MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஹழ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு


அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அப்துல் முத்தலிபின் குமாரர் அபூதாலிபின் குமாரராவர். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் பிறந்த திகதியிலிருந்து 32 –ம் வருடத்தில் பிறந்தார்கள்.


கிலாபத்

உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கொல்லப்பட்ட பின்னர் அதிகமான முஹாஜிர்களும் அன்ஸார்களும் ஒருங்கு சேர்ந்தனர். யாவருக்கும் முன்னிலையாகப் புரட்சிக்காரரி ருந்தனர். அவர்கள் இமாம் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கிலாபாத்தின் உறுதிமொழி கூற வந்தனர். ஆனால் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அதை ஒப்புக்கொள்ள மறுத்தனர்.



அப்பொழுது அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை அன்னார் வற்புறுத்தவே அவர்கள் ஒப்புக் கொண்டு பள்ளிவாயிளுக்குப் போக அங்கு அவர்களுக்கு உறுதிமொழி கூறப்பட்டு, கலீபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தல்ஹா, ஸுபைர் (ரலியல்லாஹு அன்ஹு) ஆகியோர்களும் உறுதி கூறினர். ஆனால் உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கொலைப்  பாதகர்களுக்குத் தக்க தண்டனை விதித்த பின்னரே இத்தேர்தல் நடந்திருக்க வேண்டுமென அவர்கள் இத்தேர்தலை அவ்வளவாக முதலில் விரும்பவில்லை. இவர்கள் கிலாபாத்தின் துவர்க்கம் மூன்றாம் கலீபாவின் கொலைச் சம்பவத்தின் பின் ஐந்தாம் நாளிலாகும். அதாவது ஹிஜ்ரி 35 துல்ஹஜ்ஜி மாதம் 36- ந் திகதியாகும்.



பாரம்பரியம்

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் தந்தை ஹஸ்ரத் அப்துல்லாஹ் அவர்களோடு ஒரே தாயின் வயிற்றில் பிறந்தவரான ஹஸ்ரத் அபூதாலிபவர்களின் நான்கு ஆண் மக்களில் இறுதியாகப் பிறந்தவர்களே ஹஸ்ரத் அலி (ரலியல்லாஹு அன்ஹு) பாட்டனார் அப்துல் முத்தலிபிலேயே நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களுடையவும் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடையவும் பாரம்பரியங்கள் இணைந்து விடுகின்றன. அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் அன்னை ஃபாத்திமாவும் அப்துல் முத்தலிபவர்களின் உடன் பிறந்தார் அஸதின் மகளேயாவர். அவ்வகையில் ஹஸ்ரத் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தந்தையின் மூலமாகவும் தாயின் வாயிலாகவும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களின் முப்பாட்டனார் ஹாஷிமின் கொடி வழியைக் கொழுவி நிற்கிறார்கள். அபூதாலிபவர்களின் இயற்பெயர் அப்து மனாஃப். தம் நான்கு ஆண் மக்களில் தலை மகனின் பெயர் கொண்டு அவர் அவ்வாறு புனைந்தழைக்கப்பட்டார். அப்துல் முத்தலிபவர்களுக்குப் பல மனைவியர் மூலம் பிறந்த பன்னிரு ஆண்மக்களுள் ஹஸ்ரத் அப்துல்லாஹ், அபூதாலிப், ஜ்ஸுபைர் ஆகிய மூவரும் ஒரே தாயின் வயிற்றில் பிறந்தவர்கள்.



