MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஹழ்ரத் அபூபக்ர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு


அப்துல்லாஹ் என்பது அவர்களின் பெயரெனினும் அழைக்கப்பட்டு வந்தது அபூபக்ர் என்னும் காரணப்பெயர் கொண்டாகும். அபூகுஹாபா என்பது அன்னாரின் தகப்பன் பெயர். இவர்களும் குறைஷியரே. நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் இவர்களை விடச் சுமார் இரண்டேகால் வருடத்துக்குக் குறைந்தவர்கள். நபித்துவத்துக்கு முன்னிருந்தே நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் நண்பர். ஆண்களில் முதன் முதல் விசுவாசம் கொண்டவர். பெருந் தனவந்தர். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் தோழர்களின் மேல்கண்ணியமும், கௌரவமும் பெற்றவர். வயதிலும் தோழர்களில் பெரியவர். ஏழைகளின் நண்பர். பிறரின் அவஸ்தையை சிறிதும் சகியாதவர். தங்களின் செல்வம் பூராவும் இஸ்லாமுக்காகச் செலவழித்த தர்ம வள்ளல். இவர்கள் நுண்ணிய அறிவும், தளரா மனமும், வழுவா நீதியும் இஸ்லாமின் நலனையே குறிக்கோளாகக் கொண்ட உலகப் பற்றற்றவருமாவர். நாயக வாக்கியங்கள் பல இவர்களைப் புகழ்ந்து வந்துள்ளன.




இவர்கள் கிலாபத்தை ஒப்புக்கொண்ட தினத்தில் நிகழ்த்தியசொற்பொழிவைக் கவனிக்கப்புகின், இவர்கள் குணத்தையும், நடத்தையையும் வர்ணிக்க வேறேதும் தேவைப்படாது. ஜனங்களைப் பார்த்து அவர்கள்:-


“நல் ஜனங்களே! உங்கள் கலீபாவாக நான் இன்று உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். ஆனால் உங்களிலும் நான் மேம்பட்டவன் என என்னை, நான் கூறிக்கொள்ள முடியாது. உங்களில் மிகப் பலசாலியாக உள்ளவன் என்னிடத்தில் பலவீனனாவான். எனவே அவனிலிருந்து பெறவேண்டிய உரிமைகளை நான் பெறுவேன். ஜனங்களே! நான் பின்பற்றுகிறவனேயன்றிப் புதிதாய் ஒன்றை உண்டுபடுத்துபவனல்லன். எனவே நான் உண்மையாக, நேர்வழியில் அல்லாஹ்வுக்கும் அவன் ரஸூலுக்கும் வழிப்பட்டு நடப்பேனாயின் எனக்கு நீங்கள் வழிப்படுங்கள். உதவிபுரியுங்கள். இதற்குமாறாக, நான் எப்பொழுது உண்மைக்கு மாறாக நடக்கின்றேனோ அப்பொழுது என்னை நீங்கள் திருத்தி நேராக்குங்கள்,” என்று கூறினார்கள். பதவியேற்றதும் பல தொல்லைகளுக்கு ஈடு கொடுக்கவேண்டியிருந்தது புது கலீபா அவர்களுக்கு.



குடும்ப வாழ்க்கை:-

அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கிலாபத்தை ஏற்றுக்கொள்ளுமுன்பு வியாபாரமூலம் வாழ்க்கை நடத்திவந்தார்கள். கலீபாவான பின்பு 6 மாதங்கள் வரை வியாபாரஞ்செய்து வந்தார்கள். பின்னர் கிலாபத் காரியாதிகளோடு வியாபாரத்தை நடத்துதல் முடியாதென வியாபாரத்தை நிறுத்திவிட்டார்கள். பின்னர் நிதியிலிருந்து வருடத்துக்கு 6,000 திர்ஹம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அவர்களின் பரலோக பயணம் அண்மித்தபோது தமக்குச் சொந்தமானவோர் நிலத்தைக் குறிப்பிட்டு “அதை விற்று நான் இதுவரை பொது நிதியிலிருந்து பெற்ற சம்பளத் தொகையைக் கொடுத்து விடுங்கள்” எனக் கூறினார்கள்.



