MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஸஹாபாக்களின் சிறப்புகள்


♣கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:


என் தோழர்களை திட்டாதீர்கள். ஏனெனில் உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தை (இறைவழியில்) செலவு செய்தாலும் அவர்கள் செலவு செய்த ஒரு கைக்குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரது) அந்த தருமம் எட்ட முடியாது.


ஹழ்ரத் அபூசையீத் அல்குத்ரீ (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹிஹுல் புகாரி - 3673,  ஸஹிஹுல் முஸ்லிம் - 2541,  மிஷ்காத் - 6007


♣  கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

மேலும் எனக்குப் பின்னால் உங்களில் ஜீவித்து இருப்பவர்கள் அதிகப்படியான குழப்பங்களை காண்பீர்கள். அந்நேரத்தில் என் ஸுன்னத்தையும் நேர்வழி பெற்ற வழிக்காட்டிகளான என் கலீபாக்களின் ஸுன்னத்தையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். மேலும் அவற்றின் மீது உங்களின் கடைவாய் பற்களை வைத்து கடித்து பிடித்துக் கொள்ளுங்கள்.


​திர்மிதி: 2676,  இப்னு மாஜா: 42,  அபூதாவுத்: 4607,  முஸ்னத் அஹ்மத் : 4 - 126,  மிஷ்காத்:165


♣  கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

எனது தோழர்கள் நட்சத்திரங்களை போன்றவர்களாவார்கள். எனவே அவர்களில் நீங்கள் யாரை பின்பற்றினாலும் நேர்வழி அடைவீர்கள்.


​மிஷ்காத்: 6018



♣  கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

எனது ஸஹாபாக்களை சங்கை செய்யுங்கள். ஏனெனில் நிச்சயமாக அவர்கள் தான் உங்களில் மிக சங்கையானவர்கள் ஆவார்கள்."


​மிஷ்காத்: 6012,  முஸ்னத் அஹ்மத்: 1 - 26


♣ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

மக்களில் சிறந்தவர்கள் என் தலை முறையினர் (ஸஹாபாக்கள்) அவர்களுக்குப் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். (தாபிஈன்கள்) அவர்களுக்கும் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். (தப அத்தாபிஈன்கள்) பின்னர் ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்களுடைய சாட்சியம் அவர்களுடைய சத்தியத்தை முந்திக் கொள்ளும். அவர்களுடைய சத்தியம் அவர்களுடைய சாட்சியத்தை முந்திக் கொள்ளும்.


ஹழ்ரத் அப்துல்லாஹ் பின மஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு)

​ஸஹிஹுல் புகாரி - 3651



♣ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

மக்களிடையே ஒரு காலம் வரும். அப்போது மக்களில் ஒரு குழுவினர் புனிதப் போருக்குச் செல்வார்கள். அப்போது (அவர்கள் யார் மீது படையெடுத்துச் செல்கிறாரோ) அவர்கள் உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் தோழமை கொண்டவர்கள் இருக்கின்றனரா என்று கேட்பார்கள். ஆம் இருக்கிறார்கள் என்று (போர் செய்யச் சென்ற) அவர்கள் பதில் சொல்வார்கள். உடனே போருக்குச் சென்ற அவர்களுக்கு வெற்றி அளிக்கப்படும். பிறகு மக்களிடையே ஒரு காலம் வரும். மக்களில் ஒரு குழுவினர் புனிதப் போர் புரியச் செல்வார்கள். (அவர்களிடம்) உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தோழர்களுடன் தோழமை கொண்டவர்கள் இருக்கின்றார்களா என்று கேட்கப்படும். போருக்குச் சென்றவர்கள் ஆம் இருக்கிறார்கள் என்று சொல்வார்கள். உடனே அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும். பிறகு மக்களிடையே ஒரு காலம் வரும். மக்களில் ஒரு குழுவினர் போருக்குச் செல்வார்கள். அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதருடைய தோழர்களிடம் தோழமை கொண்டிருந்தவர்களுடன் தோழமை கொண்டவர்கள் உங்களிடையே இருக்கின்றனரா என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள் ஆம் இருக்கிறார்கள் என்று பதிலளித்தார்கள். உடனே அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும்.


