MAIL OF ISLAM

Knowledge & Wisdom



நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் வரலாறு


பிறப்பு:

ஹஸ்ரத் ஸாலிஹ் நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஹஸ்ரத் ஹூத் (அலைஹிஸ்ஸலாம்) மற்றும் ஹஸ்ரத் நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) ஆகியோரின் பரம்பரையில் வந்துதித்தவர்கள் ஆவார்கள். அவர்களின் தந்தையின் பெயர் காபூக் பின் உபைத் என்பதாகும். தாயாரின் பெயர் ஜகூமு.



உருவ அமைப்பும் குணாதிசயங்களும்:

ஹஸ்ரத் ஸாலிஹ் நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அழகே உருவானவர்களாக இருந்தனர். அவர்களின் தலை மயிர் பொன்னிறமாக இருந்தது. விரிந்த மார்பும் உயர்ந்த தோள்களும் வாய்க்கப்பெற்ற அவர்கள் உருவத்தில் பெரும்பாலும் ஹஸ்ரத் ஆதம் நபி (அலைஹிஸ்ஸலாம்) மற்றும் ஹஸ்ரத் ஷீத் நபி (அலைஹிஸ்ஸலாம்) ஆகியோரை ஒத்து இருந்தனர். அவர்கள் வெறும் காலுடனேயே நடந்தார்கள். அவர்கள் வாணிபம் செய்து வளவாழ்வு வாழ்ந்து வந்தார்கள்.



நபித்துவம்:

அவர்களது நாற்பதாம் வயதில், அல்லாஹ் ஹஸ்ரத் ஸாலிஹ் நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை ஸமூத் கூட்டத்தாருக்கு இறைத்தூதராக அனுப்பி வைத்தான்.



ஸமூது கூட்டத்தார்:

நூஹ் நபி அவர்களின் வம்சாவழியில் வந்த ஸமூத் என்பவரின் வழிவந்தவர்களே ஸமூது கூட்டத்தார் என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் அரபு நாட்டின் வடமேற்கு பகுதியில் அல் ஹிஜிர் என்னும் பெயரில் உள்ள மலைப்பகுதியில் மலைகளை குடைந்து வீடுகள் அமைத்து வாழ்ந்து வந்தனர். மதீனாவிற்கும் தபூக்கிற்கும் இடையே உள்ள ஓர் இடத்தை இன்று 'மதாயின் ஸாலிஹ்' என்று கூறுகிறார்கள். இதுவே ஸமூத் கூட்டத்தாரின் தலைமைபீடமாக இருந்தது. இது பண்டைய காலத்தில் "அல் ஹிஜ்ர்" எனக் கூறப்பட்டு வந்தது. ஸமூது கூட்டத்தார் மலைகளை குடைந்து உருவாக்கிய சில கட்டிடங்கள் இன்றும் காணப்படுகிறது.


இவர்கள் வசித்த இடத்தில் கடலோ, குளம், குட்டைகளோ இல்லாததால் இவர்கள் பெரிய கிணறு ஒன்று தோன்றி அதில் இருந்து தண்ணீர் எடுத்து உபயோகித்து வந்தனர். தாம் வாழும் வீடுகள் மலைகளை குடைந்து கட்டப்பட்டதால் தங்களை புயலாலோ, நில அசைவாலோ எதுவும் செய்ய முடியாது என இறுமாப்புடன் இருந்து வந்தனர். நீண்ட வயதை பெற்றிருந்த இவர்கள் ஆது கூட்டத்தினர் வாழ்ந்த பகுதியையும் தம் பகுதியாக்கி உல்லாசமாக வாழ்ந்து பல்கி பெருகி வந்தனர். இவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்து சிலைகளை வணங்கி வந்தனர்.



ஏகத்துவ பிரச்சாரம்:

ஹஸ்ரத் ஸாலிஹ் நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் சமூத் கூட்டத்தினரை சிலை வணக்கத்தை விட்டு விட்டு ஏக இறைவனை மட்டும் வணங்குமாறு கூறி ஏகத்துவ பிரச்சாரம் செய்தனர்.


