MAIL OF ISLAM

Knowledge & Wisdom



இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு


பிறப்பு


எமது ஆத்மீக ஞான ஆசிரியர், சத்தியத்தின் வழிகாட்டி, அறிவுக்கடல், மாபெரும் சிந்தனையாளர், இஸ்லாமிய எழுத்துலக மாமன்னர், தத்துவ பேரறிஞர், ஆலிமே ஷரீஅத், இமாமே தரீகத், ஜமாலுல் இஸ்லாம், ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் அபூஹாமித் முஹம்மத் அல் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஹிஜ்ரி 450 ரபீயுல் ஆகிர் பிறை 27 (கி. பி. 1058) அன்று ஈரான் நாட்டில் “தூஸ்” என்னும் ஊரில் பிறந்தார்கள். இவர்களின் தந்தையார் முஹம்மது கியாமுத்தீன் கஸ்ஸாலி ஆவார்கள்.



கல்வி


இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் சிறு வயதிலேயே திருக்குர்ஆன், ஹதீஸ், பிக்ஹு, ஸுபியாக்களின் வரலாறுகள், ஸுபிக்கதைகள் ஆகியவற்றை கற்றார்கள். ஹிஜ்ரி 470 (கி. பி. 1077) இல் இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் நிஷாப்பூர் சென்று அங்கே புகழ்பெற்று விளங்கிய நிஜாமியா அரபிக்கல்லூரியில் மாணவராக சேர்ந்தார்கள்.


அங்கே ‘இமாமுல் ஹரமைன்” அபுல் மஆலி அல் ஜுவைனி (ரலியல்லாஹு அன்ஹு) என்ற பெரியாரிடம் மார்க்க கலை, தத்துவ கலை, தர்க்க கலை, மொழி ஆராய்ச்சி, இயற்கை விஞ்ஞானம், ஆத்மஞானக் கல்வி ஆகியவற்றை கற்று சிறந்த மார்க்க மேதையாக விளங்கினார்கள். இவற்றை கற்ற பிறகு மஃரிபா என்னும் ஆத்ம ஞானத்தை யூஸுப் அல் நஸ்ஸாஜ் (ரலியல்லாஹு அன்ஹு) என்ற பெரியாரிடம் கற்றார்கள்.



துறவு


ஹிஜ்ரி 488 (கி. பி. 1096) இல் பக்தாத்தை விட்டு சிரியா நாட்டுக்கு சென்று காடுகளிலும், மண்டபங்களிலும், தங்கி தியானத்திலும், தொழுகையிலும், நப்ஸை அடக்குவதிலும் ஈடுபட்டு துறவை மேற்கொண்டார்கள். இந்த நேரத்தில்தான் தனது உலக புகழ் பெற்ற மகத்தான நூலான “இஹ்யாவு உலூமித்தீன்” என்ற மாபெரும் கிரந்தத்தை எழுதினார்கள். பின்னர் மக்கா சென்று ஹஜ் செய்தார்கள். பிறகு காஹிரா, இஸ்கந்திரியா போன்ற ஊர்களுக்குச் சென்று வலிமார்களுடைய கப்ரு ஷரீபுகளை ஸியாரத் செய்தார்கள். அங்குள்ள தியான மண்டபங்களில் அமர்ந்து தியானம் செய்தார்கள்.