ஹழ்ரத் அபூசயீத் அல் குத்ரீ (ரலியல்லாஹு அன்ஹு)

​​ஸஹிஹுல் புகாரி - 3649



♣ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

எனது தோழர்களை விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சுங்கள். எனது தோழர்கள் விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சுங்கள். எனக்குப்பின் அவர்களை உங்களது பேச்சுக்கு ஆளாக்கிக்கொள்ளாதீர்கள். எவர் அவர்களை நேசிக்கின்றனரோ அவர் என்னை விரும்புவதாலேயே அவர்களை நேசம் கொண்டார். இன்னும் அவர்களை கோபிப்பவர்கள் என்னைக் கோபிப்பதாலேயே அவர்களைக் கோபித்தனர். அவர்களுக்கு நோவினை செய்வோர் என்னையே நோவினை செய்கின்றனர். எவன் என்னை நோவினை செய்வானோ, அவன் அல்லாஹ்வை நோவினை செய்தவனாகும். அல்லாஹ்வை நோவினை செய்பவன் சமீபத்தில் வேதனை அளிக்கப்படுவான்.


ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் முகப்பல் (ரலியல்லாஹு அன்ஹு)

திர்மிதி 3797, மிஷ்காத்


♣ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

எனது தோழர்களை எவரேனும் ஏசப்பேசக் கண்டால் (அல்லது கேட்டால்) இந்த கெடுதிக்காக அல்லாஹ்வின் சாபம் அவர்கள் மீது உண்டாகட்டும் எனச் சொல்லுங்கள்.


ஹழ்ரத் இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு)

திர்மிதி, மிஷ்காத்



♣ உங்களில் ஒருவர் நேர்வழியில் செல்ல நாடினால், உங்கள் முன் மரணமானவர்களின் பாதையில் செல்லுங்கள். உயிரோடுள்ளோர்கள் குழப்பத்தில் உள்ளாக்கப்படலாம். இறையடி சேர்ந்தவர்கள் எம் கோமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புனிதத் தோழர்களாகும். அவர்கள் இந்தச் சமுதாயத்தின் சிரேஷ்ட மாணவர்களும் ஆழமான அறிவுகளையும் நல்ல மனப்பக்குவம் உள்ளவர்களாகவும் முற்றிலும் இக்லாஸ் உடையவர்களாகவும் காணப்பட்டனர். அல்லாஹ் அவர்களை அவனது நபியின் தோழமைக்காகவும், அவனது மார்க்கத்தை நிலைநிறுத்தவும் தேர்ந்தெடுத்தான். அவர்களை உயர்ந்த நன்மக்களாக நம்புங்கள். அவர்கள் சென்ற வழியைப் பின் தொடருங்கள். முடியுமானவரை அவர்களது குணங்களையும் வாழ்க்கை நெறியையும் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக அவர்கள் நேர்வழியிலேயே இருந்தார்கள்.


ஹழ்ரத் இப்னு மஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு)

மிஷ்காத்



♣ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

என்னைக்கண்ட முஸ்லிமையும் என்னைக் கண்டவனைக் கண்ட முஸ்லிமையும் நரகம் தொடாது.


திர்மிதி, மிஷ்காத்



​​

அபூபக்கர், உமர், உஸ்மான், அலி (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகியோரின் சிறப்புகள்

♣​​  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

''அபூ பக்ரே! அழ வேண்டாம்! நட்பின் மூலமும் செல்வத்தின் மூலமும் மனிதர்களிலேயே எனக்குப் பேருதவியாக இருந்தவர் அபூ பக்ர் தான். என் உம்மத்தில் யாரையேனும் நான் உற்ற நண்பராக ஏற்றுக் கொள்வதென்றால் அபூ பக்ரையே ஏற்றிருப்பேன். என்றாலும் இஸ்லாம் என்ற

அடிப்படையிலான சகோதரத்துவமும் நேசமும்தான் (இஸ்லாத்தில்) உண்டு. பள்ளியில் உள்ள அபூ பக்ரின் வாசல் தவிர ஏனைய வாசல்கள் அடைக்கப்பட வேண்டும்.''