ஹஸ்ரத் ஸாலிஹ் நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அம்மக்களிடம் “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” எனக் கூறினார்கள், “நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதன் ஆவேன். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள் என்றார்கள். தோட்டங்களிலும், நீரூற்றுக்களிலும், வேளாண்மைகளிலும், மிருதுவான குலைகளையுடைய பேரீச்ச மரங்களிலும், “இங்குள்ள (சுகபோகத்)தில், நீங்கள் அச்சந்தீர்ந்தவர்களாக விட்டு வைக்கப்படுவீர்களா? “மேலும், ஆணவம் கொண்டவர்களாக நீங்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொள்கிறீர்களே! (இவற்றிலெல்லாம் அச்சந்தீர்ந்தவர்களாக விட்டுவைக்கப்படுவீர்களா?) ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள். இன்னும், நீங்கள் வரம்பு மீறியோரின் கட்டளைக்கு வழிப்படாதீர்கள். அவர்கள் பூமியில் குழப்பம் உண்டாக்குவார்கள்; நன்மை செய்ய மாட்டார்கள்” என்றும் கூறினார்கள்.


ஆனாலும் அம்மக்கள் ஹஸ்ரத் ஸாலிஹ் நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை விசுவாசம் கொள்ளவில்லை. அம்மக்கள் அவர்களை சூனியக்காரர் என்றும் பொய்யர் என்றும், பைத்தியக்காரர் என்றும் கூறி எள்ளி நகையாடினர்.



அத்தாட்சியும் ஒட்டகமும்:

மேலும் அந்த ஸமூத் கூட்டத்தினர் “நீரும் எங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி (வேறு) இல்லை; எனவே, நீர் உண்மை சொல்பவராக இருந்தால் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வாரும்” என்று கூறினார்கள்.


மேலும், நீர் உண்மையாளராக இருந்தால் அதுவும் இப்படி ஒரு அத்தாட்சியை கொண்டு வரும்படி அம்மக்களின் அரசன் ஜுன்தாஹ் கூறினான்: அதாவது, அங்கிருக்கும் ஒரு மலையை சுட்டி காட்டி, அம்மலை பிளந்து அதில் இருந்து கருநிற நெற்றியும், வெண்ணிற உடலும், நீளமான மயிரும், நிறை கர்ப்பமும் உடைய ஒரு ஒட்டகை ஒன்று வெளி வர வேண்டும். வெளிவந்த அடுத்த கணம், அது ஒரு குட்டியை ஈன வேண்டும். அக்குட்டியும் முற்றிலும் தன் தாயை போலவே இருத்தல் வேண்டும் என்று கூறினான்.


அதற்கு ஹஸ்ரத் ஸாலிஹ் நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் “இது என் இறைவனுக்கு மிகவும் எளிதான காரியம். அப்படி நடந்தால் நீங்கள் அனைவரும் ஓரிறை கொள்கை பக்கம் வருவீர்களா?” என்று கேட்டனர். அப்போது அவன், “நிச்சயமாக வருகிறோம். எனினும் அந்த ஒட்டகம் பால் கறக்க வேண்டும். அப்பால் மதுவினும் மதுரமாகவும், தேனினும் இனிமையாகவும் இருத்தல் வேண்டும்” என்று மறு நிபந்தனை விதித்தனர்.


அதற்கு ஹஸ்ரத் ஸாலிஹ் நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் “அப்படி நடந்தால் நீங்கள் அனைவரும் ஓரிறை கொள்கை பக்கம் வருவீர்களா?” என்று கேட்டனர். அதற்கு ஜுன்தாஹ், “நிச்சயமாக வருகிறோம். எனினும் அந்த பால் கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் வெதுவெதுப்பாகவும் இருத்தல் வேண்டும்” என்று இன்னொரு நிபந்தனை விதித்தான். இப்படி மாறி மாறி ஒவ்வொரு நிபந்தனையாக விதித்து கொண்டே இருந்தனர்.


