MAIL OF ISLAM

Knowledge & Wisdom



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின்  திருமுடிகளின்  சிறப்புகள்

​எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.

உயிருக்கு உயிரான உயிரிளும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடிகளின் சிறப்புகள்.

♣ இது பற்றிய வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு

நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடிகளுக்கு தனிச் சிறப்பு, கண்ணியம் கிடையாது. அம்முடியின் மூலம் பரக்கத் பெற்றுக்கொள்ள முடியாது, என்று அப்பாவி பாமர மக்கள் மத்தியில் விமர்சனம் செய்து அம்முடியினை அவமரியாதை செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருவதையும் நாம் காண்கின்றோம். இவர்களின் இப்படியான குர்ஆன், ஹதீஸ்களுக்கு முரணாக தீய செயல்முறை, பிரச்சாரங்களை விட்டும் அனைத்து மக்களையும் எல்லா வல்ல இறைவன் பாதுகாப்பானாக!

♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாது விழாவை முன்னிட்டு அன்றும் ஏனைய நாட்களிலும் குறிப்பாக ரபீவுல்அவ்வல் பிறை 1 - 12 ஆம் நாட்களிலும் அதிகமாக இடங்களில் பெருமானாரின் அருள் நிறை திரு முடியைப் பரக்கத்தை முன்னிட்டு பார்வையிடும் நிகழ்வுகள் இடம்பெறும் ஆனால் வழிகெட்ட வஹாபிகள் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் முடியினை விமர்சனம் செய்து அம்முடியின் மூலம் பரக்கத் பெற்றுக்கொள்ள முடியாது, நபிகளாரின் முடிக்கு தனிச் சிறப்பு கண்ணியம் கிடையாது என்று குர்ஆன், ஹதீஸ்களுக்கு முரணாக பாமர மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதையும் நாம் காண்கின்றோம்.


​அந்த அடிப்படையில் இது தொடர்பில் நபிகள் நாயகத்தின் திரு முடிக்கு தனிச் சிறப்புள்ளதா? அதன்மூலம் பரக்கத் பெற்றுக்கொள்ளலாமா? நோய்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொள்ளலாமா? என்பதை குர்ஆன், ஹதீஸ்களின் அடிப்படையில் தெளிவாக விளங்கி நடப்போம். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடி பாதுகாக்கப்பட்டு வந்ததா? சஹாபாக்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்தனரா? என்பது குறித்து ஹதீஸ்களின் வெளிச்சத்தில் ஆராய்வோம்.


♣   நபிமார்கள் உபயோகித்து வந்த பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன என்பதற்குறிய ஆதாரம்

குர்ஆனிலோ, ஹதீதுகளிலோ நபிமார்கள், வலிமார்களின் முடி,உடைகள், அவர்கள் பாவித்த பொருட்கள், ஞாபகச் சின்னங்களை பேணி கண்ணியம் செலுத்தி பாதுகாத்து வருவது பற்றியும், அப்படி வைப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றியும் அவைகளைக்கொண்டு பரக்கத் பெறுவதற்க்கு ஆதாரம் இல்லை என்று கூறுபவர்கள் குர்ஆன், ஹதீஸ்களின் சரியான அறிவு இல்லாததே காரணம் ஆகும். முந்தைய நபிமார்கள், வலிமார்கள் உபயோகித்து வந்த பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன, கண்ணியம் செலுத்தப்பட்டு வந்தன அவற்றின் பொருட்டைக் கொண்டு உதவி தேடப்பட்டும் வந்தது என்பதற்கு அல்குர்ஆனில் தெளிவான ஆதாரம் உண்டு.

