MAIL OF ISLAM

Knowledge & Wisdom



சலவாத்தை சுருக்கி எழுதுவது கூடுமா?


​எழுதியவர்:                 மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


‘பெருமானார் ﷺ அவர்கள் மீது சொல்லும் ஸலவாத்தை 'ஸல் - ஸல்அம் என்றும், ஜல் என்றும், ரலி - ரஹ் என்றும்' சுருக்கி எழுதுவது கூடுமா?"


​​

♣  ஸலவாத் சொல்வது பற்றிய ஹதீஸ்கள்

அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள் என்னை கஅப் இப்னு உஜ்ரா (ரலியல்லாஹு அன்ஹு) சந்தித்து, ”நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஓர் அன்பளிப்பை உனக்கு நான் வழங்கட்டுமா?” என்று கேட்டார்கள்.


​​நான், ”ஆம், அதை எனக்கு வழங்குங்கள்” என்று பதில் சொன்னேன். உடனே அவர்கள், ”நாங்கள் இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களிடம், ”தங்களின் மீதும் தங்கள் குடும்பத்தார் மீதும் சலவாத்து சொல்வது எப்படி? (என்று எங்களுக்குக் கற்றுக் கொடுங்கள்) ஏனெனில், தங்களுக்கு நாங்கள் ஸலாம் சொல்வது எப்படி என்று அல்லாஹ் எங்களுக்கு (தஷஹ்ஹுதில்) கற்றுக் கொடுத்திருக்கிறான்” என்று கேட்டோம்.


​​அதற்கு அவர்கள், ”இறைவா! இப்ராஹீம் அவர்களின் மீதும் நீ கருணை புரிந்ததைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் கருணை புரிந்திடு. நீயே புகழுக்குரியவனும், கண்ணியம் மிக்கவனும் ஆவாய். இறைவா! இப்ராஹீம் அவர்களின் மீதும் இப்ராஹீம் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்தைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிந்திடு, நீயே புகழுக்குரியவனும், கண்ணியம் மிக்கவனும் ஆவாய். இறைவா! இப்ராஹீம் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்ததைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிந்திடு, நீயே புகழுக்குரியவனும் கண்ணியம் மிக்கவனும் ஆவாய்” என்று சொல்லுங்கள்” என பதிலளித்தார்கள்.


​​(நூல்: புகாரி 3370, 6357, 6358)

♦ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

​உங்கள் நாட்களிலே சிறந்த நாள் வெள்ளிக்கிழமை. ஆதம் அலைஹிஸலாம் அவர்கள் படைக்கப்பட்டதும், மரணித்ததும், மேலும் சூர் ஊதப்படுவதும், பூமியில் வாழும் மக்களெல்லாம் மரணித்து விடுவதும் வெள்ளிக்கிழமையில் தான். ஆகவே அந்நாளில் என்மீது அதிகம் அதிகம் ஸலவாத் ஓதுங்கள். நீங்கள் ஓதும் ஸலவாத்துக்கள் என்னிடம் எடுத்துக்காட்டப்படுகின்றன.


​​ஸஹாபாக்கள் கேட்டனர், "யா ரசூலுல்லாஹ்! ஸலவாத் உங்கள் மீது எவ்வாறு எடுத்துக்காட்டப்படும்? தாங்கள் மரணித்து மண்ணோடு மண்ணாகக் கலந்து விடுவீர்களே? அதற்கு கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள், நபிமார்களின் உடலை மண் (தின்பதி)னை விட்டு அல்லாஹ் ஹராம் ஆக்கிவிட்டான்.


​​(நூல்கள்: அபூதாவுத் - 1047 , நசாயி - 1666 , இப்னு ஹிப்பான் - 910 , ஹாகிம் - 1029)

♦ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

​என் மீது ஒருவர் ஒரு ஸலவாத் ஓதினால் அவர் மீது அல்லாஹ் பத்து ஸலவாத் ஓதுகிறான்.


