MAIL OF ISLAM

Knowledge & Wisdomநபிகள் நாயகம் ﷺ ஷபாஅத் குப்ரா செய்வார்களா?

​          எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர் ரஹ்மான் (கௌஸி) கல்முனை.நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மறுமை நாளில் பாவிகளுக்காக வேண்டி (ஷபாஅத் - குப்ரா) எனும் மாபெரும் பரிந்துரை செய்வார்களா?

♣ இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு

ஸுன்னத் வல் ஜமாஅத்தை விட்டு அப்பாற்பட்ட முஃதஸிலாக்களும், காரிஜிய்யா வகுப்பாரைச் சேர்ந்த வழிகெட்ட வஹ்ஹாபிஸ பிரிவினர்களும் மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பாவிகளுக்காக (ஷபாஅத் குப்ரா) மாபெரும் பரிந்துரையை செய்வார்கள் என்பதை அடியோடு மறுத்து, பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஷபாஅத் செய்வதே இல்லையாம் என பிரச்சாரம் மேற்கொண்டு வருவதையும் நாம் காண்கின்றோம்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வாழ்ந்திருந்த போது ஸஹாபிகள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் சென்று ஷபாஅத் வேண்டியதைப் பற்றி ஏகோபித்துக் கூறப்பட்டுள்ளதையும், உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைக் கொண்டு மழை தேடியதையும் ஏற்றுக் கொள்கின்றனர். இச்செய்தி புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ்களாகும்.


​​ஆகவே ஷபாஅத் எனும் பரிந்துரை பற்றிய வழிகெட்ட வஹ்ஹாபிகளின் தவரான பிரச்சாரங்களை விட்டும் எல்லாம் வல்ல கிருபையாளன் அனைத்து முஸ்லிம்களையும் குறிப்பாக இளைஞர்களையும் காப்பாற்றுவானாக!


​​

♣ ஷபாஅத் எனும் பரிந்துரை என்றால் என்ன?

ஷபாஅத் எனும் பரிந்துரையானது, அல்லாஹ்வின் அனுமதி பெற்று மறுமை நாளில் பாவிகளுக்காக வேண்டி கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஷபாஅத் குப்ரா) எனும் மாபெரும் பரிந்துரையும், ஏனைய நபிமார்கள், இறைநேசர்களாகிய வலிமார்கள், இமாம்கள் (சிறிய பரிந்துரை) செய்வதன் மூலமாக பாவிகள் சுவர்க்கம் நுளைவதற்க்கு அடிப்படை பரிந்துரையை ஷபாஅத் எனப்படும்.


​​மேலும் மனிதர்களிடையே ஒழுக்கம், தூய்மை, இறையச்சம் போன்ற பண்புகளைக் கட்டியெழுப்புவதற்கும் ஆன்மீக உரமூட்டல்களை மேற்கொள்வதற்கும் பாவிகளை நல்வழிப் படுத்தவும் நல்வழியில் தூண்டவும் சிறந்த காரணியாக அமைந்துள்ளது. அதேவேளை, ஷபாஅத் என்பதும் வரையறைகளற்ற எளிய விடயமல்ல. ஷபாஅத் செய்யப்படுவோர் பாவிகளாக இருப்பினும், அவர்களது பாவச்செயல், சிபாரிசு செய்யக் கூடியவர்களுடன் இருக்கும் தொடர்பை முற்றாகத் துண்டிக்கக் கூடியதாக இருக்கக் கூடாது. இதனால் தான், பாவிகள் தமக்குரிய அனைத்து ஷபாஅத்துக்கான படிகளையும் தகர்த்து விட வேண்டாமெனவும், அவற்றை முடிந்தவரை பேணிக் கொள்ளுமாறும் இஸ்லாம் எச்சரித்து வலியுறுத்துகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வாழ்ந்திருக்கையில் அவர்களின் பிரார்த்தனைகள், ஷபாஅத்துகள் இவற்றைப் பெற்றும், மறுமையில் அவர்களின் ஷபாஅத்தை வேண்டியும் அல்லாஹ்வை சமீபிக்கத் தேடுவது இன்னொரு வகை வஸீலாவாகும். நாயகத்திற்கு அல்லாஹ்விடம் இருக்கின்ற மதிப்பினாலும், கண்ணியத்தினாலும் அவர்களின் பிரார்த்தனையை ஏற்று ஷபாஅத்தை அங்கீகரித்து அல்லாஹ் அவர்களை கௌரவிப்பான்.


