MAIL OF ISLAM

Knowledge & Wisdom



​வலிமார்களின் மௌலித் ஓதலாமா?


​எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.​

​​

இஸ்லாத்தின் பார்வையில் ஷுஹதாக்கள், வலிமார்கள், நல்லடியார்களின் பெயரால் மௌலித் ஓதுவது கூடுமா?


​​

♣ வலிமார்கள் (மௌலித்) என்றால் என்ன?

பள்ளிவாசலில், மத்ரஸாக்கள், பாடசாலை, வீடு, கடை போன்ற இடங்களில் மனிதர்கள் ஒன்று கூடி திர்குர்ஆன் வசனங்களில் சிலதை ஓதி, ஒரு வலீ அல்லது ஒரு நல்ல மனிதனைப் புகழ்ந்து அவரின் பிறப்பு இறப்பு பற்றிக் கூறி அவரின் வாழ்விலும், அவர் மறைந்த பின்னும் அவரால் வெளியான அற்புதங்களைக் (கராமத்) கூறி, அவரின் உயர் குணங்களையும் விஷேட தன்மைகளையும் எடுத்தோதி, அவர் சொன்ன பேச்சுகள் தத்துவங்களைப் பேசி, அல்லது பாடி, அங்கு கூடும் மக்களுக்கு சாப்பாடு பழவகை விநியோகம் செய்து, மார்க்க அறிஞர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கி அவர்களை கௌரவித்தல் இவ்வாறு செய்தலே முஸ்லிம்களிடம் வலிமார்களுக்கு மௌலித் ஓதுதல் என்று சொல்லப்படுகிறது.

உதாரணமாக: பத்ர் ஸஹாபாக்கள் பெயரால் (பத்ர் மவ்லிது), ஷெய்க் அப்துல் காதிர் ஜிலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் பெயரால் (முஹ்யித்தீன் மவ்லிது - யாகுத்பா) , நாகூர் ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் பெயரால் (ஷாகுல் ஹமீத் மவ்லித்) எனவும், இது போன்ற ஏனைய வலிமார்களின் பெயரில் மவ்லிதுகள் உள்ளன. அந்த அடிப்படையில் வலிமார்களின் தலைவர் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் புகழ்களை கவி மூலம் மௌலித் ஓதினால் அதற்கு "முஹியத்தீன் மௌலித்" என்றும் இஸ்லாத்திற்காக தன்னை அற்பணித்த பத்ர் ஸஹாபாக்களின் புகழ்களை கவி மௌலித் மூலம் ஓதினால் அதற்கு "பத்ரு மௌலித் என்றும் இவ்வாறு எந்த எந்த நல்லடியார்கள் மீது நாம் புகழ்து கவி பாடுகின்றோமோ அந்த மௌலிதிற்கு அவர்களின் பெயர்களை கொண்டு அழைக்கப்படும்.


​​

♣ வலிமார்கள் என்பவர்கள் யார்?

அல்லாஹ்வின் கட்டளையும், கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் ஸுன்னத்துகளையும் ஒன்று விடாமல் பின்பற்றி, இஸ்லாம் என்னும் மார்க்கத்தில் முறையாக நடந்து ஷரீஅத், தரீகத், ஹகீகத் என்ற மன்ஸில்களை அதாவது படித்தரங்களை கடந்து இறுதியில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்றுக் கொண்டவர்களே அல்லாஹ்வின் அவ்லியாக்கள், வலிமார்கள் எனப்படுவார்கள்.

மேலும் அவ்லியாக்கள் என்றால் அல்லாஹ்வின் நேசர்கள் என்று பொருள். வலி என்றால் ஒரு இறைநேசரை குறிக்கும். வலிமார்கள் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட பல இறைநேசர்களை குறிக்கும். நாம் வலிமார்கள் என்று கூறினால் அதில் ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஅத்தாபியீன்கள், இமாம்கள் ஏனைய அவ்லியாக்கள் அனைவரும் அடங்குவார்கள். என்றாலும் பொதுவாக மக்கள் பேசும்பொழுது, ஸஹாபாக்களை அவர்களது சிறப்பான அந்தஸ்தை கூறியே, அதாவது ஸஹாபாக்கள் என்று கூறியே அழைக்கிறார்கள்.


