MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ரஜப் மாதத்தின் சிறப்புகள்

எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான்  (கௌஸி)  கல்முனை.


இஸ்லாத்தின் பார்வையில் புனிதமான ரஜப் மாதத்தின் சிறப்புகளும், அம்மாதத்தில் வைக்க வேண்டிய சுன்னத்தான (பிறை 27) மிஃராஜ் நோன்பின் சிறப்புகளும்.


♣  இஸ்லாம் கூறும் ரஜப் மாதம்


கால நேரங்களையும் மனிதர்களையும் படைத்த அல்லாஹ், அவற்றில் தான் விரும்பியதை சிறப்பாக்கியும் வைத்திருக்கிறான். அந்த வகையில் மனித இனத்தில் நபிமார்களை அவர்களில் சிறப்பாக்கி வைத்திருப்பதுடன் 'உலுல் அஸ்ம்' என்று அந்த றசூல்மார்களில் குறிப்பிடத்தக்க ஒரு சிலரைத் தெரிவு செய்து அவர்களில் மிக மிகச் சிறப்பான நபியாக றசூலாக அடியானாக அண்ணலார் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் தேர்வு செய்தான்.


​​இவ்வாறே இடங்களைப் படைத்த அல்லாஹ் மக்கா முகர்ரமா. மதீனா முனவ்வரா, பைத்துல் முகத்திஸ் ஆகிய இடங்களை ஏனைய சகல இடங்களைவிடவும் கண்ணியப்படுத்தி வைத்தான். இது போல கால நேரங்களைப் படைத்த அல்லாஹ் வெள்ளிக்கிழமையை நாட்களின் தலைவனாகவும் மாதங்களில் முஹர்ரம், துல் கஃதா, துல் ஹிஜ்ஜா, ரஜப், ஆகிய நான்கு மாதங்களை அல்லாஹ் சிறப்பாக்கியும் வைத்திருக்கிறான்.


♦ நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும், அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும், ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள், இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


​(அல்குர்ஆன் : 9:36)


♦ இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை - துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும்.


ஹழ்ரத் அபூ பக்ரா (ரலியல்லாஹு அன்ஹு)

நூல் புகாரி - 3197. 4406. 4662. 5550


♦ வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளிலிருந்து இந்த நான்கு மாதங்களும் கண்ணியமாக்கப்பட்டிருந்த காரணத்தினால்தான் நபிகள் நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பிற்கு முன்பிருந்த காலத்து மக்களிடத்திலும் இந்த மாதங்கள் சிறப்பானதாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. இன்னும் இந்த மாதங்களில் உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள் என்றும் அல்லாஹ் உத்தரவிட்டிருக்கிறான். அதனால்தான் கண்ணியமிக்க இந்த மாதங்களில் புரியப்படும் நல்லமல்களுக்கு அதிகபட்ச நற்கூலியும், பாவச் செயல்களில் ஈடுபடுவோர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும். கடும் குற்றச் செயல்களாகக் கருதப்படும் என ஸெய்யிதுனா இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவித்திருக்கிறார்கள்.


♣  ரமழானுக்காக எமக்கு பயிற்சிப் பாசறையாக ரஜப் மாதம் திகழ்கிறது


ரமலான் மாதத்தில் நற்காரியங் களைச் செய்வதற்கு நாம் முன்கூட்டியே தயாராக வேண்டும். ரமலான் மாதத்தில் நாம் நிறைவேற்றும் மற்ற அமல்களையும் மாதத்திலும் நிறைவேற்றும்படி நாம் ஆர்வமூட்டப்பட்டுள்ளோம். இறை கடமையாக உள்ள வணக்க வழிபாடுகளை, நற்காரியங்களை முறைப்படி செய்வதற்கு மிகச் சிறந்த பயிற்சிப் பாசறையாக ரஜப் மாதம் திகழ்கிறது. இம்மாதத்தில் பயிற்சிகளை எடுத்துக் கொள்ளும்போது ரமலான் மாதத்தில் அது போன்ற நற்காரியங்களை அதிகமாகச் செய்வது மிக எளிதாகி விடுகிறது.


