MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
நப்ஸுடன் யுத்தம் செய்வது எப்படி?
எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.
இஸ்லாத்தின் பார்வையில் முஜாஹதுன் நப்ஸ் எனும் நப்ஸூடன் யுத்தம் செய்வது எப்படி?
♣ முஜாஹதுன் நப்ஸ் என்றால் என்ன?
“நஃப்ஸ் அம்மாரா” எனும் கீழான மனம் (நப்ஸின் வகைகளை அறிய) நமது இச்சைகளையும் ஆசைகளையும் தூண்டி விட்டு வணக்க வழிபாடுகளை மறக்கச் செய்து, இறைவனின் பக்கம் செல்லவிடாமல் தடுத்து உலக ஆசாபாசங்களின் பக்கம் இழுத்துக் கொண்டு, இறைவனின் நல்வழியில் செல்ல விடாமல் மனிதனை தடுத்து விடுகிறது.
அதன் தீமைகளையும் அதனுடைய மோசங்களையும் ஏமாற்றுதல்களையும் விளங்கி நான் என்ற அகந்தையும், கர்வமும், காம இச்சையும் இருக்கும் வரை உண்மையான இறை வழிபாடு செய்ய முடியாது என்பதை உணர்ந்து, அதன் தீய சக்தியை ஒடுக்கி தகர்த்து தன்னை நல்வழிபடுத்த தனது நப்ஸ் அம்மாரா என்ற மனோ இச்சையுடன் போராடி மாபெரும் யுத்தம் செய்வதன் மூலம் வெற்றி பெற்று சில விடயங்களை தியாகம் செய்து விட்டு சதா நிலைத்திருக்கும் இறைவனின் அன்பிலும் பாசத்திலும் லயித்திருக்கும் போராட்டமே (யுத்தம்) முஜாஹதுன் நப்ஸ் எனப்படும்.
♣ முஜாஹதுன் நப்ஸ் எனும் நப்ஸூடன் யுத்தம் செய்வது எப்படி?
நம்முடைய நப்ஸ் படைப்பாளனாகிய இறைவனிடம் மீண்டு அவனை அடைந்து கொள்ள நாடினாலும், மறுபுறம் நம்முடைய உலகாதாய தேவைகளும் தூண்டுதல்களும் நம்மை இறைவனின் பக்கம் செல்லவிடாமல் தடுத்து உலக ஆசாபாசங்களின் பக்கம் இழுத்துக் கொண்டுவிடுகின்றன. இதுவே நமக்கும் இறைவனுக்கும் இடையே தடுப்புசுவராக ஆகிவிடுகின்றது. நஃப்ஸூம் ஷைத்தானின் ஊசாட்டங்களும் ஆத்மாவைப் படைத்தவனிடம் திரும்பவிடாமல் தடுத்துக் கொண்டுள்ளன. (ஆத்மா ஒன்று அதன் வகைகள் ஏழுஅறிய)
ஆனால் ஸூஃபியாக்கள், வலிமார்கள், காமிலான ஷெய்குமார்கள் இறைவனை நெருங்கவிடாமல் தடுக்கும் மேலே குறிப்பிட்ட நப்ஸ் மூலம் ஏற்படும் தடுப்புகளையெல்லாம் தகர்த்து, மனிதவர்க்கத்தை இறைவனுக்கு மிக நெருக்கமானதாக ஆக்கும் ஆற்றலை இறைவன் அவர்களுக்கு வழங்கியுள்ளான். அவர்கள் தங்களது கலப்பற்ற இறையன்பைக் கொண்டு தங்களை முழுமையாக இறைவனிடம் அர்ப்பணித்தவர்களாய் சதா அல்லாஹ்வின் நினைவிலேயே மூழ்கியிருப்பார்கள்.
