MAIL OF ISLAM

Knowledge & Wisdom



மரணத்திற்கு  அப்பாலும்  ஹயாத்துண்டா?


நபித்துவத்தையுடையவர்கள் மரணித்து மண்ணோடு மண்ணாகிப் போய் விடுவதில்லை! உடல்களும் நசிப்பதில்லை, ஜீவியத்தில் இருந்தது போலவே கபுரிலும் சடலம் கோர்வை குலையாமலிருக்கும்.


"அன்பியாக்களுடைய உடல்களைத் தின்பதை இறைவன் நிச்சயமாக பூமிக்கு ஹறாமாக்கிவிட்டான்" என்று நபிகரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திருவாய் மலர்ந்தருளியுள்ள ஹதீது அபூதாவூது - இபுனு மாஜா - பைஹகீ முதலிய ஸஹீஹான கிரந்தங்களில் காணப்படுகின்றது. ஆகவே, அவர்கள் ஜீவியத்தில் எப்படியிருந்தார்களோ அப்படியே, பூலோகத்தை விட்டு மறைந்த பின்பும் கபுரில் இம்மைக்கும் மறுமைக்கும் மத்தியிலுள்ள ஆலம் மிதாலாகிய பர்ஜகில் உலகமுடிவு நாள் வரை ஹயாத்தாகவே இருப்பார்கள்.


"அல்லாஹ்வுடைய பாதையில் (பீஸபீலில்) வெட்டப்பட்டவர்களை மவுத்தானவர்களென்று சொல்லாதீர்கள். அவர்கள் ஹயாத்தையுடையவர்கள். ஆனால், அறியமாட்டீர்கள்" (2:154) என்றும், ஆண்டவனுடைய பாதையில் வெட்டப்பட்டவர்களை மரணித்தவர்கள் என்று நினைக்கவும் வேண்டாம். ஆனால் அவர்கள் ஜீவனுள்ளவர்கள். ஆண்டவன் பக்கமிருந்து ரிஸ்கை கொடுக்கப் படுகிறார்கள், ஆனந்தமாக இருக்கிறார்கள் (3:169,170) என்றும் அல்லாஹுதஆலா குர்ஆன் ஷரீபில் திருவுளம் பற்றியுள்ளான்.


மேலே கண்ட ஆயத்திற்கு விளக்கமாக, முஷ்ரிக்குடன் யுத்தஞ்செய்து வெட்டப்பட்டு ஷஹீதானாலும் சரிளூ தம்முடைய நப்ஸுடன் ஆத்மார்த்திகப் போர் செய்து அதை வெட்டி வீழ்த்தினாலும் சரி, இரண்டுமே பீஸபீல்தான் என்று மெய்ஞ்ஞான சொரூபர், ஷைகுல் அக்பர், முஹ்யித்தீன் இபுனு அறபி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தங்களது தப்ஸீரீல் 1-வது பாகம், 137-வது பக்கத்தில் கூறியுள்ளார்கள்.


இவ்வாறே ஷைகு இஸ்மாயில் ஹக்கீ பரூஸீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தங்களது தப்ஸீர் ரூஹுல் பயானில் 2-வது பாகம் 126-வது பக்கத்திலும் சொல்லியுள்ளார்கள்.மேலும் இவ்வாறே தப்ஸீர் அறாயிஸுல் பயான், தப்ஸீர் ஹுஸைன், தப்ஸீர் அஸீஸீ ஆகியவற்றிலும் வருகின்றன. இவ்வாறாகவே, அல்லாமா காழீ தனாவுல்லா பானிபட்டீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களும் தஸ்கிரதுல் மவுத்தா-வல்-குபூரி என்னும் கிரந்தத்தில் கூறுகின்றார்கள். இவ்வாறாக அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதானவர்கள் தத்துவாதிகளைப் பொதிந்து ஜோதிவொளியில் ஐக்கியமாகிவிடுகிறபடியால் ஹயாத்துள்ளவர்கள் நாயனிடம் ரிஸ்கு-உணவு பெறுகிறார்கள். ஒரு இல்லத்திலிருந்து மறு இல்லத்திற்கு மாறுகிறார்கள். இதற்கிணங்க, தன் நபுஸின் பேரில் பீஸபீல் செய்து தன் நபுஸில் செலுகின்றவர்களின் ஹயாத்தானது மவுத்தில் ஹயாத்தாய், ஒளியோடு ஒளியாய் சேர்ந்துக் கொள்வதாய் சொல்லப்படுகிறது.


ஒரு சமயம் நபிகள் கோமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தபூக்கு யுத்தத்தில் வெற்றி பெற்று ஜெயபேரிகையுடன் ஸஹாபாக்கள் சகிதம் மதீனா நகருக்குள் நுழைந்த போது, சிறிய போரிலிருந்து பெரிய போர் அளவில் மீண்டுள்ளோம் என்று கூறினார்கள். உடனே, ஸஹாபாக்கள், யாரஸுலல்லாஹ்! இப்போது பீஸபீல் செய்து திரும்பினோம். இதைவிட பெரிய பீஸபீல் யாது என்று வினவ, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபுஸுடன் போராடுவதுதான் பெரிய (பீஸபீல்) போராட்டம் என்று விடையளித்தார்கள். இந்த ஹதீது பைஹகீ, இஹ்யா உலூமித்தீன், தப்ஸீர் ரூஹுல் பயான் ஆகியவற்றில் காணப்படுகின்றது.


