MAIL OF ISLAM

Knowledge & Wisdomநபி ஹூத் அலைஹிஸ்ஸலாம் வரலாறு


பிறப்பு:

ஹஸ்ரத் நபி நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மகன் ஸாமின் மகன் அர்பக்ஷாந்த் அவர்களின் மகன் ஷாலிக் என்பவரின் மகனே ஹஸ்ரத் நபி ஹூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களாவார்கள். மேலும் ஹஸ்ரத் நபி நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மகன் ஸாமின் மகன் உஸ் அவர்களின் மகன் ஆத் என்பவரின் மகனே ஹஸ்ரத் நபி ஹூத் (அலைஹிஸ்ஸலாம்) என்றும் ஒரு வரலாறு கூறுகிறது. (இப்னு கதிர்)குணாதிசயங்கள்:

ஹஸ்ரத் நபி ஹூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் உருவத்திலே தம் முதல் தந்தை ஹஸ்ரத் நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அன்னவர்களை ஒத்து இருந்தனர். அவர்களின் உடல் முழுவதும் மயிர் நிறைந்து இருந்தது. சிறு வயது முதலே அவர்கள் தம் சமூகத்தினரை விட்டும் மாறுப்பட்டு இருந்தனர். அம்மக்களை போல் கோவிலுக்கு சென்று சிலைகளை வணங்காமல் அல்லாஹ்வையே வணங்கும் நல்ல மனிதராக அவர்கள் இருந்தார்கள்.திருமணம்:

ஹஸ்ரத் நபி ஹூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மீஷா ஸபா என்னும் மங்கை நல்லடியாரை திருமணம் செய்து மகிழ்ச்சியுடன் குடும்ப வாழ்க்கை நடத்தி வந்தார்கள்.நபித்துவம்:

அவர்களுக்கு நாற்பது வயதானதும் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு நபித்துவம் பிரகடனப்படுத்தப்பட்டது. அவர்களை ஆத் சமுதாயத்திற்கு நபியாக அல்லாஹ் அனுப்பி வைத்தான்.ஆது சமூகம்:

ஆத் சமுதாயத்தவரின் இருப்பிடம் அஹ்காப் (Ahqaf) என்ற பிரதேசமாகும். அது ஹிஜாஸ், யேமன், யமாமா ஆகிய பகுதிகளுக்கு இடையில் உள்ளது. இங்கிருந்து தொடங்கி யமனின் மேற்கு கடலோரம் ஓமான், ஹளரமவ்த்திலிருந்து இராக் வரை அம்மக்களின் அதிகாரச் செல்வாக்கு பரவியிருந்தது.


அல்லாஹ்வின் படைப்புகளிலே ஆத் கூட்டத்தினர் மிக்க உயரமானவர்களாகவும், மிகவும் வலுவானவர்களாகவும் இருந்தனர். அவர்கள் மலையை குடைந்து பெரிய கட்டிடங்களையும், பெரிய மாளிகைகளையும் கட்டினார்கள். (மலையை குடைந்து கட்டிய மாளிகை இன்னும் காணப்படுகிறது). மேலும் வேலைப்பாடுகள் மிகுந்த உயரமான நினைவு சின்னங்களை அம்மக்கள் எழுப்பினர். அவர்களின் ஒவ்வொருவரும் ஒரு ஒட்டகத்தை அறுத்து உண்ணும் இயல்புடையவராக இருந்தனர். அம்மக்களின் உணவு ஒட்டக இறைச்சியாகவே இருந்தது. இதனால் அல்லாஹ் அவர்கள் வாழ்ந்த பிரதேசத்தில் அதிகமான ஒட்டகைகளை பல்கி பெருக செய்தான். மேலும் அம்மக்கள் அல்லாஹ்வை மறந்து, ராஸிகா, ஹாஃபிதா, ஸாபிகா என்னும் மூன்று கல்லுருவங்களை அமைத்து அவற்றை தெய்வம் என வழிப்பட்டு வந்தனர்.ஏகத்துவ பிரச்சாரம்:

ஹஸ்ரத் நபி ஹூத் (அலைஹிஸ்ஸலாம்) தன்னுடைய சமுதாயத்தவரின் குற்றப்பட்டியலை சுட்டிக்காட்டி அவர்களுக்கு உபதேசம் செய்தார்கள். விக்கிரகங்களை வணங்குவதை விட்டுவிட்டு அல்லாஹ்வை வணங்குமாறும், தான் அல்லாஹ்வின் நபி என்றும் ஹஸ்ரத் ஹூத் நபி அம்மக்களுக்கு போதித்தார்கள்.


