MAIL OF ISLAM

Knowledge & Wisdom



நபி ஷீத் அலைஹிஸ்ஸலாம் வரலாறு


பிறப்பு

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனாகிய ஹாபீல், காபீலினால் கொலை செய்யப்பட்ட பின் ஹாபீலைப் போன்று எனக்குகொரு மகனைத் தா என்ற ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் துஆவிற்கிணங்க 5 வருடங்களுக்கு பிறகு ஹழ்ரத் நபி ஷீஃத் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் அவர்களுக்கு அளித்தான். உருவத்தில் தம்மை ஒத்திருந்ததால் இவர்களுக்கு ஷீஃத் “இறைவனின் அருட்கொடை” என பொருள்படும் பெயரை வைத்தார்கள் அவர்களின் தந்தை ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். இவர்கள் பிறக்கும் போது ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வயது 135. இவர்கள் இந்தியாவில் பிறந்தார்கள். எனவே அவர்கள் பிறந்த பகுதிக்கு சேது நாடு என பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.



சிறப்பு

கம்பீர தோற்றத்துடன் விளங்கிய அவர்கள் கணிதம், இசை, இறைஞானம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று விளங்கினார்கள். இவர்களுக்கு அல்லாஹ் 50 ஸூஹ்ஃபுகளை வழங்கினான். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வஃபாத் நெருங்கிய போது தனது மகனார் ஷீஃத் .அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தனது பொறுப்பை ஒப்படைத்ததோடு, இரவு பகலின் நேரங்களையும் அந்த நேரங்களில் செய்ய வேண்டிய வணக்கங்களையும் கற்றுக் கொடுத்தார்கள். பின்பு ஏற்படக்கூடிய பெரும் வெள்ளத்தை குறித்தும் அவர்களுக்கு அறிவித்தார்கள்



திருமணம்

சுவர்க்கத்து கண்ணழகி 'நஹ்வா மக்கா' எனும் மங்கையை மணந்தார்கள். இவர்களின் முதல் குழந்தையாக “யானூஸ்” பிறந்தார். அக்குழந்தையும் ஷீஃத் அலைஹிஸ்ஸலாம் போல் அழகாக இருந்தது. பின் அக்குழந்தையை தன் ஸ்தானத்தில் நிறுத்தி கலீபாவாக்கினார்கள்.



ஷெய்த்தான் குழப்புதல்

ஒருமுறை ஷீஃத் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடத்தில் இப்லீஸ் ஒரு பெண்ணின் தோற்றத்தில் வந்து தன்னை திருமணம் செய்யும்படி கேட்டுக்கொண்டான். அதற்கு ஷீஃத் அலைஹிஸ்ஸலாம் எனது தகப்பனார் திருமணம் முடிப்பதற்கு என்னை ஏவவில்லை என்றும் நான் உன்னை இப்லீஸ் என கருதுகிறேன் எனவும் கூறினார்கள். அதற்கு இப்லீஸ் "ஸுப்ஹானல்லாஹி அழீம்" நான் இப்லீஸல்ல சுவனத்து ஹூருல்ஈன் பெண் எனக் கூறினான். அதற்கு மலக்குமார்கள் இவன் அல்லாஹ்வின் எதிரி. உங்கள் தந்தையை சுவனத்தை விட்டும் துரத்தியவன் எனக் கூறினார்கள். உடனே ஷீஃத் அலைஹிஸ்ஸலாம் அவனைக் கொல்ல நாடிய போது என்னைக் கொல்ல உமக்கு சக்தியில்லை. அல்லாஹ் கியாமத்து வரையிலும் என்னை ஹயாத்தாக்கி வைப்பதாக கூறியுள்ளான். ஆனால் நான் உமக்கு ஒரு வாக்கு தருகிறேன். இனிமேல் நான் உம்மை கலைக்க மாட்டேன்” என்று கூறினான். உடனே ஷீஃத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இப்லீஸை விட்டு விட்டார்கள்.



மறைவு

தன் 710 வயதில் இறைவனடி சேர்ந்தார்கள். “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.