MAIL OF ISLAM

Knowledge & Wisdomமீலாத் விழாவை முன்னிட்டு மின் விளக்குகளை ஆங்காங்கே ஏன் அலங்கரிக்க வேண்டும்?


எழுதியவர்: மௌலவி S.L அப்துர் ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகிற்கு அவதரித்த ரபியுல் அவ்வல் மாதத்தை கண்ணியப்படுத்தும் நோக்கில் முஸ்லிம்கள் வீதிகளை, கட்டிடங்களை, பள்ளிவாசல்களை மின் விளக்குகளினால் (லைட்) அலங்கரிக்கின்றனர்.


மேலும் அன்னவர்களின் பெயரில் ரபியுல் அவ்வல் மாதத்தில் மௌலித் ஓதி, மீலாது கொடியேற்ற விழாக்கள் முழு உலகிலும் நடைபெறுகின்றது.


ஆனால் வழிகெட்ட புதுமை விரும்பிகளாகிய வஹ்ஹாபிகள் மீலாதை முன்னிட்டு மின் விளக்குகளினால் (லைட்) ஆங்காங்கே அலங்கரிப்பது ஷிர்க் என்றும், பித்அத் என்றும் கூறி முஸ்லிம்களை ஏசியும், பேசியும் வருகின்றனர்.


ஆகவே நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அவதரித்த புனிதமான ரபியுல் அவ்வல் மாதத்தை முன்னிட்டு வீதிகளை, கட்டிடங்களை, பள்ளிவாசல்களை மின் விளக்குகளினால் (லைட்) அலங்கரிப்பது கூடுமா? கூடாதா? என்பது பற்றி நாம் தெளிவாக புரிந்து கொள்வது அவசியமாகும்.


அந்த அடிப்படையில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த நாளை மீலாதை ஞாபகம் செய்து சந்தோசத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆங்காங்கே மின் விளக்குகளை அலங்கரிப்பதில் எவ்வித தவறும் கிடையாது மாறாக மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விடயமாகும்.


ரபீஉல் அவ்வல் உலக முஸ்லிம்களின் மகிழ்ச்சிக்குரிய மாதம். இலங்கை, இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் மீலாது மௌலித் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன அந்நிகழ்ச்சிகளில் திருக்குர்ஆன் ஓதுதல், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புகழ்களை பாடுதல், மின் விளக்குகளினால் வீதிகளை, கட்டிடங்களை, பள்ளிவாசல்களை அலங்கரிப்பது, உணவளித்தல், உதவிகள் செய்தல், ஸலவாத் முழக்கத்துடன் ஊர்வலங்களும் பேரணிகளும் என பல நல்ல காரியங்களை பெருமானாரின் மீதுள்ள அன்பினால் மக்கள் பிரியத்தோடு செய்கிறார்கள். இவ்வாறு நமக்கு கிடைத்த அல்லாஹ்வின் அருளுக்காக மகிழ்ச்சியடையவும் வெளிப்படுத்தவும் அல்லாஹ் கூறுகிறான்.


♦ மீலாது விழாவை பெரு மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்பதே அல்லாஹ்வின் விருப்பமாகும். எப்படி என்றால் 'அல்லாஹ்வுடைய "பள்ல்" எனும் ரஹ்மத்தைக் கொண்டு அவர்கள் (முஃமின்கள்) மகிழ்ச்சி கொண்டாடட்டும்' என நபியே! நீங்கள் கூறுங்கள் அது அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்துகளை விட மிக சிறந்ததாகும். (அல்குர்ஆன் 10 - 58)


மேற்கூறிய மறை வசனத்தில் கூறப்பட்டுள்ள "பள்ல்" எனும் ரஹ்மத் என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் என பல தப்சீர் கலை அறிஞர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பையும், அதனுள் பொதிந்துள்ள சிறப்புகளையும் எடுத்து கூறுவது குர் ஆன், ஹதீசுக்கு மாற்றமில்லாத சுன்னத்தான நல்ல அமலாகும். இன்னும் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி அவர்களை தலைவராக பெற்றது நமக்கு கிடைத்த பேரருள் அல்லவா? ஈருலகிலும் நமது மகிழ்ச்சி, அவர்களின் உம்மத்து என்பதில் அல்லவா?


எனவே அதற்காக மகிழ்ச்சியடைவதும் அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் வீதிகளை, கட்டிடங்களை, பள்ளிவாசல்களை மின் விளக்குகளினால் நபிகளாரின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆஷிகீன்கள் அலங்கரிப்பது அல்லாஹ்வின் உத்தரவாகும். அந்த அடிப்படையில் மீலாதை இவ்வாறு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு அல்லாஹ் அனுமதி தந்திருக்கும்போது அதை தடுக்க நினைப்பவன் ஷைத்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


♦ மேலும் (நிஃமத்களை) அருள் கொடைகளை நினைத்துப் பாருங்கள், மற்றவருக்கு எடுத்துக் கூறுங்கள், ரகுமத்தை எண்ணிப்பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தட்டும் இவைகளை கூறிய இறைவன் அந்த ரஹ்மத்து எது என்று தெளிவாகவே கூறிவிட்டான் (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (அல்குர்ஆன் 21:107)


