MAIL OF ISLAM

Knowledge & Wisdom



வலிமார்களுக்கு நேர்ச்சை செய்வது கூடுமா?


​எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


அல்லாஹ்வின் இறைநேசர்களாகிய வலிமார்களுக்கு நேர்ச்சை செய்வதன் உண்மை நிலை என்ன? என்பதைப் பற்றி ஓர் ஆய்வு.

​​

♣  நேர்ச்சை என்றால் என்ன?

மனிதன் தனக்கு அடிப்படையில் கடமையில்லாத ஒரு விடயத்தை அல்லாஹ்வுக்காக தன் மீது கடமையாக்கிக் கொள்ளல் நேர்ச்சை ஆகும். ஆனால் எம் மீது அடிப்படையில் கடமையாக இருக்கும் விடயங்களை நேர்ச்சை செய்ய முடியாது உதாரணமாக ரமழான் மாதத்தில் நோன்பு வைப்பேன், பர்ழான தொழுகையினை நேரம் தவராமல் தொழுவேன் என்று நேர்ச்சை செய்ய முடியாது.


​​ஆகவே ஏதாவது ஒரு செயல் நிறைவேறினால் குர்பான் கொடுப்பேன் என்று ஒருவர் நேர்ச்சை செய்தால் அந்தச் செயல் நிறைவேறிய பின் குர்பான் கொடுப்பது கடமையாகும். மாறாக அந்தச் செயல் நிறைவேறிய பின் நேர்ச்சையினை நிறைவேற்றாமல் இருந்தால் குற்றமாகும்.


​​

♣ இஸ்லாம் மார்க்கத்தில் நேர்ச்சை செய்வதற்கு அனுமதி உண்டா?

நேர்ச்சை செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. அவை மார்க்கம் அனுமதித்த வகையில் இருக்க வேண்டும். மார்க்கம் அனுமதிக்காத வழிகளில் நேர்ச்சை செய்திருந்தால் அதை நிறை வேற்றத் தேவையில்லை. இன்னும் செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கு அறிவான்.

(அல்குர்ஆன்: 2:270)

♦ மர்யமே அவற்றை உண்டு ஆற்று நீரைப் பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் பர்க்க நேரிட்டால் மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கிறேன்; ஆதலால் இன்று எந்த மனிதருடனும் பேச மாட்டேன்' என்று கூறுவீராக! (அல்குர்ஆன்: 19:26)

♦ இம்ரானின் மனைவி 'என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ள குழந்தையை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும் நன்கு அறிபவனாகவும் இருக்கின்றாய்' என்று கூறினார்.  ​(அல்குர்ஆன்: 3:35)

♦ மேலும் அல்லாஹ் கூறுகிறான். 'நல்லவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள்'

(அல்குர்ஆன்: 76:7)

♦ பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்! பழமையான அந்த ஆலயத்தை தவாஃப் செய்யட்டும்.  ​(அல்குர்ஆன் 22:29)

♦ அல்லாஹ்வுக்கு வழிபடும் காரியத்தில் ஒருவர் நேர்ந்து கொண்டால் (அதை அவர் நிறைவேற்றி) அவனுக்கு அவர் வழிபடட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் காரியத்தில் ஒருவர் நேர்ச்சை செய்திருந்தால் (அதை நிறைவேற்றி) அவனுக்கு அவர் மாறு செய்ய வேண்டாம்' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


​​நூல்கள்: புகாரி, திர்மிதீ, நஸயீ


​​ஆகவே மேற்கண்ட குர்ஆன் வசனங்களும், நபி மொழிகளும் ஆகுமாக்கப்பட்ட வழிமுறையில் நேர்ச்சையை செய்யலாம் என அறிவிக்கின்றன.


​​

♣  நேர்ச்சை எவ்வாறு வைக்க வேண்டும்

இறைவனுக்காக நாம் செய்யும் நேர்ச்சைகள் பின்வரும் தன்மைகளில் அமைந்திருக்க வேண்டும். இறைவனும் அவனது தூதர் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நமக்கு கற்றுத் தந்திருக்கின்ற சுன்னத்தான, ஆகுமாக்கப்பட்ட வணக்கங்களில் ஒன்றாக அது அமைந்திருக்க வேண்டும். மேலும் மனித சமுதாயத்துக்கு உதவும் வகையில் தர்மம் - ஸ‌தகா போன்றவைகளாக அமைந்திருக்க வேண்டும். இந்த தன்மைகளில் இல்லாத எந்தக் காரியத்தையும் நாம் நேர்ச்சை செய்ய முடியாது.

நம்முடைய முஸ்லிம் சமூகத்தில் குறிப்பாக பெண்களின் பலர் நேர்ச்சை வைக்கும் முறையே மார்க்கத்திற்கு மாறுபட்டதாக உள்ளது. நினைக்கும் பொழுது வேடிக்கையாக இருக்கிறது. நேர்ச்சை செய்யும் முறையையும், அதை நிறைவேற்றும் முறையையும் நம்முடைய மார்க்க பெரியார்கள், இமாம்கள் நமக்கு நல்லவிதமாக விளக்கித் தந்துள்ளார்கள்.