உள் நாட்டு ஒழுங்கு முறை:-

முதல் கலீபா அவர்களின் காலத்தில் ஜஸீரதுல் அறப் எனும் அராபிய தீபகற்பம் மட்டும் இஸ்லாமிய ஒழுங்கு முறையிலிருந்து. ஸிரியா, இராக் பகுதிகளிற் சண்டை நடந்து வந்தது. அப்பகுதியில் வெற்றிக்கொண்ட நாடுகளின் ஒழுங்கு, சேனைத் தலைவர்களின் ஒழுங்கு முறையாகவே இருந்தது. அறப் தேசம் முழுமையும் பத்துப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் வழக்குகளின் தீர்ப்பு, மார்க்கத் தண்டனைகள் நிறைவேற்றுதல், தொழுகையை நடாத்துதல், ஆகியவைகளுக்காக கலீபா அவர்களால் ஒவ்வொரு தலைவர் (கவர்னர்) நியமிக்கப்பட்டார். மக்கா, தாயிப், ஸன்ஆ, ஹள்றமௌத், கௌலான், ஜபீஹ், (எமன்) ஜுன்த், ஜர்ஷ், பஹ்ரைன், நஜ்ரான் ஆகியன அராபியாவின் பத்துப் பகுதிகளாம்.



மதம் மாறியவர்களின் குழப்பம்:-

புதிதாக இஸ்லாமைத் தழுவியிருந்த சில நாட்டுப்புற அரபிகள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்களின் மறைவுக்கு பின்னர் ஏழை வரி கொடுக்க மறுத்ததோடு கலீபாவுக்குக் கீழ்ப்படியாதிருந்து இராஜ்யங்களை நிறுவவும் துணிந்தனர். மாலிக் பின் நுவைராவெனும் ஒருவன் சுமார் ஒரிலட்சம் அரபிகளைத் திரட்டித்தானே அரசனெனப் பிரகடனம் செய்ததோடு நில்லாது நபியென நடிக்கவும் தலைப்பட்டான். ஸன்ஹாவிலிருந்த அஸ்வதுல் அன்ஸீ என்பவனும், பனீ அஸத் வர்க்கத்தைச் சேர்ந்த துலைஹாவும், பனீயர்பூஃ எனும் பிரிவிலுள்ள ஸஜாஹ் பின்த் ஹாரித் என்னும் பெண்ணும் இப்படி நபி எனப் பொய்வேடம் பூண்டு கௌரவம் பெறத் துணிந்தவர்களாவர். இத்தகைய புரட்சிகளை அடக்குவதற்காக மார்க்கப் பிரசாரர்களை அனுப்பியதோடு வாள் ஏந்தியவர்களை எதிர்ப்பதற்காக 4500 முஸ்லிம்கள் கொண்ட சைனியமொன்றையும் காலித் இப்னு வலீத் (ரலியல்லாஹு அன்ஹு) முதலான 11 தலைவர்களை நியமித்து கலீபா அவர்கள் அனுப்பிவைத்தார்கள். இப்படிப் படையனுப்பு முன்பதாகத் தூதர்களிடம் துண்டுப் பிரசுரங்கள் கொடுத்து எதிரிகளின் சந்தைகள், சங்கங்கள், கூட்டங்கள் முதலான இடங்களில் வாசிக்கப்படுவதற்காக அனுப்பி வைத்தார்கள். இஸ்லாத்தில் கொடுக்கப்பட்ட இத்தகைய பொது அறிவித்தல்களில் முதலாவது இதுவேயாகும். சென்றவிடமெல்லாம் இம்முஸ்லிம்கள் வெற்றியீட்டினர். குழப்பங்கள் அத்துணையும் அடங்கின. புரட்சிக்காரரெல்லோரும் அடக்கப்பட்டார்கள். முஸைலமா முதலிய வேடதாரிகள் கொலையுண்டார்கள்.



வபாத்:-

இரண்டு வருஷமும் மூன்று மாதமும் பதின்மூன்று நாட்களும் அரசு புரிந்துவிட்டு அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஹிஜ்ரத் 13ம் ஆண்டு ஜமாதுல் ஆகிர் மாதம் 23ம் தேதி (கி. பி. 633 ஆகஸ்ட் 23ம் தேதி) தங்களின் 63ம் வயதில் சுவனபதியடைந்தார்கள். அன்னார் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) வின் அறையில் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்களின் சமாதிக்கருகில் நல்லடக்கஞ் செய்யப்பட்டார்கள்.



சிறப்புகள்:-

‘நபிமார்களையடுத்து மனிதப் படைப்பில் மிக மேலானவர், என்று வையகமும் புகழ்ந்தேத்தும் வளமார் சிறப்புக்குரியவர்கள் ஸையிதினா ஹஸ்ரத் அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்.