​​(நூல்கள் முஸ்லிம் - 408 , அஹ்மத் - 8637 , நசாயி - 1219 , தாரமி – 2670)

♦ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

​என் உம்மத்துகளில் ஒருவர் தூய்மையான உள்ளத்துடன் என்மீது ஒரு ஸலவாத் ஓதினால் அவர் மீது அல்லாஹ் பத்து ஸலவாத் ஓதுகிறான், பத்து அந்தஸ்துகளை உயர்த்துகிறான், பத்து நன்மைகளை எழுதுகிறான், பத்து தீமைகளை அழிக்கிறான்.


​​(நூல்கள்: நசாயி - 65 , பைஹகி - 156 , தப்ரானி - 195, 196 , பஸ்ஸார்)


​​

♣  ஸலவாத்தை சுருக்கி எழுதும் பித்அத் எப்போது தோன்றியது?

மங்காத முழுமதி, மண்ணாளும் இறைபதி, எம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள் மிகு திருநாமத்தை எழுத்து வடிவில் எழுதும் போது பெரும்பான்மையான மக்கள் அத்திருநாமத்துடன் ஸலவாத்தைச் சுருக்கியே எழுதுகின்றனர். இது மனவேதனை தரக்கூடிய ஓர் செயலாகும்.


​​அரபு மொழியில் எழுதும் போது (ص، صلعم) என்றும், தமிழ் மொழியில் எழுதும் போது (ஸ, ஸல்) என்றும், ஆங்கில மொழியில் எழுதும் போது (SAL, SAW) என்றும் 'அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம்' என்பதற்கு 'அம்' என்றும் சுருக்கி எழுதுகிறார்கள்.

இப்படி ஸலவாத்தைச் சுருக்கி எழுதுவது முழு ஸலவாத்தைக் கூறியது போல் ஆகாது. அது மட்டுமன்றி ஸலவாத் சொன்ன நன்மையும் சுருக்கி எழுதுவோர்க்கு இதன் மூலம் கிடைக்காது. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருப்பெயரைக் கேட்டவுடன் அல்லது அத்திருப்பெயரை காகிதங்களில் எழுதும் போது ஸலவாத்தை முழுமையாக கூறுவது அவசியமாகும்.


​​என்றாலும் சுருக்கி எழுதும் வழக்கம் நானூறு ஆண்டுகளாக "அல்லாஹ் ஜல்ல ஜலாலஹு, ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், ரலியல்லாஹு அன்ஹு, கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ், ரஹ்மதுல்லாஹி அலைஹி" இது போன்ற bபரக்கத் பொருந்திய சொற்றொடர்களை இன்று படித்தவர்கள், பாமரர்கள், அறிந்தவர்கள், அறியாதவர்கள் குறிப்பாக வழிகெட்ட வஹ்ஹாபிகள் ஏன் சில அறிஞர்களிடமும் எப்படியோ ஊடுருவி விட்டது. கொஞ்ச அளவுமை, அல்லது ஒரு அங்குலக் காகிதம், அல்லது சில வினாடிப் பொழுதை மிச்சப்படுத்துவதற்காக எவ்வளவோ அபரீதமான பாக்கியத்தை விட்டு விடுகின்றனர்.


​​முதன்ம முதலில் இப்படி ஸலவாத்தை சுருக்கி எழுதியவரின் கை துண்டிக்கப்பட்டதாக இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நவின்றுள்ளார்கள்.

♦ மேலும் இரு நாவுகளில் ஒரு நாவு பேனா! என்று கூறப்படும். அது நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஸலவாத்தை எழுதும் போது "ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்" என்று முழுமையாக எழுதப்பட வேண்டிய இடங்களில் "ஸல், அம்" என்று சுருக்கி எழுதினால் ஸலவாத்தை நாவினால் மாற்றிய சட்டம் வரத்தானே செய்யும்? 'சொல்லப்பட்ட ஒன்றை வேறொன்றாக மாற்றுவது குற்றம்' என்று குர்ஆன் கூறுகின்றது.


