MAIL OF ISLAM

Knowledge & Wisdom



நபிகள் நாயகம் ﷺ  அன்னவர்களின் சிறப்புகள்


பிறப்பின் சிறப்பு

​​♣ ஹழ்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் அன்சாரி ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: 

​நான் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டேன்: அல்லாஹ் முதன் முதலின் எதைப் படைத்தான்? அதற்கு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளித்தார்கள்: ”முதலில் அல்லாஹ் தனது ஒளியிலிருந்து எனது ஒளியைப் படைத்தான். இந்த ஒளியானது அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி பயணித்தது, அந்நேரத்தில் சொர்க்கம், நரகம், எழுதுகோள், லவ்ஹு, வானம், பூமி, சூரியன், சந்திரன், ஜின், மனித இனம் என எதுவும் படைக்கப்படவில்லை. அல்லாஹ் படைப்பினங்களை படைக்க நாடிய போது, அந்த ஒளியை நான்கு பாகங்களாக பிரித்து, முதல் பாகத்திலிருந்து எழுதுகோலையும், இரண்டாவதிலிருந்து லவ்ஹையும், மூன்றாவதிலிருந்து அர்ஷையும் படைத்தான். நான்காவது பாகத்தை மீண்டும் நான்கு பாகங்களாக ஆக்கி, முதலாவதிலிருந்து அர்ஷை சுமக்கும் மலக்குமார்களையும், இரண்டாவதிலிருந்து குர்ஸியையும், மூன்றாவதிலிருந்து மலக்குமார்களையும் படைத்தான். மீதமுள்ள ஒரு பாகத்தை மீண்டும் நான்காக பிரித்து, முதலாவதிலிருந்து வானங்களையும், இரண்டாவதிலிருந்து கோளங்களையும், மூன்றாவதிலிருந்து சுவனத்தையும், பூமியையும் படைத்தான். ரப்புல் ஆலமீன் அல்லாஹ் மீண்டும் நான்காவதை நான்கு பாகங்களாக பிரித்து, அவற்றில் முதலாவதிலிருந்து மூஃமின்கள் காணக்கூடிய ஒளியையும், இரண்டாவதிலிருந்து மூஃமின்களின் ஒளி பொருந்திய இதயங்களையும், மூன்றாவதிலிருந்து கலிமாவை மொழியக்கூடிய மூஃமின்களின் நாவுகளையும் படைத்தான்.

​தலாயினுன் நுபுவ்வத் - இமாம் பைஹகி

​​​

♣  நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

"நபி ஆதம் அலைஹி ஸலாம் அவர்கள் களிமண்ணுக்கும், தண்ணீருக்கும் இடையிலிருந்த போது நான் நபியாக இருந்தேன்."


மிஷ்காத் - 513​


♣ ஸுவைபா அபூலஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குப் பாலூட்டினார். அபூலஹப் இறந்தபோது அவருடைய குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார். அபூலஹப் மோசமான நிலையில் அவருக்குக் காட்டப்பட்டார். அபூலஹபிடம் (மரணத்திற்குப் பிறகு) நீ எதிர்கொண்டது என்ன என்று அவர் கேட்டார். உங்களை விட்டுப் பிரிந்த பின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. ஆயினும் நான் ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்களினூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது என்று கூறினார்.


ஹழ்ரத் உர்வா (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹீஹுல் புகாரி - 5101​



♣  நபிகள் நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம் ) அன்னவர்கள் கூறினார்கள்:

"எனது தாய் - தந்தை இருவரும் அறியாமை கால திருமண முறையை சந்தித்ததில்லை. தூய்மையான முதுகந்தண்டிலிருந்து பரிசுத்தமான கருவறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் என்னை இறைவன் கொண்டு வந்து கொண்டேயிருந்தான். இரு பிரிவினர் தோன்றினால் அவ்விரண்டில் சிறந்த பிரிவினரில் நானிருந்தேன்.


ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

தலாயில் நுபுவ்வா - 15,  இப்னு அஸாகிர் - 1217,  துர்ருல் மன்தூர் - 3/294



♣ நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம் ) அன்னவர்கள் கூறினார்கள்:

"ஆதமுடைய பிள்ளைகளில் தலை முறை தலைமுறையாக இப்போது நானிருக்கும் தலைமுறை வரை சிறந்தோர் வழியாக நான் அனுப்பப்பட்டேன்."


ஸஹிஹுல் புகாரி - 3293



♣ கண்மணி நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம் ) அன்னவர்கள் கூறினார்கள்:

"ஒவ்வொரு நபியும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு (நபியாக) அனுப்பப்பட்டார்கள். ஆனால் நான் மக்கள் யாவருக்கும் ரசூலாக அனுப்பப்பட்டிருக்கிறேன்"


ஸஹிஹுல் புகாரி 335 , ஸஹிஹ் முஸ்லிம், மிஷ்காத் 5747​​​


♣ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் ) அன்னவர்கள் கூறினார்கள்:

"நானே முன்னோர் பின்னோர் யாவரிலும் மிக சங்கைகுரியவனாக இருக்கின்றேன்."


திர்மிதி 3131, தாரமி 47, முஸ்னத் அஹமத் 3 - 164, மிஷ்காத் 5762, 5920​​​



​​​♣  நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

"மக்கள் இருப்பிரிவினராக பிரிகின்றபோது அவற்றில் சிறந்த பிரிவில் இறைவன் என்னை அமைத்தான்"


ஹழ்ரத் அனஸ் (ரலியல்லஹு அன்ஹு)

பைஹகி (தலையில் நுபுவ்வா) 81


♣நபிகள் ​நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்களிடம் திங்கட்கிழமை நாள் நோன்பு நோற்பதன் காரணம் பற்றி வினவப்பட்டபோது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். அன்றைய தினத்தில்தான் நான் பிறந்தேன். மேலும் அன்றுதான் என் மீது வஹீ இறக்கப்பட்டது என்று கூறினார்கள்.