அல்லாஹ்வின் அருட்கண் பார்வை தன் மீது பெறப்பட்டவர்களாக இருப்பார்கள். இத்தகு இறைநேசர்களின் சமூகத்தில் அண்மித்து இருப்பதால் மனிதர்கள் உண்மையான இறையன்பையும், பாசத்தையும், ஆத்ம திருப்தியும், நிம்மதியும் அடையப் பெற்றவர்களாக இருப்பர். உலகத்தில் சகலவிதமான உல்லாசங்களும் சௌகரியங்களும் இருந்தும், அவைகளின் நிலையற்ற தன்மையால் உண்மையான நிம்மதியும் சந்தோஷமும் கிடைப்பதில்லை. இந்த நிலையற்ற பொருட்களை இழந்துவிடின் நிம்மதியிழந்து துக்கித்தவர்களாக ஆகிவிடுவார்கள்.
ஆனால் புனிதர்களான “ஸூஃபி” எனும் இறைநேசர்கள் சகலவித உல்லாசங்களையும் இன்பங்களையும் நப்ஸூடன் மாபெரும் யுத்தம் செய்வதன் மூலம் தியாகம் செய்து விட்டு சதா நிலைத்திருக்கும் இறைவனின் அன்பிலும் பாசத்திலும் லயித்திருப்பார்கள். படைத்தவனாகிய அல்லாஹ்விடமே அடைக்கலமாகி உண்மையான நிம்மதியும் ஆத்ம சாந்தியும் திருப்தியும் அடையப்பெற்றவர்களாக இருப்பார்கள். இதனால்தான் இவர்களுடன் அடைக்கலம் புகும். நிம்மதியிழந்த மனிதர்கள், அந்த இறைநேசர்கள் அடைந்தது போன்ற இறையன்பையும் மன நிம்மதியையும் பெறுகின்றனர்.
இத்தகு “ஸூஃபி ” எனும் இறை நேசர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் போதனைகளின் மூலம் இன்றும் மனிதர்களை இறைவனின் பால் சேர்ப்பவர்களாக இருக்கிறார்கள். இந்த உலகம் முடிவு நாள் வரை இவ் இறைநேசர்கள் இருந்துகொண்டுதான் இருப்பார்கள் என்று உலகில் இவர்கள் அறவே இல்லாமல் ஆகிவிடுகின்றார்களோ அன்றே இந்த உலக முடிவு நாளும் நிகழும். இப்படிப்பட்ட இறைநேசர்களுக்கு எந்த வித அறிமுகமும் தேவையில்லை. இவர்கள் உலகில் புதிதாகக் கிளம்பிய ஒரு கூட்டத்தாருமல்ல.
மனிதனுடைய அந்தரங்கத்தில் “நஃப்ஸ் அம்மாரா” எனும் சக்தி நமது இச்சைகளையும் ஆசைகளையும் தூண்டி விட்டு வணக்க வழிபாடுகளை மறக்கச் செய்து, இறைவனின் நல்வழியில் செல்ல விடாமல் மனிதனை தடுத்து விடுகிறது- அதன் தீமைகளையும் அதனுடைய மோசங்களையும் ஏமாற்றுதல்களையும் விளக்கிக் கூறி மனதினுள் தான் என்ற அகந்தையும், கர்வமும், காம இச்சையும் இருக்கும் வரை உண்மையான இறை வழிபாடு செய்ய முடியாது என்பதை உணர்த்தினார்கள்.
வலிமார்கள், காமிலான ஷெகுமார்கள் நஃப்ஸை பகுத்தறிவதிலும், அதன் தீய சக்தியை ஒடுக்கி நல்வழி படுத்தும் திறமையும் பெற்றிருந்தார்கள்.
மிக மிகத் தீயவர்களாக இருந்தவர்களையும் சிறந்த மனிதர்களாக மாற்றிடும் ஆற்றலும் அல்லாஹ்வின் கிருபையாள் அவர்களிடம் இருந்தது. கல்வி கூடங்களும், பயிற்சி சாலைகளும் நிறுவனர்களின் பெயர் கொண்டு இயங்குவது வழக்கமானது தான் இதைப் போலவே இந்த ஆன்மீத் தொடரும் கியாமத் நாள் வரையிலும் வழிகாட்டிகளாக காமிலான ஷெய்குமார்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்.