​​"ஆனால் அக்கிரமக்காரர்கள் தம்மிடம் கூறப்பட்ட வார்த்தையை அவர்களுக்குச் சொல்லப்படாத வேறு வார்த்தையாக மாற்றிக் கொண்டார்கள், ஆகவே அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது - (இவ்வாறு அவர்கள்) பாவம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கிவைத்தோம்". (அல்குர்ஆன் : 2:59)

ஆகவே மேலே கூறப்பட்ட குர்ஆன் வசனத்தின் பிரகாரம் அர்த்தமுள்ள வார்த்தையாக அவர்கள் மாற்றியும் கூட இறைவனால் ஏற்பட்ட கட்டளையை மாற்றியதாக தண்டனை பெற்றார்கள் என்றால், இங்கு நமக்கு 'ஈமான் கொண்டவர்களே! அவரின் (நாயகத்தின்) மீது ஸலவாத்து சலாம் சொல்லுங்கள்' என்று இறைவன் கட்டளை பிறப்பித்துள்ளான். இறைவனது இக்கட்டளை வாஜிபு அல்லது முஸ்தஹப்பு என்பது அவர்களது திருப்பெயரை கேட்கும் போதெல்லாம், நாவால் சொல்லும் போதெல்லாம், பேனா முனையால் தீட்டும் போதெல்லாம் பொருந்தும்.

அவர்களது திருப் பெயரை எழுதும் போது அதன் தொடராக 'ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்' என்று பூரணமாகத்தானே எழுதப்பட வேண்டும்.


​​அதுவின்றி 'ஸ, ஸல், ஸல்அம்' என்று மாற்றி சுருக்கி அர்த்தமற்றதாக ஆக்குவது எங்ஙனம் பொருந்தும்? அர்த்தமுள்ள சொல்லாக மாற்றிய இஸ்ரவேலர்களுக்கு கொடிய வேதனை இறக்கப்பட்டிருக்கும் போது அவனது ஹபீபின் ஸலவாத்தை அர்த்தமற்ற வார்த்தையாக மாற்றினால் கொடிய வேதனை கிடைக்காது என்று எவரால் உறுதி கூற முடியும்?


​​

♣  ஸலவாத்தை சுருக்கி எழுதுவது பற்றி இமாம்களின் கருத்துக்கள்

இந்த விடயத்தில் இமாம்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸலவாத்தை முழுமையாக எழுவது “சுன்னத்” என்று சிலரும். இன்னும் சிலர் “வாஜிப்” என்கிறார்கள். இதில் சரியான சொல் வாஜிப் என்பதேயாகும்.


​​ஏனெனில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

எவரிடமாவது என்னைப்பற்றி சொல்லப்பட்டு அவர் என் மீது ஸலவாத் ஓதவில்லையானால் அவர் கஞ்சனாவார்.


திர்மிதி - 3546, நசாயி - 9885, பைஹகி - 1566, ஹாகிம் - 2015, முஸ்னத் அஹ்மத் - 1738, இப்னு ஹிப்பான் – 909 


​​என்று கடிந்து கூறியிருக்கிறார்கள். எனவே, நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருப்பெயரைக் கேட்டவுடன் அல்லது அதை காகிதங்களில் எழுதும் போது ஸலவாத்தை முழுமைப்படுத்தி குறிப்பிடுவது அவசியம் என்பது தெளிவாகின்றது.

♦ ஸஹாபாப் பெருமக்கள், இறைநேசச் செல்வர்களான அவ்லியாக்கள் திருப் பெயர்களோடு 'ரலியல்லாஹு அன்ஹு' என்று எழுதப்படுவதை சுருக்கி 'ரலி' என்று எழுதுவதை நம் சங்கைக்குரிய உலமா பெருமக்கள் 'மக்ரூஹ்' என்றும், பாக்கியமற்ற செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.


​​ரலியல்லாஹு அன்ஹு என்பதை 'ரழி' என்று எழுத்தால் சாடை காட்டுவது மக்ரூஹ் வெறுக்கப்பட்டதாகும் என்று அல்லாமா செய்யிது தஹ்தாவி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள். இதை எவன் பொடு போக்கு செய்கின்றானோ அவன் அனேகமான நன்மையை விட்டும் பேறுகெட் போகிறான். ஏராளமான சிறப்பை இழந்து விடுகிறான்' என்று இமாம் நவவி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஷரஹு முஸ்லிமில் எழுதுகிறார்கள்.