♦ (இன்னும்) , அவர்களுடைய நபி அவர்களிடம், “நிச்சயமாக அவருடைய அரசதிகாரத்திற்கு அடையாளமாக உங்களிடம் ஒரு தாபூத் (பேழை) வரும்; அதில் உங்களுக்கு, உங்கள் இறைவனிடம் இருந்து ஆறுதல் (கொடுக்கக் கூடியவை) இருக்கும்; இன்னும், மூஸாவின் சந்ததியினரும்; ஹாரூனின் சந்ததியினரும் விட்டுச் சென்றவற்றின் மீதம் உள்ளவையும் இருக்கும்; அதை மலக்குகள் (வானவர்கள்) சுமந்து வருவார்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் நிச்சயமாக இதில் உங்களுக்கு அத்தாட்சி இருக்கின்றது“ என்று கூறினார். (அல்குர்ஆன் : 2:248)

குறிப்பு :- இந்த வசனத்தில் குறிப்பிடப்படுகின்ற நபி மூஸா நபி ஹாரூன் அலைஹிமிஸ்ஸலாம் ஆகியோரது ஞாபகச் சின்னங்கள் என்பது குறித்து திருமறை விரிவுரையாளர்கள் அனைவரும் ஒத்தக் கருத்தையே கொண்டுள்ளனர். அவர்கள் விட்டுச் சென்ற பொருட்கள் பின்வருமாறு:- பலகைத்துண்டுகள், மூஸா நபியின் கம்பு, ஆடைகள், தௌராத் வேதத்தின் ஒரு பகுதி, மூஸா நபியின் செருப்புகள், ஹாரூன் நபியின் தலைப்பாகை, மேலங்கி ஆகும்.


​​ஆதாரம்: தப்ஸீர் இப்னு அப்பாஸ், தப்ஸீர் மதாரி;குத் தன்ஸீல்,தப்ஸீர் லுபாபுத் தஃவீல், தப்ஸீருல் பைளாவி


​​எனவே இந்த பொருட்கள் பாதுகாக்கப்பட்டு, பெட்டியினை முன்னால் வைத்து உதவி தேடுவர் வெற்றியும் பெறுவர் என்று காணக் கிடக்கிறது நபிமார்களின் புனிதப் பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வந்தது என்பதற்கு குர்ஆன் கூறும் அத்தாட்சியே இதுவாகும். ஒருவர் விட்டு சென்ற பொருளை அழித்துவிடவேண்டும் அல்லது அதை பாதுகாப்பது கண்ணியம் செலுத்துவது மார்கத்தில் முரண் என்றால் அல்லாஹ் ஏன் மூஸாவின் சந்ததியினரும்; ஹாரூனின் சந்ததியினரும் விட்டு சென்றதை பாதுகாக்கவேண்டும். எனவே மேற்கண்ட வசனம் தெளிவாக நமக்கு உணர்த்தவரும் செய்தி, நபிமார்கள் மட்டுமல்ல நல்லடியார்கள் விட்டு சென்ற பொருளை பாதுகாப்பதும் கூடும் என்பதாகும்.

♦ உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அண்ணலார் பெருமாணார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இரு காலுறைகள், ஒரு கம்பு, ஒரு வாளுறை இருந்தன. அவற்றை அவர்கள் மிகக் கண்ணியத்தோடு பாதுகாத்து அவற்றை தினமும் பார்வையிடவும் செய்வார்கள்.

சிறப்பு விருந்தினர்கள் யாராவது வருகை தரும் போது 'யார் மூலம் உங்களை கண்ணியப்படுத்தினானோ அவரின் அனந்தப் பொருட்கள் இவை' என்று கூறுவார்கள்.

நூல் : றூஹுல் ஈமான் பக்கம் 2

♦  உங்களை உலகத்தாருக்கு ஒரு ‘றஹ்மத்’ அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை. (திருக்குர்ஆன் 21;107)

இத்திரு வசனத்தை உரிய முறையில் ஆராய்ந்தால் நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கால் நகம் முதற் கொண்டு தலைமுடிவரையுள்ள சகல உறுப்புக்களிலும் ‘பறகத்’ அருள் கண்ணியம் உண்டென்பது தெளிவாக விளங்கும். மேலே கூறிய திரு வசனத்தில் ‘உங்களை அருளாக அனுப்பியுள்ளோம்’ என்றுதான் அல்லாஹ் கூறியிருகின்றானேயல்லாமல் உங்களில் அருள் இருக்கிறதென்றோ உங்களுடைய கையில் அருள் இருக்கிறது என்றோ அவன் கூறவில்லை.


