MAIL OF ISLAM

Knowledge & Wisdomமீலாத் விழா ஏன் கொண்டாட வேண்டும்?

எழுதியவர்: மெயில் ஒப் இஸ்லாம்


நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாது விழா (பிறந்த நாளை) ஏன் கொண்டாட வேண்டும்?


''வந்தது வசந்தம்'' ரபீவுல் அவ்வல் மாதம் வந்து விட்டால் பெருமானார் (ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது பரிபூரணமாக நேசம், மஹப்பத் கொண்ட உண்மை முஸ்லீம்கள் மாத்திரம் பெருமானார் பிறந்த தினத்தில் மீலாது விழாவிற்காக ஏற்பாடுகளைச் செய்யும் அதே வேளையில் மீலாது கொண்டாடக்கூடாது சுப்ஹான மெளலிது ஷரீபு ஓதுவது ஷிர்க் - பித்அத் என முஸ்லீம் பெயர் கொண்ட ஒரு கூட்டம் நாடி நரம்புகள் வெடிக்க கூக்குரலிடத் தொடங்கி விடுவார்கள்.


ஆகவே மீலாது விழாவின் அடிப்படை நோக்கமும், மீலாது விழா ஏன் கொண்டாட வேண்டும் என்பதற்கும் பின்வரும் காரணங்கள் மூலம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.


அந்த அடிப்படையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பின் அற்புதங்களை எடுத்து கூறுவதும், அதன் மூலமாக அவர்களை கண்ணியப்படுத்துவதும், அவர்களுடைய சிறப்பம்சங்களை எடுத்து கூறுவதும், மக்களை ஈமானின் பக்கமும், இஸ்லாத்தின் பக்கமும் உணர்வூட்டுவதும், அவர்களின் நற்குணங்களை அறிந்து கொள்ளுவதும், சந்தோசத்தையும் முஹப்பைத்தையும் மற்றும் அவர்கள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவதும், அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை சொல்லி காட்டுவதும், மக்களுக்கு உணவளித்தல் போன்ற நல்ல அமல்களை செய்வதும் அதன் மூலம் அன்றைய தினத்தில் கூட்டம் கூட்டமாக ஊர்வலமாக சென்று நன்றியை வெளிப்படுத்துவதாகும். இவ்வாறு எங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது ஒரு முஸ்தஹப்பான அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை அள்ளித்தரக்கூடிய காரியமாகும்.


இந்த உண்மைகள் விளங்காத சிலர் மீலாத் விழாவை சிலை வணக்கம் போல் சித்தரித்து, அதை செயல்படுத்தும் முஸ்லிம்களை தடுத்து வருவது சகிக்க முடியாத தவறாகும். "எங்களை விட அறிஞர்கள் இல்லை" என்ற கர்வ நிலையில் உள்ள தற்கால வழி கெட்ட அறிஞர்களை விட பல்லாயிரம் படித்தரத்தால் அறிவாலும், இறையச்சத்தாலும் மென்மையான நேர்வழி பெற்ற இமாம்கள் அனைவரும் அனுமதித்துள்ள மீலாதுன் நபி விழாவை வழிகேடவர்களின் விசமகருத்திட்காக தவிர்க்க வேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு இல்லை.மீலாது விழா கொண்டாடுவதால் இதில் எமக்கு எதாவது படிப்பினை உண்டா?


♦உம் இதயத்தைத் திடப்படுத்துவதற்காகவே ரஸுல்மார்களின் சரித்திரங்களில் இருந்து ஒவ்வொன்றாக நாம் உமக்குக் கூறுகிறோம். இவைகளில் உண்மையும், நல்லுபதேசமும் விசுவாசிகளுக்கு நினைவூட்டலும் இருக்கின்றன. (ஸுரத்து ஹுத் 121)


♦ மேலும் திட்டமாக நபிமார்களின் சரித்திரங்களில் அறிவுடையோருக்கு படிப்பினைகள் இருக்கின்றன. (ஸுரத்து யூஸுப் 111)


♦ நபிமார்களை நினைவு கூர்வது வணக்கமாகும், ஸாலிஹீன்களை நினைவு கூர்தல் பாவப்பரிகாரமாகும். என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.


நூல் அல்ஜாமிவுஸ்ஸகீர் 4331


இப்போது கூறப்பட்ட இம்மூன்று ஆதாரங்களையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால் நபிமார்களின் வாழ்க்கை வரலாறுகளை எடுத்துக் கூறுவதற்க்கும் அதைக் கேட்டுக் கொண்டிருப்பதற்க்கும் விழாக்கள் எடுப்பது ஆகுமாக்கப்பட்ட நல்லதோர் அம்சமாகும்.