♦ (ஆகவே, முஃமின்களே!) நீங்கள் அல்லாஹ்வையும் ரஸூலையும் ஈமான் கொள்ளுங்கள்; பெருமானாரை பலப்படுத்துக்குங்கள், கண்ணியப்படுத்துங்கள், அல்லாஹ்வை (காலையிலும் மாலையிலும் அவனைத்) துதி செய்து வருவதற்காக(வே தூதரை அனுப்பினோம்).(அல்குர்ஆன் : 48:9) இந்த வசனம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொடர்பில் மூன்று கடமைகளை நமக்கு சொல்கிறது.


1. ஈமான் கொள்ளுதல்
2. பலப்படுத்துதல்
3. கண்ணியப்படுத்துதல்


பலப்படுத்துதல் என்பதற்கு கட்டுப்படுதல் என இமாம் குர்துபி ரஹ்மதுல்லாஹி அலைஹி ஒரு அர்த்தம் செய்கிறார்கள்.அவரது போராட்டத்தில் இணைந்து போராடுங்கள் என்றும் அர்த்தம் உண்டு.பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கு கட்டுப்படனும் நமது உயிரை அர்ப்பணிக்கிற விசயத்திற்கு அழைத்தாலும் அவர்களுடன் சேர்ந்து போராடனும் கட்டுப்படுவதோடு கடமையை அல்லாஹ் முடித்துவிட வில்லை. கண்ணியப்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறான்.


கண்ணியப்படுத்துதல் மகிமைப்படுத்துதலின் ஒரு அம்சமாகத்தான் உலகம் முழுவதிலும் முஸ்லிம்கள் ரபீஉல் அவ்வல் மாதத்தின் பணிரெண்டாம் நாளிலும் வருடம் முழுவதிலும் முஸ்லிம்கள் மீலாது மௌலிதை முன்னிட்டு மின் விளக்குகளினால் வீடுகளை, மஹல்லாக்களை, வீதிகளை நபிகளாரின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆஷிகீன்கள் அலங்கரித்து விமரிசையாக நடத்துகிறார்கள்.


அல்லாஹ்வுடைய கிருபையை எதிர்பார்க்கிற காரியங்களை செய்வது தவறல்ல. அந்த அடிப்படையில் மின் விளக்குகளினால் வீடுகளை, மஹல்லாக்களை, வீதிகளை நபிகளாரின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆஷிகீன்கள் அலங்கரிப்பது தவறு இல்லை மாறாக விரும்பத்தகான நல்ல காரியமாகும்.


எனவே ரபியுல் அவ்வல் மாதத்தை முன்னிட்டு மின் விளக்குகளினால் வீடுகளை, மஹல்லாக்களை, வீதிகளை நபிகளாரின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆஷிகீன்கள் அலங்கரிப்பது மூலம் இம்மாதம், இன்று நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாள் மீலாது விழா என்று அறிவிப்பதாலும், அவர்களை கண்ணியப்படுத்துதல் இருப்பதாலும், மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதாலும் இது மார்க்கத்தில் ஆகுமான காரியமாகும். கூடாது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.


ஆகவே உத்தம நபியின் உதய தின மாதமான ரபீஉல் அவ்வல் மாதத்தை கண்ணியப்படுத்தும் நோக்கிலும் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையிலும் மின் விளக்குகளினால் வீடுகளை, மஹல்லாக்களை, வீதிகளை அலங்கரிப்பது என்பது நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளை மீலாதை நினைவுப்படுத்தும் விதமாக ஆரம்பிக்கப்பட்ட நல்ல விடயமும், அந்த இடத்தில் மீலாது விழா வைபவம் நடைபெறுகின்றது என்பதை அடையாளப்படுத்துகின்ற ஒரு அடையாள சின்னமாகும்.


அடையாள சின்னங்களுக்காக செலவழிப்பது மார்க்கத்தில் கூடுமான நல்ல காரியமாகும். அது வீண்விரயம் அல்ல. உதாரணமாக நமது வீட்டில் திருமணம் (நிகாஹ்) விழா நடைபெறுகின்றது என்றால் அதற்காக நாம் வீட்டை அலகரிப்பது, திருமண அழைப்பிதல், அலங்கார விடயங்கள் இதுபோன்ற செலவுகளை செய்வது வீண்விரயம் அல்ல. காரணம் நமது வீட்டில் திருமண விழா நடைபெற உள்ளது என்று அடையாளப்படுத்தும் அடையாள சின்னங்களாகும். இது போன்று நிறைய விடயங்களை நமது நடைமுறைகளிலிருந்து பார்க்கலாம்.