​​ஆகவே பொடுபோக்காக அலட்சியமாக எதுக்கெடுத்தாலும் அடிக்கடி நேர்ச்சை வைப்பதை தவிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் நாம், நம்முடைய மனம் போல் நேர்ச்சை வைத்து பாவத்தை சம்பாதித்துக் கொள்கிறோம். இதற்கு காரணம் மார்க்க அறிவைப் பெண்களுக்கு கற்றுக் கொடுக்காத காரணம் தான் என்று நிச்சயமாக கூற முடியும். ஏதேனும் நமக்கு நிறைவேற நேர்ச்சை செய்வதாக இருந்தால், அந்தக் காரியம் முடிந்துவிட்டால் அதை நிறைவேற்றுவேன் என்று நிய்யத்து வைக்க வேண்டும்.

♦ உதாரணமாக: குர்பானி கொடுப்பதாக, நபில் நோன்பு நோற்பதாக, குர்ஆன் ஓதுவதாக, ஏழைகளுக்கு உணவளிப்பதாக, தான தர்மம் செய்வதாக, ஸலவாத்துகள் ஓதுவதாக, நபில் தொழுகை தொழுவதாக, இன்ன பெரியார்களுக்கு (வலிமார்களுக்கு) நன்மையை சேர்க்கும் பொருட்டு  குர்பான் கொடுப்பதாக, குர்ஆன் ஓதி ஏழைகளுக்கு உணவளிப்பதாக, ஏழைகளுக்கு இன்ன இன்ன உதவி செய்வதாக (உதாரணமாக நிக்காஹ் செலவுகள், வீடு கட்டிக் கொடுத்தல், ஆடைகள் வாங்கிக் கொடுத்தல்), மத்ரஸாவில் ஓதக் கூடிய மாணவ மாணவிகளுக்கு உதவி செய்வதாக, மதரஸாவில் ஓதக் கூடிய மாணவ மாணவிகளுக்கு உணவளிப்பதாக, பள்ளிவாசலில் இஃதிகாப் இருப்பதாக இவைப் போன்ற நல்ல விஷயங்களைக் குறித்து தம்முடைய சக்திக்கு தக்கப்படி நேர்ச்சை (நிய்யத்து) வைக்கலாம்.


​​

♣  வலிமார்களுக்கு நேர்ச்சை செய்வது கூடுமா?

ஜனாஸா தொழுகை பற்றி ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நஜ்ஜாஷி (மன்னரு)க்கு ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள். அப்போது நான் இரண்டாவது அல்லது மூன்றாவது அணியில் நின்றிருந்தேன்.

ஷஹீஹ் புகாரி 1317

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். இன்றையதினம் அபிஸினியாவைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதர் மரணித்துவீட்டார். எனவே வாருங்கள்; அவருக்காக ஜனாஸாத் தொழுங்கள்” என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அணிவகுத்து நின்றதும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (ஜனாஸாத்) தொழுகை நடத்தினார்கள். அப்போது நான் இரண்டாவது அணியில் நின்றிருந்தேன்.

ஷஹீஹ் புகாரி 1320

குறிப்பு : மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்கள் அடிப்படையில் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலும், இன்றைய உண்மை முஸ்லிம்களுக்கு மத்தியிலும் வணக்கதில் இருக்க கூடிய சில வார்த்தைகளை சுருக்கமாக பயன்படுத்தப்படுவதை ஹதீஸ்கள் ரீதியாகவும் எமது நடைமுறைகளிலிருந்தும் பிரயோகிப்பதை கவனிக்கலாம்.


​​உதாரணமாக 'மய்யித்திற்கு தொழுகை நடாத்துகின்றோம்' என்று கூறுகின்றோன். இந்த சமயத்தில் யாருமே! குறிப்பாக வழிகெட்ட வஹ்ஹாபிகளுமே! ஜனாஸா தொழுகை என்பது இபாதத் - வணக்கம், ஆகவே வணக்கம் அனைத்தும் இறைவனுக்கு மாத்திரம்தான் செய்ய வேண்டும். அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய தொழுகை எனும் வணக்கத்தினை மய்யித்திற்கு செய்கின்றீர்களே! இது ஷிர்க் - பித்அத் என்று யாருமே சொல்வதில்லை.


​​காரணம் இதனை நாம் தெளிவாக புரிந்து கொண்டிருக்கின்றோம். தொழுகை என்பது இபாதத் - வணக்கம் அந்த அடிப்படையில் அல்லாஹ்வுக்கு மாத்திரம்தான் தொழுகை எனும் இபாதத்தை செய்ய வேண்டும், அவ்வாறுதான் செய்து கொண்டிருக்கின்றோம். ஆகவே தொழுகை எனும் இபாதத் வணக்கத்தினை இறைவனுக்கு மாத்திரம்தான் செய்கின்றோம் அதன் மூலம் கிடைக்கும் நன்மையினை மய்யித்திற்கு சேர்த்து வைக்கின்றோம் என்று தெளிவாக விளங்கி வைத்துள்ளோம். அந்த அடிப்படையில்தான் மய்யித்திற்கு தொழுகை என்று எமது நடைமுறையில் சுருக்கமாக கூறுகின்றோம்.


