MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ரூஹ், நப்ஸ், கல்ப்  என்றால் என்ன?


​எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


இஸ்லாத்தின் பார்வையில் ரூஹ் (உயிர்), நப்ஸ், கல்பு எனும் நுட்பமான சக்திகளை அறிவதன் யதார்த்த நிலை?

♦ ஆன்மீகத்தில் தன்னையறிதல் என்பது தனது ரூஹு, நப்ஸூ, கல்பு சம்பந்தப்பட்ட நிலைகளாகும். மனித வாழ்க்கையில் ரூஹ், நப்ஸூ, கல்பு மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது என்றால் அது மிகையல்ல.


​​உலகில் உள்ள அனைத்து படைப்பினங்களையும் விட மனிதன் உயர்ந்தவனாக இருப்பதன் காரணம் அவனில் ஊதப்பட்டிருக்கின்ற பரிசுத்த ரூஹ் எனும் ஆவியாகும். இவ்வுலகில் மனிதன் உடல், ரூஹ், ஆத்மா, கல்பு, அக்ல் என்ற ஜந்து வகையான அம்ஷங்களால் ஆனவன்.


​​உடலைப் பொறுத்தவரை அதனை எமக்கு இலகுவாக விளங்கிக்கொள்ள முடிந்தாலும் அல்லாஹ்வின் இரகசியமாக பரிசுத்த ரூஹ் என்பதனையும், நப்ஸ், கல்பு இவைகள் மூன்றையும் விளங்கிக்கொள்ள சற்று சிக்கலானவையாகும்.


​​​​எது எப்படி இருந்தாலும் உள்உறுப்புகளை பற்றி அறிவது ஒவ்வொருவரின் மீதும் அவசியமாகும். உலகில் பிரசங்கிகள் பலர் இருக்கின்றார்கள் வைத்தியர்களும் அவ்வாறே இருக்கின்றார்கள் மார்க்க அறிஞர்களும் உலமாக்களும் அளவிட முடியாத அளவு உள்ளனர்.

ஆனால் அல்லாஹ்வின்பால் போய்ச்சேரும் வழியையும் அவனைப்பற்றிய அறிவையும் “கல்பு” உடைய தன்மைகளையும் “ரூஹு” உடைய விபரங்களையும், “நப்ஸூ” உடைய வகைகளையும் போதிப்பவர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். இருந்தாலும் கூட அவர்களைக் கண்டுகொள்ள முடியாத வகையில் மறைந்து வாழ்கிறார்கள்.


​​நீங்கள் முயற்சி செய்து அத்தன்மைகளைப் பெற்ற சூபியாக்கள், காமிலான ஷெகுமார்களில் ஒருவரைக் கண்டால் உங்களது இருகரத்தாலும் அவரைப் பற்றிப் பிடித்து பைஅத் செய்து அவரை உங்களது ஆத்மீக குருவாக வைத்துக் கொள்ளுங்கள். அவரின் காலடியில் மடிந்து கிடந்து மேலே குறிப்பிடப்பட்ட விடயங்களை பற்றி அறிந்து புரிந்து கொள்ளுங்கள்.


​​

♣ ரூஹ், நப்ஸ், கல்பு இவைகள் எல்லாமே ஒன்றா? அல்லது வேறுபட்ட நுட்பமான அம்சங்களா?

இஸ்லாமிய மார்க்கத்தில் ரூஹ் நப்ஸ் கல்பு இவைகள் மூன்றும் ஒன்றுதான் என்று சிலரும், ரூஹ் நப்ஸ் கல்பு இவைகள் மூன்றும் சிறிதளவு வேறுபட்ட நுட்பமான அம்சங்கள் என்று சிலரும், ரூஹ் நப்ஸ் இவை இரண்டும் ஒன்றுதான் ஆனாலும் அதிலிருந்து கல்பு சிறிதளவு வேறுபட்ட நுட்பமான அம்சம் என்று சிலரும், நப்ஸ் கல்பு இவை இரண்டும் ஒன்றுதான் ஆனாலும் அதிலிருந்து ரூஹ் சிறிதளவு வேறுபட்ட நுட்பமான அம்சம் என்று சிலரும், ரூஹ் உயிர் இவை இரண்டும் ஒன்றுதான் என்று சிலரும், ரூஹ்ஹூம் உயிரும் சிறிதளவு வேறுபட்ட இரண்டு நுட்பமான அம்சம் என்றெல்லாம் பல கருத்து வேறுபாடுகள் காணப்படுகிறது.