ஸஹிஹ் முஸ்லிம் 1162 - 198, முஸ்னத் அஹ்மத் 5- 299, மிஷ்காத் 2045


​​

​​♣  நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள் ரபீஉல் அவ்வல் மாதம் 12 ம் பிறையில் பிறந்தார்கள்.


ஹழ்ரத் முஹம்மது இப்னு இஸ்ஹாக் (ரலியல்லாஹு அன்ஹு)

ஹாக்கிம் - 2-603, சீரத் இப்னி ஹிஷாம் - 1-211


♣  நபிகள் ​நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள் யானை ஆண்டில் பிறந்தார்கள்.


ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

ஹாகிம், இப்னி ஹிஷாம்

இந்த ஹதீஸ் இமாம் புஹாரி, இமாம் முஸ்லிம் (ரலியல்லாஹு அன்ஹுமா) ஆகியோரின் நிபந்தனையின் படி ஸஹீஹான ஹதீஸாகும். ​​​


♣ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்) கூறியுள்ளார்கள்:

"நிச்சயமாக நான் அல்லாஹுதஆலாவின் பால் அன்பளிப்பு செய்யப்பட்ட ரஹ்மத்தாக இருக்கிறேன்" 


மிஷ்காத் – 5800, தாரமி – 15, பைஹகி ஸுஃபுல் ஈமான் – 1446​​​


​​

நபிகள் நாயகம் ﷺ நம்மை போன்ற சாதாரண மனிதர் அல்ல

​​

♣ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள் (நோன்பு திறக்காமல்) தொடர் நோன்பு நோற்றார்கள். மக்களும் அவ்வாறு தொடர் நோன்பு நோற்றார்கள். இது மக்களுக்குச் சிரமமாக இருந்தது. அப்போது நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள் மக்கள் தொடர் நோன்பு நோற்கத் தடை விதித்தார்கள். நபித்தோழர்கள் நீங்கள் (மட்டும்) தொடர் நோன்பு நோற்கிறீர்களே! என்று கேட்டார்கள். நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள், நான் உங்களைப் போன்றவன் அல்லன் (இறைவன் தரப்பிலிருந்து) உண்ணவும் பருகவும் எனக்கு வழங்கப்படுகிறது! என்று கூறினார்கள்.


ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் உமர் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹீஹுல் புகாரி - 1922



♣ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் ) அன்னவர்கள் கூறினார்கள்:

​​"நிச்சயமாக பூமியிலுள்ள பொக்கிஷங்களின் திறப்புகள் என்னிடமே உள்ளது"


ஸஹீஹுல் புகாரி - 1-508, மிஷ்காத் 512



♣ ​ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

"நான் விரும்பினால் தங்க மலைகள் என்னிடம் விரைந்து வந்துவிடும்"


மிஷ்காத் 521



♣ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

"தங்கம், வெள்ளி ஆகிய இரண்டு பொக்கிஷங்களையும் கொடுக்கப்பட்டுள்ளேன்."


இப்னு மாஜா 3952, மிஷ்காத் 512​​​

​​​

​​​

​♣ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

​"​நான் உங்களுக்கு முன்பே (அல்கவ்ஸர்) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன்"


​​ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு)

​ஸஹீஹுல் புகாரி 6575

​​​​


♣ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

"மூர்ச்சையடைந்து விழும் (மறுமை) நாளில் மக்கள் மூர்ச்சையடைந்து (கீழே) விழுந்துவிடுவார்கள். நான்தான் (மயக்கம் தெளிந்து) எழுபவர்களில் முதல் ஆளாக இருப்பேன்"


ஹழ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹீஹுல் புகாரி 6518



♣ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"திடமாக எனக்கு பல பெயர்கள் உள்ளன, நான் "முஹம்மத்" (புகழபடுபவன்) , நான் "அஹ்மத்" (அல்லாஹ்வினால் அதிகம் புகழபட்டவன்), நான் "மாஹி" (குப்'ரை அழிப்பவன்). நான் "ஹாஷிர்" (எனக்கு பின்னால் என் வழி தொடரும் சமுதாயம் கொண்ட இருப்பவன்), நான் "ஆகிப்" (எனக்கு பின்னால் எந்த நபியும் இல்லாது இருப்பவன்)."


ஹழ்ரத் ஜுபைர் பின் முத்'இம் ரழியல்லாஹு அன்ஹு

ஸஹீஹுல் புகாரி, ஸஹிஹ் முஸ்லிம் - 2849, திர்மிதி, அஹ்மத்



♣ ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) தொழுது கொண்டிருந்தார்கள். மக்களும் தொழுதார்கள். நான் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் வந்து, 'மக்களுக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டேன். ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) வானை நோக்கிச் சுட்டிக் காட்டினார்கள். (தொழுகையில் பேசக் கூடாது என்பதால்), 'ஸுப்ஹானல்லாஹ்' என்றும் கூறினார்கள். அப்போது 'இது (ஏதாவது) அடையாளமா?' என நான் கேட்டதற்கு, ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா), 'ஆமாம் அப்படித்தான்' என்று தலையால் சைகை செய்தார்கள். உடனே நானும் (தொழுகையில்) நின்று கொண்டேன். (நீண்ட நேரம் நின்றதால்) நான் மயக்கமுற்றேன். (மயக்கத்தைப் போக்க) என்னுடைய தலையின் மீது தண்ணீரை ஊற்றினேன். நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தங்களின் உரையில் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, 'எனக்கு இது வரை காட்டப்படாத சுவர்க்கம், நரகம் உட்பட அத்தனைப் பொருட்களையும் இந்த இடத்திலேயே கண்டேன். மேலும் எனக்கு அறிவிக்கப்பட்டது. நிச்சயமாக நீங்கள் உங்கள் மண்ணறைகளில் மஸீஹுத் தஜ்ஜால் என்பவனுடைய குழப்பத்துக்கு நிகரான சோதனைக்கு உள்ளாக்கப்படுவீர்கள். (அப்போது மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டவரிடம்) 'இந்த மனிதரைப் பற்றி உமக்கு என்ன தெரியும்?' என்று கேட்கப்படும். நம்பிக்கையாளர் 'அவர்கள் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஆவார்கள்; அவர்கள் எங்களுக்குத் தெளிவான சான்றுகளையும் நேர்வழியையும் கொண்டு வந்தார்கள்; நாங்கள் (அவர்களின் அழைப்பை) ஏற்றோம்; அவர்களைப் பின் பற்றினோம்; அவர்கள் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்தாம்' என்று மும்முறை கூறுவார். அப்போது '(சுவனப் பேரின்பங்களைப் பெறத்) தகுதி பெற்றவராக நீர் (நிம்மதியாக) உறங்குவீராக!' என்றும் 'நிச்சயமாகவே நீர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பற்றி இத்தகைய உறுதியான நம்பிக்கையுடையவராகவே (உலகில்) இருந்தீர் என்று நாமறிவோம்' என்றும் கூறப்படும். நயவஞ்சகனோ 'எனக்கு எதுவும் தெரியாது; மக்கள் அவரைப் பற்றி ஏதோ சொல்லிக் கொண்டிருக்கக் கேட்டிருக்கிறேன். எனவே நானும் அது போன்று கூறினேன்' என்பான்' என்று கூறினார்கள்.