​​‘உங்களை’ என்று அல்லாஹ் முன்னிலைப்படுத்தியது நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களையேயன்றி அவர்களின் கையை மட்டுமோ அல்லது காலை மட்டுமோ அல்ல. ‘உங்களை’ என்ற சொல் நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை முழுமையாக குறிக்கின்றதேயல்லாமல் அவர்களின் ஒரு சில உறுப்புக்களை மட்டுமோ பாதி உடலை மட்டுமோ குறிக்காது. எனவே “உங்களை றஹ்மத்தாக அனுப்பினோம்’ என்ற இறை வசனத்தின் அர்த்தம் நீங்கள் முழுமையாகவே உலகத்தாருக்கு றஹ்மத்தாக இருக்கின்றீர்கள் என்தேயாகும்.

இந்த விபரத்தின்படி நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தலையுச்சியில் இருந்து உள்ளங்கால் வரையிலான சகல உறுப்புக்ளையும் ஒன்று சேர்த்துக் கொண்ட உடலையே “உங்களை” என்றசொல் குறிப்பதால் நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் சகல உறுப்புக்களிலும் பறகத்தும், றஹ்மத்தும் கண்ணியமும் உண்டென்பது தெளிவாகிவிட்டது.

♦ பரா இப்னு ஆஸிப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது சிவப்புநிற ஆடையணிந்து, தோள் புஜத்தைத் தொடும் தலைமுடியுடன் அழகுற நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் விளங்கியது போல் வேறெவரையும் நான் கண்டதில்லை. அவர்களின் தலைமுடி தோள்புஜத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும்.

இரண்டு தோள் புஜங்களுக்கு இடைப்பட்ட தொலைவு அதிகமாக இருக்கும். (மார்பு அகன்றிருக்கும்) அவர்கள் குட்டையாகவோ நெட்டையாகவோ இருக்கவில்லை.


​​நூல் - ஸூனன் திர்மிதி, புகாரி, முஸ்லீம், நஸயீ

♦ நபித்தோழர் ஹாலித் பின் வலீத் (றழியல்லாஹு லாஹு அன்ஹு) அவர்களின் தொப்பியில் நபி (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் தலைமுடிகளில் சில முடிகள் இருந்தன. ஒரு யுத்தநேரம் அவர்களிடமிருந்து அந்தத் தொப்பி தவறிவிட்டது. அதனால் காலித் பின் வலீத் ஆத்திரமடைந்தவராகக் காணப்பட்டார்.அங்கிருந்த நபீத்தோழர்கள் தொப்பி காணாமற் போனதற்காக காலித் இவ்வாறு கோபப்படுகிறார் என்று பேசிக்கொண்டனர்.


​​இதைக்கேட்ட காலித் இப்னு வலீத் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஸஹாபாக்களை நோக்கி “தொப்பி” காணாமற் போனதற்காக நான் கவலைப்பவோ கோபப்படவோ இல்லை. அதில் நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தலை முடிகளிற் சில முடிகள் இருக்கின்றன. அதன் “பறகத்” தவறிவிடுமென்றும் அது காபிர்களிடம் போய்விடும் என்று அஞ்சுகிறேன்” என்றுசொன்னார்கள்.

அறிவிப்பு ;-  ஹழ்ரத் காளி இயாள் (றழியல்லாஹு அன்ஹு)

​ஆதாரம் ;- அஷ்ஷிபா, தபறானி 9:349, ஹாகிம்

காலித் பின் வலீத் (றழியல்லாஹு அன்ஹு)அவர்கள் மிகப் பிரசித்தி பெற்ற ஸஹாபாக்களில் ஒருவர் வீர நெஞ்சுடையவர், போர்க்களங்களில் தளபதியாகத் தலைமை தாங்கிப்போர் புரிபவர். எது சரி?, எது பிழை?, என்பதையும், எது “ஈமான்” எது “குப்ர்” என்பதையும் நன்கறிந்தவர். இத்தகைய சிறப்புக்களைக் கொண்ட ஸஹாபீ நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது கொண்ட பாசத்தின் காரணமாக ஹஸரத் அபூதல்ஹா (றழியல்லாஹு அன்ஹு) அவர்களிடமிருந்து பெற்ற நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் திரு முடியை தனது படைத் தொப்பியில் வைத்துத் தைத்திருந்தது அவர்களின் முடியைக் கொண்டு பறகத்பெறுவதற்கும், காபிரீன்களின் தாக்குதல்களிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்குமேயாகும்.

நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் முடியில் பறகத் உண்டென்றும். அதை வைத்திருப்பதால் எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்புக் கிடைக்குமென்றும் நபித்தோழர் காலித் பின் வலீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நம்பியிருந்தார்கள் என்பது இந்த ஹதீஸ் மூலம் தெளிவாகிறது. நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் முடியைக் கொண்டு “பறகத்” பெறுவது, கண்ணியம் செலுத்துவது போன்றுதான் அவ்லியாக்கள், ஷெய்குமார்கள் ஆகியோரின் முடி, நகம், போன்றவற்றைக் கொண்டு “பறகத்” பெறுவதுமாகும்.


​​ஒரு நபீயின் அல்லது ஒரு வலீயின் முடி, நகம் அல்லது அவர்கள் உடுத்த உடை, அவர்கள் பாவித்தபொருட்கள் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் சமாதிகொண்டுள்ள கப்ரின் மீது போடப்பட்டுள்ள போர்வை, மலர், நூல் போன்றவற்றை “பறகத்”தை நாடி எடுத்துவைத்துக்கொள்ளுதல் நபித்தோழர் “காலித்” பின் வலீத் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் செயல் போன்றதேயாகும்.

♦ நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் “காதிம்” பணியாளர் ஹஸ்ரத் அனஸ் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தலைமுடியை தன்னுடன்வைத்து அடக்க வேண்டுமென்று வஸிய்யத் இறுதி உபதேசம் செய்தார்கள்.

​நூல்: புஹாரி

♦ அனஸ் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் இருந்து பெற்ற நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தலைமுடிகளிற் சில என்னிடம் உண்டு என்று அபூதர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் நான் சொன்ன பொழுது நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் முடியில் ஒரு முடி என்னிடம் இருப்பது உலகத்தையும், உலகிலுள்தையும் விட எனக்கு மிகச் சிறந்ததாகும் என்று என்னிடம் கூறினார்கள் என்று அனஸ் பின் ஸீரீன் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


​​நூல் : புஹாரி

♦ ஹஸ்றத் அப்துல்லாஹ் பின் மவ்ஹிப் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். எனது மனைவி ஒரு தண்ணீர்ப் பாத்திரத்தை என்னிடம்கொடுத்து உம்மு சல்மா (றழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் அனுப்பிவைத்தாள். ஒருவனுக்கு கண் திரிஷ்டி அல்லது ஏதோ ஒன்று ஏற்படுமாயின் இவ்வாறு தண்ணீர்ப் பாத்திரம் ஒன்றை உம்மு சல்மாவிடம் என் மனைவி அனுப்புவது வழக்கம்.


​​அதேபோல் தான் என்னையும் அனுப்பிவைத்தாள் உம்மு சல்மா அவர்கள் எனது தண்ணீர்ப் பாத்திரத்தைக் கண்டதும் தன்னிடமிருந்த வெள்ளிப் பாத்திரம் ஒன்றைக் கொண்டு வந்து அதில்வைக்கப்பட்டிருந்த நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தலைமுடியை எடுத்து நான் கொண்டு சென்ற தண்ணீர்ப் பாத்திரத்தினுள் அதைவிட்டு அசைத்தார்கள் அப்பொழுது நான் பாத்திரத்தினுள் எட்டிப்பார்த்தேன் அங்கு சிவந்த முடிகள் இருப்பதை கண்டேண் என்று சொன்னார்கள்.