அரபியில் “நப்ஸ்” என்ற சொல்லுக்கும் இடத்திற்கு ஏற்றவாறு தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு (“ஆத்மா - மனசு - உயிர்”) என்றும் “ரூஹ்” என்ற சொல்லுக்கு (“உயிர் - ஆவி - ஆத்மா”) என்றும் “கல்பு” என்ற சொல்லுக்கு (“உள்ளம் - இருதயம் - அகம்”) என்றெல்லாம் சொற்றொடர் குர்ஆன் ஹதீஸ் பிரகாரம் சூபியாக்களால் அறிஞர்களால் பிரயோகிப்படுகிறது.

அந்த அடிப்படையில் அரபியில் “நப்ஸ்” என்று குர்ஆனில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளது. அதை இடத்திற்கு ஏற்றவாறு (ஆத்மா என்றோ அல்லது மனசு என்றோ அல்லது உயிர்) என்றும், அரபியில் “ரூஹ்” என்று குர்ஆனில் பல இடங்களில் இடங்களில் இடம்பெற்றுள்ளது. அதை இடத்திற்கு ஏற்றவாறு (உயிர் என்றோ அல்லது ஆவி என்றோ அல்லது ஆத்மா) என்றும், அரபியில் “கல்பு” என்று குர்ஆனில் பல இடங்களில் இடங்களில் இடம்பெற்றுள்ளது. அதை இடத்திற்கு ஏற்றவாறு (உள்ளம் என்றோ அல்லது இருதயம் என்றோ) தமிழில் சூபியாக்களால் அறிஞர்களால் மொழி பெயர்க்கப்படுகின்றது.

எது எப்படி இருந்தாலும் இதுவரை காலமும் நாம் கூட ரூஹும் நப்ஸும் ஒன்று என்றுதான் நினைத்திருப்போம். உண்மையில் ரூஹ் என்பதும் நப்ஸ் என்பதும் சிறிதளவு வேறுபட்ட நுட்பமான இரண்டு அம்சமாகும். அல்குர்ஆன் அல்ஹதீஸ் ஆதாரங்களோடு பரிசுத்த ஆவி எனும் ரூஹ் பற்றி சூபியாக்கள் காமிலான ஷெய்குமார்கள் எமக்கு அளித்துள்ள சிறு விளக்கத்தோடு சற்று சிந்தித்துப் பார்த்தாலே போதும் ரூஹும் நப்ஸும் சிறிதளவில் வேறுபட்ட இரண்டு அம்ஷங்கள் என்பதை அறிய முடியும்.

ரூஹ் என்பது பரிசுத்த ஆவியாகும். ரூஹ்ஹின் பண்பைத்தான் நப்ஸ் என்று சொல்லப்படும், ரூஹ் மனித உடலுக்குள் வந்த பிறகு அதன் மூலம் வெளிப்படும் வெளிப்பாடுகளான நப்ஸ் எனும் ஏழு வகையான இறக்கம் உள்ளது. அந்தந்த ஆத்மாக்களின் பண்புகள் எந்த படித்தரத்தில் இருக்கிறதோ அப்படித்தரத்தில் இருக்கும் போது வெளிப்படும் ஏழு குணங்கள் அல்லது ஏழு பண்புகளே நப்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

அந்த அடிப்படையில் ரூஹ் மனிதனின் சரீரத்தோடு சேர்ந்த போது வெளிப்படும் உணர்ச்சி அல்லது உணர்வுகளை தான் நப்ஸ் எனப்படும். இந்த ரூஹு நமது சரீரத்தை அடுத்திருக்கும் வரைக்கும் நப்ஸு என்று சொல்லப்படும். அந்த நப்ஸுதான் "நான்" என்ற உணர்வு.

நப்ஸு இன்ஸானிய்யா என்ற கல்புக்கு மிகுந்த மாட்சிமைகளுண்டு. அது துவக்கத்திலான ஒளியாக இருக்கும் அல்லாஹுத் தஆலாவை காணுவதற்கு இன்ஸான் அளவில் இறக்கி வைத்த அல்லாஹ்வின் சிர்ராகும். அது சில சமயம் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நல்லமல்களையும் நன்மைகளைச் செய்வதற்காக உள்ளுணர்வுகள் ஆசை வைக்கும், சில சமயம் ஷைத்தானின் பண்புகளையும் தீமைகளையும், இச்சைகளையும், ஆசைகளையும், கோபம் பொறாமை போன்றவற்றை உள்ளுணர்வுகள் ஏவினால் நப்ஸெ அம்மாரா என்று கூறப்படும்.