​​இதனால் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் துஆ, ஷபாஅத் ஆகியவற்றைப் பெற்றவர்கள் பயனடைந்தார்கள். அன்று ஸஹாபிகளுக்கு நாயகத்தின் இந்த ஷபாஅத் கிடைத்ததினால் அவர்களுக்கு அல்லாஹ் மழையைப் பெய்யச் செய்து வறட்சிக்கு நிவாரணமளித்தான். கண்பார்வை இழந்த ஸஹாபி ஒருவரின் கண்பார்வை திரும்பியது. பெருமானாரின் துஆவும், ஷபாஅத்தும் எம் அனைவருக்கும் அருளப்பட்ட ஆசையோடு வணக்க வழிபாடுகள், ஸலவாத் ஓதுவது போன்ற நற்காரியங்களால் எதிர்பார்த்து கொண்டிருக்க வேண்டும்.


​​

♣ நபிகள் நாயகம் ﷺ அவர்கள் (ஷபாஅத் குப்ரா) பரிந்துரை செய்ய மாட்டார்கள் என்ற வஹ்ஹாபிகளின் போலி ஆதாரங்களுக்கு தக்க பதில்கள்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான், “அல்லாஹ் முன் அவன் அனுமதியின்றி அவனிடம் யார்தான் பரிந்துரை செய்ய முடியும்? (அல்குர்ஆன் : 2:255) இவ்திருவசனம் 'ஆயத்துல் குர்ஸி' என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மொழிந்துள்ளார்கள். இதில்தான் மேற்கண்ட ஆயத்தின் பகுதி உள்ளது. ஆயத்துல் குர்ஸி முழுவதும் காபிர்களின் வாதத்திற்கான மறுப்புக்களாகவே உள்ளன. படைக்கின்றவன் ஒருவன் உள்ளான் என்பதை மறுக்கின்றவர்களுக்கு “அல்லாஹ்“ என்ற சொல் பதிலாகவும், படைத்தலை மேற்கொள்வோர் வேறு சிலரும் இருக்கின்றனர் என்று வாதிப்போருக்கு “லாஇலாஹ இல்லல்லாஹ்“ அல்லாஹ்வைத் தவிர்த்து வேறு கடவுள் இல்லை என்ற வசனம் மறுப்புக் கூறுகின்றது. அல்லாஹ்வின் பண்பியலை மறுப்பவர்களுக்கு “அல்ஹய்யுல்கையூம்“ என்ற பகுதி பதிலாக உள்ளது.

மேலும் காபிர்கள் வணங்கும் விக்ரகங்கள் தெய்வீகத் தன்மை “உலூஹிய்யத்“ பெற்றுள்ளன என்றும், அல்லாஹ்வின் தெய்வீக நிலையான உலூஹிய்யத்தைக் கொண்டு விக்ரகத்தில் இறங்கியுள்ளான் என்றும் நம்பினர். மலரில் மணம் இருப்பது போல விக்ரகத்துள் இறைவன் உள்ளான் என்றும் நம்பினர். அதனால்தான் விக்ரகங்களையும் கடவுள் என்றும் நம்பினர். விக்கிரகத்திற்கும், இறைவனுக்கும் வித்தியாசம் காண்பதற்காக இறைவனை பெரிய கடவுள் என்றும், விக்ரகத்தை சிறிய கடவுள் என்றும் கூறினர்.


​​சிறிய கடவுளான விக்ரகங்கள் பெரிய கடவுளிடம் நமக்காக பரிந்துபேசும். இறைவன் இவர்கள் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வான் என்ற இவர்களின் இந்த வாதத்திற்கும் நம்பிக்கைக்கும் மேற்படி திருவசனத்தின் மூலம் தக்க பதில் இறைவன் கூறியுள்ளான். அல்லாஹ் அனுமதி பெறாத எவரும் அவனுக்கு முன் வாய் திறக்க முடியாது. அல்லாஹ்வின் அனுமதி பெறாதவர்களுக்கு ஷபாஅத் செய்யும் தகுதியோ, அதிகாரமோ கிடையாது. விக்ரகங்கள் அனுமதி பெறாதவைகள். விக்ரகங்களை அல்லாஹ் ஏற்கவில்லை. அல்லாஹ்வுக்கு எதிராகவே விக்ரகங்கள் வணங்கப்படுகின்றன. அதனால், விக்ரகங்களுக்கு ஷபாஅத் செய்யும் அனுமதி வழங்கப்படவில்லை.


​​மேற்படி திருவசனத்தில் வரும் ஷபாஅத்தின் மறுப்பு பொதுமையானது அல்ல, குறிப்பானதாகும். குறிப்பிட்ட சிலருக்கான மறுப்பே தவிர யாவருக்குமான பதில் அல்ல.

மேற்படி திருவசனத்தில் குறிப்பிட்ட சிலர் ஷபாஅத் செய்ய முடியாது என்று இருப்பது குறிப்பிட்ட வேறு சிலர் ஷபாஅத் செய்ய முடியும் என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. அதனால், ஆயத்துல் குர்ஸி ஷபாஅத்தை மறுக்கும் திருவசனம் அன்று, ஷபாஅத்தை உறுதிப்படுத்தும் திருவசனமாகும் என்பது தெளிவாகிவிட்டது .


​​பொதுவாக எவரும் எவருக்கும் ஷபாஅத் செய்ய முடியாது என்றிருந்தால் ஜனாஸாத் தொழுகை, கப்றுகளை ஸியாரத் செய்தல், உயிருள்ளோர் மரணித்தவர்களாக பிரார்த்தித்தல் என்பதெல்லாம் பொருளற்றதாகிவிடும். உண்மையில் இவையனைத்தும் மற்றவர்களுக்காகச் செய்யும் ஷபாஅத் ஆகும். மரணித்த சிறு குழந்தைகளுக்கான ஜனாஸாத் தொழுகையில் “அல்லாஹும்ம இஜ்அல்ஹு லனா பர்தன் வஜ் அல்ஹு லனா ஷாபிஅன் வமுஷப்பிஆ“ என்று துஆ கேட்பது சுன்னத்தாகும். இதில் மரணித்த குழந்தையை நமக்கு ஷபாஅத் செய்யக் கூடியதாக ஆக்கியருளும்படி பணிக்கப்பட்டுள்ளோம்.


​​ஹளரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரழியல்லாஹு அவர்களின் அன்ஹுமா மகன் மரணித்தபோது தொழுவதற்கு நாற்பது பேர் சேரும்வரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஸாலிஹான நாற்பது முஸ்லிம்கள் சேருமிடத்தில் நிச்சயம் அல்லாஹ்வின் ஒரு வலி அங்கு இருப்பார். அந்த வலியின் பொருட்டால் மற்றவர்கள் கேட்கும் துஆவும் அவர் துஆவும் கபூலாகும்.

♦ அதேவேளை, இன்னும் சில அல்குர்ஆன் வசனங்கள், சிபாரிசு செய்வதென்று ஒன்று இல்லை என்ற கருத்தைச் சொல்வதாக பொதுவாகத் தோன்றலாம்.''எவ்விதமான பரிமாற்றமும் நட்பும் பரிந்துரையும் இல்லாத நாள் வருமுன்..(அல்குர்ஆன் 02: 254) இங்கு குறிப்பிடப்படும் (ஷபாஅத்) பரிந்துரை என்பது அல்லாஹ்வின் அனுமதி இல்லாது, சுயவிருப்பின் பேரில் செய்யப்படும் பரிந்துரையைக் குறிக்கின்றது அல்லது, தகுதியற்றோர் பரிந்துரை செய்வதைக் குறிக்கலாம். நபிமார்களோ, சுயவிருப்பின் பேரிலல்லாமல், அல்லாஹ்வின் அனுமதியுடனேயே பரிந்துரை செய்வதும் அவர்கள் பரிந்துரை செய்வதற்கு முழுத் தகுதியும் உள்ளவர்களாக இருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


​​

♣ மறுமை நாளில் ஷபாஅத் எனும் பரிந்துரை செய்ய அனுமதியைப் பெற்றவர்கள் யார்?

