MAIL OF ISLAM

Knowledge & Wisdom



இமாம் புகாரி ரலியல்லாஹு அன்ஹு


அபூ அப்துல்லாஹி முஹம்மத் இப்னு இஸ்மாயிலுல் புகாரி என்பது இவர்களின் முழு பெயராகும். அவர்களின் இயற் பெயர் முஹம்மத் என்பதாகும். அவர்களின் தகப்பன் பெயர் இஸ்மாயில். அபூ அப்துல்லாஹ் என்பது அவர்களின் புனைப் பெயர். புகாரா நகரில் பிறந்ததனால் புகாரியென அழைக்கப்பட்டார்கள். இவர்கள் ஹிஜ்ரத் 194 இல் (கி. பி. 803) பிறந்தார்கள். பெரிய அறிஞராகவும், வியாபாரியாகவும் திகழ்ந்த இவர்களின் தந்தை இவர்களின் சிறு பிராயத்திலேயே காலகதியாய்விட்டனர்.


ஒரு நோயின் காரணமாய் இமாமவர்களின் கண் பார்வையும் சிறிது குறைந்துக்கொண்டு வந்தது. இத்தகைய இன்னல்களுக்கு இலக்காகியும் கல்வியின் அவாவும் சன்மார்க்க சேவையின் விருப்பமும் ஒரு சிறிதும் குன்றாது இவ்விள மனதில் மென்மேலும் பொலிவுற்றுக்கொண்டே வந்தன.

புனித குர்ஆனை இளமையிலேயே மனனம் செய்துவிட்டுப் பத்து வயதாகும்போது அரபிக்கலை

பயில ​ஆரம்பித்தார்கள். இக்காலத்திலேயே ஹதீஸ்களை மனனம் பண்ணவும் செய்தார்கள்.

​அக்காலை பள்ளிச் சிறாராயிருக்கும்போதே பல்லாயிரம் ஹதீஸ்களை மனனம் செய்தார்கள்.


அக்காலை ஹதீஸுக்கு மிக்க மகிமையும், மதிப்புமுள்ள காலமாயிருந்தது. அதனால் எங்கும் ஹதீஸுச்

சபைகள் நடைபெற்று வருவனவாயிற்று. ஹதீஸுகளை ஒன்று சேர்த்தல், எழுதல் முதலியவையும் அங்கங்கு

ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இதன் பயனாய் ஹதீஸ் கிரந்தங்களும் பல எழுதப்பட்டன. இமாம் புஹாரி அவர்கள்

17 ஆம் வயதில் தங்கள் தாயுடனும், மூத்த சகோதரனுடனும் ஹஜ்ஜு செய்வதற்காகத் திருமக்கா யாத்திரை

செய்தனர். கடமையை முடித்துக்கொண்டு மற்றிருவரும் ஊர் திரும்பினர். இமாம் அவர்கள் கல்வி விருத்திக்காக ஹிஜாஸில் சில காலம் தங்கிவிட்டு பஸரா, பஃதாத், கூபா, ஸிரியா, எகிப்து முதலிய தேசங்களுக்குப் பன்முறை விஜயம் செய்து ஹதீஸ்களை நேராய்க் கேட்டறியலானார்கள். அத்துறையில் மிகத் திருப்திகரமான ஆராய்ச்சியும் நடத்தினார்கள். முன்னர் எழுதப்பட்டிருந்த பல ஹதீஸ் கிரந்தங்கள் அனைத்தையும்விடச் சகல துறைகளிலும் சிறந்த முறையில் ஹதீஸ்களைச் சேர்க்கவே இவர்கள் முனைந்து நின்றனர். 18 ஆம் வயதில் இவ்வருங் கைங்கரியத்தை ஆரம்பித்துத் தங்களின் 36 ஆம் வயதில் ‘ஸஹீஹுல் புகாரி’ எனும் ஹதீஸ் கிரந்தத்தை எழுதி முடித்தார்கள். இவர்களுக்குக் கிடைத்த இலட்சக்கணக்கான ஹதீஸ்களிலிருந்து 18 வருடக் காலமாகத் தேர்ந்தெடுத்தே இதை எழுதி முடித்தார்கள்.