ஹழ்ரத் அஸ்மா (ரலியல்லாஹு அன்ஹா)

ஸஹீஹுல் புகாரி - 86



​​♣ நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சூரியன் சாய்ந்தபோது வெளியே வந்து லுஹர் தொழுதார்கள். மிம்பர் (மேடை) மீது ஏறி உலக முடிவு நாள் பற்றியும் குறிப்பிட்டார்கள். அந்நாளில் பயங்கரமான பல காரியங்கள் நிகழும் என்றும் குறிப்பிட்டார்கள். 'எதைப் பற்றியேனும் எவரேனும் கேட்க விரும்பினால் அவர் என்னிடம் கேட்கலாம். இந்த இடத்தில் நான் இருக்கும் வரை நீங்கள் எதைப் பற்றிக் கேட்டாலும் உங்களுக்கு அறிவிக்காதிருக்க மாட்டேன்" என்றும் குறிப்பிட்டார்கள். மக்கள் மிகுதியாக அழலானார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் 'என்னிடம் கேளுங்கள்" என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஹுதாபா' என்பவரின் மகன் அப்துல்லாஹ் என்பவர் எழுந்து 'என் தந்தை யார்?' என்று கேட்டார். 'உன் தந்தை ஹுதாபா" என்று நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறிவிட்டு 'என்னிடம் கேளுங்கள்" என்று மிகுதியாகக் குறிப்பிட்டார்கள். (இந்நிலையைக் கண்ட) உமர் (ரலியல்லாஹு அன்ஹு) மண்டியிட்டமர்ந்து 'அல்லாஹ்வை இரட்சகனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை நபி என்றும் நாங்கள் திருப்தியுடன் ஏற்றோம்' என்று கூறியதும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மவுனமானார்கள். பின்னர் 'சற்று முன் இந்தச் சுவற்றின் நடுவில் சுவர்க்கமும் நரகமும் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டன. (அவ்விடத்தில் கண்டது போல்) நல்லதையும் கெட்டதையும் நான் கண்டிருக்கவில்லை" என்றார்கள்.


ஹழ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹிஹுல் புகாரி - 540

​​

♣ நான் பள்ளிவாசலில் நின்றுக்கொண்டிருந்தபோது ஒருவர் என் மீது சிறு கல்லை எறிந்தார். நான் திரும்பிப் பார்த்தபோது உமர் இப்னு அல் கத்தாப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் நின்று கொண்டு இருந்தார்கள்.

'நீ சென்று (அதோ) அந்த இருவரையும் என்னிடம் அழைத்து வா!" என்றார்கள். அவ்விருவரையும் அவர்களிடம் கூட்டிக் கொண்டு வந்தேன். நீங்கள் இருவரும் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று உமர் (ரலியல்லாஹு அன்ஹு) கேட்க, 'நாங்கள் தாயிஃப் வாசிகள்' என்று அவர்கள் கூறினர். 'அல்லாஹ்வின் தூதருடைய பள்ளிவாசலில் சப்தங்களை நீங்கள் உயர்த்தியதற்காக நீங்கள் இவ்வூரைச் சேர்ந்தவர்களாக இருந்தால் உங்களிருவரையும் (சவுக்கால்) அடித்திருப்பேன்' என்று உமர் (ரலியல்லாஹு அன்ஹு) கூறினார்கள்.


ஹழ்ரத் ஸாயிப் இப்னு யஸீத் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹிஹுல் புகாரி - 470



♣ இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.


* எதிரிகளுக்கும் எனக்குமிடையில் ஒரு மாத காலம் பயணம் செய்யும் இடைவெளியிருந்தாலும் அவர்களின் உள்ளத்தில் பயம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் உதவப்பட்டுள்ளேன்.


* பூமி முழுவதும் சுத்தம் செய்யத் தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என்னுடைய சமுதாயத்தில் தொழுகையின் நேரத்தை அடைந்தவர் (இருக்கும் இடத்தில்) தொழுதுகொள்ளட்டும்!


* போரில் கிடைக்கிற பொருள்கள் எனக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்பு ஹலாலாக்கப்பட்டதில்லை.


* (மறுமையில்) சிபாரிசு செய்யும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளேன்.


* ஒவ்வொரு நபியும் தங்களின் சமூகத்திற்கு மட்டுமே நபியாக அனுப்பட்டார்கள். ஆனால், மனித இனம் முழுமைக்கும் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன்.