ஆதாரம் ;- புஹாரி-5896, மிஷ்காத்

கண்திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நோயால் பீடிக்கப்பட்டவர்களுக்கும் கொடுப்பதற்காகச் மக்கள் தண்ணீர்ப் பாத்திரங்களை அன்னை உம்மு சல்மா (றழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கொண்டு வருவார்கள். அன்னை உம்மு சல்மா (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் வெள்ளிப்பாத்திரம் ஒன்றில் நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் முடியை மிகப்பக்குவமாகவும் கண்ணியமாகவும் வைத்திருந்தார்கள். அவர்களிடம் யாரேனும் நோயாளிகளுக்குக் கொடுப்பதற்காக தண்ணீர் பாத்திரங்களைக் கொண்டு சென்றால் அப்பாத்திரங்களில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் திருமுடியை விட்டு அதை அசைத்து விட்டுக் கொடுப்பது வழக்கம்.


​​இந்த நீரைக் குடிக்கும் நோயாளர்கள் சுகம் பெற்று விடுவார்கள். இவ்வழக்கம் அந்நேரம் ஸஹாபாக்கள் மத்தியில் பகிரங்கமாக அறியப்பட்ட விஷயமாகவே இருந்து வந்தது. அல்லாஹ் திருக்குர்ஆனில் நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை முன்னிலைப்படுத்தி “உங்களை அருளாக அனுப்பியுள்ளேன்’’ என்று கூறியபடி நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்களின் முடியிலும் “பறகத்’’ உண்டு என்பதும் அதேபோல் அந்த முடிபட்ட நீர்நோய்க்கு மருந்தாகி விடுகிறதென்பதும் தெளிவாகிட்டது.

♦பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இத்திரு முடி, அன்னாரது மறைவுக்குப் பின்னரே அதிகமாக நரைத்திருக்கிறது. ஏனெனில் அன்னை உம்மு ஸல்மா ரலயில்லாஹு அன்ஹா அவர்கள் அத்திருமுடியை அளவுகடந்து கண்ணியப்படுத்தும் பொருட்டு அம்முடிக்கு அத்தர் பூசுபவர்களாக இருந்ததாக அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்புச் செய்வதை புகாரியின் ஓரக்குறிப்பிலும் (பக்கம் 875) இமாம் நவவி அவர்கள் முஸ்லிமுக்கு எழுதிய விரிவுரை (பாகம் 2 பக்கம் 254) யிலும் காணலாம்.

♦ நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மினாவுக்கு வந்தார்கள் பிறகு “ஜம்றா’’ எனுமிடத்திற்க்கு வந்து கல்லெறிந்தார்கள். பிறகு மினாவிலுள்ள தங்களின் வீட்டுக்கு வந்து “குர்பான்’’ கொடுத்துவிட்டு முடிவெட்டுபவனையழைத்து தலைமுடியைக் களைந்துவிடுமாறு பணித்தார்கள். முடிவெட்டுபவர் நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வலப்பக்கத் தலைமுடியைக் களைந்தார். அப்போது நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஸஹாபி அபூதல்ஹதுல் அன்ஸாரி (றழியல்லாஹு அன்ஹு) அவர்களையழைத்து அந்த முடியைக்கொடுத்தார்கள். இடப்பக்கமுள்ள முடியையும் களைந்து அதையும் அந்த ஸஹாபியிடமே கொடுத்து அவற்றை மக்களுக்குப் பங்குவைத்துவிடுமாறு பணித்தார்கள்.


ஆதாரம் ;- புஹாரி ,முஸ்லிம், பத்லுல் மஜ்ஹூத் ஷர்ஹூ,அபூதாவூத்,மிஷ்காத் பக்கம் 232

நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தங்களின் தலைமுடியைக் களைந்து அபூதல்ஹதுல் அன்ஸாரி (றழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம்கொடுத்து அதைப் பங்குவைக்குமாறு பணித்திருப்பது அவர்களின் முடியில் அருளுண்டு என்பதையும் அவ்வருளை ஒருவர் மட்டுமன்றிப் பலரும் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் அதைப் பங்குவைக்குமாறு சொன்னார்கள் என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது.