பிறப்பும் பெற்றோர் சிறப்பும்

‘அபுல் ஹஸன்’ ‘அபூ துராப்’ என்ற புனை பெயர்களைப் பின்னர் பெற்றுச் சிறந்த அண்ணல் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், ‘அப்ரஹா’வால் தோன்றிய யானைச் சகாப்தத்தின் முப்பதாம் ஆண்டில் ஒரு ரஜபு மாதம் 13-ம் நாள் வெள்ளிக்கிழமையன்று பிறந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் நபித்துவப் பிரகடனம் செய்வதற்கு ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்னர். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் முப்பது வயதுடைய வாலிபராக கஅபாவை இடம் சுற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களை வளர்த்த சிற்றன்னை – அபூதாலிபவர்களின் மனைவி – ஃபாத்திமா பின்த்து அஸதும் இடம் சுற்றிக்கொண்டிருந்தார்கள். அங்கு – நிறைமாதக் கர்ப்பிணியாக கஅபாவைச் சுற்றிக் கொண்டிருந்த நிலையிலேயே ஃபாத்திமா பின்த்து அஸதுக்கு கர்ப்ப வேதனையும் தோன்றி விட்டது. தவாஃபை நிறைவுபடுத்தி வீடு திரும்பி விடலாம் என ஃபாத்திமா பின்த்து அஸது துரிதம் கொண்டனராயினும் அத்துரித்ததோடு போட்டியிட்ட வண்ணம் வேதனையும் கூடிக் கொண்டிருந்தது. திறந்த வெளி – மக்கட் சூழல் – வேதையையோடு கூடி வெட்கமும் வருத்தியது ஃபாத்திமாவை! சிற்றன்னையின் முகத் தோற்றத்திலிருந்தே அவருள் முளைத்து வருத்தும் சங்கடங்களை விளங்கிக் கொண்டார்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள். அச்சமயம் கஅபாவின் கதவுகள் திறந்தே இருந்ததை அவர்களின் கண்கள் கவனித்தன. அருகி வந்து தம் சிற்றன்னையாரை கஅபாவின் உள்ளே சென்று விடுமாறு ஆவல் கூறினார்கள் அண்ணல்! ஃபாத்திமாவும் சுணங்காது உள்ளே சென்று கஅபாவின் கதவுக்குப் பின்னே களைத்தமர, அங்கே பிறந்த அருட்செல்வரே அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள். தாயையும் சேயையும் வீட்டிற்கனுப்பி வைத்து விட்டு, குறைப்பட்டு நின்ற தங்கள் தவாஃபை நிறைவாக்கினார்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள்: பின்னர் தம் இளவலைக் காண இல்லம் விரைந்தார்கள். அபூதாலிபவர்களின் இல்லமோ களையிழந்திருன்தது! ஆண் மக்களின் பிறப்பு கண்டு களிபேருவகை கொள்ளும் மரபு கொண்ட அரபுகளிடையே அன்று அவ்வில்லம் மட்டும் களையிழந்து நிற்கக் காரணமென்ன? தாபன்கொண்டு உள்ளே நுழைந்த பெருமான் அவர்கள் அறிந்த செய்தி, பிறந்து அவ்வளவு நேரமாகியும் குழந்தை கண் திறக்கவே இல்லை என்பதே. பாவம், குருட்டுக்கிலந்தையோ! சோகம் அனைவரையும் சூழ்ந்திருக்க, ‘இருந்தாலென்ன! அதன் முகத்தையாவது பார்க்க வேண்டுமே’ என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் ஆவலுற்றார்கள். பெண்களிடமிருந்து அக்குழந்தையைத் தம் கரமேற்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் பரிவோடு உற்று நோக்கினார்கள் – என்ன வியப்பு? தன் கண்களை அகலத் திறந்து அண்ணலாரின் திருமுகம் நோக்கிச் சிரிக்கலாயிற்று அக்குழவி! பிறப்பதும் அல்லாஹ்வின் திருவீட்டின் உள்ளேயே பிறப்பேன், என் கண்களைத் திறப்பதும் அவன் தூதரின் திருமுகத்தைக் காணாவே திறப்பேன் என்ற அருதியில் இறுதி கண்ட பெற்றினாலேயே அப்பேரறிவாளரை வரலாறு ‘கர்ரமல்லாஹு வஜ்ஹஹு – அல்லாஹ் அவர்களின் திருமுகத்தைக் கண்ணியப்படுத்த்னான்’ என்று போற்றிச் சிறப்பிக்கிறது.



