MAIL OF ISLAM

Knowledge & Wisdom



பைஅத் என்றால் என்ன?

எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


தரீக்காக்களில் பைஅத் செய்துகொள்வது இறைதூதரின் வழிமுறையைப் பின்பற்றி (பைஅதுல் அகபா) சூபியிஸத்தில் (தரீகாவில்) மிக முக்கியமான அம்சம், ஞான வழி பெரியார் ஒருவர் கண்காணிப்பில் தனது குணங்களை சரி செய்வதாகும். இதற்கு பைஅத் என்று கூறப்படுகிறது.


ஆன்மீக வழிகாட்டியான ஷெய்குவிடம் அவரைப் பின்பற்றும் சீடர்கள் இஸ்லாத்துக்கு முரணான சகல விடயங்களை, பித்அத்களை விட்டும் தவிர்ந்து வாழ்வதாகவும், உலக இன்பங்களில் மூழ்காது இஸ்லாத்துக்காக உழைப்பதாகவும் செய்துகொள்ளும் விசுவாசப் பிரமாணமே பைஅத் எனப்படுகின்றது. இந்த பைஅத் மூலம் ஆத்மீக குருவுக்கும் சீடர்களுக்கும் ஒரு இறுக்கமான பிணைப்பு ஏற்படுவதோடு அவர்கள் ஒரு கட்டுக்கோப்பில் வாழவும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.


ஒரு காமிலான ஷெய்கை பைஅத் செய்து கைப்பிடித்தவன் தன் ஷெய்கிடம் மிகவும் மரியாதையோடும், கண்ணியத்தோடும் நடந்து கொள்ள வேண்டும். ஷெய்கிடம் மரியாதைக் குறைவாகவோ, கண்ணியக் குறைவாகவோ நடப்பது அவனின் ஈமானை பாதித்து விடும். ஒருவன் ஷெய்கை எதிர்ப்பதால் அவனுடைய பைஅத் முறிந்து விடுகிறது. அவனுக்கும் அவன் ஷெய்குக்கும் உள்ள தொடர்பு அறுந்து விடும். அதாவது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் கொண்ட நேரடித் தொடர்பு அறுந்து விடும். ஒரு ஷெய்கால் வெறுத்து ஒதுக்கப்பட்டவனை வேறு எந்த ஷெய்காலும் முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.



♣ தரீக்காக்களின் குறிக்கோள்

ஷரீஆவின் ஒளியில் மக்களுக்கு வழிகாட்டுவதே தரீக்காக்களின் பிரதான குறிக்கோள் ஆகும். தரீக்காவின் குறிக்கோள் இறைவழிகாட்டல்களை நிறைவேற்றுவதில் இன்பமும் சுவையும் ஏற்படுவதோடு விலக்கப்பட்ட கருமங்கள் அருவருப்பு ஏற்படும் நிலைகளை தவிர்ந்து வெருப்பதாகும். சூபிச அறிவுகள் வந்து சேர்ந்த அத்தொடரே தரீக்கா (வழி) என்று அழைக்கப்படுகிறது.


​​இஸ்லாத்தில் பல தரீக்காக்கள் உள்ளன. காதிரியா, ரிபாயியா, சிஸ்தியா, நக்ஷபந்தியா, ஷாதுலியா போன்ற இன்னும் பல தரீக்காக்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் உண்மையில் இஸ்லாமிய ஆன்மீக பள்ளி பாசறைகளே. அதாவது,சூபித்துவ கல்வியை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் இருந்து இன்று வரை கொண்டு வரக்கூடிய ஆன்மீக சங்கிலி தொடர்களே ஆகும்.

இவை பல கிளைகளாக பிரிந்து இன்றளவும் உலகளவில் இஸ்லாமிய ஆன்மீக கல்வியை மக்களுக்கு போதித்து கொண்டு உள்ளன. இதன்படி, ஒவ்வொரு தரீக்க்காகளிலும் பல ஆன்மீக தலைவர்கள் அதாவது, ஆன்மீக ஆசான்கள் இருப்பர். இக்கல்வியை கற்றுக்கொள்ள விரும்பும் ஒருவன் அவர்களில் ஒருவரிடம் மாணவராக ஆகி அவர் மூலம் இக்கல்வியை முறைப்படி கற்றுக்கொள்கிறான். அதற்காக அவரிடம் சத்திய பிரமாணம் செய்து கொள்ளலே அரபி மொழியில் 'பைஅத் செய்தல்' என்று அழைக்கப்படுகிறது.


