MAIL OF ISLAM

Knowledge & Wisdom



மீலாத் விழாவை முன்னிட்டு ஏன் கொடியேற்ற வேண்டும்?

​எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான்  (கௌஸி)  கல்முனை.


நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாம் மார்க்கத்திற்காக செய்த தியாகங்களை ஞாபகப்படுத்தியும் அவர்களை கண்ணியப்படுத்தியும் அவர்களின் பெயரால் ரபியுல் அவ்வல் மாதத்தில் கொடியேற்ற விழாக்கள் ஆங்காங்கே நடைபெறுகின்றது.


ஆனால் வழிகெட்ட புதுமை விரும்பிகளாகிய வஹ்ஹாபிகள் மீலாது கொடியேற்றுவது ஷிர்க் என்றும், பித்அத் என்றும் கூறி சுன்னத் வல் ஜமாஅத் சொந்தங்களை ஏசியும், பேசியும் வருகின்றனர்.


ஆகவே நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பெயரால் மீலாது கொடி ஏற்றுவது கூடுமா? கூடாதா? என்பது பற்றி நாம் தெளிவாக புரிந்து கொள்வது அவசியமாகும்.


நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம், ஸஹாபாக்கள் கொடிக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போர்முனைக்கு கொடிகளுடன் சென்றுள்ளார்கள்.


திருமக்காவை வெற்றி கொண்டு நுழையும் போது கொடி பிடித்துள்ளார்கள். என்ற ஹதீஸ்களின் அடிப்படையில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிறந்த நாளை மீலாதை ஞாபகம் செய்து சந்தோசத்தை வெளிப்படுத்தும் வகையில் மீலாது கொடி ஏற்றுவதில் எவ்வித தவரும் கிடையாது. மாறாக மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விடயமாகும்.


அந்த அடிப்படையில் ரபீஉல் அவ்வல் உலக முஸ்லிம்களின் மகிழ்ச்சிக்குரிய மாதம். இலங்கை, இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் மீலாது மௌலித் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.


அந்நிகழ்ச்சிகளில் திருக்குர் ஆன் ஓதுதல், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் புகழ்களை பாடுதல், உணவளித்தல், உதவிகள் செய்தல், நபிபுகழ் பாடிய வண்ணம் ஸலவாத் முழக்கத்துடன் ஊர்வலங்களும் பேரணிகளும் என பல நல்ல காரியங்களை பெருமானாரின் மீதுள்ள அன்பினால் மக்கள் பிரியத்தோடு செய்கிறார்கள்.


மேலும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருநாமங்கள், ஸலவாத் எழுதப்பட்ட பொதிக்கப்பட்ட பச்சை நிற திருக் கொடிகளைக் கொண்டு வீடுகளை, மஹல்லாக்களை, வீதிகளை நபிகளாரின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆஷிகீன்கள் அலங்கரிக்கின்றார்கள். இவ்வாறு நமக்கு கிடைத்த அல்லாஹ்வின் அருளுக்காக மகிழ்ச்சியடையவும் வெளிப்படுத்தவும் அல்லாஹ் கூறுகிறான்.


மீலாது நபி விழாவை பெரு மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்பதே அல்லாஹ்வின் விருப்பமாகும். எப்படி என்றால் 'அல்லாஹ்வுடைய "பள்ல்" எனும் ரஹ்மத்தைக் கொண்டு அவர்கள் (முஹ்மீன்கள்) மகிழ்ச்சி கொண்டாடட்டும்' என நபியே! நீங்கள் கூறுங்கள் அது அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்துகளை விட மிக சிறந்ததாகும். (அல்குர்ஆன் 10 - 58)


மேற்கூறிய மறை வசனத்தில் கூறப்பட்டுள்ள "பள்ல்" எனும் ரஹ்மத் என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் என பல தப்சீர் கலை அறிஞர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பையும், அதனுள் பொதிந்துள்ள சிறப்புகளையும் எடுத்து கூறுவது குர் ஆன், ஹதீசுக்கு மாற்றமில்லாத சுன்னத்தான நல்ல அமலாகும்.