வளர்ப்பு

காலச் சக்கரம் உருண்டபோது அபூதாலிபவர்களின் பொருளாதார நிலையம் தடம் புரண்டு விட்டது. அப்போது முப்பத்தைந்து வயதுகளை அடைந்திருந்த நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள், மக்க நகரச் சீமாட்டி கதீஜா நாயகியை மணந்து, பத்தாண்டு காலமாக வளவாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மாபெரும் பஞ்சமொன்று மக்க நகரைச் சூழ்ந்து கொண்டது. அபூதாலிபவர்களின் பெருங் குடும்பமும் பொருளாதார நெருக்கடியில் திணறிக் கொண்டிருந்தது. நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் அவர்களோடு மனம் பிணைந்து அன்னை கதீஜா நாயகியவர்கள் தங்கள் செல்வத்தால் உற்றாரின் பசி தீர்த்து ஊராரின் அவலம் துடித்துக்கொண்டிருந்த காலமது. நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் அவர்கள் தம் வளர்ப்புத் தந்தையாகிய அபூதாலிபவர்களின் சிரமத்திலும் பங்கேற்கத் துணிந்தார்கள்: தம் மற்றொரு சிறிய தந்தையாகிய ஹஸ்ரத் அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களோடு கலந்துரையாடி, அச்சமயம் நான்கு வயதுகளே நிரம்பப் பெற்ற அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைத் தாமே வளர்க்கப் பொறுப்பேற்று, தம் இல்லம் அழைத்து வந்தார்கள். அந்த அடித்தளத்திலிருந்தே நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் அவர்களுடையவும், அன்னை கதீஜா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களுடையவும் நிழலேற்று வளர்ந்த அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை பாவங்கள் எங்கனம் அருக முடியும்? திசைகள் நான்கிலும் தீன் சுடர் விளக்கப் போகும் அவ்வான் புகழ் ஞானியார் முற்றாக நபித்துவ மாரியில் தழைத்த வாரிசேயாவர்.



இஸ்லாம்

ஹிராக் குகையில் – பேரொளியில் பிணைந்துப் பிரிந்து நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் திரு நபியாய்த் தம்மைப் பிரகடனம் செய்துத் திரும்பிய அன்று ஹஸ்ரத் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒன்பதே வயதுடைய சிறுவராகவே இருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் அன்னவர்களோடு அன்னை கதீஜா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களும் இணைந்து இல்லத்தினுள் இறைவணக்கம் புரிந்தபோதேல்லாம் அவர்களின் செயல் முறைகளைப் பார்வையிடுவர் அச்சிறார். புரியாத அப்புதின நிலைகளைப் பற்றி வளரும் அச்சிறு உள்ளம வினாக்களை எழுப்பியது ஒரு நாள். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் ஏகத்துவத்தின் எழிலை, இணை வைத்தலின் இழிவை, தீமைகளைத் தடுத்து நன்மைகளைக் கொண்டேவ தமக்களிக்கப் பட்டுள்ள பொறுப்பை இளவல் எடுத்துரைத்து தங்களோடிணைந்து கொள்ளுமாறு அவரையும் அழைத்தார்கள். அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு தாம் செவியேற்றவற்றைப் பூரணமாக விளங்கிக் கொள்ள உடனடியாக முடியவில்லை. ஏனெனில் அவர்கள் அதற்குமுன் எவரிடமும் செவியுறாத செய்திகளாக அவை இருந்தன. முற்றாக சிந்தனையிலேயே கழித்த அந்த ஞானச் சிமிழ் மறுநாள் விடியலிலேயே முதற்காரியமாக, தம் தலை சாய்க்கத் தகுதி பெற்ற ஒரேயொருவனாக அல்லாஹ்வையும் தம் உயிர் மாய்க்கவும் உரிமை கொண்ட தூதராக நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களையும் நிர்ணயித்து ஏற்றார்கள். பருவமடையாச் சிறுவர்களில் முதல்முதலாக இஸ்லாத்தை ஏற்றவர்கள் ஹஸ்ரத் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களே.