நாம் அதிகமான அமல்கள் செய்வதன் மூலமாக அல்லாஹ்வுடைய கருணையை பெற்றுக்கொள்ளலாம் ,மேலும் பெருமானாருடைய ஷாபா அத்தை பெற்றுக்கொள்ளலாம். இந்த இரண்டுமே நாம் சொர்க்கம் செல்ல உதவும். பெருமானாரின் பெரும் ஷபாஅத் நாம் நம்புவதும் அதற்காக ஆசைப்பட்டு உழைப்பதும் நம் மீது கடமையாகும், மறுமை நாளில் யாருக்கும் யாரும் உதவி செய்ய முடியாத அந்த நேரத்தில் எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்காக (ஷபாஅத்-குப்ரா) மாபெரும் பரிந்துரைக்காக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தன்னை முழு அளவிலும் தயார் படுத்திக் கொள்வார்கள்.


​​ஆகவே மறுமையின் வெற்றிக்கு வழி ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத் குப்ரா மட்டுமே! அந்த அடிப்படையில் சுன்னத்துக்களை கடைபிடிப்பவர் நபிகளாரின் ஷபாஅத்திற்கு அருகதை உடையவர் ஆவார் பெருமானாரின் சிறு சுன்னத்தை அக்கறையோடும் ஆசையோடும் கடைபிடித்தால் கூட பெருமானாரின் ஷபாஅத்திற்கு அருகதை பெறலாம்.

♦ (முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார், நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது, அன்றி, (உங்கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார், இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்.(அல்குர்ஆன் : 9:128)

♦ அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தம் சமுதாயத்தார் தொடர்பாக) ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை உண்டு, எல்லா இறைத்தூதர்களும் அந்தப் பிரார்த்தனையை அவசரப்பட்டு (இம்மையிலேயே) கேட்டுவிட்டனர். நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். அல்லாஹ் நாடினால் என் சமுதாயத்தாரில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் மரணிக்கிறாரோ அவருக்கு அது கிடைக்கும்.

ஹழ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) 

நூல்: முஸ்லிம் 338, மேலும் பார்க்க 335,337,339,339,340,341

♦ இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்” ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தம் சமுதாயத்தாருக்காகப் பிரார்த்திக்குக் கொள்ள அங்கீகரிக்கப்பெற்ற) ஒரு பிரார்த்தனை உண்டு. அல்லாஹ் நாடினால் என் பிரார்த்தனைய மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரைக்க பத்திரப்படுத்திவைக்க விரும்புகிறேன்.  


ஹழ்ரத் ​​அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: புகாரி 7474

♦ என்னுடைய (ஷபாஅத் குப்ரா) எனும் மாபெரும் பரிந்துரையானது, என்னுடைய உம்மதில் பெரும்பாவம் செய்தவர்களுக்கும் உண்டு என நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு

​நூல்கள்: திர்மிதி 2359,அபூதாவுத் 4114, முஸ்னத் அஹ்மத் 12745, இப்னு மாஜா 4300

♦ ”எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. எதிரிகளுக்கும் எனக்குமிடையில் ஒரு மாத காலம் பயணம் செய்யும் இடைவெளியிருந்தாலும் அவர்களின் உள்ளத்தில் பயம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் உதவப்பட்டுள்ளேன். பூமி முழுவதும் சுத்தம் செய்யத் தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என்னுடைய சமுதாயத்தில் தொழுகையின் நேரத்தை அடைந்தவர் (இருக்கும் இடத்தில்) தொழுதுகொள்ளட்டும்! போரில் கிடைக்கிற பொருள்கள் எனக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்பு ஹலாலாக்கப்பட்டதில்லை. (மறுமையில்) சிபாரிசு செய்யும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளேன். ஒவ்வொரு நபியும் தங்களின் சமூகத்திற்கு மட்டுமே நபியாக அனுப்பட்டார்கள். ஆனால், மனித இனம் முழுமைக்கும் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன்” என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.