​​அந்த ஆன்மீக ஆசானை 'முர்ஷித்' அல்லது 'ஷெய்க்' என்றும் மாணவனை முரீத் என்றும் சொல்லப்படுகிறது. சூபிசம் மூலம் இறைவனை அடைவது எப்படி? ஒரு முர்ஷித் (ஆசிரியர்) தன்னிடம் பைஅத் செய்துள்ள மாணவனை இறைவனிடம் கொண்டு போய் சேர்ப்பதற்காக வழிகாட்டுவார். அவனுக்கு தேவையான அறிவுரைகள், வழிக்கட்டல்களின் மூலம் அவனை நேர்வழிக்கு கொண்டு செல்லுவார். அதேநேரம், மாணவனின் உள்ளத்தை பரிசுத்தப்படுத்தி இறைவனை அடைய செய்கின்றது.

♣ பைஅத் செய்வது பற்றிய ஹதீஸ்கள் 

♦ (நபி நாயகமே!) உங்களிடத்தில் (வெளிரங்கத்தில் கைகொடுத்து) பைஅத்து செய்கிறவர்கள் (எதார்த்தத்தில்) அல்லாஹ்விடத்தில் தான் பைஅத்து செய்கிறார்கள். (குறிப்புகளை விட்டும் பொதுவான) அல்லாஹ்வின் கை (வெளிப்பாடுகளில் நின்றுமுள்ள குறிப்பான) அவர்களது கைகளின் மீது இருக்கிறது. எவனொருவன் அ(ந்த பைஅத்)தை முறித்துக் கொண்டானேயானால் அவன் தன் மீதே (அவன் நஷ்டத்தை மீட்டி) முறித்துக் கொண்டான். எவனொருவன் எதன் மீது அல்லாஹு இடத்தில் உடன்படிக்கை செய்தானோ அதை நிறைவேற்றுவானேயானால் அல்லாஹ் அவனுக்கு மிகப் பெரிய கூலியைக் கொடுப்பான். (அல்குர்ஆன் 48:10)

அசலில் பைஅத் என்பது ஓர் மனிதன் தன்மீது ஒரு இமாமுக்கு (தலைவருக்கு) வழிப்பட்டு நடப்பதற்காக சில உடன்படிக்கைகளை செய்து அதை நிறைவேற்றி வருவதாகும். இவ்வசனத்தில் சொல்லப்பட்டது 'ஹுதைபிய்யா' எனும் இடத்தில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சஹாபாப் பெருமக்கள் செய்து கொண்ட பைஅத்து றிழ்வானாகும். நற்காரியங்களில் ஒரு தலைவருக்கு இணங்கி நடப்பதற்காக உடன்படிக்கை செய்வதையும் ஒரு முரீது ஒரு ஷெய்குக்கு (அவர் இடும் நிபந்தனைகள், ஒழுக்க நெறிகளுக்கு) வழிப்பட்டு நடப்பதற்காக உடன்படிக்கை -பைஅத் செய்வதையும் இவ்வசனம் பொருந்திக் கொள்ளும். (மெஞ்ஞானிகளான) ஷெய்குமார்களும் முரீதீன்களிடம் பைஅத்து எடுக்கும்போது இவ்வசனத்தை (ஓதியும்) புழங்குகிறார்கள்.

தப்ஸீர் ஸாவி பாகம் 4, பக்கம்97,98

♦ “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் தொழுகையை நிலை நிறுத்துவதாகவும், ஸக்காத் வழங்குவதாகவும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நன்மையே நாடுவதாகவும் உறுதி மொழி (பைஅத்) அளித்தேன் ”ஜரீர் இப்னு அப்தில்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள்.

ஷஹீஹ் புகாரி 57

♦ அபூ உஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்மதுல்லஹி அலைஹி) கூறினார்கள். இப்னு உமர்(ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம், 'நீங்கள் உங்கள் தந்தையை விட முன்னதாக ஹிஜ்ரத் செய்து வந்தீர்கள்" என்று சொல்லப்படும் போது அவர்கள் கோபமுற்றுக் கூறுவார்கள்: 'நானும் (என் தந்தை) உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களும் இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ('பைஅத்' எனும் உறுதிமொழி எடுத்துக் கொள்வதற்காகச்) சென்றோம். நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மதிய ஓய்வெடுத்து (உறங்கி)க் கொண்டிருக்கக் கண்டோம்.