ஹிஜ்ரத்

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களைக் கொன்றே விடுவதென குறைஷிகள் முடிவு கொண்டனர். அன்றே மக்கா நகரைத் துறந்து வெளியேறி விடுமாறு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு இறைவனின் கட்டளையும் பிறந்தது. அவ்வாணையை எட்டி வைத்த ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், ‘வழமையாகத் தாங்கள் படுத்துறங்கும் மஞ்சத்தில் இன்று படுத்துறங்க வேண்டாம்’ என அண்ணலாரை எச்சரித்தும் பிரிந்தனர். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்லப் புறப்பட்டபோது, அநேகமாய் அவர்களின் விரோதிகளாலும், மற்றோராலும் தங்களிடம் வைக்கப்பட்டிருந்த அமானிதப் பொருட்களை உடையவர்களுக்குக் கொடுத்துவிட்டுப் பிறகு வருமாறு கூறி அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை நிறுத்தினார்கள். எதிரிகள் பெருமானாரைக் கொள்வதற்காக வீட்டைச் சுற்றிக் காத்திருக்கிறார்களென்பது தெரிந்திருந்தும் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கிஞ்சித்தும் அஞ்சாமல், நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களின் படுக்கையில், நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களின் போர்வையால் போர்த்திக்கொண்டு அவர் உயிருக்கே ஆபத்தான நேரந்திலுங்கூட அங்கு உறங்கப் பின்வாங்கவில்லை. ஹஸ்ரத் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் மூன்று நாட்கள் வரை மக்காவில் தங்கி தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு தாங்களும் நகரைவிட்டு வெளியேறினார்கள். மதீனாவில் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் இல்லதேலேயே வந்து சேர்ந்து கொண்டார்கள்.



யுத்தங்கள்

துள்ளும் பருவத்திலேயே துணிவாய் துளிர்விட்ட அவர்களின் வீரம் வெளிச்சமிடும் வகையாக பல போர்களின் வெற்றி அமைந்தது. ஹஸ்ரத் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பல போர்களங்களையும் கண்டார்கள். அவை அனைத்திலும் வெற்றியை வரிந்து சேர்க்கும் வேங்கையென ஹஸ்ரத் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் முன்னின்றார்கள். இவர்கள் ஏராளமான யுத்தங்களில் கலந்துகொண்டுல்லார்கள். தபூக் யுத்தத்தை தவிர்த்து ஏனைய யுத்தங்களில் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் உடனிருந்து நிகரற்ற வீரத்தை காண்பித்தார்கள்.



மண வாழ்க்கை

மாநபியின் மனிமகளார் ஃபாத்திமா நாயகி (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களை தங்கள் 21ம் வயதில் திருமணம் புரிந்தார்கள். ஹஸ்ரத் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் முன் வந்து தயங்கி தயங்கி பெண் கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களோ எந்த வித மறுப்பையும் வெளியிடாமல் முழுமனதுடன் சம்மதித்தார்கள். ஹஸ்ரத் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் ஓர் உடைவாள், ஒரு புரவி, ஒரு போரங்கி ஆகியவை மட்டுமே சொத்துகளாக இருந்தன. போர் அங்கியை விற்று அந்த பணத்திலேயே தன் மனச் செலவுகளை முடித்தார்கள். அலி – ஃபாத்திமா தம்பதிகளின் மணவாழ்வு மணக்கலாயிற்று. கணவரின் கரம் பிடித்து மனமகளார் தம் தந்தையிடம் பெற்றுவந்த தனி உலகம் ஒரு போர்வை, கயிற்றிலான ஒரு கட்டில், தோலிலான ஒரு மெத்தை, தோலிலான ஒரு குடுவை, ஒரு நீர் துருத்தி, இரண்டு திருகைகள், இரண்டு பானைகள் ஆகியவை மட்டும் கொண்டதாக இருந்தது. இதை கொண்டே இருவரும் தன் வாழ்கையை சந்தோஷமாக வாழ்ந்தார்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில் ஹஸன், ஹுஸைன் என்ற மக்கட் செல்வங்களும் பிறந்து வளரலானார்கள்.