கடைசியில், ஹஸ்ரத் ஸாலிஹ் நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அம்மக்களை நோக்கி “மக்களே! நீங்கள் சொன்னப்படி நான் ஓட்டகையை கொண்டு வருகிறேன். ஆனால், எனக்கு பல நிபந்தனைகளை விதித்தது போல நானும் சில நிபந்தனைகளை விதிக்க விரும்புகிறேன். நீங்கள் அந்த ஓட்டகையின் மீது ஏறி சவாரி செய்யக்கூடாது. அதன் மீது கல்லோ, கணையோ எறிய கூடாது. உங்கள் கிணற்றில் ஒரு நாள் நீங்கள் தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள், மறுநாள் ஒட்டகை நீர் அருந்தட்டும். அதனை நீங்கள் நீர் அருந்துவதை தடுக்க கூடாது.” என்று கூறினர்.


அதன் பின்னர், அப்படியே பாறையை பிளந்து மிக பெரிய பெண் ஓட்டகை ஒன்றை அல்லாஹ் அத்தாட்சியாக அனுப்பி வைத்தான். அதன் நீளம் 120 முழம் இருந்தது. அதன் அகலம் 100 முழம் இருந்தது. அது வெளிவந்த அதே கணம் அம்மக்கள் முன் போய் ஒரு குட்டியை ஈன்றது. அக்குட்டியும் தாய் போன்றே இருந்தது. பின்னர் அவை இரண்டும் அங்கிருந்த திறந்த வெளியில் மேய தொடங்கின.


ஹஸ்ரத் ஸாலிஹ் நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அம்மக்களை நோக்கி “என் சமூகத்தாரே! உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக, இதோ இது அல்லாஹ்வுடைய பெண் ஒட்டகம்; ஆகவே, அல்லாஹ்வின் பூமியில் (எதேச்சையாக) அதை மேய விட்டு விடுங்கள்; எந்த வித தீங்கும் செய்யக்கருதி அதைத் தீண்டாதீர்கள்; (அப்படி நீங்கள் செய்தால்) அதி சீக்கிரத்தில் உங்களை வேதனை பிடித்துக் கொள்ளும்” என்று ஹஸ்ரத் ஸாலிஹ் நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கூறினார்கள்.


இதனை கண்ட ஜுன்தாஹ் மன்னனும் அவனது அவையினரும் பெரிதும் வியப்பெய்தினர். தாங்கள் இதுவரை செய்த பாவத்தை எண்ணி வருந்தினர். ஹஸ்ரத் ஸாலிஹ் நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கரம் பற்றி ஏக இறைவனை மட்டுமே வணங்குவோம் என்று உறுதிமொழி பகர்ந்தனர். ஹஸ்ரத் ஸாலிஹ் நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்களோடு சேர்ந்து ஏக இறைவனை மட்டுமே வணங்கி வந்தனர்.


அவர்களின் இச்செயல் துஆப், ஹுபாப் என்ற பூசாரிகளுக்கும் ருகாப் என்ற குறிகாரனுக்கும் எரிச்சலை உண்டுப் பண்ணியது. அவர்கள் திருந்திய மக்களில் சிலரை அணுகி, இது ஹஸ்ரத் ஸாலிஹ் நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் செய்த சூனியம் என்று கூறி மீண்டும் அம்மக்களை உருவத்தொளும்பர்களாக ஆக்கினர்.


அது கண்ட ஹஸ்ரத் ஸாலிஹ் நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் வருந்தினர். “நீங்கள் வாக்கு தவறி விட்டீர்கள். எது எப்படியோ, இந்த ஓட்டகையை மேய விட்டு விடுங்கள்; எந்த வித தீங்கும் செய்யக்கருதி அதைத் தீண்டாதீர்கள்; (அப்படி நீங்கள் செய்தால்) அதி சீக்கிரத்தில் உங்களை வேதனை பிடித்துக் கொள்ளும்” என்று கூறினார்கள்.


