MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஈமான்

  அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் கூறினார்கள்:

என்னுடைய உயிர் எவன் கை வசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக. உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தையும் அவரின் மக்களையும் விட நான் மிக்க அன்பானவராகும் வரை அவர் இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆக மாட்டார்.

ஸஹிஹுல் புகாரி - 14



♣  அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆக மாட்டார்.

ஸஹீஹுல் புகாரி - 15



  இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூறினார்கள்:

இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது.

1.அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது.

2. தொழுகையை நிலை நிறுத்துவது.

3. (கடமையானோர்) ஸகாத் வழங்குவது.

4. (இயன்றோர் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது.

5. ரமளானில் நோன்பு நோற்பது.

ஸஹீஹுல் புகாரி - 08



  அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவராவார். (அவை)

1.அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும்விட அதிக நேசத்திற்குரியோராவது.

2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.

3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்கு மாறுவதை வெறுப்பது.

ஸஹீஹுல் புகாரி - 16



  அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையின் (ஈமானின்) அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும். நயவஞ்சகத்தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும்.

ஸஹீஹுல் புகாரி - 17



  அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:

அன்சாரிகளை சேர்ந்த ஒருவர் தம் (அதிகம்) வெட்கப்படுவதை கண்டித்து கொண்டு இருந்தபோது அவ்வழியே அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் சென்றார்கள். உடனே அவரை (கண்டிக்காதீர்கள்) விட்டுவிடுங்கள். ஏனெனில் நிச்சயமாக வெட்கம் இறைநம்பிக்கையின் (ஈமானின்) ஒரு அம்சமாகும் என்று நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்.

ஸஹீஹுல் புகாரி - 24