குடும்பம்

ஃபாத்திமா நாயகியார் வாழ்ந்த காலம் வரை அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் மற்றெவரையும் மணம் புரியவே இல்லை. நாயகியார் ஃபாத்திமா, ஹஸன், ஹுஸைன், முஹ்ஸின் என்ற மூன்று ஆண்மக்களையும் ஸைனப், உம்முகுல்ஸும் என்ற இரு பெண்மக்களையும் ஈன்றார்கள். அவர்களில் முஹ்ஸின் குழந்தையாகவே மரணித்தனர். வளர்ந்து வாழ்ந்து அண்ணலாரின் குலம் தழைக்க செய்த சுவனக்கொடி மலர்களான ஹஸன், ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹும்) அவர்களின் தந்தையான அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அபுஸ்ஸிப்தைன் (இரண்டு பேரார்களின் தந்தை) என்ற அழைகப்பட்டர்கள். ஃபாத்திமா நாயகி அவர்களின் மரணத்தையடுத்து அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பல பெண்களை மனமுடித்தர்கள். அவர்களில்,


1. உம்முள் பனீன் பின்த் குஸாமா என்பவரின் வயிற்றில் அப்பாஸ், ஜஃபர், அப்துல்லாஹ், உஸ்மான் ஆகியோர் பிறந்தனர்.

2. லைலா பின்த் மஸ்ஊத் தமீமி என்பவரின் மூலம் அப்துல்லாஹ், அபூபக்கர் என்ற இரு ஆண்மக்கள் பிறந்தனர்.

3. அஸ்மா பின்த் உமைஸ் மூலம் யஹ்யா, முஹம்மத், அஸ்கர் ஆகியோர் பிறந்தனர்.

4. ஸஹ்பா பின்த் ரபீஃஆ மூலம் உமர், ருகையா பிறந்தனர்.

5. நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களின் பேத்தி, ஸைனப் நாயகி அவர்களின் மகளார் உமாமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களை தம் மரணத்துக்குப் பின் மணந்துக்கொள்ளும் படியாக ஃபாத்திமா நாயகியாரே கேட்டுகொண்டபடி அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் உமாமாவை மணந்து முஹம்மத் அவ்ஸத் என்ற ஆண்மகனை ஈன்றெடுத்தனர்.

6. கவ்லா பின்த் ஜவ்ஃபர் என்ற பெண்மணியின் மகனாக முஹம்மத் இப்னு ஹனபியா பிறந்தனர்.

7. உம்மு ஸஈத் பின்த் உருவா இப்னு மஸ்ஊத் மூலம் உம்முல் ஹுஸைன், ரமலா என்ற இரு பெண்கள் பிறந்தனர்.

8. மிஹ்யாத் இப்னு இம்ரவுல் கைஸ் என்ற ஒரு மனைவியும் இருந்தார். இவர்களோடு அடிமைப்பெண்களின் மூலம் இன்னும் அனேக ஆண்மக்களும் பெண்மக்களும் பிறந்தார்கள். அவர்கள் அனைவரிலும் 5 பேர்களை கொண்டே அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் வழிவாறுகள் வந்தனர். ஹஸன், ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹும்) அவர்கள் இருவரின் வழிவாறுகள் ஸாதாத்துகளாவார்கள். முஹம்மத் இப்னு ஹனபியா, அப்பாஸ், உமர் ஆகியவர்களின் வழிவாறுகள் தங்களை அலவிகள் என அழைத்துக் கொள்கின்றனர்.