மேலும் நபிமார்களின் வாழ்க்கை சரிதைகளை ஞாபகம் பண்ணுவதும் மன தைரியத்தையும், படிப்பினையையும், மறுமையைப் பற்றிய நினைவையும் ஏற்படுத்தக் கூறியதாக இருக்கின்றது என்று மிகத் தெளிவாக விளங்க முடிகிறது. அப்படியானால் நபிமார்கள் யாவரிலும் எல்லா வகையிலும் ஏற்றம் பெற்றவர்களும் (திர்மிதி 3616, தாரமி 47, மிஷ்காத் 5762) மேலும் நபிமார்கள் யாவரிலும் தொந்தரவு அடைந்ததிலும் தெளிவடைந்ததிலும் தன்னிகரற்றவர்களாகவும் இருக்கின்ற நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் (திர்மிதி 2472, இப்னுமாஜா 151, மிஸ்காத் 5253) வாழ்க்கை வரலாறுகளை எடுத்துக் கூறுவதில் முஃமின்களுக்கு எந்த அளவு உபதேசமும், நினைவூட்டுதலும், படிப்பினையும் இருக்க வேண்டும்?


எனவேதான் நாம் கொண்டாடி வருகின்ற மீலாது விழாவில் நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் வாழ்க்கை வரலாறுகளை அடிப்படையாக வைத்தும் ஏனைய நபிமார்களின் வாழ்க்கை வரலாறுகளை சம்பந்தப்படுத்தியும் உலமா பெருமக்கள் உரை நிகழ்த்தி வருகிறார்கள். ஆகவே நபிமார்களின் சரித்திரங்களை அறிஞர்கள் கூறுவதற்கும் பொதுமக்கள் கேட்பதற்கும் அதன் மூலம் நமது பாவங்கள் பொறுக்கப்படுவதற்கும் மீலாது விழாக்கள் மிகப் பெரிய வரப்பிரசாதமாக இருப்பதால் மீலாது விழா கண்டிப்பாக வரவேற்கப்படக் கூடிய ஒன்றாகும்.


♦ எவர்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை ஈமான் கொண்டு மேலும் அன்னவர்களை உகப்பு கொண்டு மகிமைப்படுத்தி மேலும் அன்னவர்களுக்கு (பல வகையிலும்) ஒத்தாசையாக இருந்து அன்னவர்களுடன் இறக்கிவைக்கப்பட்ட பேரொளியையும் பின்பற்றி நடக்கிறார்களோ அவர்கள் தான் உண்மையான வெற்றியாலர்களாகும். (அல் அஃராப் -157) என்று அல்லாஹ் தஆலா குறிப்பிடுகிறான்.


இப்போது கூறப்பட்ட இத்திருவசனத்தின் கூற்றிற்கிணங்க கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை மகிமைப்படுத்தி அதன்மூலம் சத்தியடைந்தவர்களுடன் சேருவதற்கு மீலாது விழா ஒரு நல்ல சந்தர்ப்பம் என்பதை அறிவுடையோர் யாவரும் நன்கறிவர். மேலும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த நாள்தான் மார்க்கத்திற்கு மகிழ்ச்சியும், பெருமையும் ஏற்பட்ட நாளாகும். ஆகவே மீலாது பெருவிழா கொண்டாட்டம் அல்லாஹ் நமக்கு அருள்புரிந்த நன்னாளாகும். ♣ மீலாது நபி விழாவை பெரு மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்பதே அல்லாஹ்வின் விருப்பமாகும்


எப்படி என்றால் 'அல்லாஹ்வுடைய "பள்ல்" எனும் ரஹ்மத்தைக் கொண்டு அவர்கள் (முஹ்மீன்கள்) மகிழ்ச்சி கொண்டாடட்டும்' என நபியே! நீங்கள் கூறுங்கள் அது அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்துகளை விட மிக சிறந்ததாகும். (அல்குர்ஆன் 10 - 58)


மேற்கூறிய மறை வசனத்தில் கூறப்பட்டுள்ள "பள்ல்" எனும் ரஹ்மத் என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் என பல தப்சீர் கலை அறிஞர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பையும், அதனுள் பொதிந்துள்ள சிறப்புகளையும் எடுத்து கூறுவது குர் ஆன், ஹதீசுக்கு மாற்றமில்லாத சுன்னத்தான நல்ல அமலாகும்.


♦ மேலும் (நிஃமத்களை) அருள் கொடைகளை நினைத்துப் பாருங்கள், மற்றவருக்கு எடுத்துக் கூறுங்கள், ரகுமத்தை எண்ணிப்பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தட்டும் இவைகளை கூறிய இறைவன் அந்த ரஹ்மத்து எது என்று தெளிவாகவே கூறிவிட்டான் (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (அல்குர்ஆன் 21:107) அந்த அடிப்படையில் மீதுலாத் கொண்டாடுவதற்கு அல்லாஹ் அனுமதி தந்திருக்கும்போது அதை தடுக்க நினைப்பவன் ஷைத்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எனவே ஒவ்வொரு இல்லங்களிலும் மெளலிது ஷரிபு ஓதும் ஓசை ஒலிக்கச்செய்வோம், ஒவ்வோர் ஊரிலும்- மஹல்லாக்களிலும் மீலாது நடத்தி உத்தம நபியின் உதய தின விழாவைக் கொன்டாடுவோம் நம் உயிரிலும் மேலான உயிருக்கு உயிரான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவதரித்த மீலாதின் அருள் அந்த மாதம் முழுவதிலும் உண்டு என்பதை புரிந்து ரபிஉல் அவ்வல் மாதத்தை முஃமீன்கலாகிய நாங்கள் நன்றி உணர்வோடு கொண்டாடி நற்பேறு பெறுவோமாக!