MAIL OF ISLAM

Knowledge & Wisdomஷாதுலி தரீக்காவும் வஹ்ததுல் வுஜூதும் 


​ஆக்கம்:  மௌலவி K.R.M. ஸஹ்லான் (றப்பானீ) BBA (Hons)​

​வஹ்ததுல்வுஜுத்  என்றால் உள்ளமை ஒன்று படைப்புகள் அனைத்தும் அந்த உள்ளமையின் வெளிப்பாடுகள் ஆகும்.


​​அதாவது அல்லாஹ் ஒருவன் அவன்தான் உள்ளமை (வாஜிபுல்வுஜூத்). ​படைப்புகள் அனைத்தும் அந்த உள்ளமையின் வெளிப்பாடுகள் ஆகும் (மும்கினுல் வுஜூத்).


​​படைப்புகள் சுயமான உள்ளமை அற்றவையாகும். படைப்புகள் அனைத்தும் அந்த அல்லாஹ் என்ற உள்ளமை தானானவையாகும். அன்றி அந்த உள்ளமைக்கு வேறானவை அல்ல. அந்த உள்ளமை படைப்புகள் என்ற பல்வேறு தோற்றங்களில் தோன்றியுள்ளது.  படைப்புகள் பல்வேறு தோற்றங்களில் தோன்றினாலும் அந்த அல்லாஹ் என்ற உள்ளமையே அவ்வாறு தோன்றுகின்றது. படைப்புகள் மாயதோற்றத்தில் தென்படுகின்றவே தவிர யதார்த்தத்தில் படைப்புகள் என்பது இல்லை.

பஞ்சு - பிடவையாக தோற்றுவது போலவும், தங்கம் - காப்பாக தோற்றுவது போலவும் அந்த அல்லாஹ் என்ற உள்ளமை சர்வ படைப்புகளாகவும் தோற்றுகின்றது. சர்வ படைப்புகளும் “ஹக்” ஆகிய அல்லாஹ் தானானவைகள் தான். அவனுக்கு வேறானவைகள் அல்ல.


ஷாதுலியா தரீக்கா உலகின் பல பாகங்களிலும் குறிப்பாக இலங்கையின் பல பாகங்களிலும் முஸ்லீம்களால்  பின்பற்றப்படுகின்றது​. உலகத்திற்கு பல குத்புமார்களையும், இமாம்களையும், உலமாக்களையும் தந்த தரீக்காக்களில் ஷாதுலி தரீக்காவும் ஒன்றாகும்.

​ 

ஷாதுலியா தரீக்கா வழியில் செல்லும் முரீதீன்கள் தினமும் ஓதிவருகின்ற “வளீபா யாகூதிய்யா”வில் பல இடங்களில் வஹ்ததுல்வுஜுத்  கூறப்பட்டுள்ளது. அவற்றில் சில வருமாறு:

“வளீபா யாகூதிய்யா” 01ம் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

اللهم صل وسلم بجميع الشئون فى الظهور والبطون على من منه انشقت الاسرار الكامنة في ذاته العلية ظهورا. وانفلقت الانوار المنطوية في سماء صفاته السنيه بدورا.


“வெளியான, மறைவான அனைத்து கருமங்கள் கொண்டும் நீ ஒருவர் மீது ஸலவாத் ஸலாம் சொல்வாயாக!

அவர் மூலமே அல்லாஹ்வின் பரிசுத்த தாத் - உள்ளமையில் மறைந்திருந்த இரகசியங்களெல்லாம பிழந்து வெளிவந்தன.

அவர் மூலமே அல்லாஹ்வின் உயர்வான தன்மைகள் என்ற வானில் புதையுண்டிருந்த பிரகாசங்கள் எல்லாம் வெளிச்சம் கொடுத்தன.”