​​ஆகவே நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் பங்கு வைக்கப்பட்ட அருள் நிறைந்த திருமுடிகள் ஸஹாபாக்கள் மத்தியில் பரவலாக இருந்து வந்தன. அந்த முடிகள் ஸஹாபாக்களால் பாதுகாக்கப்பட்டு அவர்களின் காலத்தின் பிறகு அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்களிடம் வந்து சேர்ந்தன.நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் முடியைப் பெற்ற ஸஹாபாக்கள் அவர்கள் மரணிக்கும் வரை மதீனாவிலேயே தங்கியிருக்க வில்லை. ஒரு சிலர் அங்கு வாழ்ந்தாலும் கூடப் பலர் பல நாடுகளுக்கு வியாபாரத்திற்காகவும் வேறுதேவைகளுக்காகவும் போகலானார்கள். அப்பொழுது நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் திருமுடிகளையும் தம்முடன் எடுத்துச்சென்றார்கள். இதனால் உலகின் பல நாடுகளுக்கும் அந்தத் திருமுடிகள் போக வாய்ப்பு ஏட்பட்டது.

♦முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் லுங்கி, சட்டை, மேலாடை, சில திருமுடிகள், நகங்கள் இருந்தன. முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்கள் உயிர் பிரியும் நேரத்தில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சட்டையால் என்னை கபனிடுங்கள், மேலாடையால் என்னை சுற்றி லுங்கியை எனக்கு உடுத்துங்கள். எனது கண்ணிலும், கன்னத்திலும், நெற்றியிலும் அண்ணலாரின் திருமுடியையும் நகங்களையும் வையுங்கள். எனக்கும் அர்ஹமுர்ராஹிமீனுக்குமிடையே நேசத்தை ஏற்படுத்துங்கள் என்று கூறினர்.


​​நூல்: இக்மால் பக்கம் 617

♦ அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடி கீழே விழாதவாறு தாங்கி பிடித்து பரக்கத்திற்காக பாதுகாத்து வைக்கும் வழக்கம் சஹாபாக்களிடம் இருந்தது.

​ 

ஷரஹ் முஸ்லிம் பாகம் 2 பக்கம் 256

♦நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் திருமுடி ஏனையவர்களின் முடிக்கு மாறானது. அவர்களின் முடியில் கிளைகள் இருக்கும். இந்த விஷேடம் வேறெவரின் முடிக்கும் இல்லை. நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் முடியை இரண்டாக கிழிக்க முடியும். இப்படியொரு விஷேடம் வேறொருவரின் முடிக்கும் இல்லை. அவர்களின் திருமுடி மிக அற்புதமானது. அது ஒரு நேரம் கருப்பு நிறத்தில் தென்படும். இன்னொரு நேரம் சிவப்பு நிறத்தில் தென்படும். இப்படியான விஷேட தன்மையும் வேறொருவரின் முடிக்கும் இருந்தது கிடையாது.


​​நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் முடி எல்லா நேரமும் ஒரே அளவில் இருக்காது. ஒருநேரம் ஐந்து அங்குல நீளத்தில் இருக்கும் முடி இன்னொரு நேரத்தில் பத்து அங்குல நீளத்தில் இருக்கும். இப்படியொரு விஷேடம் வேறோருவரின் முடிக்கும் இல்லை. நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் முடி உயிருள்ள வஸ்து போன்று அசைந்து கொண்டும், துடித்துக் கொண்டுமிருக்கும். இப்படியொரு விஷேடம் வேறொருவரின் முடிக்கும் இல்லை.

♦ எனவே மேலே கூறிய ஹதீஸ்களிலிருந்து நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் திருமுடியின் மகிமை எத்கையது என்பது விளங்கும். மேலும் ஹதீதுகள் செய்திகளில் இருந்து நன்மக்கள் நாயகத்தினுடைய திருமுடியை எந்த அளவுக்கு கண்ணியப்படுத்தியிருக்கிறார்கள் என்பதையும் எவ்வாறு அந்த முடிகளின் மூலம் நன்மைகளை பெற்றிருக்கின்றனர் என்பதையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.


