MAIL OF ISLAM

Knowledge & Wisdom



வஹாபிகளின் மீலாத் எதிர்ப்புக்கு குர்ஆன் ஹதீஸ் மூலம் பதிலடி

​எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான்  (கௌஸி)  கல்முனை.


கண்மணி நாயகம் ﷺ அவர்களின் மீலாத் விழா (பிறந்த நாளை) பற்றிய வஹ்ஹாபிகளின் குற்றச்சாட்டுக்களுக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் மறுப்புகள்.

♦ புனித ரபீஉனில் அவ்வல் மாதம் வந்து விட்டால் முஸ்லிம்கள் மத்தியில் இது எம் பெருமானார் முஹம்மத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிறந்த மாதம் என்ற உணர்வும், அறியாமை இருள் நீக்கி உம்மத்தினரை ஒளி பெற செய்த மா நபீ புகழ் பாடி குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் விழாக் காணும் அழகிய நடமுறை இருந்து வருகின்றது.


​​மாறாக வழிகெட்ட வஹ்ஹாபிகள் அவர்களின் அறியாமையின் காரணத்தினால் இது இஸ்லாத்தின் பார்வையில் நூதன செயல் பித்அத் என்று போலிப் தவ்ஹீத் வாதிகள் பிரச்சாரங்களில் காலத்தை வீணாக்கக் கூடியவர்களும் உள்ளனர். இவர்கள் கூறக்கூடிய குற்றச்சாட்டுக்களையும் அதற்கான தெளிவையுமே இங்கு நாம் தருகின்றோம்.

♦ நபிகள் நாயகம் (ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்) அவர்களோ, ஸஹாபாக்களோ மீலாத் விழா கொண்டாடவில்லை. என்றெல்லாம் விமர்சனம் செய்வார்கள். அந்த அடிப்படையில் முதலில் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப்பற்றிப் புரிந்துகொள்ள வேண்டும். தான் பிறந்ததையிட்டு பெருமை அடித்துக் கொள்வதற்கோ, அல்லது அதையிட்டு மற்றவர்களைக் கொண்டாடச் செய்விப்பதற்கோ அவர்கள் ஒன்றும் பெருமை அடிக்கக் கூடிய தற்பெருமை பிடித்தவர்கள் அல்லர். ஆனால் தன்னுடைய சபையில் அவர்களுக்கு முன்னால் அவர்களைப் புகழ்ந்து கவிபாடிய ஸஹாபாக்களை தடுக்கவும் இல்லை, விரட்டவும் இல்லை.இவர்களில் குறிப்பாக ஹஸ்ஸான் இப்னு தாபித் (றழியல்லாஹு அன்ஹு) , அப்துல்லாஹ் இப்னு றவாஹா (றழியல்லாஹு அன்ஹு) ,கஃப் இப்னு ஸூகைர் (றழியல்லாஹு அன்ஹு) போன்றோரைக் குறிப்பிடலாம்.

♦ ஒருவருக்கு குழந்தை பிறந்தமைக்காக அகீகா கொடுப்பதை இஸ்லாம் மார்க்கமாக்கியுள்ளது, எனவே 'தான் பிறந்ததற்காக நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தனக்குத் தானே அகீகா கொடுத்ததை' ஏன் புரிய வில்லை? இதுதான் மீலாத், முதலில் மீலாத் எனும் சொல்லின் அர்த்தத்தையேனும் புரியவேண்டும். மெளலித் ஓதி கொண்டாடினால்தான் தவறு,மீலாத்போட்டி நிகழ்ச்சி மற்றும் தேசிய மீலாத் விழா இவைகளெல்லாம் தவறில்லையா?

♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாது விழா (பிறந்த நாளை) கொண்டாடுவது (ஷிர்க் பித்அத்) அப்படி ஒரு விழா தேவையில்லை என்பதற்கு குர்ஆன், ஹதீஸ்களில் இருந்து ஒரே ஒரு ஆதாரத்தைக் கூட காட்ட முடியாமல் வழிகெட்ட வஹ்ஹாபி ஹவாரிஜீயாக்கள் நாங்கள் புத்திசாலி என்று நினைத்துக் கொண்டு மீலாது விழா கொன்டாடுவதை தடை செய்ய வேண்டும் என்பதற்க்காக 'ஷிர்க்கான விழா' கொண்டாடுகிறார்கள் என்றெல்லாம் அப்பாவி பாமர மக்கள் மத்தியில் சில தந்திர வார்த்தைகளை உபயோகித்து மீலாது விழா கூடாது என்று விமர்சிக்கும் சில வாதங்களுக்கான தெளிவாக விளக்கங்கள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


​​

♣  நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள்  ரபியுல் அவ்வல் மாதம் 12 ஆம் நாளில்தான் பிறந்தார்களா?

♦ நபிகள் நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ரபீ உல் அவ்வல் மாதம் 12 ம் பிறையில் பிறந்தார்கள்.


​​ஹழ்ரத் முஹம்மது இப்னு இஸ்ஹாக் (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: ஹாகிம் - 2-603, ஸீரத் இப்ன் ஹிஷாம் - 1-211

♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள் யானை ஆண்டில் பிறந்தார்கள்.


​​ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: ஹாகிம், இப்னி ஹிஷாம், இந்த ஹதீஸ் இமாம் புஹாரி, இமாம் முஸ்லிம் (ரலியல்லாஹு அன்ஹுமா) ஆகியோரின் நிபந்தனையின் படி ஸஹீஹான ஹதீஸாகும்.

♦ நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் யானை ஆண்டு ரபிஉல் அவ்வல் மாதம் 12, திங்கட்கிழமை அதிகாலை நேரம், மக்கா நகரில் ஷிஃபு பனீ ஹாஷிம் என்ற பகுதியில் உள்ள தாரு அபீதாலிப் என்ற (அதாவது தற்போது முஹம்மது இப்னு யூஸுப் அவர்களுக்குரிய வீடு என்று கூறப்படுகின்ற) இடத்தில் பிறந்தார்கள்.


​​நூல்கள்: முஹம்மதுர் ரசூலுல்லாஹ் பக்கம் 12, இப்திகாவுல் உஸூல் பக்கம் 16, அல்புன்யானுள் மர்ஸுஸ் 29, 40, 76

♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் திங்கட்கிழமை நாள் நோன்பு நோற்பதன் காரணம் பற்றி வினவப்பட்டபோது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். அன்றைய தினத்தில்தான் நான் பிறந்தேன். மேலும் அன்றுதான் என் மீது வஹீ இறக்கப்பட்டது.


​​நூல்கள்: முஸ்லிம் 1162 - 198, முஸ்னத் அஹ்மத் 5- 299, மிஷ்காத் 2045


​​

♣  மீலாது விழா என்பது இஸ்லாத்தின் பெயரால் யூதர்களால் உருவாக்கப்பட்டதா?

நபிகள் நாயகம் (ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் காலத்தில் யஹூதிகள் நோன்புற்றதை கண்ட நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களை நோக்கி ஏன் இவர்கள் நோன்பு நோற்கின்றார்கள்? எனக்கேட்டார்கள். அதற்கு ஸஹாபாக்கள் அவர்களின் நபீ மூஸா (அலைஹி வஸல்லம்) அவர்களை நினைவுபடுத்தி அவர்களின் நபீமார்களின் வெற்றிகளை நினைக்கும் முகமாக நோற்கிறார்கள். என பதிலளித்தார்கள்.


​​அப்போது நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இவர்களை விட மூஸா (அலைஹி வஸல்லம்) அவர்களை நினைவு படுத்துவதற்கு நானே மிகத்தகுதியானவன் எனக் கூறி ஆஸூறா தினத்தில் நோன்புவைத்தார்கள் . இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம் இருந்தால் 9ம் நாளையும் சேர்த்து நோன்புவைப்பேன் என்றும் கூறினார்கள் .