ஹழ்ரத் அபூ சயித் குத்ரி ரலியல்லாஹு அன்ஹு

ஸஹிஹுல் புகாரி 466


♣​​​‘அபூபக்ருடைய செல்வம் எனக்குப் பயன்பட்ட அளவுக்கு எந்த செல்வமும் எனக்கு பயன்பட்டதில்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) கூறியதைக் கேட்ட அபூபக்ர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அழலானார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! நானும் எனது செல்வமும் உங்களுக்கில்லாமல் வேறு யாருக்கு?’ என்றும் கேட்டார்கள்.


ஹழ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

இப்னு மாஜா 9 , திர்மிதி



♣  ​இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

(இறைவனைத் தவிர வேறு) ஒருவரை நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால், அபூ பக்ர் அவர்களையே ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், அவர் (மார்க்கத்தில்) என் சகோதரரும், (இன்ப - துன்பம் யாவற்றிலும்) என் தோழரும்

ஆவார்.


ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

​​​ஸஹீஹுல் புகாரி 3656


♣  நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ஒரு பெண்மணி (தேவை ஒன்றை முறையிடுவதற்காக) வந்தார். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அந்தப் பெண்மணியைத் திரும்பவும் வரும்படிக் கட்டளையிட்டார்கள். அந்தப் பெண்மணி,‘ நான் வந்து தங்களைக் காண (முடிய)வில்லையென்றால்...?’ என்று, - நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இறந்துவிட்டால் (என்ன செய்வது?) என்பது போல் கேட்டாள். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ‘நீ என்னைக் காணவில்லையென்றால், அபூ பக்ரிடம் செல்' என்று பதில் கூறினார்கள்.​​


ஹழ்ரத் ஜுபைர் இப்னு முத்யிம் (​​ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹீஹுல் புகாரி 3659

​​

♣ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்களுக்கு பின் மனிதர்களில் மிகவும் சிறந்தவர் அபூபக்ராவார்கள். அபூபக்ருக்குப் பின் ‘உமர்’ ஆவார்கள் என்று அலி (ரலியல்லாஹு அன்ஹு) கூற நான் கேட்டுள்ளேன்.


ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு ஸலமா (ரலியல்லாஹு அன்ஹு) 

ஸஹீஹுல் புகாரி, இப்னு மாஜா 106



​♣  நாங்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் மக்களிடையே சிறந்தவர்கள் இன்னார், இன்னார் என்று மதிப்பிட்டு வந்தோம். (முதலில்) அபூ பக்ர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைச் சிறந்தவராக மதிப்பிட்டோம். பிறகு உமர் இப்னு கத்தாப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களையும் பிறகு உஸ்மான் இப்னு அஃப்பான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களையும் சிறந்தவர்களாக மதிப்பிட்டு வந்தோம்.​​


ஹழ்ரத் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு

ஸஹீஹுல் புகாரி 3655​​​

​​​​​​


​​♣​ ‘மனிதர்களில் உங்களுக்கு மிகவும் விருப்பமானவர் யார்?’ என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது ‘ஆயிஷா’ என்றார்கள். ஆண்களில் உங்களுக்கு மிக விருப்பமானவர் யார்? என்று கேட்கப்பட்ட போது ‘ஆயிஷாவின் தந்தை’ என்று பதிலளித்தார்கள்.


ஹழ்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு

ஸஹிஹுல் புகாரி, ஸஹிஹ் முஸ்லிம், இப்னு மாஜா 101 ​

♣  நான் உங்களுடன் வாழும் நாட்களை அறிய மாட்டேன். எனக்குப் பின் இவ்விருவரையும் நீங்கள் பின்பற்றி நடங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறி அபூபக்கரையும் உமரையும் சுட்டிக் காட்டினார்கள்.