பின்னர் துஆப், ஹுபாப், ருகாப் மூவரும் பல சூழ்ச்சிகள் செய்து ஜுன்தாஹ் மன்னனை அரச பதிவியில் இருந்து உதறி தள்ளி அவனது தம்பியை அரியணை ஏற்றினர். ஆனாலும், ஜுன்தாஹ் அரசனும், அவனது தோழர்களும் இறைவழியில் ஈடுபட்டு ஹஸ்ரத் ஸாலிஹ் நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை காத்து வந்தனர். ஹஸ்ரத் ஸாலிஹ் நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் செல்லும் இடமெல்லாம் அவ்வொட்டகை அவர்களை பின்தொடர்ந்து சென்று கொண்டு இருந்தது.


அந்த ஒட்டகம் இரவில் பள்ளியில் படுத்து உறங்கும், அதிகாலையில் எழுந்து மலை மீது சென்று மேய்ந்து விட்டு மாலையில் இறங்கும். இரவில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் போய் நிற்கும். அவர்கள் அதன் மடியின் கீழ் தம் கலசத்தை வைத்தவுடன் தானாகவே அதில் இருந்து பால் கறக்கும். இப்படி ஒவ்வொரு வீட்டு வாசலில் போய் நின்று அனைவருக்கும் பால் கொடுக்கும். அதன் பின் பள்ளி சென்று படுத்துவிடும். ஒரு நாள் விட்டு மறுநாள் அங்குள்ள கிணற்றில் போய் தண்ணீர் முளுவதையும் உறிஞ்சி குடிக்கும். இப்படி பல ஆண்டுகள் நடந்து வந்தன. ஸமூதுகள் இதன் பாலை கொண்டு தயிர், மோர், வெண்ணெய், நெய் என செய்து வெளியூர்களில் விற்று பெரும் செல்வர்களாக மாறினர். அதன் உரோமத்தால் கம்பளி தயாரித்து அணிந்து கொண்டனர்.



ஸமூத் கூட்டத்தின் அழிவு:

கடைசியில் ஒரு நாள், மஸ்தாஹ், குதார் மற்றும் இன்னும் ஏழு நபர்கள் சேர்ந்து அந்த ஒட்டகத்தின் கால் நரம்பைத் துண்டித்து (கொன்று) விட்டனர்.


கொன்று விட்டு வந்த அவர்களுக்கு ஊரில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. எங்கும் பாட்டும், கூத்தும், கச்சேரியுமாக இருந்தது. ஆணவத்தில் அவர்கள், ஹஸ்ரத் ஸாலிஹ் நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை பார்த்து ஏளனமாக சிரித்து கிண்டல் பண்ணினர். அப்போது, ஹஸ்ரத் ஸாலிஹ் நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் “இன்னும் 3 நாட்கள் உள்ளன. உங்கள் தண்டனையை எதிர்பாருங்கள்” என்று கூறினர். அந்த மூன்று நாட்களில் அவர்கள் திருந்தி மன்னிப்பு கேட்பர் என்ற நோக்கத்தில். அதற்கு அம்மட மக்கள் “எதற்கு மூன்று நாள்? இப்போதே தண்டனையை அனுப்ப சொல்லும்” என ஏளனமாக கிண்டல் செய்தனர். பிறகு அவர்கள் ஹஸ்ரத் ஸாலிஹ் நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்களையும் அவர்களின் குடும்பத்தார்களையும் கொல்ல முடிவு செய்து சூழ்ச்சி செய்தனர்.


ஆனால் அவர்கள் அறியாதவாறு அல்லாஹ் சூழ்ச்சி செய்தான். ஹஸ்ரத் ஸாலிஹ் நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்களும் அவர்களை சார்ந்தவர்களும் அவ்விடத்தை விட்டு நீங்கி வேறொரு இடத்திற்கு குடிப்பெயர்ந்தனர்.


ஸமூது கூட்டத்தாரை நோக்கி மூன்றாவது நாள் வேதனை இறங்கியது. கடும் இடி சத்தம், மற்றும் பல பூமி அதிர்வுகள் இடம்பெற்றன. அங்கிருந்த அத்தனை இறை நிராகரிப்பாளர்களும் செத்து மடிந்தனர். அவர்களது பலம் பொருந்திய இருப்பிடங்களோ மலைகளோ அவர்களை பாதுக்காக்க முடியவில்லை.




நன்றி - கயத்தார் Mrs. பஸரியா காஸிம்