புகாரி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஹதீஸ்களின் தூய்மைகளைக் காட்ட அவர்களின் ஒரு விசேஷ சம்பவத்தை சொல்வது பொருத்தமாக இருக்கும். அதாவது இமாம் புஹாரி (ரலியல்லாஹு அன்ஹு), ஒருவரிடம் ஒரு நாயக வாக்கியத்தை (ஹதீஸை) பெறுவதற்காக வேண்டிச் செலவுக்குத் தேவையான பணத்தை ஆயத்தம் செய்துகொண்டு எண்ணற்ற கஷ்டங்களை அனுபவித்தவர்களாக சுமார் மூன்று மாதங்களாகப் பிரயாணஞ் செய்து கடைசியாக குறிக்கப்பட்ட மனிதனை அடைந்தார்கள். அப்பொழுது, அம்மனிதன் பால் கறக்க தனது பசுவை அழைப்பதற்காக கையில், தீன் நிரம்பியது போலிருக்கும் ஒரு வெற்று பையைக் காட்டி அப்பசுவை அழைத்தான். அது வந்ததும் பையைக் பக்கத்தில் வைத்துவிட்டுப் பால் கறந்து செல்வதைக் கண்ணுற்றார்கள் இமாமவர்கள். இமாமின் இருதயத்தில் அப்பொழுது உதித்ததென்ன? ‘இம் மனிதன் தனது மாட்டில் பால் கறக்க இத்தகைய ஓர் தந்திரம் செய்யலாம். ஆனால் இத்தகைய ஒரு குறை கூட இல்லாதவரிடமே நான் ஹதீஸ்களைப் பெற வேண்டுமே தவிர இவரிடம் கேட்பது என் ஹதீஸின் பரிசுத்தத்தின் விசேஷ தன்மைக்கு இழுக்காகும்’ எனத் தங்களுக்குள் யோசித்துக்கொண்டு முன்போலவே இன்னும் மூன்று மாதங்கள் கஷ்டத்துடன் பிரயாணஞ் செய்து திரும்பி வந்து ஊர் சேர்ந்தார்கள். ஒரு ஹதீஸுக்காக ஆறுமாதக் காலம் அலைந்து திரிந்தும், கையிலிருந்த பணத்தைச் செலவழித்தும், பொருட்படுத்தக்கூடாத ஓர் அற்பக் குறைக்காக ஒரு ஹதீஸைப் பெறாது திரும்பி விட்டார்களெனின் இவர்களின் ஹதீஸ்களின் தூய்மையை என்னவென்று சொல்வது?


இத்தகையதாக நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாக்கியங்களை ஒழுங்கான முறையில் திரட்டித் தமது புகாரி ஷரீபை எழுதுவதற்காகத் தங்கள் நாட்டினின்று வெளிச் செல்லுந்தோறெல்லாம் உண்ண உணவின்றித் தாகந்தீர நீரின்றிச் சுகமெய்த நித்ரையின்றிப் பல்லாயிரக்கணக்கான மைல்கள் பிரயாணஞ் செய்து அனுபவித்த கஷ்டங்கள் அளவில்லாதது. ஒவ்வொரு வாக்கியமும் எழுதுமுன் துப்புரவுடன் குளித்து இரண்டு ரக்அத்துத் தொழுது பிரார்த்தனை புரிந்த பின்னரே அதை எழுதுவார்கள். ஒவ்வொரு ஹதீஸையும் எழுதும்போது முதலில் ‘இஸ்னாதை’ எழுதிப் பின்னர் ‘மத்தனை’ எழுதுவார்கள். இஸ்னாத் என்பது ஒரு ஹதீஸ் நபியவர்களிடமிருந்து யார் யார் மூலம் இமாம் அவர்களுக்கு வந்து சேருகிறதோ அனைவரின் ஒழுங்கு முறைப்படியுள்ள பெயர்களின் தொடர்ச்சியாகும் (ராவிகள்). மத்தன் என்பது மூலம். அதாவது: நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் திரு ஹதீஸ். (இந்த ஒழுங்கு மற்ற பரிசுத்த கிரந்தங்களிலும் காணப்படும்.)