அல்லாஹ்வுக்கு வழிபட்டு தன்னுடைய நபுஸுடன் போர் புரிபவர் எவரோ, அவரே வீரர் என்ற ஹதீதும் மிஷ்காத்தில் காணப்படுகின்றது. எனவே, பீஸபீலில் போர்புரிந்து உயிர்த் தியாகம் செய்த ஷுஹதாக்களும், நபுஸுடன் போர் தொடுத்து வெற்றியடைந்த மகானுபாவர்களும் மவுத்திற்குப் பின்பும் ஹயாத்தை உடையவர்கள் என்பது குன்றின் மேலிட்ட தீபம் போல தெரியக் கிடக்கின்றது. இந்த அஸ்திவார அடிப்படையிலே மையித்துகள் கேட்கின்றன- பார்க்கின்றன- சுற்றத்தாரையும் அன்பர்களையும் அறிகின்றன - ஸலாமுக்குப் பதிலும் சொல்கின்றன என்னும் விஷயங்கள் பற்றி ஹதீதுகள் பலவற்றைக் குறிப்பிட்டு, இமாம் ஸுயூத்தி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஷரஹுஸ்ஸுதூரில் விரிவாக எடுத்துரைத்துள்ளார்கள். இதுவே ஸுன்னத்து வல்ஜமாஅத்தாரின் ஏகோபித்த அகீதாவெனும் கொள்கையாகும். மையித்துக்கு உணர்வு இருப்பதால்தான் மவுத்துக்குப் பிறகும், கபுரில் (ஆலம் அஜ்ஸாமுக்கும் ஆலம் அர்வாஹுக்கும் இடையே ஆலம் பர்ஜக்கில்) கேள்விகளும், பாவபுண்ணியங்களுக்குத் தக்க பலாபலன்களும் ஏற்படுகின்றன. அவற்றிற்கு அத்ததைய உணர்ச்சிகள் இல்லை எனின் நன்மை தீமைகளுக்குள்ள பலாபலனை, சுகதுக்கத்தை எவ்வாறு அவை அனுபவித்தறிய முடியும்?


மரணத்திற்குப் பிறகு, கல் கரடுகளைப் போல் கேட்டறிய சக்தியில்லை என்று எண்ணுவது ஷீயா, முஃத்தஸிலா, கவாரிஜியா  போன்ற வழிகெட்ட கூட்டத்தார்களுடைய கொள்கையாகும். மையித்து செவியேற்காது என்று கூறுகிறவன் மடையனும் (ஜாஹிலும்) வழிகெட்டவனும் (முல்ஹிதும்) ஆவான். என்பதாய் நான்கு மதுஹபுகளையுடைய ஸுன்னத் வல் ஜமாஅத்து உலமாக்கள் அனைவரும் ஏகோபித்துக் கூறியுள்ளனர்.


பத்ரு யுத்தத்தில் மரணித்த குப்பார்களுடைய பிரேதங்கள் குவிக்கப்பட்டிருந்த இடத்திற்கு, போர் ஓய்நத பின்பு நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்று அங்கு நின்று கொண்டு அப்பிரேதங்களை நோக்கி எங்கள் நாயன் கூறிய வாக்குறதியை நாங்கள் உண்மையாகப் பெற்றுக் கொண்டோம். உங்கள் நாயன் கூறிய வாக்குறுதியை நீங்கள் உண்மையாகப் பெற்றுக் கொண்டீர்களா? என்று கேட்டபோது அங்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடனிருந்த உமர்பாறூக் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் யாறஸுலுல்லாஹ்! மரணமடைந்தோர் எங்ஙனம் தங்கள் வார்த்தைகளைக் கேட்பார்கள்?, என்று வினவினார்கள். அதற்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களை விட அவர்கள் நன்றாகக் கேட்பார்கள். உங்களுக்கு வெளிக்காது உண்டு. அவர்களுக்கு ஆன்மார்த்தச் செவியுண்டு, அதனால் அவர்கள் எல்லாவற்றையும் கேட்கிறார்கள் என்பதாக விடையளித்தார்கள், என்று ஸஹீஹ் முஸ்லிம் கிரந்தத்தில் வருகின்றது.


மையித்து உனது பாதரட்சையின் சப்தத்தையும் கூட கேட்கின்றது என்பதாக ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், அபூதாவூது, நஸயீ ஆகிய கிரந்தங்களில் வந்திருக்கின்றது.


இது சம்பந்தமாக அநேகமான ஹதீதுகளை குறிப்பிட்டு அதிவிரிவாக, ஷரஹுஸ்ஸுதூர் பீஷரஹில் மவுத்தா வல் குபூர் என்ற நூலில் இமாம் ஸுயூத்தி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்.


உதாரணத்திற்காக சில நிகழ்ச்சிகளை இங்கு கூறுவது பொருத்தமெனக் கருதுகின்றோம்.


நபி பிரான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருவரை இஸ்லாத்தின் பால் அழைத்த போது அவர், குழந்தைப் பருவத்தில் இறந்து போன தனது மகளை உயிர் பெறச் செய்தால் ஈமான் கொள்வதாகக் கூறினார். அக்குழந்தையின் கபுருக்குச் சென்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அக்குழந்தையைக் கூப்பிட்டு அழைத்தார்கள். உடனே அக்குழந்தை, அடிபணிந்தேன் என்று மறுமொழி கூறியது. திரும்பி உலகுக்கு வரக்கூடிய எண்ணமுண்டா என்று கேட்டார்கள். அல்லாஹ்வுடைய றஸுலே! ஆண்டவன் மீது சத்தியமாக எனக்கு அத்தகைய எண்ணமில்லை. இம்மையை விட மறுமையையே மேலாகக் காண்கிறேன் என்று பதில் கூறியது. இவ்வரலாற்றை இமாம் பைஹகீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தலாயிலில் சொல்வதாய், ஹுஜ்ஜதுல்லாஹி அலல் ஆலமீன் 422-வது பக்கத்தில் அல்லாமா ஷெய்கு யூசுபுன்னபஹானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு கூறுகின்றார்கள்.