ஹழ்ரத் ஹுதைபா பின் யமான் (ரலியல்லாஹு அன்ஹு) 

​​இப்னு மாஜா 97,  அபூதாவூத்,  திர்மிதி


♣ (மறுமையில்) உயர் பதவிகளைப் பெற்றவர்களை, அவர்களை விட குறைந்த பதவிகளைப் பெற்றவர்கள், வானத்தில் உதிக்கும் விண்மீனைப் பார்ப்பது போல் (அவ்வளவு உயரத்தில்) காண்பார்கள். அத்தகைய உயர் பதவிகள் பெற்று இன்ப வாழ்வை அடைந்தவர்களில் அபூபக்ரும், உமரும் அடங்குவர்’ என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.


ஹழ்ரத் அபூஸயீதுல் குத்ரீ (ரலியல்லாஹு அன்ஹு)

இப்னு மாஜா 96, அபூதாவூத், திர்மிதி



♣  அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

என் உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (உமரே!) நீங்கள் ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கையில் உங்களை ஷைத்தான் கண்டால் உங்களுடைய பாதையல்லாத வேறொரு பாதையில் தான் அவன் செல்வான்.


ஹழ்ரத் ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹீஹுல் புகாரி - 3294​​​​​


♣  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

‘அல்லாஹ்’ உண்மையை உமருடைய நாவில் வைத்திருகிறான். அவர் உண்மையையே பேசுகிறார்.


ஹழ்ரத் அபூதர் (ரலியல்லாஹு அன்ஹு)

இப்னு மாஜா 108, அபூதாவுத், திர்மிதி ​​



♣  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

​உங்களுக்கு முன்பிருந்த சமுதாயங்களில், (பல்வேறு) பிரச்சினைகளில் சரியான தீர்ப்பு எது என்பது குறித்து இறையருளால்) முன் கூட்டியே அறிவிக்கப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். என் சமுதாயத்தினரில் அப்படிப்பட்டவர் எவரேனும் இருந்தால் அது உமராகத்தான் இருக்கும்.​​​

ஹழ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹீஹுல் புகாரி - 3689​


♣ (ஒரு முறை) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் அபூ பக்ர், உமர், உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹுமா) ஆகீயோரும் உஹது மலை மீது ஏறினார்கள். அது அவர்களுடன் நடுங்கியது. அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், உஹதே! அசையாமல் இரு! ஏனெனில், உன் மீது ஓர் இறைத்தூதரும், ஒரு சித்தீக்கும், இரண்டு உயிர்த்தியாகிகளும் உள்ளனர்" என்று கூறினார்கள்.


ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹீஹுல் புகாரி 3675​​​



♣ ​நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு தோட்டத்தினுள் நுழைந்தார்கள். தோட்டத்தின் வாயிற் கதவைக் காவல் புரியும்படி எனக்குக் கட்டளையிட்டார்கள். அப்போது ஒருவர் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார்.  (நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் அவருக்காக அனுமதி கேட்க) அவர்கள்,‘அவருக்கு அனுமதி கொடுங்கள் அவருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று நற்செய்தியும் சொல்லுங்கள்'‘ என்று கூறினார்கள்.  (நான் அவரிடம் சொல்லச் சென்ற போது) அம்மனிதர் அபூ பக்ர் அவர்களாக இருந்தார்கள். பிறகு மற்றொருவர் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார். (நான் சென்று நபியவர்களிடம் அனுமதி கேட்க,)’அவருக்கு அனுமதி கொடுங்கள் அவருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று நற்செய்தியும் சொல்லுங்கள்'‘ என்று கூறினார்கள். (நான் அவ்வாறே சொல்லச் சென்ற போது)  அந்த மனிதர் உமர் அவர்களாக இருந்தார்கள். பிறகு, இன்னொரு மனிதர் வந்து உள்ளே வர அனுமதி கேட்டார். (நான் சென்று நபியவர்களிடம் கதவைத் திறக்க அனுமதி கேட்ட போது) அவர்கள் சிறிது நேரம் மௌனமாயிருந்துவிட்டு பிறகு, ‘அவருக்கு அனுமதி கொடுங்கள் (வருங்காலத்தில்) அவருக்கு நேரவிருக்கும் துன்பத்தையடுத்து அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுங்கள்'‘ என்று கூறினார்கள். (நான் சென்று கதவைத் திறந்த போது) அவர் உஸ்மான் இப்னு அஃப்பான் அவர்களாக இருந்தார்கள்.​​