நூல்கள்


இவ்வளவு சிறப்புற்று விளங்கிய இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் திறமைகள் சிறு வயது முதல் வெளிவர தொடங்கிவிட்டது. அவர்கள் எழுதிய முதல் கிதாபு “கிதாபுல் மங்கூல்” ஆகும். இந்த கிதாபை தன்னுடைய ஆசிரியரிடம் காட்டியபோது, அதைப்பார்த்த ஆசிரியர், இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கூறினார்கள்: “நான் உயிரோடு இருக்கும் போதே என்னை நீங்கள் நல்லடக்கம் செய்து விட்டீர்கள். நான் மரணிக்கும் வரை காத்திருக்கக்கூடாதா? உங்களுடைய இந்த கிதாபு, நான் இதுவரை எழுதியவற்றை எல்லாம் இடம் தெரியாமல் ஆக்கிவிட்டது” என்று புகழ்ந்தார்கள். பின்னர் இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பாக்தாத்திலுள்ள நிஜாமியா கல்லூரியில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்கள். இவர்களின் பயான்களை அரசர்களும், தலைவர்களும், அமீர்களும், மாணவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து கேட்டார்கள். இவர்களின் பேச்சு எல்லோரின் மனதையும் கவர்ந்தது. இவர்களின் இஹ்யாவு உலூமித்தீனை உலகத்தில் பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் ஆர்வத்தோடு விரும்பி படித்தார்கள். ரிபாய் தரீக்காவின் ஸ்தாபகர் சுல்தானுல் ஆரிபீன் அஹ்மது கபீர் ரிபாயீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் “புர்ஹானுல் முஅய்யத்” என்ற நூலிலும், ஸுஹ்ரவர்த்தி தரீக்காவின் ஸ்தாபகர் இமாம் ஸுஹ்ரவர்த்தி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் எழுதிய “அவாரிபுல் மஆரிப்” என்ற நூலிலும் இஹ்யாவு உலூமித்தீனிலுள்ள கருத்துக்கள் பல காணப்படுகிறது. இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் மஃரிபா போதனையை பின்பற்றியே, ஷைகுல் அக்பர் முஹியித்தீன் இப்னு அரபி (ரலியல்லாஹு அன்ஹு) தமது நூல்களை எழுதியுள்ளார்கள். கௌஸுல் அஃலம் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் “குன்யதுத் தாலிபீன்” என்ற தனது நூலில் நாதாக்களின் ஆதாரங்களை கூறுவதைவிட அதிகமாக இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் நூல்களில் இருந்தே ஆதாரங்களை கூறியுள்ளார்கள். இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் நூல்கள் ஐக்கிய நாட்டு சபையின் கல்வி கலாசார பிரிவால் ஐரோப்பிய மொழிகளில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது என்பதன் மூலம் அவர்களின் சிறப்பை விளங்கிக் கொள்ளலாம். அவர்களின் நூற்றுக்கணக்கான நூல்களில் சில முக்கியமான நூல்களின் பெயர்கள் பின்வருமாறு:


உலக புகழ்பெற்ற இஹ்யாவு உலூமுத்தீன், மின்ஹாஜுல் ஆபிதீன், முன்கித் மினல் ழலால், கஸிதாவுத் தையா, முகாஷபத்துல் குலூப், கிதாபுல் அர்பயீன், அல் ஹிக்மத் – பி – மக்லூகத் தல்லாஹ், ரவ்லத்துத் தாலிபீன், அல் மஆரிபுல் அக்லியா, மிஷ்காத்துல் அன்வர், மீஸானுல் அமல், அர்ரிஸாலத்துல் லதுன்னியா, அல் துர்ரல் பகீராஹ், கீமியாயே ஸஆதத் போன்றவையாகும்.



நற்குணம்


இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கருணை உள்ளமும், தயாள குணமும், விருந்தினரை முக மலர்ச்சியோடு உபசரிக்கும் பண்பும் கொண்டவர்களாக விளங்கினார்கள். எவரையும் இழிவாக பேசுவதையும், புறம் பேசுவதையும் வெறுத்தார்கள். அவர்களிடம் பொறுமை குணம் அதிகமாக காணப்பட்டது. அறிவுக்கும், சிந்தனைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். இமாமவர்கள் அறிவைப்பற்றி கூறும்போது, “அறிவு ஒளிமயமானது, அது ஒளி தரக்கூடியது, மனிதனை ஒளிவுடையவனாக ஆக்கக்கூடியது” என்ற கருத்தை கூறுகிறார்கள். மேலும் சிந்தையின் சிறப்பைப்பற்றி கூறும்போது, “சிந்தனை என்பது சிறப்புக் குணம், மனிதன் சிந்தித்தால் எத்தனையோ விதமான அறிவுகளை மனிதன் பெற்றுக்கொள்ள முடியும்” என்ற கருத்தை கூறுகிறார்கள். எனவே இப்படிப்பட்ட அறிவு மாமேதையின் புத்தகங்களை நாம் வாசித்து பயன்பெற முயற்சிக்கவேண்டும்.



சிறப்புகள்


உலகமே அவர்களின் சிறப்பை உணர்ந்திருந்த போதும், சில மடையர்கள் அவர்களை குறை கூறிக்கொண்டு இருந்தார்கள். இவ்வாறு ஒரு அறிஞர் எந்நேரமும் இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் இஹ்யாவு உலூமித்தீனை குறை கூறிக்கொண்டே இருந்தார். ஒரு நாள் இஹ்யாவு உலூமித்தீன் கிதாபை கையில் எடுத்துக்கொண்டு தான் படித்து கொடுக்கும் மத்ரஸாவுக்கு வந்தார். தன் மாணவர்களை பார்த்து, “என் கையில் இருப்பது என்ன?” என்று கேட்டார். அதற்கு அந்த மாணவர்கள், “இஹ்யாவு உலூமித்தீன்” என்றார்கள். அதற்கு அந்த அறிஞர் கூறினார்: “நேற்று இரவு நான் ஒரு கனவு கண்டேன். அதில் இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் என்னிடம் வந்து, என்னை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் இழுத்துக் கொண்டு போய், “அல்லாஹ்வின் ரஸுலே! இவர் எனது நூலான இஹ்யாவு உலூமித்தீனை குறை கூறுகிறார். நான் அதில் நீங்கள் சொல்லாத ஒரு வார்த்தையாவது சொல்லி இருக்கிறேனா?” என்று கேட்டார்கள். அதற்கு எங்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள், ‘இல்லை’ என்று கூறிவிட்டு, நான் குறை சொன்னதற்காக எனக்கு 70 கசையடி கொடுக்க சொன்னார்கள்” என்று இதை கூறி விட்டு அந்த அறிஞர் தனது சட்டையை திறந்து காட்டினார். அவரின் உடலில் இரவில் பட்ட கசையடிகளின் தழும்பு அப்படியே இருந்தது. இதிலிருந்து இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் சிறப்பையும், கண்ணியத்தையும் உணர்ந்து கொள்ளலாம்.


