MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஸலவாத் சொல்வதன் சிறப்புகள்

எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


"உயிருக்கு உயிரான உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் சொல்வதன் சிறப்புகள்"

♣ அல்லாஹ்வும், அவனின் மலக்குகளும் நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது “ஸலவாத்” சொல்கிறார்கள். விசுவாசிகளே! நீங்களும் அந்த நபீ மீது ஸலவாத் சொல்லுங்கள். இன்னும் ஸலாமும் சொல்லுங்கள்.


​​(அல்-குர்ஆன் 33-56)

மேற்கொண்ட திருவசனத்தில் வந்துள்ள “ ஸல்லூ” என்ற சொல்லும், “ஸல்லிமூ” என்ற சொல்லும் “ அம்றுன் முத்லகுன்” பொதுவான ஏவல் வினைச் சொற்களாகும்.


​​இச்சொற்கள் நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவரகள் மீது எந்த நேரம் வேண்டுமாயினும் ஸலவாத், ஸலாம் சொல்லலாம் என்ற கருத்தைத் தரும் சொற்களேயன்றி ஒருநேரம் குறிப்பிட்டு இந்தநேரம் சொல்லுங்கள் இந்த நேரம் சொல்லாதீர்கள் என்ற கருத்தை ஒருபோதும் தரமாட்டாது.

நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீது ஸலவாத் ஸலாம் சொல்லுதல் தொடர்பாக திருக்குர்ஆன் வசனங்களும், நபீமொழிகளும் பொதுவாக வந்துள்ளனவேயன்றி ஒருநேரம் குறிப்பிட்டு இந்நேரம் சொல்லுங்கள் இந்நேரம் சொல்லாதீர்கள் என்று வரவில்லை. எனவே நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது ஸலவாத், ஸலாம் சொல்லவிரும்பும் ஒரு முஸ்லிம் எந்நேரம் சொல்லவிரும்பினாலும் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் மலசலகூடம் போன்ற அசுத்தமான இடங்களில் மட்டும் சொல்வது தடுக்கப்பட்டுள்ளது.

♣ அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்மதுல்லஹி அலைஹி) அறிவித்தார்கள் என்னை கஅப் இப்னு உஜ்ரா (ரலியல்லாஹு அன்ஹு) சந்தித்து, ”நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஓர் அன்பளிப்பை உனக்கு நான் வழங்கட்டுமா?” என்று கேட்டார்கள். நான், ”ஆம், அதை எனக்கு வழங்குங்கள்” என்று பதில் சொன்னேன். உடனே அவர்கள், ”நாங்கள் இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களிடம், ”தங்களின் மீதும் தங்கள் குடும்பத்தார் மீதும் சலவாத்து சொல்வது எப்படி? (என்று எங்களுக்குக் கற்றுக் கொடுங்கள்) ஏனெனில், தங்களுக்கு நாங்கள் ஸலாம் சொல்வது எப்படி என்று அல்லாஹ் எங்களக்கு (தஷஹ்ஹுதில்) கற்றுக் கொடுத்திருக்கிறான்” என்று கேட்டோம்.

அதற்கு அவர்கள், ”இறைவா! இப்ராஹீம் அவர்களின் மீதும் நீ கருணை புரிந்ததைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் கருணை புரிந்திடு. நீயே புகழுக்குரியவனும், கண்ணியம் மிக்கவனும் ஆவாய். இறைவா! இப்ராஹீம் அவர்களின் மீதும் இப்ராஹீம் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்தைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிந்திடு, நீயே புகழுக்குரியவனும், கண்ணியம் மிக்கவனும் ஆவாய். இறைவா! இப்ராஹீம் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்ததைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிந்திடு, நீயே புகழுக்குரியவனும் கண்ணியம் மிக்கவனும் ஆவாய்” என்று சொல்லுங்கள்” என பதிலளித்தார்கள்.


