MAIL OF ISLAM

Knowledge & Wisdom




நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் வரலாறு


பிறப்பு:

ஹஸ்ரத் இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் முதல் மனைவி சாரா நாயகிக்கு 20 வருட காலமாக குழந்தை இல்லாத காரணத்தால், ஹஸ்ரத் இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம், சாரா நாயகி அவர்கள் “அல்லாஹ் எனக்கு குழந்தை பாக்கியத்தை தரவில்லை. இந்த அடிமைப்பெண் ஹாஜராவை கல்யாணம் பண்ணிக் கொள்ளுங்கள். அவள் மூலமாக உங்களுக்கு அல்லாஹ் குழந்தை பாக்கியத்தை தரலாம்” என்று கூறினார்கள். அதன்படி ஹஸ்ரத் இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அன்னை ஹாஜராவை மணம் புரிந்து கொண்டார்கள். அவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தையே ஹஸ்ரத் இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) ஆவார்கள்.


ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் பிறக்கும்போது ஹஸ்ரத் இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு வயது 86 ஆகும். எகிப்து நாட்டு மன்னர் அன்னை ஸாராவுக்கு அன்னை ஹாஜராவை அன்பளிப்பு செய்திருந்தார்.



மக்காவுக்கு செல்லல்:

ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கும் அவர்களின் மனைவி அன்னை ஸாரா அவர்களுக்குமிடையே மனத்தாங்கல் ஏற்பட்டபோது, ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களையும், அவர்களின் தாயாரான அன்னை ஹாஜராவையும் அழைத்துக் கொண்டு மக்காவை நோக்கிச் சென்றார்கள்.



தனிமைப்படுத்தப்படல்:

சிறிது காலத்தில் ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு அல்லாஹ்விடம் இருந்து ஒரு உத்தரவு வந்தது. அது என்னவென்றால் தம் மனைவி, மகன் இருவரையும் கூட்டி சென்று கஃபாவின் மேல்பகுதியில் விட்டுவிட்டு வருமாறு.


அதன்படி, ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அன்னை ஹாஜர் தம் மகன் இஸ்மாயீலுக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் காலக் கட்டத்தில் இருவரையும் கூட்டி வந்து அவர்களை கஃபாவின் மேல்பகுதியில் (இப்போதுள்ள) ஸம்ஸம் கிணற்றிற்கு மேல் பெரிய மரம் ஒன்றின் அருகே வைத்துவிட்டார்கள். அந்த நாளில் மக்காவில் எவரும் இருக்கவில்லை. அங்கு தண்ணீர் கூட கிடையாது. இருந்தும் அவ்விருவரையும் அங்கு இருக்கச் செய்தார்கள். அவர்களுக்கு அருகே பேரீச்சம்பழம் கொண்ட தோல்பை ஒன்றையும் தண்ணீருடன் கூடிய தண்ணீர்ப் பை ஒன்றையும் வைத்தார்கள். பிறகு இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அவர்களை அங்கேயே விட்டு விட்டு தமது ஷாம் நாட்டிற்கு திரும்பிச் சென்றார்கள்.


அப்போது அவர்களை ஹஸ்ரத் இஸ்மாயீலின் அன்னை ஹாஜர் அவர்கள் பின்தொடர்ந்து வந்து “இப்ராஹீமே! மனிதரோ, வேறெந்த பொருளுமோ இல்லாத இந்தப் பள்ளத்தாக்கில் எங்களை விட்டு விட்டு நீங்கள் எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டார்கள். இப்படி பல முறை அவர்களிடம் கேட்டார்கள். இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அவரை திரும்பி பார்க்காமல் நடக்கலானார்கள். ஆகவே அவர்களிடம் ஹாஜர் நாயகி அவர்கள் 'அல்லாஹ்தான் உங்களுக்கு இப்படி கட்டளையிட்டனா?” என்று கேட்க, அதற்கு இப்ராஹிம் நபியவர்கள் ஆம் என்று சொன்னார்கள். அதற்கு அன்னை ஹாஜர் அவர்கள் “அப்படியென்றால் அல்லாஹ் எங்களைக் கைவிடமாட்டான்” என்று சொல்லிவிட்டு திரும்பிச் சென்று விட்டார்கள்.


ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் சிறிது தூரம் நடந்து சென்று மலைக் குன்றின் அருகே அவர்களை எவரும் பார்க்காத இடத்திற்கு வந்தபோது தம் முகத்தை இறையில்லம் கஅபாவை நோக்கி திருப்பி, பிறகு தம் இரு கரங்களையும் உயர்த்தி இந்த சொற்களால் பிரார்த்தித்தார்கள்.


"எங்கள் இறைவா! உன் ஆணைப்படி நான் என் மக்களில் சிலரை இந்த வேளாண்மையில்லாத பள்ளத்தாக்கில் கண்ணியத்திற்குரிய உன் இல்லத்திற்கு அருகில் குடியமர்த்திவிட்டேன். எஙகள் இறைவா! இவர்கள் (இங்கு) தொழுகையை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்தேன்) எனவே இவர்கள் மீது அன்பு கொள்ளும்படி மக்களின் உள்ளங்களை ஆக்குவாயாக! மேலும் இவர்களுக்கு உண்பதற்கான பொருள்களை வழஙகுவாயாக! இவர்கள் நன்றியுடையவர்களாய் இருப்பார்கள் என்று இறைஞ்சினார்கள்." (அல்குர்ஆன் 14-37)



ஸஃபா, மர்வா:

ஹஸ்ரத் இஸ்மாயீலின் அன்னை ஹாஜர் அவர்கள் இஹ்மாயீலுக்கு பாலூட்டும் அந்த காலக்கட்டத்தில், தம்மிடம் இருந்த அந்த தண்ணீரிலிருந்து தாகத்திற்கு நீர் அருந்தவும் தொடங்கினார்கள். தண்ணீர் பையிலிருந்த தண்ணீர் தீர்ந்துவிட்டபோது அவர்களும் தாகத்திற்குள்ளானார்கள். அவருடைய மகனும் தாகத்திற்குள்ளானார். தம் மகன் தாகத்தில் புரண்டு புரண்டு அழுவதை அல்லது தரையில் காலை அடித்துக் கொண்டு அழுவதை அவர்கள் பார்க்கலானார்கள். அதைப் பார்க்கப் பிடிக்காமல் சிறிது தூரம் நடந்தார்கள். பூமியில் தமக்கு மிக அண்மையிலுள்ள மலையாக ஸஃபாவைக் கண்டார்கள். அதன் மீது ஏறி நின்று கொண்டு மனிதர்கள் யாராவது கண்ணுக்குத் தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டபடி பள்ளத்தாக்கை நோக்கி பார்வையைச் செலுத்தினார்கள். எவரையும் அவர்கள் காணவில்லை. ஆகவே ஸஃபாவிலிருந்து இறங்கிவிட்டார்கள். இறுதியில் பள்ளத்தாக்கை அவர்கள் அடைந்த போது தம் மேலங்கியின் ஓரத்தை உயர்த்திக் கொண்டு சிரமப்பட்டு ஓடும் ஒரு மனிதனைப் போன்று ஓடிச்சென்று பள்ளத்தாக்கை கடந்தார்கள். பிறகு மர்வா மலைக் குன்றிற்கு வந்து அதன் மீது ஏறி நின்று யாராவது தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டார்கள். எவரையும் காணவில்லை. குழந்தை இஸ்மாயீல் அதே நிலையில் தான் அழுதபடி இறப்பற்கு முன் மூச்சுத் திணறுவதைப் போல் முனகிக் கொண்டிருந்தார்கள். அவரின் (பெற்ற) மனம் அவரை நிம்மதியாக இருக்கவிடவில்லை. எனவே, அம்மையார் அவர்கள் (தமக்குள்) 'நான் போய் நோட்டமிட்டால் எவராவது தென்படக் கூடும்" என்று கூறிச் சென்று ஸஃபா மலைக் குன்றின் மீதேறிப் பார்த்தார்கள். பார்த்தார்கள். பார்த்துக்கொண்டேயிருந்தார்கள். ஆனால் எவரும் அவருக்குத் தெரியவில்லை. இவ்வாறே ஏழு முறை செய்தார்கள்.


ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். இதுதான் இன்று ஹஜ்ஜில் மக்கள் ஸஃபாவுக்கும் மர்மாவுக்குமிடையே செய்கின்ற ஸஃயு (தொங்கோட்டம்) ஆகும் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் சொன்னார்கள்.



ஸம்ஸம் தண்ணீர் உருவாதல்:

அவர்கள் மர்வாவின் ஏழாவது முறை மீது ஏறி நின்றுபோது, ஒரு குரலைக் கேட்டார்கள். அமைதியாய் இரு என்று தமக்கு தாமே கூறிக்கொண்டார்கள். பிறகு காதைத் நன்றாக தீட்டிக் கேட்டார்கள். அப்போது அதே போன்ற ஒரு குரலை மீண்டும் செவியுற்றார்கள். உடனே "(அல்லாஹ்வின் அடியாரே!) நீங்கள் சொன்னதை நான் செவியுற்றேன். உங்களிடம் உதவியாளர் எவரேனும் இருந்தால் (என்னிடம் அனுப்பி என்னைக் காப்பாற்றுங்கள் என்று சொன்னார்கள். அப்போது அங்கே தம் முன் வானவர் ஒருவரை (இப்போதுள்ள) ஸம்ஸம் கிணற்றின் அருகே கண்டார்கள். அந்த வானவர் தம் குதிகாலால் அல்லது தமது இறக்கையினால் மண்ணில் தோண்டினார். அதன் விளைவாக அங்கிருந்து தண்ணீர் வெளிப்பட்டது. உடனே அன்னை ஹாஜர் அவர்கள் அதை ஒரு தடாகம் போல் கையால் அமைக்கலானார்கள். அதை தம் கையால் இப்படி ஓடிவிடாதே! நில் நில் என்று சைகை செய்து சொன்னார்கள். அதுவே ஸம்ஸம் என்று பெயர் பெற்றது. இந்த தண்ணீரிலிருந்து அள்ளித் தம் தண்ணீர்ப் பையில் போட்டுக் கொள்ளத் தொடங்கினார்கள். அவர்கள் அள்ளியெடுக்க எடுக்க அது பொங்கியபடியே இருந்தது.


நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் அன்னைக்கு கருணை புரிவானாக! ஸம்ஸம் நீரை அவர் அப்படியே விட்டுவிட்டிருந்தால் அல்லது அந்த தண்ணீரிலிருந்து அள்ளியிருக்காவிட்டால் ஸம்ஸம் நீர் பூமியில் ஓடும் நீர் ஊற்றாக மாறிவிட்டிருக்கும்” என்பதாக.


பிறகு அன்னை ஹாஜர் அவர்கள் ஸம்ஸம் தண்ணீரை அருந்தினார்கள். இதனால் அவர்களது தாய்பால் அதிகரிக்கவே, குழந்தைக்கும் தாய்ப்பால் ஊட்டினார்கள். அப்போது அந்த வானவர் அவர்களிடம் நீங்கள் (கேட்பாரற்று) வீணாக அழிந்து போய்விடுவீர்கள் என்று அஞ்ச வேண்டாம். ஏனெனில் இங்கு இந்தக் குழந்தையும் இவருடைய தந்தையும் சேர்ந்து (புதுப்பித்துக்) கட்டவிருக்கின்ற அல்லாஹ்வின் இல்லம் உள்ளது. அல்லாஹ் தன்னை சார்ந்தோரைக் கைவிடமாட்டான் என்று சொன்னார். இறையில்லமான கஃபா மேட்டைப் போன்று பூமியிலிருந்து உயர்ந்திருந்தது. வெள்ளங்கள் வந்து அதன் வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் (வழிந்து) சென்றுவிடும். இவ்வாறே அன்னை ஹாஜர் அவர்கள் (தண்ணீர் குடித்துக்கொண்டும் பாலூட்டிக் கொண்டும்) இருந்தார்கள்.



ஜூர்ஹூம் குலத்தினரோடு சேர்ந்து வாழுதல்:

இந்நிலையில் யமன் நாட்டைச் சேர்ந்த ஜுர்ஹும் குலத்தாரின் ஒரு குழுவினர் அவர்களைக் கடந்து சென்றார்கள். அவர்கள் கதா எனும் கணவாயின் வழியாக முன்னோக்கி வந்து மக்காவின் கீழ்ப்பகுதியில் தங்கினர் அப்போது தண்ணீரின் மீதே வட்டமடித்துப் பறக்கும் (வழக்கமுடைய) ஒருவகைப் பறவையைக் கண்டு இந்தப் பறவை தண்ணீரின் மீது வட்டமடித்துக் கொண்டிருக்க வேண்டும். நாம் பள்ளத்தாக்கைப் பற்றி முன்பே அறிந்திருக்கின்றோம். அப்போது இதில் தண்ணீர் இருந்ததில்லையே என்று வியப்புடன் பேசிக்கொண்டார்கள். பிறகு அவர்கள் ஒரு தூதுவரை அல்லது இரு தூதுவர்களை செய்தி அறிந்து வர அனுப்பினார்கள். அவர்கள் (சென்று பார்த்தபோது) அங்கே தண்ணீர் இருப்பதைக் கண்டார்கள். உடனே அவர்கள் தம் குலத்தாரிடம் திரும்பிச் சென்று அங்கே தண்ணீர் இருப்பதைத் தெரிவித்தார்கள். உடனே அக்குலத்தார் இஸ்மாயீலின் அன்னை அவர்கள் அத்தண்ணீரின் அருகே இருக்க கண்டு, அவர்கள் முன்னே சென்று “நாங்கள் உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ள எங்களுக்கு நீங்கள் அனுமதியளிப்பீர்களா?” என்று கேட்க, அதற்கு அவர்கள் “ஆம் அனுமதியளிக்கிறேன். ஆனால் தண்ணீரில் உங்களுக்கு உரிமை ஏதும் இருக்காது” என்று சொன்னார்கள். அம்மக்களும் சரி என்று சம்மதித்தனர்.


ஜுர்ஹும் குலத்தார் தங்கிக்கொள்ள அனுமதி கேட்ட அந்த சந்தர்ப்பம் இஸ்மாயீலின் தாயாருக்கு அவர்கள் தனிமையால் துன்பமடைந்து இருந்ததால் மக்களுடன் கலந்து வாழ்வதை விரும்பிக் கொண்டிருந்த வேளையில் வாய்த்தது என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் சொன்னார்கள் என ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். ஆகவே அவர்கள் அங்கே தங்கினார்கள். தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கும் சொல்லியனுப்ப அவர்களும் (வந்து) அவர்களுடன் தஙகினார்கள்..



திருமணம்:

குழந்தை இஸ்மாயீல் (வளர்ந்து) வாலிபரானார்கள். ஜுர்ஹும் குலத்தாரிடம் இருந்து அவர்கள் அரபு மொழியை கற்றுக்கொண்டார்கள். அவர்கள் வாலிபரானபோது அவர்களுக்கு பிரியமானவராகவும் அவர்களுக்கு மிக விரும்பமானவராகவும் ஆகிவிட்டார்கள். பருவ வயதை அவர்கள் அடைந்தபோது அவர்களுக்கு அவர்கள் தம்மிலிருந்தே ஒரு பெண்ணை மணமுடித்து வைத்தனர். பின்னர் இஸ்மாயீலின் தாயார் அன்னை ஹாஜர் இறந்துவிட்டார்கள்.