‘கத்தமுர் ரூஹுல்’ என்னும் வெண்ணிலா உலாவந்த விண்ணின் வெளியில் வண்ணத் தாரகைகளாய் மின்னிச் சுடர் பரப்பிய நன்னபித் தோழர்களில் ஸையிதினா ஹஸ்ரத் அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒரு விடிவெள்ளியாய் ஒளிர்பவர்கள். “முன்நூற்றி அறுபது வகையான நற்குணங்கள் உள்ளன. அல்லாஹ் தன் அடியாருள் ஒருவரை சுவனத்துட் புகச் செய்ய நாடுவானாகில் அவற்றுள் மேலான ஒன்றை அவருள் அமைத்து விடுகிறான்” என்று ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் கூறக்கேட்டு, அடக்கத்துக்கு அணிகலனாகத் திகழ்ந்த ஹஸ்ரத் அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கேட்டார்கள், “பெருமானே! அவற்றுள் ஏதேனும் ஒன்றையேனும் என்னுள் நான் அடையப் பெற்றுள்ளேனா?” என்று. இன்முகம் காட்டிய நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள், “அபாபக்கரே! உம்மில் அவை அனைத்தையுமே நீர் அடையப் பெற்றுள்ளீர். எனினும், அவற்றுள் மேலானது வள்ளன்மை” என்று கூறினார்கள்.


பிற்காலத்தில் தம் இந்த முன்னோடியை நினைவுக்கூர்ந்த ஹஸ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், ‘அந்தோ அபூபக்கரின் நெஞ்சத்தில் நான் ஒரு முடியாக முளைத்திருந்தாலும் அது எனக்கு ஒரு பேராகவே இருந்திருக்கும்’ என்று சிலாகித்தார்கள். ஒரு போர்வையைப் போர்த்திய வண்ணம் ஒரு நாள் ஹஸ்ரத் அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அமர்ந்திருந்த சமயம் ஹஸ்ரத் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், “இறைவனைச் சந்திக்கவிருக்கும் நல்லடியார்களில் இதோ இந்தப் போர்வைக்குடையவரை விட மேலானவராக எவரும் என் பார்வையில் படவில்லை” என்று கூறினார்கள். மக்காவில் திருமுகம் தோற்றுவித்த நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களை மனிதர்கள் எவரும் ஏற்காத அந்த ஆரம்ப நாளில் நபியாக ஏற்று – துன்பத்திலும், துயரத்திலும் அவர்களோடு துணை நின்று – உடலையும் உடைமைகளையும் அவர்களுக்காகவே அர்ப்பணித்து – தொண்டாலும், தோழமையாலும் அவர்களில் தம்மைப் பிணைத்து – மறை புகழும் நிறை வாழ்வு கண்ட ஸையிதினா ஹஸ்ரத் அபூபக்கர் ஸித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்.


“நானும் அபூபக்கரும் பந்தயத்தில விடப்பட்ட இரு புரவிகளைப் போன்றிருந்தோம். நான் அவரை முந்தி விட்டேன். எனவே, என்னை அவர் பின் தொடர்ந்தார். அவர் முந்தியிருப்பின் நான் அவரைப் பின் தொடர்ந்திருப்பேன்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களே புகழ்ந்துள்ளார்கள். வாழ்க்கையின் ஆரம்ப நாளிலிருந்தே தூய்மையும், நேர்மையும், அமைதியும், அறிவாற்றலும் கொண்டு விளங்கிய இவர்கள், இஸ்லாத்துக்குப் பின்னர் தலைமைத் தனம் பெற்று விளங்கியதே போன்று இஸ்லாத்துக்கு முன்னரும் தலைமைத் தனம் பெற்று விளங்கினர்.


நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் அருமைத் தோழர்கள் பதின்மர் இவ்வாறே இஸ்லாத்துக்கு முன்னரும் அரபுகளிடையே பொறுப்புடைத் தலைவர்களாக விளங்கினார்கள். அப்பதின்மரில் ஹஸ்ரத் அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களும் ஒருவர். ஹிஜ்ரத்தின் வரலாறு ஹஸ்ரத் அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்வை மனிதர்கள் மறவா வண்ணம் ஆக்கி வைத்த ஒரு புனித வரலாறாகும். “வாழ்நாள் முழுவதும் நான் சேர்த்த நன்மைகளை அவர் ஒரு நாளில் தேடிக் கொண்ட நன்மைக்கு ஒப்பாகிவிட நான் ஆவலுறுகிறேன். ஓர் இரவில் அவர் பெற்றபேறு வாழ்நாளின் எல்லா இரவுகளிலும் நான் பெற்ற பேறுகளுக்குச் சமானது” என்று ஹஸ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒருநாள் கூறினார்கள். “அது எந்த இரவு” எனக் கேட்கப்பட்டபோது, “நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களோடு குகையில் அவர் கழித்த இரவு” என்று ஹஸ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், ஹிஜ்ரத்துடைய நிகழ்ச்சிகளையே விவரித்தார்கள்.