நபிமார்கள் ஜீவனுள்ளவர்களாக இருக்கின்றார்கள், அவர்கள் கபுருகளில் (பர்ஜகில்) தொழுது கொண்டுமிருக்கிறார்கள் என்று அனஸ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கொண்டு பைஹகீ ஹதீதுக் கிரந்தத்தில் ரிவாயத்துச் செய்யப்பட்டுள்ளது.(உதாரணம்) மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செம்மை நிறமான மேட்டின் மீதுள்ள கபுரில் நின்று தொழுது கொண்டிருந்ததை மிஃராஜ் உடைய இரவில் றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டார்கள் என்ற ஹதீது அனஸ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கொண்டு ஸஹீஹ் முஸ்லிம், நஸயீ கிரந்தங்களில் ரிவாயத்துச் செய்யப் பெற்றிருக்கிறது.


நபிமார்கள், ஷுஹதாக்கள், அவுலியாக்கள் ஆகியோர் ஹயாத்துள்ளவர்கள். அவர்களுடைய கபுருகளில் அவர்கள் தொழுது கொண்டும், ஹஜ்ஜு செய்து கொண்டும் இருக்கின்றார்கள். இங்ஙனம் ஸஹீஹான ஹதீதுகள் வந்திருக்கின்றன என்பதாய் இமாம் றமலீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு கூறுவதாக, அல்லாமா இமாம் ஷெய்கு சுலைமானுல் ஜமல் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அல்புதூஹாத்துல் அஹ்மதிய்யா 90-வது பக்கத்திலும் அல்லாமாசதிக்கு ஹஸனுல் அதவி மிஸ்ரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் மஷாரிகுல் அன்வார் 67-வது பக்கத்திலும், அல்லாமா ஷைகு யூசுபுன் னபஹானீ மிஸ்ரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு ஷவாஹிதுல் ஹக்கு 69-வது பக்கத்திலும் வரைகின்றார்கள்.


(உதாரணம்): மக்கா, மதீனாவுக்கிடையே நபி கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்று கொண்டிருக்கையில், மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காதில் கையை வைத்து தல்பியாச் சொல்லிக் கொண்டு அர்ஜுக் ஓடையைக் கடந்து சென்று கொண்டிருந்ததைப் பார்த்ததாகவும், அவர்களது நிறம், முடியின் இலட்சணம் பற்றியும் விபரித்துள்ளார்கள்.


மேலும் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கம்பளி ஜிப்பாவுடன் சென்னிற ஒட்டகையில் ஷாஷாலுப்த் என்னுமிடத்தில் ஓடையைக் கடந்து சென்று கொண்டிருப்பதைக் கண்டதாயும் ஒட்டகையின் மூக்கணாங்கயிறு பேரீத்த மரத்தின் நாரினால் செய்யப்பட்டிருந்தது என்றும் திருவுளம் பற்றியுள்ளார்கள். இந்த ஹதீது இபுனு அப்பாஸ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கொண்டு ஸஹீஹ் முஸ்லிமில் ரிவாயத்துச் செய்யப்படுகின்றது.


அல்லாஹ்வுடைய அவுலியாக்கள் நிச்சயமாக மரிப்பதில்லை. ஆனால் ஓர் இல்லத்திலிருந்து மறு இல்லத்திற்குச் செல்கிறார்கள். என்ற ஹதீதை, ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் இமாம் முஹம்மது கஸ்ஸாலீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அர்பயீன் ஹதீது என்ற நூலிலும், இமாம் பக்ருத்தீன் றாஜீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தப்ஸீர் கபீர் 3-வது பாகம் 95-வது பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளார்கள்.


(உதாரணம்): பிரபல்யமான வலியுல்லாஹ் அபூஸயீது கர்ராஜ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் மக்காவிலிருந்த காலத்தில் ஒரு வாலிபரின் மையித்து பனூஷைபா வாசலில் இருந்தது. அதை அவர்கள் உற்றுநோக்கினார்கள். அபூஸயீதே! ஆண்டவனுடைய நேசர்கள் ஜீவனுள்ளவர்கள். அவர்கள் ஓரில்லத்திலிருந்து மறு இல்லத்திற்கு செல்வதே மரணமாகும் என்பதை அறியவில்லையா? என்பதாய் அந்த மையித்து சிரிப்புடன் சொல்லிற்றாம். இந்நிகழ்ச்சியை இமாம் ஜலாலுத்தீன் ஸுயூத்தி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஷரஹுஸ்ஸுதூர் 86-வது பக்கத்தில் கூறுகின்றார்கள்.