​​

♦ அகீகா, உல்ஹியா பற்றி 

அகீகா: குழந்தை பிறந்ததும் அதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் நிஃமத்தை எடுத்தும் காட்டும் வகையில் ஆடோ, மாடோ, ஒட்டகமோ அறுத்துப்பலியிடுவதற்கு அகீகா என்று பெயர் சொல்லப்படும்.

சல்மான் இப்னு ஆமிர் அள்ளப்பீ (ரலியல்லாஹு அன்ஹு) கூறினார்கள்:

​இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் , 'பையன் (பிறந்த) உடன் 'அகீகா' (கொடுக்கப்படல்) உண்டு. எனவே, அவனுக்காக (ஆடு அறுத்து) 'குர்பானி' கொடுங்கள்.


​(ஷஹீஹ் புகாரி 5472

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஹசன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு ஓரு ஆட்டை அகீகாவாக கொடுத்தார்கள். (தனது மகள் ஃபாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களை நோக்கி) ஃபாத்திமாவே அவருடைய (ஹசன்) தலையை மளித்து அவரது முடியின் எடைக்கு நிகராக வெள்ளியை தர்மம் செய்வீராக என்று கூறினார்கள். எனவே நான் அதை நிறுத்துப்பார்த்தேன். அதனுடைய எடை ஒரு திர்ஹம் அல்லது சில திர்ஹம்களின் எடையாக இருந்தது.


​​அறிவிப்பவர் : ஹழ்ரத் அலீ (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல் : திர்மிதி 1439

அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) கூறினார்கள்:

​நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கொம்பு உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் தம் கரத்தால் அறுத்தார்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயர் (”பிஸ்மில்லாஹ்”) கூறினார்கள். தக்பீரும் (”அல்லாஹு அக்பர்”) கூறினார்கள். மேலும், தம் காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்(துக் கொண்டு அறுத்)தார்கள்.


​ஷஹீஹ் புகாரி 5565

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் தங்களுக்கு நபித்துவம் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் (அவர்களின் பிறந்த தினத்தில்) அவர்களுக்காக சில மிருகங்களை அறுத்து பங்கிட்டார்கள்.


​​நூல்கள்: பைஹகி 43, தபரானி, பத்ஹுல் பாரி

குறிப்பு: மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்கள் அடிப்படையில் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலும், இன்றைய உண்மை முஸ்லிம்களுக்கு மத்தியிலும் வணக்கதில் இருக்க கூடிய சில வார்த்தைகளை சுருக்கமாக பயன்படுத்தப்படுவதை ஹதீஸ்கள் ரீதியாகவும் எமது நடைமுறைகளிலிருந்தும் பிரயோகிப்பதை கவனிக்கலாம்.


​​உதாரணமாக 'தமது பிள்ளைகளுக்கு அகீகா அல்லது பெற்ரோர்களுக்கு உல்ஹியா கொடுத்தோன்' என்று கூறுகின்றோம். இந்த சமயத்தில் யாருமே! குறிப்பாக வழிகெட்ட வஹ்ஹாபிகளுமே! அகீகா, உல்ஹியா என்பது இபாதத் - வணக்கம், ஆகவே வணக்கம் அனைத்தும் இறைவனுக்கு மாத்திரம்தான் செய்ய வேண்டும். அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய அகீகா, உல்ஹியா எனும் வணக்கத்தினை பிள்ளைகளுக்கு, பெற்ரோர்களுக்கு செய்கின்றீர்களே! இது ஷிர்க் - பித்அத் என்று யாருமே சொல்வதில்லை. காரணம் இதனை நாம் தெளிவாக புரிந்து கொண்டிருக்கின்றோம்.


​​அகீகா, உல்ஹியா என்பது இபாதத் - வணக்கம் அந்த அடிப்படையில் அல்லாஹ்வுக்கு மாத்திரம்தான் அகீகா, உல்ஹியா எனும் இபாதத்தை செய்ய வேண்டும், அவ்வாறுதான் செய்து கொண்டிருக்கின்றோம். ஆகவே அகீகா, உல்ஹியா எனும் இபாதத் வணக்கத்தினை இறைவனுக்கு மாத்திரம்தான் செய்கின்றோம் அதன் மூலம் கிடைக்கும் நன்மையினை பிள்ளைகளுக்கு, பெற்ரோர்களுக்கு சேர்த்து வைக்கின்றோம் என்று தெளிவாக விளங்கி வைத்துள்ளோம். அந்த அடிப்படையில்தான் பிள்ளைகளுக்கு, பெற்ரோர்களுக்கு அகீகா, உல்ஹியா கொடுத்தோம் என்று நமது நடைமுறையில் சுருக்கமாக சொல்கின்றோம்.