ஹஸ்ரத் அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கருணையையும், ஹஸ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கடுமையையும் கண்டு முறுவலித்த நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள், “என் தோழர்களில் உமர் நபிமார்களில் நூஹ், மூஸா ஆகியவர்களை ஒத்தியிருக்கிறார். அபூபக்கரோ இப்ராஹீம், ஈஸா ஆகியோரைப் போன்றிருக்கிறார்” என்று கூறினார்கள்.


ஹிஜ்ரி 9 – ம் ஆண்டில், தபூக் போருக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றன. கடும் பஞ்சம் நாட்டைச் சூழ்ந்திருந்தது. அந்நிலையிலும் தங்கள் ஆண்மையை – வலிமையை ரோமர்கள் உணரச் செய்ய அப்படையெடுப்பை நடத்தியே தீரவேண்டிய நிர்ப்பந்தம் முஸ்லிம்களுக்குத் தவிர்க்க முடியாததாக இருந்தது. நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அப்படையெடுப்புக்காகத் தங்கள் தோழர்களிடம் பொருளுதவி கோரினார்கள். அத்தோழர்களும் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற வரை அள்ளிக் கொணர்ந்து அளித்தார்கள். பொருள்வளம் படைத்தவர்கள் ஒருவரையொருவர் மிகைக்க முனைந்தனர்.


ஹஸ்ரத் உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தங்கள் உடைமைகளில் நான்கிலொரு பகுதியை அப்போருக்காக அளித்தார்கள். ஹஸ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களோ தங்கள் உடமைகளில் சரிபாதியைக் கொணர்ந்துதந்தார்கள். “அன்றைய தினம் நான் செல்வ நிலையில் ஹஸ்ரத் அபூபக்கரை விட மேலாக இருந்தேன். எனவே அன்று அவரை எவ்விதத்திலும் மிகைத்திட உறுதி கொண்டேயிருந்தேன்” என்று ஹஸ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களே கூறுகிறார்கள். அவர்களின் ஆர்வம் கண்டு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கேட்டார்கள், “அபல் ஹஃப்ஸ்! உம் மனைவி மக்களுக்காகவும் ஏதேனும் வைத்துக்கொண்டீரல்லவோ?” என்று. “பெருமானே! இந்த அளவு ஒரு பாதியை நான் அவர்களுக்காக வைத்தே வந்தேன்” என்றார்கள் ஹஸ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்.


அடுத்து ஹஸ்ரத் அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கொணர்ந்து சேர்த்த உடைமைகளின்பால் திரும்பியது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் பார்வை. மாவரைக்கும் திருகையும், குவளையும், மாற்றும் உடைகளும் கூட அவற்றிடைக் காணப்படக் கண்டு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கேட்டார்கள், “அபாபக்கரே! உம் மனைவி மக்களுக்காக என்னதான் வைத்துக் கொண்டீர்” என்று. “அல்லாஹ்வையும் அவன் தூதரையும் வைத்துக்கொண்டேன்” என்று ஹஸ்ரத் அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் திருவாய்மொழியக் கேட்டு நபிமணித் தோழர்களின் உடல்கள் புல்லரித்து நின்றன.


விரைந்து அவர்களின் கரங்களைப் பற்றி நின்ற ஹஸ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கண்ணீர் மல்கக் கூறினார்கள், “அபாபக்கரே! நன்மைக்கான வழிகளில் உம்மை முந்த ஒரு நாளும் என்னால் இயலாது” என்று. “பொருளாலும் தம் தோழமையாலும் எனக்குப் பெருதவிப்புரிந்தவர்களில் அபூபக்கரை மிஞ்சியவர்கள் மனிதரில் எவருமில்லை. என் இறைவனைத் தவிர்த்து மற்றெவரையும் என்தோழமைக்காகத் தேர்ந்தெடுப்பதாயின் அபூபக்கரையே நான் தேர்ந்தெடுப்பேன். எனினும் அன்பும் இஸ்லாமிய சகோதரத்துவமும் நம்மிடையே பொதுவானவையாக இருக்கின்றன”