​​எனவே நாங்கள் வீட்டிற்குத் திரும்பி விட்டோம். பிறகு உமர்(ரலியல்லாஹு அன்ஹு) என்னை அனுப்பி, 'நீ போய், அவர்கள் (உறக்கத்திலிருந்து) விழித்தெழுந்து விட்டார்களா என்று பார்" என்று கூறினார்கள். நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் சென்றேன். (அவர்கள் விழித்திருந்தார்கள். எனவே,) அவர்களிடம் (பைஅத் எனும்) உறுதி மொழி கொடுத்தேன். பிறகு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் சென்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் விழித்தெழுந்து விட்டார்கள் என்று தெரிவித்தேன்.


​​பிறகு நாங்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை நோக்கிப் புறப்பட்டு விரைந்தோடிச் சென்றடைந்தோம். அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) (பைஅத் எனும்) உறுதிமொழி கொடுத்தார்கள். பிறகு நானும் (இரண்டாம் முறையாக உறுதிமொழி கொடுத்தேன்.

​​

நூல்: புகாரி 3916


♦ ஹழ்ரத்  ஜரீர்பின் அப்தில்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள்.

தொழுகையை நிலைநாட்டுவது ஸகாத் கொடுப்பது, முஸ்லிம்கள் அனைவருக்கும் நல்லதையே நாடுவது ஆகிய காரியங்களுக்காக நான் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) எடுத்தேன்.


(நூல் புகாரி 524)


♦(நீண்டதொரு ஹதீஸ் ஒன்றின் கடைசியில் வரும் செய்தியாகும்) "எனவே, உமர் இப்னு கத்தாப், அல்லது அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்விற்கு (தலைமைக்கான) விசுவாசப் பிரமாணம் செய்யுங்கள்“ என்று கூறினார்கள். அப்போது உமர்(ரலியல்லாஹு அன்ஹு), “இல்லை“ நாங்கள் உங்களிடமே விசுவாசப் பிரமாணம் செய்கிறோம். நீங்கள் எங்கள் தலைவர்; எங்களில் சிறந்தவர்; எங்களிடையே அல்லாஹ்வின் தூதருக்கு மிகவும் பிரியமாயிருந்தவர்கள்“ என்று சொல்லிவிட்டு, அவர்களின் கரத்தைப் பிடித்து அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மக்களும் அபூ பக்ர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். அப்போது ஒருவர், “ஸஅத் இப்னு உபாதா அவர்களை(ப் புறக்கணித்து அவரின் கருத்தை) நீங்கள் கொன்று விட்டீர்கள்“ என்று கூறினார். அதற்கு உமர் (ரலியல்லாஹு அன்ஹு), “அல்லாஹ் தான் அவரைக் கொன்றுவிட்டான்“ என்று பதில் கூறினார்கள்".


(நூல் புகாரி 3668)


♦ (நீண்டதொரு ஹதீஸ் ஒன்றின் கடைசியில் வரும் செய்தியாகும்) உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை நான் ஆட்சித் தலைவராக நியமனம் செய்தால் அவர்களுக்கு செவிமடுத்து, கட்டுப்பட்டு நடப்பீர்கள்“ என்று கூறினார்கள். பிறகு இன்னொருவரிடம் ( உஸ்மான் - ரலியல்லாஹு அன்ஹு- அவர்களிடம்) தனியே வந்து அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கூறியதைப் போன்றே (அவர்களிடமும்) வாக்குறுதி வாங்கிய பின், “உஸ்மான் அவர்களே! தங்களின் கையைத் தாருங்கள்“ என்று கூறி (உஸ்மான் - ரலியல்லாஹு அன்ஹு- அவர்களின் கையைப் பிடித்து) அவர்களுக்கு பைஅத் (விசுவாசப் பிரமாணம்) செய்து கொடுத்தார்கள். அப்போது அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களும் உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மேலும், அந்நாட்டவரும் (மதீனா வாசிகளும்) வந்து அவர்களிடம் பைஅத் செய்து கொடுத்தார்கள்.