♦ 'குத்திஸ ஸிர்ருஹு' என்பதற்கு சாடையாக 'க' என்றும், 'ரஹ்மத்துல்லாஹி அலைஹி' என்பதற்கு 'ரஹ்' என்றும் எழுதப்படுவதும் பரக்கத் அற்ற துர்பாக்கியத்தனமாகும், இப்படிப்பட்ட காரியங்களை விட்டும் தற்காத்து கொள்வது சாலச் சிறந்தது, அது போன்று அலைஹிஸ்ஸலாம் என்பதை ஹம்ஸு கொண்டும், மீம் கொண்டும் ('அம்' என்று) எவன் எழுதுவானோ அவன் காபிராகுவான். ஏனென்றால், இது இலேசாக மதிப்பதாகும். நபிமார்களை இலேசாக மதிப்பது குப்றாகும்' என்று அல்லாமா செய்யிது தஹ்தாவி ரஹிமஹுல்லாஹு அவர்கள் துர்ருல் முக்தாரின் ஹாஷியாவில், பதாவா தாதர்கானியாவில் இருந்து நக்ல் படுத்துகிறார்கள். வேணுமென்று இலேசாக மதிப்பானாகில், அல்லது ஏளனமாக நினைப்பானாகில் அவன் காபிராகிவிடுவான் என்பதில் ஐயமில்லை (மஆதல்லாஹ்).

சோம்பேறித்தனமாக பொடுபோக்காக, அறியாத்தனமாக செய்வார்களாயின் அவர்கள் காபிராகமாட்டார்கள். என்றாலும் பாக்கியமற்ற நஸீபு கெட்ட வேலை இது என்றால் மிகையாகாது.'அல்லாஹ்' என்ற திருநாமம் எழுதினால் அதற்கு பின்னால் 'தஆலா' என்றோ அல்லது தகத்தஸ' என்றோ அல்லது 'அஸ்ஸவஜல்ல'என்றோ அல்லது இது போன்றவற்றை எழுதி கண்ணியப்படுத்த வேண்டும். இதை போன்றே அவனது தூதர் நாமம் எழுதினால் அதற்கு பின்னால் 'ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்' என்று எழுத வேண்டும். இது ஸலப் – முன்னோர்கள் வழக்கம் போல் கலப்-பின்னோர்கள் வழக்கம். 'ஸல், அம்' என்று சுருக்கக் கூடாது. இது பாக்கியமற்றவர்களின் வழக்கம். முஜ்தஹிதுகளான இமாம்களுக்கு ரலியல்லாஹு அன்ஹு என்றும் மற்றவர்களுக்கு ரஹிமஹுல்லாஹ் என்றும் எழுத வேண்டும்.


​​(நூல் பதாவா ஹதீதிய்யா பக்கம் 230)

♦ ஹதீதை எழுதக் கூடியவர் அல்லாஹுதஆலாவின் பெயரை எழுதினால் 'அஸ்ஸவஜல்ல' என்றோ, அல்லது 'தஆலா' என்றோ அல்லது சுபுஹானஹு வதஆலா' என்றோ அல்லது 'தபாரகவ தஆலா' என்றோ, அல்லது 'ஜல்லதிக்ருஹு' என்றோ அல்லது 'தபாரக இஸ்முஹு' என்றோ அல்லது 'ஜல்லத் அழ்மத்துஹு' என்றோ அல்லது இது போன்றவைகளை (இணைத்து) எழுத வேண்டும். இதை போன்றே நபி நாயகத்தின் பெயரை எழுதும் போது 'ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்' என்று முழுமையாக எழுத வேண்டும். இவை இரண்டின் பக்கம் சமிக்கையாகவோ ஒன்றை சுருக்கியோ எழுதக் கூடாது.