“உங்களின் இந்தத் தோழர் அல்லாஹ்வுக்கு மிக நேசராக இருக்கிறார் என உங்களை எச்சரிக்கின்றேன்” “மனிதர்களில் ஒவ்வொருவரும் எனக்குச் செய்த உபகாரங்களுக்கு நான் நன்றி செலுத்தி விட்டேன் – அபூபக்கர் எனக்குச் செய்துள்ளவற்றைத் தவிர. அபூபக்கர் எனக்குச் செய்துள்ள உபகாரங்களுக்குரிய பிரதிபலன்களை மறுமையில் என் இறைவனே அவருக்குத் தருவான்” என்றெல்லாம் புகழ்ந்தார்கள். பள்ளியைச் சுற்றியும் பெருநபித் தோழர்கள் இல்லங்கள் அமைத்து அவ்வில்லங்களிலிருந்தும் அவர்கள் பள்ளிக்குள் நுழைவதற்காகப் பள்ளியின் புறமாகவே சிறு சிறு வாயில்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஹஸ்ரத் அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பள்ளிக்கு வரும் வாயிலைத் தவிர மற்றெல்லா வாயில்களையும் மூடிவிட கட்டளையிட்ட நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அதற்கான காரணம் வினவப்பட்டபோது, அது இறைவனின் புறமிருந்து வந்த கட்டளை என்றறிவித்தார்கள்.


ஹஸ்ரத் அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் இச் சமுதாயத்திற்கு ஆற்றிய மற்றோர் அரிய பணி அல்லாஹ்வின் திருமறையை அவர்கள் ஒன்றுப்படுத்தியதாகும். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் வாழ்நாளில் இருபத்து மூன்றாண்டு காலங்களில் பல்வேறு தருணங்களில் அவர்கள்பால் இறக்கப்பெற்ற இறைமறைத் திருவசனங்களெல்லாம் அவ்வப்போது ஒட்டகையின் எலும்புகளிலும், தோல்களிலும் ஈத்தம் மட்டைகளிலும் எழுதி வைக்கப்பட்டனவேயன்றி அவை ஒரே நூலாக எழுதப்படவில்லை. அதன் வசனக் கோவைகள் அத்தியாயப் பிரிவுகள் வரிசை முறைகள் இவையெல்லாம் ஹஸ்ரத் ஜிப்ரஈல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வலிக்காட்டுதலின் படி நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் காலத்திலேயே வரையறுக்கப்பட்டு விட்டன வென்றாலும், இன்றிருப்பதைப் போன்று ஒரே நூல் வடிவில் மட்டும் அது எழுதி வைக்கப்படாமலே இருந்தது.


அவ்வாறு எழுதி வைக்கப்பட வேண்டிய தேவையும் அவர்களுக்கு இல்லாமல் இருந்தது. ஏனெனில் அத்திருமறையை ஒளிரும் சுடராய்த் தாங்கிய மனிவிளக்காய் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அம்மக்களிடையே உலவிக் கொண்டிருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அமைத்துத் தந்த வரிசை முறைப்படி மாநபி தோழர்கள் பல நூறு பேர் அப்பேரருள் பேழையைத் தங்கள் நெஞ்சக் கருவூலங்களில் பாதுகாத்து வந்தார்கள்.


ஹஸ்ரத் அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பொதுவாகவே தம் மனைவி மக்களிடத்தில் அன்புடையவர்களாகவே இருந்தார்கள். ஆயினும் அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் அதிகமாக அன்பு கொண்டிருந்தார்கள். காரணம் உலகாயத உறவுகள் அனைத்தும் அருப்பட்டுப் போகக் கூடிய மறுமை நாளில் அறுபடாமல் இருக்கக் கூடிய நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் புனிதமிக்க ஒரே உறவு அவர்களுக்கு அத்திருமகளாலல்லவா கிடைத்திருக்கிறது! அந்த அன்பின் காரணமாக அவர்கள் அத்திருமகளார்பால் தனிக் கவனம் செலுத்துவதுண்டு. நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள், கைபர் வெற்றியின்போது அங்கு ஒரு நிலத்தை ஹஸ்ரத் அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்குக் கொடுத்திருந்தார்கள்.


அதன்றி மதீனாவின் சூழலிலும் பஹ்ரைனிலும் கூட அவர்களுக்கு நிலபுலன்கள் இருந்தன. அவை யாவும் அவர்களின் வழி வாறுகளுக்குப் பொதுவானவையாக இருப்பினும், மதீனாவுக்கருகில் இருந்த ஒரு நிலத்தை அவர்கள் தம் அருமை மகளார் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களுக்கு மட்டும் அன்பளிப்பு செய்திருந்தார்கள். மரணப்படுக்கையில் அது அவர்களுக்கு நினைவு வந்தது. தம் வழிவாறுகளுக்கிடையே தாம் இளைத்து விட்ட பேதமாக அது ஆகிவிடுமோ என்று அஞ்சிய அவர்கள் தம் மகளார் ஆயிஷா நாயகியாரை அழைத்து, “ அருமை மகளே! இன்று வரை என் உடைமைகளாய் இருப்பவை யாவும் இனி என் வழிவாறுகளுக்கு உரிமை ஆகிவிடும். அவற்றோடு, நான் உனக்குத் தனியாகத் தந்திருக்கும் நிலத்தையும் நீ உன் இரு சகோதரர்களான அப்துர் ரஹ்மான், முஹம்மத் ஆகியோருடனும், உன் இரு சகோதரிகளுடனும் திருக்குர்ஆன் கூறும் முறைப்படி சற்றும் வரம்பு பிசகாமல் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்” என்று பணித்தார்கள்.