♦ ஆலமுல் அர்வாஹில் இருந்த எமது ரூஹை அல்லாஹ் தாயின் கருவறைக்கு நகர்த்துகின்றான். ஒரு தாயின் வயிற்றில் கரு வளர்ச்சியடைந்து 42 நாட்களாகும் போது வானவர் ஒருவர் ஒரு ரூஹை எடுத்து வந்து அத்தாயின் வயிற்றில் உள்ள கருவில் ஊதிவிடுகிறார்கள் அதன் பிறகு தாயின் கருவறையில் இருந்த நாம் இவ்வுலகில் வாழ்வதற்கு மனிதனின் உடலில் வந்தடைந்து, மனிதன் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றோம்.

ஆகவே உயிர் என்பது உடல் வாழ்வதற்காக உருவாக்கப்பட்டது, உடலின் வளர்ச்சிக்காக இயக்கத்திற்காக உருவாக்கப்பட்ட நுட்பமான ஒரு சக்தி வாய்ந்த வஸ்துவாக காணப்படுகிறது. இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அவர்கள் கூறுகிறார்கள்: ரூஹ் என்பது விளக்கு அதன் ஒளி உயிர் ஆகும்.

♦ கல்பு என்பது நெஞ்சுக்குள் இடது பக்கத்தில் இருக்கும் மாங்காய் வடிவிலான மாமிசத் துண்டமாகிய இருதயம், அதன் நடுவில் சிறிது வெற்றிடமும் அதில் கருநிற இரத்தமும் காணப்படும் இந்த இதயம் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் இறந்து விட்ட மைய்யித்துகளுக்கும் கூட உண்டு, ஆனால் முஃமினுடைய கல்பு அல்லாஹ்வினுடைய அர்ஷ் என்ற அளவிற்கு ஹதீஸில் குறிக்கப்படுகின்றது. அல்லாஹ்வைப் பற்றிய சிந்தனையில் திக்ர் பிக்ர் தியானங்கள் மூலம் கல்பு எந்தளவுக்கு உயிரோட்டத்துடன் செயல்படுகிறதோ அதற்குத்தக்க உயிர்ப்புடன் நிலையுள்ள கல்பாக மாறிவிடும், மூமீன்களிடம் (ஸஹாபாக்கள், இமாம்கள், வலிமார்கள், சூபியாக்கள்) இறந்த கல்பு இருக்கக்கூடாது இருக்க முடியாது.

முஃமினுடைய கல்பு அல்லாஹ்வுடைய அர்ஷ் என்று ஹதீஸில் கூறப்படுவதன் விளக்கத்தின் சுருக்கம் என்னவென்றால் முஃமினுடைய இதயத்தை இயங்கச் செய்கின்ற ரூஹானது அல்லாஹ்வின் ஆதிக்கம் நடைபெறுகிற இடமாகும் என்று புரிந்து கொள்ள வேண்டும். ஆதிக்கம் இடம் பெற்றவர்கள் சம்பூர்ண முஃமின்களாக இருப்பார்கள்.


​​அவர்கள் நின்றாலும், அமர்ந்தாலும், குனிந்தாலும், நிமிர்ந்தாலும், உண்டாலும், பருகினாலும், உறங்கினாலும், விழித்திருந்தாலும் அவர்களின் இதயம் சார்ந்த சிந்தனை ஓட்டம் அல்லாஹ்வை பற்றியதாகவே இருக்கும். அவர்களின் பார்வை, கேள்வி, பேச்சு, நடை, செயல் அனைத்துமே அல்லாஹ்வின் வல்லமையை வெளிப்படுத்தும் என்பதை புரிந்து கொண்டால் தான் மேலே கூறப்பட்ட ஹதீஸின் கருத்து புலனாகும்.

