MAIL OF ISLAM

Knowledge & Wisdom



கௌது நாயகம் رضي الله عنه அவர்களின் வாழ்வினிலே!!!


ஒரு முறை கௌது நாயகம் رضي الله عنه அவர்கள் சமூகம் ஒரு வயதான பெண்மணி வந்து, தன்னுடைய மகனை கௌது நாயகம் رضي الله عنه அவர்களின் கல்லூரியில் சேர்த்து கல்வி கற்றுக் கொடுக்குமாறு கௌது நாயகம் رضي الله عنه அவர்களிடம் வேண்டிக் கொண்டாள். அதற்கு கௌது நாயகம் رضي الله عنه அவர்கள் சரி என்று ஒப்புக்கொண்டு ஏற்றுக் கொண்டார்கள்.


சில காலம் கழித்து அந்த பெண்மணி தன் மகனை பார்க்க வந்த போது, அவன் மெலிந்து துரும்பாகி காய்ந்த ரொட்டிகளை சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். அதை கண்டு பெற்ற மனம் பித்தானது. பின்னர் அவள் கௌது நாயகம் رضي الله عنه அவர்களிடம் வந்த போது, அவர்கள் பொறித்த கோழியை சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். அதைக் கண்டு ஆத்திரப்பட்டு அவள் அவர்களை நோக்கி, " ஷைகு அவர்களே! தங்களை பெரிய மகாத்மா என்றும், மாமேதை என்றும் கூறுகின்றார்கள். என் மகன் இங்கு தங்களிடம் ஓத வந்து, காய்ந்த ரொட்டிகளை உண்டு உருத்தெரியாது ஓடாகிவிட்ட போது, தாங்கள் மட்டும் பொரித்த கோழியை உண்ணுவது எந்த விதத்தில் நியாயம்?" என்று கேட்டாள்.


அது கேட்ட கௌது நாயகம் رضي الله عنه அவர்கள் ஒரு புன்முறுவல் பூத்தவண்ணம், தாங்கள் மென்று கக்கி இருந்த அந்த கோழியின் எலும்புகளை ஒன்று சேர்த்து, " மக்கிப்போன எலும்புகளை உயிர்ப்பிக்க கூடிய அல்லாஹ்வின் ஆணையினால் நீ உயிர் பெற்று எழு" என்று கூறினார்கள்.


அடுத்த நிமிடம் அந்த கோழி உயிர் பெற்று கொக்கரித்துக் கொண்டு நின்றது. அதுக்கண்டு அந்த பெண்மணிக்கு ஏற்பட்ட வியப்பிற்கு அளவில்லை. அப்பொழுது கௌது நாயகம் رضي الله عنه அவர்கள் அவளை நோக்கி, " தாயே! உன்னுடைய மகன் இப்படி செய்யும் ஆற்றலை பெற தகுதி பெற்றுவிட்டால் அவன் இதனை சாப்பிட ஒரு தடையும் இல்லை " என்று கூறினார்கள்.


பிற்காலத்தில் அவளின் மகன் ஞானமார்க்கத்தில் தேர்ச்சிப் பெற்று, சிறப்புற்று விளங்கினார். அப்பொழுது ஒரு முறை அவள் தன் மகனை பார்க்க வந்தபோது, கௌது நாயகம் رضي الله عنه அவர்களோடு தன் மகனும் அமர்ந்து பொறித்த கோழியை சாப்பிட்டு கொண்டிருப்பதை வைத்த கண் வாங்காது பார்த்து மகிழ்ந்தாள்.


அப்பொழுது கௌது நாயகம் رضي الله عنه அவர்கள் அவளுடைய மகனுக்கு ஆணை பிறப்பிக்க, அவர்கள் மென்று போட்ட எலும்புகளை நோக்கி அந்த மகன், அல்லாஹ்வின் ஆணையினால் உயிர் பெற்று எலும்புமாறு கூற, அந்த எலும்புகள் ஒரு நொடிப்பொழுதில் சேவலாக உருவெடுத்து 'கொக்கரகோ' என்று கூவியது.


அதைப் பார்த்த அந்த பெண்மணி மிக சந்தோசம் அடைந்தாள். தன் மகனை வாழ்த்தி, கௌது நாயகம் رضي الله عنه அவர்களின் சமூகத்தில் அவர்களுக்கு தொடர்ந்தும் தொண்டாற்றுமாறு பணித்து விட்டு விடை பெற்றாள்.


இவ்வாறு ஒவ்வொரு மனிதர்களையும் புனிதர்களாக்கி, பாவத்தில் மூழ்கி இருந்த மக்களை அல்லாஹ்வின் பக்கம் இட்டு சென்று அவர்களை சிறந்த மகான்களாகியவர்கள் கௌது நாயகம் رضي الله عنه அவர்கள்.