மேலும், உங்களுக்கு நல்ல உடல் வலிமையையும், கம்பீரத்தையும் (மற்றவர்களை விட) உங்களுக்கு அதிகமாக கொடுத்ததையும் மறந்து விடாதீர்கள். (நீங்கள் (எவரையும்) பிடித்தால் (ஈவிரக்கமின்றி) மிக கொடுமையாக நடத்துகின்றீர்கள். அல்லாஹ்வின் வியக்கத்தக்க ஆற்றலை நினைத்துப் பாருங்கள் என்றார்கள். அதற்கு அம்மக்கள் எங்கள் முன்னோர்கள் வணங்கி கொண்டிருந்தவைகளை நாங்கள் புறக்கணித்து விட்டு, அல்லாஹ் ஒருவனையே வணங்கும்படி செய்யவா நீங்கள் நம்மிடம் வந்தீர்கள்? நீர் உணமையானவராயின், நீர் எந்த வேதனையைக் குறித்து எங்களை எச்சரிக்கை செய்து கொண்டிருக்கின்றீரோ அதனை எங்களிடம் கொண்டு வாரும் என்று கூறினார்கள். அதற்கு ஹுது (அலைஹிஸ்ஸலாம்) உங்கள் இறைவனின் வேதனையும், சினமும் உங்கள் மீது விதிக்கப்பட்டு விட்டது என்று கூறினார்கள்.ஆத் சமூகத்தின் அழிவு:

ஆத் சமூகத்தினர் மிகப் பெரிய இரைச்சலுடன் கூடிய சூறாவளி காற்றால் அழிக்கப்பட்டார்கள். அல்லாஹ் அந்த சூறாவளி காற்றை அவர்கள் மீது ஏழு இரவுகளும், எட்டு பகல்களும் தொடர்ந்து ஏவினான். இற்றுப்போன ஈச்சமரத் தண்டுகளைப் போன்று அவர்கள் முகங்குப்புற வீழ்ந்து கிடந்தார்கள். அங்கு எவரும் மிஞ்சி இருக்கவில்லை.ஹஸ்ரத் நபி ஹூத் (அலைஹிஸ்ஸலாம்) மற்றும் ஆது கூட்டம் பற்றி அல்குர்ஆன்:

26:125. “நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதன் ஆவேன்.

26:126. ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கும் வழிப்படுங்கள்.

26:127. “மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.

26:128. “நீங்கள் ஒவ்வோர் உயரமான இடத்திலும் வீணாக சின்னங்களை நிர்மாணிக்கின்றீர்களா?

26:129. இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று, (அழகிய வேலைப்பாடுகள் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கின்றீர்களா?

26:130. “இன்னும், நீங்கள் (எவரையும் ஏதுங் குற்றங்களுக்காகப்) பிடித்தால் மிகவும் கொடியவர்கள் போல் பிடிக்கின்றீர்கள்.

26:131. “எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.

26:132. “மேலும், நீங்கள் அறிந்திருக்கும் (பாக்கியமான பொருள்களையெல்லாம் கொண்டு) உங்களுக்கு உதவியளித்தவனை அஞ்சுங்கள்.

26:133. “அவன் உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளையும், பிள்ளைகளையும் கொண்டு உதவியளித்தான்.

26:134. “இன்னும் தோட்டங்களையும், நீரூற்றுக்களையும் (கொண்டு உதவியளித்தான்).

26:135. “நிச்சயமாக நான் உங்கள் மீது மகத்தான நாளின் வேதனைப் பற்றி அஞ்சுகிறேன்” (எனக் கூறினார்).

26:136. (இதற்கு) அவர்கள்: “நீர் எங்களுக்கு உபதேசம் செய்தாலும் அல்லது நீர் எங்களுக்கு உபதேசம் செய்பவராக இல்லாதிருப்பினும் (இரண்டுமே) எங்களுக்கு சமம்தான்” எனக் கூறினார்கள்.

26:137. “இது முன்னவர்களின் வழக்கமேயன்றி (வேறு) இல்லை.

26:138. “மேலும், நாங்கள் வேதனை செய்யப் படவும் மாட்டோம்.”

46:21. மேலும் “ஆது” (சமூகத்தாரின்) சகோதரர் (ஹூது) திடமாகவே, அவருக்கு முன்னரும், அவருக்குப் பின்னரும் எச்சரிக்கை செய்பவர்கள் (இறை தூதர்கள்) வந்திருக்கிறார்கள் - (அவர்) தம் சமூகத்தாரை, “அல்லாஹ்வையன்றி (வேறு எதனையும்) நீங்கள் வணங்காதீர்கள் - நிச்சயமாக ஒரு கடுமையான நாளின் வேதனை உங்களுக்கு வரும் என்று நான் பயப்படுகிறேன்” என்று மணல் குன்றுகளிலிருந்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்ததை (நபியே!) நீர் நினைவு கூர்வீராக.