ஹழ்ரத் ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: புகாரி 335

♦ இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்” (இந்த) முஹம்மதின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பரிந்துரையால் ஒரு கூட்டம் நரகத்திலிருந்து வெளியேறி சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் ”ஜஹன்னமிய்யூன்” (நரக விடுதலை பெற்றோர்) என்று பெயரிட்டு அழைக்கப்படுவார்கள்.

ஹழ்ரத் இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: புகாரி 6566

♦ அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: நானே சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதராவேன், இறைத்தூதர்களிலேயே அதிகமான மக்களால் பின்பற்றப்படுபவன் ஆவேன்.


​​ஹழ்ரத் அனஸ் பின் மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

​நூல்: முஸ்லிம் 330

♦ இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்” மறுமை நாளில் இறை நம்பிக்கையாளர்கள் கவலைப்படும் அளவுக்கு நிறுத்தி வைக்கப்படுவார்கள். அப்போது அவர்கள், ”(அதி பயங்கரமான) இந்த இடத்திலிருந்து நம்மை விடுவிக்க நம் இறைவனிடம் பரிந்துரைக்கும் படி (யாரையாவது) நாம் கேட்டுக் கொண்டால் என்ன?” என்று பேசிக் கொள்வார்கள். பிறகு, அவர்கள் ஆதம் (அலைஹிஸ்ஸலாம் ) அவர்களிடம் வந்து, 'நீங்கள் மனிதர்களின் தந்தையாவீர்கள். அல்லாஹ், தன் கையால் உங்களைப் படைத்தான். தன்னுடைய வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியச் செய்தான். மேலும், உங்களுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் கற்றுத் தந்தான். எனவே, இந்தச் (சோதனையான) கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்களுடைய இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்' என்று சொல்வார்கள். அதற்கு ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை' என்று கூறிவிட்டு, தாம் புரிந்த பாவத்தை நினைத்துப் பார்த்து வெட்கப்படுவார்கள்.

'நீங்கள் (நபி) நூஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் (எனக்குப் பின்) பூமியிலுள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பி வைத்த (முக்கிய) தூதர்களில் முதலாமவராவார்' என்று சொல்வார்கள். உடனே, இறைநம்பிக்கையாளர்கள் நூஹ் (அலைஹி வஸல்லம்) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவரும், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை' என்று கூறிவிட்டு, தாம் அறியாத ஒன்றைக் குறித்துத் தம் இறைவனிடத்தில் கேட்டதை நினைத்து வெட்கப்படுவார்கள்.

பிறகு, நீங்கள் கருணையாளனின் உற்ற நண்பரிடம் (இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம் ) அவர்களிடம்) செல்லுங்கள்' என்று சொல்வார்கள். உடனே, இறைநம்பிக்கையாளர்கள் (இப்ராஹீம் - அலைஹி வஸல்லம்) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்களும், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை.

அல்லாஹ் உரையாடிய, தவ்ராத்(வேதத்)தையும் அளித்த அடியாரான (நபி) மூஸா அலைஹி வஸல்லம் அவர்களிடம் நீங்கள் செல்லுங்கள்' என்று சொல்வார்கள். உடனே, அவர்கள் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்கள், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை' என்று கூறிவிட்டு, (தம் வாழ்நாளில் ஒருமுறை) எந்த உயிருக்கும் ஈடாக இல்லாமல் ஒரு (மனித) உயிரைக் கொன்றதை நினைவு கூர்ந்து தம் இறைவனுக்கு முன் வெட்கப்படுவார்கள்.

பிறகு, 'நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதரும், அவனுடைய வார்த்தையும், அவனுடைய ஆவியுமான (நபி) ஈசா அலைஹி வஸல்லம் அவர்களிடம் செல்லுங்கள்' என்று சொல்வார்கள். (அவ்வாறே அவர்கள் செல்ல,) அப்போது அவர்களும், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை.

நீங்கள் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் செல்லுங்கள்' என்று சொல்வார்கள். உடனே, அவர்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், 'என்னுடைய இறைவனிடத்தில் அனுமதி கேட்பதற்காகச் செல்வேன். அப்போது (எனக்கு) அனுமதி வழங்கப்படும். என் இறைவனை நான் காணும்போது சஜ்தாவில் விழுவேன். தான் விரும்பியவரையில் (அப்படியே) என்னை அவன்விட்டு விடுவான்.