♦ சன்மார்க்க அறிஞர்களில் ஒருவராகிய அபூபகர் அல்-பல்கி (ரஹ்மதுல்லஹி அலைஹி)அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்: “ரஜப் மாதம் விதைகளை விதைக்கப்படும் மாதமாகும். ஷஃபான் மாதமாவது செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் மாதமாகும். ரமலான் மாதமோ பழங்களை அறுவடை செய்யும் மாதமாகும்”


​​நூல்: லதாயிஃபுல் மஆரிஃப்


இறை நம்பிக்கையாளர்களாகிய நாம் நமது வணக்க வழிபாட்டுச் செயல்களின் மூலம் ஆன்மீக ரீதியில் நம்மை நாம் தயார் செய்து கொள்வதோடு, அறிவுப்பூர்வமாக முன்னேற்றம் காண்பதற்கு அதிகமானக் கல்வியறிவைத் தேடுவது அவசியமாகும் என்பதையும் உணர வேண்டும். ரமழானுக்கு முந்திய மாதமே ரஜப் ஷஃபான் மாதமாகும். அடுத்துவரும் ரமழானை நல்ல முறையில் பயன்படுத்துவதற்கு ரஜப் மாதம் எமக்கு துணைபுரிகிறது.


♣  புனிதமான ரஜபின் பிறையும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் செயலும்


ரஜப் அல்லாஹ்வின் மாதம்,ஷஃபான் எனது மாதம், ரமழான் எனது சமுதாயத்தின் மாதம்’ என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.


♦ இம்முழு மாதத்தைப் பற்றி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலமாக உறுதியான ஆதாரத்துடன் அறிய வருவது என்னவென்றால் ரஜப் மாதத்தின் பிறையை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டவுடன் பின்வரும் துவாவை ஓதுவார்கள். 'அல்லாஹும்ம பாரிக்லனா ஃபீ ரஜபின் வஷஃபான வபல்லிங்னா ரமழானன' (யா அல்லாஹ்! ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமழானை எங்களுக்கு அடையச் செய்வாயாக) என்று நமது நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரஜப் மாத துவக்கத்திலிருந்து புனித ரமழான் மாதத்தினை அடையும் வரை ஓதி வந்திருக்கிறார்கள்.

நூல் முஸ்னத் அஹ்மத், தப்ரானீ 


நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் முன்கூட்டியே புனித ரமழான் மாதத்தின் வருகையை பற்றி மிக்க ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பார்கள். இந்த துஆ ஸஹீஹான ஹதீஸ் கிரந்தங்களில் பதிவாகியுள்ளது இதை ஓதுவது சுன்னத்தாகும். ஆகவே தினமும் இந்த தூஆவை நாமும் ஒதுவது சுன்னத்தாகும்.


♣  மிஃராஜ் இரவின் சிறப்புகள்


பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் வாழ்விலும், இஸ்லாத்தின் வளர்ச்சியிலும் மிஃராஜ் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. அடியானுக்கும், அல்லாஹ்வுக்கும் மிடையிலான நெருக்கத்தின் எல்லையையும் அன்நெருக்கத்தை அடைவதற்கான வழிமுறைகளையும் மிஃராஜ் விளக்குகிறது. ஆன்மீகப் பயணத்தின் யதார்த்தமான விளக்கமாகவும், ஆன்மாவின் ஆற்றலின் வெளிப்பாடாகவும் மிஃராஜ் நிகழ்வு அமைகிறது.பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் நபிமார்களின் நாயகர் என்பதையும், மலக்குகள் அர்ஷ், குர்ஷ் அனைத்தையும் விட மேலானவர்கள் என்பதையும் மிஃராஜ் நிரூபித்துக்காட்டுகின்றது. வேந்தர் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிரபஞ்சத்தில் எதிலும் தேவையற்றவர்கள் என்பதையும், வல்ல நாயனான அல்லாஹ்விடத்தில் மாத்திரமே தேவையுள்ளவர்கள் என்பதையும் மிஃராஜ் சுட்டிக் காட்டுகின்றது. ஆன்மீகப் படித்தரங்களில் அடிமைத்துவமே மேலானது என்பதையும், அதன் மூலமே எஜமானான இரட்சகனை அடையலாம் என்பதையும் மிஃராஜ் விளக்கிக் காட்டுகின்றது. இவ்வாறு பல்வேறு தத்துவங்களை உள்ளடக்கியுள்ள மிஃராஜ் பயணமாகும்.


♦ (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன், அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான், (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம், நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்) நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்போனாகவும் இருக்கின்றான்.