ஹழ்ரத் ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹிஹுல் புகாரி - 335


​​

புனித கைகளின் சிறப்புகள்

​​♣  நபி (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டு வரக் கூறியபோது தண்ணீருடன் வாய் விசாலமான ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதில் நபி (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் தங்களின் விரல்களை வைத்தபோது அவர்களின் விரல்களுக்கிடையிலிருந்து நீர் ஊற்று சுரப்பதை பார்த்தேன். அதிலிருந்து எழுபதிலிருந்து எண்பது பேர் வரை உளூச் செய்ததை நான் கணக்கிட்டேன்.


ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹிஹுல் புகாரி - 200



♣ கண்மணி நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம் ) அவர்களின் உள்ளங்கையை விட மென்மையான பட்டையோ, (பூ வேலைப்பாடு செய்யப்பட்ட) தூய்மையான பட்டையோ நான் தொட்டதில்லை. நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் ) அவர்களின் (உடல்) மணத்தை விட சுகந்தமான ஒரு நறுமணத்தை நான் நுகர்ந்ததேயில்லை. வேறு சில அறிவிப்புகளில் 'உடல் மணம்' என்பதற்கு பதிலாக 'வியர்வை' என்று இடம் பெற்றுள்ளது.


ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹீஹுல் புகாரி 3561​​​​



​​​♣ பராஃ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவித்த நீண்ட ஒரு சம்பவத்தை சுருக்கமாகச் சொல்கிறேன். அப்துல்லாஹ் இப்னு அதீக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அபூ ராபிஃ என்ற யூத வியாபாரியை அவனுடைய கோட்டைக்குச் சென்று கொலை செய்துவிட்டு இரவு நேரத்தில் இறங்கும் பொழுது இடையில் கால் சறுக்கி கீழே விழுந்து அவர்களுடைய கெண்டைக் கால் முறிந்துவிட்டது. அப்துல்லாஹ் இப்னு அதீக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகின்றார்கள்; "நான் நடந்த சம்பவத்தை நபிகள் நாயகத்திடம் கூற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "உங்களுடைய காலை நீட்டுங்கள்" என்று கூறினார்கள். நான் காலை நீட்டினேன். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதன் மீது தடவினார்கள். நான் அதில் ஒரு பொழுதும் நோய் வாய்ப்படாதவனைப் போன்று மாறிவிட்டேன்" என்று அப்துல்லாஹ் இப்னு அதீக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியுள்ளார்கள்.


ஸஹிஹுல் புகாரி 4039



♣'நான் (மக்காவில்) உக்பா பின் அபீ முஅய்த் என்பவரின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களும், அபூபக்கர் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களும் என்னிடம் வந்தார்கள். அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள், 'சிறுவரே! பால் இருக்கிறதா?' என்று கேட்டார்கள். அதற்கு நான், 'ஆம் உள்ளது. எனினும் நான் நம்பி ஒப்படைக்கப்பட்டவனாக இருக்கிறேன். (யாருக்கும் நான் இவ்வாடுகளின் பாலை என் விருப்பப்படி வழங்க முடியாது)' என்றேன். அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள், 'சினையாகாத சாதாரண ஆடு எதுவும் உள்ளதா?' என்று கேட்டார்கள். உடனே ஒரு ஆட்டை நான் அன்னவர்களிடத்தில் கொண்டு வந்தேன். உடனே அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள், அந்த ஆட்டின் மடியை தங்கள் திருக்கரத்தால் தடவினார்கள். உடனே (அதிலிருந்து) பால் வர ஆரம்பித்துவிட்டது! ஒரு பாத்திரத்தில் பாலைக் கறந்து அவர்கள் பருகினார்கள். அபூபக்கர் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களுக்கும் வழங்கினார்கள்.


ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலியல்லாஹூ அன்ஹூ)​​

​​முஸ்னத் அஹ்மத் ​


​​♣ அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களை நான் பார்த்தேன். அஸருடைய தொழுகையின் நேரம் வந்தது. (ஒழுச் செய்யத்) தண்ணீரை மக்கள் தேடினார்கள். அது கிடைக்கவில்லை. ஒலுச் செய்ய ஒரு பாத்திரம் (தண்ணீர்) அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்குக் கொண்டுவரப்பட்டது. அப்பாத்திரத்தில் தங்கள் கையை வைத்துக் கொண்டு அதிலிருந்து ஒழுச் செய்யுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். அவர்களுடைய விரல்களுக்கு அடியிலிருந்து தண்ணீர் வெளிவருவதை நான் பார்த்தேன். அவர்கள் அனைவரும் ஒழுச் செய்தனர்.


ஹழ்ரத் ​​அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹூ அன்ஹூ)​

ஸஹிஹுல் புகாரி



♣ஹூதைபிய்யா நாள் அன்று மக்களுக்கு தாகம் எற்பட்டு விடவே அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் வந்தனர். அவர்களுக்கு முன்னால் தண்ணீர்ப்பை வைக்கப்பட்டிருந்தது. 'நாங்கள் ஒழு செய்யவோ குடிக்கவோ எங்களிடம் தண்ணீர் இல்லை. தங்களுடைய தண்ணீர்ப் பையில் இருப்பதைத் தவிர' என்று தோழர்கள் கூறினார்கள். அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தண்ணீர்ப் பையில் தங்களின் கையை வைத்தனர். உடனே அவர்களுடைய விரல்களிலிருந்து தண்ணீர் பீரிட்டு வரத் தொடங்கியது ஊற்றுக் கண் (திறந்தாற்) போல! எனவே நாங்களும் ஒழுவும் செய்து குடிக்கவும் செய்தோம். 'அச்சயமயம் நீங்கள் எத்தனைப் பேர் இருந்தீர்கள்?' என்று ஜாபிர் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்களிடம் கேட்கப்பட்டது. (அதற்கு) அவர்கள், 'நாங்கள் ஒரு லட்சம் பேர் இருந்திருப்பினும் அது எங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கும். ஆனால் நாங்கள் ஆயிரத்து ஐநூறு பேர்கள்தாம் இருந்தோம்' என்று கூறினார்கள்.