இன்னும் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி அவர்களை தலைவராக பெற்றது நமக்கு கிடைத்த பேரருள் அல்லவா? ஈருலகிலும் நமது மகிழ்ச்சி,அவர்களின் உம்மத்து என்பதில் அல்லவா?


எனவே அதற்காக மகிழ்ச்சியடைவதும் அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருநாமங்கள், ஸலவாத் எழுதப்பட்ட பொதிக்கப்பட்ட பச்சை நிற திருக் கொடிகளைக் கொண்டு வீடுகளை, மஹல்லாக்களை, வீதிகளை நபிகளாரின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆஷிகீன்கள் அலங்கரிப்பது அல்லாஹ்வின் உத்தரவாகும்.


அந்த அடிப்படையில் மீதுலாதை இவ்வாறு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு அல்லாஹ் அனுமதி தந்திருக்கும்போது அதை தடுக்க நினைப்பவன் ஷைத்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


♦ மேலும் (நிஃமத்துக்களை) அருள் கொடைகளை நினைத்துப் பாருங்கள், மற்றவருக்கு எடுத்துக் கூறுங்கள், ரஹ்மத்தை எண்ணிப்பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தட்டும் இவைகளை கூறிய இறைவன் அந்த ரஹ்மத் எது என்று தெளிவாகவே கூறிவிட்டான் (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (அல்குர்ஆன் 21:107)


♦(ஆகவே, முஃமின்களே!) நீங்கள் அல்லாஹ்வையும் ரஸூலையும் ஈமான் கொள்ளுங்கள்; பெருமானாரை பலப்படுத்துக்குங்கள், கண்ணியப்படுத்துங்கள், அல்லாஹ்வை (காலையிலும் மாலையிலும் அவனைத்) துதி செய்து வருவதற்காக(வே தூதரை அனுப்பினோம்). (அல்குர்ஆன் : 48:9) இந்த வசனம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொடர்பில் மூன்று கடமைகளை நமக்கு சொல்கிறது.


1. ஈமான் கொள்ளுதல்

2. பலப்படுத்துதல்
3. கண்ணியப்படுத்துதல்


பலப்படுத்துதல் என்பதற்கு கட்டுப்படுதல் என இமாம் குர்துபி ரஹ்மதுல்லாஹி அலைஹி ஒரு அர்த்தம் செய்கிறார்கள். அவரது போராட்டத்தில் இணைந்து போராடுங்கள் என்றும் அர்த்தம் உண்டு.


பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கு கட்டுப்படனும் நமது உயிரை அர்ப்பணிக்கிற விசயத்திற்கு அழைத்தாலும் அவர்களுடன் சேர்ந்து போராடனும் கட்டுப்படுவதோடு கடமையை அல்லாஹ் முடித்துவிடவில்லை. கண்ணியப்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறான்.


கண்ணியப்படுத்துதல் மகிமைப்படுத்துதலின் ஒரு அம்சமாகத்தான் உலகம் முழுவதிலும் முஸ்லிம்கள் ரபீஉல் அவ்வல் மாத்தின் பணிரெண்டாம் நாளிலும் வருடம் முழுவதிலும் முஸ்லிம்கள் மீலாது மௌலிதை முன்னிட்டு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருநாமங்கள், ஸலவாத் எழுதப்பட்ட பொதிக்கப்பட்ட பச்சை நிற திருக் கொடிகளைக் கொண்டு வீடுகளை, மஹல்லாக்களை, வீதிகளை நபிகளாரின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆஷிகீன்கள் அலங்கரித்து விமரிசையாக நடத்துகிறார்கள்.


இஸ்லாமின் கோட்பாட்டின் படி பொதுவாக பிறந்தநாள் கொண்டாடுவது பர்ளோ சுன்னத்தோ அல்ல ஆனால் பிறந்த நாளுக்கு மகிழ்ச்சியடைவதும் அதில் அல்லாஹ்வுடைய கிருபயை எதிர்பார்க்கிற காரியங்களை செய்வதும் தவறல்ல. அந்த அடிப்படையில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருநாமங்கள், ஸலவாத் எழுதப்பட்ட பொதிக்கப்பட்ட பச்சை நிற திருக் கொடிகளைக் கொண்டு வீடுகளை, மஹல்லாக்களை, வீதிகளை நபிகளாரின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆஷிகீன்கள் அலங்கரிப்பது தவறு இல்லை மாறாக விரும்பத்தகான நல்ல காரியமாகும்.