ஆகவே இவர்கள் கூறுவது போல ஒரு வாதத்திற்கு யூதர்களால்தான் மீலாது விழா உருவாக்கப்பட்டது என்று வைத்துக் கொண்டாலும், அது எவரால் உருவாக்கப்பட்டாலும் நற்செயல்களை செய்ய முடியும். அதற்காக நாங்களும் அக்கூட்டத்தைச் சார்ந்தவர்கள் என்று வந்துவிடாது. கிறிஸ்மெஸ், வெஸாக் போன்ற அந்நிய மத சடங்குகளுக்கு ஒப்பானது. என்ற கண்ணோட்டத்தில் மீலாத் விழாக்களையும் நோக்க முடியாது. இருவரும் விழாக்கொண்டாடுகிறோம். ஆனால் அவர்கள் சிலை போன்ற ஹறாமாக்கப்பட்டவைகளை உபயோகிப்பதன் மூலம் எம்மை விட்டும் வேறுபடுகிறார்கள் ஆகவே எது எப்படி இருந்தாலும் மீலாது விழா கொண்டாடுவதற்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் மார்க்கத்தில் ஆதாரங்கள் உள்ளன அவைகளை பின்வருமாறு கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.


​​

♣  நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாது விழா (பிறந்த நாளை) ஏன் கொண்டாட வேண்டும்?

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பின் அற்புதங்களை எடுத்து கூறுவதற்க்கும், அதன் மூலமாக அவர்களை கண்ணியப்படுத்துவதற்கும் அவர்களுடைய சிறப்பம்சங்களை எடுத்து கூறுவதற்கும், மக்களை ஈமானின் பக்கமும், இஸ்லாத்தின் பக்கமும் உணர்வூட்டுவதற்க்கும், அவர்களின் நற்குணங்களை அறிந்து கொள்ளுவதற்கும், சந்தோசத்தையும் முஹப்பைத்தையும் மற்றும் அவர்கள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவதற்கும், அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை சொல்லி காட்டுவதற்கும், மக்களுக்கு உணவளித்தல் போன்ற நல்ல அமல்களை செய்வது அதன் மூலம் நன்றியை வெளிப்படுத்துவதற்காகதான் மீலாது விழா கொண்டாட்படுகின்றது. இதனை இஸ்லாம் மார்க்கம் அங்கிகரித்த விடயமாகும். எனவே இவ்வாறு எங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது ஒரு முஸ்தஹப்பான அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை அள்ளித்தரக்கூடிய காரியமாகும்.


​​

♣  மீலாது விழா அன்று ஏன் ஸூப்ஹான மௌலித் ஏன் ஓத வேண்டும்?

நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ்வதற்கு காலம் நேரம் உண்டா? ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நாளும் ஸூப்ஹான மௌலித் ஓதலாம் எனவே கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த அழகைக் குறித்தும், பிறந்த அன்று நடந்த நிகழ்சிகள், அற்புதங்கள் பற்றியும் ஆதாரப்பூர்வமான பல செய்திகள் 'ஸூப்ஹான மௌலித்' கிதாபில் உள்ளன.


​​இதன் காரணமாகவே மற்ற மாதங்களில் ஓதுவதை விட நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த மாதமான ரபீஉல் அவ்வல் மாதத்திலும் அவர்கள் பிறந்த தினமான மீலாது ஷரீப் அன்று அதை விஷேசமாக நாம் ஓதி வருகிறோம்.


​​

♣ மீலாது விழா அன்று சுப்ஹான மௌலித் ஓதுவதற்க்கு பதிலாக குர்ஆன் ஷரீப் ஓதினால் மிக ஏற்றமாக இருக்குமே?

எல்லா நேரங்களிலும் எல்லா வகையிலும் குர்ஆன் ஷரீப் ஓதுவது தான் ஏற்றம் என்று நினைத்துக் கொண்டு குர்ஆனையே எப்போதும் ஓதிக் கொண்டு இருந்து விட்டால்! 'விசுவாசிகளே! நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத்தும், ஸலாமும் சொல்லுங்கள்' (அல் அஹ்ஸாப் 56) என்றும், நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை நினைத்து மகிழுங்கள் (யூனூஸ் 58 வசனத்தின் விளக்கம்) என்றும், இறைவன் வழங்கியிருக்கின்ற அருள்களை அடுத்தவருக்கு சொல்லிக்காட்டுங்கள் (அல் லுஹா 11) என்றும் (அந்நஹ்லு 114) இவ்வாறு குர்ஆனில் பல இடங்களிலும் இறைவன் கூறியிருக்கும் கட்டளைகளை எப்போது நாம் செய்து நிறைவேற்ற போகின்றோம்?