​​இதைப் போன்றே சஹாபியின் பெயரிலும் 'ரலியல்லாஹு அன்ஹு' என்றும், சஹாபியின் மகனாக இருந்தால் 'ரலியல்லாஹு அன்ஹுமா' என்றும், சிறந்தவர்கள், உலமாக்களாக இருந்தால் 'ரலியல்லாஹு அன்ஹு' என்றோ அல்லது 'ரஹிமஹுல்லாஹ்' என்றோ எழுத வேண்டும் (சொல்ல வேண்டும்), ஆகவே ஸஹாபா பெருமக்கள் இறைநேசச் செல்வர்களான அவ்லியாக்கள், இமாம்கள் திருப்பெயர்களோடு 'ரலியல்லாஹு அன்ஹு' என்று எழுதப்படுவதை சுருக்கி 'ரலி' என்றும், அது போன்றே 'குத்திஸஸிர்ருஹு' என்பதற்கு சாடையாக 'க' என்றும், ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்பதற்கு 'ரஹ்' என்றும், எழுதப்படுவது பரக்கத்தற்ற துர்பாக்கியத்தனமாகும். இப்படிப்பட்ட காரியங்களை விட்டும் தற்காத்துக் கொள்வது சாலச்சிறந்தது. அதை எடுத்து நடக்க வேண்டும்.

(நூல் பதாவா ஆப்பிரிக்கா பக்கம் 45) எனவே எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் முழுமையாக எழுதுவது , பிரசுரிப்பது மூலமாக வாசகர்களின் நாவுகளில் 'ஸலவாத்' மணத்தை கமழச் செய்வோம். அதற்குரிய நற்கூலியையும் பெற்றிடுவோம்.


​​

♣ ஸலவாத்தை சுருக்கி எழுதுவதன் மூலம் ஏற்படும் பாரிய விளைவுகள்:

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருநாமத்துடன் ஸலவாத்தை சுருக்கி எழுதுவதன் காரணமாக பாரிய விளைவுகள் ஏற்படுகின்றன. அவ்விரு விளைவுகளையும் நாம் எடுத்து ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் அவ்விரண்டும் (குப்ர்) இறை நிராகரிப்பின் பக்கம் மெல்ல மெல்ல இழுத்துச் செல்லக் கூடியவைகளாகும். அவ்விரு விளைவுகள் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

1) இறைவனின் கட்டளைக்கு மாறு செய்தல். அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் "நிச்சயமாக அல்லாஹ்வும், அவனது மலக்குகளும் அந்த நபிகள் நாதர் மீது ஸலவாத் சொல்கிறார்கள். ஈமான் கொண்டோரே! நீங்களும் அவர்கள் மீது ஸலவாத்தும் சொல்லி ஸலாமும் சொல்லுங்கள்". (சூறதுல் அஹ்ஸாப் - 56)

மேற்கூறப்பட்ட வசனத்தின் மூலமாக அல்லாஹுத்தஆலா உலக முஃமின்கள் அனைவரையும் அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது ஸலவாத், ஸலாம் சொல்லுமாறு கட்டளையிடுகின்றான்.

​  

அல்லாஹ்வின் கட்டளை ஸலவாத் சொல்லுங்கள் என்றுதானே ஒழிய சுருக்கிச் சொல்லுங்கள் எ​ன்பது கிடையாது. எனவே, ஸலவாத்தைச் சுருக்கி குறிப்பிடுவதன் மூலமாக அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறுசெய்கின்ற நிலை ஸலவாத்தை சுருக்கி குறிப்பிடுவோர்க்கு ஏற்படுகின்றது. அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்தல் என்பது எவ்வித சந்தேகமுமின்றி இறை நிராகரிப்பாகும். அல்லாஹ் பாதுகாப்பானாக!

2) பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் கண்ணியத்திற்கு குறை ஏற்படுத்துதல். அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருநாமத்துடன் ஸலவாத்தை சுருக்கி எழுதுவதென்பது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் கண்ணியத்தில் குறையை ஏற்படுத்துகின்ற ஒரு விடயமாகும். அவர்கள் மீது கூறப்பட வேண்டிய முழு ஸலவாத்தை இரண்டு சொற்களால் அல்லது நான்கு சொற்களால் குறைத்துக் கூறுவது அவர்களை அவமரியாதை செய்வதைப் போன்ற அமைப்பில் உள்ள ஒன்றாகும்.

அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் அநேகமான இடங்களில் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை கண்ணியப்படுத்துமாறும், அவமரியாதைகள், நோவினைகள் செய்ய வேண்டாம் என்றும் பல விதமான வசனங்களை இறக்கிக் கூறியுள்ளான். எனவே, எவர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கு கொடுக்க வேண்டிய கண்ணியத்தை கொடுக்காமல் அவர்களை அவமரியாதை செய்கிறாரோ அவர் திருமறையின் கூற்றின் படியும், சர்வ இமாம்களின் ஏகோபித்த முடிவின் படியும் இஸ்லாம் மார்க்கத்தை விட்டும் நீங்கியவராவார். அவரின் இரத்தத்தை ஓட்டச் செய்வதற்கும் இஸ்லாம் அனுமதியளிக்கின்றது.

3)  அல்லாமா ஹைதமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள். சிலர் ஸலவாத்தின் வார்த்தைகளை முழுமையாக எழுதாமல் சுருக்கி எழுதுவதை இப்னுஸ் ஸலாஹ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கண்டித்திருக்கின்றார்கள். மேலும் சிலர் ஸலவாத் மட்டும் கூறுவார்கள் ஸலாம் கூறாமல் விட்டு விடுவார்கள். ஏனெனில் ஹதீதுக்கலை அறிஞர்களில் சிலர் ஸல்லல்லாஹு அலைஹி என்று எழுதிவிட்டு வஸல்லம் என்பதை விட்டு விட்ட போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கனவில் தோன்றி (ஸல்லம்) என்பது நான்கு எழுத்துகளாகும். ஒவ்வொரு எழுத்திற்கும் பத்து நன்மை வீதம் நாற்பது நன்மைகளை இழந்து விடுகிறீர்கள் என்று கடிந்து கூறிய வரலாறுகளும் உள்ளன.

4)  “இமாம் அல்லாமா ஜலாலுத்தீன் ஸுயூத்தீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள். صَلْعَمْ என்று எழுதுவது போன்று ஒரு எழுத்தைக் கொண்டு அல்லது இரு எழுத்தைக் கொண்டு ஸலவாத், ஸலாமைச் சுட்டிக்காட்டி சுருக்கி எழுதுவது வெறுக்கப்பட்டதாகும். அவ்விரண்டையும் சம்பூரணமாகவே எழுத வேண்டும். ஸலவாத்தையும், ஸலாமையும் صَلْعَمْ என்று சுருக்கி முதன் முதலாக அரபியில் ஸலவாத்தை சுருக்கி எழுதியவனின் கை (சூகையாகி விட்டது) வெட்டப்பட்டது.


​​(நூல்: தத்ரீக் அர்ராவீ :பாகம் 2,பக்கம் 45)

மேலும் முதன் முதலாக அரபியில் ஸலவாத்தை சுருக்கி எழுதும் முறையை அறிமுகப்படுத்தியவனின் கை சூகையாகி விட்டது என இமாம் சுயூத்தி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தமது அல்ஹாவிலில் பதாவா என்ற கிரந்தத்தில் எழுதிவிட்டு, இவ்வாறு சுருக்கி எழுதுவது “பித்அத் மக்ரூஹ்” வெறுக்கத் தக்க நூதன செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களை நினைவுபடுத்தும் போதெல்லாம் “ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்” என்றோ அல்லது அது போன்ற வார்த்தைகளையோ பரிபூரணமாக எழுதுவான். ஸலவாத்து, ஸலாம் இரண்டில் ஒன்றின் மீது மட்டும் சுருக்கியோ அல்லது அவற்றை சுட்டிக் காட்டும் அடையாள வார்த்தைகளை மாத்திரம் பயன்படுத்தியோ எழுதமாட்டான். இவ்வாறே ஸஹாபியின் திருப் பெயரை அடுத்து ரலியல்லாஹு அன்ஹு எனவும் எழுத வேண்டும்.இவற்றில் யார் பாராமுகமாக நடக்கிறாரோ அவர் மகத்தான நன்மைகளை இழந்தவராகவும் மகத்தான சிறப்புகளை கைவிட்டவராகவும் ஆகின்றார். இமாம் நவவி ரலியல்லாஹு அன்ஹு

​(நூல்: ஷரஹு முஸ்லிம் பாகம் – 1 பக்கம் -40)


​​

♣  ஸலவாத்தை முழுமையாக எழுதுவதன் சிறப்புகள்

நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : எவராவது எழுத்துக்களில் என்மீது ஸலவாத்தினை எழுதுவாராயின் அந்த எழுத்துக்களில் என் பெயர் உள்ள போதெல்லாம் அவருக்காக மலக்குகள் இஸ்திக்ஃபார் செய்கிறார்கள்.