“வளீபா யாகூதிய்யா” 16ம் 17ம் பக்கங்களில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது


اللهم صل وسلـّـم على من جعلـته سببا لانـشقـاق أسرارك الجبـروتيـة. وانـفلاقا لأنوارك

الرحمـانيـة.فصار نائبـا عن الحضرة الربانية.وخلـيفة أسرارك الذاتـية. فهو ياقوتة أحديـّـة ذاتك

الصمديـّـة.وعين مظهر صفاتك الأزليـّـة. فبك منك صار حجـابا عنك.


ஜபறூத் என்ற ஆலத்தின் இரகசியங்கள் வெளியாவதற்கும், உன்னுடைய “றஹ்மானிய்யத்”ஆன பிரகாசங்கள் வெளிப்படுவதற்கும் காரண கர்த்தாவாக நீ ஆக்கிய முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் மீது ஸலவாத் ஸலாம் சொல்வாயாக!

அவர்கள் “றப்பானிய்யஹ்” திருச்சமுகத்தின் பிரதிநிதி. உன்னுடைய தாத் - உள்ளமையின் பிரதிநிதி.

அவர்கள் உன்னுடைய “ஸமதிய்யத்” ஆன உள்ளமையின் மாணிக்கம். பூர்வீகமான உனது தன்மைகள் தோன்றும் ஊற்றுக்கண்.

அவர்கள் உன்னைக் கொண்டு உன்னில் நின்றும் உன்னை விட்டும் திரையாக ஆகிவிட்டார்கள்.

மேற்கண்ட   எல்லா வசனங்களும்  ”   வஹ்ததுல் வுஜூத் கோட்பாட்டை கொண்டவையாகும். இந்தக்கோட்பாடு வழிகேடு என்று சில தரீக்காவாதிகள் கூறுகின்றனர். இந்தக்கோட்பாடு வழிகேடு என்றால் மேற்கண்ட வசனங்களைக் கூறிய ஷாதுலியா தரீக்காவின்   ஸ்தாபகர் குத்புல் அக்பர் இமாம் அபுல் ஹஸன் அலி ஷாதுலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், அவர்களின் ஞானகுரு அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், மற்றும் ஷாதுலிய்யஹ் தரீக்காவின் குத்புமார்களும்,   ஷெய்குமார்களும்  “வளீபா யாகூதிய்யா” ஓதுகின்றவர்களும் இதற்கு முன்னர் ஓதி மறைந்தவர்களும் வழிகேடர்களாகி விடுவார்கள்.”நஊது பில்லாஹ்”


வஹ்ததுல் வுஜூத்கோட்பாடு பற்றி குத்புல் வுஜூத் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு சொல்லியுள்ளார்கள்.


அல்லாஹ் “முந்தினவனும் அவனே பிந்தினவனும் அவனே வெளியானவனும் அவனே உள்ளானவனும் அவனே”  என்ற தனது  பேச்சு கொண்டு அவனுக்கு வேறானவை அனைத்தையும் அழித்துவிட்டான் என்று ஷாதுலீ நாயகம் சொன்ன போது அவ்வாறாயின் படைப்பு பற்றி என்ன சொல்வீர்கள் படைப்பு உண்டா? இல்லையா? என்று அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு.


​​படைப்பு உண்டு ஆயினுமது வீட்டின் கூரையிலுள்ள துவாரத்தின் வழியாக உள்ளே விழும் சூரிய வெளிச்சத்தில் மேலும் கீழுமாக ஏறி இறங்கும் தூசி போன்றது. அது உனது கண்ணுக்கு – பார்வைக்கு மட்டும் தான் தெரியுமேயன்றி நீ அதை கைகொண்டு பிடித்தால் பிடிக்க முடியாது. இவ்வாறு தான் படைப்பு என்பது.  அது உனது கண்ணுக்கு மட்டும் தான் தெரியுமேயன்றி அதற்கு வுஜூத் – உள்ளமை இல்லை. அது பார்வைக்கு மட்டு முள்ளதே தவிர எதார்த்தத்தில் இல்லாததாகும் என்று பதில் கூறினார்கள்.