♦  உம்ரா ஹஜ் பற்றி

அபூ ரஸீன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தை வயது முதிர்ந்த பெரியவராக இருக்கின்றார். அவரால் ஹஜ் செய்யவோ உம்ரா செய்யவோ பயணிப்பதற்கோ முடியாது என்றேன். உனது தந்தைக்காக நீ ஹஜ் செய்துகொள். உம்ராவும் செய்துகொள் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : திர்மிதி 852

இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள். (உக்பா பின் ஆமிர் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் சென்று, (அல்லாஹ்வின் தூதரே!) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்துகொண்டு (அதை நிறை வேற்றாமல்) இறந்துவிட்டார் என்றார். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், "உன் சகோதரிக்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய்?'' என்று கேட்டார்கள். அவர், "ஆம் (நான்தான் நிறைவேற்றுவேன்)'' என்றார். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், "அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று! கடன்கள் நிறைவேற்றப்பட அவனே அதிக உரிமை படைத்தவன்'' என்றார்கள்.


​ஷஹீஹ் புகாரி 6699

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்: ஃபள்ல் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்துகொண்டிருந்த போது "கஸ்அம்' எனும் கோத்திரத்தை சேர்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபள்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்) ஃபள்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள். பிறகு அப்பெண் நபி (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்களை நோக்கி, "அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆனால் எனது வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது. எனவே நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா?' எனக் கேட்டார். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், "ஆம்!' என்றார்கள். இது "விடைபெறும்' ஹஜ்ஜின்போது நிகழ்ந்தது.


​​ஷஹீஹ் புகாரி 1513

குறிப்பு : மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்கள் அடிப்படையில் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலும், இன்றைய உண்மை முஸ்லிம்களுக்கு மத்தியிலும் வணக்கதில் இருக்க கூடிய சில வார்த்தைகளை சுருக்கமாக பயன்படுத்தப்படுவதை ஹதீஸ்கள் ரீதியாகவும் எமது நடைமுறைகளிலிருந்தும் பிரயோகிப்பதை கவணிக்கலாம்.


​​உதாரணமாக 'மரணித்த பெற்ரோர்களுக்கு உம்ரா, ஹஜ் செய்கின்றோம்' என்று கூறுகின்றோம். இந்த சமயத்தில் யாருமே! குறிப்பாக வழிகெட்ட வஹ்ஹாபிகளுமே! உம்ரா, ஹஜ் என்பது இபாதத் - வணக்கம்,ஆகவே வணக்கம் அனைத்தும் இறைவனுக்கு மாத்திரம்தான் செய்ய வேண்டும். அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய உம்ரா, ஹஜ் எனும் வணக்கத்தினை மரணித்த பெற்ரோர்களுக்கு செய்கின்றீர்களே! இது ஷிர்க் - பித்அத் என்று யாருமே சொல்வதில்லை. காரணம் இதனை நாம் தெளிவாக புரிந்து கொண்டிருக்கின்றோம்.


​​உம்ரா, ஹஜ் என்பது இபாதத் - வணக்கம் அந்த அடிப்படையில் அல்லாஹ்வுக்கு மாத்திரம்தான் உம்ரா, ஹஜ் எனும் இபாதத்தை செய்ய வேண்டும், அவ்வாறுதான் செய்து கொண்டிருக்கின்றோம். ஆகவே உம்ரா, ஹஜ் எனும் இபாதத் வணக்கத்தினை இறைவனுக்கு மாத்திரம்தான் செய்கின்றோம் அதன் மூலம் கிடைக்கும் நன்மையினை பெற்ரோர்களுக்கு சேர்த்து வைக்கின்றோம் என்று தெளிவாக விளங்கி வைத்துள்ளோம். அந்த அடிப்படையில்தான் மரணித்த பெற்ரோர்களுக்கு உம்ரா, ஹஜ் செய்கின்றோம் என்று நமது நடைமுறையில் சுருக்கமாக சொல்கின்றோம்.


​​

♦ அல்லாஹ்வின் இறைநேசர்களாகிய வலிமார்களுக்கு நேர்ச்சை செய்வதன் உண்மை நிலை என்ன?

பொதுவாகவே நாம் அல்லாஹ்விடம் ஒரு விடயத்தை கேட்க முன் இபாதத் செய்த பின் கேட்பது மிகப் பொருத்தமான ஒன்றாகும். அந்த அடிப்படையில் நேர்ச்சை என்பது இஸ்லாத்தில் ஓர் வணக்கமாகும். அந்த அடிப்படையில் குர்ஆனில் நேர்ச்சையை நிறைவேற்றுமாறு இறைவன் வலியுறுத்துவதாலும், மறுமையை நம்புவோர் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள் என்று கூறுவதாலும், கஅபாவைத் தவாஃப் செய்வதுடன் இணைத்து நேர்ச்சை குறிப்பிடப்படுவதாலும் நேர்ச்சை ஓர் வணக்கம் என்பதைப் புரிந்து கொள்ளலாம். எல்லாவிதமான வணக்கங்களையும் இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும். இறைவனைத் தவிர எவரையும், எதனையும் வணங்கக் கூடாது என்பது தான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

ஆகவே முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களுக்கு, நாகூரில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஷாகுல் ஹமீத் பாதுஷா நாயகம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களுக்கு இன்னும் ஏனைய வலிமார்களுக்கு நேர்ச்சை செய்வது என்றால் என்ன? என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்வது அவசியமாகும். நேர்ச்சை என்பது இஸ்லாம் மார்க்கத்தில் ஆகுமாக்கப்பட்ட ஒரு செயல் இன்றைய காலகட்டத்தில் அதிகமாக பேர் குறிப்பாக பெண்கள் ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்பட்டால் உடனே நேர்ச்சை செய்து விடுவார்கள். ஆனால் சில பாமர மக்கள் கௌதுல் அஃழமவர்களுக்கு, ஷாகுல் ஹமீத் பாதுஷா நாயகத்திற்கு நேர்ச்சை செய்கின்றேன் என்று சொல்வார்கள் இப்படி செய்யலாமா? என்பதற்கு இமாம்கள் பின்வருமாறு விளக்கம் தருகிறார்கள்.