♣ வாளேந்தி போராடுவது பெரிய யுத்தமா? அல்லது நப்ஸ் என்ற மனோ இச்சையுடன் போராடுவது பெரிய யுத்தமா?
இஸ்லாமிய வரலாற்றிலே பத்ர் யுத்தம் மிக பிரபலமானதும் பெரிய யுத்தமும் ஆகும். இப்படியான பெரியதோர் யுத்தத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பும் போது நபிகள் கோமான் (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நாம் சிறிய யுத்தத்தில் இருந்து பெரிய யுத்தம் அளவில் மீண்டிருக்கிறோம் என்று சொன்னார்கள். சஹாபாக்கள் அதிர்ச்சியுடன் நாயகமே எத்தனை உயிர் தியாகம். எவ்வளவு பெரிய யுத்தம் இதை முடித்து நாம் திரும்பிக் கொண்டிருக்கிறோம் அப்படி இருக்க யாரஸூலல்லாஹ்! சிறிய யுத்தம் என்று சொல்கின்றீர்கள் என கேட்க பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள். வாளேந்தி போராடுவது பெரிய யுத்தமல்ல தனது நப்ஸ் என்ற மனோ இச்சையுடன் போராடுவதே பெரிய யுத்தம் என்று சொன்னார்கள்.
இதிலிருந்து மனோ இச்சையை கொள்வதே பெரிய யுத்தம், அதை செய்பவரே உயர்வான ஷஹீத் என்பது ஹதீஸ் மூலம் எமக்கு தெளிவாகி விட்டது. அவ்லியாக்கள் என்பவர்கள் இறை நேசத்தை பெற்ற நன்மக்கள் அவர்கள் தமது மனோ இச்சையை அழிக்காமல் அவனை நெருங்கி இருக்க முடியாது. அப்படி மனதோடு போராடி அதை வெல்லாதவர் ஒரு இறை நேசராக இருக்க முடியாது. அப்படி இரண்டு யுத்தத்தில் வெற்றி கொண்டவர்களே அல்லாஹ்வின் இறைநேசர்களாகிய வலிமார்கள் என்று கருதப்படும்.
கூண்டில் கிளியிருப்பது போல் மனிதனிலேயே தங்கியுள்ள நப்ஸு எந்த நேரத்தில் எந்த உருவத்தில் தீமை செய்யும் என்பதை அறிந்து கொள்ள முடியாது, காபிரை வாள்போன்ற ஆயுதத்தினால் வெட்டி விடலாம். ஆனால் நப்ஸ் என்பது வாள் போன்ற ஆயுதத்தினால் வெட்ட முடியாத ஒன்றாகும். ஒரு காபிரை வெட்டி வீழ்த்துவதை விட நப்ஸை வெட்டி வீழ்த்துவதுதான் மிகவும் சிரமமானது.
♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்: உனது பகைவர்களில் உனக்கு மிகவும் கொடிய பகைவன் யாரெனில் உனது இரண்டு விலாவுக்கும் இடையிலுள்ள நப்ஸ் ஆகும் என்று கூறியுள்ளார்கள். இந்த ஹதீஸில் திருக்கலிமாவை ஏற்றுக் கொள்ளாதவன் பகைவனாய் இருந்தாலும் நப்சானது அவனைவிட பகை கூடியதென்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் குறிப்பிட்டார்கள். எனவே பகை கூடியவனை வெற்றி கொள்வது பகை குறைந்தவனை வெற்றி கொள்வதை விட சிறந்ததென்பது தெளிவாகிவிட்டது.
