MAIL OF ISLAM

Knowledge & Wisdom



இஸ்லாமிய குடும்பச்சூழல்


​​இன்றைய உலகில் இஸ்லாமியக் குடும்பச்சூழல் மிகவும் இன்றியமையாதது. ஒரு குடும்பம் இஸ்லாமின் அடித்தளத்தைக் கொண்டு கட்டப்பட்டால் அதிலுள்ள முஃமீன் செங்கல்கள் மிக வலுவானதாக, உறுதிமிக்கதாக இருக்கும். ஒரு குடும்பம் என்பது கணவன், மனைவி, குழந்தைகள், பெற்றோர் அடங்கியதாகும். குடும்ப வாழ்க்கையில் பிரதான பாத்திரங்கள் வகிப்பது கணவன் மற்றும் மனைவியே. குடும்ப வாழ்க்கை என்பது அல்லாஹ் மனிதனுக்குக் கொடுத்த ஒரு கொடையாகும். அதைத் தம்பதியினர் முழுமையாக இம்மைக்கும் மறுமைக்கும் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். "ஒரு குடும்பத் தலைவன், தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். குடும்பத் தலைவி தன் வீட்டிற்குப் பொறுப்பாளி ஆவாள்"(அபூஹுரைரா(ரலி)


கணவன் மனைவிக்கிடையில் புரிதலும் அன்பும் கருணையும் சகிப்புத்தன்மையும் மிக முக்கியம். "உலகம் அனைத்தும் இன்பமானது. அதில் தலைசிறந்தது நற்குணமுள்ள மனைவி" முஸ்லிம்) அழகுக்கும் பணத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் நற்குணமுள்ள பெண்ணைத் திருமணம் செய்யவே ஆண்கள் முன்வர வேண்டும். அப்படிப்பட்ட பெண்ணே கணவனிடம் அன்பும் பரிவும் காட்டுவாள். விட்டுக்கொடுத்து வாழ்க்கையை ஒளிமயமாக்குவாள். அதையேதான் மணமகனைத் தேர்வு செய்வதற்குப் பெண்ணும் அளவுகோலாகக் கொள்ள வேண்டும். மனஅமைதி பெறுவதே திருமணத்தின் உயரிய நோக்கமாகும். ஒருவர் மற்றவருக்கு விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். மனைவி கணவனுக்கு மனஅமைதியும் மகிழ்ச்சியும் இன்பமும் தருபவளாக விளங்க வேண்டும். கணவனும் தன் மனைவிக்குப் பாதுகாப்பும் நிம்மதியும் தருபவனாக இருக்க வேண்டும். நல்ல இல்லறத்திற்கு ஒருவர் மற்றவருக்கு எல்லா விஷயங்களிலும் துணை நிற்க வேண்டும். "உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காக, நீங்கள் அமைதி பெறுவதற்காகப் படைத்து, உங்களிடையே அன்பையும் கனிவையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்தித்துச் செயற்படும் சமுதாயத்திற்கு இதில் சான்றுகள் பல உள்ளன" (அல்குர்ஆன் 30:21).


தம்பதியர் ஒருவர் மற்றவரை நேர்வழியின்பால் துணைக்கு அழைப்பவராக இருக்க வேண்டும். ஒருவர் மற்றவருக்கு இபாதத்துக்களின் கதவுகளை திறக்க ஆசை காட்ட வேண்டும். நேர்வழியில் நடப்பதற்கு ஒருவருக்கொருவர் துணை நிற்க வேண்டும். பயான்கள் நடைபெறும் கூட்டத்திற்குத் தன்னுடன் குடும்பத்தாரை அழைத்துப் போகவேண்டும். குழந்தைகள் பயான் கேட்கும்போது படுத்தினால், முறை மாற்றி இருவரும் குழந்தைகளைக் கவனித்தும் பயான் கேட்டும் வரவேண்டும். அதில் நன்மைகள் ஏராளம். "ஒரு நேர்மையான மனைவியானவள் இந்த உலக வாழ்க்கையிலும் ஆன்மீகத் துறையிலும் (தன் கணவனுக்கு) உதவக்கூடியவளாக இருப்பாள். அத்தகையவளே ஒருவன் பெற்றுக் கொண்ட அருட்கொடையில் மிகப்பெரும் அருட்கொடையாகும்" (பைஹகி ).


இப்போதுள்ள இல்லறங்களில் நம்பிக்கையற்ற நிலையைப் பார்க்கிறோம். சண்டை சச்சரவுகளை அதிகம் கேள்விப்படுகிறோம். "உங்களில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவர்தான்" (அபூஹுரைரா(ரலி) -திர்மிதி).


அப்படிபட்ட சகிப்புத்தன்மையும் பொறுமையும் தம்பதியினருக்குத் தேவை.

மேலும் பல இஸ்லாமிய குடும்ப வாழ்க்கை சம்பந்தமான கட்டுரைகளை வாசிக்க : www.womanofislam.com