ஹழ்ரத் ஜாபிர் (ரலியல்லாஹூ அன்ஹூ)

ஸஹிஹுல் ​புகாரி, ஸஹிஹ் முஸ்லிம் ​​


​புனித கண்களின் சிறப்புகள்​​​


♣  இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

"நான் கிப்லாத் திசையில் மட்டும் பார்க்கிறேன் என்று நீங்கள் கருதுகிறீர்களா? அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் அடக்கமாக இருப்பதும் உங்களின் ருகூவும் எனக்குத் தெரியாமலிருப்பதில்லை. நிச்சயமாக என்னுடைய முதுகுக்குப் பின்புறம் உங்களை நான் பார்க்கிறேன்."


ஹழ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹிஹுல் புகாரி - 418



புனித முகத்தின் சிறப்புகள்​​


♣ பெருமானார் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்களின் திருமுகம் வாளை போன்று (மின்னக்கூடியதாக) இருந்ததா என்று பர்ராஉ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் இல்லை, சந்திரனை போன்று இருந்தது என்று கூறினார்கள்.


ஹழ்ரத் அபூ இஸ்ஹாக் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹிஹுல் புகாரி - 3552



♣  நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள் சூரியனை போன்றும் சந்திரனை போன்றும் இருந்தார்கள்.


ஹழ்ரத் ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு )

ஸஹிஹ் முஸ்லிம் - 2344, திர்மிதி - 3636, மிஷ்காத் – 515



♣ நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களுக்கு சந்தோசம் மேலிட்டால், அவர்களின் அழகு திருமுகம் சந்திரனின் ஒரு துண்டு போல் இலங்கிகொண்டிருக்கும்.  இதனை நாங்கள் (மிக தெளிவாகவே அறிந்துக்கொள்வோம்.


ஹழ்ரத் கஹ்பு இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹீஹுல் புகாரி, ஸஹிஹ் முஸ்லிம், மிஷ்காத் – 518



♣ நபிகள் நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்களை விட மிக அழகான எந்த வஸ்துவையும் நான் கண்டதில்லை. அவர்களின் முகத்தில் சூரியன் ஓடிக் கொண்டிருப்பது போன்று இருப்பார்கள்.


ஹழ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

திர்மிதி 3648 , முஸ்னத் அஹ்மத் 2 - 350 , மிஷ்காத் 5795​​



புனித தலை முடியின் சிறப்புகள்

♣ நிச்சயமாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மினாவிற்கு வந்து ஜம்ராவில் கல்லெறிந்து விட்டு மினாவில் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்து குர்பானி கொடுத்தார்கள். அதன் பின் முடியெடுப்பதர்க்காக நாவிதரை அழைத்து அவரிடம் தமது வலப்பகுதியைக் கொடுத்தார்கள். பிறகு அபூதல்ஹத்துல் அன்ஸாரி (ரலியல்லாஹு அன்ஹு) என்ற ஸஹாபியை அழைத்து அவர்களிடம் அந்த முடிகளைக் கொடுத்தார்கள். பிறகு இடப்படுதியை நாவிதரிடம் கொடுத்து சிரைக்குமாறு கூறினார்கள். பிறகு அதை அபூதல்ஹா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கொடுத்து இதை மக்களுக்கு மத்தியில் பங்கிட்டு கொடுத்துவிடுவாயாக என்று கூறினார்கள்.


ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு​​)

ஸஹிஹுல் புகாரி, ஸஹிஹ் முஸ்லிம், மிஷ்காத் பக்கம் 232


♣உஸ்மான் இப்னு அப்தில்லாஹ் இப்னு மவ்ஹப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவித்தார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் துணைவியார் உம்மு ஸலமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம், என்னை என் குடும்பத்தார் ஒரு தண்ணீர்ப் பாத்திரத்தைக் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். (உம்மு ஸலமா ஒரு சிமிழைக் கொண்டுவந்தார்கள்.) அது வெள்ளியால் ஆனதாக இருந்தது. அதில் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் முடிகளில் ஒரு முடி இருந்தது. (பொதுவாக யாரேனும்) ஒருவருக்கு கண்ணேறு அல்லது நோய் ஏற்பட்டால், அவர் தம் நீர் பாத்திரத்தை உம்மு ஸலமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் அனுப்பி வைப்பார். (அவர்கள் தம்மிடமிருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் முடியைத் தண்ணீருக்குள் முக்கி அனுப்புவார்கள். அதை நோயாளி குடிப்பார்) நான் அந்தச் சிமிழை எட்டிப் பார்த்தேன். (அதில்) சில சிவப்பு முடிகளைக் கண்டேன். ​​


ஹழ்ரத் இஸ்ராயீல் இப்னு யூனுஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹிஹுல் புகாரி 5896​​


​​

புனித உடலின் சிறப்புக்கள்​


♣ (என் தாயார்) உம்மு சுலைம் (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களுக்காக (அவர்கள் மதிய ஓய்வெடுக்கும் பொருட்டு) தோல் விரிப்பு ஒன்றை விரிப்பார்கள். அந்த விரிப்பில் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் மதிய ஓய்வெடுப்பார்கள். நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் உறங்கிவிட்டால் அவர்களின் (உடலிலிருந்து வழிகின்ற) வியர்வைத் துளிகளையும் (ஏற்கனவே தம்மிடமுள்ள) நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் தலைமுடியையும் எடுத்து ஒரு கண்ணாடிக் குடுவையில் சேகரிப்பார்கள். பிறகு அதனை வாசனைப் பொருளில் வைப்பார்கள்.  (இதையெல்லாம்) நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் ) அவர்கள் உறங்கும்போதே (செய்து முடிப்பார்கள்)


​ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹிஹுல் புகாரி - 6281

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுமாமா இப்னு அப்தில்லாஹ் இப்னி அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்:

(என் பாட்டனார்) அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு மரண வேளை நெருங்கியபோது தம் கஃபன் துணியில் பூசப்படும் நறுமணத்தில் இந்த நறுமணத்தையும் சேர்த்துக் கொள்ளுமாறு என்னிடம் இறுதி விருப்பம் தெரிவித்தார்கள். அவ்வாறே அவர்களின் கஃபனில் பூசப்பட்ட நறுமணத்துடன் இதுவும் சேர்க்கப்பட்டது.