ஒரு இன்ன கப்றில் அடங்கியுள்ள வலியுல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்வதாக இருந்தால்! அவருடைய எண்ணம் அல்லாஹ்வுக்கு செய்யப்படுகின்ற இபாதத் வணக்கம், அந்த வணக்கத்தை இந்த வலியுல்லாஹ்வுக்கு செய்யப்படுகிறது என்று அவர் நினைத்து செய்தால் அவர் பாவியாக ஷிர்க் செய்தவராக மாறிவிடுவார். அப்படி இல்லாமல் வலியுல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்கின்றேன் என்ற வார்த்தையை கொண்டு அவர் நாடுவது (நீய்யத்) அந்த தர்ஹாவில் உள்ள ஏழைகளுக்கு தர்மம் செய்கின்றேன், அந்த தர்ஹாவில் உள்ள பணிவிடையாளர்களுக்கு உதவி செய்கின்றேன் அல்லது அந்த தர்ஹாவின் பராமரிப்பு வேளைகளுக்காக உதவி செய்கின்றேன் என்பதை நாடி வலியுல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்கின்றேன் என்று மேலே நாம் சுட்டிக்காட்டிய விடயங்களைப் போன்று சுருக்கமாக கூறினால் இது ஆகுமாக்கப்பட்ட மார்க்கம் அனுமதித்த விடயமாகும்.


​​ஆகவே அவருடைய நோக்கும் அல்லாஹ்வுக்காதான் செய்கின்றேன் என்பதுதான் எனவே எந்த கப்று? எந்த வலியுல்லாஹ்? என்பதை தெளிவு படுத்துவதற்காக வேண்டிதான் வலியுல்லாஹ்வின் பெயரை குறிப்பிடுகின்றனர் என்பதை தவிர வலியுல்லாஹ்வுக்காக நேர்ச்சை எனும் இபாதத் வணக்கம் என்ற எண்ணதுடன் செய்ய வில்லை. அந்த அடிப்படையில் இது கூடும்.


​இன்னும் தெளிவாக கூறுவதாக இருந்தால் நேர்ச்சை என்பது வணக்கம் அனைத்து வணக்கங்களுக்கும் அல்லாஹ்வுக்குரியதாகும். உம்ரா இபாதத், அல்லாஹ்வுக்குறியது ஹஜ் இபாதத், அல்லாஹ்வுக்குறியது உல்ஹியா- அகீதா இபாதத்,அல்லாஹ்வுக்குறியது எனவே ஒரு உம்ராவை அல்லது ஹஜ்ஜை எனது தாய்க்காக செய்கின்றேன் என்று இன்று சர்வ சாதாரணமாக நாமும் வழிகெட்ட வஹ்ஹாபிகள் கூறுகின்றோம்.


​​உம்ரா, ஹஜ் எனும் வணக்கத்தினை அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டும் அதனை தாய்க்கு செய்கின்றீர்கள் என்று வழிகெட்ட வஹாபிகள் யாராவது கேட்கிறார்கலா? இல்லை ஆகவே அங்கே என்ன விளங்குகின்றார்கள் என்றால்? உம்ரா என்பது வணக்கம் அல்லாஹ்வுக்குதான் ஆனால் அதனுடைய ஆன்மீக பலனை - நன்மையினை தாய்க்கு சேர்க்கின்றேன். இதுதான் விளக்கம் அதே மாதிரிதான் வலியுல்லாஹ்வுக்காக வேண்டி ஒரு கோழி அல்லது ஒரு ஆடு அருகின்றேன் என நேர்ச்சை செய்தால் இதன் பொருள் அந்த தர்ஹாவிற்க்குச் சென்று ஷாகுல் ஹமீத் பாதுஷா நாயகமே என்று அவர்களின் பெயரை சொல்லி யாருமே கோழியினை அருப்பதில்லை மாறாக 'பிஸ்மில்லாஹ் அல்லாஹூ அக்பர்' என்றுதான் அருப்பார்கள். அந்த அடிப்படையில் அப்படி செய்து அதன் ஆன்மீக பலனை நன்மையினை ஷாகுல் ஹமீத் பாதுஷா நாயகம் அவர்களின் பெயரில் சேர்த்து வைக்கின்றார்கள்.