ஸுபிய்யாக்கள் (அவுலியாக்கள்) மவுத்தாவதில்லை. எனினும் மனிதர்களுடைய வெளிரங்கமான பார்வையை விட்டும் மறைகிறதேயல்லாது வேறில்லை. ஏனெனில் அவர்களையும் மவுத்தானார்களென்று சொல்வதற்காகவே. முஷாஹிதீன், முஹக்கிகீன்களுடைய உடல்களும் கோர்வை குலையாது. குத்ஸியான ரூஹ் நிச்சயமாக ஒருபோதும் அழியாது. இது போல் கியாமத் வரை ஹயாத்தும் அழியாது. இத்தகைய ஹயாத்தும் ரூஹும் உடைய கபுரில் (ஆலமுல்பர்ஜகில்) ஜீவனுள்ளவர்களாகவே இருப்பர். அவர்களுடைய திரேகம் உலகிலிருந்தது போலவே இருக்கும். இப்பதவியுடையவர்கள் அந்தரங்கமான ஹயாத்துடனே இருப்பார்கள், ரூஹுல் குதுஸியுடனுமிருப்பார்கள். மரணித்திற்கப்பாலும் பூமியில் நடந்து திரிவார்கள். அவ்வமயம் எந்த மனிதரும் அவர்களைக் காண்பார்கள். அவர்களுடன் பேசிக் கொள்ளவும் செய்வார்கள். அவர்களை இன்னாரென தெரியவராது. அவர்கள் நாடின போதெல்லாம் கபுரில் மறைந்து விடுவார்கள். அவர்களுடைய திரேகத்தை மண், புழு, பூச்சி, ஐவா மிருகம் எதுவுமே தின்னாது. ஆதிமுதல் அந்தம் வரையில் ஹயாத்து. ரூஹு, ஜிஸ்மு இம்மூன்றுடனும் இறுதிநாள் வரையிலிருப்பார்கள். அவர்கள் புவியிலிருக்கையில் உந்தியின் கீழிருந்து மூச்செழும்பி மூளைக்கேறி வெளிப்படுவது இயற்கை. கபுரில் இயற்கைக்கு மாற்றமாகவே, மூச்சு மேலிருந்து கீழ்நோக்கிச் செல்லும். இதனால் யாக்கையழியாது (வயிற்றிலிருக்கும் சிசுக்களுக்கும், சொர்க்கவாதிகளுக்கும் இவ்வாறே) கபுரில் ஜீவனைப் பெற்றவராயிருந்தால் ஜீவனுக்குள்ள இலட்சணங்கள் ஒன்றுமே குறையாது என்பதாக மிர்அத்துல் முஷாஹிதீனில் சொல்லப்பட்டுள்ளது.


வலியுடைய கபுரை ஒருவர் ஸியாரத்துச் செய்தால் அவரை அந்த வலி அறிவார். அவர் ஸலாம் சொன்னால் வலி அதற்குப் பதில் சொல்வார். அவருடைய கபுருக்கு அருகாமையாக ஒருவர் திக்கு செய்தால் அந்த வலியும் சேர்ந்து திக்ரு செய்வார். லாஇலாஹ இல்லல்லாஹு எனும் திக்ரைச் செய்தாலோ அந்த வலி சம்மனங் கொட்டி உட்கார்ந்து திக்ரு செய்பவருடன் சேர்ந்து திக்ரு செய்வார். அவுலியாக்கள் மவுத்துக்குப் பிறகும் ஹயாத்துப் பெற்றவர்களே. மவுத்தின் மூலம் அவர்களை ஒரு வீட்டை விட்டு மறு வீட்டளவில் திருப்பப் பட்டிருக்கிறது. ஹயாத்தில் அவர்களை சங்கை செய்வது போல் மவுத்திலும் சங்கை செய்யவேண்டும். ஒரு வலி மவுத்தானால் அன்னார் பேரில், அன்பியா அவுலியாக்களுடைய அர்வாஹுகள் தொழும் என்பதாக குத்பு றப்பானீ, இமாம் அப்துல் வஹ்ஹாபு ஷஃரானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தபகாத்துல் குப்ரா பாகம் 2 பக்கம் 65ல் கூறுகின்றார்கள்.


ஸியாரத்துச் செய்ய மிகவும் ஏற்றமான நாள் திங்கள், வியாழன், வெள்ளி, சனி இந் நான்குமாக இருக்கும். ஜும்ஆத் தொழுகைக்குப் பின்பு ஸியாரத்துச் செய்வது மிகவும் சிறப்பானதாகும் என்று பதாவா ஆலம்கீரியில் வந்துள்ளது.


மவுத்தானவர்கள் வெள்ளிக்கிழமை இரவிலும், வெள்ளிக்கிழமை முழுநேரங்களிலும், சனிக்கிழமை, காலையிலும், எந்த நேரங்களிலும் ஜியாரத்து செய்பவர்களை அறிவார்கள். இதற்காக அந்நேரங்களில் ஸியாரத்துச் செய்வது முஸ்தஹப்பாகும் என்பதாக மஷாரிகுல் அன்வாரில் வந்துள்ளது.மவுத்தானவர்கள் ஸியாரத்துச் செய்யக் கூடியவரை அறிவார்கள், பேச்சையும் கேட்பார்கள் எனறு ஹதீதுகளின் மூலம் அறியப்பட்டிருக்கிறது என்பதாயும் மஷாரிகுல் அன்வாரில் சொல்லப்பட்டுள்ளது.மையித்தானது தன்னைக் குளிப்பாட்டுபவர்களையும் சுமந்து செல்பவர்களையும், கபுருக்கு முடுகி நிற்பவர்களையும் அறிவார்கள் பேச்சுக்களையும் கேட்பார்கள் என்று பதாவா குப்ராவில் தலீல் அத்தாட்சிகளுடன் நகல் செய்யப்படுகிறது. மேலும் இவ்வாறே ஷரஹுஸ்ஸுதூரிலும், ஷரஹுபர்ஜகிலும் விரிவாக நகல் செய்யப்பட்டுள்ளது.


ஷைகுல் அக்பர் முஹ்யித்தீன் இபுனு அரபி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் வபாத்தான பிறகு அவர்களே தங்களது வீட்டிற்கு வந்தார்கள். தங்களது வெள்ளாட்டியைக் கண்டு அவளது சுக செய்திகளையும் நிலைமைகளையும் விசாரித்தார்கள். எல்லா விஷயங்களையும் அவள் சவிஸ்தாரமாக எடுத்துக் கூறினாள். அவர்கள் அவளிடமிருந்து விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து சென்றார்கள் என்பதாக புஸுஸுல் ஹிக்கம் உடைய ஷரஹில் இமாம் ஷைகுஜுந்தி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கூறுவதாக ஸஆதத்துத் தாரைன் 402-வது பக்கத்தில் வரையப்பட்டுள்ளது.


அவுலியாக்களுக்கு ஆண்டவனால் அருளப்பட்டிருக்கும் கறாமாத்து அதிசயத்தின் பொருட்டால் ரூஹானியத்தான சக்தியைக் கொண்டு ஹயாத்திலும் மவுத்துக்குப் பிறகும் அவர்கள் வெளிப்பட்டு உலகில் நடமாடும் சக்தியுண்டு என்பதாக இமாம் ஜலாலுத்தீன் ஸுயூத்தி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அல்கபருத்தால்லு அலா-வுஜுதில் குத்பி வல் அப்தால், என்ற நூலிலும், இமாம் ஸெய்யிது ஷஹாபுத்தீன் அஹ்மது ஹுஸைனீ ஹமவீ ஹனபீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் நபஹாத்துல் குர்பிவல் இத்திஸால், என்ற நூலிலும் கூறுகின்றார்கள்.


அவுலியாக்களில் பெரும்பாலோர் வபாத்துக்குப் பிறகும் கபுருகளிலிருந்து புறப்பட்டு வெளியே போகவும் செய்கிறார்கள். திரும்பவும் கபுருக்குள் மீளவும் செய்கிறார்கள். போகவர அவர்களுக்கு எத்தகைய தடையுமில்லை என்பதாக அல்குத்பு இமாம் ஷஃறானி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் லத்தாயிபுல் மினன் 1-வது பாகம் 144-வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள்.


நபிகரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தங்களது மவுத்தாகிப் போன ஸஹாபாக்களின் அர்வாஹுகள் சகிதம் எல்லா உலகங்களையும் சுயேச்சையாகச் சுற்றி வருவதை அவுலியாக்கள் கண்கூடாகக் கண்டிருக்கின்றார்கள் என்பதாக இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஆதாரத்துடன் கூறுவதை, தப்ஸீர் ரூஹுல் பயான் பாகம் 10, பக்கம் 99ல் காணலாம்.


இதற்காதாரமாக வபாத்துக்குப் பிறகு நிகழ்ந்த சில சம்பவங்களைக் காண்க:இமாம் அப்துல் வஹ்ஹாபு ஷஃரானி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஸியாரத்துச் செய்வதற்காக ஸெய்யித் உமர் இபுனு பாரிலு ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுடைய கபுரு ஷரீபுக்குச் சென்றபோது அங்கு அவர்களைக் காணாதபடியால் திரும்பிவிட்டார்கள். பிறகு உமர் இபுனு பாரிலு ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் இமாம் ஷஃரானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு இடம் சென்று தேவையை முன்னிட்டு வெளியே சென்றிருந்ததாகத் தெரிவித்து மன்னிப்புக் கோரியதாக இமாம் ஷஃறானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களே தங்களுடைய ஷலதாயிபுல் மினன் 1-வது பாகம் 144-வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள். ஸெய்யிது ஷைகு அப்பாஸ் முர்ஸீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களை சனிக்கிழமை சூரியோதயத்திற்கு முன்னும், ஸெய்யிது இபுறாஹிமுல் அஃரஜ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களை வெள்ளிக்கிழமை மக்ரிபுக்குப் பின்பும் ஸெய்யிது யாக்கூத்துர் அர்ஷீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைச் செவ்வாய்க்கிழமை லுஹருக்குப் பின்பும் அவரவர்களுடைய கபுருக்குச் சென்று ஸியாரத்துச் செய்யும் படியும் அவர்களெல்லோரும் குறிப்பிட்ட அந்த நேரங்களில் தான் கபுரில் ஆஜராயிருப்பார்களென்றும், இவ்வுண்மையை அகக்கண்ணை உடையவர்களைத் தவிர மற்றெவரும் அறியமாட்டார்களாகையால், கபுருகளில் அவர்கள் இருக்கவே செய்கின்றார்கள் என்ற எண்ணத்துடன் கஷ்பில்லாதவர்கள் செய்யவேண்டுமென்றும் ஸெய்யிது அலி பதவி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் உபதேசித்திருப்பதாக மேற்சொன்ன லாதயிபுல் மினன் அதே பக்கத்தில் வரையப்பட்டுள்ளது.ஆகவே, இறப்பு என்பது அழிவுக்குரியதன்று. சில படித்தரங்களைக் கொண்ட ஐடதத்துவ மாறுதலாகும் - ஒரு நிலையிலிருந்து மறு நிலைக்கு முன்னேறிச் செல்வதாகும். ஏனெனில், ஆத்மா அழிவில்லாதது. இறப்பும் பிறப்புமற்ற நிலையிலுள்ளது.


இமாம் கஸ்ஸாலீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கீமியாயே-ஸஆதத் பீடிகையில் குறிப்பிடும். மனுஷ்ணன் அனாதியல்லனாயினும் முடிவற்றநித்தியன் எனும் பொன் மொழியிலிருந்து, மரணத்தோடு மனிதனின் வாழ்க்கை முடிவடைந்து விடவில்லை என்ற உண்மை வெளியாகின்றது. நிர்யாணத்தினின்று ஒரு புதிய வாழ்க்கை உதயமாகி அது என்றும் அழியா நித்தியமாய் நின்று நிலவத் தொடங்குகிறது. ஜடவுலகத்தைப் பற்றி நிற்கும் பூததேகத்தின் சுகபோக இன்பங்களின் வாசல் அடைபட, சகல நுகர்ச்சிகளையும் அந்தரங்கத்திலிருந்து அனுபவித்து வந்த அந்த மனுஷ்யன் என்ற சுயம்பொருள் சூட்சமமாய்க் கிரியை புரிய சக்தி பெறுகின்றது. பிணி, மூப்பு, தளர்ச்சி, இயலாமை முதலிய தங்கட, சங்கடமின்றி மறதியற்ற முழுமனிதப் பண்பும் அவனில் அமைந்து காணப்படுகின்றது.


இவ்வுலகில் சஞ்சரித்து வந்தது போலவே எல்லாவிதமான புலன்களும் வதியத்தக்க யோக்கியதையுடையவனாய் ஆகும் போது தேகமும் அவற்றைத் தொடர்ந்தே நிற்கும். இம்மையில் பூத குணத்தின் மிகைப்பால் ரூஹு உடலுக்குள் மறைந்து காணப்படுவது போல, மறுமையில் ரூஹானிய்யத்தின் மிகைப்பால் தேகம் ரூஹுக்குள் மறைந்து காணப்படும். ஹிஸாபு என்ற கேள்வி கணக்கிற்கும், பாவ புண்ணியத்திற்கேற்ற பலா பலன்களுக்கும் இத்தேகமே பொறுப்பாக விளங்கும்.


அல்லாஹ்வின் சிருஷ்டிகளுள் எனது ஜோதியே முதன்மையானது என்று பெருமானார் நபிகரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ளார்கள். எனவே, ஒளிவாகிய நூர் என்னும் ஒரே அஸ்திவாரத்திலான உயிர்-உடல் என்ற இவ்விரு வஸ்துக்களும் ஒன்றோடொன்று ஐக்கியப்பட்டு மறைவதும், வெளிப்படுவதும் ஆன்ம சக்திமிக்கப் பெரியாரிடத்து அதிசயிக்கத்தக்க கருமமன்று.


அவுலியாக்களிடத்தில் ஸ்தூலத்திற்கும், சூட்சுமத்திற்கும் மத்தியில் பிரமாதமான வித்தியாசம் ஒன்றுமில்லை. சூட்சுமத்துள் ஸ்தூலம் அடங்குவது அன்னாரிடத்தில் ஒரு பெரிய கருமமன்று. அல்லாஹ்வின் மெய்யடியாரான அவுலியாக்கள், தாங்கள் சிருஷ்டிகளின் பார்வையிலிருந்து மறைய நாடும் போது மரணம் என்ற போர்வைக்குள் புகுந்து கொள்வதும், அடக்கம் செய்யப்பட்ட பின் ஸ்தூலத்தை சூட்சுமத்துள்ளடக்கி கபுருகளிலிருந்து வெளியே புறப்படுவதும் அன்னவர்களுக்கு எளிதான கருமமாகும். ஆண்டவன் அவர்களுக்கு அத்தகைய தத்துவத்தைக் கொடுத்துள்ளான். இத்தியாதி காரணங்களைக் கொண்டு மரணத்திற்குப் பின்னும் அவுலியாக்கள் ஜீவனுள்ளவர்கள், அழியாத தேகத்தை உடையவர்கள் கிரியைகள் புரியும் சக்தியுடையவர்கள் எனத் தெரிய வருகின்றது. அடியிற்கண்ட நிகழ்ச்சிகளே இதற்குப் போதிய சான்றுகளாகும்.


ஹஜ்ரத் கிலுரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள், இமாமுல் அஃலம் அபூஹனீபா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களது வஃளு மஜ்லிசுக்குத் தினந்தோறும் காலை வேளையில் ஆஜராகி ஷரீஅத்துடைய இல்முகளைக் கற்று வந்தார்கள். இமாம் அவர்கள் வபாத்தான பிறகு அந்த மஜ்லிசு நடைபெறவில்லை. கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆண்டவனது உத்தரவு பெற்று, ஹயாத்தில் நடந்தது போலவே மவுத்துக்குப் பின்பும் இமாமுல் அஃளம் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களது கபுரு ஷரீபுக்கு ஒவ்வொரு காலையிலும் சென்று, ஷரீஅத்துடைய இல்முகளைக் கேட்டுவந்ததாக இமாம் இபுனு ஜவ்ஸீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கொண்டு ஷபதாயிஉ எனும் பிக்ஹுக் கித்தாபில் வருகிறதாக ஷைகு ஹஸனுல் அதவீ மிஸ்ரி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் மஷாரிக்குல் அன்வார் 69-வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள்.