பிறகு, (இறைவனின் தரப்பிலிருந்து) 'உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்! உங்களுக்குத் தரப்படும் சொல்லுங்கள், செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள், உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்' என்று சொல்லப்படும் அப்போது நான் என்னுடைய தலையை உயர்த்தி, இறைவன் எனக்குக் கற்றுத் தரும் புகழ் மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன், (நான் யார் வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு அவர்களை நான் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன்.

பிறகு மீண்டும் நான் இறைவனிடம் செல்வேன். என் இறைவனைக் காணும்போது நான் முன்பு போன்றே செய்வேன். பிறகு நான் பரிந்துரைப்பேன். அப்போதும் இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு, நான் அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன்.

பிறகு மூன்றாம் முறையாக (இறைவனிடம்) நான் செல்வேன். பிறகு நான்காம் முறையும் செல்வேன். (இறுதியாக) நான், 'குர்ஆன் தடுத்துவிட்ட, நிரந்தர நரகம் கட்டாயமாகிவிட்டவர்(களான இறைமறுப்பாளர்கள், நயவஞ்சகர்)

களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் மிஞ்சவில்லை' என்று சொல்வேன். என இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹூ அன்ஹூ)

​நூல்கள்: புகாரி 7510 , 7440, 4712, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவுத், இப்னு மாஜா,நஸாயீ

♦ எவராவது புனித மதீனாவில் மரணிப்பதற்கான பாக்கியத்தைப் பெற்றிருப்பாராகில் அவர் அங்கேயே மரணிக்கட்டும். ஏனென்றால் அங்கு மரணிப்பவர்களுக்கு நிச்சயமாக நான் பரிந்துரைப்பேன் என நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.


​​நூல்கள்: திர்மிதி, அஹ்மத், மிஷ்காத் 240, இப்னு மாஜா 3112

♦மதீனாவில் மரணிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அங்கு மரணித்து விடுங்கள் ஏனெனில் அங்கு மரணிப்பவருக்கு நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஷபாஅத் செய்வார்கள், மேலும் எவர் புனித மதீனாவில் குடியேறி அதனுடைய சோதனைகளைப் பொறுத்துக் கொள்வாரோ அவருக்கு நான் கியாமத்து நாளில் சாட்சியாளராக இருப்பேன் என நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.


​​நூல்: பைஹகீ, மிஷ்காத்

♦ 'உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். ”இறைவா! உன் பாதையில் வீரமரணம் அடையும் பாக்கியத்தை எனக்கு வழங்கு! என்னுடைய மரணத்தை உன் தூதருடைய ஊரில் ஏற்படுத்து'.

ஷஹீஹ் புகாரி 1890

♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: எனது கப்ரை தரிசித்தவனுக்கு எனது “ஷபாஅத்” (பரிந்துரை) கடமையாகிவிட்டது.


​​நூல்: தாரகுத்னி, பைஹகீயின் ஷுபுல் ஈமான்,இதே ஹதீத் பல்வேறு அறிவிப்பாளர் தொடர்களினூடக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹதீது ஸஹீஹ் அல்லது ஹஸன் என கூறியோர்: ஹாபிழ் அப்துல் ஹக் இஷ்பீலீ ரஹ்மதுல்லாஹி அலைஹி தமது அஹ்காமில், அலீ இப்னு ஸகன் ரஹ்மதுல்லாஹி அலைஹி "ஸுனனுஸ் ஸிஹாஹ்" வில், இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர் ரஹ்மதுல்லாஹி அலைஹி தமது தல்கீஸிலும் குறிப்பிடுகின்றனர்.

♣ ஷுஹதாக்கள், வலிமார்கள், இமாம்கள் நல்லடியார்கள் ஷபாஅத் எனும் (சிரிய பரிந்துரை) செய்வார்களா?