இப்படி செய்வதன் நோக்கம் வலிமார்களுக்கு செய்கின்ற போது அவர்கள் நமக்காக வேண்டி அல்லாஹ்விடம் உதவி செய்கின்றார்கள் ஆகவே இறைவனிடம் நாம் ஒரு விடயத்தை கேட்பதும், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்றுக் கொண்ட இறைநேசர்களாகிய வலிமார்கள் நமக்காக அல்லாஹ்விடம் கேட்பதற்கும் வித்தியாசம் உண்டு. நாம் கேட்டால் இறைவன் உடனே தரலாம் அல்லது பிற்படுத்தியும் தரலாம் ஆனால் வலிமார்கள் நமக்காக பிராத்தனை செய்தால் உடனடியாக இறைவன் தந்துவிடுவான் காரணம் வலிமார்களுக்கு அல்லாஹ் கொடுத்த வாக்குறுதியாகும்.

ஆகவே வலிமார்களுக்கு நேர்ச்சை செய்வது என்றால் நேர்ச்சை எனும் வணக்கத்தினை இறைவனுக்கு மாத்திரம்தான் செய்கின்றோம் அதன் மூலம் உள்ள ஆன்மீகப் பலனை நன்மையினை வலிமார்களுக்கு சேர்த்து வைக்கின்றோம் இதனை சுருக்கமாக மேலே நாம் சுட்டிக்காட்டியது போன்று வலிமார்களுக்கு நேர்ச்சை செய்கின்றோம் என கூறுவதில் எவ்வித தவறும் கிடையாது ஆகவே இபாதத் வணக்கம் என்றால் என்ன என்பதை தெளிவாக புரிந்து கொள்ளாத வழிகெட்ட வஹ்ஹாபிகள் அவர்களின் அறியாமையினை வெளிப்படுத்துகின்றார்கள் இதுதான் நடைமுறையில் உள்ள யதார்ததமான உண்மையாகும்.

"செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது" என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: என உமர்(ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள்.

ஷஹீஹ் புகாரி 54


​​

♣ நேர்ச்சையில் தடுக்கப்பட்டன சில விடயங்கள்

இதற்கும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தெளிவாக நமக்கு வழி காட்டியுள்ளனர்.'அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவனுக்கு வழிப்படட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விடயத்தில் நேர்ச்சை செய்தால் அவனுக்கு மாறு செய்ய வேண்டாம்' என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.


​​அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)

நூல்: புகாரி 6696, 6700

அந்த அடிப்படையில் தர்ஹாக்களில் படுப்பதாக, தர்ஹாக்களில் போய் மொட்டை அடிப்பதாக, கப்றில் போய் தோப்புக்கரணம் போடுவேன், கையை போன்று ரொட்டி சுட்டுக் கொடுப்பேன், யாரிடமும் பேச மாட்டேன், தன்னை அழித்து உடல் உறுப்புக்களை வேதனை படுத்துவேன், செருப்பு அணியாமல் தர்ஹாக்களுக்கு நடந்து செல்வேன் , மேலும் 'இன்ன காரியம் எனக்கு நிறைவேறினால் நான் ஒற்றைக் காலில் நிற்பேன்; தரையில் புரளுவேன்; செருப்பணியாமல் கொளுத்தும் வெயிலில் நடப்பேன்' என்றெல்லாம் சிலர் நேர்ச்சை செய்கின்றனர்.


​​இப்படி தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்ளும் எந்தக் காரியத்தையும் நேர்ச்சை செய்யக் கூடாது. மேலும் மாற்று மத சகோதரர்களின் வீடுகளில், அவர்களின் வணக்க வழிபாடுகள் நடைபெறும் இடங்களில் அதுபோன்ற ஏனைய இடங்களில் எமது நேர்ச்சையை நிறைவேற்றுவது கூடாது.


​​ஆகவே இது போன்ற நேர்ச்சைகள் செய்வதும் அதை நிறைவேற்றுவதும் கூடாது. ஆனால் மேலே குறிப்பிட்டப்படி நம் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விஷயங்களைக் குறித்து நிய்யத்து வைத்து அந்தக் காரியம் முடிந்துவிட்டால் அதை உடனே நிறைவேற்ற வேண்டும். இதை நிறைவேற்ற அச்சமயம் சக்தி இல்லாவிட்டால் சக்தி வந்ததும் நிறைவேற்ற வேண்டும். ஆனால் செய்த நேர்ச்சையை நிரைவேற்றாத போது அது குற்றமாகும்.

அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். ஒரு முதியவர் தம் இரண்டு புதல்வர்(கள் தம்மைத் தோள்களில் தாங்கிக் கொண்டிருக்க, அவர்)களிடையே தொங்கியபடி கால்கள் பூமியில் இழுபட வந்து கொண்டிருந்ததைக் கண்ட நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ”இவருக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். ”(கஅபா வரை) நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்திருக்கிறார்!” என்று மக்கள் கூறினார்கள், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ”இவர் தம்மை இவ்விதம் வேதனைப்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது!” என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச் செல்லுமாறும் உத்தரவிட்டார்கள்.