ஆத்ம ஞானி

‘ஞானத்தின் கோட்டை நானாவேன். அலி அதன் நுழைவாயில்’ என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களால் அறிவிக்கப்பட்டபடி அறிவுடையவும், ஞானத்துடையவும் ஊற்றுக் கண்ணாக அவர்கள் விளங்குகிறார்கள். ஆத்மீகப் பாதைகளை மக்களுக்கு விளக்கி வந்த நாதாக்கள், ஷைகுமார்கள் அனைவருமே தங்களின் ஞானவழி தொடரை ‘ஸில்ஸில்’ என்னும் பாரம்பரிய சங்கிலியை பெரும்பாலாக அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை கொண்டே நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களோடு இணைத்திருக்கிறார்கள்.



சிறப்பு பெயர்

ஒரு நாள் ஒரு யுத்தக்களத்தில் ஓர் எதிரியைப் பிடித்துக்கொல்வதற்கு அலி (ரலியல்லாஹு அன்ஹு) ஆயத்தமானபொழுது அவ்வெதிரி அவர்கள் முகத்தில் துப்பினான். உடனே அவர்கள் அவனைக் கொல்லாமல் விட்டுவிட்டார்கள். அப்படி ஏன் செய்தீர்கள் என்று கேட்கப்பட்டபொழுது “முதலில் பரிசுத்த யுத்தத்தில் அவனைக் கொல்ல எத்தனித்தேன், அவன் துப்பியபின் என் சொந்தக் கோபத்துக்காக அவனைக் கொல்லப்படாது என விட்டுவிட்டேன்” என்றார்கள். தன்னுடையதாவது, தன் மனைவியுடையதாவது மர்மஸ்தானங்களை இவர்கள் ஒரு போதும் பார்த்தது கிடையாது. இதனால் இவர்கள் பெயருக்குப் பின்னால் ‘கர்ரமல்லாஹு வஜ்ஹஹு, (அல்லாஹ் அவர்களின் முகத்தை சங்கயுடையதாக்குவானாக) எனக் கூறப்படும்.



சிறப்புகள்

சிறு வயதிலிருந்தே நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) இவர்களின் நற்குண, நல்லொழுக்கங்களைப் பழகியறிந்தவர்களாததால் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மீது நல்ல பற்றுடையவர்களாயிருந்தார்கள். நற்குணம், நீதம், வீரம், தியானம், நுண்ணறிவு ஆகியவற்றில் சிறந்தவர்கள். ஒருநாள் இவர்கள் காலில் தைத்திருந்த அம்பை உருவியெடுக்கச் சகாக்கள் முயன்றபோது தாங்கொணா வலியின் காரணமாய் முடியாமற்போனது. அப்பொழுது அவர்கள் “நான் அல்லாஹ்வை வணங்கும்போது இலேசாய் அதை நீங்கள் உருவியெடுத்து விடலாம்” என்றார்கள். அதுபோலவே அவர்கள் தொழும் போது அந்த அம்பு உருவியெடுக்கப்பட்டது. தொழுது முடிந்ததும் உருவிவிட்டீர்களா எனக் கேட்டார்கள். இவர்களின் ஆழ்ந்த தியானமும் அல்லாஹ்வில் பரவசப்படுத்தும் அத்துணை கடுமையாய் இருந்தமையால் அம்பை இழுத்த போது ஏற்பட்ட நொம்பலம் அறவே அவர்களுக்கு விளங்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) உடன்படிக்கைகளையும், நிருபங்களையும் இவர்களே எழுதி வந்த இலிகிதராயிருந்தார்கள். இவர்கள் சிறந்த அறிஞர். எப்பொழுதும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் உடனிருந்து குர்ஆனின் ஆழ்ந்த கருத்துக்களை நன்கறிந்திருந்தார்கள். மார்க்கச் சட்டங்களை நன்கு பகுத்தறியும் தன்மையுடைவர்கள். முந்திய கலீபாக்களும் மார்க்க விஷயங்களில் அபிப்பிராயபேதம் ஏற்பட்டுவிடுங்காலத்து இவர்களின் அபிப்பிராயத்தையே அங்கீகரிப்பர் இலக்கண இலக்கியத்திலும் இவர்கள் ஒப்பற்றவர்கள். இவர்கள் பிரசங்கங்களையும், இலிகிதங்களையும் சரீமுர்தளாவென்பார் ஒன்று திரட்டி நஹ்ஜுல்பலாகா எனும் பெயருடன் வெளியிட்டிருப்பதைக் கவனிக்குமிடத்து அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அரபிகளுட் சிறந்த அறிஞராயிருந்தார்களென்பது புலப்படும். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்குப் பிறகு யாவரிலுஞ் சிறந்த பிரசங்கியாகவுமிருந்தார்கள்.