46:22. அதற்கு அவர்கள்: “எங்களுடைய தெய்வங்களை விட்டும் எங்களைத் திருப்பி விட நீர் எங்களிடம் வந்தீரா? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் எதைக் கொண்டு எங்களை பயமுறுத்துகிறீரோ அ(வ் வேதனையான)தைக் கொண்டு வாரும்” என்று கூறினார்கள்.

46:23. அதற்கவர்: “(அது எப்பொழுது வரும் என்ற) ஞானம் நிச்சயமாக அல்லாஹ்விடம் தான் இருக்கிறது; மேலும், நான் எதைக் கொண்டு உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறேனோ அதையே நான் உங்களுக்குச் சேர்ப்பித்து, எடுத்துரைக்கின்றேன்் - எனினும் நான் உங்களை அறிவில்லாத சமூகத்தாராகவே காண்கிறேன்” என்று கூறினார்.

46:24. ஆனால் அவர்களோ (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், “இது நமக்கு மழையைப் பொழியும் மேகமாகும்” எனக் கூறினார்கள்; “அப்படியல்ல, இது நீங்கள் (எதற்காக) அவசரப்பட்டீர்களோ அதுதான்; (இது கொடுங்)காற்று - இதில் நோவினை செய்யும் வேதனை இருக்கிறது:

46:25. “அது தன் இறைவனின் கட்டளையினால் எல்லாப் பொருட்களையும் அழித்துவிடும்” (என்று கூறப்பட்டது). பொழுது விடிந்த போது, (அழிக்கப்பட்ட அவர்களுடைய) வீடுகளைத் தவிர (வேறு) எதுவும் காணப்படவில்லை - இவ்வாறே குற்றம் செய்யும் சமூகத்திற்கு நாம் கூலி கொடுக்கிறோம்.

46:26. உங்களுக்கு (மக்காவாசிகளுக்கு) இங்கு எதில் வசதிகள் செய்து கொடுக்காதிருந்தோமோ அவ்வசதிகளையெல்லாம் நாம் அவர்களுக்குத் திடமாகச் செய்து கொடுத்திருந்தோம். மேலும் அவர்களுக்கும் செவிப் புலனையும் பார்வைகளையும் இருதயங்களையும் நாம் கொடுத்திருந்தோம்; ஆயினும் அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டிருந்த போது, அவர்களுடைய செவிப் புலனும், பார்வைகளும் இருதயங்களும் அவர்களுக்கு யாதோர் பயனுமளிக்கவில்லை - எ(வ்வே)தனைப் பற்றி அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது.

46:27. அன்றியும், உங்களைச் சுற்றி இருந்த ஊ(ரா)ர்களையும் திடமாக நாம் அழித்திருக்கிறோம், அவர்கள் (நேர்வழிக்கு) மீளும் பொருட்டு நாம் (அவர்களுக்குப்) பல அத்தாட்சிகளைத் திருப்பித் திருப்பிக் காண்பித்தோம்.

51:41. இன்னும், “ஆது” (சமூகத்தாரிலும் ஒரு படிப்பினை இருக்கிறது); நாம் அவர்கள் மீது (நாசம் விளைவிக்கக் கூடிய) மலட்டுக்காற்றை அனுப்பிய போது;

51:42. அ(க்காற்றான)து தன் எதிரில் பட்டதையெல்லாம் தூள் தூளாக்காமல் விடவில்லை.

54:18. “ஆது” (கூட்டத்தாரும் தங்கள் நபியை) பொய்ப்படுத்தினர்; அதனால், என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும். எச்சரிக்கையும் எப்படி இருந்தன (என்பதை கவனிக்க வேண்டாமா?)

54:19. நிச்சயமாக நாம் அவர்கள் மீது, நிலையான துர்பாக்கியமுடைய ஒரு நாளில், பேரிறைச்சலைக் கொண்ட வேகமான காற்றை அனுப்பினோம்.

54:20. நிச்சயமாக: வேரோடு பிடுங்கப் பட்ட பேரீத்த மரங்களின் அடித்தூறைப் போல் (அக்காற்று) மனிதர்களை பிடுங்கி எறிந்து விட்டது.

54:21. ஆகவே, என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும் எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதைக் கவனிக்க வேண்டாமா?)

69:6. இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.

69:7. அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான்; எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.