மேலும் புகாரி அவர்கள் ஓர் இனத்தைச் சேர்ந்த ஹதீஸ்களை எழுத முன் அந்த விஷயத்துக்குரிய அல்லது அதற்கு சார்பான திருகுர்ஆன் ஆயத்தை எழுதுவார்கள். அவ்வாயத்துக்குப் பின் எழுதும் திரு வசனங்கள் அவ்வாயத்தின் விரிவுரை போன்றிருக்கும். இக்கிரந்தம் சூரியன் போல் பிரகாசித்து விசேஷமாய் முஸ்லிம்களுக்கும் பொதுவாய் ஏனையோருக்கும் அரும்பலனும் பிரயோசனமும் அளிக்கிறது. இதன் மகிமை பற்றிக் கூறப்பட்டுள்ளவை மிகப் பல. பொதுவாக ஹதீஸுக் கிரந்தங்களில் இதுவே மிகச் சிறந்தது. சுமார் மூன்று லட்சம் ஹதீஸ்களிலிருந்து 7275 ஹதீஸ்களைத் தேர்ந்தெடுத்துத் தான் புகாரி ஷரீபை இமாம் அவர்கள் இயற்றினார்கள்.


இது மட்டுமின்றி இன்னும் சுமார் இருபது கிரந்தங்கள் வரை இவர்கள் இயற்றியுள்ளார்கள். இவர்களிடம் ஒரு லட்சத்துக்கதிகமான சிஷ்யர்கள் கல்வி கற்றிருக்கிறார்கள். இமாம்களான முஸ்லிம், திர்மிதி போன்ற மாபெரும் மேதாவிகளும் இவர்களின் சீடர்களாவர்கள். இவர்களைப் புகழாத பெருந்தகையோர் எவருமிலர். கல்விச் செல்வம் மாத்திரமின்றி பொருட் செல்வமும் திருப்தியான முறையில் இவர்களிடமிருந்தன.


மெலிந்த உடலும், ஒற்ற உயரமும் உடையவராயிருந்தனர். நற்குணங்களே உருவெடுத்திருந்தார்கள். நல்ல அழகு வாய்ந்தவர்களாயும், கண்களில் கிருபை ததும்புபவர்களாயுமிருந்தனர். வாயினின்றும் அமுதமொழிகள் கமழும். தொழுகையில் நின்று விடுவார்களாயின் பக்தி மேலிட்டால் பரவசமாய் விடுவார்கள். இவர்களின் புத்தியின் கூர்மையும், அறிவின் நுட்பமும் யாவராலும் மதிக்கப்பட்டன. உண்மை, பொறுமை, விசுவாசம், சீவகாருண்ணியம், தாராளம், கொடை ஆகியவற்றால் புகழ் பெற்றவர்கள். தங்கள் செல்வத்தை இஸ்லாமிய தர்ம வழிகளிலும் ஹதீஸ் முதலிய மத கல்வியிலும், மாணவருக்காகவும் செலவழித்து வந்த கொடைவள்ளலாயுமிருந்தனர்.


புகாராவில் இறுதியாக இவர்கள் கல்வியூட்டி வந்தார்கள். இவர்களின் மகிமையிற் பொறாமை கொண்ட சிலர் அத்தேச அரசனிடஞ் சென்று ‘அரசே! தங்களின் அவையில் இமாம் புகாரி அவர்கள் நேரில் சமுகமளித்துப் புகாரியை வாசித்துக் காட்டுமாறு கூறுங்கள்’ என ஆலோசனை கூற அதற்கு அரசனும் இணங்கி அவ்விதம் கட்டளையிட்டான். அந்தச் சந்தர்ப்பத்தில் அரச அவை ஏறி கற்பிப்பது கல்விக்கு இழிவு எனக் கண்ட இமாமவர்கள், "அரசர் விரும்பினால் வழக்கமாய் ஓதல் நடத்தும் பள்ளிவாசலில் வந்து கேட்டுப் போகலாமே" எனக் கூறியனுப்பினார்கள். இதனால் கோபம் கொண்ட அரசன் இமாம் அவர்களைத் தனது நகரைவிட்டு வெளியேறும் படி உத்தரவிட்டான். உடனே அவர்கள் சமரகந்தைச் சேர்ந்த ‘குர்தங்க்’ எனும் கிராமம் வந்தடைந்தார்கள். அக்கிராமத்திலேயே ஹிஜ்ரி 256 இல் (கி. பி 865) ரமழான் இறுதி நாளில் தங்கள் 62 ஆம் வயதில் இறையடி சேர்ந்தார்கள்.


அல்லாஹ் அவர்களை பொருந்தி கொள்வானாக

தமிழ் பகுதி - இமாம்கள் வரலாறு - இமாம் புகாரி ரலியல்லாஹு அன்ஹு