ஷஹீஹ் புகாரி 1865, 6701

♦ எனவே நேர்ச்சையின் பெயரால் தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்ளக் கூடாது. வெறுமனே நடப்பதை நேர்ச்சை செய்யாமல் ஒரு வணக்கத்தை நடந்து சென்று நிறைவேற்றுவதாக ஒருவர் நேர்ச்சை செய்தால், நடந்து செல்ல அவருக்குச் சக்தியும் இருந்தால் அவர் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பின்வரும் நபிவழியிலிருந்து நாம் அறியலாம். உக்பா இப்னு ஆமிர்(ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். என் சகோதரி கஅபா வரை நடந்து செல்வதாக நேர்ச்சை செய்தார். அவர், இதுபற்றி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் தீர்ப்புப் பெறும்படி எனக்கு உத்தரவிட்டார். நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் விளக்கம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர் (சிறிது தூரம்) நடந்துவிட்டு வாகனத்தில் ஏறிக் கொள்ளட்டும்” என்றார்கள்.


​ஷஹீஹ் புகாரி 1866

அதிக நன்மையை நாடி மூன்று பள்ளிவாசலுக்கு மட்டும் பயணம் செய்வது சிறப்புக்குரியது என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறியுள்ளனர். கஅபா,மஸ்ஜிதுன்னபவி, பைத்துல் முகத்தஸ் ஆகியவையே அந்த மூன்று பள்ளிவாசல்கள்.


புகாரி 1189, 1197, 1864, 1996


​​

♣  தனக்கு உடமையில்லாத பொருட்களிலும், தன் வைகசம் இல்லாததை நேர்ச்சை செய்யலாமா?

ஒருவர் நேர்ச்சை செய்வதாக இருந்தால் தன் வைகசம் உள்ள பொருட்களிலும், தனக்கு உடமையான பொருட்களிலும், நேர்ச்சை செய்ய வேண்டும். தன் வைகசம் இல்லாத பொருட்களில் நேர்ச்சை செய்வதை தவிர்ந்து கொள்ள வேண்டும், அவ்வாறு செய்தால் அந்த பொருட்கள் கிடைத்த பின் நேர்ச்சையை நிறைவேற்றுதல் அவசியமாகும். மேலும் தமக்கு உடமையில்லாத பொருட்களில் நேர்ச்சை செய்வது கூடாது 'தன் கைவசம் இல்லாதவற்றில் ஆதமுடைய மகன் மீது நேர்ச்சை இல்லை' என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: புகாரி 6047

ஒருவன் அன்றாடம் தனது உணவுக்கே சிரமப்படுகிறான் என்றால் நான் நூறு ஏழைகளுக்கு உணவளிப்பேன் என்று நேர்ச்சை செய்வதை தவிர்ந்து கொள்ள வேண்டும். அவ்வாறு நேர்ச்சை செய்தால் அவருக்கு போதுமான பொருளாதாரம் கிடைத்த பின் அந்த நேர்ச்சையை நிறைவேற்றுவது அவசியமாகும். மேலும் அவன் நேர்ச்சை செய்யும் போது நூறு ஏழைகளுக்கு உணவளிப்பதற்குத் தேவையான உணவோ, பணமோ கைவசம் இருந்தால் மட்டுமே இவ்வாறு நேர்ச்சை செய்ய வேண்டும்.


​​எனக்கு இந்தக் காரியம் நிறைவேறினால் நூறு ஏழைகளுக்கு உணவளிக்கிறேன் என்று ஒருவர் நேர்ச்சை செய்கிறார். இவர் நேர்ச்சை செய்யும் போது அதற்கான வசதிகளுடன் இருக்கிறார். ஆனால் அவர் நினைத்த காரியம் நிறைவேறும் போது வசதியை இழந்து விட்டார் என்றால் இவர் மீது நேர்ச்சையை நிறைவேற்றும் கடமை உண்டு. பிறகு போதுமான பொருளாதாரம் கிடைத்த உடனே நேர்ச்சையை நிறைவேற்றுவது அவசியமாகும்.


​​மேலும் தமது நலன்கருதி சொத்துக்கள் அனைத்தையும் நேர்ச்சை செய்வதை தவிர்ந்து கொள்ள வேண்டும் அவ்வாறு சொத்துக்கள் அனைத்தையும் நேர்ச்சை செய்தால் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்.


​​

♣ நேர்ச்சை (குர்பான்) கொடுப்பவர் அதன் இறைச்சியை சாப்பிடலாமா?

ஒரு செயல் நிறைவேறினால் குர்பானி கொடுப்பேன் என்று ஒருவர் நேர்ச்சை செய்தால் அந்தச் செயல் நிறைவேறிய பின் குர்பானி கொடுப்பது கடமையாகும். எனவே அவை முழுவதையும் தர்மம் செய்து விடுவது அவசியமாகும். ஆகவே நேர்ச்சை செய்யப்பட்ட குர்பான் இறைச்சியை தான் எடுத்துக் கொள்வதற்கு அனுமதி இல்லை, முழுவதையும் தர்மம் செய்ய வேண்டும். ஆனால் குர்பானியின் (உல்ஹியா) சட்டம் அதிலிருந்து வேறுபட்டதாகும்.