“தந்தையே! என்னுடைய இரு சகோதரர்களைத் தாங்கள் குறிப்பிடுவது சரியே, ஆனால் அஸ்மாவாகிய ஒரே சகோதரி எனக்கிருக்க, ‘இரு சகோதரிகள்’ என்று தாங்கள் குறிப்பிடும் மற்றொரு சகோதரி யார்?” என்று ஆயிஷா நாயகியார் வினவினர். “உன் சிற்றன்னையாகிய என் மனைவி ஹபீபா பின்த் காரிஜாவின் கர்ப்பக்கோளறையில் வளரும் பெண்மகவே உன் மற்றொரு சகோதரி” என்றார்கள் கலீஃபா.


கலீஃபா அவர்களின் மரணத்துக்குப் பின்னர், அவர்கள் முன்னறிவித்தபடி அவர்களின் துணைவியார், ஹபீபா பின்த் காரிஜா (ரலியல்லாஹு அன்ஹா) பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். அப்பெண் மகவின் பெயர் உம்மு குல்ஸும் எனச் சூட்டப்பட்டது. ஹஸ்ரத் அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தங்கள் இருவகை ஆன்மீக ஞானங்களை அன்று வெளிப்படுத்தினார்கள். ‘என் உடைமைகள் யாவும் இனி என் வலிவாருகளுக்கு உரிமையாகி விடும்’ என்று கூறி, அன்றைய தினம் தங்கள் துணைவியாரின் கர்ப்பக் கோளறையில் வளர்வது பெண் குழந்தையே என்பதையும் அன்று அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.


தங்கள் உடைமைகளில் ஐந்திலொரு பங்கை தர்மஞ்செய்யவும் மரணத்தருவாயில் அவர்கள் கட்டளையிட்டதாக ஒரு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது. பின்னர் ஆயிஷா நாயகியாரை நோக்கி, “அருமைமகளே! நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் எந்த நாளில் மரணமடைந்தார்கள்” என்று கேட்டார்கள் கலீஃபா. “திங்கட்கிழமை” என்று அன்னையார் பதில் கூறினர். “இன்று என்ன கிழமை” என்று வினவினார்கள் கலீஃபா. “திங்கட்கிழமை” என்றே பதில் கூறினர் அன்னையார். “இன்று மாலைக்குள் உலகிலிருந்து விடை பெறுவதையே நான் விரும்பிறேன்” என்றார்கள் கலீஃபா. “அருமை மகளே! நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு எத்தனை துணிகளால் கஃபனிடப்பட்டன?” என்று கேட்டார்கள் கலீஃபா.


“மூன்று துணிகளால்” என்றார்கள் ஆயிஷா நாயகியார். “அதே மூன்று துணிகள் எனக்கும் கஃபனிடப்போதும். இப்போது நான் உடுத்தியிருக்கும் இரண்டு துணிகளுடன் மேலும் ஒன்றைச் சேர்த்துக் கொள்ளுகள்” என்றனர் கலீஃபா.


“அருமைத் தந்தையே! கஃபனிடுவதற்குப் புதிய துணிகள் இருக்கின்றன. தாங்கள் உடுத்தியிருப்பவை பழைய துணிகளன்றோ” என்று ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் வினவ, “தந்தையின் உயிரே! கஃபனிடுவதற்குப் பழைய துணிகளே போதுமானவை. புதிய துணிகளுக்கு இறந்தவர்களைவிட உயிரோடு இருப்பவர்களே அதிக உரிமை படைத்தவர்கள்” எனக் கூறி விட்டார்கள் கலீஃபா.


