MAIL OF ISLAM

Knowledge & Wisdom



நபி இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் வரலாறு


பிறப்பு

ஆதி தந்தை ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிலே பிரகாசித்த நூரே முஹம்மதிய்யா அவர்களின் புதல்வர் நபி ஷீது (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் நெற்றியில் பிரகாசிக்க அது அவர்களின் வழித்தோன்றலிலே ஊடுறுவி நபி இத்ரீஸ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிலே இலங்கியது. எகிப்து நாட்டில் உள்ள மனாப் (மெம்பிஸ்) என்ற ஊரில் பிறந்தார்கள். 



தோற்றம்

அவர்கள் அழகிய உருவினராக விளங்கினார்கள். அவர்களின் உடல் பழுப்பு நிறமாக இருந்தது. உடலில் சதை பற்று குறைவாக இருந்தது. உயர்ந்த உருவினராக இருந்த அவர்கள் பெரிய மீசையும், தாடியும் வைத்து இருந்தார்கள். அவர்களின் ஒரு காது மற்ற காதை விட பெரியதாக இருந்தது.



குணாதிசயம்

அவர்கள் வாய்மூடி, எதையோ சிந்தித்த வண்ணம் இருப்பார்கள். பேசினால் மெதுவாக பேசுவார்கள். சுட்டு விரலை அசைத்து, அசைத்து பேசுவார்கள். நடந்தால் தலையை குனிந்த வண்ணம் நடந்து செல்வார்கள்.



வியாபாரம்

அவர்கள் தையல் தொழில் செய்து வந்தார்கள்.



சிறப்பு பெயர்

வேதங்களை நன்கு கற்றும், மக்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்ததின் காரணத்தால் “பாடம் கற்றுக்கொடுப்பவர்” என பொருள்பட “இத்ரீஸ்” என பெயர் கொண்டு அழைக்கப்பட்டார்கள்.



ஏகத்துவ பிரச்சாரம்

அல்லாஹ் அவர்களை விக்ரகங்களை வணங்கி, அக்கிரமும், அனாச்சாரமும் புரியக்கூடிய காபில் என்பவருடைய சந்ததியினரின் பால் அனுப்பி, கடும் எதிர்ப்புக்கும் பேராட்டங்களுக்கும் மத்தியிலே மனம் தளராது இறைவன் நல்லுபதேசங்களை எடுத்துரைக்கச் செய்தான்.



வணக்கம்

இவர்களுக்கு வல்லவன் அல்லாஹ் 30 ஏடுகளை வழங்கினான். அம்முப்பது ஏடுகளையும் இரவும், பகலும் ஓத இவர்களின் அதிகப்படியான வணக்கங்களை வானவர்களே கண்டு வியப்படைந்தார்கள். இவர்களின் ஒரு நாள் வணக்கம், வாழும் அனைத்து மக்களின் ஒரு நாள் வணங்கும் வணக்கத்திற்கு சமமானது.



சுவனம் செல்லல்

ஒரு சமயம் நபி இத்ரீஸ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் இறையிடம் இறைஞ்சினார்கள். இறைவா! நான் சுவனம் பார்க்க விரும்புகிறேன். என் விருப்பத்தை பூர்த்தி செய்வாயாக! இறைவன் இவர்களின் வேண்டுதலை ஏற்று மலக்குமார்களுக்கு ஆணையிட்டான்.


“வானவர்களே! சுவனத்தின் மரக்கிளைகளில் ஒரு கிளையை எனதடியார் இத்ரீஸ் (அலைஹிஸ்ஸலாம்) நிற்கும் இடத்தை நோக்கி செலுத்துங்கள்” என கூற, சுவனத்து காவலர்கள் சுவன மரக்கிளையை நபி இதரீஸ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை நோக்கி செலுத்த அக்கிளையை பற்றி பிடித்து சுவனம் அடைந்தார்கள். சுவனக் காவலர்கள் சுவனத்தில் இறைவனின் அருட்கொடைகளை சுற்றிக் காண்பித்தார்கள். நீண்ட நேரமாகியும் சுவனத்தை விட்டும் வெளியில் வராததை கண்ணுற்ற வானவர்கள் வெளியேறும் படி கூற நபி இத்ரீஸ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் வானவர்களை பார்த்து சுவனத்தில் நுழைந்தவர்கள் அதிலிருந்து வெளியாக்கப்பட மாட்டார்கள் என இறைவன் கூறியுள்ளான். எனவே நான் வெளியில் வரமாட்டேன் என கூறினார்கள்.


இதனைக் கேட்ட இறைவன் “வானவர்களே! என் அடியார் இத்ரீஸை சுவனத்திலேயே விட்டு விடுங்கள். அவர் அங்கேயே எக்காலமும் இருக்கட்டும்” என்றான். மலக்குகளும் இறைவன் கூற்றுப்படி அவர்களை சுவனத்திலே இருக்கவிட்டுவிட்டார்கள். சுவனத்தில் உயர்த்தப்படும் சமயம் அவர்களின் வயது 365.