♦ நபிமார்களை நினைவு கூர்வது வணக்கமாகும், ஸாலிஹீன்களை நினைவு கூர்தல் பாவப்பரிகாரமாகும். என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.


​​நூல்: அல்ஜாமிவுஸ்ஸகீர் 4331

♦  உங்களில் இறந்தவர்களின் நல்ல அம்சங்களை எடுத்துக் கூறுங்கள்.

​ 

நூல்கள்: அபூதாவூத் 4900,திர்மிதீ 1019,மிஷ்காத் 1678

♦ மேலே உள்ள குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்களின் கூறப்பட்ட விஷயங்களை செயல்படுத்துவது எப்போது? அந்த அடிப்படையில் எல்லா நேரங்களிலும் எல்லா வகையிலும் குர்ஆன் ஷரீப் ஓதுவது தான் ஏற்றம் என்றால்? கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் ஓதுவது, அன்றாட துஆக்கள் ஓதுவது,ஏன் தினசரி வாசிக்கும் பேப்பர், புத்தம் இவ்வாறு எந்த ஒரு செய்கைகளும் அமல்களும் செய்ய முடியாமல் போய்விடும்.


​​இதுவெல்லாம் செய்யும் நேரங்களில் வஹ்ஹாபிகள் சதா நேரமும் குர்ஆனை ஓதிக்கொண்டே இருப்பார்களா? எனவே நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புனித மீலாது தினத்தில் ஸலவாத்துக்களையும், புகழ்களையும் உள்ளடக்கியிருக்கும் சுப்ஹான மௌலிதை அன்றைய தினத்தில் விஷேசமாக ஓதப்படுவதுதான் ஏற்றம் என்ற அடிப்படையில் எந்த விடயத்தை எப்போது செய்ய வேண்டும் அதற்கு பொருத்தமான நேரம், இடம், காலம் என்பதையெல்லாம் நன்றாக விளங்கி நடக்க வேண்டும்.


​​

♣ மீலாது விழா அன்று குர்ஆன் ஓதினால் நன்மை கிடைக்குமே! ஆனால் மவ்லிது ஓதினால் நன்மை கிடையாதே!

கவி (மௌலித்) பாடினால் நன்மை, கூலி, பயன் கிடைக்கும என்பதை ஹதீஸ்கள் தெளிவாக விளங்குகின்றது 'இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் 'நிச்சயமாகக் கவிதையிலும் ஞானம் (ஹிக்மத்) உண்டு'.  


ஹழ்ரத் ​​உபை இப்னு கஅப் (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: புகாரி 6145

♦ ஒரு சமயம் ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இறைமறுப்பாளர்களே! முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைக் குறைவுப்படுத்தி கவி பாடுகிறீர்கள். அதற்கு பதிலாக அன்னவர்களை நான் புகழ்ந்து பாடுவேன். அதற்குரிய நற்கூலி இறைவனிடம் உண்டு. ஹதீஸ் தொடர் நீண்டுசெல்வதால் சுருக்கிக்கொள்கிறேன். தேவையெனில் பார்க்கவும்


​​அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)

​நூல்: முஸ்லிம் 4545

♦ கவி (மௌலித்) பாடுவதால் கூலி பயன் இல்லையென்றால் ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மஸ்ஜிதில் மேடை அடித்து கொடுத்து பாடச் சொல்லி நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் ஸஹாபாக்களும் அமர்ந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்திருப்பார்களா?

நூல்கள்: அபூதாவூத் 5015, திர்மிதி 2846, மிஷ்காத் 4805

♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ்களை (மௌலித்) ஓதுவதால் மலக்குமார்களின் பாதுகாப்பு உதவி கிடைக்கும்


​​நூல்: முஸ்லிம் 4545

♦மௌலித் ஓதுவதால் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் "மஹப்பத்" அன்பு கிடைக்கும். இதைத்தான் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: “யாருக்கு என் மீது முஹப்பத் இல்லையோ, அவருக்கு ஈமான் இல்லை.” என்பதாக.மேலும் கூறினார்கள்: “நான் ஒருவனுக்கு அவனுடைய பெற்றோர்கள், பிள்ளைகள் மற்றுமுள்ள மனிதர்கள் அனைவரையும் விட மிகப் பிரியமானவனாக ஆகின்ற வரை அவன் முஃமீனாக முடியாது".