​​(நூல்: புகாரி 3370, 6357, 6358)

♣ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: எவரிடமாவது என்னைப்பற்றி சொல்லப்பட்டு அவர் என் மீது ஸலவாத் ஓதவில்லையானால் அவர் கஞ்சனாவார்.


​​(நூல்கள்: திர்மிதி - 3546, நசாயி - 9885, பைஹகி - 1566, ஹாகிம் - 2015, முஸ்னத் அஹ்மத் - 1738, இப்னு ஹிப்பான் – 909)

♣  கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: எவரிடமாவது என்னைப் பற்றி கூறப்பட்டு என்மீது அவர் ஸலவாத் சொல்லவில்லையென்றால் அவர் சுவனப் பாதையை தவறவிட்டவராவார்.


​​(நூல்: தப்ரானி - 2887 , பைஹகி- 1573)

♣  கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: என் மீது ஸலவாத் ஓத மறந்தவர் சுவனத்து பாதையை தவறவிட்டவராவார்.


​​(நூல்கள்: இப்னு மாஜா - 908 , தப்ரானி - 12819 , இப்னு அபீஷைபா - 31784)

♣புழாலத் இப்னு உபைத் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: நாங்கள் நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடன் அமர்ந்திருந்தோம். ஒருவர் வந்தார் தொழுதார். "யா அல்லாஹ்! எனக்கு பிழை பொறுத்து கிருபை செய்வாயாக! என்று துஆ செய்தார். நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள், "தொழுகையாளரே! நீர் அவசரப்பட்டுவிட்டீர். நீர் தொழுது முடிந்தால் அமர்ந்து அல்லாஹ்வை புகழ்வதற்குரிய அமைப்பில் புகழ்ந்துரைத்த பின் என்மீது ஸலவாத்தும் சொல்லிய பின்பு துஆ செய்வீராக" இவருக்கு பின்னால் மற்றொரு மனிதர் வந்தார். அவர் தொழுது முடித்த பின்பு அல்லாஹ்வை புகழ்ந்து, ஸலவாத்தும் ஓதினார். அப்போது நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள். "தொழுகையாளரே! நீர் துஆ செய்வீராக! உமது துஆவுக்கு பதில் (பலன்) வழங்கப்படுவீர்!"


​​(நூல்கள்: அபூதாவூத் - 1481 , திர்மிதி - 3477 , இப்னு ஹுஸைமா - 710 , இப்னு ஹிப்பான் – 1960)

♣இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களும், அன்னவர்களுடன் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு, உமர் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோரும் அமர்ந்திருந்தனர். நான் தொழுது முடித்து உட்கார்ந்து கொண்டேன். அல்லாஹ்வைப் புகழும் வார்த்தைகளையும் நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் மீது ஸலவாத்தும் ஓதிய பின்பு எனக்காக துஆ செய்தேன். (இதனை செவியேற்ற) நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: "நீர் துஆ செய்வீராக, உமது துஆவுக்கு பதில் (பலன்) வழங்கப்படுவீர்.


​​(நூல்: திர்மிதி – 593)

♣கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறியதாக அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது ஸலவாத் சொல்லப்படும் வரை எல்லா துஆக்களுக்கும் வானத்திற்கும் இடையில் திரை இருக்கும். ஸலவாத் ஓதப்பட்டால் அந்த திரை கிழிந்துவிடும். அந்த துஆவிற்கு பதில் (பலன்) வழங்கப்படும். ஸலவாத் ஓதப்படாவிட்டால் அந்த துஆவிற்கு பதில் (பலன்) வழங்கப்படமாட்டாது.


​​(நூல்: பைஹகி – 1576)

♣   உமர் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: (யாதொரு) துஆவும் வானுக்கும், பூமிக்கும் இடையில் தடுத்து வைக்கப்படும். உங்களது நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது நீங்கள் ஸலவாத் ஓதும் வரை அங்கிருந்து அது (இறைசமூகம்) சென்றடையாது.


