலம் உருவாகும் என்பதைப் பற்றி தெளிவுப்படுத்துகிறார்கள். அதில் கண்களின் மூலம் விபச்சாரம் நடக்கிறது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இஸ்லாம் தடுக்கக்கூடிய காட்சிகளை பார்த்தல், அண்ணியப் பெண்களை கெட்ட எண்ணங்களில் பார்ப்பது, ஆபாசப் படங்களைப் பார்ப்பது போன்றவைகள் இதில் அடங்கும்.

இரண்டு கைகளும் விபச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இதில் மேற்குறிப்பிட்ட காரணங்களுக்கு உதவி செய்வதும் அடங்கும், அதிலும் குறிப்பாக சுய இன்பம் தான் இதன் மூலம் நேரடியாக குறிப்பிடப்படுவதையும் நாம் அறியலாம். ஏனெனில் இரண்டு கைகளும் விபச்சாரத்தில் ஈடுபடுகிறது என்றால் அதற்கு மிக முக்கியமானது இந்தக் கைகள் தான் இந்தக் கைகளின் மூலம் தான் இன்றைய இளைஞர்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதாக மருத்துவ உலகமும் உருதிப்படுத்துகிறது.

மேலும் உடலை வெளிக்காட்டுவதும் அதனைப் பார்ப்பதும் துர்நடத்தைக்குத் தூண்டுபவை என்ற வகையில் இஸ்லாம் ஓர் ஆண் உடம்பில் மறைக்க வேண்டிய பகுதி என்ன என்பது பற்றியும், ஒரு பெண் மறைக்க வேண்டிய பகுதி யாது என்பது பற்றியும் விரிவாக விளக்குகின்றது.

இவ்வாறு பாலியல் சீர்கேடுகளுக்கான எல்லா வழிகளையும் அடைத்துள்ள இஸ்லாம், மறுபக்கத்தில் மனிதன் தனது உணர்ச்சியைத் தீர்த்துக்கொள்வதற்கு புனிதமானதும் கௌரவமானதுமான திருமணம் என்ற ஒழுங்கை அறிமுகம் செய்துள்ளது. திருமணத்தின் மூலம் கிட்டும் நிம்மதியையும் நிறைவையும் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றது. ''நீங்கள் (அமைதி) ஆறுதல் பெறுவதற்குரிய துணையை உங்களில் இருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும், உங்களுக்கிடையே அன்பையும் கிருபையையும் ஏற்படுத்தி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.'' (அல்குர்ஆன் 30:21)

♣  தொலைக்காட்சி, பேஸ்புக் பின்வரும் நிபந்தனைகளை கொண்டிருந்தால் அது ஹலாலாக அமையும்.

1) அதன் தலைப்புகளும் அது உள்ளடக்கியுள்ள விடயங்களும் பாவத்தையும் மோசமானவற்றையும் விட்டு தூய்மையாக இருப்பதோடு இஸ்லாமிய அகீதாவிற்கும் ஷரீஆவிற்கும் ஒழுக்கங்களுக்கும் முரண்படாததாக இருக்க வேண்டும்.

2) உலக ஆசைகளைத் தூண்டுகின்ற அல்லது பாவத்தைத் தூண்டுகின்ற அல்லது குற்றம் செய்யத் தூண்டுகின்ற அல்லது வழிகெட்ட சிந்தனைகளின்பால் அழைக்கின்ற அல்லது மோசமான நம்பிக்கைகளின்பால் தூண்டுகின்ற இவை போன்றது இருக்க கூடாது, அவைகள் ஹராமானதாகும். அவற்றைப் பார்ப்பதோ, பார்க்கத் தூண்டுவதோ ஒரு முஸ்லிமுக்கு ஹராமானதாகும். ஏன் அத்தகைய வற்றைத் தயாரிப்பதும் அவற்றில் பங்கெடுப்பதும்கூட ஹராமானது தான்.

3) அவை அல்லாஹ்வையும் அவனது ஹபீப் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் மரணத்தையும் மறுமை நாளையும் மார்க்கக் கடமை யொன்றையோ அல்லது உலகக் கடமை யொன்றையோ பொடுபோக்காக்கி விடக்கூடாது. குறிப்பாக அல்லாஹுதஆலா முஸ்லிமின் மீது கடமையாக்கியுள்ள தொழுகைகளை விட்டும் அது பொடுபோக்காக்கி விடக்கூடாது.

4) ஆகுமாக்கப்பட்ட தொலைக்காட்சி (அதாவது இஸ்லாமிய நிகழ்ச்சிகள் பயான்) கேட்கச் செல்வோரும் அஜ்னபியான ஆண், பெண்களுடன் கலந்துவிடக் கூடாது. ஏனெனில்,அதனால் குழப்பமும் பாவங்களுக்கான அடிப்படையும் இடப்பட்டு விடும். குறிப்பாக இவ்வாறான நிகழ்வுகளின்போது திரையொன்று போடப்பட வேண்டும்.

♣ குறிப்பு : இந்த கட்டுரையினை படித்து விட்டு தொலைக்காட்சி, சினிமா பார்ப்பதை முழுமையாக அங்கீகரிக்கின்றதென எவரும் தவறான புரிந்து கொண்டு கருத்து தெரிவிக்க வேண்டாம். அவ்வாறு தெரிவித்தால் அது உங்களினது அறியாமையின் வெளிப்பாடு என்பதுதான் எதார்த்தமாகும். இன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சி பெட்டியில் 75% இற்கு அல்லாஹ்வை பற்றியும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை பற்றியும் மறக்கடிக்க செய்து, உலக ஆசைகளைத் தூண்டுகின்ற அல்லது பாவத்தைத் தூண்டுகின்ற அல்லது குற்றம் செய்யத் தூண்டுகின்ற அல்லது வழிகெட்ட சிந்தனைகளின்பால் அழைக்கின்ற அல்லது மோசமான நம்பிக்கைகளின்பால் தூண்டுகின்றதாகவே அமைந்துள்ளது.

எனவே, அவற்றைப் பார்ப்பதோ ஏனையவர்கள் பார்ப்பதற்குத் தூண்டுவதோ ஹராமானதாகும். என்பதையே தெளிவாக விளங்கி நடப்போமாக! இஸ்லாத்துக்கு எதிராக உள்ளதோ அதுவரை இந்த சினிமாவை புறம் தள்ளிவிடுவோமாக! அல்லாஹ்வும் அவனுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காட்டிய வழிமுறையிலும் வாழ இறைவன் நம் அனைவருக்கும் உதவி புரிவானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.