ஹழ்ரத் அபூ மூஸா ​(ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹீஹுல் புகாரி 3695​​​​​



♣  ​(கைபர் போரின் போது) இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்,‘ நானை (இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஒரு மனிதரிடம் தரப் போகிறேன். அல்லாஹ் அவரின் கரங்களில் வெற்றியை அளிப்பான்'‘ என்று சொன்னார்கள். எனவே, மக்கள் தம்மில் எவரிடம் அது கொடுக்கப்படும் என்ற யோசனையில் இரவெல்லாம் மூழ்கியிருந்தனர். காலையானதும் மக்களில் ஒவ்வொருவரும் தன்னிடம் அது கொடுக்கப்பட வேண்டும் என்று ஆசைப்பட்ட வண்ணம் அல்லாஹ்வின் தூதரிடம் சென்றனர். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்,‘ அலீ இப்னு அபீதாலிப் எங்கே?’ என்று கேட்டார்கள். மக்கள்,‘ அவருக்குக் கண்வலி, இறைத்தூதர் அவர்களே! ”என்று கூறினார்கள். உடனே, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்,‘ அவருக்கு ஆளனுப்பி என்னிடம் அழைத்து வாருங்கள்'‘ என்று உத்தரவிட்டார்கள். அலீ (ரலியல்லாஹு அன்ஹு) வந்தவுடன் அவர்களுடைய இரண்டு கண்களிலும் (தம் உமிழ்நீரை) உமிழ்ந்து அவர்களுக்காக (நலத்திற்கு) பிரார்த்தனை புரிந்தார்கள். அவர்களுக்கு (அதற்கு முன்) வலியே இருந்ததில்லை என்பதைப் போன்று அவர்கள் (வலி நீங்கி) குணமடைந்தார்கள். பிறகு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கொடியைக் கொடுத்தார்கள். அப்போது அலீ (ரலியல்லாஹு அன்ஹு), ‘இறைத்தூதர் அவர்களே! அவர்கள் நம்மைப் போன்று (ஒரே இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாய்) ஆகும் வரை நான் அவர்களுடன் போரிடட்டுமா? என்று கேட்டார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்,‘ அவர்களின் களத்தில் இறங்கும் வரை நிதானமாகச் செல்லுங்கள். பிறகு அவர்களை இஸ்லாத்திற்கு (வரும்படி) அழையுங்கள். மேலும், இஸ்லாத்தில் அவர்களின் மீது கடமையாகிற அல்லாஹ்விற்குச் செய்யவேண்டிய கடமைகளை அவர்களுக்குத் தெரிவியுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மூலமாக அல்லாஹ் ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியை அளிப்பது (அரபுகளின் அருஞ் செல்வமான) சிவப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்'‘  என்று கூறினார்கள்.


ஹழ்ரத் ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹீஹுல் புகாரி 3701​​​​​

​​​​


♣ நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம்,‘ (நபி) ஹாரூன் அவர்களுக்கு (அவர்களின் சகோதரர் - நபி) மூஸா அவர்களிடம் எந்த அந்தஸ்து இருந்தோ அதே அந்தஸ்தில் நீங்கள் என்னிடம் இருப்பதை விரும்பவில்லையா?’ என்று கேட்டார்கள்.​​


ஹழ்ரத் ஸஅத் இப்னு அபீ வக்காஸ் ​​(ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹீஹுல் புகாரி 3706​

​​​​