​​இன்று ஒரு சிலர் நாயகத்தின் திரு முடியில் பரக்கத் இல்லை என்றும் இன்னும் சிலர் இது றஸூலுல்லாஹ்வுனுடைய முடி என்பதற்கு ஆதாரம் இல்லை என்றும் தனது அறியாமையை வெளிப்படுத்தி வருகின்றனர். நாயகம் தன்னுடைய திரு முடியை மக்கள் மத்தியில் பங்கிட்டார்கள் என்பதையும் ஸஹபாக்களும் தாபியீன்களும் அந்த முடிகளை எவ்வாறு கண்ணியப்படுத்தி அதன் மூலம் பிரயோசனம் பெற்றனர் என்பதையும் மேலே சொல்லப்பட்ட பல ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. இன்று சிலர் இது நாயகத்தின் முடி என்று காபன் சோதனை செய்து உறுதிப்படுத்துமாறு கோஷம் எழுப்புகின்றனர். ஆனால் இந்த கோஷம் இஸ்லாமிய அடிப்படையில் ஏற்கத்தக்க ஒன்றல்ல.


​​எதையும் கண்டு பரிசோதித்துத்தான் ஈமான் கொள்ள வேண்டும் என்கின்ற போக்கு இஸ்லாத்துக்கு வெளியில் நம்மை தள்ளிவிடும். இஸ்லாமிய மார்க்கம் மறைமுக நம்பிக்கையில்தான் தனது அஸ்திவாரத்தை அமைத்திருக்கின்றது. நபிகளார் நொடிப்பொழுதில் மிஃராஜ் பயணம் சென்று திரும்பிய செய்தியை அவர்கள் வெளிப்படுத்தியவுடன் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் தனது அறிவுக்கு வேலை கொடுக்காமல் ஏற்றுக்கொண்டார்கள். அதனால்தான் அவர்கள் சித்தீக் என்ற பெயரால் இன்றுவரை போற்றப்படுகிறார்கள். ஆனால் அறிவுக்கு வேலை கொடுத்தோர் நாயகத்தின் மிஃராஜை பொய்ப்பித்து இஸ்லாமிய வட்டத்தைவிட்டு வெளியேறி நரகின் எரிகொள்ளியாயினர்.

மேலும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களுடைய திருமுடிகளை இன்று பாதுகாத்துவருவோர் அதற்குரிய ஸனதையும் கொண்டிருக்கின்றனர் என்ற தகவலையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும். நாயகத்தினுடைய திருமுடி பிற்காலங்களில் பாதுகாக்கப்பட்டு வந்ததற்கான ஏராளமான வரலாற்று சான்றுகளை பல வரலாற்றுத் தொகுப்புக்கள் நமக்கு உறுதிசெய்கின்றன. நாயகத்தினுடைய திருமுடிக்கு பரக்கத், கண்ணியம் உண்டென்ற செய்தியை ஆதாரபூர்வமான செய்திகளில் இருந்து புரிந்து கொண்ட நாம், முஸ்லிம்களால் நாயகத்தினுடைய திருமுடி காண்பிக்கப்படும் போது அதனை தரிசித்து கண்ணியப்படுத்துவதனால் அல்லாஹ் ஒருபோதும் நம்மை குறைபிடிக்கமாட்டான்.

எனவே இதனை உணர்ந்தவர்களாக நாயகத்தினிடைய திரு முடியை முடியுமானவரை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் தரிசிப்போம்.இது நாயகத்தினுடைய முடிதானா என சந்தேகம் கொள்வோர் குறைந்தபட்சம் அருவெறுக்கத்தக்க விமர்சனங்களையாவது தவிர்த்துக்கொள்வது நல்லது.உங்களது ஊகங்களை தாண்டி உண்மையில் அது நாயகத்தினுடைய முடிதான் என்றிருக்குமானால் உங்கள் நிலையை சிந்தனை செய்து பாருங்கள்! நாளை மறுமையில் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை எந்த முகத்தோடு நோக்கப்போகிறோம் என்பதனையும் ஒரு கணம் சிந்தித்து ஈமானோடு நடந்துகொள்வதே ஏற்றமாகும்.