​​(நூல்: திர்மிதி - 486)

♣  பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள்: கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பள்ளிக்குள் நுழையும் போது ஸலவாத் ஓதிய பின்பு ரப்பே! என் பாவங்களை பொறுத்தருள்வாயாக! உனது ரஹ்மத்துடைய வாயில்களை எனக்கு திறந்தருள்வாயாக என்ற துஆவினை ஓதுவார்கள். மேலும் பள்ளியிலிருந்து வெளியே வரும்போது ஸலவாத் ஓதியபின் ரப்பே! என் பிழைகளைப் பொருத்தருள்வாயாக! உனது சிறப்பின் வாயில்களை எனக்குத் திறந்தருள்வாயாக என்னும் துஆவினை ஓதுவார்கள்.


​​(நூல்கள்: திர்மிதி - 314 , இப்னு மாஜா - 771 , பைஹகி - 67 , இப்னு அபிஷைபா - 29755 , முஸ்னத் அஹமத் - 25878 , 25887)


​♣  கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் திக்ரும், என்மீது ஸலவாத்தும் ஓதாத எல்லா சபைகளும் மறுமையில் நன்மைகளை இழந்து கைசேதப்படுவதாகவே அமையும். அவர்கள் சுவனத்திற்கு சென்றாலும் சரியே.


​​(நூல்கள்: நஸாயீ - 10242 , 10243 இப்னு ஹிப்பான் - 591 , பைஹகி - 542)


​♣  கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் திக்ரும், என்மீது ஸலவாத்தும் ஓதாத எல்லா சபைகளும் அவர்களுக்கு நஷ்டமாகவே அமையும். அல்லாஹ் விரும்பினால் அவர்களைத் தண்டிப்பான் அல்லது மன்னிப்பான்.


​​(நூல்: திர்மிதி - 3380 , அஹ்மது - 9907)

♣  கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: உங்கள் நாட்களிலே சிறந்த நாள் வெள்ளிக்கிழமை. ஆதம் அலைஹிஸலாம் அவர்கள் படைக்கப்பட்டதும், மரணித்ததும், மேலும் சூர் ஊதப்படுவதும், பூமியில் வாழும் மக்களெல்லாம் மரணித்து விடுவதும் வெள்ளிக்கிழமையில் தான். ஆகவே அந்நாளில் என்மீது அதிகம் அதிகம் ஸலவாத் ஓதுங்கள். நீங்கள் ஓதும் ஸலவாத்துக்கள் என்னிடம் எடுத்துக்காட்டப்படுகின்றன. ஸஹாபாக்கள் கேட்டனர், "யா ரசூலுல்லாஹ்! ஸலவாத் உங்கள் மீது எவ்வாறு எடுத்துக்காட்டப்படும்? தாங்கள் மரணித்து மண்ணோடு மண்ணாகக் கலந்து விடுவீர்களே? அதற்கு கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள், நபிமார்களின் உடலை மண் (தின்பதி)னை விட்டு அல்லாஹ் ஹராம் ஆக்கிவிட்டான்.


​​(நூல்கள்: அபூதாவுத் - 1047 , நசாயி - 1666 , இப்னு ஹிப்பான் - 910 , ஹாகிம் - 1029)


​♣  கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் என் மீது அதிகமாக ஸலவாத் ஓதிவாருங்கள். என் மீது என் உம்மத்தார் ஓதும் ஸலவாத்துக்கள் வெள்ளிக்கிழமை எனக்கு நேரடியாக அஞ்சல் செய்யப்படுகிறது.