♦ இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள், 'அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெரிய கொடி கருமையாகவும் சிறிய கொடி வெண்மையாகவும் இருந்தது.


நூல்: திர்மிதீ, இப்னு மாஜா, மிஷ்காத் பக்கம்-237


♦ ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள், 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவிற்குள் நுழைந்தார்கள். அவர்கள் கொடி வெண்மையாக இருந்தது.


நூல்: திர்மிதீ, இப்னு மாஜா, மிஷ்காத் பக்கம்338

 
♦ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அந்தக் கொடியினை (மக்காவின் அடக்கத்தலத்திற்கு அருகில் உள்ள) ஹஜூன் என்னும் இடத்தில் நட்டி வைக்கும்படி உத்தரவிட்டார்கள் (மக்கா வெற்றிக்குப் பின்) அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் ஸூபைர் இப்னு அவ்வாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அபூ அப்தில்லாஹ்வே! இங்குதான் அந்தக் கொடியினை நட்டு வைக்கும்படி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களுக்கு உத்தரவிட்டார்கள் என்றார்கள்.


ஹழ்ரத் உர்வா பின் ஸூபைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்

நூல்: புகாரி 4280


♦ மறுமையில் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை கண்ணியப்படுத்துவதற்காக அவர்களின் திருக்கரத்தால் 'லிவாவுல் ஹம்து' என்னும் கொடி கொடுக்கப்படுகின்றது. எனது கரத்தில் 'லிவாவுல் ஹம்து' என்னும் கொடி இருக்கும். எனக்கு பெருமையில்லை. ஆதமும் அவர்களல்லாத எந்த நபியும் என் கொடியின் கீழே இருந்தே தவிர இல்லை.


ஹழ்ரத் அபூ ஸயீத் ரலியல்லாஹு அன்ஹு

நூல்: திர்மிதீ, மிஷ்காத், பக்கம் 513


♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ''மறுமை நாளில் 'லிவாவுல் ஹம்து' என்னும் கொடியை நான் சுமப்பேன்.'என்று கூறியுள்ளார்கள்.


ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு

நூல்:திர்மிதீ 3615-3616, தாரமீ 47,மிஷ்காத், பக்கம்-5762,இப்னு மாஜா 4308


♦ கைபர் கொடியினை நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அலி ரலியல்லாஹுஅன்ஹு அவர்களிடம் கொடுத்தார்கள்.


ஆதாரம்: புகாரி 4210, முஸ்லிம் 2406, திர்மிதீ 3724, மிஷ்காத் 6089


♦ பத்ரு போரில் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் இரண்டு கொடிகள் இருந்தது அதில் ஒன்றை அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் மற்றதை ஸஃதுபின் முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஏந்தி பிடித்தார்கள்.


நூல்: முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் பக்கம் 156

 
♦ சூபியாக்களான ஞானவான்கள், அன்பியாக்கள், அவ்லியாக்களை ஸியாரத் செய்வதற்காக போகும்போது கொடிகள் பிடித்துக் கொண்டும், கொட்டு அடித்துக் கொண்டும் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.


இவைகள் கூடுமா? என்ற கேள்விக்கு அல்லாமா ஷைகு முஹம்மது கலீலி ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், 'இவைகள் ஆகுமானவைகள், வேண்டப்படுபவைகள். இவைகளை வழிகெட்ட வம்பர்கள்தான் மறுப்பார்கள் என்று பதிலளித்துள்ளனர்'.


ஆதாரம்: பதாவா கலீலி, பாகம்-2, பக்கம்-351

 
எனவே ரபியுல் அவ்வல் மாதத்தை முன்னிட்டு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருநாமங்கள், ஸலவாத் எழுதப்பட்ட பொதிக்கப்பட்ட பச்சை நிற திருக் கொடிகளைக் கொண்டு வீடுகளை, மஹல்லாக்களை, வீதிகளை நபிகளாரின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆஷிகீன்கள் அலங்கரித்து ஏற்றுவதன் மூலம் இம்மாதம், இன்று நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாள் மீலாது விழா என்று அறிவிப்பதாலும், அவர்களை கண்ணியப்படுத்துதல் இருப்பதாலும், மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதாலும் இது மார்க்கத்தில் ஆகுமான காரியமாகும்.