உண்மை முஃமின்களுக்கு சிறிய ஷபாஅத்தின் அதிகாரம் வழங்கப்படும். அவர்கள் நமக்காக ஷபாஅத் செய்வார்கள் மேலும் அல்லாஹ் விரும்புகிறவர்களுக்கு அவர்கள் ஷபாஅத் செய்வார்கள் அந்த அடிப்படையில் மறுமை நாளில் நபிமார்களும் பரிசுத்த இமாம்களும் இறைநேசர்களும் அல்லாஹ்வின் அனுமதியுடன் சில பாவிகளுக்குப் சிறிய பரிந்துரை செய்வார்கள் என்றும் அவ்வாறு பரிந்துரை செய்யப்படுவோர், அல்லாஹ்வின் பாவமன்னிப்பைப் பெற்று, அவனது அருளுக்குத் தகுதியுள்ளவர்களாக மாறி விடுவார்கள் என்று இமாம்கள் கூறியுள்ளார்கள்.

♦மறுமை நாளில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் ''ஷபாஅதுல் குப்ரா" எனும் மாபெரும் பரிந்துரை செய்வார்கள். அவர்களையடுத்து ஏனைய நபிமார்களும் பரிசுத்த இமாம்களும் ஏன் உலமாக்கள், ஷுஹதாக்கள், முஃமின்கள், ஆரிபீன்கள் மற்றும் அல்குர்ஆன், சாலிஹான நல்லமல்கள் என்பனவும் மனிதர்களுக்கு பரிந்துரை செய்ய முடியும். அந்த அடிப்படையில் அல்லாஹ்வுடனும் அவனது நேசர்களுடனுமான தம் தொடர்பைத் துண்டிக்காதவர்களுக்கே ஷபாஅத் பெறும் பாக்கியம் உண்டு. இதனடிப்படையில், ஷபாஅத் செய்யப்படுவதற்கான தகுதி பெறுவதற்கும் சில நிபந்தனைகள் இருக்கின்றன. அவை, மனிதர்களது செயற்பாடுகளுடனும் எண்ணங்களுடனும் தொடர்புடையவையாகும். 'அவன் பொருந்திக் கொண்டவரைத் தவிர, (வேறெவருக்கும்) இவர்கள் பரிந்துரை செய்ய மாட்டார்கள்." (அல்குர்ஆன் - 21:28)

ஷபாஅத் என்பது, ஏற்கனவே நாம் குறிப்பிட்டது போல நல்வழியில் மனிதர்களைப் பயிற்றுவிக்கும் ஒரு வழிமுறையாகும். அவர்கள் பாவத்தில் மூழ்குவதையும், இறைநேசர்களுடனான தொடர்புகளை துண்டிப்பதையும் தடுக்கின்ற ஓர் உத்தியாகும். அவர்களது உள்ளங்களில் எழுகின்ற தீய உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, நல்வழியின் பால் அவர்களைத் திசை திருப்ப முயற்சிக்கின்ற தவறுகளில் விழுகின்ற போது தொடர்ந்தும் அதில் மூழ்காமல் மீண்டு வர அவரைத் தூண்டுகின்ற செயலாகும்.

♦ இமாம் ஜஃபர் ஸாதிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்: முந்தியோர் பிந்தியோர்களில் எவரும், மறுமை நாளில் நபிகளாரின் ஷபாஅத்து தேவையற்றவர்களாக இல்லை.

நூல்: பிஹாருல் அன்வார் - பாக.8, பக்.42

♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி கூறினார்கள்:

மறுமையில், ஷபாஅத்து செய்யக் கூடியவை ஐந்து. "அல்குர்ஆன், உறவினர்களை சேர்ந்து நடத்தல்,அமானத், உங்களது நபி, உங்களது நபியின் குடும்பத்தினர்."

நூல்: கன்சுல் உம்மால் பாக 14 பக் 390 ஹதீஸ் 39041


♦அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதிவாருங்கள். ஏனெனில், குர்ஆன் ஓதிவருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும். இரு ஒளிச்சுடர்களான ”அல்பகரா” மற்றும் ”ஆலு இம்ரான்” ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதிவாருங்கள். ஏனெனில், அவை மறுமை நாளில் நிழல்தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும். ”அல்பகரா” அத்தியாயத்தை ஓதிவாருங்கள். அதைக் கையாள்வது வளம் சேர்க்கும். அதைக் கைவிடுவது இழப்பைத் தரும். இவ்வத்தியாயத்திற்கு முன் சூனியக்காரர்கள் செயலிழந்துபோவார்கள். அறிவிப்பவர் அபூஉமாமா அல்பாஹிலீ ரலியல்லாஹு அன்ஹு (நூல் முஸ்லிம் 1470, 1471)

”பருவ வயதை அடையாத மூன்று குழந்தைகளை (ஒரு பெண் பறிகொடுத்தால் அவளை நரகத்திலிருந்து காக்கும் திரையாக அக்குழந்தைகள் இருப்பார்கள்)” என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.  