​​குர்பானியின் மாமிசத்தை தானும் உண்ணலாம். உள்ஹிய்யா கொடுப்பவர் அதன் இறைச்சியைத் தான் உண்பதுடன் உறவினர்கள், அண்டைவீட்டார், ஏழைகள் ஆகியோருக்கு வழங்குவதும் நபிவழியாகும். (திர்மிதி 1546) 'அவற்றிலிருந்து நீங்கள் உண்ணுங்கள்! தேவையுடையோருக்கும் உண்ணக் கொடுங்கள்' (அல்குர்ஆன் 22:28)' அவற்றிலிருந்து நீங்களும் புசியுங்கள்! இருப்பதைக் கொண்டு திருப்தி அடைவோருக்கும் தேவையுள்ளோருக்கும் உண்ணக் கொடுங்கள்!' (அல்குர்ஆன் 22:36)

மேற்கூறிய வசனங்கள் குர்பானியைக் குறிக்கும் வசனங்களாகும். குர்பானியின் இறைச்சியை குர்பானி கொடுப்பவர் சாப்பிட அல்லாஹ்வும் அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுமதித்துள்ளார்கள். குர்பானியின் இறைச்சி, நேர்ச்சைக்கான இறைச்சி இவை இரண்டும்; வேறானவை என்பதை புரிந்து கொண்டால் குழப்பம் இருக்காது. இரண்டாவதாக, தர்மம் செய்வதை தூண்டுவதற்காகவே நேர்ச்சையை இஸ்லாம் அங்கீகரித்துள்ளது என்பதை கீழ்காணும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.'நேர்ச்சை மூலம் கஞ்சனிடமிருந்து இறைவன் (செல்வத்தை) வெளிக்கொணர்கிறான்...' என்பது ஹதீஸாகும்.


அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: புகாரி 6694


​​

♣  நேர்ச்சை செய்யப்பட்ட (குர்பான்) பிராணிகளை நாம் பயன்படுத்தலாமா?

ஆடு, மாடு போன்றவைகளை இறைவனுக்காகப் பலரும் நேர்ச்சை செய்கின்றனர். அது போல் குர்பானி கொடுப்பதற்காக பிராணிகளை முன் கூட்டியே வாங்கி வைத்துக் கொள்வார்கள். இவ்வாறு இறைவனுக்காக என்று அர்ப்பணிக்கப்பட்ட பிராணிகள் நம்மிடம் இருக்கும் வரை அதனால் கிடைக்கும் லாபத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதிலிருந்து கிடைக்கின்ற பால் போன்றவற்றைப் பருகலாம். அதன் மேல் ஏறிச் செல்லலாம். இறைவனுக்காக என்று அர்ப்பணிக் கப்பட்டவைகளை அறுத்துப் பலியிட்டு ஏழைகளுக்கு வழங்கப்படுவதற்கு முன்னால் அதை மற்ற பிராணிகளைப் போலவே பயன்படுத்திக் கொள்ள இவ்வசனம் (அல்குர்ஆன் 22:33) தெளிவான அனுமதியை அளிக்கிறது.


​​இறைவனுக்கு என்று நேர்ச்சை செய்து யாருக்கும் பலனில்லாமல் பிராணிகள் விடப்படுவதை இஸ்லாம் மறுக்கிறது. இறைவனுக்காக என ஒரு பிராணியை அர்ப்பணிக்க முடிவு செய்தால் அதை ஏழைகள் பயன்பெறும் வகையில் விநியோகித்து விட வேண்டும். அது வரை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். யாருக்கும் பயன்படாத வகையில் பிராணிகளை உலகப் பொது உடமையாக விட்டு விடக் கூடாது என்பதும் இவ்வசனத்திலிருந்து தெரிகின்றது.


​​

♣  ஒருவரின் நேர்ச்சையை மற்றவர் நிறைவேற்றலாமா?

ஒருவர் ஒரு நேர்ச்சை (உடல் - தொழுகை, பொருளாதாரம் - தர்மம்) ரீதியான செய்து விட்டு அதை நிறைவேற்றாமல் மரணித்து விட்டாரென்றால் அவர் வஸியத் செய்தவர் நிறைவேற்ற வேண்டும், அல்லது அவரது நெருங்கிய இரத்த சம்மந்தமுள்ள வாரிசுகள் அவர் சார்பில் அதை நிறைவேற்றலாம். அவ்வாறு நிறைவேற்றினால் நேர்ச்சை செய்தவர் மீது இருந்த அந்தக் கடமை நீங்கி விடும்.


​​ஆனால் அவர் செய்த நேர்ச்சை மார்க்கத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டதாக இருப்பது அவசியம் என்பதை மறந்து விடக் கூடாது. அதேபோன்று உயிருடன் உள்ளவர்களின் நேர்ச்சையை இரண்டு கண்ணோட்டத்தில் அவதானிக்க வேண்டும். முதலாவது தொழுகை, நோன்பு போன்ற உடல் ரீதியாக வணக்கங்களை நேர்ச்சை செய்தால் அவர் சக்தியுள்ளவராக இருந்தால் அவருதான் நிறைவேற்ற வேண்டும். இரண்டாவது தர்மம்-ஸ‌தகா போன்ற பொருளாதார ரீதியான நேர்ச்சை என்றால் அதனை மற்றவர்களும் நிறைவேற்றலாம்.