​​அல்குர்ஆன் : 17:1


♦ மேலும் இந்த சிறப்பான சங்கையான மாதத்தில் அல்லாஹ் தன் வல்லமையை வெளிப்படுத்துவதற்காக நமது நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாயிலாக நிகழ்த்துக் காண்பித்த மகா அற்புத நிகழ்வே 'அல் இஸ்ராஉ வல் மிஃராஜ்' எனும் அதிசய நிகழ்வாகும். ரஜப் பிறை 27 புனித மிஃராஜ் தினமாகும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வை சந்திக்க விண்ணுலகப் பயணம் சென்ற நாள். இன்றுதான் நமக்கு ஐவேளை தொழுகை கடமையாக்கப்பட்டது. இந்த நாளில் சிறப்பு வாய்ந்த ரஜப் பிறை 27 அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக அன்றைய தினத்தில் நோன்பு வைப்பது சுன்னத்தாகும். ஆகவே புனிதமான நாட்களில் நோன்பு வைப்பதும், குறிப்பாக ஒவ்வொரு மாதமும் 'அய்யாமுல் பீல்' என்று சொல்லப்படும் பிறை 13,14,15 ஆகிய மூன்று நாட்களும் அதேபோன்று ஒவ்வொரு திங்கட்கிழமை, வியாழக்கிழமை நோன்பு வைப்பதும் அதேபோன்று அந்நாளில் அதிகமதிகம் ஸலவாத்து ஓதுவது, இபாதத் எனும் வணக்க வழிபாடுகளில் ஈடுபதுவது சிறப்பிற்குரிய சுன்னத்தாகும்.


♣  ரஜப் பிறை 27 (மிஃராஜ்) தினத்தன்று நோன்பு வைப்பது சுன்னத்தா?


மிஃராஜ் தினத்தில் நோன்பு வைக்கலாம் என்பதற்கு நபிமொழிகளில் ஆதாரங்கள் காணக்கிடைக்கிறது. இமாம் பைஹகி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஷுஃபுல் ஈமானிலும், தைலமி ரஹ்மத்துல்லாஹி அவர்கள் முஸ்னதுல் பிர்தவ்ஸிலும், ஸல்மானுல் பார்ஸி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக இவ்வாறு அறிவிக்கின்றனர்: ரஜப் மாத்தில் ஒரு இரவும், பகலும் இருக்கிறது. அத்தினத்தில் பகலில் நோன்பு வைத்து, இரவில் நின்று வணங்கினால் நூறு ஆண்டுகள் நோன்பு வைத்து வணங்கிய கூலி கிடைக்கும். அவ்விரவு ரஜப் 27வது இரவாகும். அந்நாளில்தான் அல்லாஹ் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நபியாக அனுப்பி வைத்தான்'.


♦ மேலும் அபான் இப்னு ஙயாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக அறிவிக்கும் மற்றொரு நபிமொழியும் பைஹகியில் காணப்படுகிறது. ரஜபில் ஓர் இரவுண்டு. அவ்விரவில் நல்லமல் புரிவோருக்கு நூறு ஆண்டுகள் நல்லமல் புரிந்த கூலி கிடைக்கும். அது ரஜபு மாதத்தின் 27வது இரவாகும். அவ்விரவில் யாராவது 12 ரக்அத்கள் தொழுதால் ஒவ்வொரு ரக்அத்திலும் ஸூரத்துல் பாத்திஹாவும், வேறு ஏதாவது ஸூரத்தும் ஓத வேண்டும். ஒவ்வொர இரண்டு ரக்அத்களும் தொழுது முடித்த பின்னர், 'ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வல்லாஹு அக்பர்' என்று 100 தடவைகளும், இஸ்திக்பார் 100 தடவைகளும், அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது 100 தடவை ஸலவாத்துகளும் ஓதிவிட்டு மறுமை, இம்மை சம்பந்தப்பட்டவை குறித்து தேவையானவற்றை துஆச் செய்யலாம். பின்னர் பகலில் நோன்பு நோற்க வேண்டும். அல்லாஹ் அவரது துஆக்களை ஏற்றுக் கொள்வான்.


♦ ரஜப் 27 எனக்கு நபிப்பட்டம் வழங்கப்பட்டது. அத்தினத்தில் நோன்பு வைத்து நோன்பு திறக்கும் வேளையில் துஆக் கேட்டால், பத்து வருடக் குற்றங்களுக்கு அது பரிகாரமாக அமையும்.' பவாயிது நிஹாத் என்ற நூலில் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது


♦ ஆகவே 'யாராவது ரஜப் மாதம் 27 அன்று நோன்பு வைத்தால் அவருக்கு அல்லாஹ் பல ஆண்டுகள் நோன்பு வைத்த கூலியை கொடுப்பான். அத்தினத்தில்தான் அண்ணல் நபியுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபிப்பட்டத்தை வழங்கினார்கள்.' ஜுஸ்உ அபீ முஆத் என்ற நூலில் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே கருத்தில் வந்துள்ள எல்லா ஹதீஸ்களிலும் இந்த ஹதீஸ்தான் மேலானதும், 27வது இரவிலும், பகலிலும் செய்யப்படுகின்ற அமல்களுக்கு அடிப்படை ஆதாரமுமாகும்.


​​நூல்: பதாவா ரிழ்விய்யா, பாகம் 4, பக்கம் 657, 658