குழப்பம்

கலீபாவானதும் உமய்யா வம்சத்தினர், உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்காகப் பழிக்குப்பழி எடுக்கத் தாமதிக்கப்படாதென்ற ஓர் எழுச்சியைக் கிளப்பினர். உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களால் நியமிக்கப்பட்டிருந்த அதிகாரிகளை நீக்கிவிட்டு வேறு அதிகாரிகளை நியமித்தனர். முஆவியா ஸிரியாவில் ஒரு சேனை திரட்டுவதை அறிந்து இவர்களும் ஒரு சேனையை ஆயத்தம் செய்து கொண்டு மதீனாவிலிருந்து ஸிரியாவுக்குப் புறப்பட ஆயத்தமாகும் பொழுது, மக்கா வாசிகள் ஆயிஷா நாயகி (ரலியல்லாஹு அன்ஹா) வைச் சூழ்ந்து கொண்டு பழிக்குப் பலி எடுக்கச் செய்யவேண்டுமென வேண்டினர். இதனால் ஜமல் (ஒட்டகை) யுத்தம் நிகழ்ந்தது. அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் இதில் வெற்றிப்பெற்றனர். ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் மிக மரியாதையுடன் மதீனாவுக்கு அனுப்பப்பட்டார்கள். பின்னர் முஆவியா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் சேனையுடன் ஸிப்பீனில் யுத்தம் முடிவடைந்தது. முஆவியாவின் படை படுத்தோல்வி அடைந்து வரும் போது அமர் இப்னு ஆஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் தந்திரத்தால் ஈட்டி முனைமீது குர்ஆனை வைத்து உயர்த்தி அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் படையை வசப்படுத்தினது மட்டுமல்லாமல் தீர்ப்பு கூறுபவர் இருவரையும் நியமித்தனர். கவாரிஜ் என்னும் குழப்பக்கார கூட்டம் உற்பத்தியானது. கவாரிஜ் களை அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களால் பின்னர் தயாரிக்கப்பட்ட படை எதிர்க்க அந்த கவாரிஜ்கள் ஒரு சிலரை தவிர எல்லோரும் கொல்லப்பட்டனர்.



வfபாத்

இந்த தோல்வியை மனதில் வைத்து பழிவாங்க அப்துல் ரஹ்மான் இப்னு மல்ஜம் என்பவனை கவாரிஜ்கள் நியமித்தனர். ஹிஜ்ரி 40ம் ஆண்டு இப்னு மல்ஜம் கூபாவுக்குச் சென்று மறைந்திருந்து அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஸுப்ஹு தொழுகைக்காக செல்லும் போது நஞ்சூட்டப்பட்ட வாளினால் நெற்றியில் அடித்து காயப்படுத்தினார். அக்காயத்தினால் அவர்கள் இரண்டு நாட்களுக்குப்பின் தங்கள் 63 ம் வயதில் ஹிஜ்ரி 40 இல் இறையடி சேர்ந்தார்கள். நான்கு வருடங்கள் எட்டு மாதங்கள் ஒன்பது நாட்கள் கிலாபாத்தின் சுமையை தாங்கி நின்ற கலீபாவின் மரணம் இஸ்லாமிய ஜனநாயகத்தின் மரணமேயாகும்.