♣ என்னைக் கண்ட முஸ்லிமையும் என்னைக் கண்டவரைக் கண்ட முஸ்லிமையும் நரகம் தொடாது என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மொழிந்தார்கள்.


ஹழ்ரத் ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு)

திர்மிதி, மிஷ்காத், கிதாபுல் மனாகிப் ​​​



​​

புனித உமிழ்நீரின் சிறப்புகள்

​​​

♣ பேச்சு சரியாக வராத ஒரு பெண்மணி அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் வந்தாள். அப்பொழுது அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் சுடப்பட்ட இறைச்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பெண்மணி, 'எனக்கும் சிறிதளவு உண்ணுவதற்கு அளிக்கக்கூடாதா?' என்று கேட்டார். உடனே அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தமக்கு முன்னால் இருந்த உணவிலிருந்து எடுத்துக் கொடுத்தார்கள். அதற்கு அப்பெண்மணி, 'தங்களின் வாயில் உள்ள உணவைத் தவிர வேறெதுவும் எனக்கு வேண்டாம்' என்று கூறிவிட்டார். உடனே அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள், தங்கள் வாயிலுள்ள உணவை வெளியாக்கி, அப்பெண்ணிடம் கொடுத்தார்கள். அப்பெண் அதனை தன் வாயில் போட்டுக் கொண்டார். அதனை சாப்பிட்டு விட்டார். அப்போதிலிருந்து அவளுடைய நாவின் தடுமாற்றம் போய்விட்டது!


​​தப்ரானி ​​​



♣ ​​கைபர் போரின் பொழுது ஹழ்ரத் அலீ (கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ) அவர்கள் கண் வலியால் பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் பிறரின் கையைப் பிடித்து நடந்தாலே தவிர தனியாக நடந்து செல்ல இயலாதவராக இருந்தார்கள். அப்பொழுது அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஹழ்ரத் அலீ (கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ) அவர்களின் இரு கண்களிலும் தங்கள் எச்சிலை உமிழ்ந்தார்கள். அந்த நேரத்திலேயே ஹழ்ரத் அலீ (கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ) அவர்கள் கண்வலியிலிருந்து குணமடைந்தார்கள்.


ஸஹிஹுல் புகாரி, ஸஹிஹ் முஸ்லிம்

​​



புனித உடையின் சிறப்புகள்

♣ஹழ்ரத் அபூபக்ர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய மகள் அஸ்மா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு கைஸான் (ரலியல்லாஹு அன்ஹு) என்ற ஸஹாபிக்கு சொன்னார்கள்:

இது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுடைய ஜுப்பா. இது ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடத்தில் காணப்பட்டது. அவர்களுடைய மரணத்திற்கு பிறகு அதை நான் எடுத்து கொண்டேன். இதை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் அணியக்கூடியவர்களாக இருப்பார்கள். அந்த ஜுப்பாவை நோயாளிகளுக்கு கழுவிக் கொடுத்து நாங்கள் நோய் நிவாரணத்தை தேடி கொள்வோம் என கூறினார்கள்.

ஸஹிஹ் முஸ்லிம் பாகம்2, பக்கம் 190


​​​


நற்குணத்தின் தாயகம் நபிகள் நாயகம் ﷺ


​♣  நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

நான் (எதையும்) உங்களுக்குக் கொடுப்பதுமில்லை; (எதையும்) உங்களுக்குக் கொடுக்காமல் தடுத்து நிறுத்திக் கொள்வதுமில்லை. நான் பங்கிடுபவனேயாவேன். எங்கு கொடுக்கும்படி (அல்லாஹ்வினால்) எனக்குக் கட்டளையிடப்படுகிறதோ அங்கு கொடுக்கிறேன்.


ஸஹீஹுல் புகாரி - 3117



♣ கண்மணி நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம் ) அன்னவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக நானே உங்கள் யாவரிலும் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவனாகவும், மிக வாய்மைக்குரியவனாகவும், மிக நல்லவனாகவும் இருக்கிறேன்.


மிஷ்காத் 226​


♣நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் (குணத்தாலும் தோற்றத்தாலும்) மக்களிலேயே மிகவும் அழகானவர்களாகவும் மக்களிலேயே அதிகக் கொடை குணம் கொண்டவர்களாகவும் மக்களிலேயே அதிக வீரமுடையவர்களாவும் இருந்தார்கள்.


ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹிஹுல் புகாரி 6033​​​



♣ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களிடம் எது கேட்கப்பட்டாலும் ஒருபோதும் அவர்கள் இல்லை என்று சொன்னதில்லை என ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறக் கேட்டேன்.


ஹழ்ரத் முஹம்மத் பின் முன் கதிர் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹிஹுல் புகாரி 6034


​​​

♣ நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன். (மனம் வேதனைப்படும்படி) என்னை …ச்சீ என்றோ (இதை ஏன் செய்தாய் என்றோ. நீ (இப்படிச்) செய்திருக்கக்கூடாதா? என்றோ அவர்கள் சொன்னதில்லை.


ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹிஹுல் புகாரி 6038​



♣ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிகக் கூச்ச சுபாவம் உள்ளவர்களாய் இருந்தார்கள்.


ஹழ்ரத் அபூசயீத் அல்குத்ரி (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹிஹுல் புகாரி 6119​​​



♣ ​​“இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் குணத்தைப் பற்றிக் கூறுங்கள்!” எனக் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள், “நீர் குர்ஆனை ஓதவில்லையா?” என்று கேட்டார்கள். நான் "ஆம் (ஓதியிருக்கிறேன்)" என்றேன். ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள், “நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது” என்று கூறினார்கள். இதைச் செவியேற்ற நான் எழுந்து விடலாம் எனவும், இனிமேல் நான் இறக்கும் வரை எவரிடமும் எது குறித்தும் கேட்க வேண்டியதில்லை என்றும் எண்ணினேன்.