ஆகாது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஒவ்வொரு தேசத்திற்கும் ஒரு தேசியக் கொடி என்றும், ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு கட்சிக் கொடி என்றும் ஏற்படுத்தி அதற்கான கொடியேற்று விழா, கொடி தினம் என்று கொண்டாடி வரும் இக்காலத்தில் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளை மீலாதை முன்னிட்டு கொடிகள் ஏற்றக் கூடாது என்று சொல்வது மார்க்கத்தை சரியான முறையில் அறியாமையையும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதுள்ள பகைமையையும் காட்டுகின்றது.


ஆகவே மீலாது விழா கொடி என்பது நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் தியாகத்தை நினைவுப்படுத்தும் விதமாக ஆரம்பிக்கப்பட்ட நல்ல விடயமும், அந்த இடத்தில் மீலாது விழா வைபவம் நடைபெறுகின்றது என்பதை அடையாளப்படுத்துகின்ற ஒரு அடையாள சின்னமாகும். அடையாள சின்னங்களுக்காக செலவழிப்பது மார்க்கத்தில் கூடுமான நல்ல காரியமாகும். அது வீண்விரயம் அல்ல.


உதாரணமாக நமது வீட்டில் திருமணம் (நிகாஹ்) விழா நடைபெறுகின்றது என்றால் அதற்காக நாம் வீட்டை அலகரிப்பது, திருமண அழைப்பிதல், அலங்கார விடயங்கள் இதுபோன்ற செலவுகளை செய்வது வீண்விரயம் அல்ல. காரணம் நமது வீட்டில் திருமண விழா நடைபெற உள்ளது என்று அடையாளப்படுத்தும் அடையாள சின்னங்களாகும். இது போன்று நிறைய விடயங்களை நமது நடைமுறைகளிலிருந்து பார்க்கலாம்.


அந்த அடிப்படையில் மீலாது விழா அன்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருநாமங்கள், ஸலவாத் எழுதப்பட்ட பொதிக்கப்பட்ட பச்சை நிற திருக் கொடிகளைக் கொண்டு வீடுகளை, மஹல்லாக்களை, வீதிகளை நபிகளாரின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆஷிகீன்கள் அலங்கரித்து ஏற்றுவது அவ்விடத்தில் மீலாது விழா வைபவம் நடைபெறுகின்றது என்று அடையாளப்படுத்தலும் அவர்களை கண்ணியப்படுத்துதல் இருப்பதாலும், மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதாலும் மார்க்கத்தில் ஆகுமான காரியமாகும்.


சில இடங்களில் மீலாது விழா கொடியேற்றி அனைத்து சமுதாயத்தினரும் சேர்ந்து சமூக நல்லிணக்க விழாவாக நடந்தப்படுகிறது. இதில் ஷரியத்திற்கு மாற்றமான ஹராமான விஷயம் ஏதும் இல்லை. அதனால் கூடும்.


அந்த அடிப்படையில் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களின் மீலாதை பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் நாயகத்தின் ஆஷிகீன்கள் பெருமானாரின் திருநாமங்கள், ஸலவாத் எழுதப்பட்ட பொதிக்கப்பட்ட நூரின் சுடரை (பச்சை நிற திருக் கொடிகளை) ஏந்தி ஊர் ஊராக தெரு தெருவாக வீதிகளில் அலங்கரித்து நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ்களை (பிறருக்கு) சொல்லிக்காட்டி உறவினர்களுக்கும், (அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும்) ஏழைகளுக்கும் தான தர்மங்கள் உணவுகள் இனிப்பு பண்டங்களை வழங்கி செல்வதை அல்லாஹ்வும் அவனது தூதர் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களும் அனுமதி தந்திருக்கும்போது அதை தடுக்க நினைப்பவன் ஷைத்தான் என்பதில் மென்மேலும் எந்த சந்தேகமும் இல்லை.