ஹழ்ரத் ​​அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: புகாரி 102,1250,7310

♦ மேலும் இமாம் ஜஃபர் ஸாதிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது: 'மறுமை நாளில் ஆலிமும் (அறிஞர்) ஆபிதும் (வணக்கவாளி) அல்லாஹ்வின் முன் கொண்டு வரப்படுவார்கள். ஆபிதைப் பார்த்து நீர் சுவர்க்கம் செல்லலாம் என அல்லாஹ் அனுமதி வழங்குவான். ஆலிமிடம், 'நீர் சற்று நில்லும், மக்களை நீர் சிறப்பாக பயிற்றுவித் தமையின் பொருட்டால் அவர்களுக்கு பரிந்துரை செய்யும்" என்று அல்லாஹ் கூறுவான்.


நூல்: பிஹாருல் அன்வார் -பாக 8 - பக் 56 - ஹதீஸ் 66

♦ மேலே நாம் சுட்டிக்காட்டிய ஹதீஸ்கள் ஷபாஅத் செய்வதன் தத்துவத்தை மிக அழகாகவும் தெளிவாகவும் உணர்த்துகின்றது. நபிமார்கள் அனைவரும் குறிப்பாக பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள், மறுமை நாளில் பாவிகளுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யும் அந்தஸ்தைப் பெற்றுள்ளார்கள் என்று நம் நம்பிக்கை கொள்வது கட்டாயமாகும். ஆனால், இதுவும் அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் நடைபெறும் என்பது கவனிக்கத் தக்கது. அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது: 'அல்லாஹ்வின் அனுமதியைப் பெற்ற பின்பே தவிர எந்தவொரு சிபாரிசு செய்பவருமில்லை.'

(அல்குர்ஆன் - 10:03) அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் பரிந்து பேசுவோர் யார்? (அல்குர்ஆன் 02: 255)

♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ஒரு மனிதருடைய ஷபாஅத்தைக் கொண்டு பனூ தமீம் கோத்திரத்தில் உள்ளவர்களை விட அதிகளவானவர்கள் சுவர்க்கம் புகுவார்கள்". அதற்கு ஸஹாபக்கள் "உங்களைத்தவிரவா (வேறொருவரைக் கொண்டா) யா ரஸுலுல்லாஹ்?" எனக் கேட்டனர். அதற்கு ரஸுலுல்லாஹ் "(ஆம்) என்னைத்தவர (வேறொருவரைக் கொண்டே)" எனக் கூறினார்.


​​நூல்கள்: ஜாமிஉ திர்மிதீ - (ஹஸன்) முஸ்தத்ரக் அல்-ஹாகிம் (ஸஹீஹ்) ஹாகிமின் அறிவிப்பில் ஷபாஅத்துச் செய்யும் அம்மனிதர் உவைஸ் அல்-கர்னி ரலியல்லாஹு அன்ஹு என கூறப்படுகிறது.

எனவே சுன்னத்தான காரியங்களைபற்றி அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் சுன்னத்துகளை கடைபிடிக்கிற போது தான் நாம் பெருமானாரின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஷபாஅத்திற்கு தகுதி உடையவர்களாவோம்.

நம்முடைய அமல்களால் நாம் சொர்க்கத்திற்குள் சென்று விட முடியாது.காரணம் : நம்மாலான செய்யும் நாட்கள் குறைவு, சொர்க்கத்தின் காலமோ எல்லையில்லாதது. ஆகவே மறுமை நாளில் யாருக்கும் யாரும் உதவி செய்ய முடியாத அந்த நேரத்தில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறைவன் வாக்களித்த (ஷபாஅத் குப்ரா) மாபெரும் பரிந்துரையை நம் அனைவருக்கும் தந்தருள்புரிவானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.