​​நூல்கள்: புகாரி 14,15, முஸ்லிம் 44–69,70, இப்னு மாஜா 67, நஸஈ 50–43, முஸ்னத் அஹ்மத் 3-288, மிஷ்காத் 7

♦ மௌலித் கிதாபுகளில் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஸலவாத் நிறைந்து காணப்படுகிறது. எனவே மௌலித் ஓதும் போது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அதிகம் ஸலவாத் கூறும் பாக்கியம் கிடைக்கின்றன. 'கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: என் உம்மத்துகளில் ஒருவர் தூய்மையான உள்ளத்துடன் என்மீது ஒரு ஸலவாத் ஓதினால் அவர் மீது அல்லாஹ் பத்து ஸலவாத் ஓதுகிறான், பத்து அந்தஸ்துகளை உயர்த்துகிறான், பத்து நன்மைகளை எழுதுகிறான், பத்து தீமைகளை அழிக்கிறான்'.

நூல்கள்: நசாயி - 65 , பைஹகி - 156 , தப்ரானி - 195 ,196 , பஸ்ஸார்


​​

♣ மீலாது விழா அன்று ஏன் ஊர்வலம் செல்ல வேண்டும்?

நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவை துறந்து மதீனா நகருக்குள் நுழையும் போது அன்ஸாரி ஸஹாபிகள் எதிர்கொண்டு வரவேற்று ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள்.


​​நூல்: புகாரி 3925 ஹதீஸ் விளக்கவுரை பத்ஹூல் பாரி , அகீததுஸ்ஸூன்னா 349

♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தவுடன் மலக்குகள் குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு ஈருலகையும் வலம்சுற்றி வந்தார்கள்.


​​நூல்: மின்ஹத்துல் ஸரன்தீப் பக்கம் 114

♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனாவிற்கு வந்த போது பெண்களும் சிறுவர்களும் குழந்தைகளுக்கு (கூட்டம் கூட்டமாக நின்று ஊர்வலமாக) பின்வரும் பாடலைப் பாடி.. ”தலஅல் பத்ரு அலைனா மின் தனிய்யாதில் வதாயீ வஜபஷ்ஷுக்ரு அலினா மாதஆ லில்லாஹி தாயீ” அழைத்துச் சென்றார்கள்.


​​நூல்கள்: தலாயிலுன் நுபுவ்வா: 2015, புகாரி ஹதீஸ் விளக்கம் 5147, இப்னு மாஜா 1897, அபூதாவுத் 4922, மிஷ்காத் 3140


​​

♣  மீலாது ஷரீப் அன்று ஏன் உணவு கொடுக்கப்படுகின்றது?

ஸலாமை பரப்புங்கள், (மகிழ்ச்சியைக் காட்டும் முகமாக) உணவு வழங்குங்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.


​​நூல்கள்: திர்மிதி 2485, இப்னு மாஜா 1334,3251, மிஷ்காத் 1907

♦ ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் “இஸ்லாமியப் பண்புகளில் சிறந்தது எது?“ என்று கேட்டார். “நீர் உணவளிப்பதும், அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் ஸலாம் கூறுவதுமாகும்“ என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பதில் கூறினார்கள்.”


ஹழ்ரத் ​​அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்கள்: புகாரி 28, 6236, முஸ்லிம் 63 இப்னு மாஜா 3253

♦ ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அறிவித்தார்கள் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தமது மனைவி கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வபாத்தான பின்பும் அவர்கள் அடிக்கடி நினைவு கூறுபவர்களாக இருந்தார்கள் சிலசமயம் ஆட்டை அறுத்து அதைப் பல துண்டுகளாகப் பிரித்து, பிறகு அதை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் தோழிகளுக்கு அனுப்பி வைப்பார்கள்.