இப்படிப்பட்ட ஆத்மீக தத்துவ நுட்பமான கல்பையே அகம்- உள்ளம் என்றழைக்கிறோம். இந்த அகம்தான் பகுத்தறிவுள்ள மனிதனின் உண்மை ரகசிய நுட்பமாய் இருக்கிறது. திருக்குர்ஆனில் கல்பு என்று சொல்லப்பட்டு இருப்பதெல்லாம் இந்த அகம் என்ற ஹகீகதே இன்சானாகிய நுட்பத்தைக் குறிப்பதே. இந்த அகம்தான் மனிதனில் பார்ப்பதும், கேட்பதும், பேசுவதும், வஸ்துக்களின் உண்மையை விளக்கி அறிவதுமாகும்.

ஆகவே அல்லாஹு தஆலா ரூஹீன் சம்பந்தத்தை கல்பு இதயத்தோடு இணைத்துள்ளான், இதயம் சக்தியுடையதாக இருந்தால் ரூஹ்ஹூம் நஃப்ஸூம் சக்தியுடையதாகி விடுகிறது. இதயம் (கல்பு) பலஹீனமாக இருந்தால் ரூஹ்ஹூம் நஃப்ஸூம் பலஹீனமாகி விடுகிறது, கல்பு எனும் இதயத்தின் நல்ல தன்மைகளும், கெட்ட தன்மைகளும் ரூஹிலும் நப்ஸிலும் ஏற்படுகின்றன, கல்பு எனும் இதயம் தூய்மையாக இருந்தால் ரூஹும் நப்ஸூம் பரிசுத்தமாக இருக்கும். கல்பு எனும் உள்ளம் கெட்டுவிட்டால் ருஹும் நப்ஸூம் கெட்டுவிடும். அல்லாஹு தஆலா முதலில் ரூஹ்ஹை படைத்தான். அதை ஆத்ம உலகத்தில் வைத்தான், ஆத்மா எவ்வளவு நுட்பமானது என்பதை யாரும் மதிப்பிட முடியாது, இது மிக நுட்பமானதாகும்.

எனினும், இத்தகைய எல்லையில்லா நுட்பமான பொருளுக்கு மண்ணாலான உடலில் தங்குமிடத்தை அல்லாஹ் கொடுத்துள்ளான். அதை அதில் அடைத்து வைத்துள்ளான், என்பதுதான் அல்லாஹ்வின் ஆச்சரியம் மிகுந்த மிக உயர்ந்த நுட்பமாகும் அதற்கு (இன்சான்) மனிதன் என்று பெயரிட்டுள்ளான். மனிதன் தனது தனது நுட்பமான ரூஹ், நப்ஸ், கல்பு மற்றும் அதன் நாட்ட சக்தி ஆகியவற்றின் மூலம் அல்லாஹ்வை திக்ர் பிக்ர் மூலம் அறியவும், அவனை அடையவும், இவ்வாறு செய்தான்.

அவ்வாறு இல்லையென்றால் மண்ணில் இவ்வளவு சக்தி இல்லை. அதிலுள்ள தடிப்பத்தின் காரணத்தால் அல்லாஹ்வைப் பார்க்கவோ, அடையவோ அதனால் முடியாது. மனிதன் பூமியில்தான் இருக்கின்றான், மண்ணாலான உடலையே பெற்றிருக்கிறான். ஆனால் அல்லாஹு தஆலா உடைய(தாத்) உள்ளமையோ மறைவிலும் மறைவாய், அப்பாலுக்கும் அப்பால், நினைவுக்கும் சிந்தனைக்கும் அப்பாற்பட்டுத்தான் இருக்கிறான். ஏனினும் அல்லாஹு தாலா மண்ணால் உருவான மனிதனுக்கும் ரூஹ், நப்ஸ், கல்பு அதன் சக்தி முதலியவற்றை கொடுத்திருப்பதால் அதன் மூலம் அவன் அல்லாஹ்வை அடைகின்றான். கலிஃபத்துல்லாஹ்- அல்லாஹ்வின் பிரதிநிதியாகவும் ஆகிவிடுகிறான்.


​​

♣ ரூஹ் நப்ஸ் கல்பு இவைகள் அழியுமா? அல்லது அழியாதா நுட்பமா அம்சங்களா?