​ஹழ்ரத் அபூஉமாமா ரலியல்லாஹு அன்ஹு (நூல் பைஹகி - 3030 , ஹாகிம்)


​♣  உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்காவில் குத்பா உரையாற்றும் போது கூறுவார்கள். ஹஜ்ஜு செய்வதற்காக ஒருவர் வந்தால் அவர் பைத்துல்லாஹ்வை ஏழுவிடுத்தம் தவாப் செய்யட்டும். பின்பு மகாமு இப்ராஹிமில் நின்று இரண்டு ரகஅத் தொழுது கொள்ளட்டும். பின்பு ஸஈயை (ஸபாவிலிருந்து) தொடங்கும்போது - பைத்துல்லாஹ்வை முன்நோக்கி ஏழு தக்பீர்களைக் கூறட்டும். ஒவ்வொரு தக்பீருக்குப் பின்னாலும் அல்லாஹ்வைப் புகழ்ந்து (ஹம்து, தனா) ஓதி, நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மீது ஸலவாத் ஓதிய பின் அவரவருக்குத் தேவையான துஆக்களை கேட்கட்டும். இதே போன்று மர்வாவிலும் செய்து கொள்ளட்டும்.


​​(நூல்: இப்னு அபீஷைபா - 29629 , பைஹகி - 9343)


​♣ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:. உங்கள் நாட்களிலே சிறந்த நாள் வெள்ளிக்கிழமை. ஆதம் அலைஹிஸலாம் அவர்கள் படைக்கப்பட்டதும், மரணித்ததும், மேலும் சூர் ஊதப்படுவதும், பூமியில் வாழும் மக்களெல்லாம் மரணித்து விடுவதும் வெள்ளிக்கிழமையில் தான். ஆகவே அந்நாளில் என்மீது அதிகம் அதிகம் ஸலவாத் ஓதுங்கள். நீங்கள் ஓதும் ஸலவாத்துக்கள் என்னிடம் எடுத்துக்காட்டப்படுகின்றன. ஸஹாபாக்கள் கேட்டனர், "யா ரசூலுல்லாஹ்! ஸலவாத் உங்கள் மீது எவ்வாறு எடுத்துக்காட்டப்படும்? தாங்கள் மரணித்து மண்ணோடு மண்ணாகக் கலந்து விடுவீர்களே? அதற்கு கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள், நபிமார்களின் உடலை மண் (தின்பதி)னை விட்டு அல்லாஹ் ஹராம் ஆக்கிவிட்டான்.


​​(நூல்கள்: அபூதாவுத் - 1047 , நசாயி - 1666 , இப்னு ஹிப்பான் - 910 , ஹாகிம் - 1029)


​♣  கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: என் மீது ஒருவர் ஒரு ஸலவாத் ஓதினால் அவர் மீது அல்லாஹ் பத்து ஸலவாத் ஓதுகிறான்.


​​(நூல்கள்: முஸ்லிம் - 408 , அஹ்மத் - 8637 , நசாயி - 1219 , தாரமி – 2670)


​♣  கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: என் உம்மத்துகளில் ஒருவர் தூய்மையான உள்ளத்துடன் என்மீது ஒரு ஸலவாத் ஓதினால் அவர் மீது அல்லாஹ் பத்து ஸலவாத் ஓதுகிறான், பத்து அந்தஸ்துகளை உயர்த்துகிறான், பத்து நன்மைகளை எழுதுகிறான், பத்து தீமைகளை அழிக்கிறான்.


​​(நூல்கள்: நசாயி - 65 , பைஹகி - 156 , தப்ரானி - 195, 196 , பஸ்ஸார்)

♣  கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: என்மீது அதிகம் ஸலவாத் ஓதுபவர் மறுமை நாளில் எனது நெருக்கத்திற்குரியவர்.


​​(நூல்: திர்மிதி - 484 , இப்னு ஹிப்பான்)


​♣  கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: என்மீது ஸலவாத் ஓதுங்கள். ஏனெனில் என்மீது ஸலவாத் ஓதுவது உங்களுக்கு ஸகாத் ஆகும்.


​​(நூல்: அஹ்மத் - 7544 , இப்னு அபீஷைபா – 31776)


​♣  கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மலக்குகள் மண்ணுலகில் சுற்றி வருகின்றனர். எனது உம்மத்துகள் என்மீது கூறும் ஸலவாத் ஸலாமை என்னிடம் கூறுகின்றனர்.


​​(நூல்கள்: முஸ்னத் அஹ்மத் - 4308 , நசாயி - 1205 , ஹாகிம் - 3576)