நூல்கள்: புகாரி 3818, 6004,முஸ்லிம் 2435, திர்மிதீ 3875,2017,மிஷ்காத் 6186


​​

♣  சுவனத்து உணவு இறங்கிய தினமா? சுந்தர நபியின் மீலாது (பிறந்த) தினமா?

இறைவா! வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு தட்டினை இறக்குவாயாக, அது எங்களுக்கு - எங்களில் முன்னவர்களுக்கும், எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும் என்று மர்யமுடைய மகன் ஈஸா கூறினார்.


​​(அல்குர்ஆன் 5:114)

♦ "நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் திங்கட்கிழமை பிறந்த காரணத்தினால் அன்றைய தினம் நோன்பு வைப்பது சுன்னத்தாகும்."

நூல்: முஸ்லிம் 1162-198, மிஷ்காத் 2045


​​

♣  மீலாதைக் கொண்டாடி மறுமையில் மாண்படைவோம்

அபூலஹ்ப் மரணித்து விட்ட சில தினங்களில் அவர் மோசமான நிலையில் இருப்பதை கனவில் கண்ட அவரின் சகோதரரான அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் உமது மறுமை நிலைமை எப்படி இருக்கிறது என்று வினவினார்கள் அதற்கு அவர் எனது தம்பி மகன் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்து விட்டார்கள் என்று நற்செய்தி சொன்ன எனது அடிமை பெண் ஸூவைபாவை எனது ஆட்காட்டி விரரால் சுட்டிக் காட்டி நீ எனக்கு இந்த நற்செய்தியை சொன்ன சந்தோஷத்தினால் இன்றிலிருந்து உன்னை நான் உரிமை விட்டுவிட்டேன் என்று கூறினேன் அப்படி உரிமை விட்ட காரணத்தினால் ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் என்னுடைய அந்த விரலிருந்து மதுரமான பானம் புகட்டப்படுகிறேன் என்று கூறினார்.


​​நூல்: புகாரி 5101

♦ இதைக் கொண்டு இமாம் நாஸிருத்தீன் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் "உரூதுஸ்ஸாதி" என்ற தமது நூலில் நரகத்திலே நிரந்தரமாக்கப்பட்ட ஒரு காபிருக்கு நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் (மீலாது) பிறந்த நாளைக் கொண்டு மகிழ்ந்த காரணத்தினால் திங்கட்கிழமை தோறும் வேதனை இலேசாக்கப்படுகிறது இன்று இருக்குமானால் ஆயுள் பூராகவும் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைக் கொண்டு மகிழ்ச்சியடைந்து ஈமானுடன் மரணித்த ஒரு முஃமினுக்கு எவ்வளவு பாக்கியம் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.


​​நூல்: அகீததுஸ்ஸூன்னா பக்கம் 359


​​

♣ மாநபியின் மீலாது அன்று (மறைந்த நாளை) நினைத்து கவலை கொள்வதா? அல்லது (பிறந்த நாளை) நினைத்து சந்தோஷம் கொள்வதா?

நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த தினத்தில் தான் இவ்வுலகை விட்டு மறைந்தார்கள் என்ற வகையில் அன்றைய தினம் துக்கம் அனுஷ்டிக்க வேண்டிய நாளா? அல்லது அதே தினத்தில் தான் இவ்வுலகில் பிறந்தார்கள் என்ற வகையில் அன்றைய தினம் மகிழ்ச்சிக்குறிய நாளாகவும் இருக்கின்றது. எனவே குறிப்பிட்ட ஒரே தினத்தில் மகிழ்ச்சியைக் காட்டுவதுதான் ஏற்றம் மிகச் சிறந்தது துக்கம் அனுஷ்டிப்பது சாத்தியமான ஒன்றாகும் எனவே ஒருவர் சிக்கலான இரண்டு காரியங்களைக் கொண்டு சோதிக்கப்பட்டு விட்டால் அவ்விரண்டில் இலகுவானத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும் என்று நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் இரண்டு காரியங்களிடையே இஷ்டம் கொடுக்கப்பட்டால் அவ்விரண்டில் இலேசானதையே தேர்ந்தெடுப்பார்கள் என்று ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்.