இப்ராஹிம் நபியின் முதல் வருகை:

ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு ஒரு நாள் தம் மனைவியையும் மகனையும் அவர்கள் என்ன ஆனார்கள் என்று பார்த்துவிட்டு வரலாமென்று தோன்றியது. எனவே, தம் வீட்டாரிடம் (முதல் மனைவி ஸாராவிடம்) “நான் (மக்காவில்) விட்டு வந்த என் செல்வங்களைப் பற்றி அறிந்து வரப் போகிறேன்” என்று கூறி மக்காவுக்கு புறப்பட்டார்கள்.


இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தாம் விட்டுச் சென்ற (தம் மனைவி மகன் ஆகிய)வர்களின் நிலையை அறிந்துக் கொள்வதற்காக (திரும்பி) வந்தார்கள். ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை காணவில்லை. ஆகவே ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மனைவியிடம் ஹஸ்ரத் இஸ்மாயிலை குறித்து விசாரித்தார்கள். அதற்கு அவர் எங்களுக்காக உணவு தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார். பிறகு அவரிடம் அவர்களுடைய வாழ்க்கை நிலைப் பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள். அதற்கு அவர் நாங்கள் மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம் என்று இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் குறைப்பட்டு முறையிட்டார். உடனே இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) ஸலாம் சொல்லு. மேலும் அவரது நிலைப்படியை மாற்றி விடும்படி சொல் என்று சொன்னார்கள்.


ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது எவரோ வந்து சென்றிருப்பது போல் உணர்ந்தார்கள். ஆகவே எவரேனும் உங்களிடம் வந்தார்களா என்று கேட்டார்கள். அவருடைய மனைவி ஆம் இப்படிப்பட்ட (அடையாளஙகள் கொண்ட) பெரியவர் ஒருவர் வந்தார். என்னிடம் உங்களைப் பற்றி விசாரித்தார். நான் அவருக்கு (விவரம்) தெரிவித்தேன். என்னிடம் உங்கள் வாழ்க்கை நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் அவரிடம் நாங்கள் பெரும் சிரமத்திலும் கஷ்டத்திலும் இருக்கிறோம் என்று சொன்னேன் என்று பதிலளித்தார். அதற்கு இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் உன்னிடம் தம் விருப்பம் எதையாவது அவர் தெரிவித்தாரா என்று கேட்க, அதற்கு அவர் ஆம் உங்களுக்கு தன் சார்பாக ஸலாம் உரைக்கும்படி எனக்கு உத்தரவிட்டு, பின்பு உன் நிலைப்படியை மாற்றிவிடு என்று (உங்களிடம் சொல்லச்) சொன்னார் என்று பதிலளித்தார். அதற்கு ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், அவர் என் தந்தைதான். உன்னைவிட்டு பிரிந்து விடும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளார். ஆகவே நீ உன் (தாய்) வீட்டாருடன் போய் சேர்ந்துக்கொள் என்று சொல்லிவிட்டு உடனே அவரை விவாகரத்து செய்துவிட்டார்கள்




மறுமணம் :

பின்னர் ஹஸ்ரத் இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஜுர்ஹும் குலத்தாரிலிருந்தே வேறொரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார்கள். பிறகு ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் இறைவன் நாடிய காலம் வரை தம் மகனைப் பார்க்க வராமல் விலகி வாழ்ந்து வந்தார்கள். அதன் பிறகு, மீண்டும் ஒரு முறை அவர்களிடம் வந்தார்கள். ஆனால் இந்த முறையும் ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை அவர் அங்கு காணவில்லை.


ஆகவே ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடைய (புதிய) துணைவியாரிடம் சென்று இஸ்மாயீலைப் பற்றி விசாரித்தார்கள். அதற்கு அவர் “எங்களுக்காக வருமானம் தேடி வெளியே சென்றிருக்கிறார்” என்று சொன்னார். இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் “நீஙகள் எப்படியிருக்கிறீர்கள்? (நலம்தானா)” என்று கேட்டார்கள். மேலும் அவர்களுடைய பொருளாதார நிலை குறித்தும் மற்ற நிலைமைகள் குறித்தும் அவரிடம் விசாரித்தார்கள். அதற்கு இஸ்மாயீலின் துணைவியார் “நாங்கள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம்” என்று சொல்லிவிட்டு உயர்ந்தவனும் வல்லவனுமாக அல்லாஹ்வைப் புகழ்ந்தார். மேலும் “நீங்கள் இன்னும் கொஞ்சம் நேரம் தங்கி இருந்து ஏதேனும் உண்டுவிட்டும், குடித்துவிட்டும் செல்லுங்கள்” என்று சொன்னார். அப்போது ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் “உங்கள் உணவு எது?” என்று கேட்க, அதற்கு அவர் “இறைச்சி” என்று பதிலளித்தார். “உங்கள் பானம் எது?” என்று கேட்க, “தண்ணீர்” என்று பதிலளித்தார். உடனே ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் “இறைவா! இவர்களுக்கு இறைச்சியிலும் தண்ணீரிலும் பரக்கத்தை அருள் வளத்தை அளிப்பாயாக!” என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.


“அந்த நேரத்தில் அவர்களிடம் உணவு தாணியம் எதுவும் இருக்கவில்லை. அப்படி எதுவும் இருந்திருந்தால் அதிலும் அருள் வளம் தரும்படி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் பிரார்த்திருப்பார்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே தான் மக்காவைத் தவிர பிற இடங்களில் அவ்விரண்டையும் (இறைச்சியையும் தண்ணீரையும்) வழக்கமாக பயன்படுத்தி வருபவர்களுக்கு அவை ஒத்தக்கொள்வதே இல்லை என்றும் சொன்னார்கள்.


மேலும் ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், “உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) ஸலாம் சொல்லு. மேலும் அவரது (வீட்டு) நிலைப்படியை உறுதிப்படுத்தி வைக்கும்படி சொல்” என்று சொன்னார்கள்.


ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் (வீட்டிற்குத் திரும்பி) வந்தபோது, தன் மனைவியிடம் “உன்னிடம் எவரேனும் வந்தார்களா” என்று கேட்க, அதற்கு அவருடைய மனைவி “ஆம் எங்களிடம் அழகிய தோற்றமுடைய முதியவர் ஒருவர் வந்தார்” என்று (சொல்லிவிட்டு) அவரை புகழ்ந்தார். (பிறகு தொடர்ந்து) “என்னிடம் நமது பொருளாதார நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் நாங்கள் நலமுடன் இருக்கிறோம் என்று தெரிவித்தேன்” என்று பதில் சொன்னார். அவர் உனக்கு அறிவுரை ஏதேனும் சொன்னாரா என்று இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) கேட்டார்கள். அதற்கு அவர் “ஆம், உங்களுக்கு ஸலாம் சொன்னார். உஙகள் நிலைப்படியை உறுதிப்பபடித்திக் கொள்ளும்படி உங்களுக்கு கட்டளையிட்டார்” என்று சொன்னார். அதற்கு ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், “அவர் என் தந்தை. நீதான் அந்த நிலைப்படி உன்னை (விவாகரத்து செய்யாமல்) அப்படியே மனைவியாக வைத்தக் கொள்ளும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளார்” என்றும் சொன்னார்கள்.