​இதை இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ் ஷஃரானீ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் தங்களின் “அல்யவாகீத்” என்ற நூலில் 01ம்’ பாகம் 65ம் பக்கத்தில் கூறியுள்ளர்கள்.

“வஹ்ததுல் வுஜூத்” கோட்பாட்டின் படி ஒரே உள்ளமையான அல்லாஹ் தான் ஹுலூல், இத்திஹாத் இன்றி பஞ்சு எப்படி பிடவையாக, சேட்டாக, சாரமாக, தொப்பியாக  தோற்றுவது போலவும், தங்கம் எப்படி காப்பாக, மாலையாக, மோதிரமாக தோற்றுவது போலவும், கடல் எப்படி அலையாக, நுரையாக தோற்றுவது போலவும் இரும்பு எப்படி சாவியாக, பூட்டாக தோற்றுவது போலவும்     படைப்புகளாக தோற்றமளிக்கின்றான். இங்கு இரண்டு உள்ளமைகளுக்கு, இரண்டு பொருட்களுக்கு இடமில்லை. எனவே ஷிர்க் எனும் இணைக்கு இடமில்லை.

பஞ்சுதான் பிடவையாக, சேட்டாக, சாரமாக, தொப்பியாக  தோற்றுகின்றது, தங்கம்தான் காப்பாக, மாலையாக, மோதிரமாக தோற்றுகின்றது, கடல்தான் அலையாக, நுரையாக தோற்றுகின்றது, இரும்புதான் சாவியாக, பூட்டாக தோற்றுகின்றது. இதுபோல் அல்லாஹ்தான் படைப்புகளாக தோற்றமளிக்கின்றான். இங்கு இரண்டு உள்ளமைகளுக்கு இடமில்லை. உள்ளமை அல்லாஹ் மாத்திரம்தான். அந்த உள்மைதான் சர்வ படைப்புகளாக தோற்றுகின்றது.


இமாம் அபுல் ஹஸன் அலி ஷாதுலி ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள்: ஒருவன் இறை ஞானத்தை விவரமாகவும், தெளிவாகவும் தெரிந்துக்கொள்ள வில்லையானால் அவன் பெரும் பாவத்தில் நிலைபெற்றிருந்தவனாக மரணிப்பான்.​​


மேலும் இமாம் அபுல் ஹஸன் அலி ஷாதுலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் துஆவுடன் இந்த ஆக்கத்தை நிறைவு செய்வோம்.


யா அல்லாஹ்! வஹ்ததுல் வுஜூத் என்ற கடலில் எங்களை மூழ்கடித்துவிடு.​​​​  (இமாம் அபுல் ஹஸன் அலி ஷாதுலி ரலியல்லாஹு அன்ஹு)


சூபிசம் என்றால் என்ன (SUFISM)


சூபிசம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

வஹ்ததுல் வுஜூத் என்றால் என்ன?


வஹ்ததுல் வுஜூத் என்பதற்கு மெய்ப்பொருள் ஒன்று,  உள்ளமை ஒன்று ஆயினும் ஸுபியாக்கள் “வஹ்ததுல் வுஜூத் “என்பதற்கு ஒரு உள்ளமையின் வெளிப்பாடு என்று கூறுவார்கள். இதைப்பற்றிய தெளிவை பெற்றுக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.​​​​​

குர்ஆன் ஹதீஸ் போதிக்கும் வஹ்ததுல் வுஜூத்

​​

அல் குர்ஆன் அல் ஹதீஸ் போதிக்கும் வஹ்ததுல் வுஜூத் பற்றி அறிந்துக்கொள்ள இந்த உரையை கேளுங்கள்.

​​​​​

ஸஹாபாக்கள் வலிமார்கள் போதித்த வஹ்ததுல் வுஜூத்

​​

ஸஹாபாக்கள் அவ்லியாக்கள் போதித்த வஹ்ததுல் வுஜூதை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள். தமிழில் இதுவரை வெளிவராத ஆக்கம்.

​​​​​