​ 

நூல்கள்: புகாரி 3560, முஸ்லிம் 2327, அபூதாவுத் 4785,மிஷ்காத் 5817

♦ எனது ஹயாத்தும் உங்களுக்கு நன்மையானது எனது மரணமும் உங்களுக்கு நன்மையானது ஏனெனில் உங்களுக்குடைய அமல்களை என்மீது எடுத்துக் காட்டப்படுகிறது அது நன்மையானதாக இருந்தால் அல்லாஹ்வைப் புகழ்வேன் தீமையானதாக இருந்தால் உங்களுக்கு பிழை பொறுக்கத் தேடுவேன் என நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.


​​நூல்: மஜ்மவுஸ்ஸவாயித் பாகம் 9 பக்கம் 24,அல்மிர்ஆத் பாகம் 4 பக்கம் 581

♦ அல்லாஹ் ஒரு சமூதாயத்திற்கு நன்மையை நாடினால் அந்த சமூகத்தின் நபியை மரணிக்கச் செய்கின்றான்.


நூல்: முஸ்லிம் 2888, மிஷ்காத் 5977

♦ மேலும் உங்களில் இறந்தவர்களின் நல்ல அம்சங்களை எடுத்துக் கூறுங்கள்.


​​நூல்கள்: அபூதாவூத் 4900,திர்மிதீ 1019,மிஷ்காத் 1678

♦ மேலும் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மண்ணோடு மண்ணாகி மக்கிபோய் இறந்திருந்தால்தானே மறைந்த நாள் என்று சொல்ல முடியும். ஆனால் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் எம்மை விட்டு மறைந்து வாழும் கருணை நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் யதார்தத்தில் இறக்கவில்லை. நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது சொல்லப்படுகிற ஒவ்வொறு ஸலவாத்தையும் ஒரு மலக்கின் மூலம் எத்திவைக்கப்படுகின்றது .ஆகவே மரணித்த ஒருவருக்கு எவ்வாறு எத்தி வைக்கப்படும்?

♦ இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை "(அவர்கள்) இறந்துவிட்டார்கள்" என்று கூறாதீர்கள், அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள் எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.

(அல்குர்ஆன் 2:154)

♦ அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் றப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்.


​​(அல்குர்ஆன் 3:169)

♦ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: நபிமார்கள் கப்ரில் ஹயாத்துடன் இருந்து வருகிறார்கள். அவர்களுடைய உடம்பை மண் தின்னாது. அவர்களுக்கு கப்ரில் சுவர்க்க உணவுகளும் வழங்கப்படுகிறது.


​​நூல்கள்: அபூதாவுத், நஸாயி, இப்னுமாஜா, தாரமி, பைஹகி, மிஷ்காத்

♦ நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எம்மைவிட்டும் மறைந்தாலும் எங்களிலேதான் இருக்கிறார்கள்.'நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் உங்களிலேயே இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்'.

(அல்குர்ஆன் 49:7)

ஆகவே மேற்படி இரண்டு காரியங்களில் எது இலகுவானது என்று கவனிக்கும் போது துக்கம் அனுஷ்டிப்பதை விட மகிழ்ச்சியைக் காட்டுவது தான் அதன் அடிப்படையில் மீதுலாத் நபி விழா கொன்டாடுவது பயன் தரத்தக்கதாகவும் இருக்கின்றது.


​​

♣  மீலாது விழா கொண்டாடுவதால் இதில் எமக்கு எதாவது படிப்பினை உண்டா?

♦உம் இதயத்தைத் திடப்படுத்துவதற்காகவே ரஸுல்மார்களின் சரித்திரங்களில் இருந்து ஒவ்வொன்றாக நாம் உமக்குக் கூறுகிறோம். இவைகளில் உண்மையும், நல்லுபதேசமும் விசுவாசிகளுக்கு நினைவூட்டலும் இருக்கின்றன. (ஸுரத்து ஹுத் 121)

♦ மேலும் திட்டமாக நபிமார்களின் சரித்திரங்களில் அறிவுடையோருக்கு படிப்பினைகள் இருக்கின்றன. (ஸுரத்து யூஸுப் 111)

♦ நபிமார்களை நினைவு கூர்வது வணக்கமாகும், ஸாலிஹீன்களை நினைவு கூர்தல் பாவப்பரிகாரமாகும். என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.