நான்கு மதுஹபுடைய இமாம்களுள் ஒருவராகிய அஹ்மது இபுனு ஹம்பலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களது ஸியாரத்திற்குச் சென்ற குத்பு றப்பானீ கௌதுஸ்ஸமதானீ, முஹிய்யித்தீன் அப்துல் காதிரு ஜீலானி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அன்னாருடைய கபுறு ஷரீபுக்கெதிரே, அதபுடன் நின்று, அஸ்ஸலாமு அலைக்கும் யாஇமாமல் கிராம் (சங்கைக்குரிய இமாம் அவர்களே) என்று அழைத்து ஸலாம் சொன்னார்கள். உடனே, கபுரு ஷரீபு இரண்டாகப் பிளந்தது. இமாம் அவர்கள் ஜோதிப் பிரகாசத்தோடு வெளியே பிரசன்னமாகி கௌதுல் அஃளம் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கட்டித் தழுவி ஆலிங்கனஞ் செய்தார்கள் நூரானீயான பரிவட்டத்தைப் போர்த்தி, ஸெய்யிது அப்துல் காதிரே, ஷரீஅத்துடைய இல்முகளும், ஹகீகத்துடைய இல்முகளும் தங்கள்பால் ஹாஜத்தாகின்றன, என்று பகர்ந்து விடைபெற்று மறைந்தார்கள். இச்சம்பவம் ஷபஹ்ஜத்துல்-அஸ்றாரு கிரந்தத்தில் அறிவிப்பு செய்யப்பட்டிருப்பதாய் ஷதப்ரீஜுல்காத்திர் 40-வது பக்கத்திலும், ஷபஸ்லுல் கிதாபு 129-வது பக்கத்திலும் ஹள்ரத் ஷெய்கு அப்துல்ஹக் முஹத்திதுத் திஹ்லவி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் ஷஜுப்ததுல் அஸ்றார் நூலிலும் காணப்படுகின்றது.


குத்புஸ்ஸமான், இமாம் அப்துல் வஹ்ஹாபு ஷஃறானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்:-

நான் எனது குருநாதர் (உஸ்தாது) ஹஜ்ரத் ஸெய்யிது முஹம்மது ஷனாவி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுடன் அல்குத்புஷ்ஷஹீர், ஸெய்யிது அஹ்மது பதவி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களது தர்காவுக்கு ஸியாரத்திற்காகச் சென்றிருந்தேன். அவ்வமயம் எனது உஸ்த்தாதவர்கள் கபுரு ஷரீபை முன்னோக்கி, நாயகமே! இன்ன காரியத்தை முன்னிட்டு மிஸ்ருக்குப் போகப் பிரயாணமாயிருக்கிறேன். விடை கொடுத்தனுப்புங்கள் என விண்ணப்பித்து நின்றார்கள். அல்லாஹ்வின் மீது தவக்கல் வைத்தவராய் போய் வருக என்ற நல்வாக்கு கபுருக்குள்ளிருந்து வெளிவந்த சப்தத்தை எனது வெளிரங்கமான இரு காதுகளைக் கொண்டும் நன்கு கேட்டேன் என்பதாக. இவ்வரலாற்றை இமாம் ஷஃறானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் லதாயிபுல் மினன் 1-வது பாகம், 180-வது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.


அமீருல் முஃமினீன், ஸெய்யிதுனா அபூபக்கர் ஸித்தீக்கு ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் வபாத்தாகும் போது, என்னுடைய ஜனாஸாவை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய முபாரக்கான அறையின் முன்னால் வையுங்கள். கதவு திறக்கப்பட்டு, அபூபக்கரை உள்ளே கொண்டு வாருங்கள் என்று உத்தரவு வந்தால் மட்டில் அவ்வறையிலேயே அடக்கம் செய்யுங்கள். இன்றேல், பொதுக்கபுருஸ்தானத்தில் அடக்கி விடுங்கள் என்று வஸிய்யத்துச் செய்திருந்தார்கள். அவ்வாறே செய்யப்பட்டது. பூட்டப்பட்ட அறைவாயிலின் முன்பு ஜனாஸாவை வைக்கப்பட்டபோது, வாயில் கதவு தானாகவே திறந்து கொண்டது.தோழரைத் தோழரிடம் அனுப்பி வையுங்கள் என்ற உத்தரவு புனிதர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது ரவுளா ஷரீபிலிருந்து வெளிவந்தது. அவ்விதமே அங்கு அடக்கப்பட்டார்கள். இவ்வரலாற்றை இமாம் பக்ருத்தீன் றாஜீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தப்ஸீர் கபீர், 5-வது பாகம் 685-வது பக்கத்தில் கூறுவதாய் தப்ரீஹுல் அத்கியா பீ-அஹ்வாலில் அன்பியா, பாகம் 2, பக்கம் 376-ல் வரையப்பட்டுள்ளது.


இத்தகைய நிகழ்ச்சிகள், ஆதாரங்கள் இன்னும் எவ்வளவோ காண்பிக்கலாம். உலகத்தார் யாவரும் ஏற்றிருக்கும் இமாம்கள் சம்பந்நதபட்டவற்றையும், அவை பற்றிய அங்கீகரிக்கப்பட்ட (முஃத்தபரான) ஆதாரப்பூர்வமான கிரந்தங்களையுமே ஆதாரங்களாகக் காண்பித்துள்ளோம். அன்பியா, அவுலியாக்கள் மவுத்துக்குப் பின்பும் ஹயாத்துள்ளவர்கள் என்பதற்கு மேற்கூறிய உதாரணங்களோடு இன்னும் இரண்டு தருகின்றோம்.