​​ஹழ்ரத் ஸஅத் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹிஹ் முஸ்லிம் 1357​​​

​​



நபிகள் நாயகம் ﷺ மீது அன்பு (ஹுப்பு)  

​​​

​​​♣ அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் இறைநம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆக மாட்டார்.


ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹீஹுல் புகாரி - 15

​​​


♣  அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் என்றொருவர் இருந்தார். அவர் ஹிமார் (கழுதை) என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டு வந்தார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை சிரிக்கவைப்பார். மது அருந்தியதற்காக அவரை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அடித்துள்ளார்கள். (போதையிலிருந்த) அவர் ஒரு நாள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார். அவரை அடிக்கும்படி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர் அடிக்கப்பட்டார். அப்போது (அங்கிருந்த) மக்களில் ஒருவர், இறைவா! இவர் மீது உன் சாபம் ஏற்படட்டும்! இவர் (குடித்ததற்காக) எத்தனை முறை கொண்டு வரப்பட்டுள்ளார்! என்று கூறினார். அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், இவரை சபிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார் என்பதை நான் அறிந்துள்ளேன் என்று கூறினார்கள்.


ஹழ்ரத் உமர் பின் அல் கத்தாப் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹிஹுல் புகாரி - 6780


​​​

அற்புதங்கள் - முஃஜிஸாத்துகள்

♣ ​ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களிடம் தங்களுக்கு ஒரு சான்றைக் காட்டும்படி மக்காவாசிகள் கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் ''சந்திரனை இரண்டு துண்டுகளாக (பிளந்து) காட்டினார்கள்''  எந்த அளவிற்கென்றால், மக்கா வாசிகள் அவ்விரு துண்டுகளுக்கிடையே 'ஹிரா' மலையைக் கண்டார்கள்.

ஹழ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு), அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலியல்லாஹு அன்ஹு), அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹிஹுல் ​புகாரி- 3869. 3870. 3871 4865. 3868


♣நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் தோழர்களில் இருவர் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களிடமிருந்து (விடைபெற்று) இருள் நிறைந்த ஓர் இரவில் (தம் இல்லங்களுக்கு) நடந்து சென்றனர். அவ்விருவருடனும் இரண்டு விளக்குகளைப் போன்றவை அவர்களுக்கு முன்னால் ஒளி வீசி சென்றன. அவர்கள் (வழியில்) பிரிந்து சென்றபோது, அவர்கள் தம் வீட்டாரிடம் சென்று சேரும் வரை ஒவ்வொருவருடனும் ஓர் ஒளி (மற்றொன்றை விட்டுப் பிரிந்து அவர்களுடன்) சென்றது.​​

ஹழ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹிஹுல் புகாரி 3639

​​


♣   நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

​​நான் மக்காவிலிருக்கும் ஒரு கல்லை அறிவேன். நான் தூதராக அனுப்பபடுவதற்கு முன்னாலயே அது எனக்கு ஸலாம் சொல்ல கூடியதாயிருந்தது. இப்பொழுதும் அந்தக் கல்லை நான் அறிவேன்.


ஸஹிஹ் முஸ்லிம் 2277


♣  ​​​​நான் ஸலாமா (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களின் கெண்டைக்காலில் அடிபட்ட ஒரு காயத்தின் அடையாளத்தைப் பார்த்தேன். உடனே நான் அவரிடம் 'இது என்ன?' என்று கேட்டேன். அதற்கவர், 'கைபர் போரன்று எதிரிகளின் தாக்குதலால் எனக்கு காலில் அடிபட்டுவிட்டது. 'ஸலாமா காயம் பட்டுவிட்டார்' என்று மக்கள் கூறினார்கள். பின்னர், அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் என்னை கொண்டு சென்றார்கள். அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் என் மீது மூன்று முறை ஊதினார்கள். அதன் பிறகு இந்த நேரம் வரை அந்தக் காயத்தின் காரணமாக எந்த வலியும் எனக்கு ஏற்படவில்லை.' என்று கூறினார்கள்.

ஹழ்ரத் யஜீது பின் அப்திர் ரஹ்மான் (ரலியல்லாஹு அன்ஹூ)

​அபூதாவூத்​



♣ ஹழ்ரத் கதாதா பின் நுஃமான் (ரலியல்லாஹு அன்ஹூ) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படுகிறது: அவர்களின் கண் உஹதுப் போரில் போய்விட்டது. (எதிரிகள் ஈட்டியில் குத்தியதால் அவரின் கண் துண்டித்து கீழே விழுந்து விட்டது. அவர் அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் வந்தார். அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அவரின் கண்ணை அதன் இடத்தில் மீண்டும் பொருத்தினார்கள். அது சரியாக பொருந்திவிட்டது!


​​தப்ரானி, பைஹகி



♣  நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களைக் கண்டவுடன் மலைகளும், மரங்களும் ஸலாம் கூறின.