மேலும் இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் சிறப்பை, மிகவும் அழகாக எடுத்துக்காட்ட ஷாதுலி தரீக்காவின் ஸ்தாபகர் இமாம் அபுல் ஹஸன் ஷாதுலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தான் கண்ட ஒரு அருமையான கனவை தெரிவிக்கின்றார்கள்:

“ஒருநாள் பைத்துல் முகத்தஸ் பள்ளியில் நான் தூங்கிக்கொண்டிருக்கும் போது ஒரு கனவு கண்டேன். பள்ளிவாசலின் வெளியே ஹரத்தின் நடுவில் சிம்மாசனம் ஒன்று போடப்பட்டிருந்தது. மக்கள் கூட்டம், கூட்டமாக அங்கு வந்து நின்றுக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் அந்த சிம்மாசனத்தை பார்த்தேன். அங்கே எங்கள் பெருமானார் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார்கள். அங்கே இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்), மூஸா (அலைஹிஸ்ஸலாம்), ஈஸா (அலைஹிஸ்ஸலாம்), நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) ஆகிய நபிமார்கள் அனைவரும் தரையில் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் பேசுவதை நான் கவனித்துக் கேட்டேன். ஸைய்யதுனா மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் “உங்கள் உம்மத்திலுள்ள உலமாக்கள் பனீ இஸ்ராயீல்களின் நபிமார்களை போன்றவர்கள் என்று கூறினீர்களே, எவ்வாறு” என்று கேட்டார்கள். உடனே எங்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் “இதோ” என்று இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை சுட்டிக் காட்டினார்கள். இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) தனது இடத்திலிருந்து எழுந்து பணிவோடு நின்றார்கள். அப்போது நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்கள். அதற்கு இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் 10 பதில்கள் அளித்தார்கள். உடனே நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் “நான் கேட்டதோ ஒரே ஒரு கேள்வி. ஆனால் உங்கள் பதிலோ பத்தாக இருக்கிறதே” என்று கூறினார்கள். அதற்கு இமாம் அவர்கள் சொன்னார்கள். “நீங்களும் இதைப்போன்று தானே செய்தீர்கள். “மூஸாவே உமது வலது கையில் இருப்பது என்ன?” என்று ஒரே ஒரு கேள்வியைத்தானே அல்லாஹ் அஸ்ஸவஜல் உங்களிடம் கேட்டான். அதற்கு இது என் கைத்தடி என்று ஒரே பதிலில் சொல்லி இருக்கலாமே! ஆனால் நீங்களோ இது என் கைத்தடி, இதன் மீது நான் சாய்ந்துக் கொள்வேன், இதன் மூலம் என்னுடைய ஆடுகளுக்கு இல்லை, குலைகளை பறிப்பேன், இன்னும் இதன் மூலம் எனக்கு பல பிரயோசனங்கள் இருக்கின்றது என்று பல பதில்கள் அளித்தீர்களே!” என்று இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பதில் கொடுத்தார்கள்.

(தப்ஸீர் ரூஹுல் பயான் பாகம் – 1, பக்கம் – 230)


இதிலிருந்து இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் சிறப்பையும் அறிவுக்கூர்மையையும் விளங்கிக்கொள்ளலாம்.

எனவே இத்தகைய அறிவு மாமேதையின் புத்தகங்கள் தமிழிலும் வெளிவந்துள்ளதால் நாமும் அவற்றை வாசித்து பயன் பெற முயற்சி செய்ய வேண்டும். குறிப்பாக நாம் இஹ்யாவு உலூமித்தீன் போன்ற நூல்களை வாசிப்பதன் மூலம் அறிவும், சிந்தனையும், நற்குணமும், ஒழுக்கமும் உண்டாகும்.


இத்தகைய சிறப்புக்குரிய இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு கொடுத்து அறிவைப் போன்று, ஒரு சிறிதளவாவது ஏழைகளான நமக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அஸ்ஸவஜல் தந்தருள்வானாக!


தமிழ் பகுதி - இமாம்கள் வரலாறு - இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு