MAIL OF ISLAM

Knowledge & Wisdom

நாயகமே ! வறண்ட பாலையில் அழுத மழலைகளுக்கு அமுதாய் ஆனீர்கள்!

நெறி புரண்ட அரபிகளை மனம் புரள செய்த ஞானி !

அஞ்ஞானமும் பொய் ஞானமும் போட்டி போடும் வேளையில் மெய்ஞானமாய் வந்துதீர்கள்!

சிலர் உங்களை பரக்கத் என்றார்கள் !

சிலர் ரஹ்மத் என்றார்கள் !

வேறு சிலர் உங்களை அமீன் என்றார்கள் !

சிலர் நூர் என்று அழைத்தார்கள் !

எதை அழைத்தும் உங்கள் பரினாமத்தை எத்திருநாமமும் முழுதாய் அடைக்கவில்லை !

கவிஞன் உருவகமாய் கற்பனையில் நான் உங்களை தீட்டவில்லை !

நான் கவிஞனும் அல்ல ! இது கவிதையும் அல்ல நான் ஒரு ஏழை !

திண்ணை தோழர்களின் முந்தானை பிடித்துகொண்டு ஒரு கவளம் சோறு கிடைக்குமா என்ற கவலையில் உங்கள் வீட்டு முன்னே நிக்கும் இந்த மிஸ்கீனை பாரீர் !

இது கவி அல்ல யா ரசூலுல்லாஹ் ! என் மன வலி !

**************************************************************************************************************************************************

அஜமீக்கும் அடிமை பிலாலுக்கும் விதி மாற்றிய நாயகமே !

அரபியும் அஜமீயும் இரண்டும் ஒன்று என்று உரைத்த நாயகமே !

விதவைக்கும் வாழ்வு உண்டு என்று அஞ்ஞான கதவை உடைத்த நாயகமே !

புதையுண்ட பெண் சிசுவில் கலிமாவின் விதையுண்டு அதில் அருள் உண்டு என்று மரபுடைத்த நாயகமே !

நாயகத்தை மதியாத உலகை அழிக்க முற்பட்ட கடல் அலைகள் எல்லாம் உங்கள் சலவாத்தின் முனகல் ஏதோ ஒரு மூலையில் ஒலித்தது கேட்டு வெறுங்கையாய் சென்ற விந்தை எவர் அறிவார் நாயகமே !

கல்லுக்கும் புல்லுக்கும் காட்சி அளித்து சலாம் உரைத்த நீங்கள் என் கண்களுக்கு ஏனோ தெரியவில்லை !

உம் காட்சி கண்ட கல்லும் கண் தான் ! உமை காணாத இந்த கண்ணும் கல் தான்

**************************************************************************************************************************************************

மலையின் உள்ளக்குமுறல் எரிமலையாய் கொதிப்பது போல் எம் மனக்குமுறலும் தணலாய் எரிகிறது யா ரசூலுல்லாஹ் ! அடைமழை அணைக்கும் எரிமலை போல் பாவத்தீயில் உழலும் இந்த கொடுங்கோலனையும் உங்கள் முந்தானையில் அணைத்து கொள்ளுங்கள் யா ரசூலுல்லாஹ் !

தேகதீயும் மோகத்தீயும் சதை உரசலில் தீரும் என்றால் இந்த அகத்தீ என்று தணியும் நாயகமே !

இது கவி அல்ல மன வலி ! நான் கவிஞனும் அல்ல உங்கள் வீட்டு வாயினில் நிக்கும் ஏழை !!

**************************************************************************************************************************************************

மலை புரண்ட வரலாறு பல பக்கங்களை கால சக்கரத்தில் நிரப்பி உள்ளது !

உங்கள் வருகையால் பல்லாயிர மனங்கள் புரண்ட வரலாறை எந்த பக்கங்களில் அடைப்பது !

கவிஞனின் கருப்பொருள் கவிதைக்குள் அடைபட்டு விடும் !

குழந்தையின் அழுகை தாய் பாலுக்கு அடங்கி விடும் !

தொழிலாளியின் உடல் வலி தூக்கத்தில் தோய்ந்து விடும் !

இரவு நேர பாடகனின் பசி , வந்து விழும் ஐந்து நாணயங்களில் அடங்கி விடும் !

எதை கொண்டு இதை அடைப்பேன் யா ரசூலுல்லாஹ் !

எங்கு ஆரம்பித்து எங்கு முடிப்பேன் யா ரசூலுல்லாஹ் !

கணிதமும் திணறும் முடிவிலியே யா ரசூலுல்லாஹ் !

**************************************************************************************************************************************************

வசந்த காலத்தில் சேர்த்த உணவை எண்ணி எறும்பு மழைகாலத்தில் மகிழ்ச்சியாய் தன் கூட்டுக்குள் உறங்குவது போல் , தன் உணவு தேவையை வெளியில் இருக்கும் தாயிடம் கூறிவிட்டு அதை பற்றி சிறிதும் சலனம் இல்லாமல் கூட்டில் காத்திருக்கும் கழுகு குஞ்சுகள் போல் , கதவை தாழிட்டு விட்டு திருட்டு பயமற்று வீட்டில் உறங்கும் கிழவியை போல்

நானும் மரண பயமற்று நடமாடுகின்றேன் தாங்கள் என் கபுரில் முகம் காட்டுவீர் என்று நம்பிகையுடன் யா ரசூலுல்லாஹ் !!!

**************************************************************************************************************************************************

காதல் பசி இரண்டும் மனிதனை வேலிகளை தாண்ட வைக்கும் !

வரம்புகளை மீற வைக்கும் !

பல தேசங்களை தாண்ட வைக்கும்!

அதற்கு மனிதாபிமானம் தெரியாது !

பசியாளிக்கு உணவை பார்த்தால் இங்கிதம் தெரியாது !

காதலனுக்கு காதலியை பார்த்து விட்டால் அவனையே அவனுக்கு தெரியாது !

பட்டினியின் கொடுமையில் காதலோ காதலியோ தெரியாது !

காதலின் பைத்தியத்தில் பசி வலி எதுவும் புரியாது !

எனது பசியும் காதலுமாய் தாங்கள் இருகின்றீர்கள் யா ரசூலுல்லாஹ் !

**************************************************************************************************************************************************

தாங்கள் நடக்கும் வெள்ளி வீதியில் கிடந்த மண்துகள் எல்லாம் யா ரசூலுல்லாஹ் எத்தனை ஆண்டுகள் காற்றில் பிரயாண பட்டு மதீனா வீதியை அடைந்து இருக்கும் ! சில வினாடி உங்கள் காலணி பாதத்தை முத்தமிட பல ஆண்டுகள் பிரயாணம் !

ஆறு கடந்தோம் யாம் பேறு பெற !

மலை கடந்தோம் யாம் எம் உயிரை உங்கள் காலடியில் விலையாக்க !

நெஞ்சுடைத்தோம் ! எதிரியாய் வந்த எதிர் காற்றை எட்டி உடைத்தோம் !

மீறினால் தடையாய் வந்தால் பூமியை திசை மாற்றி சுழல விடுவோம் !

யாம் அற்ப மண்துகள் என்றாலும் தங்கள் காதலினால் ஏற்பட்ட நெஞ்சுரம் மலை போன்றது எதையும் புரட்ட வல்லது ! எதையும் இழப்போம் உங்கள் பாதார விந்தத்தை முத்தமிட அது என் உயிராயினும் சரியே !

ஒரு கணம் என் மீது நடந்து விட்டு செல்லுங்கள் யா ரசூலுல்லாஹ் !

என்னை மழை அடித்து செல்லும் முன் !

காற்று எம்மை பராகிராமம் செய்வதற்கு முன்!

கடுந்தவமாய் காத்திருக்கிறேன் யா ரசூலுல்லாஹ் மதீனத்து வீதியில் புழுதியோடு புழுதியாய் !

உடையாத நம்பிகையுடன் !!!

**************************************************************************************************************************************************

மக்மூதரின் ராஜப்பாட்டையில் ஒரு எளியோனின் பணிவான முறையீடு !

அரசவை என்றால் அறிஞர் , சான்றோர்கள் , புலவர்கள் எல்லோரும் அரசரோடு குழுமியிருப்பார்கள் !

அரசரே அரசவையில் எல்லாமுமாய் சிம்மாசனத்தில் அமர்ந்து இருபது தாங்கள் தான் யா ரசூலுல்லாஹ் !

நிகழ் கால அரசர்கள் எல்லாம் நகர் வலத்தில் அசுத்தம் கொண்ட சேரிகளை தவிர்பதுண்டு !

ஆனால் தாங்களின் அரசவையே இப்பாவியின் சேரியான இருளடைந்த இதயத்தில் !

இதய வேந்தரே ! இனிய நாதரே ! என் இதயம் வாடுதே நபி உதயம் காணவே !