உதயகிரி முதல் அஸ்தகிரி வரை பிரபல்யமடைந்து, உலகம் ஒப்புக்கொண்டு ஓதிவரும் தலாயிலுல்-கைறாத் இயற்றிய அல்லாமத்துல் பகீஹ், ஆரிபுல் காமில் முஹம்மது இபுனு சுலைமானுல் ஜுஸுலிஷ் ஷாதுலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களது எண்ணிக்கையற்ற கராமத்துக்களில் நின்றும் ஒன்று ஜாமிவுல் கறாமாத் 1-வது பாகம், 165-வது பக்கத்தில் காணப்படுகிறது. அடியில் அதைக் குறிப்பிட்டுள்ளோம்.குத்புஷ் ஷஹீர், ஷைகு முஹம்மது இபுனு சுலைமானுல் ஜஸுலிஷ் ஷாதுலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி 870-வது வருஷத்தில் வபாத்தாகி, சூயஸ்பட்டணத்தில் அடக்கப்பட்டார்கள். 77 வருஷங்களுக்குப் பிறகு ஹிஜ்ரி 947-வது வருஷம் அவர்களது கபுரைத் தோண்டப்பட்டது. அவ்வமயம் அவர்களது திரேகம் (தபன்) அடக்கம் செய்யப்பட்ட சமயம் எவ்விதமிருந்ததோ அவ்விதமே உறுப்பில் எத்தகைய சேதமும், மாறுபாடுமின்றி. கபன் துணியில் கூட மண் ஒட்டாமலிருந்தது, அந்தத் திரேகம் கஸ்தூரி வாடையுடன் கமழ்ந்துக் கொண்டிருந்ததைக் கண்ணுற்ற திரளான ஜனங்கள் பேராச்சரியப்பட்டு மயங்கி நின்றனர். ஆண்டவனுடைய பாதையில் ஷஹீதானவர்கள் இறந்தவர்கள் அல்லர். அவர்கள் ஜீவனுள்ளவர்கள். அவர்களுடைய பூத உடல்களை மண் தின்னாது. புழுப்பூச்சி, ஐவாமிருகங்கள் எதுவுமே தீண்டாது என்று அல்லாஹ்வும், றஸுலும் கூறியவாக்குகளை மெய்ப்பிக்கும் அத்தாட்சிகளாகவே அவர்கள் காணப்பட்டார்கள்.


மேலே குறிப்பிட்ட சம்பவத்தின் போது அக்கூட்டத்திற்கு சிலர் சோதிப்பதற்கென்றே, வசீகரத்துடன் ஜோதிப் பிரகாசமாக இலங்கிக்கொண்டிருந்த அந்த வலியுல்லாஹ் அவர்களுடைய திருமுகத்தில் விரலைவைத்து அழுத்திப் பார்த்தனர். விரல் பட்ட இடத்தைச் சூழ்ந்து செந்நிறமாக இரத்தத்தின் அறிகுறி காணப்பட்டது. விரலை எடுத்ததும் அந்த உதிரக்கட்டு உடலில் பரவி மறைந்தது. பிறகு அவர்களது பரிசுத்தத் திருமேனி ஆப்பிரிக்காவிலுள்ள மொராக்கோவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது. அவர்களது கபுரு ஷரீபில் இன்று வரை ஸலவாத்தின் பரக்கத்தை முன்னிட்டு கஸ்தூரி வாடை கமழ்ந்து கொண்டிருக்கிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் ஸியாரத்திற்காகச் சென்று, தலாயிலுல் கைறாத்தை ஓதி நற்பேறுகளைப் பெற்று வருகின்ர்ரானர்.


நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது ஸஹாபாத் தோழர்களான ஹஜ்ரத் ஹுதைபத்துல் யமனீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு ஹஜ்ரத் அப்துல்லாஹ் இபுனு ஜாபிருல் அன்சாரி ரலியல்லாஹு தஆலா அன்ஹு ஆகிய இருவரும் ஷஹீதாகி இறாக்கில் பகுதாது நகருக்குச் சமீபமாக ஆற்றோரத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்தார்கள். பிற்காலத்தில் வெள்ளப் பெருக்கால் இரு கபுருகளுக்கும் சேதம் ஏற்பட்டது. அவை ஆற்றில் மூழ்கிப் போய் விடுமோ என்ற பீதியும் உண்டானது. அது சமயம் இறாக்கில் ஆட்சிபுரிந்த அமீர்பைஸல் (மக்கா ஷரீபு ஹுஸைனுடைய மகன்) உலமாக்களிடம் பத்வா (மார்க்கத் தீர்ப்பு) வாங்கி அவ்விரு கபுருகளையும் தோண்டி எடுத்து அவற்றை வேறு இடத்தில் அடக்கம் பண்ண ஏற்பாடு செய்தார். இவ்விஷயம் விளம்பரப் படுத்தப்பட்டது. உலகின் நாலா பக்கங்களிலிருந்தும் இலட்சக் கணக்கான ஜனங்கள் குறிப்பிட்ட தேதியில் அங்கு ஆஜராயினர். அவ்விரு கபுருகளும் 1300 வருடங்களுக்குப் பிறகு தோண்டப்பட்டு அவ்விரு சடலங்களும் வெளியே எடுக்கப்பட்டு உயர்ந்த மேஜை மீது வைக்கப்பட்டன. திரேகத்தில் எவ்வித பேதமும், மாறுபாடும் காணப்படவில்லை. வியர்வை சொட்ட அவ்விரு முகங்களும் ஒளிப்பரகாசத்துடன் இலங்கின. அனைவரும் இக்காட்சியைக் கண்டு பேராச்சரியத்தில் மூழ்கிப் போயினர். காரீ ஒருவர், அல்லாஹ்வுடைய பாதையில் வெட்டப் பட்டவர்களை மரணித்தவர்களென்று நீங்கள் நினைக்கவேண்டாம். அவர்களோ ஜீவனுள்ளவர்கள். ஆண்டவன் பக்கமிருந்து அவர்களுக்கு உணவளிக்கப் படுகிறது. அதையருந்தி அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்ற கருத்துள்ள குர்ஆன் வேத வாக்கை ஓத ஆரம்பித்தார்.அதற்கு அத்தாட்சியாகக் கண்முன் பிரத்தியட்சமாக அவ்விரு நாதாக்களின் பரிசுத்தத் திருமேனிகள் இருக்கும் காட்சியை நோக்கும் போது இந்த ஆயத் அவ்வயமந்தான் அருளப்பட்து போல காணப்பட்டதாம்!