அத்தருணத்தில் ஈராக்கிலிருந்து வந்திருந்த ஹஸ்ரத் முஃஸன்னா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கலீஃபா அவர்களை வந்து சந்தித்தார்கள். ஹஸ்ரத் காலித் ஸைஃபுல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) தம்மைப் பிரிந்து ஸிரியாவின் பக்கம் சென்ற பின்னர் ஈராக்கில் முஸ்லிம் படைகளின் முன்னேற்றங்களுக்கு ஏற்பட்டிருந்த சங்கடங்களையும் ஈரானியர்களின் வன்மைகளுக்கு எதிராக முஸ்லிம்களுக்குத் தேவைப்பட்ட உதவிகளையும் ஹஸ்ரத் முஃஸன்னா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூற அவற்றைக் கூர்மையுடன் கேட்டனர் கலீஃபா. தங்கள் பிரதிநிதியாக ஹஸ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை அழைத்து வரச் செய்து, “உமர்! இன்று மாலைக்குள் என் வாழ்வானது ஒரு முடிவுக்கு வந்து விடும் என எதிர்பார்க்கின்றேன். அடுத்து ‘கிலாஃபத்’ பொறுப்பை ஏற்கும் நீர் என் இறப்பு கண்டு தளர்ந்து விடாதிருப்பீராக. நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் மரணத்தை விட என் மரணம் பெரிதல்ல. அவர்கள் இவ்வுலகைப் பிரிந்த அன்றைய தினம் எத்தகைய உறுதியுடன் நான் நடந்து கொண்டேன் என்பதை நினைவுபடுத்திக் கொள்வீராக.


எல்லைகளையடுத்து நம் படைகள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் நீர் குழப்பத்திற்குள்ளாகி விட வேண்டாம். இறைவனின் ஆணைக்குட்பட்டு இந்த மார்க்கத்துக்கு ஆற்றும் பணியிலிருந்து என் மரணத்தால் ஏற்படும் துயரம் உம்மைத் தயக்கமுறச் செய்து விட வேண்டாம். நான் பகலில் இறந்திடில் இரவாகு முன்பும், இரவில் இறந்திடில் விடியு முன்பும் என்னை அடக்கம் செய்து விட்டு, முஃஸன்னாவுக்கு உதவியாக முஸ்லிம்களை ஊக்கப்படுத்துவீராக. ஸிரியாவின் வெற்றிச் செய்தி கிடைத்தவுடன் காலித் இப்னு வலீதை ஈராக்கின் புறம அனுப்புவீராக.”என்று கூறி தங்கள் பொறுப்புகளை ஒப்படைத்தார்கள்.


அடுத்து, தம்மை அடக்கம் செய்வது பற்றிப் பேசத்துவங்கிய கலீஃபா அவர்கள், “உமரே! நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் திரு உடலை நீராட்டியது யார்?” என்று வினவினார்கள். “அலீ- இப்னு- அபீதாலிப்” என்றனர் ஹஸ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு).


“நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் திரு உடலை நீராட்டிய அதே கரங்கள் என்னையும் நீராட்டட்டும். நீரே முன்னின்று எனக்காகத் தொழுகையை நிறைவேற்றிய பின்னர், என் உடலை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் துயில் கொள்ளும் இடத்திற்கு எடுத்து வாருங்கள்.


“கத்தாபுடைய மகனே! கவனமாகக் கேட்பீராக. உள்ளே நுழைய, பேணுதலை மறந்து நீர் அவசரப்பட்டு விடவேண்டாம். வாசலில் என் உடலை வைத்து, நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு ஸலாம் கூறி, “அல்லாஹ்வின் ஹபீபே! தங்களின் அடிமை அபூபக்கர் தங்கள் அருகாமையைத் தேடினவனாக, தங்கள் அனுமதியை நாடிக் காத்திருக்கிறேன்” என்று கூறுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக, புனித மண்ணரையிலிருந்து உங்களுக்கு அனுமதி கிடைக்குமாயின் என்னை உள்ளே எடுத்துச் சென்று அடக்கம் செய்யுங்கள். அவ்வாறு பதில் கிடைக்கவில்லையாயின் என் உடலை ‘ஜன்னத்துல் பகீ’ இலேயே அடக்கம் செய்து விடுங்கள்” எனக் கூறி முடித்தார்கள் கலீஃபா.


அதோடு கலீஃபா அவர்கள் நினைவு மயங்கி விட்டார்கள். அவர்களின் புனித ஆன்மா தொண்டைக் குளிக்கும் நெஞ்சுக்கும் இடையே சுழியிட்டு நின்றது. அமைதியாகப் படுத்திருந்த அருமைத் தந்தையின் திருமுகத்தை அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) உற்று நோக்கினார்கள். அவர்களின் கண்கள் குளமாயின. அதரங்கள் துயரத்தால் நடுங்கின. கம்மிய குரலில் ஆயிஷா நாயகியார் ஒரு கவிதையைக் கூறினார்கள்.


தங்களின் திருமுகத்துக்காக விண்ணும் மழையைப் பொழியுமே!

அனாதைகளைத் துன்பத்தில் அனைத்து நின்ற முகமல்லவா அது!