பாவிகளின் பாவ பிணி போக்கும் ராஜபாட்டையே யா ரசூலுல்லாஹ் !!

**************************************************************************************************************************************************

தாங்கள் நடக்கும் வழியில் கிழவி உங்கள் மீது கொட்டிய குப்பை யில் மீதி இருந்தால் என் தலை மீது கொஞ்சம் கொட்டுங்கள் யா ரசூலுல்லாஹ் ! என் தலை கனமாவது குறைந்து போகட்டும்!

தாயிப் கற்கள் மீதி இருந்தால் என் மீது எறியுங்கள் யா ரசூலுல்லாஹ் !

இன்றே உங்கள் திருகரங்களால் என் உயிர் போகட்டும் !

ஒரு வகையில் அபு ஜஹீலும் கொடுத்து வைத்தவன் தான் !

தாங்கள் திருகரங்களால் அவனுக்கு மரணம் ஏற்பட்டதற்காக !!!

எம் பாவ பிணி இன்றோடு தீர்ந்து போகட்டும் !

தாங்கள் திருகரங்கள் எறிந்த அந்த குப்பையும் கல்லும் போதும் !!!

**************************************************************************************************************************************************

கார்காலத்தில் ஈரத்துணியில்

கட்டிய முளை பயிர்கள் வேர் விடும் போது ஈரதுணியை அது வருடுவது போல் தாங்களின் நினைவுகள் என் நெஞ்சை வருடுகின்றது யா ரசூலுல்லாஹ் !

இலையாய் நான் அழுதேன் கிளைகள் என் சோகம் உணரவில்லை !

வேரில் நான் அழுதேன் என் பூவோ சோகம் உணரவில்லை !

உற்றார் பெற்றோர் விலகிடுவார் !

அவர் உதறிடுவார் !

நீர் உதவிடுவீர் யா ரசூலுல்லாஹ் !!

**************************************************************************************************************************************************

கவிஞன் வார்த்தை பஞ்சத்தால் சில நேரம் கவிதை தேடி அலைந்ததுண்டு !

கவிதையும் சில நேரம் கற்பனை பஞ்சத்தில் கவிஞனை தேடி அலைந்ததுண்டு !

ஆனால் முக்காலமும் கவியும் கற்பனையும் , சொல்லும் வார்த்தையும் ,

ஏன் அதை ஒழுங்கமைத்த கவிஞன் கூட தேடியது பஞ்சம் இல்லாமல் கிடைக்கும் தாங்களை தான் யா ரசூலுல்லாஹ் !

கவிதை பஞ்சத்தில் உங்கள் ஆஷிகீன்கள் வாடும் போது ! சில நேரம் நாங்களே கவிதையாகி போகின்றோம் யா ரசூலுல்லாஹ் ! எனில் நீங்கள் எம்மில் கவிதையாய் இருப்பாதால் !

**************************************************************************************************************************************************

பிணக்குவியல்கள் பலவீனமனவனுக்கு மரணத்தை ஞாபகபடுத்துகின்றன !

ஆபரண குவியல் பேதைக்கு மணவாழ்க்கை ஞாபகபடுத்துகின்றது !

ஈசல் இறக்கை விரிப்பு ஒரே நாளில் நிரந்தரமில்லா அத்தியாய முடிவை ஞாபக படுத்துகின்றது !

வண்டு ஒலிக்கும் ரீங்கராம் மலரின் பெண்பால் மகரந்தத்தை ஞாபக படுத்துகின்றது !

அனாதையின் அழுகை தாயின் தேடலை ஞாபக படுத்துகின்றது !

எதை எது வேண்டுமானாலும் ஞாபக படுத்தி விட்டு போகட்டும் !

பாவத்தால் மெலிந்த இந்த ஏழை பாவிக்கு எல்லாமே தாங்கலை தான் ஞாபகம் படுத்துகின்றது யா ரசூலுல்லாஹ் !

**************************************************************************************************************************************************

அஸ்ஸலாது வஸ்ஸலாமு அலைக்க யா ஸைய்யதி யா ரஸுலல்லாஹ்...!

அஸ்ஸலாது வஸ்ஸலாமு அலைக்க யா ஸைய்யதி யா ஹபீபல்லாஹ்...!

தமிழ்  - இஸ்லாமிய கவிதைகள் & இலக்கியங்கள்  - முஹம்மத் ரியாஸ் பைஜி கவிதைகள்