அறிவிப்பவர்: ஹழ்ரத்  அம்ர் இப்னு மைமூன் ரலியல்லாஹு அன்ஹு

(நூல் புகாரி 3700)

♣ பைஅத் செய்து கொள்ளும் ஒழுங்கு முறைகள்

​​மேலே கூறப்பட்ட ஹதீஸ்கள் அடிப்படையில் அமைப்பில் மெஞ்ஞானிகளான ஸூபிய்யாக்கள் ஆண்களுக்கு திரையில்லாமல் முஸாபஹா செய்வது போல் கைகளை கைகளோடு சேர்த்தும், பெண்களுக்கு திரை மறைவுடன் துணியில் ஒரு பக்கம் தன் கைகளிலும் மறுபக்கம் பெண்களின் கைகளிலும் பிடித்துக்கொண்டு பைஅத் செய்கிறார்கள். இதுதான் உண்மையான வழிமுறையாகும். அல்ஹம்துலில்லாஹ்.'பைஅத் செய்யும் போது சுன்னத்தான குத்பா ஓத வேண்டும். பின் ஈமானைப் பற்றி எடுத்துச் சொல்லி கொடுக்க வேண்டும். பின் ஷஹாதத் கலிமா சொல்லிக் கொடுக்க வேண்டும். பின்பு பைஅத் – உடன்படிக்கை செய்து கொண்டோம் என்று சொல்ல வேண்டும். பின் (அல்குர்ஆன் 5:35, 48:10) ஆகிய இரு திருவசனங்களை ஓத வேண்டும்' என்ற ஒழுங்கு முறையை நம் சங்கைமிகு ஷெய்குமார்களில் ஒருவரான மகான் ஷாஹ் வலியுல்லாஹ் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் எழுதியுள்ளார்கள்.

நூல்: ஷிபாவுல் அலீல் பக்கம் 27

♣ பைஅத் மூலம் முரீதுபிள்ளைகளிடம் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

மனிதர்களை எப்படி நேசிக்க வேண்டும். ஏனைய படைப்புகளை எப்படி நேசிக்க வேண்டும். அவர்களுக்கு நன்மை செய்து, கெடுதல் செய்யாமல் வாழுதல் வேண்டும். பின்னர் உள்ளத்தை பரிசுத்தப்படுத்துதல் வேண்டும். உள்ளத்தில் உள்ள தீய அழுக்கான எண்ணங்களை நீக்கி, உள்ளத்தளவில் எப்போதும் நல்லதையே நாடி, உலக ஆசாபாசங்களை உள்ளத்தை விட்டும் நீக்கி இறைவனின் நேசத்திற்கு மட்டுமே உள்ளத்தில் இடம் கொடுக்க வேண்டும்.இப்படியாக விடயங்களை காமிலான ஷெய்குமார்கள் தன்னிடம் பைஅத் பெற்ற முரீது பிள்ளைகளுக்கு அன்பையும் அமைதியையும் போதிப்பார்கள்.

எந்நேரமும் உள்ளத்தை இறைவனின் நினைப்பில் வைத்திருத்தல், இறைவனை தியானித்தல், நல்ல குணங்களை, நல்ல பண்புகளை வளர்த்துக்கொள்ளல், மதம், சாதி, இன, நாடு வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் அன்பு காட்டுதல், உதவி செய்தல், ஆனால் தீயவர்களால் சத்தியத்திற்கு பாதகம் ஏற்படும்போதும், சமுதாயத்திற்கு தீங்கு ஏற்படும்போதும் உயிரை கொடுத்தேனும் தீயவர்களுடன் யுத்தம் செய்து சத்தியத்தை பாதுகாத்தல் (இதுவே உண்மையான ஜிஹாத்), மக்களுக்கு நல்லது செய்தல், நல்லதை சொல்லிக்கொடுத்தல் போன்ற போதனைகளையே சூபித்துவம் வழிகாட்டல் மூலம் காமிலான ஷெய்குமார்கள் தன்னிடம் பைஅத் செய்துள்ள சீடர்களுக்கு போதிப்பார்கள்.

ஆகவே பைஅத் சம்பந்தமாக இன்னும் நிறைய கற்றுக்கொண்டு, இந்த சூபிச வழிமுறையை பின்பற்றி இறைவனை அடைவதற்காக ஆன்மீக பாதையில் செல்வதற்க்கு இறைவன் உதவி புரிவானாக!

சூபிசம் என்றால் என்ன (SUFISM)


ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

தரீக்கா என்றால் என்ன  (TARIQA)


இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.


​​​​​

பைஅத்தின் அவசியம்


​பைஅத் ஏன் செய்ய வேண்டும் என்பதை அறிந்து தெளிவு பெற இந்த கட்டுரையை வாசியுங்கள்.

ஆன்மீக வழிகாட்டி வேண்டுமா? 


​ஆன்மீக வழிகாட்டி என்பவர் யார்? இவரை எப்படி பெற்றுகொள்வது? இவரினால் நாம் பெறும் பயன் என்ன? போன்ற விஷயங்களை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.​​