​​(நூல்கள்: தப்ரானி பில் அவ்ஸத் 1854, கதீப் பீஷரரி அஸ்ஹாபில் ஹதீஸ் 36, ஸம்ஆனி பிஅதபில் இம்லாஃ 138, இஸ்பஹானீ பித்தர்ஹீப் 1670, ஜலாவுல் அப்ஹாம் 54, கவ்லுல் பதீஃ 250)

♦ அன்புக்குரியவர்களே! நாம் மேற்குறிப்பிட்ட இமாம் ஸுயூத்தீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்களின் கருத்துப் படி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் மீது சொல்லப்படுகின்ற ஸலவாத்தை சுருக்காமல், குறைக்காமல் முழுமையாகவே குறிப்பிட வேண்டுமென்பதை மிகத் தெளிவாக வலியுறுத்தி காட்டுகின்றது. அது மட்டுமல்ல ஏனைய நபீமார்களின் நாமங்களை எழுதும் போது (அலை) என்றும், ஸஹாபாக்களின் நாமங்களை எழுதும் (றழீ) என்றும், தாபியீன்கள், இமாம்களின் நாமங்களை எழுதும் போது (றஹ்) என்றும், ஸூபியாக்கள், வலீமார்களின் நாமங்களை எழுதும் போது (கத்தஸ) என்றும், அவர்களுக்கு செய்ய வேண்டிய துஆவைக் குறைத்து, சுருக்கி கூறுவது பிழையானதே ஆகும்.

மாறாக , நபீமார்களின் நாமங்களை எழுதும் போது (அலைஹிஸ்ஸலாம்) என்றும், ஸஹாபாக்களின் நாமங்களை எழுதும் போது (றழியல்லாஹு அன்ஹு) என்றும், தாபியீன்கள், இமாம்களின் நாமங்களை எழுதும் போது (றஹிமஹுல்லாஹ்) என்றும், ஸூபியாக்கள், வலீமார்களின் நாமங்களை எழுதும் போது (கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ்) என்று முழுமையாக துஆவைச் சேர்த்துக் குறிப்பிடுவது மிகவும் ஈடேற்றமானதாகும்.

ஆகவே 'ஸல்' என்று நாம் யாருமே பேசுவதில்லை. மாறாக 'ஸல்' என்று எழுதுகிறோம். காரணம் புரியவில்லை. முன்னோர்களான இமாம்கள் எல்லாருமே முழுமையாகத்தானே எழுதி இருக்கிறார்கள். நவீன காலத்தில்தான் பரவலாக இந்தப் பாவம் நடக்கிறது. நாம் ஸுன்னத் வல் ஜமா'அத்தினர். நாம் 'ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்' என்று முழுமையாக எழுதி பலமாக எமது முத்திரையை வைக்க வேண்டும்.

குறிப்பாக இளையவர்களுக்கு நாம் நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டும். நல்ல வார்த்தைகளால் நல்லவர்களைப் புகழ்ந்து பாக்கியங்களை அடைய வேண்டும், அன்புக்குரியவர்களே! ஸலவாத்தை முழுமைப்படுத்தி "ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்" என்று எழுதுவோமாக! உண்மையை அறிந்து கொள்ளுங்கள்! பொய்மையைத் தவிர்ந்து கொள்ளுங்கள். நன்மையை அள்ளிக் கொள்ளுங்கள்! சத்தியத்தை நிலை நாட்ட எழுந்து வாருங்கள். அசத்தியத்தை தவிடு பொடியாக்க கைகோருங்கள்.! அல்லாஹ் ஈருலகிலும் அவனது அருள்மழை எனும் விடா மழையை உங்கள் மீது கொட்டுவானாக!