​​நூல்: அல்ஜாமிவுஸ்ஸகீர் 4331

♦ இப்போது கூறப்பட்ட இம்மூன்று ஆதாரங்களையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால் நபிமார்களின் வாழ்க்கை வரலாறுகளை எடுத்துக் கூறுவதற்க்கும் அதைக் கேட்டுக் கொண்டிருப்பதற்க்கும் விழாக்கள் எடுப்பது ஆகுமாக்கப்பட்ட நல்லதோர் அம்சமாகும். மேலும் நபிமார்களின் வாழ்க்கை சரிதைகளை ஞாபகம் பண்ணுவதும் மன தைரியத்தையும், படிப்பினையையும், மறுமையைப் பற்றிய நினைவையும் ஏற்படுத்தக் கூறியதாக இருக்கின்றது என்று மிகத் தெளிவாக விளங்க முடிகிறது.


​​அப்படியானால் நபிமார்கள் யாவரிலும் எல்லா வகையிலும் ஏற்றம் பெற்றவர்களும் (திர்மிதி 3616, தாரமி 47, மிஷ்காத் 5762) மேலும் நபிமார்கள் யாவரிலும் தொந்தரவு அடைந்ததிலும் தெளிவடைந்ததிலும் தன்னிகரற்றவர்களாகவும் இருக்கின்ற நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் (திர்மிதி 2472, இப்னுமாஜா 151, மிஸ்காத் 5253) வாழ்க்கை வரலாறுகளை எடுத்துக் கூறுவதில் முஃமின்களுக்கு எந்த அளவு உபதேசமும், நினைவூட்டுதலும், படிப்பினையும் இருக்க வேண்டும்?

♦ எனவேதான் நாம் கொண்டாடி வருகின்ற மீலாது விழாவில் நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் வாழ்க்கை வரலாறுகளை அடிப்படையாக வைத்தும் ஏனைய நபிமார்களின் வாழ்க்கை வரலாறுகளை சம்பந்தப்படுத்தியும் உலமா பெருமக்கள் உரை நிகழ்த்தி வருகிறார்கள். ஆகவே நபிமார்களின் சரித்திரங்களை அறிஞர்கள் கூறுவதற்கும் பொதுமக்கள் கேட்பதற்கும் அதன் மூலம் நமது பாவங்கள் பொறுக்கப்படுவதற்கும் மீலாது விழாக்கள் மிகப் பெரிய வரப்பிரசாதமாக இருப்பதால் மீலாது விழா கண்டிப்பாக வரவேற்கப்படக் கூடிய ஒன்றாகும்.

♦ எவர்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை ஈமான் கொண்டு மேலும் அன்னவர்களை உகப்பு கொண்டு மகிமைப்படுத்தி மேலும் அன்னவர்களுக்கு (பல வகையிலும்) ஒத்தாசையாக இருந்து அன்னவர்களுடன் இறக்கிவைக்கப்பட்ட பேரொளியையும் பின்பற்றி நடக்கிறார்களோ அவர்கள் தான் உண்மையான வெற்றியாலர்களாகும். (அல் அஃராப் -157) என்று அல்லாஹ் தஆலா குறிப்பிடுகிறான்.


​​இப்போது கூறப்பட்ட இத்திருவசனத்தின் கூற்றிற்கிணங்க கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை மகிமைப்படுத்தி அதன்மூலம் சத்தியடைந்தவர்களுடன் சேருவதற்கு மீலாது விழா ஒரு நல்ல சந்தர்ப்பம் என்பதை அறிவுடையோர் யாவரும் நன்கறிவர். மேலும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த நாள்தான் மார்க்கத்திற்கு மகிழ்ச்சியும், பெருமையும் ஏற்பட்ட நாளாகும். ஆகவே மீலாது பெருவிழா கொண்டாட்டம் அல்லாஹ் நமக்கு அருள்புரிந்த நன்னாளாகும்.