இப்ராஹிம் நபியின் மீள் வருகையும் கஃபாவை கட்டுதலும்

பிறகு ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அல்லாஹ் நாடிய காலம் வரை அவர்களை(ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார்கள். அதன் பிறகு மீண்டும் ஒரு நாள் ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஸம்ஸம் கிணற்றின் அருகேயிருக்கும் பெரிய மரத்திற்கு கீழே தனது அம்பு ஒன்றைச் செதுக்கிக் கொண்டிருந்தபோது, ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அங்கு வந்தார்கள். ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைக் கண்டதும் ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அவர்களை நோக்கி எழுந்து சென்றார்கள். (நெடுநாட்கள் பிரிந்து மீண்டும் சந்திக்கும் போது) தந்தை மகனுடனும் மகன் தந்தையுடனும் எப்படி நடந்துக் கொள்வார்களோ அப்படி இருவரும் நடந்துக் கொண்டார்கள். பாசத்தோடும் நெகிழ்வோடும் வரவேற்றார்கள்.


பிறகு ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், “இஸ்மாயீலே! அல்லாஹ் எனக்கு ஒரு விஷயத்தை (நிறைவேற்றும்படி) உத்திரவிட்டுள்ளான்” என்று சொன்னார்கள். ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், “உங்கள் இறைவன் உங்களுக்கு கட்டளையிட்டதை நிறைவேற்றுஙகள்” என்று சொன்னார்கள். ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் “நீ எனக்கு அந்த விஷயத்தை நிறைவேற்றுவதற்கு உதவுவாயா?” என்று கேட்க, ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் “உஙகளுக்கு நான் உதவுகிறேன்” என்று பதிலளித்தார்கள். ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் “அப்படியென்றால் நான் இந்த இடத்தில் ஓர் இறையில்லத்தை (புதுப்பித்து) கட்டவேண்டும் என்று எனக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்” என்று சொல்லிவிட்டு, சுற்றியிருந்த இடங்களை விட உயரமாக இருந்த ஒரு மேட்டைச் சைகையால் காட்டினார்கள்.


அப்போது இருவரும் இறையில்லம் கஃபாவின் அடித்தளங்களை உயர்த்திக் கட்டினார்கள். இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை கற்களை கொண்டு வந்து கொடுக்கலானார்கள். இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கட்டளானார்கள். வயதான ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அன்னவர்களுக்கு கற்களைத் தூக்கி வைக்க முடியவில்லை. எனவே, “மகாமு இப்ராஹீம்” என்று அழைக்கப்படும் கல் மீது ஏறி நின்றார்கள். அவர்களுக்கு ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கற்களை எடுத்துத் கொடுத்தார்கள். இறுதியில் கட்டடம் எழும்பியது.


பிறகு இருவரும் “இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயம், நீயே செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கிறாய்” என்று பிரார்த்தித்தார்கள். மேலும், “எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக! எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை) ஆக்கி வைப்பாயாக! நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக! எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக! நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்!” என்றும் பிரார்த்தித்தார்கள்.



இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் குர்பானி சம்பவம்

ஒருநாள், ஹஸ்ரத் இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தன் மகன் இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் கூறினார்கள்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக கனவு கண்டேன். இதை பற்றி உம் கருத்து என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு மகன் இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கூறினார்கள், “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்” என்று கூறினார்கள்.


(இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தனது மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்தி அறுக்க முற்பட்டபோது அவர்களது கத்தி அறுக்கவில்லை. அப்போது " யா இப்ராஹீமே! என்று அல்லாஹ்வின் அழைப்புக் குரல் கேட்டது. அல்லாஹ் அவர்கள் இருவரையும் சோதிக்கவே இவ்வாறு செய்ததாக கூறி ஹஸ்ரத் இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு பதிலாக ஒரு ஆட்டை அறுத்து பலியிடுமாறு கட்டளையிட்டான்.



ஆக்கம் - கயத்தார் Mrs. பஸரியா காஸிம்