ஆகவே பகை குறைந்த காபிரை வெற்றி கொண்டவர் ஷஹீது என்ற பதவியை பெற்று மரணத்தின் பின்னும் உயிரோடு இருக்கும் பட்சத்தில் பகை கூடிய நப்ஸுடன் போராடி பெரிய ஜிஹாத் செய்து அதை வெற்றி கொண்டவர் ஷஹீது எனற பதவியைப் பெற்று மரணித்தபின் உயிரோடு இருப்பது வியப்பொன்றுமில்லை. போர்களத்தில் வாளேந்தி போரிடுவது சிறிய யுத்தம் என்பதும் நப்ஸுடன் போராடுவது பெரிய யுத்தம் என்பதும் மேலே கூறிய ஹதீஸ்களினால் நீரூபனமாகி விட்டதால் சிறிய யுத்தம் செய்தவர் மரணத்தின்பின் உயிரோடு இருப்பதேபோல் பெரிய யுத்தம் செய்தவரும் உயிரோடு இருக்கிறார் என்பது குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.
வலிமார்கள் உலகில் வாழ்ந்த காலத்தில் இறைவனுக்காகவும், இஸ்லாம் மார்கத்திற்க்காகவும் தனது நப்ஸூடனும் யுத்தம் செய்து இஸ்லாத்தின் எதிரிகளான பகைவர்களுடனும் யுத்தம் செய்து மகத்தான வெற்றிகளை பெற்று இவ்வாறே தனது வாழ்வில் ஒவ்வொரு நொடிகளையும் இறைவனின் பாதையில் அர்ப்பணித்தார்கள்.
புத்திசாலிகள் நப்ஸை பசியால்தான் அடங்குவார்கள். அல்லாஹ்வின் பகைவனான இப்லீஸுக்கு பேரிடியாக அமைவது பசிதான். அந்த அடிப்படையில் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், “மனிதரில் குருதி ஓடும் இடமெங்கும் ஷைத்தான் ஓடுகின்றான். அதனால் அவன் ஓட்டத்தை பசியால் கட்டுப்படுத்துங்கள்“.
மனிதர்களில் நீண்ட நாட்களாக பசியாலும், தாகத்தாலும் காடுகளிலும், மலைகளிலும், வீடுகளிலும் கல்வத் எனும் தனிமை தவம் இருந்து கஷ்டப்பட்டவர்கள் மறுமையில் அல்லாஹ்விடத்தில் மிக நெருக்கமாக இருப்பார்கள்.
♦ எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ, நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும். (அல்குர்ஆன் : 79: 40, 41)
♦ சாந்தி பெற்ற ஆத்மாவே! “(அல்லாஹ்வைப்) பொருந்திய நிலையிலும் (அவனால் நீ) பொருந்திக் கொல்லப்பட்ட நிலையிலும், உன்னுடைய ரப்பின்பால் நீ மீளுவாயாக! (அல் குர்ஆன் 89:27,28)
எனவே இவ்வுலகிற்கு நாம் வரும் போது எப்படி பரிசுத்தமான ரூஹ் ஆக, சாந்தி அடைந்த ஆத்மாவாக வந்தோமோ, அதேபோன்று இவ்வுலகில் இருந்து நாம் கண்ணை மூடும் போது சாந்தி அடைந்த ஆத்மாவாக திரும்பி போக அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
உள்ளத்தை தூய்மைப்படுத்துவது எப்படி?
தஸ்கியதுன் நப்ஸ் எனும் (உள்ளத்தை) பரிசுத்தப்படுத்துவது, தூய்மைப்படுத்துவது எப்படி? என்பதை விளங்கிக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
நமது ஆத்மாவின் தன்மைகளை ஏழாகப் பிரித்துள்ளார்கள். ஆத்மாவை ஏழாகப் பிரித்தாலும் உண்மையில் ஆத்மா ஒன்றுதான். அதைபற்றி அறிந்துக்கொள்ள இந்த ஆக்கத்தை வாசியுங்கள்.