மரணம் (மவ்த்) என்பது உடலை விட்டும் பரிசுத்த ஆவி எனும் ரூஹ் வெளியேறுவதுதான் மரணமாகும்.அப்படியானால் அழிவு உடலுக்கும் நப்ஸூக்குமே தவிர பரிசுத்த ரூஹுக்கு அல்ல மேலும் அல்லாஹ்வைப் பற்றிய சிந்தனையில் திக்ர் பிக்ர் தியானங்கள் மூலம் நப்ஸை அடக்கி ஆழுவதன் மூலம் கல்பு எந்தளவுக்கு உயிரோட்டத்துடன் செயல்படுகிறதோ அதற்குத்தக்க உயிர்ப்புடன் நிலையுள்ள கல்பாக மாறிவிடும், மூமீன்களிடம் (ஸஹாபாக்கள், இமாம்கள், வலிமார்கள், சூபியாக்கள்) இறந்த கல்பு இருக்கக்கூடாது இருக்க முடியாது.

♦ அல்குர்ஆன் தலைமை விரிவுரையாளர் மற்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்பு தோழர் ஹள்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் குர்ஆனின் 39:42 ஆவது வசனத்திற்கு கீழ் கண்டவாறு விளக்கம் தருகிறார்கள். ‘ஒவ்வொரு மனிதனுக்கும் நஃப்ஸ் (ஆத்மா)-வும், ரூஹ் (உயிர்)-ம் உள்ளன. நஃப்ஸில் உணரும் தன்மையும் அறிவும் உள்ளன. ரூஹில் அசையும் தன்மையும் மூச்சு வாங்கும் தன்மையும் உள்ளன. மனிதன் தூங்கும் போது அல்லாஹ் நஃப்ஸை மட்டுமே கைப்பற்றுகிறான். ரூஹை கைப்பற்றுவதில்லை. (நூல் : குர்துபி)

ஆகவே எமது ரூஹிற்கு ஆரம்பம் ஒன்று உண்டு. ஆனால் முடிவோ அழிவோ இறப்போ கிடையாது. ஆனால் உடல், நப்ஸ் என்பது அழியக்கூடியது. அல்லாஹ் எம்மிடம் எதிர்பார்ப்பது அவனுக்காக அவனுடைய தீனை வாழச்செய்வதற்காக எமது நப்ஸுடன் ஜிஹாத் எனும் மாபெரும் யுத்தம் செய்து பல தியாகங்களை செய்ய வேண்டும். தியாகங்கள் செய்தால் அதற்குப் பகரமாக அல்லாஹ் எமது ரூஹிற்கு சுவனத்தைத் தருவதாக வாக்களித்துள்ளான்.

எனவே மனிதர்களில் ரூஹ், நப்ஸ், கல்பு போன்ற நுட்பமான சக்தி வாய்ந்த வஸ்துக்களின் மூலம் நாட்டத்தின் சக்தியை உபயோகித்து முயற்சி செய்தால் அவன் அல்லாஹ்வின் நெருக்கத்தை, அன்பையும் அடைந்து விடுகின்றான். அல்லாஹு தஆலாவின் பக்கத்தில் நெருங்கி உடனிருத்தல் எனும் பாக்கியத்தைப் பெற்று விடுகிறான், நெருக்கத்தின் உச்சநிலையை அடைந்து விடுகின்றான். இதுதான் மனிதன் பிறந்ததன் பயனாகும்.


​​எனினும் ரூஹ், நப்ஸ், கல்பு போன்றவற்றின் சக்தியைக் கொண்டு மனிதன் அல்லாஹ்வின் திக்ரிலும் பிக்ரிலும் உபயோகித்தால்தான் இந்த உயர்வை அடைவான், அதனை புதிய துன்யாவிற்காக மட்டும் உபயோகித்தால் அவன் மிருகங்களை விடக் கெட்டவானக ஆகிவிடுவான், அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

சூபிசம் என்றால் என்ன (SUFISM)


ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

தரீக்கா என்றால் என்ன (TARIQA)


இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.


​​​​​

உள்ளத்தை தூய்மைப்படுத்துவது எப்படி?

​ 

தஸ்கியதுன் நப்ஸ் எனும் (உள்ளத்தை) பரிசுத்தப்படுத்துவது, தூய்மைப்படுத்துவது எப்படி? என்பதை விளங்கிக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

ஆத்மா ஒன்று அதன் வகைகள் ஏழு​

​ 

நமது ஆத்மாவின் தன்மைகளை ஏழாகப் பிரித்துள்ளார்கள். ஆத்மாவை ஏழாகப் பிரித்தாலும் உண்மையில் ஆத்மா ஒன்றுதான். அதைபற்றி அறிந்துக்கொள்ள இந்த ஆக்கத்தை வாசியுங்கள்.