விதவைகளின் வாழ்வைக் காத்து நின்ற முகமல்லவா அது!

மெல்லிய சோகக்குரல் கலீஃபா அவர்களின் செவிப்பரைகளையும் எட்டியது. ஈருலக நாயகரைப் புகழ்ந்து ஹஸ்ரத் அபூதாலிப் அவர்கள் சாற்றிய புகழ்ச்சரமல்லவா அது!

கண் விழித்து, “அப்படிக் கூற வேண்டாம். அந்தப் பெருமையும் உயர்வும் அல்லாஹ்வின் தூதருக்கே சொந்தமானவை” என்றார்கள்


மரணத்தின் மடியிலும் தம் மாநபியின் கண்ணியம் பேண மறவாத அக்கலீஃபா. அதுவே கலீஃபா அவர்களின் இறுதிப் பேச்சு!


“இறைவா! என்னை முஸ்லிமாகவே மரணிக்கச் செய்து சீலர்களோடு இணைத்து வைப்பாயாக” என்ற இறைஞ்சுதலோடு நிறைவு கொண்டது அவர்களின் இறுதி மூச்சு!!


கலீஃபா அவர்களின் இறுதியுரைப்படி அன்றிரவே அவர்களின் புனித உடல் ஹஸ்ரத் அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் திருக்கரங்களால் நீராட்டப் பெற்று, கஃபனிடப் பெற்று, நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் படுத்துறங்கிய கட்டிலின் மேல் வைத்து எடுத்துச் செல்லப்பட்டது. அமீருல் முஉமினீன் ஹஸ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அதனைத் தாங்களே முன்னிற்று தொழுவித்து நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் துயில் கொள்ளும் – ஆயிஷா நாயகியாரின் இல்லத்தின் முன் வைத்து, “அஸ்ஸலாமு அலைக்க யா ரசூலல்லாஹ், ஹாதா அபூபக்கர்...” என்று கூறிய போதே இடைமறித்து “உத்குலுல் ஹபீப இலல் ஹபீப் – நேசரை நேசரின் பக்கம் வர விடுங்கள்” என்ற குரல் புனித கப்ரின் புறமிருந்த வர அனைவரும் செவியுற்றனர். கலீஃபா அவர்களின் புனித உடல் உள்ளே எடுத்துச் செல்லப்பட்டு, நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் புனித நெஞ்சுக்கு நேராக கலீஃபா அவர்களின் புண்ணியத் திருமுகம் இருக்கும்படி அடக்கம் செய்யப்பட்டது. ஹஸ்ரத் அப்துர் ரஹ்மான் இப்னு அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு), உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு), தல்ஹா (ரலியல்லாஹு அன்ஹு) ஆகியோர் மண்ணறையிலிறங்கி அப்பொன்னுடலைத் துயில் கொள்ளச் செய்தனர்.


ஹிஜ்ரி 13 –ம் ஆண்டு ஜமாதில் ஆகிர் மாதம் 22 – ம் நாள்! மறை போற்றும் நிறைவாழ்வு கண்ட மாமேதை அன்று தங்கள் உலக வாழ்வுக்கு நிறைவு கண்டார்கள். கரை காணா மறை ஞானப் பெருங்கடல் அன்று தன் அலைகள் யாவையும் ஓயச் செய்து அமைதி கண்டது. “முத்தக்கீன்’ கள் எனப்படும் இறையச்சமுடையோர்களின் தளவாய் அன்று தங்கள் தாளாளருகே துயில் கொள்ளக் கிடைத்த வாய்ப்பைச் சுகிக்கத் துவங்கினார்கள்.


விண்ணுலகப் பயணம் முடித்துத் திரும்புகையில் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள், “ஜிப்ரஈலே! என் சமுதாயத்தார் இச்சம்பவத்தை ஏற்பார்களா?” எனக் கவலையுற்ற போது ஹஸ்ரத் ஜிப்ரஈல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் அணுவளவும் கவலையுற வேண்டாம். தங்கள் தோழர் அபூபக்கர் தங்களை உண்மைப்படுத்துவார். ஏனெனில் அவர் ஸித்தீக் (உண்மையாளர்) ஆவார்” எனக்கூறினர். இதன் காரணமாகவே ஸித்தீக் என்னும் சீர்மொழியை அல்லாஹ் ஹஸ்ரத் ஜிப்ரஈல் (அலைஹிஸ்ஸலாம்) மூலம் விண்ணிலிருந்து இறக்கி வைத்தான் என ஹஸ்ரத் அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் சத்தியம் செய்து கூறுபவர்களாக இருந்தார்கள் என்றும் இமாமவர்கள் குறிப்பிடுகிறார்கள்.