​​ஏனைய தாபியீன்கள், தபஅத்தாபியீன்கள், இமாம்கள், இஸ்லாமிய பெரியார்கள் இவர்களைத்தான் பொதுவாக அவ்லியாக்கள் என்று கூறுகிறார்கள்.வலிமார்களின் அந்தஸ்துஉலகத்திலுள்ள எல்லா அவ்லியாக்களை விடவும் அதி கண்ணியமும், சிறப்பும், அந்தஸ்தும் மிக்கவர்கள்தான் ஸஹாபாக்கள். எனவே நாம் எந்த ஒரு அவ்லியாவையும் ஸஹாபாக்களை விட சிறந்தவர்கள் என்று கூறக்கூடாது. அப்படி நினைத்தும் பார்க்கக்கூடாது. அதேபோல் உலகத்திலுள்ள எந்தவொரு அவ்லியாவையும் எங்களோடு ஒப்பிட்டுப்பார்த்து எங்களைப்போன்ற சாதாரண மனிதர்கள்தான் என்று கூறக்கூடாது.


​​

♣ குர்ஆன்,ஹதீஸ்களிருந்து வலிமார்களின் (அந்தஸ்துக்கள்- படித்தரங்கள்), புகழ்களைப் பற்றி மௌலித் ஓதுவதற்கான ஆதாரங்கள்.

இவைகளை ஆதாரங்கள் கூறி விரிவாக விளக்கம் கூறத் தேவையில்லை அல்லாஹ் குர்ஆனில் வலிமார்கள், ஷுஹதாக்களைப் புகழவில்லையா? குர்ஆனில் பல இடங்களில் வலிமார்களின் வாழ்க்கை வரலாறுகளை கூறி இறைவன் புகழவில்லையா? குகை வாசிகள் என்று சொல்லப்படும் இறைநேசர்களைப் பற்றி குர்ஆனில் கூறவில்லையா? ஷூஹதாக்களை புகழ்து கூறவில்லையா? எனவே வலிமார்களை புகழலாம், அவர்களின் வாழ்க்கை வரலாறுகளை, குணங்களை கவி (மௌலித்) மூலம் ஓதலாம்,எடுத்துரைக்கலாம் என்று குர்ஆன், ஹதீஸ் விளங்குகின்றது.

♦ அவ்லியாக்களைப் பற்றி எல்லாம் வல்ல அல்லாஹ் அஸ்ஸவஜல் புனித அல்குர்ஆனில் கூறும்போது: "அல்லாஹ்வுடைய அவ்லியாக்களுக்கு எந்த பயமும் இல்லை. எந்த கவலையும் இல்லை" என்று கூறுகிறான்.  (அல்குர்ஆன் 10:62)

அவர்கள் விரும்பாத ஒன்று நடந்து விட்டதே என்று கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் விரும்பாத ஒன்று எதிர்க்காலத்தில் நடக்குமோ என்று பயப்படவும் மாட்டார்கள். இதுதான் இதன் பொருள். ஆனால் கியாமத்து நாளைப்பற்றிய கவலை மற்றவர்களைவிட இந்த அவ்லியாக்களுக்குத்தான் அதிகமாக இருக்கும். அதேபோன்று அல்லாஹ்வுடைய அச்சம், பயம் மற்றவர்களைவிட இந்த அவ்லியாக்களுக்குத்தான் மிக அதிகமாக இருக்கும்.


​​அதேநேரம் இந்த உலக சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவர்கள் எந்த கவலையும், பயமும் அடையமாட்டார்கள் என்று வலிமார்களைப் பற்றி இறைவன் புகழ்ந்து கூறுகிறான்.

♦ இதே போன்று அல்லாஹ் அஸ்ஸவஜல் கூறியதாக எங்கள் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் திருவுளமானார்கள்:"எனது அடியான் நஃபிலான வணக்கங்களை விருப்பத்துடன் செய்து, என்னுடைய நெருக்கத்தைபெற விரும்பி, என்னை நெருங்கினால் நான் அவனை நேசிக்கும் அளவுக்கு ஆகிவிடுகிறான். நான் அவனை நேசித்து விட்டால், அவன் கேட்கும் காதாகவும், பார்க்கும் கண்ணாகவும், பிடிக்கும் கையாகவும், நடக்கும் காலாகவும் நான் ஆகிவிடுகிறேன்.


​​நூல் புஹாரி 6502

♦எனக்கு திருமணம் நடந்த பின்னர் நபிகள் நாயகம் ஸல்லல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் என்னிடம் வந்தார்கள்எனக்கருகில் என் விரிப்பின் மீது அமர்ந்தார்கள். அப்போது சில சிறுமிகள் பத்ர் போரில் ஸஹீதான முன்னோர்களை புகழ்ந்து பாடி கஞ்சிராக்களை (தஃப்) அடித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, “எங்களிடையே இறை தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்” என்று கூறினாள். உடனே நபி ஸல்லல்ல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள். இதை விட்டு விட்டு நீ முன்பு சொல்லி கொண்டிருந்ததை சொல் என்றார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் ருபய்யிஃ பின்த் முஅவ்வித் ரலியல்லாஹு அன்ஹா

​நூல்கள்: புகாரி 5147, அபூதாவூத், திர்மிதி

♦ எனது திருமண வைபவத்தின் போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனது இல்லம் வந்தார்கள். அந்த நேரத்தில் சிறுமிகள் பத்ர் போரில் ஷஹீதான முன்னோர்களை புகழ்ந்து பாடி தஃப் அடித்துக் கொண்டிந்தார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் ருபய்யிஃ பின்த் மு அவ்வித் ரழியல்லாஹு அன்ஹா.