திர்மிதி - 3626, தாரமி - 1-12, ஹாக்கிம் - 2-620, மிஷ்காத் - 5919​​​



♣ அப்துல்லாஹிப்னு அம்ரிப்னி ஹராம் இறந்துவிட்டார். அவர் கடன்பட்டிருந்தார். அவர் கொடுக்க வேண்டிய கடனில் சிறிதை தள்ளுபடி செய்வதற்காக அவருக்கு கடன் கொடுத்தவர்களிடம் உதவி தேடினேன். அவர்களிடத்தில் அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் சிபாரிசு செய்தார்கள். அவர்கள் இணங்கவில்லை. அப்பொழுது, நீர் சென்று உம்முடைய பேரீத்தம் பழங்களை (இனவாரியாகத்) தனித்தனியே பிரித்து அஜ்வாவைத் தனியாகவும், அத்க்கஜைதைத் தனியாகவும் பிரித்து வைத்துக் கொண்டு, பின்னர் எனக்குத் தகவல் சொல்ல ஆள் அனுப்பு' என்று என்னிடம் அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள். நான் (அவ்விதமே) செய்து விட்டு அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு (ஆள்) அனுப்பினேன். (அவர்கள் அங்கு வந்து) அதன் மீதோ அல்லது அதன் மத்தியிலோ அமர்ந்து கொண்டு, கடன் கொடுத்தவர்களுக்கு சேரவேண்டிய அவ்கியாக்களை அளந்து அவர்களுக்கு கொடுக்குமாறு எனக்கு கட்டளையிட்டார்கள். நானும் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய கடன் தீரும்வரை அளந்து கொடுத்தேன். (ஆனாலும்) என்னுடைய பழங்களில் இருந்து எதுவும் எடுக்காதது போல் அதே அளவு பழங்கள் எஞ்சியிருந்தன.


​​ஹழ்ரத் ஜாபிர் (ரலியல்லாஹூ அன்ஹூ) 

​​ஸஹிஹுல் புகாரி ​​2127



♣அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தங்களுக்காக ஒரு ஆடு வாங்குமாறு உர்வத்துல் பாரிக்கீ (ரலியல்லாஹு அன்ஹூ) அவர்களிடம் ஒரு தீனாரை (தங்க நாணயத்தை) கொடுத்தார்கள். அவர்கள் இரண்டு ஆடுகளை விலைக்கு வாங்கினார்கள். பின்னர் ஒரு ஆட்டை, ஒரு தீனாருக்கு விற்பனை செய்து விட்டு, ஒரு ஆட்டையும் ஒரு தீனாரையும் கொண்டு வந்தார்கள். இப்பொழுது, அவருடைய வியாபாரத்தில் விருத்தியைக் கோரி (இறைவனிடம் அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள்)  பிரார்த்தித்தார்கள்.  (இதன் பலனாக) அவர்கள் மண்ணை விலைக்கு வாங்கினாலும், அதில் அவர்கள் இலாபம் அடைவார்கள்.


​ஹழ்ரத் உர்வத்துல் பாரிக்கீ (ரலியல்லாஹூ அன்ஹூ) 

ஸஹிஹுல் ​புகாரி​​​


​​​

♣அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் என்னை யமன் நாட்டிற்கு நீதிபதியாக அனுப்பி வைத்தார்கள். அப்பொழுது நான், 'யா ரஸூலல்லாஹ்! என்னை தாங்கள் யமன் நாட்டிற்கு அனுப்பி வைக்கிறீர்கள். நானோ வாலிபனாக இருக்கிறேன். நான் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிக்கச் செல்கிறேன். (எனினும் எனக்கு அனுபவம் இல்லை) தீர்ப்பு எவ்வாறு என்பதை நான் அறியமாட்டேன்' எனக் கூறினேன். அப்பொழுது அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தங்களின் திருக்கரத்தால் என் நெஞ்சில் அடித்து, 'அல்லாஹூம்மஹ்தி கல்பஹூ வஸப்பித் லிஸானஹூ (யா அல்லாஹ்! இவரின் உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! இவரின் நாவை உறுதிப்படுத்துவாயாக!) என்று துஆச் செய்தார்கள். வித்துகளை பிளந்து அதனை முளைக்கச் செய்கின்ற அல்லாஹ்வின் மீது ஆணையாக! இதற்கு பிறகு தீர்ப்பளிக்கின்ற விஷயத்தில் நான் ஒருபொழுதும் சந்தேகம் அடைந்ததில்லை.


ஹழ்ரத் அலீ (கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ)​

​​பைஹகி, ஹாகிம்


♣ அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் சுமை சுமக்கும் ஒரு தோழருக்கு துஆச் செய்தார்கள். 'தோழரே! நீர் சுமப்பீராக! நிச்சயமாக நீர் கப்பலாக உள்ளீர்' என அவரிடம் கூறினார்கள். அந்தத் தோழர் கூறுகிறார், நான் அதற்கு பிறகு ஒரு ஒட்டகை அல்லது இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு ஒட்டகைகளின் சுமைகளை சுமந்தாலும் அது எனக்குக் கனமாக இருக்கவில்லை!


​​முஸ்னத் அஹ்மத்


​​​

♣இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஸஹ்பா என்னுமிடத்தில் லுஹ்ரைத் தொழுதுவிட்டு அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை ஒரு தேவையின் நிமித்தம் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் திரும்பி வந்த போது இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அஸ்ர் தொழுது கொண்டிருந்தார்கள். (தொழுகையை நிறைவேற்றிய பின்) அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் மடி மீது தலை வைத்து உறங்கினார்கள். அவர்களை அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் எழுப்பிவிடவில்லை. சூரியனும் மறைந்து விட்டது. பிறகு (எழுந்து ) கூறினார்கள்:


இறைவனே! நிச்சயமாக உன் அடியார் அலி இறைத்தூதருக்கு பணியாற்றுவதில் அகப்பட்டுக் கொண்டார். ஆகவே, அவருக்காக சூரியனை திருப்பியனுப்பு! (மறைந்த) சூரியன் திரும்பி வந்து மலைகளுக்கு மேலாக உயர்ந்தது. அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் எழுந்து உளூ செய்து விட்டு அஸரைத் தொழுதார்கள். பின்பு சூரியன் மறைந்து விட்டது. ஸஹ்பா எனுமிடத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.


ஹழ்ரத் அஸ்மா பின்த் உமைஸ் (ரழியல்லாஹு அன்ஹா)

தப்ரானீ (கபீர்) 19861,  இப்னு அஸாகிர் 17369,  ஷவ்கானீ (ஃபவாயித் மஜ்மூஆ) 1088