அந்த அடிப்படையில் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களின் மீலாதை பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் நாயகத்தின் ஆஷிகீன்கள் அங்கங்கே மின் விளக்குகளினால் அலங்கரித்து நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ்களை (பிறருக்கு) சொல்லிக்காட்டி உறவினர்களுக்கும், (அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும்) ஏழைகளுக்கும் தான தர்மங்கள் உணவுகள் இனிப்பு பண்டங்களை வழங்கி செல்வதை அல்லாஹ்வும் அவனது தூதர் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களும் அனுமதி தந்திருக்கும்போது அதை தடுக்க நினைப்பவன் ஷைத்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


♦ வலிமார்களது கபுரு ஷரீபுள்ள இடங்களில் லைட், விளக்கு வகையறாக்கள், மெழுகுவத்திகள் முதலியவைகளை ஏற்றுவது அவர்களை சங்கை செய்து கண்ணியப்படுத்தி வைப்பதுமாகும். இவ்விதம் செய்வது அழகான நாட்டத்தின் உயர்ந்த இலட்சியமாகும். அவற்றை விலக்கக் கூடாது என்று தப்ஸீர் ரூஹுல் பயான் 3-வது பாகம் 400 வது பக்கத்திலும் , தஹ்ரீருல்முக்த்தார் , 1 வது பாகம் 123 வது பக்கத்திலும்கஷ்புன் நூரிலும் விரிவாக வரையறுக்கப்பெற்றிருக்கின்றது


♦ “இன்னமா யஃமுறு மஸாஜிதல்லாஹ்” என்ற திருமறை வசனத்திற்கு தப்ஸீர் றூஹுல் பயான் ஆசிரியரான அல்லாமா இஸ்மாயில் ஹக்கி ரஹ்மத்துல்லாஹி அலைஹி பின்வருமாறு விளக்கம் எழுதும் போது இவ்வாறு எழுதுகின்றார்கள்: “கஷ்புன் நூர் அன் அஸ்ஹாபில் குபூர்” என்ற நூலில் அஷ்ஷெய்கு அப்துல்ஙனி நாபிலிஸி ரஹ்மத்துல்லாஹி அலைஹி பின்வருமாறு எழுதுகின்றார்கள்.


(இந்த நூலின் தமிழ் மொழி பெயர்ப்பு “கஷ்பின் வெளிச்சத்தில் கபுறுவாசிகள்” (“உலமாக்கள் மற்றும் வலிமார்கள் சாலிஹீன்களுடைய கப்றுகள் மேல் குப்பாக்கள் கட்டுவதும், போர்வை போடுவதும், விரிப்புக்கள் போடுவதும், தலைப்பாகை சூடுவதும் ஆகுமான செயலாகும்.


பொதுமக்கள் பார்வையில் இவர்களை கேவலமாக நோக்காமல் கண்ணியத்தை வெளிப்படுத்துவதாகும். இது போன்றுதான் வலிமார்களின் கபுறுகளில் விளக்கேற்றுவதும், மெழுகுவர்த்தி எரியவைப்பதும் அவர்களைக் கண்ணியப்படுத்துவதை நோக்காகக் கொண்டதாகும். இதன் நோக்கம் உயர்வானதாகும். வலிமார்களைக் கண்ணியப்படுத்தும் நோக்கிலும் அவர்கள் மீது அன்புவைத்தும் எண்ணெய், மெழுகுபத்தி உள்ளவற்றை நேர்ச்சை செய்வதும் ஆகுமானவையாகும். இதனைத் தடை செய்வது ஒருபோதும் கூடாது. (நூல் : தப்ஸீர் றூஹுல் பயான், பாகம் 03, பக்கம் 400)


ஆகவே திருக்குர்ஆனையும், ஹதீஸையும் தூய மனதுடன் ஆழமாக ஆராய்ந்தால் வஹ்ஹாபிகள் அனாச்சாரங்கள் என்று கூறுகின்ற எல்லாமே நல்ல விடயங்கள் என்பதும், அவற்றுக்கு ஆதாரங்கள் உண்டு என்பதும் தெளிவாகும். அவ்வாதாரங்களை இந்த இடத்தில் விபரமாக மேலே நான் எழுதியுள்ளேன். ஆயினும் ஒரேயொரு திருக்குர்ஆன் வசனத்தை மட்டும் இங்கு மறுபடியும் எழுதுகிறேன். இவ்வசனம் ஒன்றே வஹ்ஹாபிகளின் வாயை அடைப்பதற்குப் போதுமென்று நம்புகிறேன்.


'எவன் அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்துகிறானோ அது அவனுள்ளத்தின் “தக்வா” இறையச்சமாகும்' (திருக்குர்ஆன்) எந்தவொரு படைப்பு அல்லாஹ்வை நினைவூட்டுகிறதோ அது அல்லாஹ்வின் சின்னம் எனப்படும். இது “அவாமுன்னாஸ்” என்னும் சாமானிய மனிதர்களுக்குப் பொருத்தமான கருத்து. ஆனால் இறைஞானிகளிடம் படைப்பு எதுவாயினும் அது அல்லாஹ்வை நினைவுபடுத்தும் சின்னமேயாகும்.