​நூல்கள்: புகாரி 3700,திர்மிதி 1010,அபூதாவூத் 4276

♦ இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஹாஜிர் மற்றும் அன்ஸார் தோழர்களுக்கு பிராத்தனை செய்து கவி படித்தார்கள். திண்ணமாக, வாழ்வு என்பது மறுமையின் வாழ்வுதான். இறைவனே! அன்ஸார் – முஹாஜிர் தோழர்களை மன்னிப்பாயாக! நிச்சயமாக மறுமை நலனைத் தவிர வேறு எந்த நலனும் கிடையாது. இறைவனே! அன்ஸார் – முஹாஜிர் தோழர்களுக்கு பரகத் (அபிவிருத்தி) செய்வாயாக! உறுதியாக மறுமை வாழ்வைத் தவிர வேறு எந்த வாழ்வுமில்லை. இறைவனே! அன்ஸார் - முஹாஜிர் தோழர்களுக்கு கருணை புரிவாயாக!


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு (நூல் புகாரி 2622, 2623, 2741, 3616

♦ நாங்கள் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை சந்திக்க சென்றோம். அப்போது ஹஸ்ஸான் இப்னு ஃதாபித் ரழியல்லாஹு அன்ஹு தனது கவிகளின் மூலம் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை புகழ்ந்து பாடிக் கொண்டிந்தார்கள் (அவற்றில் ஒன்று) ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா நல்லொழுக்கமும், நுண்ணறிவுமிக்கவர்கள். ஐயத்திற்கு அப்பாற்பட்டவர்கள். எந்தவொரு பெண்ணை பற்றியும் தவறாக பேசமாட்டார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் மஸ்ரூக் ரழியல்லாஹு அன்ஹு (நூல் புகாரி 3831, முஸ்லிம் 4543

♦இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

​உங்களில் முன் சென்றோர்களின் நல்லவைகளை எடுத்துக்கூறுங்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு)

நூல்: திர்மிதி 940, அபூதாவூத் 4254

♦ உங்களில் இறந்தவர்களின் நல்ல அம்சங்களை எடுத்துக் கூறுங்கள்.

​ 

நூல்கள்: அபூதாவூத் 4900,திர்மிதீ 1019,மிஷ்காத் 1678

♦ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் கூறினார்கள்:

​நபிமார்களை நினைவு கூறுவது வணக்கமாகும். ஸாலிஹீன்களை நினைவு கூறுவது பாவ பரிகாரமாகும்.


​​நூல்: அல்ஜாமிஉஸ் ஸகீர் 2 – 299

♦ஜனாஸாவைக் கடந்து சென்ற (அருமைத் தோழர்கள்) புகழ்ந்து பேசினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களகமையாகிவிட்டது என்று கூறினார்கள். எது கடமையானது என்று உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்டார்கள். இறந்துபோன இம்மனிதரை நீங்கள் புகழ்ந்தீர்கள். எனவே, அவருக்கு சொர்க்கம் கடமையாகிவிட்டது என கூறினார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு (நூல் புகாரி எண் 1278, முஸ்லிம் 1578

ஆகவே மேலே கூறப்பட்ட இவ் ஆதாரங்களையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால் வலிமார்கள், நல்லடியார்கள், ஷூஹதாக்களின் வாழ்க்கை வரலாறுகளை கவி மூலம் (மௌலித்) எடுத்துக் கூறுவதும், ஓதுவதும் அதைக் கேட்டுக் கொண்டிருப்பதும் அதை ஞாபகம் பண்ணுவதும் மன தைரியத்தையும், படிப்பினையையும், மறுமையைப் பற்றிய நினைவையும் ஏற்படுத்தக் கூறியதாக இருக்கின்றது என்று மிகத் தெளிவாக விளங்க முடிகிறது.


​​எனவே மேலே கூறப்பட்ட இவ்வதாாதாரங்கள் மூலமாக இறைநேசர்களாகிய வலிமார்களின் புகழ்களை கவி மூலம் (மௌலித்) ஓதலாம் எனவே இந்த பணியைதான் நாம் வலிமார்களின் மௌலித் மஜ்லிஸ் அன்று மக்கள் ஒன்று கூடி வலிமார்கள் ஷூஹதாக்களின் வாழ்க்கை வரலாறுகளை கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள்.